சொந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பந்தம் செய்து கொள்ளலாமா?”

சொந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பந்தம் செய்து கொள்ளலாமா?”

By Sufi Manzil 0 Comment October 1, 2021

Print Friendly, PDF & Email

கேள்வி: “ஒரு சகோதரன் தன் பிள்ளையை தன் உடன் பிறந்த ‘சகோதரனின் பிள்ளைக்கு’திருமணம் செய்து கொடுக்கலாமா?.

அதாவது சொந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பந்தம் செய்து கொள்ளலாமா?”

பதில்: உண்மையில் நமது தமிழ் சமூக அமைப்பில் (கேரளாவிலும் கூட) பெரியம்மா, சின்னம்மா மற்றும் பெரியத்தா, சின்னத்தா மக்கள் ‘அண்ணன் – தங்கைகள்’ என்றே சொல்லி வளர்க்கிறோம். அவர்களும் தங்களுக்குள் அப்படியே அழைத்து வளர்கிறார்கள்.

ஆனால், ஷரீஅத்தின் சட்டத்தின் படி, உண்மையில் அவர்கள் ‘غير محرم’ ஆகும். அதாவது அவர்கள் ஷரீஆ சட்டப்படி திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்.

ஒரு பெரியத்தா மகள், சின்னத்தா மகன் முன்போ அல்லது சின்னத்தா மகள், பெரியத்தா மகன் முன்போ பர்தா இன்றி நிற்குதல் ஹராம் ஆகும்.

#ஆதாரம்:
حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏
உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனுக்குப் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது).

அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை.

உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்டிருக்கிறது).

இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது.

இதற்கு முன்னர் நடந்து விட்டவைகளைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:23)

وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ‌ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ‌ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً‌ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْ بَعْدِ الْـفَرِيْضَةِ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏
கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.)

இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும்.

மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் (திருமணக் கட்டணமாகிய “மஹரைக்” கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், விபச்சாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரோடு வீடு கூடிவிட்டீர்களோ அவருக்கு குறிப்பிட்ட “மஹரை” அவரிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்து விடுங்கள்.

எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதனைக் குறைக்கவோ கூட்டவோ) இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது யாதொரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:24)

திருமறையின் نصّ – நேரடி ஆதாரம், இதில் இருப்பதால் (وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ – மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் – திருமணக் கட்டணமாகிய “மஹரைக்” கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத் – தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது) இந்த உறவுமுறையில் அண்ணனும், தம்பியும் சம்பந்தம் செய்து கொள்வது ஆகுமானது. ஆனால், நமது தமிழ்நாட்டு கலாச்சாரம் இதற்கு மாறுபட்டிருப்பதால் இந்த முறை சம்பந்தம் மிகவும் குறைவாக உள்ளது.

இதை நான் இவ்வளவு விரிவாக எழுதக் காரணம், எனக்கு அறிமுகமான சிலரிடம் இந்த சட்டத்தை நான் விளக்கும்போது அவர்களில் பலருக்கும் இந்த சட்டம் தெரிந்திருக்கவில்லை. இதை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த பதிவு.

‘ஒரே இரத்த சொந்தமாயிற்றே?. அதெப்படி தகும்?’ என்று கேள்வி கேட்கிறார்கள். உங்கள் லாஜிக்கிற்கெல்லாம் இங்கே பதில் சொல்ல முடியாது. ‘அல்லாஹ் கூடும்’ என்று அனுமதியளித்த ஒன்றில் ‘அதெப்படி கூடும்னு சொல்லப்போச்சு?’ என்று சண்டையிடுமளவிற்கு இந்த தர்க்க நியாயங்கள் செல்கின்றன. ஆகவே, இதில் பதில் சொல்வதை நான் தவிர்க்கிறேன். அல்லாஹ் வின் சொல்லை விடவா என்னுடைய விளக்கம் உங்களை மாற்றிவிடப் போகிறது?.

இந்த வகை தர்க்க நியாயங்கள் ஒரு மனநோய். ‘அல்லாஹ் கூடும்’ என்று சொல்லிவிட்ட பிறகு அதைவிட உங்கள் லாஜிக்கிற்கு முன்னுரிமை நீங்கள் தருகிறீர்களென்றால் உங்கள் ஈமான் அல்லாஹ்வின் சொல் மீதா? அல்லது உங்கள் லாஜிக் – தர்க்க நியாயங்கள் மீதா?.

தீனுடைய விஷயத்தில் அறியாமல் தர்க்கம் செய்யாதீர்கள்.

நன்றி: அஹ்லுஸ் ஸுன்னாஹ் மீடியா.