தொப்பி அணியலாமா?-Wearing Cap during Prayer?

தொப்பி அணியலாமா?-Wearing Cap during Prayer?

By Sufi Manzil 0 Comment August 7, 2011

Print Friendly, PDF & Email

கேள்வி: தொப்பி அணிவதின் சிறப்பு, மற்றும் அணைத்து சுன்னத்தான விஷயங்கள் வெளியிடுங்கள்.

smk.abdul majeed, s.majeed33@gmail.com

Fri, Aug 5, 2011 at 1:34 PM

பதில்: நமது இணையதளத்தின் மூலம் ஒவ்வொரு மார்க்க விஷயங்களையும்  ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறோம். இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து வெளியிடவும் இருக்கிறோம். துஆ செய்யவும்.

அடுத்து தொப்பி அணிவதின் சிறப்புகள் என்ன? என்ற கேள்வி தங்களிடமிருந்து கேட்கப்பட்டுள்ளது. தொப்பி அணிவது என்பது முஸ்லிம்களின் அடையாளங்களில் ஒன்று. அதை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள்.

முஸ்லிம்களின் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் இல்லாமலாக்கி அவர்களை மார்க்கத்தை விட்டு வெளியேற்றவே யூத, நஸ்ரானி சக்திகள் முயற்சி  மேற்கொண்டு வருகின்றன. அதில் அகப்பட்டு சிக்கிக் கொண்டவர்தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்ற வழிகேடன். அவர்களைப் பின்பற்றும் வஹ்ஹாபிகள்தான் தொப்பி அணிவது பற்றியும், இன்னும் முஸ்லிம்களின் அடையாளங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பி அதை மக்களிடம் இல்லாமலாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களின் இந்த வழிகேடுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்  கொள்ள முஸ்லிம்கள் இவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

தொப்பி அணிவதற்குரிய ஆதாரங்கள்:

தொப்பியை வைத்தே மற்றவர்கள் முஸ்லிம்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது, இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தொப்பி அணியக் கூடாது என்று ஒரு கூட்டம் சொல்கிறது. அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்கும் நபர் பி.ஜே. என்ற பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர். ஆனால் அவர் தொப்பி அணிந்திருக்கிறார். இதைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘தொப்பி அணிந்தால் நான் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றை செய்கிறேன். அணியாவிட்டாலும் அனுமதிக்கப்பட்டதைத் தான் செய்கிறேன். எனது ஆடை அலங்காரத்திற்காக இதை அணிகிறேன். இதில் கேள்வி கேட்க அதிகாரம் இல்லை’ என்று அகங்காரமாக, ஆணவமாக கூறுகிறார். இவரையும் ஒரு கூட்டம் பின்பற்றுகிறது என்றால் வேடிக்கைதான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும் காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள் -(அல்-குர்ஆன் 7:31)

உங்களில் ஒருவர் தொழுதால் இரு ஆடைகளை அணிந்து கொள்ளவும். ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வுக்காகவே ‘அலங்கரித்துக் கொள்ளவும். அதற்கு அவனே தகுதியுடையவன். அவ்வாறு இரு ஆடைகள் அற்றவர்கள் கீழுடையாவது அணிந்து கொள்ளவும். உங்கள் தொழுகையில் யூதர்களுக்கு ஒப்பாக வேண்டாம். (நூல்: பைஹகீ, ஸுனனல் அல்குப்ரா 2ஃ236)

நாபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், ‘நான் ஒரு ஆடை அணிந்து தொழுவதைக் கண்ட இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு ஆடைகளை அணியக் கூடாதா? என்று கேட்டார்கள். பின்பு, உங்களை மதீனத்து மக்களிடம் அனுப்பினால் இவ்வாறு ஒற்றாடையுடன் செல்வீர்களா?என்றார்கள். இல்லையென்று பதில் கூறினேன். அப்போது அவர்கள் மக்களுக்காக அன்றி அல்லாஹ்வுக்கே அலங்கரிக்க வேண்டுமென்றும் அதற்கு அவனே தகுதியுடையவன் என்றும் கூறினார்கள்.

இவைகளை அடிப்படையாகக் கொண்ட புகாஹக்கள் (சட்ட மேதைகள்) கௌரவமானவர்களிடம் செல்லும்போது தலையை மறைப்பது காலங்காலமாய் முஸ்லிம்களின் மரபாய் இருந்து வந்துள்ளதால், தொழுகையில் தலையை திறந்து தொழுவது மக்ரூஹ் என்றார்கள்.

ஆணும், பெண்ணும் தனது அவ்ரத்தை மறைப்பது கட்டாயமாகும். ஆனால் ‘ஸீனத்’ எனப்படும் அலங்கரித்தல் ஒரு பரவலான உட்கருத்தைக் கொண்டது. அது தலையை மறைப்பதையும் அடக்கிக் கொள்ளும். அக்கருத்தை உறுதிப்படுத்துபவையாகவே, முஸ்லிம்கள் ஆரம்பம் தொட்டு இன்றுவரை அதைப் பேணி வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இமாம்களும் தொப்பி அணிவதை வற்புறுத்தியுள்ளார்கள்.

(ஷரஹுல் மனிய்யத் 349, ஷரஹுல் முஹத்தப் 3ஃ173)

தொப்பி போடுவது தம்மை அலங்கரித்துக் கொள்ளத்தான் என்று ஒப்புக் கொண்டு, இந்த உலகத்துக்கு தன்னை அலங்கரித்துக் காட்டிக் கொள்ள நினைக்கும் பி.ஜே. அல்லாஹ்வை தொழுக செல்லும் போது மட்டும் அலங்கோலமாக, பரதேசியாக செல்லுமாறும் சொல்வது மேற்சொன்ன குர்ஆன், ஹதீது கருத்துகளுக்கு மாற்றம் செய்வது அல்லவா?

தொப்பி அணிவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் என்று ஒப்புக் கொள்ளும் இவர், இதை அணியாமலிருக்க ஆர்வமூட்டியிருக்கிறார். ஏனெனில் இப்பிரச்சனையை இவர் கொண்டு வராவிட்டால் மக்களுக்கு இது சம்பந்தமாக குழப்பமே ஏற்பட்டிருக்காது. ஆனால் தொப்பி அணியத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கும் போதே தொப்பி அணியத் தேவையில்லை என்ற கருத்தை ஆர்வமூட்டியிருக்கிறார். இதனால் பள்ளிகளில் போர்டு எழுதி வைக்கும் அளவிற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி ஒற்றுமையான முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினை உண்டாக்கிவிட்டார். இதைப் பற்றி கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்று திமிரான பதில் வேறு. ஆனால் தொழுகையில் கையை நெஞ்சுக்கு மேலே கட்டுங்கள், அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டுங்கள், ஜியாரத் செய்யாதீர்கள், ஜகாத் கொடுக்க சொல்வதில் சொந்த கருத்தை சொல்வது போன்ற பல்வேறு மார்க்க விஷயங்களில் இவர் கட்டளை இடுவார். அதை ஏன் செய்கிறீர்கள்? என்று இவர் கேள்வி கேட்பார். ஆனால் இவர் எது செய்தாலும்  கேள்வி கேட்க கூடாதாம். என்னே! விந்தை. இதுதான் இவர் மார்க்கம். இவரின் மடத்தனத்தை பின்பற்ற ஒரு கூட்டம்.

எப்படியிருக்கிறது என்றால், நான் மார்க்கத்திற்கு முரணான எதையும் செய்வேன். ஆனால் என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஏனெனில் நான் இதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லவில்லையே! என்பது போல் இருக்கிறது. தான் முதலில் எதை சொல்கிறோமோ அதில் தான் சரியாக இருந்தபிறகுதான் மற்றவர்களுக்கு மக்களிடம் சொல்வதுதான் நபி வழி. அதை விட்டு விட்டு தான்தோன்றித் தனமாக செய்வது ஷைத்தானின் வழி.

தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை என்றும்,

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை என்றும்,

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது என்றும்,

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி என்றும்,

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

அதேபோல் தலைப்பாகை அணிவது பற்றியும் பி.ஜே. கூறுகிறார், ‘நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி 205

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் 2421

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் 2418

இத்தனை ஆதாரங்களையும் காட்டிவிட்டு, பி.ஜே. சொல்கிறார், ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.’

மேற்கண்டவை பி.ஜே. என்பவர் தொப்பி, தலைப்பாகை அணிவதை மறுப்பதற்கு கூறும் காரணங்கள். இது உண்மைதானா? பி.ஜே. ஹதீஸ்களை முழுமையாக படித்துத்தான் இப்படிச் சொல்கிறாரா? என்று பார்க்கும்போது,

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளே சுன்னத் என அழைக்கப்படுகிறது என்ற விசயம் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் அறிஞர்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொதுவான கருத்தாக காணப்படுகிறது.

ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக புதிதாக ஒரு கருத்தை இந்த போக்கிரிக் கூட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதாவது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தாலும், சொன்னாலும், அங்கீகரித்தாலும் அது சுன்னத்தாக மாட்டாது என்ற கருத்தை. அப்போ எதுதான் சுன்னத்? இந்த கருத்தை இவர்; எங்கிருந்து பெற்றார்;? என்று கூற முடியுமா? இவர்களின் மதம் போகிற போக்கைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்திருப்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது, காணவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்த பொய்யன் தஜ்ஜால் பி.ஜே.யின் முகத்திரை கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் கிழித்தெறியப்படுகிறது.

1. அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். (புஹாரி 5083)

இஹ்ராம் அணியும்போது தொப்பி அணியாதீர்கள் என்று சொல்லும்போது மற்ற நேரங்களில் தொப்பி அணியுங்கள் என்று உறுதியாக கூறுவது தெரிகிறது.

2. இஸ்ஸத் பின்த் இயாத் கூறியதாவது, ‘அபா கிர்ஸாபா கூற நான் கேட்டிருக்கிறேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து ‘இதனை நீ அணிந்து கொள்’ எனக் கூறினார்கள்.
(முக்ஜமுல் கபீர் அத்தபரானி 3ஃ19 (2520))

3. சுலைமான் பின் தர்கான் அவர்கள் கூறியதாவது, ‘அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. (புஹாரி 5082)

4. (கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர் : ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி

5. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்’ அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா (ரலியல்லாஹு அன்ஹு)நூல் : முஸ்லிம்

6. (அதே மக்கா வெற்றியின் போது) ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்’ அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்

7. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளு செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்’ அறிவிப்பவர் : அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : அபூதாவூத், இப்னு மாஜா

8. இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள். (திர்மிதி)

9. ‘இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப் பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்’. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்

10. அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவாகள் அறிவிக்கிறார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள்.’ -நூல்: தப்ரானி.

11. ருக்கானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் நமக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதுதான்’. நூல்: ஸுனன் அபூதாவூது 4075, ஸுனன் திர்மிதி 3919.

12. ஹஜ்ரத் ஹஸனுல் பஸரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘ஸஹாபாக்கள் தங்களுடைய தலைப்பாகை, தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்’.-நூல் புஹாரி 1/151

13. தப்ரானி இமாம் மற்றும் சுயூத்தி இமாம் ஆகியோர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார். தப்ரானி இமாம் அவர்கள் இதை நம்பகமானது என்றும், இமர் சுயூத்தி அவர்கள் ஸஹீஹான ஹதீது என்றும் கூறுகின்றார்கள். நூல்: சிராஜுல் முனீர் பாகம் 4, பக்கம் 112

14. அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நூல்: ஸஹீஹுல் புஹாரி பாகம் 2 பக்கம் 863.

15. ஹஜ்ரத் முல்லா அலி கரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், ‘தொப்பியானது முஸ்லிம்களின் சிறப்பான, முக்கிய இஸ்லாமிய சின்னமாகும்.- மிர்காத் அல் மஸாபீஹ் வால்யூம் 8, பக்கம் 246.

எமக்கு இந்த விசயத்தில் சஹீஹான அறிவிப்புகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை சுட்டிக்காட்டுகிறது. இதனால் தலையை மறைப்பது ஒரு சுன்னத்தான விசயம் என உறுதியாகக் கூறமுடியும்.

பி.ஜேக்கு மறுப்பு தெரிவிக்கும் பி.ஜே.யின் குரு அல்பானி:

பி.ஜே.  தன் கொள்கைக்கு ஆதாரமாக யாருடைய கூற்றை எடுத்து வாதிடுகிறாரோ அவர் அதாவது அல்பானி என்பவர் பி.ஜே.க்கு மறுப்பு தெரிவிப்பதைப் பாருங்கள். அல்பானி அதற்;கு; அல்பானி பிக்குசுன்னாவின் விமர்சன நூலான தமாமுள் மின்னா எனும் தனது நூலின் பக்கம் 164 – 166 களில் பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்.

‘வழமையாக திறந்த தலையுடன் காணப்படுவதும் , அவ்வாறே வீதிகளில் உலாவருவதும், வணக்கஸ்தலங்களில் நுழைவதும் சலபுஸ் சாலிஹீன்களின் வழக்கில் நல்ல தோற்றம் அல்ல. மாறாக இது காபிர்கள் முஸ்லிம் நாடுகளில் நுழைந்து தங்களுடைய கெட்ட வழக்கங்களை கொண்டு வந்ததன் காரணமாக ஊடுருவிய ஒரு அந்நிய வழக்கமாகும். இதையே முஸ்லிம்கள் பின்பற்றி இதன் மூலமாகவும், இது போன்ற வேறு அந்நிய பழக்க வழக்கங்களாலும் தங்களுடைய இஸ்லாமிய அடையாளத்தை வீணடித்துவிட்டார்கள்.

மனிதன் அலங்காரம் செய்துக்கொல்வதற்க்கு அல்லாஹ்வே மிகவும் அருகதை உடையவன் என்ற நபி மொழிக்கேற்ப ஒரு முஸ்லிம் பூரணமான இஸ்லாமியத் தோற்றத்தில் தான் தொழுகைக்கு செல்ல வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த, எற்றுக்கொண்ட விசயமாகும்.

இவ்வாறு இடையில் ஏற்பட்ட பழக்கம் தொன்று தொட்டு இருந்து வரும் எமது இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு மாறு செய்வதற்கோ திறந்த தலையுடன் தொழ முடியும் என்பதற்கோ சான்றாக அமைய முடியாது. அத்துடன் எகிப்த்தில் உள்ள ‘ அன்சாருள் சுன்னா ‘ மக்கள் சிலர் ஹஜ்ஜில் திறந்த தலையுடன் தொழுவது தொழுகையில் தலை திறந்து இருக்க முடியும் என் ஆதாரமாகும் என் கியாஸ் அடிப்படையில் கூறுவது மிகவும் பிழையான கியாஸாகும். ஏனெனில் ஹஜ்ஜில் தலையை திறப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னமாகும். ஹஜ் கிரியைகளும் ஏனைய வணக்கங்களும் ஒருபோதும் சமமாகாது . இவர்கள் கூறும் இந்த கியாஸ் சரியானதாக இருந்தால் ஹஜ்ஜில் தலையை திறப்பது எவ்வாறு கடமையோ அதேபோன்று தொழுகையிலும் தலையை திறப்பது கடமை (வாஜிப்) என்றாகிவிடும். எனவே இந்த கியாசை இவரகள் விட்டு விட வேண்டும்.

மேலும், பயபக்திகாக வேண்டி திறந்த தலையுடன் தொழுவது விரும்பத்தக்கது எனக் கூறுவது சொந்த அபிப்பிராயத்தின்படி ஆதாரமின்றி மார்க்கத்தில் தீர்ப்பு ஒன்றை பித் அத் ஆக ஏற்படுத்துவதாகும். இவ்வாறு கூறுவது உண்மையாக இருந்தால் ரசூல் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திறந்த தலையுடன் தொழுதிருப்பார்கள். அவ்வாறு நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது இருந்தால் அது பற்றி அறிவிப்புகள் வந்திருக்கும். அறிவிப்புகள் இல்லாததது இது பித் அத் என்பதை காட்டுகிறது. எனவே இது பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

மாறாக நாம் மேலே தெளிவு படுத்தியது போல் தொன்று தொட்டு இருந்து வரும் இஸ்லாமியச் சீருடையைக் கொண்டே தொழுகைக்காக நாம் அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற பொதுவான ஆதாரத்தை மறுக்கவில்லை. ஒரு பொதுவான ஆதாரத்திற்கு வேறு ஆதாரம் முரண்பாடாக வரவில்லை என்றால் எல்லோரும் அதை ஆதாரமாகவே கருதுகிறார்கள். எனவே இவ்விடயத்தில் நாம் மிக்க கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.’

விஞ்ஞான ரீதியாக எடுத்துக் கொண்டாலும், தலையை மறைப்பதை விஞ்ஞானம் ஆதரிக்கின்றது. ஏனெனில், தலையை மறைப்பதால் கதிரவனின் தாக்கத்திலிருந்து தலை பாதுகாக்கப்பட்டு , மூளை பாதிக்கப்படாமல் காக்கப்படுகிறது. அதேபோல் தலைப்பாகை அணிவதனால் அதன் மீதிப்பகுதி கழுத்தில் தொங்கவிடப்படுகிறது. இது கழுத்தை சூரிய ஒளி தாக்கி சன்ஸ்ட்ரோக் என்ற நோய் ஏற்படாமல் பாதுக்கிறது. இன்னும் எண்ணற்ற பலன்களை தலையை மறைப்பது கொண்டு அடையலாம்.

உங்கள் முன் தொப்பி அணிவதற்கும், தலைப்பாகை அணிவதற்கும் அதை அணிந்து தொழுவதற்கும் உரிய ஆதாரங்களை தந்தது தஜ்ஜால் பி.ஜே.யின் பொய்களை முறியடித்து விட்டோம். அல்ஹம்துலில்லாஹ்! அதுவும் அவரின் குருவான அல்பானியின் கூற்றைக் கொண்டே அதாவது தன் கையை எடுத்து தன் கண்ணையே குத்திய கதையாக முறியடித்திருக்கிறோம். குழப்பவாதிகள் பார்த்து தெளிவு பெறுவார்களாக!

மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால்,

1. தொப்பி அணியுமாறும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்திருந்ததும், தலைப்பாகை அணிந்திருந்ததும் மேற் சொன்ன நபிமொழிகள் உறுதிப்படுத்துகிறது.

2. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை என்ற பீ.ஜே.யின் கூற்று பொய் என்று நிரூபணமாகிறது.

3. பல நூற்றாண்டுகாலமாக முஸ்லிமகள் அணிந்து வரும் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவித்ததில் எவ்விதத் தவறுமில்லை அது சுன்னாவின் அடிப்படையில்தான் என்று தெளிவாகிறது.

4. இஸ்லாத்தின் அடையாளமாக கருதப்படும் தொப்பியை அல்லாஹ்வை தொழ செல்லும் போது அல்குர்ஆன், ஹதீதுகளின் அடிப்படையில் அணிய வேண்டும் என்பது தெளிவாகிறது. அதை அணியாமல் தொழுபவர்கள் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமானவர்கள். அவர்களை பள்ளியில் தொழ அனுமதிப்பது கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை திறந்து கொண்டு தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. மற்றும் யூதர்கள், நஸ்ரானிகள் தலையை திறந்து கொண்டு தொழுவது மரபாக வைத்துள்ளனர். ஆகவே அல்லாஹ் நம் அனைவர்களையும் இந்த குழப்பவாதிகளின் குழப்பத்தை விட்டும் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் இறைநேசர்கள், மஷாயிகீன்கள் பொருட்டால் காத்தருள்வானாக! ஆமீன்.