நபிகளாரின் இறுதி நாட்களும் உபதேசங்களும்

நபிகளாரின் இறுதி நாட்களும் உபதேசங்களும்

By Zainul Abdeen 0 Comment September 17, 2020

Print Friendly, PDF & Email

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு நம் அனைவருக்கும் படிப்பினை. அன்னவர்கள் தங்கள் தூதுத்துவத்தை முடித்துவிட்டு இறைவனின் அழைப்பிற்காக காத்திருந்த போது நடந்த சம்பவங்கள் மிக உணர்ச்சிப்பூர்வமானவை. அதில் அவர்கள் செய்த உபதேசங்கள் மிகவும் போற்றத் தக்கவை – பின்பற்றத் தக்கவை. அதை இறுதித் திருநபியின் இறுதி நாட்கள் என்ற நூல் மூலம் எம்.எஸ். முஹம்மது தம்பி அவர்கள் நூலாக வெளிக் கொணர்ந்திருந்தார். அதைப் படிக்கப் படிக்க பரவசமாகும். அதிலிருந்து இக்கட்டுரை தொகுத்தெழுதப்பட்டுள்ளது.

மறைவைப் பற்றி முன்கூட்டி அறிவித்தல்:

(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும் (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால் (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக. நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கிறான்’ – என்ற திருமறையின் 110 ஆவது அத்தியாயமே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறங்கிய முழுமையான இறுதி அத்தியாயமாகும்.

இவ்வத்தியாயம் இறங்கிய பிறகு நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனை அதிகமாகப் புகழ்ந்து துதிப்பதும், பிழை பொறுக்கத் தேடுவதிலும் ஈடுபட்டிருந்தார்கள். இதன்பின்னர் ஒவ்வொரு தொழுகையின் ருக்கூஃ மற்றும் ஸுஜூதிலும்

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْلِيْث

‘எங்கள் இரட்சகனான அல்லாஹ்வே! நீ மிகத் தூய்மையானவன், புகழ் அனைத்தும் உனக்கே, அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்று அதிகமாக ஓதி வந்ததாக முஃமின்களின் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுவார்கள்.

பெருமானாரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)இறுதிக் காலத்தில் எழும்போதும், அமரும்போதும், போகும் போதும், வரும் போதும் அவர்களின் திருவாயானது ‘அல்லாஹ் தூய்மையானவன், புகழனைத்தும் அவனுக்கே’ என்று புகழ்ந்து கொண்டிருந்தது. ‘நாயகமே! இவ்வாறு அதிகமாகத் தாங்கள் ஓதுவதேன்? என்று கேட்டேன். ‘எனக்கு அவ்வாறு ஓதும்படியாக ஏவப்பட்டுள்ளது’ என்று கூறி மேற்கூறிய அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள் என்று உம்முல் முஃமினீன் ஹழ்ரத் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வத்தியாயம் இறங்கிய பின் இவ்வாண்டின் இறுதியில் நான் மரணமடைவேன் என்று அவர்கள் அறிவித்ததாக அன்னை உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பொதுவாக இந்த அத்தியாயம் இறங்கிய பின் நாயகம் அவர்கள் மறுமை வாழ்வுக்கான தேட்டத்திலும், தெண்டிப்பிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு ஈடுபட்டிருந்தார்கள் என்றும் ‘நான் வந்த காரியம் முடிந்து விட்டது. எனக்கு மரண அறிவிப்பு கிடைத்து விட்டது என்று அவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்; ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறுதி ஹஜ்:

கண்ணியம் பொருந்திய இறைவனின் திருவீட்டைக் கடைசி முறையாகக் கண்டுகளித்து, இறையருள் பெற்ற தங்கள் தோழர்கள் யாவரையும் ஒருசேர சந்தித்து, தங்களது இறுதிச் செய்தியை உலகுக்குப் பறைசாட்ட அதையே பொருத்தமான தருணமென்று தெரிந்தெடுத்த நபிகளார் தங்களின் ஹஜ்ஜுப் பயணத்தைப் பற்றி மஸ்ஜிதுன் நபவியில் முஸ்லிம்கள் யாவரும் அவர்களோடு கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கச் செய்தார்கள். யமன் நாட்டிலிருந்து ஹழ்ரத் அலீ நாயகத்தையும் தவறாமல் தங்களோடு கலந்து கொள்ள வேண்டும் என்று பிரத்யேக அழைப்பை தூதர் மூலம் அறிவிக்கச் செய்தார்கள். அப்புனிதப் பயணத்தில் அனைத்து மனைவிமார்களையும் ஒருசேர அழைத்துச் சென்றார்கள்.

இந்த ஹஜ்ஜுப் பயணத்தின் போதுதான் அரபாவில் இறுதி உபதேசத்தை உலக முஸ்லிம்களுக்கு நிகழ்த்தினார்கள். அவை:

இறைவனைப் புகழ்ந்து துதித்து, அவனின் பேரருள் கொடைகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்து, பிழை பொறுக்கத் தேடிப் பிரார்த்தித்துக் கொண்ட பின், உள்ளமுருகத் தங்களின் பேச்சைத் துவக்கிய அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘மக்களே! நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இதற்குப் பின்னால் இந்த இடத்தில் இனி எப்போதும் உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இன்றைய தினத்தையும், இந்த மாதத்தையும், இந்தத் தலத்தையும் எவ்வாறு புனிதமாக நீங்கள் கருதுகிறீர்களோ, அதேபோல் நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் வரையிலும் உங்களுள் ஒவ்வொருவரின் உயிரும், உடைமையும், மானமும் மற்றவர்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் வெகு விரைவில் உங்கள் இறைவனைச் சந்திக்க இருக்கிறீர்கள். அப்போது உங்கள் செயல்களைப் பற்றி அவன் கேள்வி கேட்பான்’ என்று கூறி நிறுத்தி, ‘இந்தச் செய்தியை உங்களுக்கு நான் அறிவித்து விட்டேனல்லவா?’ என்று கேட்டார்கள்.

மக்கள் யாவரும் ஒரே குரலில் ‘ஆம்! அறிவித்து விட்டீர்கள்’ என்று கூறியதும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இறைவா! இதற்கு நீயே சாட்சி!’ என்று கூறினார்கள்.

‘தம்மிடம் அடைக்கலப் பொருளை வைத்திருப்பவர்கள் உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவாராக. தவறிழைக்கும் ஒருவன் தானே அதற்குப் பொறுப்பாளியாவான். மகனுடைய தவறுக்காகத் தகப்பனோ தகப்பனுடைய தவறுக்காக மகனோ விசாரிக்கப்பட மாட்டார்கள். அந்தோ மக்களே! நான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள்! ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமின் உடன் பிறந்தவன் என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே பிறப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நீங்கள் மறந்து விட வேண்டாம். தன் சகோதரான் அனுமதிக்காத எதுவும் ஒரு முஸ்லிமுக்கு உரிமையாகாது. எனவே நீங்கள் உங்களையே அநியாயத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். இறைவா! நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன் அல்லவா?

‘மக்களே! அறியாமைக் காலத்தின் எல்லாச் செயல்களையும் என் ஒரு கால்களின் கீழ் வைத்து இன்று நான் மிதித்து விடுகிறேன். இருண்ட காலத்தின் கொலைகளுக்கான எல்லா இரத்தப் பழிகளையும் இன்று நான் விலக்கி விட்டேன். எல்லாவற்றுக்கும் முதலலாக ‘ஸஅத்’ கூட்டத்தாரிடம் வளர்ந்து கொண்டிருந்த போது ‘ஹுதைல்’ என்பவரால் கொல்லப்பட்ட, என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு ஹாரிஃஸ் உடைய கொலைக்கான பழியை இன்று நான் மன்னித்து விட்டேன்.

‘அறியாமைக் காலத்தில் கொடுக்கப்பட வேண்டிய வட்டி அனைத்தும் மண்ணிலே இன்று புதைக்கப்பட்டு விட்டது. இதற்கு ஆரம்பமாக என் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்குச் சேர வேண்டிய வட்டி அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது. எவருக்கும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. கடன் கொடுத்தவர்கள் தங்களின் முதலைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதில் நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்.

‘மக்களே! உங்களின் மனைவிகளைப் பற்றி அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! அவாக்ள் அல்லாஹ்வின் அமானிதங்களாவர். அவர்களை நீங்கள் உங்களின் மனைவியர்களாக ஏற்றிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் அனுமதியோடு அவர்களின் உடல்களை உங்களுக்கு ஆகுமானதாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் மீது உங்களுக்குள்ள உரிமை நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்களின் படுக்கையில் வந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதாகும். அதில் அவர்கள் தவறினால் கடுமையான முறையில் அல்லாமல் அவர்களை நீங்கள் அடிக்க உரிமை உண்டு. உங்கள் மீது அவர்களுக்கான கடமை நீங்கள் அவர்களுக்கு நல்ல விதமாக உண்ணக் கொடுப்பதும் நல்ல விதமாக உடுத்தக் கொடுப்பதுமாகும்.

‘மக்களே! கருப்பு நிறமுடைய அடிமை ஒருவரே உங்களுக்கு தலைவராக ஆயினும் சரியே, அல்லாஹ்வின் வேதக் கட்டளைப்படி செயலாற்றுவாராயின் அவர் சொல்லுக்குக் கீழ்ப்படியுங்கள். மக்களே! ஒவ்வொருவருக்கும் உரிய பங்கை அல்லாஹ் ஏற்கனவே ஒதுக்கி வைத்துள்ளான். எனவே வாரிசுதாரர்கள் சொத்தை அடைவதற்கு எந்தச் சாசனமும் இடைஞ்சலாக இருத்;தலாகாது. அப்படியல்லாவிடினும் மூன்றில் ஒரு பங்கு சொத்துதான் சாசனம் மூலம் உரிமையாக்கப்பட வேண்டும். விபச்சாரம் செய்தவனுக்குத் தண்டனை அவனைக் கல்லெறிந்து கொல்வதேயாகும்.

‘மக்களே! இந்த பூமியில் தான் தோல்வியுற்று விட்டதாக ஷைத்தான் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளான். மிக அற்ப விசயங்களிலேனும் நீங்கள் அவனைப் பின்பற்றி விடமாட்டீர்களா என்று எதிர்பார்த்தவனாக இருக்கிறான். எனவே மார்க்கத்தில் அவனைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையுடனிருங்கள்.

‘மக்களே! நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டால் அதன் பின் எப்போதுமே வழி தவறி விட மாட்டீர்களே – அத்தகைய இரு விசயங்களை உங்களிடையே நான் விட்டுச் செல்கிறேன். அவை அல்லாஹ்வின் திருவேதமும், அவனுடைய ரஸூலின் முன்மாதிரியுமாகும்.

‘மக்களே! இதோ ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) என்னிடம் வந்து அல்லாஹ்விடமிருந்து ஸலாம் கூறி மாபெரும் வல்லமையுடைய இறைவன் அரஃபாவில் தங்கினவர்களின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகிறார்’ (அச்சமயம் ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து ‘அல்லாஹ்வின் தூதரவர்களே! இது நமக்கு மட்டுமா? என்று கேட்டார்கள்) இது உங்களுக்கும் உங்களைத் தொடர்ந்து மறுமை நாள் வரை வரும் அனைவருக்கும் கிடைத்த அருளாகும்.

‘மக்களே! எனக்குப் பின்னர் எந்த ஒரு நபியும் வரப் போவதுமில்லை. எந்தப் புதிய சமுதாயமும் இனி பிறக்கப் போவதுமில்லை. நல்லபடி நான் கூறுவதைக் கேட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள். பொருள்களின் மீது ஜகாத்தை உளத் திருப்தியோடு கொடுத்து விடுங்கள். அல்லாஹ்வின் திரு வீட்டின் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள். உங்களின் உறவினர்களுக்கு உதவுங்கள். இதற்குப் பலனாக நீங்கள் உங்களின் இறைவனின் சுவனத்தில் பிரவேசிப்பீர்கள்.

‘மக்களே! இறுதி நாளில் உங்களிடம் என்னைப் பற்றியும் கேட்கப்படும். அப்போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது கூடி நின்ற ஸஹாபாக்கள் அனைவர்களும் ‘யாரஸூலல்லாஹ்! தாங்கள் இறைவனின் செய்தியை எங்களுக்கு எத்தி வைத்து விட்டீர்கள், நபித்துவத்தின் கடமையை நிறைவேற்றினீர்கள், நன்கு அறிவுறுத்தினீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுவோம்’ என்று கூறினார்கள்.

அப்போது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களின் சுட்டு விரலை வானை நோக்கி உயர்த்தி பின்னர் அம்மக்கள் பக்கமாகக் காட்டி, ‘இறைவா! இவர்கள் சொல்லுக்கு நீயே சாட்சி!’ என்று மூன்று முறை கூறினார்கள்.

அதன்பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அருகில் இருப்பவர்கள் இச் செய்திகளை தொலைவிலிருப்பவர்களுக்கு எத்தி வைப்பார்களாக. இங்கே வந்திருப்பவர்கள் இச்செய்திகளை இங்கே வராதிருந்து விட்டவர்களுக்கு எத்தி வைப்பார்களாக. ஒருக்கால் இதனை கேட்பவர்களை விட கேள்விப் படுபவர்கள் இதனை அதிகம் நினைவு வைப்பவர்களாகவும், நிறைவேற்றுபவர்களாகவும் இருக்கலாம்’ என்று கூறி, தங்களின் உரையை நிறைவுபடுத்தினார்கள்.

அப்பேருரையை அவர்கள் முடித்த அதேநேரம்,

اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا

‘நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தைத் தேர்ந்(தெடுத்)து (உங்களுக்கு) அருட் செய்து அங்கீகரித்துக் கொண்டேன்’ – திருக்குர்ஆன் 5:03
என்ற திருவசனத் தொடர் இறங்கியது.

இவ்வசனத்தை இறைத்தூதர் அவர்கள் ஓதிக் காட்டியதுமே தோழர்கள் உள்ளங்கள் பூரிப்படைந்தன. அதுவரை எந்த மார்க்கத்திற்கும் வேதத்திற்கும் கிடைக்காத ‘உங்களின் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்’ என்ற நிறைவு முத்திரை இஸ்லாம் மார்க்கத்திற்கு கிடைத்ததை எண்ணி தோழர்கள் உவகை பொங்கினர். இந்தப் பெறுபேற்றுக்காகத்தானே அனைவரும் பல்வேறு சோதனைகளை சுமந்தார்கள். ஆசாபாசங்களை துறந்தார்கள்.

சஹாபாக்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த அந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒருவர் மட்டும் பல்லாயிரம் தோழர்களை மறந்து தனித்தவராக, தலை கவிழ்ந்து, சோர்வடைந்து நின்றிருந்தார். சோகத்தின் ரேகைகள் அவர் முகத்தில் பரவி இருந்தன. கண்ணீர் அவர் கண்களிலிருந்து வடிந்து கொண்டிருந்தது.அவர்தான் ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். இஸ்லாத்தின் ஆரம்பம் முதல் இத்தருணம் வரை நபியை விட்டு இணைபிரியாத நுபுவத்தின் ரகசியங்களை புரிந்து கொள்ளும் தன்மைப் பெற்றிருந்த இத் தோழரிடம் சந்தோஷப்பட வேண்டிய தருணத்தில் ஏன் கண்ணீர் வடித்து சோகத்துடன் நிற்கிறீர்கள் என்று வினவப்பட்ட போது, அந்த மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது என்றால் அவர்கள் பிறந்த இலட்சியம் முடிவு பெற்றது என்பது பொருள். இனி அல்லாஹ்வின் அருமைத் தூதர் திரும்ப அழைக்கப்பட்டு விடுவார்கள் என்ற மர்மத்தை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?’ என்று வினவினார்கள்.

சித்தீகுல் அக்பர் அவர்களின் இந்த விளக்கம் தோழர்கள் மனதில் வேலாக குத்தி நின்றது. மலர்ந்த முகங்கள் எல்லாம் இப்போது வாடி நின்றன. அவர்கள் அண்ணலாரிடம் சென்று ‘இந்த அறிவிப்பில் தங்களின் மரணவாடையை அல்லவா அபூபக்கர் நாயகம் அவர்கள் நுகர்கிறார்கள்’ என்று கேட்டார்கள்.

அதற்கு பெருமானார் அவர்கள் அவருடைய கணிப்பு சரியானதுதான். அபூபக்கர் உங்களிடம் உண்மையே கூறினார்’ என்றார்கள்.

உம்மத்தாரின் மீது பெருமானாரின் கருணை:

பின் முஸ்தலிபா சென்றடைந்த அவர்கள் மஷ்அருல் ஹராம் என்ற தலத்தை அடைந்து தொழுது விட்டு இரவெல்லாம் இறை வணக்கத்திலேயே செலுத்தியபின் பொழுது விடிவதற்குச் சற்று முன் காலைத் தொழுகையை தொழுத அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். பிரார்த்தனையின் போது அவர்கள் கலகலவென தங்களின் கடைவாய்ப் பற்கள் வெளித் தெரியும்படி சிரித்தார்கள்.

நபிபெருமானார் அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே அடுத்தவர்களுக்குக் கேட்கும்படியாகச் சிரிப்பதை அன்றே முதன் முதலாகக் கண்ட தோழர்கள் வியப்படைந்தார்கள். பிரார்த்தனையை முடித்து எழுந்த நபிகளாரை நோக்கி தோழர்கள், ‘பெருமானே! என்றும் இல்லாத வழக்கமாக இன்று தாங்கள் உரத்துத சிரித்த காரணம் தெரியவில்லையே!’ என்று கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்னகைத்தவர்களாக, அரஃபாவின் வெளியில் அல்லாஹ்விடத்தில் ‘என் இறைவா! உன் அருளை நாடி இந்த நாளில் இத்தலத்தில் வந்து தங்கும் என் உம்மத்துகளின் எல்லாப் பாவங்களையும் மன்னித்தருள்’ என்று பிரார்த்தித்தேன். ‘அவ்வாறே மன்னித்தேன். ஆனால், தன் சகோதரான் ஒருவனுக்குச் செய்த அநீதியை மட்டும் நான் மன்னிக்க மாட்டேன்’ என்று என் இறைவனிடமிருந்து பதில் கிடைத்தது. என் உள்ளம் திருப்தியடையவில்லை.

முஸ்தலிபாவில் வந்த பின் இஷாவைத் தொழுது முடித்து இரவெல்லாம் என் இறைவனிடம், ‘என் இரட்சகா! நீ நாடினால் அநீதம் செய்யப்பட்டவனுக்கும் உன் புறத்திலிருந்து பல மடங்கு அதிகமான நன்மைகளைப் பிரதியாகச் செய்து விடக் கூடியவன். அவ்வாறு செய்தேனும் என் உம்மத்துகளின் எல்லாப் பாவங்களையும் மன்னித்தருள்’ என்று கேட்டு நின்றேன். எனக்கு எவ்விதமான பதிலும் கிடைக்காததால் என் மனது அமைதி இழந்தது. காலைத் தொழுகையைத் தொழுத பின்னரும் நான் என் கைகளை ஏந்தி இதே பிரார்த்தனையைக் கேட்டேன். அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து யாரஸூலல்லாஹ்! தாங்கள் தங்கள் உம்மத்துக்களுக்காகப் பெரிதும் சிரமப் பட்டு விட்டீர்கள். அல்லாஹ் தங்களின் இவ்வேண்டுகோளை அங்கீகரித்தான்’ என்று கூறிச் சென்றார்கள். அதை சற்று தூரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஷைத்தான் தன் தலையில் மண்ணை வாரி இறைத்துக் கொண்டு அதோ ஓடுகிறான். அவன் தன் தலையில் தன் கையாலேயே மண்ணை வாரி இறைத்துக் கொண்டதைக் கண்டபோது என்னால் சிரிப்பை உள்ளடக்க முடியவில்லை’ என்றருளி மகிழ்ந்தார்கள்.

ஹஜ் கிரிகைகளை வரிசையாக நிறைவேற்றி வந்த நாயகமவர்கள் – தங்களின் வாழ்வு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நன்குணர்ந்திருந்த அவர்கள், மக்கள் பிரிந்து செல்வதற்கு முன் அவர்களுக்குத் தேவையான எல்லா விபரங்களையும் மகத்தான இந்த ஹஜ்ஜின் போது அவர்கள் தெரிந்து கொள்வதை விரும்பினார்கள்.

அதன்படி ஹஜ்ஜின் கிரியைக்குரிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வந்தார்கள்.

ஒருநாள் மதியத் தொழுகைக்குப் பின் இறைவனின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செந்நிறப் போர்வை அணிந்தவர்களாக, ‘கஸ்வா’வின் மீது அமர்ந்து வந்த போது அவர்களுக்கு சொந்தமான ஆன்மீகப் பேரழகைக் கண்டு மகிழ்ந்தவர்களாக சஹாபாக்களின் பெருங்கூட்டம் அன்னவர்களை சூழ்ந்து நின்றது. அவர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் கண்ட மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னவர்களுக்கு ஆன்மீக விருந்தளித்தனர். ஹழ்ரத் ராபிஆ இப்னு உமையா, ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் நபிகளார் சொல்வதை ஒவ்வொரு வாக்கியமாக திருப்பிக் கூறிக் கொண்டிருந்தனர்.

‘மக்களே! என் சொற்களை செவி மடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பின் இனி எப்போதும் இந்த இடத்தில் என்னை நீங்கள் சந்திக்கப் போவதில்லை’ என்று கூறி, தங்களின் குரலை உயர்த்தியவர்களாக, ‘இது என்ன மாதம் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள்.

‘அல்லாஹ்வும் அவனின் ரஸூலுமே மிகவும் அறிந்தவர்கள்’ என்று மக்கள் பதிலளித்தார்கள்.

‘இது ஹஜ்ஜுடைய மாதமல்லவோ?’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.

ஆம் என்று பதில் வந்தது.

இது என்ன நாள் என்று நீங்கள் அறிவீர்களா?’ என்று என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.

‘அல்லாஹ்வும் அவனின் ரஸூலுமே மிகவும் அறிந்தவர்கள்’ என்று மக்கள் பதிலளித்தார்கள்.

‘இது தியாகத் திருநாள் அல்லவோ?’ என்று நாயகமவாக்ள் கேட்டதற்கு,’ஆம்’ என்று பதில் தந்தார்கள் மக்கள்.

‘இது என்ன நகரம்?’ என்று நபிகளார் கேட்டார்கள்.

‘அல்லாஹ்வும் அவனின் ரஸூலுமே மிகவும் அறிந்தவர்கள்’ என்று மக்கள் பதிலளித்தார்கள்.

‘இது புனித நகரமல்லவா?’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டவுடன் ‘ஆம்’ என்றனர்.

சிறிது நேர மவுனத்திற்குப் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்களின் இந்த மாதமும், இந்த நாளும், இந்த நகரமும் உங்களுக்குப் புனிதமாக இருப்பதுபோல் உங்கள் ஒவ்வொருவருடைய உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் ஒவ்வொருவரும் புனிதமாகக் கருதுங்கள்! உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும் அந்த நாள் வெகு சமீபத்தில் இருக்கிறது என்பதை நல்லபடி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களின் அடிமைகளை நன்கு கவனியுங்கள். நீங்கள் உண்ணும் உணவையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவது போன்ற உடையையே அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள். அவர்களின் குற்றங்களை தாராளமாக மன்னியுங்கள். அவர்களைத் தண்டிக்காது விட்டு விடுங்கள். வெகுவிரைவில் உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும் போது உங்கள் செயல்களைப் பற்றி நீங்கள் வினவப்படுவீர்கள். ஜாக்கிரதை! எனக்குப் பின்னர் நீங்கள் வழி தவறி விடாதீர்கள். நீங்களே ஒருவர் கழுத்தை ஒருவர் அறுத்துக் கொள்ளாதீர்கள்.

மக்களே! தஜ்ஜாலைப் பற்றி தங்களின் சமுதாயத்தவர்களை எச்சரிக்காத எந்த நபியையும் அல்லாஹ் அனுப்பி வைக்கவில்லை. நூஹு நபியும் அவர்களுக்குப் பின்னர் வந்த நபிமார்களும் தத்தம் கூட்டத்தினரை எச்சரித்தேயுள்ளனர். மக்களுக்கிடையில் அவன் தோன்றுவான் என்பதை தெரிவித்துள்ளார்கள். அவனுடைய நிலைமையில் நீங்கள் ஒன்றும் அறியாதபடி மறைந்து கிடக்கலாம். ஆனால் அல்லாஹ்விடம் எதனையும் மறைக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ் தஜ்ஜாலைப் போல் ஒற்றைக் கண் உடையவன் அல்லன். தஜ்ஜாலின் ஒரு கண் அழுகிய திராட்சையைப் போல் பழுதுபட்டிருக்கும்.

மக்களே! உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஆதமும் ஒருவரே. நீங்கள் யாவரும் அவருடைய மக்களே. அவரோ மண்ணால் படைக்கப்பட்டவன். எந்த ஓர் அரபியும், அரபியல்லாத அஜமியை விடவோ அல்லது அஜமி அரபியை விடவோ எவ்வகையிலும் உயர்ந்தவரல்லர். அதுபோலவே சிவந்த நிறமுடையவர் கருத்த நிறமுடையவரை விடவோ, கருத்த நிறமுடையவர் சிவந்த நிறமுடையவரை விடவோ உயர்ந்தவரல்லர். நிச்சயமாக, அல்லாஹ்வின் சந்நிதானத்தில் ‘தக்வா-இறையச்சம்’ உடையவரே உயர்ந்தவர் என்பதை நினைவில் வையுங்கள். இதற்குப் பின் இந்த இடத்தில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அருகிலிருப்போர் இச்செய்திகளைத் தொலைவிலிருப்போருக்கு எட்டச் செய்யுங்கள். இங்கு வந்திருப்பவர்கள் இங்கு வராமல் இருந்து விட்டவர்களுக்கு இச்செய்திகளை எத்தி வையுங்கள். ஏனெனில் நேரில் கேட்பவர்களைவிட கேள்விப்படுபவர்கள் ஒருக்கால் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்கலாம்.

மக்களே! உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகளை தெரிவித்து விட்டேனா? என்று கேட்டு நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறுத்திய போது, ‘அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே தாங்கள் தெரிவித்து விட்டீர்கள்’ என்று உரத்து பதில் கூறினார்கள் மக்கள்.

மீண்டும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உங்களுக்குண்டான என்னுடைய கடமையை நான் பரிபூரணமாகச் செய்து முடித்து விட்டேனா?’ என்று கேட்ட போது, ‘அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! நீங்கள் பரிபூரணமாக செய்து முடித்தீர்கள்’ என்று மக்கள் பதில் கூறினார்கள்.

இந்த பதிலைக்கேட்டு பூரிப்படைந்த நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானத்தை நோக்கியவர்களாக, அம்மக்களைச் சுட்டிக்காட்டி, ‘இறைவா! இவர்களுக்க நீயே சாட்சி’ என்று மும்முறை கூறினார்கள்.

பின்பு மக்கா சென்று இறைவனின் புனித திருவீட்டை இறுதி முறையாக இடம் சுற்றி வந்த அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரியாவிடைப் பெற்று மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

வெளி மாகாணங்களிலிருந்து வந்து ஹஜ்ஜில் பங்கேற்ற மக்கள், தாங்கள் பிரிந்து செல்ல ‘கதீர் – அல் -கும்’ என்ற இடத்தில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விடை பெற்று நின்றனர். அப்போதும் அவர்களை நோக்கி அறிவுரை கூறிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள்,

‘மக்களே! நானும் உங்களைப்போன்ற மனிதனே. வெகு விரைவில் என் இறைவனிடமிருந்து அழைப்பானது எனக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த நிலையில் இரண்டு பொருட்களைப் பற்றி உங்களுக்கு அறிவுறுத்த நான் ஆசைப் படுகிறேன். அவற்றில் ஒன்று திருக்குர்ஆனாகும். அது உங்களின் கரங்களில் அமானிதமாகவும், நீங்கள் பின்பற்றத் தகுந்த வழிகாட்டியாகவும் இருக்கிறது. மற்றொன்று, ‘அஹ்லெ பைத்துகளாகிய என்னுடைய குடும்பத்தாருடன் நீதியுடன் நடந்து கொள்ளுமாறு உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டார்கள்.

மேலும் பெருமானார் அவர்கள் அலி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கரத்தைப் பற்றி உயர்த்திப் பிடித்தவர்களாக, ‘யா அல்லாஹ்! எவருக்கு நான் நேசனோ அவருக்கு அலீயும் நேசமானவரே, அவர் யாரை நேசிக்கின்றாரோ அவரை நீயும் நேசி! அவர் யாரைப் பகைக்கின்றாரோ அவரை நீயும் பகைத்துக்கொள்’ என்று பிரார்த்தித்தார்கள்.

மதீனா நகர் மீண்டு வந்த நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மேலான மறுமைப் பேற்றினை அடைவதற்குரிய முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டார்கள். எந்த நேரத்திலும், எந்தத் தலத்திலும் மக்கள் அவர்களை இறை தியானத்தில் மூழ்கியவர்களாகவே கண்டார்கள்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறைவிற்கு ஒரு மாதம் முன்பாக நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக நெருக்கமான தம் தோழர்களை அன்னை ஆயிஸா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்திற்கு வரவழைத்தார்கள். அங்கு பரிவு நிறைந்த பார்வையை எங்கள் மீது செலுத்திய அவர்களின் கண்களில் நீர் தேங்கி நின்றது. பிரிவாற்றாமை அவர்களின் நெஞ்சை அழுத்துவதை நாங்கள் உணர முடிந்தது. இறைவனுக்கு என்றென்றும் அஞ்சி நடக்குமாறு எங்களுக்கு நல்லுரை பகன்று, எங்களுக்காக நெடுநேரம் பிரார்த்தித்தார்கள்.

ஹழ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் நிகழ்வு:

‘ஒருநாள் எங்களுக்கிடையே அமர்ந்திருந்த நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இதோ, நான் என் சகோதரர்களைக் காண்கிறேன்’ என்றார்கள்.

‘பெருமானே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் அல்லவா!’ என்று நாங்கள் கேட்டோம்.

‘நீங்கள் என் தோழர்கள். என் கூட்டாளிகள். ஆனால் என் சகோதரர்கள் என் மரணத்துக்குப் பின்னால் வருவார்கள். என் மீது ஈமான் கொள்வார்கள். அவர்களுக்காக நான் ஹவ்ழ்லுல் கவ்தருக்கருகில் முற்கூட்டியே சென்று காத்திருப்பேன்’ என்று நபிகளார் கூறினார்கள்.

‘பெருமானே! தங்களுக்குப் பின்னால் வரக்கூடிய சகோதரர்களை தாங்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம்.

‘பெருமானார் அவர்கள் ‘வெண்ணிற முகமுடைய உங்களுடைய குதிரையானது மற்றக் குதிரைகளோடு கலந்து விட்டால் நீங்கள் உங்கள் குதிரையைக் கண்டுபிடிக்க மாட்டீர்களா? இதே விதமாக நானும் என் சமூகத்தவர்களை அடையாளம் புரிந்து கொள்வேன். என் இறைவன், அவர்களின் கை, கால், முகம் ஆகிய உளுவினால் கழுவப்பட்ட பாகங்களைப் பகலவனைப் போல் ஒளி வீசச் செய்வான்’ என்றுரைத்தார்கள்.

அதன்பின் உஹது மலைச் சாரலில் ஓய்வு கொண்டுறங்கும் அந்தப் புனித உஹது ஷுஹதாக்களைக் கண்டு அவர்களுக்காக பிரார்த்தித்து வரப் புறப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு மேலான நற்பதவிகள் கிடைக்கப் பிரார்த்தித்தார்கள்.

அன்று மாலை மஸ்ஜிதுன் நபவியை வந்தடைந்த அவர்கள், மிம்பரில் ஏறி அமர்;ந்தவர்களாக ‘அருமைத் தோழர்களே! மறுமையின் தலைவாயிலை நோக்கி இப்போது என் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறேன். இவ்வுலகைப் படைத்த என் இறைவனிடத்தில் நான் உங்களுக்காகச் சென்று பரிந்துரைப்பேன். முஸ்லிம்களின் ஆட்சியும் அதிகாரமும் வெகு தொலைவிற்கு விரிந்து பரந்து இருப்பதை இப்போது என் கண்களால் நான் காண்கிறேன். கிழக்கிலிரந்து மேற்கு வரையிலும் இஸ்லாத்தின் கொடியானது வானாளவிப் பறப்பதை இப்போது நான் பார்க்கிறேன். இறைவனின் மார்க்கத்தை ஏந்திச் செல்பவர்களின் கரங்களிலே உலகக் கருவூலங்களின் திறவு கோல்கள் இருப்பதை நான் இப்போது காண்கிறேன். நீங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்க மாட்டீர்கள் என்பதில் நான் பரிபூரணத் திருப்தி கொண்டிருக்கிறேன். ஆனால் அதிகாரத்திற்காகவும், செல்வத்துக்காகவும் உங்களுக்கிடையில் வேற்றுமையும், பிளவும், குழப்பங்களும், குரோதங்களும் உண்டாகுமோ என்ற அச்ச உணர்வை நான் அடைகிறேன். அத்தகைய துர்ப்பாக்கிய நிலைக்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருங்கள். இத்தகைய பயங்கரப் பிளவுகளாலும் குழப்பங்களாலுமே முந்திய சமுதாயங்கள் பல அழிந்தன என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

முஸ்லிம்களே! அல்லாஹ் உங்கள் மீது பேரருள் புரிவானாக. வல்லமை மிக்க அவனுடைய உதவிப் படைகளைக் கொண்டு நீங்கள் செல்லும் திசைகளிலெல்லாம் உங்களுக்கு மகத்தான வெற்றியை ஈட்டித் தந்து வாகை சூட்டுவிப்பானாக! புகழையும் கண்ணியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் உங்கள் மீது பொழிந்தருள்வானாக! அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களின் நடவடிக்கைகளை அணுவணுவாக அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் வையுங்கள். என் சக்திக்கு இயன்றவரை இஸ்லாத்தின் எல்லாப் போதனைகளையும் உங்களுக்கு கற்பித்து விட்டேன். உலகங்கள் யாவும் பிரபஞ்சத்தைப் படைத்த அல்லாஹ்வுக்கே சொந்தம். எனவே உங்களை நீங்கள் மேன்மையாக நினைத்து மற்றவர்களைத் தாழ்மையாக நினைப்பதன் மூலம் இறைவனின் இப்பூமியில் அவனின் அடியார்களுக்கிடையில் பெருமையும் கர்வமும் கொள்ளாதீர்கள்’ என்று உரையாற்றினார்கள்.

பின்னர் அவர்கள்,

تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَايُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَافَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ۝

‘(மிக்க பாக்கியம் பெற்ற) அந்த மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் (சொந்தமாக) ஆக்கி விடுவோம். ஏனென்றால் (நல்ல) முடிவு பக்தியுடையவர்களுக்குத்தான்’ (28:83)

اَلَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ ۝

‘கர்வம் கொண்ட அவர்கள் தங்குமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கிறது)’ (39:60) என்ற வசனங்களை ஓதி, ‘உங்கள் மீதும் இன்னும் இஸ்லாத்தின் மூலம் என் அணியில் இணையவிருக்கும் அனைவர் மீதும் சாந்தியுண்டாக!’ என்று கூறிப் பிரார்த்தித்தார்கள்.

பெருமானார் அவர்களின் அன்றையப் பேருரை ஒரு சமுதாயச் சிற்பி தம் சமுதாயத்தை நோக்கிச் செய்யும் பிரிவுரையாக எங்களுக்குத் தெரிந்தது’ என்று ஹழ்ரத் உஸ்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹஜ்ஜத்துல் விதாவிலிருந்து மதீனா திருநகர் வந்து சேர்ந்த நபிகளார் அவர்கள் ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் வரை தங்களின் தோழர்களுக்கு அப்போதைக்கப்போது அறிவுரை கூறி வந்தார்கள்.

அதே காலகட்டத்தில், முன்பு ஸிரியாவில் ஹழ்ரத் ஜைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கொலைக்குக் காரணமான எதிரிகளை சென்று தோற்கடிப்பதற்காக, ஹழ்ரத் ஜைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் ஹழ்ரத் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஒரு படையை அமைத்து சிரியாவை நோக்கிப் புறப்படுமாறு ஆணையிட்டார்கள்.

மறைவதற்கான அறிகுறி உண்டானது

ஸஃபர் மாதம் 28 ஆம் நாள் பள்ளியிலிருந்து நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீடு திரும்பிய போது அங்கே ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், ‘அந்தோ என் தலையே’ என்று தலைவலியால் அரற்றிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் ‘ஆயிஷா! எனக்கும்தான் தலையை வலிக்கிறது’ என்று கூறித் தங்களின் தலையைக் கையால் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் தங்கள் அருமை மனைவியாரின் அருகில் அமர்ந்து ‘ஆயிஷா! இந்தத் தலைவலியால் நீ இப்பொழுதே மரணமடைந்து நானே உன்னைக் குளிப்பாட்டி கஃபனிட்டுத் தொழுவித்து என் கரங்களாலேயே அடக்கம் செய்ய நேரிட்டால் எப்படி இருக்கும்?’ என்று வேடிக்கையாக கேட்டார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த ஆயிஷா நாயகி அவர்கள், ‘ஆகா பெருமானே! தங்கள் கரங்களாலேயே அல்லவா என் காரியங்கள் அனைத்தும் முடியும். அப்படியானால் இப்போதே என் தாய் வீடு சென்று ஒரு மணமகளைப் போல என்னை அலங்கரித்துக் கொண்டு ஒரு நொடிப் பொழுதில் திரும்பி விடுகிறேனே!’ என்று கேட்டனர்.

ஆயிஷா நாயகியின் தலைவலி மறைந்து அவர்களின் முகத்தில் குதூகலம் தோன்றியது கண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகிழ்ந்தார்கள்.

இந்தத் தலைவலியே பெருமானாரின் மறைவிற்கு முதல் அடிக்கல் என்று சொல்லலாம். மறுநாள் பெருமானார் அவர்கள் தங்கள் தோழர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்து விட்டு ஜன்னத்துல் பகீயிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியிலேயே தலைவலியோடு காய்ச்சலும் சேர்ந்து கொண்டது.

அருகில் இருந்த ஹழ்ரத் அபூயீதுல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முரட்டுப் போர்iவையைத் தங்களின் மீது போர்த்தியிருந்தார்கள். காய்ச்சலின் வேகம் அதன் மேலாகவே வெளியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த தலைப்பாகையை நான் தொட்டேன். அதன் கொதிப்பைக் கண்டு எனக்கு வியப்பேற்பட்டது. ‘அல்லாஹ்வின் ரஸூலே! தங்களுக்கா இத்தகைய கடுமையான காய்ச்சல்?’ என்றுகேட்டேன். ‘ஆம்! நபிமார்கள் இப்படித்தான் கடுமையான வேதனைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதற்கான பலனும் அவர்களுக்கு மற்றவர்களுக்குக் கிடைப்பதை விட இரட்டிப்பாகக் கிடைக்கும்’ என்று நபிகளார் பதிலளித்தார்கள்.

‘அல்லாஹ்வுடைய ரஸூலே! நபிமார்களுக்கு அடுத்தபடியாக இறைவனால் அதிகம் நேசிக்கப்படுபவர்கள் யார்?’ என்று அடுத்துக் கேட்டேன். ‘நேர்வழியின் மீதிருப்பவர்கள்’ என்று சட்டெனப் பதில் தந்த நபிகளார், ‘அல்லாஹ் அவர்களை வறுமையைக் கொண்டு சோதிப்பான். ஓர் உடுத்தாடையைத் தவிர அவர்களிடம் வேறொன்றும் இருக்காது. அவர்கள் பேன் கடிகளைத் தாங்கிக் கொண்டு அமைதியுடன் அடங்கி இருப்பர். ஆனால் அவர்களின் வறுமையில் கிடைக்கும் இன்பம் உங்களின் சுக போகத்தில் கிடைப்பதை விட மேலானதாகும்’ என்று கூறினார்கள்.

‘வணக்கவாளிகளில் மேலானவர்களுக்கு சோதனைகளும் அதிகமாக இருக்கும். குறைந்த வணக்கமுடையவர்களுக்கு இன்னல்களும் குறைவாக இருக்கும். பக்திமான்கள் இவ்வுலகை விட்டும் புறப்படும் போது இத்தகைய வருத்தங்களால் அவர்களின் பாவங்கள் கழுவப்பட்டுத் தூய்மைப் படுத்தப்பட்டிருப்பார்கள்’ என்றும் கூறினார்கள்.

இவ்வாறு அளவளாவிக் கொண்டே, ஹழ்ரத் அபூ ஸயீதில் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தோள்களில் கைகளை வைத்துத் தாங்கியவாறே நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை மைமூனா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டை அடைந்தார்கள். அன்றைய தினம் பெருமானாருக்கு அவர்கள் தங்கும் முறை அவ்விடமாகவே இருந்தது.

ஆனால் சற்று நேரத்தில் அண்ணலார் நோய்வாய்பட்டு இருப்பதை அறிந்த மற்ற மனைவிமார்கள் தங்களின் அருமைக் கணவருக்குப் பணிவிடை செய்ய அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் ஒரு சேரக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நாளை நான் தங்கும் முறை எங்கே?’ என இரண்டு மூன்று முறைக் கேட்டார்கள். பலஹீனமாக இருந்த நபிகளார் கேட்ட அந்தக் கேள்வியை மற்ற மனைவிமார்கள் அனைவரும் அண்ணலார் தமக்கு மிகவும் பிரியமான அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் தங்க விரும்புகிறார்கள் என்று அறிந்து கொண்டு, தங்களின் கணவர் நோய் தீரும் வரை அன்னை ஆயிஷா நாயகியார் வீட்டிலேயே தங்கியிருக்க சம்மதித்தனர். இது நபிகளாரின் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. புன்முறுவல் பூத்தவர்களாக ஒரு போர்வையால் தங்களைப் போர்த்திக் கொண்டு, ஒருபுறம் ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தோள் மீதும், மறுபுறம் ஹழ்ரத் பழ்ல் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தோளின் மீதும் தங்களின் கைகளை வைத்துத் தாங்கிக் கொண்டவர்களாக அன்னை ஆயிஷா நாயகி அவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

ஏறத்தாழ 10 நாட்கள் வரை காய்ச்சலின் வேகம் நீடித்திருந்தது. மிகப் பலவீனமான நிலையிலும் பெருமானார் மெதுவாக நடந்து சென்று பள்ளியில் தொழுகை நடத்தி வந்தார்கள். வாழ்வின் இறுதிப் புதன் கிழமை மக்ரிபுத் தொழுகையைச் சிரமத்தோடு தொழ வைத்தார்கள். அத்தொழுகையில் திருமறையின் ‘வல்முர்ஸலாத்’ என்னும் 50ஆம் அத்தியாயத்தை ஓதிய நபி பெருமானர் இரண்டாம் ரக்அத் இறுதியில்,

وَبِاَيِّ حَدِيْثٍ بَعْدَهُ يُؤْمِنُوْنَ ۝

‘இதற்குப் பின்னால் அவர்கள் எவ்விஷயத்தைத் தான் விசுவாசிப்பார்கள்’ என்ற 77 ஆம் வசனத்தையே இறுதியாக ஓதினார்கள். தொழுகை முடிந்து வீடு திரும்பிய உடனேயே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மயக்கமுற்று விட்டார்கள். வெகு நேரத்துக்குப் பின் மயக்கம் தெளிந்த போது ‘இஷாவின் தொழுகை முடிந்து விட்டதா?’ என்று கேட்டார்கள்.

அப்போது தொழுகைக்காக அழைக்க அவர்களை ஹழ்ரத் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘பெருமானே! தங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது கேட்டு, நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனடியாகத் தண்ணீர் கொண்டு வரச் செய்து ஒளுச் செய்தார்கள். ஆனால் மீண்டும் உடனே மயக்கமடைந்து விட்டார்கள். இவ்வாறாக மூன்று முறை நிகழ்ந்து விட்டது. அதன்பின்னர் ஹழ்ரத் பிலால் அவர்களிடம் ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு தொழுகை நடத்துமாறு கூறும்படி ஏவினார்கள்.

நபிநேசர் பிலால் அவர்களின் உள்ளத்தில் அச்சொல்லானது இடிபோல் தாக்கியது. அதிர்ச்சியடைந்த பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘என் நம்பிக்கைகள் மண்ணாய்ப் போயின. என் இடுப்பானது ஒடிந்து போனது. அந்தோ! என்னை அன்னை என்னைப் பெறாதிருந்தால் இன்றைய தினத்தை நான் சந்திக்காதிருப்பேனே’ என்று புலம்பியவர்களாகத் தலையைக் கையால் பிடித்துக் கொண்டே வந்தமர்ந்து விட்டார்கள். அவர்களின் வாயானது பேசும் சக்தியை இழந்து விட்டது. அதற்கிடையில் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் காணாமல் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் புனித சந்நிதானத்தில் வந்து நின்றார்கள். அவர்களிடம் பெருமானார் அவர்கள் என்னை எதிர்பார்க்க வேண்டாம். மக்களிடம் அவர்களையே தொழுது கொள்ளச் சொல்வீராக!’ என்று கூறி அனுப்பி விட்டார்கள். இமாமத்தைப் பற்றி ஹழ்ரத் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முன்னமேயே கூறி விட்டதால் ஹழ்ரத் இப்னு ஸம்ஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இப்போது குறிப்பிடவில்லை.

ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகளாரிடம் என் தந்தை மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள். தங்களைப் என்றும் பிரிந்திராத தங்களின் தந்தை முதன் முதலாக தொழுகையின் தலத்தில் தங்கள் தலைவர் இல்லாத நிலையை எவ்வாறு தாங்குவார்கள்? என்று சிந்தித்து, ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையே தொழ வைக்கச் சொல்லுமாறு யோசனை கூறினார்கள். ஆனால் பெருமானார் அபூபக்கரையே தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்று மீண்டும் கூறினார்கள்.

இவ்வாறு இரண்டு முறை கூறியும் பெருமானார் அவர்கள் அபூபக்கரையே தொழ வைக்கச் சொல்லுங்கள் என்றே சொன்னார்கள். மூன்றாம் முறையாக ஆயிஷா நாயகியுடன் அன்னை ஹப்ஸா நாயகியும் சேர்ந்து பரிந்துரை செய்தனர். பெருமானார் அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘யூசுஃப் நபிக்கு யோசனை கூறிய பெண்களைப் போல் அல்லவா நீங்கள் ஆகி விட்டீர்கள்’ என்று கடிந்து கொண்டார்கள்.

அங்கே பள்ளிவாசலில் ஹழ்ரத் பிலால், இப்னு ஸம்ஆ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் முன்பின்னாக வந்து சேர்ந்தனர். பிலால் அவர்களோ பேசச் சக்தியற்று விட்டனர். பெருமானாரின் வரவுக்காக காத்திருந்த ஸஹாபாக்களிடையே வந்து சேர்ந்த ஸம்ஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறிய செய்தியை அறிந்திருக்கவில்லை. எனவே அவர்கள் ஹழ்ரத் உமர் நாயகத்தின் கையைப் பற்றி தொழுகை நடத்தச் சொல்லி விட்டார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் உரத்த குரல் பெருமானாரின் காதுகளில் விழுந்து விட்டது. வீட்டாரிடம் ‘இந்த குரல் உமருடையதல்லவோ என்று கேட்டார்கள். ஆமாம். இது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடையதாகவே தெரிகிறது என்று வீட்டார் பதிலுரைத்தனர். ‘இந்தச் செயல் இறைவனுக்கப் பிடித்தமானதாக இல்லை. அபூபக்கரே தொழுகையை நடத்த வேண்டும்’ என்று கண்டிப்புடன் உத்திரவிட்டார்கள்.

முந்தின வரிசையில் நின்றிருந்த ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இந்தச் செய்தி சேர்ப்பிக்கப்பட்ட போது அதனை ஏற்று அவர்கள் முன் சென்றார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கும் தலத்தைக் கண்டதுமே உணர்ச்சிகளால் உந்தப்பட்டார்கள். கண்ணீர்க் கண்களோடு திரும்பிப் பார்த்த அவர்களுக்கு முன்னால் எல்லாத் தோழர்களுமே கண்ணீரோடுதான் காட்சியளித்தனர். ஆணைக்கு அடிபணியும் அந்தச் சீடர் அடக்கத்துடன் தங்களுக்கிடப்பட்ட பணியை செய்து முடித்தார்கள். தொழுகை முடிந்த பின்னர் பெருமானாரின் உத்தரவின்றி தம்மை முன்னிறுத்தியதற்காக இப்னு ஸம்ஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பாரூக்குல் அஃலம் அவர்கள் கடிந்து கொண்டார்கள். பெருமானார் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறியது தமக்குத் தெரியாது என்று சொன்ன அவர்கள், அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள்.

அதுமுதல் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதிக் காலம் வரை எல்லாத் தொழுகைகளையும் ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே நடத்தினர்.

மறுநாள் காலை மஸ்ஜிதுன் நபவியானது சோகப் போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹழ்ரத் அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களும் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் அழுது கொண்டிருந்ததைக் கண்டனர். அவர்களிடம் என்ன காரணம் என்று வினவப்பட்டபோது, பெருமானாரின் நேசம் எங்களை அழச் செய்து விட்டது என்று பதிலுரைத்தார்கள்.

ஸிரியாவுக்குச் செல்லும் படையில் வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்த பல ஸஹாபாக்களுக்கு மேலாக 20 வயதே நிரம்பப் பெற்ற இளைஞரான ஹழ்ரத் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி சில சஹாபாக்கள் முணுமுணுத்த செய்தி பெருமானார் அவர்களை எட்டியிருந்தது.

இந்த இரு நிகழ்வுகளுக்காக பெருமானார் அவர்கள் தங்கள் தோழர்களை சந்தித்து நல்லுரை கூற நாடினார்கள்.

உடனடியாக நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு வேறுவேறு கிணறுகளில் இருந்து ஏழு தோல் துருத்திகளில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். அன்னை ஹஃப்ஸா அவர்களின் பெரிய தண்ணீர் தொட்டியில் அமர்ந்து கொண்டு அவற்றை ஒவ்வொன்றாகத் தங்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். அவ்வாறு குளித்து முடித்தபோது அவர்களின் உடலில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. உடனே ஹழ்ரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருபுறமும் தாங்கி வரத் தங்களின் பட்டுப் பாதங்கள் தரையில் இழுபட பள்ளியின் உள்ளே நுழைந்தார்கள்.

லுஹர் தொழுகையை நடத்திக் கொண்டிருந்த அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரைக் கண்டதும் பின்னால் வர எத்தனித்தார்கள். ஆனால் அவ்வாறு வரவேண்டாம் என்று சைக்கினை செய்துவிட்டு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இடதுபுறம் அமர்ந்து கொண்டனர். அதன்பின் அருமை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கூற அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உரத்துக் கூற மக்கள் அவர்களைப் பின்தொடர்ந்து தொழுது முடித்தனர்.

தொழுகை முடித்த பின் மிம்பரின் முதற்படியிலேயே அமர்ந்து கொண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருமை ஸஹாபாக்களை நோக்கி உரையாற்றத் துவங்கினார்கள். இதுவே நபிமணியின் உலக வாழ்வின் இறுதிப் பேருரை எனலாம்.

‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்து நன்றி தெரிவித்தபின் மக்களே! உஸாமா இப்னு ஜைதுடைய தலைமையைப் பற்றி நீங்கள் முணுமுணுப்பதாகக் கேள்விப் பட்டேன். இதற்கு முன் அவருடைய தந்தை ஜைதை நான் தளபதியாக நியமித்த போதும் நீங்கள் இவ்வாறே முணுமுணுத்தீர்கள்.உஸாமாவின் குறைந்த வயதே உங்களது ஆட்சேபணைக்கு காரணம் எனில், ஜைதின் தலைமையைப் பற்றி நீங்கள் ஆட்சேபிக்க காரணம் என்ன? ஆனால் ஒருவனான இறைவனின் மீது ஆணையாக நான் கூறுகிறேன், ஜைதும் தலைமைப் பதவிக்குத் தகுதியானவராக இருந்தார். இப்போது அவருடைய மகன் உஸாமாவும் அப்படியே. எனவே உஸாமாவின் தலைமையில் நீங்கள் ஒன்றுப்பட்டு காரியமாற்றுங்கள். மனிதர்களில் ஜைது எனக்கு மிகவும் வேண்டியவராக இருந்தார். இப்போது உஸாமாவும் அப்படியே. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுமாறு உங்களுக்கு நான் அறபோதம் செய்கிறேன். அவனின் காவலிலேயே உங்களைப் பரஞ்சாட்டுகிறேன். இன்றும் எனக்குப் பின் என்றும் அவனே உங்களுக்குப் போதுமானவன்.

‘மக்களே! தாம் விரும்பும் காலம் வரையிலும் இவ்வுலகில் தங்கி இருக்கவோ, அல்லுது மேலான தம் இறைவனைச் சந்திக்கவோ, இந்த இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்கும் உரிமையை இறைவன் தன் அடியார் ஒருவருக்கு வழங்கினான். ஆனால் அந்த அடியார் தம் இறைவனின் சந்திப்பதை தெரிந்து எடுத்துக் கொண்டார்’ என்று கூறி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறுத்தியபோது, துடித்தெழுந்த அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘அல்லாஹ்வின் ரஸூலே! எங்களின் உயிர்கள் எங்களின் உடைமைகள் எங்களின் உற்றார் உறவினர்கள் எங்களின் மனைவி மக்கள் யாவற்றையும் தங்களுக்குப் பிரதியாகத் தருவோம்’ என்று அழுதவண்ணமே கூறினார்கள்.

ஹழ்ரத் அபூபக்கரின் நிலை அண்ணலாரையே நெகிழ்ச்சியுறச் செய்துவிட்டது. ‘தம் தோழமையால் எனக்குப் பேருதவிப் புரிந்தவர்களில் அபூ குஹாஃபாவின் மகனாகிய அபூபக்கரை விட மிஞ்சியவர் யாரும் கிடையாது. அவர்தான் தம் உடலாலும் பொருளாலும் எனக்குப் பேருதவி புரிந்துள்ளார். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நீங்கள் ஆதாரம் தேடித் தெளிந்து என்னோடு இணைந்த போது அபூபக்கர் என் சொல்லை கேட்டவுடன் என்னை ஏற்றார். என் இறைவனைத் தவிர்த்து உலகில் எவரையும் என் தோழமைக்குத் தெரிந்தெடுப்பதெனில் நான் அபூகுஹாஃபாவின் மகனையே தேர்ந்தெடுப்பேன். ஆனால் அன்பும் இஸ்லாமிய சகோதரத்துவமும் நம்மிடையே இருக்கின்றன’ என்று புகழ்ந்த பெருமனார் அவர்கள், அபூபக்கரே! நிலைமையை சமாளிப்பீராக!’ என்று ஆறுதல் கூறினார்கள்.

அதன்பின் எல்லாத் தோழர்களையும் கண்ணீரோடு கண்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாவரையும் நோக்கி, ‘மக்களே! உங்களின் நபியின் பிரிவு பற்றி நீங்கள் அழுவதாக கேள்விப்பட்டேன். எதற்காக நீங்கள் அழுகிறீர்கள். என்ன! எனக்கு முன் வந்த எந்த நபியேனும் தம் இறைவனிடம் திரும்பிச் செல்லாமல் தம் கூட்டத்தாரிடமே நிரந்தரமாகத் தங்கியுள்ளாரா, நானும் அவர்களைப் போல் இறவாமல் இருப்பதற்கு! எதற்;காக நீங்கள் அழுகிறீர்கள்? உலகின் எல்லாச் சமுதாயங்களையும் விட நற்பேறு பெற்ற சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். எவர்களைக் கொண்டு திருப்தியடைந்தவராக அவர்களின் வருகைக்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக – அவர்களின் நபியானவர் முன் செல்கின்றாரோ, நிச்சயமாக அவர்களே நற்பேறு பெற்றவர்கள். எவர்களைக்கொண்டு அவர்களின் நபியானவர் திருப்தியடையாமல் அந்த நபியின் முன்னிலையிலேயே இறைவனின் முனிவுக்கு அவரின் சமுதாயத்தார் ஆளாகின்றார்களோ அவர்களே மிக துரதிருஷ்டசாலிகள்’ என்று கூறினார்கள்.

தொடர்ந்து, ‘முஸ்லிம்களே! எனக்குப் பின்னால் உங்களில் நான் இரண்டு வழிகாட்டிகளை விட்டுச்செல்கின்றேன். அவற்றுள் ஒன்று பேசக் கூடியது. அது திருக்குர்ஆனாகும். மற்றொன்று பேசாதது. அது மரணமாகும். நீங்கள் ஏதேனும் சிரமத்தைக் காணும் போது திருக்குர்ஆனிலும் என் நடைமுறையிலும் பரிகாரம்தேடுங்கள். உங்களின் இதயங்கள் கடினமாகிவிடும்போது மரணத்தை நினைவு கொள்ளுங்கள்!

‘மக்களே! நீங்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செய்த பேருதவிகளுக்கு நான் பிரதி செய்து விட்டேன். ஆனால் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எனக்குச் செய்த உதவிகளுக்கு என்னால் பிரதி செலுத்த இயலாது. எனக்குப் பகரமாக இறைவன் மறுமையில் அவருக்கு பிரதி செய்வான். உங்களின் இந்தத் தோழர் அபூபக்கர் உங்கள் யாவரிலும் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர். இந்தப் பள்ளியில் அபூபக்கரின் வாயிலைத் தவிர்த்து மற்றெல்லா வாயில்களையும் அடைத்து விடுங்கள்!’ என்று அறிவித்தார்கள்.

ஹழ்ரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இதன் காரணம் என்ன? என்று வினவியதற்கு, நபி பெருமானார் அவர்கள் ‘இதனை நான் என் விருப்பத்தின் பேரில் கூறவில்லை. இறைவனின் கட்டளையைக் கொண்டே கூறுகிறேன்’ என்றார்கள்.

மீண்டும் பேசத் துவங்கிய அண்ணலார் அவர்கள், ‘அன்ஸார்களே! நீங்கள் முஜாஹிர்களுக்கு உதவுங்கள்! அவர்களும் உங்களுக்கு நன்மையே செய்து வருவார்களாக!

‘முஹாஜிர்களே! உங்களுக்கு உதவி புரிந்த அன்ஸார்களுக்கு நீங்கள் நன்மையானதையே செய்யுங்கள்! அவர்கள் உங்களுக்காகத் தங்குமிடங்களையும், மார்க்கத்தையும் சித்தப்படுத்தியவர்கள். எனவே அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தங்களுக்குக் கிடைத்த இலாபங்களை அவர்கள் உங்களோடு சமமாகப் பங்கிட்டுக் கொண்டவார்கள். தங்கள் வீடுகளில் அவர்கள் உங்களுக்கு இடம் ஒதுக்கித் தந்தவர்கள். அவாக்ள் வறுமையிலே வாடியபோதும் தங்களை விட உங்களை அதிகம் பரிபாலித்தவர்கள். மனிதர்களின் தொகை அதிகமாகும். அதேநேரம் இந்த அன்ஸார்களின் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். இறுதியில் உணவில் உப்பானது இருப்பதைப் போல் மனிதர்களிடையே இவர்கள் அருகியும் மறைந்தும் இருப்பார்கள். நான் புகலிடம் தேடிய என் உற்றார்கள் அவர்களே, நான் விட்டுச் செல்லும் என் சம்பத்துகள் அவர்கள். அவர்களின் உதவிக்கு நன்றி செலுத்துங்கள். அவர்களில் குறைகளைக் காணின் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் சென்றபின் அவர்களில் என்னைக் காணுங்கள். இறைவனின் மீது ஆணையாக நான் உங்கள் மீது அன்புடையவனாக இருக்கிறேன். அவர்கள் தங்கள் கடைமையைச் செய்து விட்டனர். இனி உங்கள் கடமையே எஞ்சியுள்ளது’ என்று கூறினார்கள்.

அதன்பின் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

وَالْعَصْرِ ۝ اِنَّ الْاِنْسَانَ لَفِےْ خُسْر ٍ ۝ اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْ بِالْحَقِّ٥ وَتَوَاصَوْ بِالصَّبْرِ ۝

என்ற என்ற திருமறையின் அத்தியாயத்தை ஓதினார்கள்.

பின்னர், ‘நிச்சயமாக இறைவனின் அனுமதி கொண்டே எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றளன. எனவே எந்த ஒரு பொருளும் கிடைக்கத் தாமதமானால் அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டாம். யாருடைய அவசரத்துக்காகவும் அல்லாஹ் எந்த காரியத்தையும் அவசரமாக முடித்துத் தர மாட்டான். வருங்காலத்தில் அதிகாரம் உங்கள் கையில் கிடைத்தால் பூமியில் விஷமஞ் செய்யாதீர்கள். உங்கள் உறவின் முறையாரை வெட்டாதீர்கள்.

மக்களே! உங்களுக்கு முன் சென்ற யூதக் கிறித்துவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கி விட்டதுபோன்று நீங்களும் என்னுடைய அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக ஆக்கி விட வேண்டாம்.

தங்களின் நபியுடைய அடக்கஸ்தலங்களை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிவிட்டவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.

அன்ஸார்களே! எனக்குப் பின் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். நீஙகள் பல சோதனைகளையும் துன்பங்களையும் சந்திப்பீர்கள். அவற்றை மிகுந்த பொறுமையோடு தாங்கிக் கொள்ளுங்கள். என் ஹவ்ழ்லுல் கவ்தருக்கருகில் என்னைச் சந்திக்கும் வரை. நான் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன். மறுமையில் என் ஹவ்லுல் கவ்தருக்கருகில் என்னை நீங்கள் சந்திப்பீர்கள். ஆஹா! இறைவனின் மீதாணையாக என் ஹவ்ழ்லை நான் இதோ காண்கிறேன். நாளை அங்கு என்னைச் சந்திக்க விரும்புவர்கள் அவசியமான விசயங்களுக்காக அன்றி தங்களின் கரங்களையும் நாவையும் பாதுகாத்துக் கொள்வார்களாக!

முஸ்லிம்களே! நானும் உங்களைப் போன்ற மனிதனே. நான் இப்போது என் உலக வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். நான் உங்களில் எவருக்கேனும் ஏதேனும் கொடுக்க வேண்டியதிருக்கலாம். அதனை அவர் இப்போது கேட்டுப் பெற்றுக் கொள்வாராக. உங்களில் எவரையேனும் நான் அடித்துக் காயப்படுத்தி இருக்கலாம். இதோ என்னை அவர் அதற்குப் பிரதியாக அடித்துக் கொள்வாராக. சிறிதளவாயினும் எவரையும் நான் மானப்பங்கப்படுத்தி இருக்கலாம். இப்போது அவர் என்னை மானங்கப்படுத்தி விடுவாராக! ‘ரஸூலுல்லாஹ்வின் பகைமைக்கும் ஆத்திரத்திற்கும் நான் அஞ்சுகிறேன் என்று யாரும் கூற வேண்டாம். அவை இரண்டும் என் இயல்பிலும் பண்பிலும் இல்லாதவையாகும் என்று கூறினார்கள்.

அத்துடன் தங்கள் உரையை முடித்து மாலைத் தொழுகையை நிறைவேற்றினார்கள். அதன்பின் அவர்கள் மீண்டும் மேடையில் அமர்ந்த போது ஒருவர் எழுந்து தாம் முன்பொரு முறை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மூன்று திர்ஹங்கள் கடனாகக் கொடுத்திருப்பதாகக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் சகோதரர் ஹழ்ரத் பழ்ல் இப்னு அப்பாஸிடம்(ரழியல்லாஹு அன்ஹு) கூறி அக்கடனைத் தீர்க்கும்படி கூறினார்கள். மற்றொருவர் தாம் நபி பெருமானாரிடம் மூன்று திர்ஹங்கள் கடன் பெற்றிருப்பதாகக் கூறினபோது தங்கள் சகோதரரை அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள்.

பின்பு, அவர்கள், ‘உங்களில் எவரேனும் மன்னிக்க முடியாத பாவத்தினால் தங்களின் வாழ்க்கையைக் கறைப்படுத்திக் கொண்டிருந்தால் கூறுங்கள். அவரின் மன்னிப்புக்காக இப்போது நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள்.

கூட்டத்தின் நடுவே ஒரு தோழர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே நான் ஒரு பொய்யன். கபடன். என் வாழ்க்கையில் நான் செய்யாது விட்ட பாவங்கள் ஏதுமில்லை. எனக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்.

‘இறைவா! இவரை உண்மையாளராகவும் நன்றியுள்ளவராகவும் ஆக்கி வை! இவர் நடந்து சென்ற வெறுக்கத்தக்கப் பாதையிலிருந்து திருப்பி நேரான உன் பாதையின் மீது இவரை நடத்திச் செல்’ என்று பிரார்த்தித்தார்கள்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து, பெருமானே! தங்களின் இறுதி நேரம் எப்போது வரும்? என்று கேட்டார்கள். ‘வெகு அண்மையில்’ என்ற பதிலுரைத்தார்கள் அண்ணலார்.

தங்களை நீராட்டுவது யார்? என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு என் குடும்பத்தாரில் எனக்கு மிக நெருக்கமானவர்’ என்றும்,

எதைக் கொண்டு தங்களைப் போர்த்துவது? என்று கேட்கப்பட்டதற்கு, நான் அப்போது உடுத்தியிருக்கும் ஆடையைக் கொண்டே, அதற்கு மேலாக ஒர் எகிப்தியப் போர்வையையோ ஒரு யமானியப் போர்வையையோ போர்த்திவிடுங்கள் என்று கூறினார்கள்.

தங்களுக்கான இறுதித் தொழுகையை யார் தொழுவிப்பது? இக்கேள்வியைக் கேட்டபோது ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களில் கண்ணீரானது வெடித்துக் கிளம்பியது.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டார்கள். உங்களின் இதயங்களை அதிகமாகக் குழப்பிக் கொள்ள வேண்டாம். என்னை நீராட்டி, நான் கூறியவாறு போர்த்தியபின், ஒரு மேடையின் மீது வைத்து விட்டு சிறிது நேரத்துக்கு அவ்விடத்தை விட்டும் அகன்று விடுங்கள்! முதலாவதாக வானவர் ஜிப்ரயீலும், அதன்பின் மற்ற வானவர்களும் வரிசையாகத் தொழுவர். அதன்பின் மற்ற மனிதர்களின் முறை. அதில் முதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், அதன்பின் அவர்களின் பெண்கள். அதன்பின் மற்றவர்கள் வரிசையாக நின்று தொழவும். ஆனால் எவரும் கூக்குரலிட்டு அழாதீர்கள்’. என்று கூறிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணறையில் அவர்களை அடக்கம் செய்வது யார் என்ற கேள்விக்கு ‘என்னுடைய நெருங்கிய உறவினர்கள்’ என்று பதில் கூறினார்கள்.

அப்போது ஒருவர் எழுந்து புன்முறுவலோடு அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஒருநாள் நான் என் மேலாடையைக் களைந்திருக்கும் போது தாங்கள் என் முதுகின் மீது தட்டினீர்கள். அதற்கு இப்போது நான் பழி தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினார். தங்கள் தோழரின் இந்த அற்புதமான குற்றச்சாட்டைக் கேட்ட நபிகளாரின் முகத்தில் நகையானது இழைந்தோடியது.

நல்லது. ஆனால் எல்லோருக்கும் முன்பாக நான் என் உடலைத் திறக்க கூச்சப்படுகிறேன். எனவே நீர் என் அறைக்கு வந்து உம் பழியைத் தீர்த்துக் கொள்வீராக’ என்று கூறி அவ்வாறே அவரை அழைத்துச் சென்று தங்களின் முதுகினைத் திறந்து காட்டினார்கள். அந்தத் தோழரோ பாய்ந்து சென்று அவர்களின் இரண்டு புயங்களுக்கும் நடுவே ஒரு முட்டையின் வடிவில் சதையால் ஆகியிருந்த இறுதி நபியின் அடையாள முத்திரையை முத்தமிட்டவராக முன்னே வந்து, அவர்களின் முன் பணிந்து நின்று, ‘பெருமானே! தங்களின் அத்திரு முத்திரையை முத்தமிட வேண்டும் என்ற ஆசையால் பகிரங்கமாக ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் தங்களிடம் கூறிவிட்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டி நின்றார். புன்னகையோடு அவரைப் பார்த்த நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உக்காஸா! நீர் செல்வீராக! நரகின் வாசல்கள் உமக்கு அடைக்கப்பட்டு விட்டன’ என்றார்கள்.

அதன்பின் நபிபெருமானார் அவர்கள் தங்கள் இல்லம் திரும்பினார்கள். அதுவே அவர்களின் இறுதிப் பேருரையாக இருந்தது.

வாழ்நாளின் கடைசி வெள்ளிக்கிழமை காய்ச்சலின் சூடானது அதிகம் இருந்தது.

ஹழ்ரத் உமர் அவர்களும் மற்ற தோழர்களும் ரழியல்லாஹு அன்ஹும் அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் கூடியிருந்தனர். நபியவர்களோ நோயின் வேதனையின் ஊடே ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேடினார்கள்.அந்த தோழர் அங்கு இல்லை. ‘ஆயிஷா உம் தந்தையையும் சகோதரரையும் விரைந்து வரச் சொல்வீராக!’ என்று பெருமானார் அவர்கள் கூற உடனே ஆளனுப்பப்பட்டது. எழுதுகோலையும் மைக்கூட்டையும் எடுத்து வாருங்கள். உங்களை குழப்பத்திலிருந்து பாதுகாக்கக் கூடிய சில விசயங்களை நான் எழுதுவித்து விடுகிறேன்’ என்றார்கள். இந்த சிரமமான நேரத்தில் அண்ணலாருக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணிய சஹாபாக்கள், பெருமானாரிடம் சொன்ன போது, நீங்கள் விரும்பவில்லையானால் என்னை விட்டு விடுங்கள். நீங்கள் அழைப்பதை விட மேலான நிலையில் நான் மூழ்கி இருக்கிறேன்’ என்று கூறிய நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

1. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள். இணை வைக்கும் முஷ்ரிக்குகள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது.

2. வெளிநாட்டுத் தூதுவர்களை; நான் கவனித்தது போன்று நன்கு கவனியுங்கள்.

3. திருக்குர்ஆனைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள் என்று மூன்று உபதேசங்களை அருளினார்கள்.

பஷ்ர் இப்னு பர்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயாரிடம் ‘உம்மு பஷ்ர்! மக்கள் என் நோயைப் பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டார்கள்.

‘மக்கள் தங்களுக்கு ‘நுரையீரல் நோய்’ ஏற்பட்டிருக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்’ என்றனர்.

அது கேட்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நுரையீரல் நோய் என்பது ஷைத்தானின் குயுக்தி. ஷைத்தான் எனக்கு எவ்விதத் தீங்கும் புரிய இயலாது. ஆனால் கைபரில் உம்முடைய மகனோடு நான் உட்கொண்டு விட்ட விஷமானது அடிக்கடி எனக்கு தொல்லைக் கொடுத்து வந்தது. அதன் தீவிரம் இப்போது தலை தூக்கி நிற்கிறது என்றார்கள்.

அதன்பின் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மயக்கமடைந்து விட்டார்கள். நபிகளாரின் குடும்பத்தார்களும் அண்ணலாருக்கு நுரையீரல் நோய் என்றே கருதி வந்தனர். அதனால் ஒரு மருந்து செய்து அதை அருந்தும்படி நபிகளாரைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் இது அல்லாஹ்வின் அருள் சந்திப்பை பெற்றுத் தரக் கூடிய நோய் என்பதை அறிந்திருந்த அண்ணலார் அந்த மருந்தை உட்கொள்ள மறுத்து விட்டார்கள்.

அவர்களின் அதிகமான வேதனையைக் கண்டு பொறுக்க முடியாமல் அங்கிருந்த குடும்பத்தார் அவர்கள் மயக்கநிலையில் இருந்தபோது அன்னாரின் சம்மதமின்றியே அவர்களின் திருவாயைத் திறந்து மருந்தை உட்செலுத்தி விட்டனர். ஹழ்ரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தடுத்தும் கேட்கவில்லை.

பின்னர் உணர்வடைந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைப் பற்றி கேட்கும்போது அவர்களின் சிரமத்தைக் காணச் சகியாமல் தாங்கள் அவ்வாறு செய்ததாக அங்கிருந்தோர் கூறியபோது, நுரையீரல் நோய் அல்லாஹ் என் மீது அனுப்பாத ஒன்று. என் அனுமதியின்றி நீங்கள் மருந்தை என்னுள் செலுத்தியதால் அந்நோய் உங்கள் அனைவர் மீதும் இறங்கும். எனவே அதே மருந்தினை நீங்கள் யாவரும் இப்போது உண்டு விடுங்கள் – என் சிறிய தந்தை அப்பாஸ் அவர்களைத் தவிர. ஏனெனில் அவர் உங்களைத் தடுத்ததை நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்றார்கள். அதன்பேரில் அங்கிருந்த அனைவரும் அந்த மருந்தை உட்கொண்டனர். அன்னை மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்கள் வைத்திருந்த நோன்பை முறித்து அம்மருந்தை உண்டார்கள்.

அந்நிகழ்வைப் பற்றி ஹழ்ரத் முஹ்யித்தீன் இப்னு அரபி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கள்; வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் தங்கள் குடும்பத்தார் தங்கள் பொருட்டு குற்றத்திற்குள்ளாகி விடக் கூடாதென்பதில் அக்கறைக் கொண்டே இவ்வாறு பிரதி செய்து கொண்டதாக எழுதுகிறார்கள்.

இவ்வாறாக நபிபெருமான் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் நோய் தீர்க்க எவ்விதமான மருந்துகளையும் உட்கொள்ளாதது மட்டுமின்றி நோய் நீங்க வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையுங் கூட செய்யவில்லை. தங்களின் ஆன்மாவை நோக்கி, ஏ ஆன்மாவே! உனக்கென்ன வந்தது? நீ எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புத் தேடுகிறாயே’ என்று கூறிக் கொண்டார்கள்.

நபி பெருமானாரின் அருகில் அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்தார்கள். பெருமானார் அவர்கள் தங்களுக்கு உடலில் ஏதேனும் வருத்தம் ஏற்படும் போதெல்லாம்,

اَللّهُمَّ اِذْهَبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ اِشْفِهٖ وَانَتَ الشَّافِىْ لَاشِفَآءَ اِلَّا شِفَآءُكَ شِفَآءٌ لَّايُغَادِرُ سَقْمًا

‘மனிதர்களின் இறைவனே! நோயினை விலக்கி சுகத்தினைத் தந்தருள். நீயே சுகம் தருபவன். நீ தரும் சுகமேயன்றி வேறு சுகமேயில்லை. எவ்விதத் சிரமமும் எஞ்சியிராதவாறு சுகத்தைத் தந்தருள்’ என்று ஓதி தங்களின் கரங்களில் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தீவிரமாக நோயுற்றிருக்கும் செய்தி ஹழ்ரத் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஸிரியா நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்த படையினருக்கு எட்டியது. உடனே அங்கிருந்து திரும்பிய ஹழ்ரத் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானரைக் காண வந்து அன்னாரின் நெற்றியில் முத்தமிட்டனர். சற்றே கண் திறந்த பெருமானார் அவர்கள் உஸாமாவின் இளம் சிரசின் மீது கை வைத்து ஆசிர்வதித்தார்கள்.

இறுதி நேரத்திலும் ஈகை செய்த அண்ணலார்

ஞாயிற்றுக் கிழமை அன்று பகலில் அவர்கள் அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து நாற்பது அடிமைகளை விடுதலை செய்தனர். ஞாயிறு கழிந்த திங்கள் இரவு வாழ்வின் கடைசி இரவாகும். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிக்கடி மூர்ச்சையாகிக் கொண்டிருந்தனர்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சில தீனார்கள் அன்பளிப்பாக வந்திருந்தன. அவை ஏழைகளுக்கு அறம் செய்யப்பட்டு மீதி ஏழு தீனார்கள் இருந்ததை அறிந்த பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா அவர்களிடம் அவை அனைத்தையும் அறம் செய்து விட சொன்னார்கள். சரி என்று சொன்ன அன்னையவர்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மயக்கமடையவே தங்கள் கணவரை கவனிக்கும் கவலையில் அதனை மறந்து விட்டனர். நபிகளார் திர்ஹங்கள்; பற்றிய செய்தியைக் கேட்டபோது மறந்து விட்ட செய்தியைக் கூறினார்கள். உடனே தர்மம் செய்யும்படி சொன்னவுடன் மயக்கமடைந்து விட்டனர். மூன்றாம் முறை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னை ஆயிஷா நாயகி அவர்களிடம் ஆயிஷா அந்த தீனார்கள் எங்கே? என்ற கேட்டார்கள். ‘நாயகமே! இதோ கொண்டு வருகிறேன் என்று கூறியவர்களாக நபிமணியின் முன்னால் அதைக் கொண்டு வந்து வைத்தார்கள்.

ஆயிஷா முஹம்மத் தன்னுடைய வீட்டில் தங்கத்தை வைத்துக் கொண்டு தன் இறைவனைச் சந்திக்க வேண்டுமென்று நீ நினைக்கிறாயா? தங்கத்தை வீட்டிலே வைத்து நம்பிக்கையற்றவனாக என் எசமானைச் சந்திப்பது எனக்கு அழகாகத் தெரியவில்லை’ என்று கூறி அவற்றை தர்மம் செய்து விடும்படி ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே செய்யப்பட்ட பின், ‘இப்போதுதான் என் உள்ளம் அமைதி அடைந்தது’ என்று கூறி நிம்மதி அடைந்தார்கள்.

திங்கட்கிழமை அதிகாலையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இல்லத்துக்கும் பள்ளிக்குமிடையே தொங்கிக் கொண்டிருந்த திரையை விலக்கிப் பார்த்தார்கள். அங்கு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்க ஸஹாபாக்கள் பின்தொடர்ந்து தொழுது கொண்டிருந்தனர். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்ப்பதைக் கண்ட அபூபக்கர் நாயகம் அவர்கள் சற்று பின்வாங்க முற்பட்டபோது பெருமனார் வேண்டாம் என்று சயிக்கினை செய்து திரையை விட்டு விட்டார்கள். அதுவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்ட இறுதித் தொழுகையாகும்.

பொழுது விடிந்த போது அன்னை பாத்திமா நாயகி அவர்கள் தங்கள் இரு கண்மணிகளான ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோருடன் தந்தையின் இல்லம் வந்தனர். பரிவுள்ள தந்தையாக மட்டுமின்றி, பாசம் நிறைந்த ஒரு தாயாகவும் இருந்து தம்மை வளர்த்து, பெண்ணினத்தின் பெரும் பயனாய் தம்மை ஆக்கி வைத்த அந்த ஆசான் தங்களின் இரு கண்களையும் மூடி படுத்திருக்க கண்ட போது காத்தூன் ஜன்னத்தின் நெஞ்சம் வெடித்தது. ‘அந்தோ! என் தந்தையின் சிரமமே என்ற நாயகியின் குரல் கேட்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண் திறந்தார்கள். .ஃபாத்திமா இதற்குப் பின் உன் தந்தைக்கு எப்போதும் சிரமம் இல்லை என்று கூறி அவர்களை அருகே அழைத்து அன்போடு முகர்ந்தார்கள். அதன்பின் பாத்திமா நாயகியை நெஞ்சோடு அணைத்து அவர்களின் காதோடு இரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதனைக் கேட்ட பாத்திமா நாயகியார் கோவென கதறி விட்டார்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அலி நாயகம் அவர்கள் தங்கள் மனைவியைக் கண்டித்தார்கள். ஆனால் பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘வேண்டாம் அபல் ஹஸன்! இறந்து கொண்டிருக்கும் தன் தந்தைக்காக பாத்திமாவை சிறிது கண்ணீர் வடிக்க விடுங்கள்’ என்று கூறினார்கள்.

அன்னை பாத்திமாவின் கண்ணீரைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னையாரை மீண்டும் அருகே அழைத்து மறுமுறையும் ஏதோ இரகசியமாக கூறினார்கள். அப்போது ஹழ்ரத் பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கண்கள் நீரைச் சொரிந்து கொண்டிருந்தாலும் முகமோ தாமரையாய் மலர்ந்தது. அதையும்தான் அன்னை ஆயிஷா நாயகி காண்கிறார்கள்.

ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பாத்திமா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து இதன் ரகசியம் என்றவென்று கேட்டபோது தந்தையாரின் ரகசியத்தை அவர்கள் இருக்கும்போது நான் எவ்வாறு கூற முடியும்? என்று கூறி சொல்ல மறுத்து விட்டார்கள்.

பின்பு ஒரு சமயம் அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதுபற்றி கேட்டபோது, முதலாவதாக நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், ‘பாத்திமா இன்றைய தினம் நான் மரணமடைவேன்’ என்று கூறினார்கள். இது கேட்டு நான் துடித்தேன். மறுமுறை என்னை அழைத்து, ‘பாத்திமா என் குடும்பத்தில் எல்லோருக்கும் முதலாவதாக நீயே என்னிடம் வந்துசேருவாய்’ என்று கூறியதோடு, சுவனத்தின் பெண்களுக்கு நீ தலைவியாய் இருப்பாய்’ என்று கூறினார்கள். அது கேட்டு நான் மகிழ்ந்தேன் என்று அறிவித்தார்கள்.

அதன்பின் தங்களின் நெஞ்சத் தடத்தில் கொஞ்சி விளையாடிய சுவனத் தாமரைகளான ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா இருவரையும் அருகழைத்தார்கள். ஹஸன் அவர்களோ, அருமைப் பாட்டனார் அவர்களே, உங்கள் பிரிவை நாங்கள் எப்படித் தாங்க முடியும்? என்மிதும் என் இளவலின் மீதும் என் தந்தை, தாயின் மீதும் உங்களுக்குப் பின் அன்பு செலுத்துபவர் யார்? உங்களின் மனைவிமார்களை யார் கவனிப்பர்?’ என்று கேட்டழுதனர். அதனைக் கேட்ட அன்னையர் அனைவருமே அழுதனர். பெருமானார் அவர்களும் உணர்ச்சி வசப்பட்டனர். அதன்பின் இருவரையும் அணைத்து முட்டமிட்டனர்.

பின்னர், தங்கள் கரத்தை ஹழ்ரத் அலீ நாயகத்தின் மடிமீது வைத்தவர்களாக, ‘உஸாமா இப்னு ஜைத் உடைய தலைமையின் கீழ் சிரியாவுக்கு அனுப்பப்பட்ட படைச் செலவுக்கா நான் வாங்கியுள்ள கடனை உம்முடைய பொருள்களிலிருந்து கொடுத்து விடுவீராக. அபல் ஹஸன், என் மரணத்திற்குப் பின் நீர் பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் சந்திப்பீர். பொறுமையோடு அவற்றைத் தாங்கிக் கொள்வீராக. உலகாதாய நன்மைகளுக்கு ஆசைப்படுவதற்குப் பதிலாக இறையருள் பெற்ற மறுமை பேற்றைத்தேடிக் கொள்வீராக! என்று கூறினர்.

அதன்பின் தங்கள் குரலை சற்று உயர்த்தி தொழுகை! தொழுகையைக் கடைபிடியுங்கள். அடிமைகள்! அடிமைகளை நல்லபடி நடத்துங்கள்! என்று எச்சரித்தார்கள்.

பின்னர் நெருங்கியத் தோழர்களின் குழு ஒன்று மீண்டும் அவர்களைக் காண வந்தது. அவர்களை நோக்கி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘சமுதாயத்தில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நீங்கள். உலக மக்களில் நீங்களே மேலானவர்கள். இறைவனின் ஏகத்துவத்தில் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியோடு இருங்கள். திருக்குர்ஆனை உங்களுக்க வழிகாட்டும் ஒளிவிளக்காக்கிக் கொள்ளுங்கள். இஸ்லாத்தின் புனிதக் கொள்கைகளைப் பின்பற்றி நடங்கள்’ என்று கூறியவர்களாக ‘யா அல்லாஹ்! நான் என் தூதை முடித்துக் கொண்டேன்’ எனக் கூறி தங்களிரு கண்களையும் மூடிக் கொண்டார்கள்.

அலி நாயகத்தின் சாடையைக் கண்டு தோழர்கள் யாவரும் வெளியில் சென்றனர்.

பின்னர் நபிகளாரின் வீட்டுப் பெண்கள் உள்ளே வந்தார்கள். பெருமானாரின் இறுதி நேரமானது அமைதியுடன் அண்மிக் கொண்டிருந்தது. இறுதியாக தங்களுக்கு நல்லுபதேசம் செய்யுமாறு அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டுக் கொண்ட போது, ‘பெண்களின் மீது அல்லாஹ் விதித்துள்ள நியதிப்படி நீங்கள் உங்களின் வீடுகளில் தங்கியிருங்கள்’ என்று நல்லுரை பகிர்ந்தார்கள்.

நபி பெருமானின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்கள் இப்போது நீரைச் சிந்தின. அருகிலிருந்த அன்னை உம்மு ஸலாமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் யாரஸூலல்லாஹ்! தங்களுடைய முன்பின் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்திருக்க எதற்காக அழ வேண்டும்?’ எனக் கேட்டபோது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘என் மக்களின் நினைவு கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்கிறது’ என்றார்கள்.

வானவர்கள் வருகை

அச்சமயம் அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸூலல்லாஹ்! என்ற குரலானது வாசலின் புறமிருந்து கேட்டது. அனைவரின் கண்களும் குரல் வந்த திசையை நோக்கி சென்றன. தூய்மையாக ஆடையணிந்த அரபி இளைஞர் ஒருவர் தோற்றமளித்தார். அதற்கு முன்பு ஒருவருமே கண்டிராத அப்புதியவரின் வரவு எல்லோருக்குமே எரிச்சலூட்டியது. சிரமம் மிக்க அத்தருணத்தில் இப்போது உள்ளே வரவேண்டாம் என்று ஆயிஷா நாயகி அவர்கள் அங்கிருந்தவர்களிடம் சொல்லியனுப்பினர். அதற்குள் கண்விழித்த பெருமானார் ‘ஆயிஷா! ஸலாம் உரைத்தவர் யார் என்று அறிவாயா? என்று கேட்டார்கள்.

அவர்தாம் மனிதர்களின் உயிர்களை வாங்கும் மலக்குல் மவ்த் என்னும் வானவர். எவருடைய உத்திரவிற்காகவும் அவர் எப்போதும் கடமையை செய்ய தவறியதில்லை. ஆனால் இப்போது இறைவனுடைய ஆணைப்படி என் வீட்டினுள் வர என் உத்திரவை நாடி நிற்கிறார். என் அருகில் வர விடுங்கள் அவரை’ என்று கட்டளையிட்டார்கள்.

அதற்குள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வந்து விட்டார்கள். இரண்டு வானவர்களும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறி அருகே நின்றனர்.

நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெருமானே இறைச் செய்தியை எத்திவைக்கும் தூதனாக உலகில் நான் வருவது இதுவே கடைசி தருணமாகும். தங்களின் மேலான உலக வாழ்வும் இன்று நிறைவு பெற்று விடும். இதற்குப் பின்னால் எவருக்கும் நான் இறைச் செய்தியைக் கொண்டு வரப் போவதுமில்லை. எவருடைய மரணத்திற்காகவும் நான் வரப் போவதுமில்லை’ என்றுரைத்தனர்.

பின்னர் ஹழ்ரத் இஸ்ராஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘அல்லாஹ்வின் ரஸூலே! இறைவனின் ஆணையை ஏந்தி உங்கள் முன் வந்திருக்கிறேன். தாங்கள் உலகில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது தங்களின் இறைவனை சந்திக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும்படி எனக்கு உத்திரவாகியுள்ளது’ என்று கூறி நின்றனர்.

அதற்கு நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்ராஈலே! என் இறைவனுக்கு எது விருப்பமோ அதுவே என் விருப்பமாகும். அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றுவதில் காலம் கடத்தாதீர்’ என்று பதில் கூறினார்கள்.

ஸகராத்

ஸக்கராத் என்னும் மரண வேதனை துவங்கியது. அன்னை ஆயிஷா நாயகியின் நெஞ்சினில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாய்ந்திருந்தார்கள். தங்களின் திருக்கரத்தை அருகில் ஒரு தோல் பையிலிருந்த தண்ணீரில் முக்கி எடுத்து தங்களின் முகத்தில் தடவிக் கொண்டவர்களாக, ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறில்லை. நிச்சயமாக மரணமானது வேதனையுடையதே. யா அல்லாஹ்! உன் உதவியை நான் வேண்டுகிறேன்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

‘எவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ அவர்களுடன்’

‘அல்லாஹ்வாகிய உயர்ந்த தோழனுடன்’ என்றும் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தனர்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கரங்களை நீட்டவும் மடக்கவுமாக இருந்தார்கள். அது ரூஹானது வெளிப்படும் வேதனையைக் காட்டுவதாக இருந்தது.

ஜிப்ரயீலே! என் அருகில் வருவீராக! என்ற முணுமுணுப்பும் செவிகளில் கேட்டது. அதற்கிடையில் ஆயிஷா நாயகி அவர்களின் சகோதரர் ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அவர்களின் கைகளில் பல்துலக்கும் மிஸ்வாக்கும் இருந்தது. நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்வை அதன்மீது செல்வதைக் கண்ட அன்னையார் அவர்கள் மிஸ்வாக்கு செய்ய விரும்புகிறார்கள் என்பதை அறிந்து தங்களின் சகோதரரின் கையிலிருந்து அதனை வாங்கி, மென்று மிருதுவாக்கி அண்ணலார் அவர்களின் திருக் கரங்களில் கொடுத்தார்கள். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை வாங்கிப் பல் துலக்கினார்கள்.

மதியத்துக்கு சற்று முந்தின நேரமாக இருந்தது. நபி பெருமானார் அவர்களின் வாழ்வில் மூச்சானது எந்நேரமும் நின்று விடக் கூடிய நிலையில் வெளிவந்துக் கொண்டிருந்தது. உடல் படிப்படியாகக் கனத்துக் கொண்டும், குளிர்ந்து கொண்டும் இருந்தது. திடீரெனத் தங்களின் திருக் கரங்களை உயர்த்தி ‘அல்லாஹ்வாகிய உயர்ந்த தோழனுடன்’ என்று தாழ்ந்த குரலில் கூறினார்கள். மறுமுறையும் அவ்வாறே கூறினார்கள். மூன்றாம் முறையும் அவ்வாறே கூறி முடித்ததும் அவர்களின் பொற்கரம் பக்கத்தில் ஓய்ந்து சாய்ந்தது. கண்கள் மூடிக் கொண்டன. புனித ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து சென்றது.

மங்காத ஒளி வீசி மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிய மாநிலத்தின் மணி விளக்கு அணைந்தது. பண்புடைய தம் வாழ்வாலே பாருலகின் நெஞ்சங்களை ஈர்த்து நின்ற புனிதத் திருமேனி ஓய்ந்தது.

நபிகளாரின் மறைவிற்குப் பின் ஸஹாபாக்களின் நிலை

நாயகத் திருமேனியின் நிரந்தரப் பிரிவை நல்லறத் தோழர்களின் நெஞ்சங்கள் எவ்வாறு தாங்கும்? வரலாற்றில் காண முடியாத தோழமையல்லவா அந்த தோழமை.

ஹழ்ரத் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசும் சக்தியை இழந்து தங்களின் வீட்டிற்கும் பள்ளிக்குமாகச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அனீஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இதயம் அந்தப் பேரிடியினால் தாங்காது மரணம் சம்பவித்து விட்டது. ஹழ்ரத் உமர் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் வாளை உருவிக் கையில் பிடித்தவர்களாக, ‘நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்று எவரேனும் கூறுவாராகில் அவரின் தலையை என் வாளால் கொய்வேன். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனோடு வசனிக்க ஸினாய் மலைக்குச் சென்று திரும்பியது போல் பெருமானார் அவர்களும் தங்கள் இறைவனோடு வசனிக்கச் சென்றிருக்கிறார்கள். விரைவில் திரும்பி வருவார்கள் என்று முழங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் மற்றவர்கள் வாய்திறக்க அஞ்சினர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதேயன்றி இனிச் செய்வதென்ன என்ற சிந்தனை ஒருவருக்கும் பிறக்கவில்லை. அந்நிலையில் ‘அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு எங்கே? என்று ஒருவர் குரல் கொடுத்தார். எல்லோர் கண்களும் ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேடின.

காலையில் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சற்றுத் தெளிவுடன் கண்ட அபூபக்கர் நாயகம் அவர்கள் பெருமானார் அவர்களிடம் உத்திரவு பெற்று ஒரு மைல் தொலைவிலுள்ள தங்கள் குடும்பத்தாரைப் பார்க்க சென்றிருந்தனர். விசயம் கேள்விப்பட்டு விரைந்து வந்த அவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாளுடன் நிற்பதைக் கண்டு நிலைமையை நன்கு புரிந்து கொண்டனர்.

நேராக வீட்டினுள் சென்ற ஸித்தீகுல் அக்பர் நபி பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலைப் போர்த்தியிருந்த துணியை நீக்கி அழகொளிரும் தங்களின் அன்புத் தலைவரின் திருமுகத்தைப் பார்த்தனர். தங்களின் திருக்கரத்தால் அவர்களின் புனித சிரசை சற்றே உயர்த்திப் பிடித்தனர். தோழரின் முகம் தோழரின் முகத்தோடு இணைந்து கொண்டது. ‘உயிரோடு இருக்கும் போதும் தாங்கள் இனிமையோடிருந்தீர்கள். இப்போதும் இனிமையோடு இருக்கிறீர்கள்.

தங்களுக்கென விதிக்கப்பட்ட மரணத்தை தாங்கள் சுகித்து விட்டீர்கள். நிச்சயம் அல்லாஹ் தங்களை இனி மரணமடையச் செய்ய மாட்டான் என்று கூறி மீண்டும் துணியைப் போர்த்தி விட்டனர்.

அதன்பின் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியினுள் சென்றார்கள். முதலாவதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி சத்தியம் செய்து கொண்டிருப்பவரே சற்று தாமதிப்பீராக! என்று குரல் கொடுத்தனர். அவர்களின் இடியோசை உமர் நாயகத்தை மவுனமுறச் செய்தது. அப்போது ஸஹாபாக்கள் அபூபக்கர் நாயகத்தை சூழ்ந்தனர். தோழர்களே! உங்களில் எவரேனும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்கி வந்தாரெனில் இன்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும். இன்னும் உங்களில் எவர் அல்லாஹ்வை வணங்கி வந்தாரோ அவன் மரணமடையமாட்டான் என்பதையும் அவர் அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் கூறுகிறான்:

وَمَامُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ. قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرَّسُلُؕاَفَاَئِنْ مَّاتَ اَوْقُتِلَ انْقَلَبْتُمْ عَلے رَعْقَابِكُمْؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللهَ شَيْئًاؕ وَسَيَجْزِے اللهُ الشَّكِرِيْنَ ۝

‘முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இப்புவியில் வாழ்ந்து செல்ல வந்த) ஒரு தூதரேயன்றி வேறல்லர். அவருக்கு முன்னரும் (இவ்வாறே) தூதர்கள் பலர் சென்றிருக்கின்றனர். அவர் இறந்து விட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவனேனும் புறங்காட்டிச் சென்று விட்டால், அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விட மாட்டான். நன்றியறிவோர்க்கு அல்லாஹ் அதி சீக்கிரத்தில் (நற்) கூலியைத் தருவான்’ (3:144) என்று உரையாற்றினார்கள்.

அபூபக்கர் நாயகத்தின் அந்தச் சிறு உரையில் ஓர் அற்புத சக்தி இருந்தது. கேட்டவர்கள் ஒரு மந்திரத்தால் கட்டுண்டவர் போல் ஆனார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படியே அமர்ந்து விட்டார்கள். திருமறையின் அந்த வசனத்தை அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதியபோது அதனை அன்றுதான் புதிதாக இறங்கியது போல் நாங்கள் யாவரும் உணர்ந்தோம்’ என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். மதீனாவின் தெருக்களில் தண்ணீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஒவ்வொரு பெண்ணின் வாயிலும் இந்தவசனத்தை அன்று நான் கேட்டேன் என்று ஒருவர் குறிப்பிடுகிறார். அனைவரும் இப்போது தன்னிலை அடைந்து இனி ஆகவேண்டிய காரியங்களை கவனிக்கத் துவங்கினர்.

புனித உடல் நீராட்டப்படல்

மறுநாள் காலை நபிகளாரின் புனித உடலை நீராட்டுவது பற்றி கலந்து பேசினார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித உடல் புனிதமும் பரிசுத்தமும் வாய்ந்தது எனவே அதனை நீராட்டத் தேவை என்ன? என்றார் ஒருவர். நீராட்ட வேண்டியது அவசியமே. ஆனால் மேலாடையைக் களைய வேண்டாம் என்றார் இன்னொருவர். ஹழ்ரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களோ நீராட்டுவது என்பது பெருமானார் அவர்களின் ஸுன்னத் என்னும் வழிமுறையாகும். எவருடைய சொல்லுக்காகவும் வழிமுறையைத் தவற விட முடியாது என்றார்கள். இந்த விவாதத்தின் ஊடே அனைவரையும் ஒருசேர இலேசான உறக்கம் ஆட்கொண்டது. மயக்க நிலையில், ‘நபியின் உடலை அவரின் மேலாடையைக் கழற்றாமலே நீராட்டுங்கள்’ என்ற அசரீரியான குரல் அனைவரின் செவிகளிலும் கேட்டது.

குபாவில் உள்ள பீரே அரீஸ் என்ற கிணற்று நீரையே நபிகளார் அன்றாடம் குடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள். அக்கிணற்றிலிருந்து ஏழு துருத்திகளில் நீர் கொணர்ந்து தங்களை நீராட்டும்படி முன்னமேயே அவர்கள் கூறியிருந்தார்கள். என்னுடைய வெட்கத் தலத்தில் எவருடைய பார்வையும் பட்டுவிடில் பார்வை பறிக்கப்பட்டு அவர் குருடராகிவிடுவார். எனவே ஹழ்ரத் அலீ மற்றும் ஹழ்ரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுடனும், அவர்களின் மக்களான ஹழ்ரத் பழ்ல், ஹழ்ரத் குஸும் ஆகியோருடனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஊழியர்களான ஹழ்ரத் உஸாமா, ஹழ்ரத் ஷக்ரான் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோருடனும் நாயகத்தின் புனித உடல் வைக்கப்பட்டிருந்த அறையினுள் சென்று கதவை அடைத்தனர். அப்போது ஹழ்ரத் உஸ் இப்னு கவ்ல் அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கதவைத் தட்டியவராக அபல் ஹஸன்! இதில் எங்களுக்குண்டான உரிமையை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் கேட்கிறேன் என்று கதறினார். அவரின் பரிதவிப்பைக் கண்டு மனம் இரங்கிய ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரையும் தங்களோடு சேர்த்துக் கொண்டனர். அனைவரின் கண்களும் துணிகளால் கட்டப்பட்டன. அன்ஸாரித் தோழர் வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்பிக்க ஹழ்ரத் பழ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், குஸும் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நீரை அள்ளி ஊற்ற, ஹழ்ரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் புனித உடலைத் திருப்பித் திருப்பித் தர ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு, ஷக்ரான் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோர் துணையுடன் மேலாடையோடிருந்த புனிதத் திருவுடலைத் தேய்த்து நீராட்டினார்கள்.

முதலாவது சாதாரணத் தண்ணீரைக் கொண்டும், இரண்டாவதாக பீரெ அரீஸ் தண்ணீரைக் கொண்டும், மூன்றாவதாக கற்பூரத்தை நீரில் கலந்தும் நீராட்டப்பட்டது. என்றுமே நிலைகுலையாத அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இதயம் மலைபோல் கனத்திருந்தது.

அலி நாயகத்தின் கண்கள் நீரை வடித்துக் கொண்டிருந்தன. நாவானது சோக கீதம் பாடிக் கொண்டிருந்தது.

நீராட்டப்பட்ட பின்னர் புனித உடலானது மேலும்இரண்டு துணிகளைக் கொண்டு போர்த்தப்பட்டது. பின்னர் ஒரு பலகையின் மேல் புனிதத் திருவுடலை வைத்து அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டினுள் வைத்துவிட்டு அனைவரும் வெளியே வந்தனர். முதலில் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பின்னர் வானவர் யாவரும் வரிசைவரிசையாக வந்து தொழுது சென்றனர். அதன்பின் மனிதர்களில் முதலாவதாக புனித குடும்பத்தார்கள், பின்னர் முஹாஜிர்கள், பின் அன்ஸார்கள், பின் மற்ற கூட்டத்தார்கள் முதலில் ஆண்கள், அதன்பின் பெண்கள் அதன்பின் குழந்தைகள் என வரிசைவரிசையாக தொழுதனர். மனிதர்கள் மட்டும் 72 முறை தொழுகை நடத்தினர். எவரும் இமாமாக நிறுத்தப்படவில்லை. ‘வாழ்க்கையில் எங்களுக்கு இமாமாக இருந்த நீங்களே இப்போதும் எங்களுக்கு இமாமாக இருக்கிறீர்கள்’ என்று அலி ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறிவிட்டார்கள்.

புனித கப்ர் ஷரீஃப்

புனித உடலை இப்போது எங்கு அடக்கம் செய்வது என்பது பற்றி சர்ச்சை பிறந்தது. ஒருவர் பைத்துல் முகத்தஸ் என்றும், மற்றொருவர் கஃபா இருக்கும் மக்காவில் என்;றும், இன்னொருவர் மஸ்ஜிதுன் நபவியில் என்றும், வேறொருவர் ஜன்னத்துல் பகீயில் என்றும் கூறி ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நபிமார்கள் எங்கே மரணமடைந்தார்களோ அங்கேயே அடக்கப்படுவார்கள் என்று நபி பெருமானார் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள். ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அதையே வலியுறுத்தினார்கள். எல்லோராலும் அச்சொல் ஏற்கப்பட்டது.

இப்போது மண்ணறை எவ்விதம் தோண்டுவது என்று யோசிக்கப்பட்டது. ஏனெனில் மக்காவின் முறை வேறு, மதீனாவின் முறை வேறாக இருந்தது. ஹழ்ரத் அபூஉபைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவின் முறைப்படியும், ஹழ்ரத் அபூதல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனா முறைப்படியும் மண்ணறை தோண்டி பழக்கப்பட்டவர்கள். இருவருக்கும் ஆளனுப்பி முதலில் எவர் வந்து சேருகிறாரேரா அவரின் முறைப்படி மண்ணறை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஹழ்ரத் அபூதல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முதலில் வந்து சேரவே மதீனாவின் முறைப்படியே மண்ணறை அமைக்கப்பட்டது.

இறுதியாக செவ்வாய் மாலை, புதன்கிழமை பின் இரவு ஸஹ்ருடைய நேரத்தில் ஹழ்ரத் அலீ, ஹழ்ரத் அப்பாஸ், ஹழ்ரத் பழ்ல், ஹழ்ரத் குஸும் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் மண்ணறையில் இறங்கி புனிதத் திருவுடலை வைத்து வெளியேறினார்கள். இவர்களில் இறுதியாக வெளிவந்தவர்கள் ஹழ்ரத் குஸும் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே- நபிகளாரின் திருவுடலை இறுதியாகக் கண்ட பெருமைக்குரியவர்கள் ஆவர்கள்.

சமுதாயத்தை பற்றிய சிந்தனையால் வாழ்நாளின் எந்த இரவிலும் பூரணமாக உறங்கி அறியாத புனிதக் கண்கள் அன்று அமைதியாக உறங்கத் துவங்கின.

மாமன்னரின் புனித உடல் மதீனாஷரீஃபில் என்றும் புத்தொளிபோல் இலங்கிக் கொண்டிருக்கிறது. நம் அனைவர்களையும் இன்றும் அவர்கள்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் சொல்லும் ஸலவாத்தையும், ஸலாமையும் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதற்குப் பதிலும் அளிக்கிறார்கள்.

வல்ல நாயன் நம் அனைவர்களுக்கும் மேலான அந்த நபிகள் நாதரின் திருக்காட்சியை கனவிலும், விழிப்பிலும் கண்டு கொண்டேயிருக்க அருள் பாலிப்பானாக. மறுமையில் அன்னாரின் ஷபாஅத்தைப் பெற்று அன்னவர்களின் கரங்களால் ஹவ்ளுல் கவ்தர் தடாகத்தில் நீரருந்தி அன்னாரின் அருகிலேயே அதுவும் வலப்புறத்திலேயே அமர்ந்து ஆனந்தப் பரவசம் அடைய அருள்புரிவானாக. ஆமீன்.

இதை வாசிப்பவர்கள் கட்டுரையை தொகுத்த எனது ஹக்கிலும் துஆ செய்ய வேண்டியது.

Add Comment

Your email address will not be published.