யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர்

யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர்

By Sufi Manzil 0 Comment May 29, 2015

மறுமை நாளின் அடையாளமாக யஹ்ஜுஜ் எனும் கூட்டத்தினரும், மஹ்ஜுஜ் என்ற கூட்டத்தினரும் வருவார்கள் என்பதும் ஒன்றாகும்.

யார் இந்த கூட்டத்தினர்?

யஃஜூஜ், மாஃஜூஜ் என்பவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் யாபிதுடைய சந்ததியிலுள்ளவர்கள். இவர்கள் மனிதர்களேயாயினும், மனிதர்களிடம் காணப்படாத பழக்கவழக்கங்களையும், முரட்டுத்தனங்களையும், கொடூரத் தன்மைகளையும் உடையவர்கள் என்பதில் ஐயமில்லை.

இவர்களில் சிலர் மிக உயரமானவர்களாகவும், சிலர் மிகக் குட்டையானவர்களாகவும் இருப்பர். இவர்களின் காதுகளும் மிகப் பெரியதாக அகன்று காணப்படும். உயிர்பிராணிகள் அனைத்தையும் தின்னும் வழக்கமுடைய இவர்கள் தங்களில் இறந்தோரையும் தின்பர் என்று கூறப்படுகிறது.

அங்க அடையாளங்கள் பற்றி ஹதீதுகள்:

‘யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்) வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : காலித் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு நூல்கள் – அஹ்மத், தப்ரானி.

யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுநூல் – அஹ்மத், தப்ரானி.

இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்’ என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(இதே போல்)  ‘நரகத்தில் நாம் ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்’  – புகாரீ ஹதீஸ் (எண் 3348)

ஹழ்ரத் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி படையெடுத்து பயணித்தபோது இரு மலைகளுக்கிடையே சென்றபோது சில மக்களைக் கண்டார்.

அவர்களின் பேச்சு விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அதேபோன்று இவர்கள் கூறுவதையும் அம்மக்களால் விளங்கி; கொள்ள முடியவில்லை.

எனவே சமிக்ஞை மூலமே அவர்களுடன் பேச வேண்டியிருந்தது. அம்மனிதர்கள் துல்கர்ணனை நோக்கி>

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا

“துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். (18:94)

மேலும், அவர் அம்மக்களின் கோரிக்கைக்கு இணங்கி எனக்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருப்பின் உங்களுக்கும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் இடையே பெரியதொரு தடுப்பை ஏற்படுத்தித்  தருகிறேன் என்று கூறினார்கள்.

பின்னர் அவர் அம்மக்களை நோக்கி, பெரும் பெரும் இரும்புக் கட்டிகளை என்னிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உருக்கி அவை சமமாகக் படிந்த பின்னர் நெருப்பை மூட்டி ஊதுங்கள். அந்த இரும்புக் கட்டிகள் பழுத்து, நெருப்பு போலாகும். அப்பொழுது செம்புப் பாளங்களைக் கொண்டு வந்தால் அவற்றை நான் உருக்கி அந்த இரும்பின் மீது ஊற்றுகிறேன் என்று கூறினார்.

அம்மக்களும் அவ்வாறு கொண்டு வரவே, துல்கர்ணைன் தாம் சொன்னவாறு செய்தார். சுவரை உருவாக்குமுன் நூறு முழம் ஆழத்திலும், ஐம்பது முழம் அகலத்திலும் அடித்தளம் போட்டார்கள். சுவரின் நீளம், மூன்று மைல்கள் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரண்டு மலைகளுக்கிடையே பெரியதொரு சுவரைக் கட்டி முடித்த துல்கர்ணைன்:

இது என்னுடைய இறைவனின் அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும் வேளையில் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

மலைகளை இணைத்து மாபெரும் சுவர் உருவான பின்பு அவ்வழியே வழக்கம் போல் வந்த யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் தாங்கள் செல்லும் தடத்தில் இடையூறாக ஒரு சுவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அதன்மீது ஏற முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. அதனைத் துளையிட்டு நுழையவும் இயலவில்லை.

இதுபற்றிய செய்திகளை அல்லாஹு தஆலா 18:96-98 ல் குறிப்பிடுகிறான்.

آتُونِي زُبَرَ الْحَدِيدِ ۖ حَتَّىٰ إِذَا سَاوَىٰ بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انفُخُوا ۖ حَتَّىٰ إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا

18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

فَمَا اسْطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا

18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

قَالَ هَٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي ۖ فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا

18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.

யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் நாள்தோறும் அச்சுவரைத் தோண்டுகின்றனர். சுவருக்கு அப்பால் வெளிச்சத்தை அவர்கள் கண்டு, எஞ்சியதை நாளை வந்து தோண்டலாம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் அல்லாஹுத்தஆலா அந்த துவாரத்தை மூடிவிடுகிறான்.

மறுநாள் காலையில் அவர்கள் வந்து பார்க்கும்போது துவாரத்தைக் காணாமல் மீண்டும் தோண்டுவார்கள். இது உலக முடிவு நாள் வரை நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

உலக முடிவு நாளின் போது யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினரில் ஒருவரை அல்லாஹுதஆலா முஃமினாக்கி விடுவான்.

வழக்கம்போல துவாரமிட்டு வெளிச்சத்தைப் பார்த்தவுடன் அவர்> இன்ஷாஅல்லாஹ் நாளை வரலாம் என்று கூறி மற்றவர்களையும் அழைத்துச் செல்வார்.

மறுநாள் அவர்> தம் கூட்டத்தினருடன் வந்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று அவர்களைப் பணிப்பார்.

அவர்களும் அவ்வாறே கூறி துவாரமிட்டு நாட்டிற்குள் நுழைந்து விடுவார்கள். அங்கு அக்கிரமம் செய்து கண்டவர்களையெல்லாம் கொல்வார்கள்..

حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍ يَنسِلُونَ

யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.  (அல் குர்ஆன் 21:96)

‘இவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தீர்களா?’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது, ‘ஆம் விண்ணேற்றத்தின்போது அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தேன். அவர்கள் பதிலுறுக்கவில்லை. எனவே, அவர்கள் நரகவாசிகளே’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

கூட்டத்தார்களின் அழிவு

‘யஹ்ஜுஜ் – மஹ்ஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக்கண்டு அதன் நீரைப்பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு) ‘அந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது’ என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள ஒரு மலையை அடைவார்கள்.

‘பூமியில் உள்ளவர்களைக் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம்’ என்று கூறுவார்கள், தங்கள் அம்புகளை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசி அல்லாஹ் திருப்பி அனுப்புவான். பிறகு அவர்கள் ஈஸா நபியையும், அவரின் தோழர்களையும் முற்றுகையிடுவார்கள்.

தஜ்ஜால் மதக் குழப்பம் செய்யும் பொழுது இவர்கள் இராணுவத்தின் உதவியுடன் அரசியலில் குழப்பம் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பின்னர், ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். அல்லாஹ் புழுக்களை அவர்களிடம் அனுப்புவான். அந்தப் புழுக்களின் தாக்குதல் காரணமாக அனைவரும் ஒரேடியாக செத்து விடுவார்கள். பின்னர். ஈஸா நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு வருவார்கள். யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தரின் (பிணங்களின்) நாற்றமும், நெருக்கடியும் ஒரு சாண் அளவு இடத்தைக் கூட விடாது பரவி நிற்கும். பின்னர் ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பறவைகள் பிணங்களை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடங்களில் போட்டுவிடும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் ரழியல்லாஹு அன்ஹுநூல் – முஸ்லிம்.

இறுதியில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ பொருட்டினால் இந்த கூட்டத்தினர் அழிக்கப்படுவார்கள்.

கூட்டத்தாரின் அழிவுக்குப் பின்:

(யஹ்ஜுஜ் – மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அழிவுக்குப் பின்) அவர்கள் (பயன்படுத்திய) அம்புகள், வில், அம்பாரத் தூளிகள் போன்றவற்றை முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளுக்கு விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான், அனைத்து வீடுகளையும் பூமியையும் அந்த மழை கண்ணாடி போல் கழுவி விடும். பின்னர் பூமியை நோக்கி, ‘உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த பரக்கத்தையும் திரும்பக்கொடு’ என்று கூறப்படும். (நல்ல விளைச்சல் ஏற்படும்) அந்நாளில் ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே உண்பார்கள். அதன் தொலி மூலம் (குடை போல் அமைத்து) நிழல் பெறுவார்கள். அந்த அளவுக்கு அது பெரிதாக இருக்கும். பாலிலும் பரக்கத் செய்யப்டும். ஒரு ஒட்டகத்தில் கறக்கப்படும் பால், ஒரு பெரிய கூட்டத்தாருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கப்டும் பால் ஒரு சமூக மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். மக்களின் இந்த வளமான வாழ்க்கையின் போது, அல்லாஹ் ஒரு சுகமானக் காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள்வரை செல்லும். மூஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடுவர். கெட்டமக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போதுதான் மறுமைநாள் நிகழும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் ரழியல்லாஹு அன்ஹுநூல் – திர்மிதீ.

தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் வருகை என இம்மூன்றும் அடுத்தடுத்து நடைபெறும் என்பதும் நமக்குத் தெரிகிறது.

Add Comment

Your email address will not be published.