ஷெய்குனா அவர்கள் மீது சாட்டப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்குரிய விளக்கம்:
By Sufi Manzil
1. குற்றச்சாட்டு: காயல்பட்டினத்தில் நடைபெற்ற ஜும்ஆவின் போது அரபியல்லாத மொழியில் செய்யும் பிரசங்கம் பற்றிய விவாதத்தில், ஷெய்குனா அவர்கள் வழிகேடான தப்லீக் ஜமாஅத்தின் குருமார்களில் ஒருவரான அஷ்ரப் அலி தானவி எழுதிய பத்வாவை ஆதாரமாக காட்டி விட்டார்கள். எனவே அவர்கள் தங்களுக்கு தேவைக்காக அஷ்ரப் அலி தானவியை ஒப்புக் கொண்டு விட்டார்கள். இது சரியா? இதுதான் அவர்களின் இலட்சணமா? என்பது.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
உள்பள்ளியில் ஜும்ஆவிற்கு முன் தமிழில் பிரசங்கம் செய்வது பற்றிய விவாதத்தில் ஷெய்குனா அவர்கள், தங்கள் தரப்பு ஆதாரங்களைக் காட்டும்போது, சில பத்வாக்களைக் காட்டினார்கள். அதில் ஒரு பத்வா தொகுப்பும் ஒன்று. அந்தத் தொகுப்பில் பல்வேறு பத்வாக்கள் இருந்தன. அதில் ஒன்று ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் உள்பள்ளியில் பயான் பண்ணுவது கூடாது என்ற பத்வாவும் ஒன்று.
அந்தப் பத்வாவைக் காட்டும்போது அந்த தொகுப்புப் பத்வாவில் அஷ்ரப் அலி தானவியின் கையொப்பமிட்ட பத்வாவும் இருந்திருக்கிறது. அஷ்ரப் அலி தானவியின் அந்த பத்வா விவாதத்திற்கான பத்வா அல்ல.
அதைப் போட்டவுடன் எதிர்தரப்பினர் தங்களின் இயலாமையை மறைக்க அஷ்ரப் அலி தானவியின் பத்வாவை போடலாமா? என்று கேட்டனர்.
ஷெய்குனா அவர்கள் அஷ்ரப் அலி தானவி கையெழுத்;திட்ட பத்வா இந்த விவாதத்திற்கான பத்வா இல்லையே என்று எடுத்துச் சொன்னார்கள்.
இந்த தொகுப்பில் உள்ள ஜும்ஆ பயான் சம்பந்தப்பட்ட பத்வா ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் கையொப்பமிட்டதுதான் என்று சொல்ல அதை ஆராய்ந்த நடுநிலைவாதிகள் ஆம் என்று ஒப்புக் கொண்டார்கள். எதிர்தரப்பினர் மூக்கறுந்தது.
ஒரு வழிகேடர் அல்லாஹ் ஒருவன் என்று சொன்னால் அவன் சொல்கிறான் என்பதற்காக நீங்கள் அல்லாஹ் ஒருவனல்ல இரண்டு என்றுதான் சொல்வீர்களா? என்ன மடத்தனமான பேச்சு இது.
2. குற்றச் சாட்டு: ஸூபி ஹழ்ரத் அவர்கள் ஜும்ஆ பயான் பிரச்சினையில் தோல்வியுற்று அவர்களை எதிர்தரப்பினர் அடிக்க வந்தார்கள். அவர்கள் ஓடி வந்து ஜாவியாவில் தஞ்சம் அடைந்தார்கள். அங்கு அவர்களுக்கு நாங்கள் கலிமா சொல்லிக் கொடுத்தோம் (நவூதுபில்லாஹ்) என்பது தப்லீக் ஜாவியாக்காரர்களின் தவறான பிரச்சாரம்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் காதியாணி பிரச்சினை பற்றி பேசும்போது, தமிழகத்தின் காதியாணி பிரச்சார பீரங்கியான தாவூத்ஷா என்பவர் ‘நரகம் அழிந்து போகும்’ என்று தமது பிரச்சாரத்தில் சொன்னார். அதை வைத்து தப்லீக் ஜமாஅத்தினர் (காயல்பட்டினம் ஜாவியா குழுமத்தினர்) அவரை காபிர் என்று சொன்னார்கள்.
அதை செவியுற்ற ஷெய்குனா அவர்கள் தாவூத் ஷா இந்த வார்த்தையை சொன்னதால் காபிராகி விடமாட்டார். ஏனெனில் நரகம் அழிந்து போகக் கூடியதுதான் என்று ஒரு பயானில் சொன்னார்கள்.
இதைக் கேள்வியுற்ற தப்லீக் ஜமாஅத்தினர் ஸூபி ஹழ்ரத் நரகம் அழிந்து விடும் என்று சொல்கிறார்கள் எனவே அவர்கள் காதியாணியாகி விட்டார்கள் (நவூதுபில்லாஹ்) என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
இதைக் கண்ணுற்ற ஷெய்குனா அவர்கள் நேரே ஜாவியா சென்றார்கள். அங்கு அமர்ந்துக் கொண்டு இது பற்றி அங்குள்ளவர்களிடம் பேசினார்கள். அங்குள்ள நூலகத்திலிருந்து ஒரு ஹதீது கிதாபை (மிஷ்காத் என்று ஞாபகம்) அவர்களையே எடுத்து வரச் சொல்லி, ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து வாசிக்கச் சொன்னார்கள். (அதில் நரகத்தில் சேர்க்க வேண்டியவர்களை சேர்த்துவிட்டு இறுதியில், அல்லாஹ் தன்னுடைய காலால் நரகத்தை மிதிப்பான். அது கீத்கீத் என்றுசப்தமிட்டு அழிந்து போகும் என்ற அர்த்தத்தில் வாசகம் இருந்தது)
அவர்கள் அதை வாசித்ததும் அதற்குரிய அர்த்தத்தை சொல்லி அது சரியா? என்று கேட்டார்கள். அது சரி என்று அவர்கள் சொன்னதும், அப்போ நானா நரகம் அழிந்துபோகும் என்று சொன்னேன். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீதில் அல்லவா அது வந்திருக்கிறது என்று சொல்லி, இப்பொழுது இந்த ஹதீது கிதாபை என்னவென்று சொல்வீர்கள்? என்றார்கள். இதைச் சொன்னதால் ஒருவன் எப்படி காபிர் ஆவான் ? என்றார்கள்.
குற்றம் சுமத்தியவர்கள் சொல்வதறியாது மூக்குடைந்து போய் நின்றார்கள். சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று அதன் பிடரியை உலுக்கிய செயல் இதுதானோ. அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சும் இறைநேசர்களுக்கு பயம் என்பதே கிடையாது என்ற குர்ஆன் வாக்கியத்தை நினைவுபடுத்தும் செயலல்லவா இது.