மஞ்சவி(மஞ்சகுப்பம்) ஹஜ்ரத் படேசாஹிபு பத்ருத்தீன் அஹ்மது கத்தஸல்லலாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்

மஞ்சவி(மஞ்சகுப்பம்) ஹஜ்ரத் படேசாஹிபு பத்ருத்தீன் அஹ்மது கத்தஸல்லலாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்

By Sufi Manzil 0 Comment December 4, 2011

Print Friendly, PDF & Email

கி.பி. 1875 செப்படம்பர் 16 ம் தேதி இவர்கள் பிறந்தார்கள். சென்னை தொண்டியால் பேட்டை ஆத்மார்த்தக் கழகத்தை ஸ்தாபித்தவர்கள் இவர்கள்தான். மிகவும் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார்கள். எப்போதும் இவர்கள் வீட்டு வாசலில் முஸாபிர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். தங்கள் உழைப்பிற்கு கிடைக்கும் சம்பளத்தை வாங்கி அன்றே செலவு செய்து விடுவார்கள். நாளைக்கு என்று எதுவும் சேமித்து வைப்பதில்லை. உதாரணம் இவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து நெல்லிக்குப்பம் காழியார் பாய் மௌலவி அப்துல் ஹமீது அவர்கள் வெளியூர் சென்று பயான் பண்ணி அதில் கிடைத்த பணத்தை இவர்களுக்கு கொடுத்தார்கள். அதை உடனே அவர்கள் ஏழைகளுக்கு கொடுத்து விட்டார்கள்.
.    
இதைக் கண்ட மௌலவி அவர்கள் ஷெய்கு நாயகத்திடம் கேட்க, ' எனக்கு எப்போதும் தான தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டுமம்மா. இல்லாது போனால் பெரும் கஷ்டம்தான் என்று சொன்னார்கள். இவர்கள் பேச்சில் அம்மா எடுத்து சேர்த்து சொல்வது வழக்கமாக இருந்தது.

மஞ்சவி நாயகம் அவர்கள் உரத்த குரலில் யா முஸ்தபா-யாரஸூலல்லாஹ், யா ஹக்கு-யாரஸூலல்லாஹ்' என்று  சொல்லும்போது குழந்தை தாயுடைய ஏக்கத்தால் கூப்பிட்டு அழைப்பது போல் இருக்கும். மேலும் எந்த நேரமும் அவர்களிடமுள்ளவர்களை சலவாத்து சொல்லும்படி ஏவிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் உபதேசம் செய்யும்விதம் தனிச்சிறப்புடையது. உபதேச மஜ்லிஸில் உள்ளவர்களை நடுவில் வழி விட்டு இரண்டு பக்கங்களிலும் இருக்கச் செய்வார்கள். மஞ்சவி நாயகம் அவர்கள் நடுவில் நின்று கொண்டும், நடந்து கொண்டும் உபதேசம் செய்வார்கள். உபதேசத்துடன் பாடல்களும் இடையே சொல்வார்கள். பாடல்கள் சின்னபாடல்களாக இருக்கும். அதை சபையோர்கள் சேர்ந்து சொல்ல வேண்டும். ஒரு பக்கத்திலுள்ளவர்கள் சொன்னதும் மறுபக்கத்திலுள்ளவர்கள் சொல்ல வேண்டும். இடையிடையே தரூத்;  ஷரீபை ஓதச் சொல்வார்கள். இறைவனின் திருநாமங்களையும், தஸ்பீஹ் வகைகளையும் சொல்வார்கள். உபதேச மஜ்லிஸ் திக்ரு மஜ்லிஸ் போல இருக்கும்.

உபதேசம் செய்து கொண்டிருக்கும் போது மலக்குகள் வருகிறார்கள். அவர்களுக்கு திக்ரு, தஸ்பீஹ், ஸலவாத்துக்கள்தான் பிரியம். ஆகையால் மரியாதையுடன் எழுந்து நின்று தஸ்பீஹ், திக்ரு, ஸலவாத்து சொல்லுங்கள் என்று சொல்வார்கள்.

மஞ்சவி நாயகம் அவர்கள் மஞ்சக்குப்பம் கலெக்டர் ஆபிஸில் ஹெட் கிளர்க்காக  வலைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, பெரிய ஆபிஸர் வருகை தந்தபோது மஞ்சவி நாயகமவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். வந்திருந்த ஆபிஸர் இப்போது உங்களுக்குள்ள சம்பளம் போதாது, உயர்த்தி வைக்கிறேன்' என்றார். அதற்கு ஹஜ்ரத் அவர்கள் இதுபோதும். உயர்த்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இதுவிசயத்தில் அவர்களுடைய மனது, உயர்த்தினால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமே என்று சொன்னதாம். இதைக் கேட்டு 'மனமே! உனக்கு பண ஆசை ஏற்பட்டுவிட்டதா? சரியான தண்டனை உனக்குத் தருகிறேன் என்று சொல்லி வெயிலில் கருங்கல் மேல் கையைக் கட்டிக் கொண்டு நின்றார்கள். மனம் இனிமேல் சொல்லமாட்டேன் என்று சொல்லியும் அதைக் கேட்காமல் உனக்கு பேனாவை பிடித்து எழுதத் தெரிந்ததால் அல்லவா பண ஆசை ஏற்பட்டிருக்கிறது? என்று சொல்லி அருகிலிருந்த ரூல் தடியை எடுத்து தனது இடது கையில் வைத்து வலது கை கலிமாவிரலில் (ஆட்காட்டி விரலில்) ஓங்கி அடித்து விட்டார்கள். அந்த விரல் ஒடிந்து விட்டது.

உபதேசம் செய்யும்போது சிலசமயம் குழந்தைபோல் ஆகிவிடுவதையும் சிலபேர் பார்த்திருக்கிறார்கள். மேலும் கையெழுத்துப் போடும்போது 'குழந்தை பத்ருத்தீன் அஹ்மது' என்று கையெழுத்து போடுவார்கள்.

காமில்வலி அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்கள் தமக்கு காமிலான ஷெய்கு கிடைக்க ஆவல் கொண்டு தேட்டமாக இருந்தார்கள். மஞ்சவி ஹஜ்ரத் அவர்கள் மஞ்சகுப்பத்தில் இருப்பதைக் கேள்விபட்டு அங்கு அடிக்கடி  சென்று சந்தித்து வந்தார்கள். சிலகாலம் கழித்து பைஅத்தும் பெற்றார்கள்.

ஷெய்கு ஷம்ஸுத் தப்ரேஜ் மற்றும் அவரது முரீது மவ்லானா ரூமி ஆகியோர்களுக்கு இடையே இருந்த தொடர்பு போல் மஞ்சவி ஹஜ்ரத்திற்கும் அப்துல் கரீம் ஹஜ்ரத்திற்கும் இருந்தது.

தப்ஸ் அடித்தும், முகத்தில் முகமூடி புர்கா கபன் அணிந்தவர்களாக பக்கீர்மார்களையும், தப்ஸு அடிக்கிறவர்களையும் அழைத்து வந்து திக்ருகளும், பைத்துகளும் சொல்லி ராத்திபு நடத்தி வந்திருக்கிறார்கள். ஒருகாலை மற்றொரு கால் மீது வைத்து ஒரே காலின் மேல் நின்றும் தப்ஸு அடித்துக் கொண்டு பம்பரம் போல் சுற்றுவார்கள். ராத்திபு செய்யும் போது பம்பரம் போல் தன்னைச் சுற்றி சுழல்வார்கள்.

சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரிக்கு ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் வருகை தந்தபோது அக்கால குத்பாக இருந்த படேஷா ஹஜ்ரத் அவர்கள் வருங்கால குத்பாக நியமிக்கப்பட இருந்த ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்களை 'குத்பு வருகிறார்' என்று கட்டியம் கூறி கட்டி அணைத்து வரவேற்று தம்முடைய மறைவை மறைமுகமாக அறிவித்தார்கள்.

அரபி ஞானமோ, ஆசிரியர்களிடம் பயின்றோ இருக்கவில்லை. மாறாக அல்லாஹ் அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து குத்பாக ஆக்கி வைத்திருந்தான். இவர்களின் மறைவு கி.பி. 1928 டிசம்பர் 8 அன்று நிகழ்ந்தது. இவர்களின் மறைவிடம் கப்ரு ஷரீப் பெரம்பூர் செம்பியம் குத்பா பள்ளிவாசலில் இருக்கிறது.