சிக்கந்தர் துல்கர்ணைன்
By Sufi Manzil
சிக்கந்தர் துல்கர்ணைன் ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சித்தியின் மகன் என்றும்,அவர்களின் பெரிய அன்னை மகன் என்றும் இருவித கூற்றுகள் உள்ளன.
துல்கர்ணைன் என்பதற்கு இரு கொம்புகள் உள்ளவர் என்று பொருளாகும்.
அல்முன்திர் அல் அக்பர் பின் மாசுல்ஸமா என்பதே இவர்களின் பெயராகும். அவரின் நெற்றியில் இரண்டு முடிச் சுருள்கள் விழுந்ததன் காரணமாக அவருக்கு துல்கர்ணைன் என்னும் பெயர் ஏற்பட்டதென்றும் கூறப்படுகிறது.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள துல்கர்ணைன் தென் அரபு நாட்டின் பேரரசாயிருந்த துப்பவுல் அக்ரானையே குறிக்கும் என அரபுநாட்டின் தென்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
இவர்தான் கஃபாவுக்கு முதன்முதலில் போர்வை போர்த்தியவர் ஆவார்.
துல்கர்ணைன் எவர் என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இவர் ஒரு நபியா? என்பது பற்றியும் தெளிவான முடிவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.
அவர் யமன் நாட்டில் 2000 யூதரப்பி (யூதஅறிஞர்)களைச் சந்தித்தார். அப்பொழுது அவர்கள் இறுதிநபியின் வரவைப் பற்றி அவரிடம் முன்னறிவிப்பு செய்தனர்.
எனவே அவர் இறுதி நபி குடியேறும் இடத்தை அவர்களின் மூலம் அறிந்து அங்குச் சென்று 400 யூதரப்பிகளுடன் குடியேறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தார்.
பின்னர் அவர் அவர்களனைவரையும் அங்கு வருமாறு பணித்து இறுதி நபியிடம் தம் மடலைத் தருமாறு கூறிவிட்டு சென்றார். அம்மடல் இறுதியாக யூதரப்பிகளின் வழிவந்த அபூ ஐயூப் காலித் இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்தது. அம்மடல் அண்ணல் நபியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில், நான் இறைவன் ஒருவன் என்று சான்று பகர்கிறேன். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபி என ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக இறுதித் தீர்ப்பு நாளன்று பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன் என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இம்மன்னரின் கூட்டத்தினரைப் பற்றியே அல்லாஹ் தன் திருமறையில் ‘துப்பவு மக்கள்’ என்று குறிப்பிடுகிறான்.
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? (44:37)
மேலும் அல்லாஹுத்தஆலா,
وَيَسْأَلُونَكَ عَن ذِي الْقَرْنَيْنِ ۖ قُلْ سَأَتْلُو عَلَيْكُم مِّنْهُ ذِكْرًا
(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக. என்று கூறுகின்றான். (18:83)
பெரும்பாலோரின் கருத்துப்படி துல்கர்ணைன் என்பவர் அலெக்சாண்டர் என்னும் மாமன்னரைக் குறிக்கும். அலெக்சாண்டர் என்ற பெயருடன் இரு பேரரசர்கள் இரு வேறு காலகட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.
கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மகா அலெக்சாண்டர் என்ற ரோமச் சக்கரவர்த்தி ஒருவர் இருந்தார். இவரின் அமைச்சரவையில் அரிஸ்டாட்டில் என்ற தத்துவஞானி அமைச்சராக இருந்தார். இவர் ஆசியா, பாரசீகம் முதலான நாடுகளை வென்று சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியதால் இவரை மகா அலெக்சாண்டர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முஸ்லிமல்ல. காஃபிர்.
அல்லாஹ் குறிப்பிடும் துல்கர்ணைன் இவரின் காலத்திற்கு வெகுகாலத்திற்கு முன்பே வாழ்ந்தவர்கள். அவர் கிரேக்கர். அவரின் தந்தையின் பெயர் பைலகூஸ். உலகை கட்டி ஆண்ட மன்னர்களில் இவரும் ஒருவர். அவர் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவரின் காலம் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலமாகும். அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள். அவர்களின் முன்னணிப் படையினருள் ஒருவராக ஹழ்ரத் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்தார்கள். அத்துடன் அப்படையினரை வழிநடத்துபவராகவும் இருந்தார்கள்.
இவர் 500 ஆண்டுகாலம் உலகை சுற்றி வந்தார் என்றும் ஜூர் என்னுமிடத்தில் மரணமுற்ற இவர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இவர் கீழ்த்திசையிலிருந்து மேல் திசை வரை சென்றதால் இரு கிரணங்களையுடையவர் என்று பொருள்பட ‘துல்கர்ணைன்’ என்று அழைக்கப்படுகிறார்.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமக்காவில் இருந்தபோது அங்கு துல்கர்ணைன் வந்தார். அப்தஹி என்னுமிடத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்க கால்நடையாகவே சென்று சந்தித்தார். அப்போது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களுக்கு சலாம் உரைத்து அவர்களை கட்டித்தழுவி முஆனகா செய்தனர். முஆனகா செய்த முதல் நபர் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே என்று அன்சானுல் உயூன், துரனுல் குரர் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஆபெ ஹயாத் என்பதற்கு உயிர் தண்ணீர் என்பது பொருளாகும். இதனை மாவுல் ஹயாத் என்றும் கூறுவர். அந்நீரை அருந்துபவர் உலகமுடிவுநாள் வரை மரிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அதைத் தேடி கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இவர்களும் சென்றார்கள்.
துல்கர்ணைன் மேற்கு கரையை நோக்கி சென்றார். மரக்கலம்சென்ற இடத்தை அதுவரை யாரும் சென்று அடையவில்லை. தம் படையணிகளுடன் சென்ற இவர்களின் தலைமைக் கொடியை ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூக்கிப் பிடித்து சென்றனர்.
இருண்ட குகை ஒன்றில் ஆபெஹயாத் என்னும் நீர் சுனையை கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்கண்டறிந்து அதன் நீரை அருந்தினர். அதில் உளுச் செய்து இரண்டு ரக்அத் தொழுதனர். அதில் குளிக்கவும் செய்தனர். அந்நீரைப் பருகியதால் நீண்டநாட்கள் வாழும் பேற்றினைப் பெற்றனர்.
தமக்கு முன் சென்ற ஹழ்ரத் ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்நீரை குடித்து விட்டதால் நிராசையாகி சிக்கந்தர் துல்கர்ணைன் திரும்பிவிட்டார்.
மற்றொரு அறிவிப்பின்படி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் சென்று அந்நீரைப் பருகினர் என்றும் கூறப்படுகிறது.
சிக்கந்தர் துல்கர்ணைன் ஒரு நபியல்லர் என்று ஹத்தாதீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகின்றனர். எனினும் அவர் உலக மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்து ஓரிறை வணக்கத்தில் ஈடுபடுத்துபவராக இருந்தார்.
அவர் மக்களை தீனின் பக்கம் அழைப்பதற்காக முதலில் மேற்குதிசை நோக்கி பயணம் செய்தார். பல்வேறு மக்களையும், பல்வேறு நாட்டினரையும் அவர் தீனின்பால் அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டோரை அவர் அங்கீகரித்துக் கொண்டார்.
அவரின் அழைப்பை ஏற்காதோரின் ஊர்களை இருள் கவ்விக் கொண்டது. அதாவது அம்மக்களின் பட்டினங்கள், கோட்டைகள், இல்லங்கள் ஆகியவற்றின் கதவுகள் மூடிக் கொண்டன.
இந்நிகழ்ச்சி பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் (18:86,87,88) என்ற திருவசனங்களில் குறிப்பிடுகிறான்.
இவ்வண்ணம் நாடுகளை வென்று மக்களை தீன் பக்கம் அழைத்தவண்ணம் சிக்கந்தர் துல்கர்ணைன் எட்டு இரவு, எட்டு பகல் கடந்து மலையொன்றினை அடைந்தார்கள்.
அது பூமியைச் சுற்றிலும் இருக்கும் மலையாகும். அதற்கு காப் மலை என்று சொல்லப்படுகிறது. வானவர் ஒருவர் அம்மலையை பிடித்தவண்ணம் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருந்தார். அங்குவந்த துல்கர்ணைன் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்து தமக்கு வலிமை(ஆற்றல்) வழங்குமாறு இறைஞ்சினார். அல்லாஹுத்தஆலா அவருக்கு வலிமையையும் ஆற்றலையும் வழங்கி அருள்புரிந்தான்.
எனவே அவரால் அந்த வானவரைக் காண முடிந்தது. அப்பொழுது அந்த வானவர் அவரை நோக்கி, ஆதமுடைய மக்களில் எவரும் இவ்விடத்திற்கு உமக்கு முன் இதுவரை வந்ததில்லை. அவ்வாறிருக்க உமக்கு மட்டும் எவ்வாறு இங்குவர வலிமை கிட்டியது? என்று வினவினார்.
அதற்கு துல்கர்ணைன், இம்மலையைத் தாங்கும் வலிமையைத் தந்த அல்லாஹு தஆலா தான் எனக்கும் வலிமையைத் தந்தான் என்று விடையளித்தார்.
காப் மலையை காட்டிலும் பிரமாண்டமான மலை வேறெதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. தமக்கு அறிவுரை வழங்குமாறு அவர் அந்த வானவரிடம் வேண்டவே,
1. நாளைய உணவுக்காக இன்றே நீர் கவலையுற வேண்டாம்.
2. இன்றைய வேலையை நாளைக்கெனத் தள்ளிப் போட வேண்டாம்.
3. உம்மிடமிருந்து தவறிவிட்டதற்காக நீர் வருந்த வேண்டாம்.
4. மக்களிடத்தில் கடுகடுப்பாக இல்லாமல் மென்மையாக நடந்து கொள்வீராக! என்று நான்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி கஸஸுல் அன்பியாவில் மிக்க விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தப்ஸீர்கள் அனைத்திலும் இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்திசை படையெடுப்பை முடித்தபின் கீழ்த்திசை நோக்கி படையெடுத்தார். அவர் நாடிச் சென்ற நாட்டை அடைய பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் ஆனால் அதை அவர் குறுகிய காலத்தில் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்நாட்டின் பெயர் ஜாபலக் என்பதாகும். அங்கு வெப்பம் கடுமையாகவும், அங்கு வாழும் மக்களின் தலையிலோ, உடலிலோ, புருவங்களிலோ உரோமங்கள் முளைப்பதில்லை என்றும் ஹழ்ரத் ஹத்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.
அதற்கு பதினாயிரம் தலைவாயில்கள் இருந்தனவென்றும், இரு தலைவாயில்களுக்கு இடைப்பட்ட தொலைவு ஒரு பர்ஸக் என்றும் கூறப்படுகிறது.
சூரிய உதயத்தில் குகைகளுக்குள் நுழைந்து கொள்வார்கள். கடலில் மீன்பிடித்து அதனை உண்டு அவர்கள் உயிர் வாழ்ந்து வந்தார்கள். இம்மனிதர்களை சன்மார்க்கத்தின் பால் துல்கர்ணைன் அவர்கள் அழைத்தார்கள். அங்கு ஒரு பள்ளிவாயிலை கட்டி அதில் மக்கள் தொழுதுவர வேண்டுமென கட்டளையிட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இதன்பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் படையெடுத்தார். இப்பயணத்தின் போது இரு மலைகளுக்கிடையே சென்றார். அம்மலைகளுக்கப்பால் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் பேச்சு விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அதேபோன்று இவர்கள் கூறுவதையும் அம்மக்களால் விளங்ககி; கொள்ள முடியவில்லை.
எனவே சமிக்ஞை மூலமே அவர்களுடன் பேச வேண்டியிருந்தது. அம்மனிதர்கள் துல்கர்ணனை நோக்கி,
قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا
“துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். (18:94)
யஃஜூஜ், மாஃஜூஜ் என்பவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் யாபிதுடைய சந்ததியிலுள்ளவர்கள். இவர்கள் மனிதர்களேயாயினும், மனிதர்களிடம் காணப்படாத பழக்கவழக்கங்களையும், முரட்டுத்தனங்களையும், கொடூரத் தன்மைகளையும் உடையவர்கள் என்பதில் ஐயமில்லை.
இவர்களில் சிலர் மிக உயரமானவர்களாகவும், சிலர் மிகக் குட்டையானவர்களாகவும் இருப்பர். இவர்களின் காதுகளும் மிகப் பெரியதாக அகன்று காணப்படும். உயிர்பிராணிகள் அனைத்தையும் தின்னும் வழக்கமுடைய இவர்கள் தங்களில் இறந்தோரையும் தின்பர் என்று கூறப்படுகிறது.
இவர்களின் அக்கிரமங்களைப் பொறுக்க இயலாத அப்பகுதி மக்கள் இவர்களிடமிருந்து காத்துக் கொள்ள துல்கர்ணனை வேண்டி அதற்காக கூலி தருவதாகவும் சொன்னார்கள்.
அதற்கு துல்கர்ணைன் அவர்கள் எனக்கு கூலி வேண்டாம். இதற்கான மேலான கூலி அல்லாஹ்விடம் எனக்குண்டு என்று சொல்லிவிட்டார்கள்.
மேலும், அவர் அம்மக்களின் கோரிக்கைக்கு இணங்கி எனக்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருப்பின் உங்களுக்கும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் இடையே பெரியதொரு தடுப்பை ஏற்படுத்தித் தருகிறேன் என்று கூறினார்கள்.
பின்னர் அவர் அம்மக்களை நோக்கி, பெரும் பெரும் இரும்புக் கட்டிகளை என்னிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உருக்கி அவை சமமாகக் படிந்த பின்னர் நெருப்பை மூட்டி ஊதுங்கள். அந்த இரும்புக் கட்டிகள் பழுத்து, நெருப்பு போலாகும். அப்பொழுது செம்புப் பாளங்களைக் கொண்டு வந்தால் அவற்றை நான் உருக்கி அந்த இரும்பின் மீது ஊற்றுகிறேன் என்று கூறினார்.
அம்மக்களும் அவ்வாறு கொண்டு வரவே, துல்கர்ணைன் தாம் சொன்னவாறு செய்தார். சுவரை உருவாக்குமுன் நூறு முழம் ஆழத்திலும், ஐம்பது முழம் அகலத்திலும் அடித்தளம் போட்டார்கள். சுவரின் நீளம், மூன்று மைல்கள் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இரண்டு மலைகளுக்கிடையே பெரியதொரு சுவரைக் கட்டி முடித்த துல்கர்ணைன்: இது என்னுடைய இறைவனின் அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும் வேளையில் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.
மலைகளை இணைத்து மாபெரும் சுவர் உருவான பின்பு அவ்வழியே வழக்கம் போல் வந்த யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் தாங்கள் செல்லும் தடத்தில் இடையூறாக ஒரு சுவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அதன்மீது ஏற முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. அதனைத் துளையிட்டு நுழையவும் இயலவில்லை.
இதுபற்றிய செய்திகளை அல்லாஹு தஆலா 18:96-98 ல் குறிப்பிடுகிறான்.
آتُونِي زُبَرَ الْحَدِيدِ ۖ حَتَّىٰ إِذَا سَاوَىٰ بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انفُخُوا ۖ حَتَّىٰ إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا
18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).
فَمَا اسْطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا
18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
قَالَ هَٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي ۖ فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا
18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் நாள்தோறும் அச்சுவரைத் தோண்டுகின்றனர். சுவருக்கு அப்பால் வெளிச்சத்தை அவர்கள் கண்டு, எஞ்சியதை நாளை வந்து தோண்டலாம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் அல்லாஹுத்தஆலா அந்த துவாரத்தை மூடிவிடுகிறான்.
மறுநாள் காலையில் அவர்கள் வந்து பார்க்கும்போது துவாரத்தைக் காணாமல் மீண்டும் தோண்டுவார்கள். இது உலக முடிவு நாள் வரை நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.
உலக முடிவு நாளின் போது யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினரில் ஒருவரை அல்லாஹுதஆலா முஃமினாக்கி விடுவான்.
வழக்கம்போல துவாரமிட்டு வெளிச்சத்தைப் பார்த்தவுடன் அவர், இன்ஷாஅல்லாஹ் நாளை வரலாம் என்று கூறி மற்றவர்களையும் அழைத்துச் செல்வார்.
மறுநாள் அவர், தம் கூட்டத்தினருடன் வந்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று அவர்களைப் பணிப்பார்.
அவர்களும் அவ்வாறே கூறி துவாரமிட்டு நாட்டிற்குள் நுழைந்து விடுவார்கள். அங்கு அக்கிரமம் செய்து கண்டவர்களையெல்லாம் கொல்வார்கள்.
சிக்கந்தர் துல்கர்ணைன் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் சூரத்துல் கஹ்பு என்னும் அத்தியாயத்தில் 83-98 வசனங்களில் குறிப்பிட்டுக் கூறுகிறான்.
இறுதியில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ பொருட்டினால் இந்த கூட்டத்தினர் அழிக்கப்படுவார்கள்.