சகோதர, சகோதரிகளுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
By Sufi Manzil
கேள்வி: நோன்பின் ஜக்காத் தொகையை உடன்பிறப்புகளுக்கு அவர்களின் குழந்தைகளின் திருமண காரியங்களுக்கு கொடுக்கலாமா? இதற்கு இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் பதில் தாருங்கள்.
smk.abdul majeed, s.majeed33@gmail.com
Fri, Aug 5, 2011 at 1:34 PM
பதில்:
ஜகாத் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று. இதன் பொருள் வளர்தல், தூய்மைப்படுத்துதல் என்பதாகும். ஒருவர் தன் உடைமைகளிலிருந்து ஜகாத்திற்குரிய அளவை ஏழைகளுக்கு அறம் செய்வதின் மூலம் அவர் பாவத்திலிருந்தும், உலோபித்தனத்திலிருந்தும் தூய்மை பெறுகிறார். ஜகாஅத்தை நிறைவேற்றிய பரக்கத்தாலும், அதைப் பெற்றவர்கள் செய்த துஆவினாலும் இவரின் செல்வம் மேலும் வளருகிறது. எனவே இதற்கு ஜகாத் என்று பெயர் வந்தது. ஜகாத் கடமையாவதற்குரிய பொருட்கள் ஒருவரிடம் ஓராண்டுக் காலம் இருப்பின் அவர் மீது ஜகாத் கடமையாகும். அதை எப்போதும் கொடுக்கலாம். நோன்பில் கொடுப்பதானது நன்மையை இரட்டிப்பாக்கித் தருவதற்குத்தான். ஆகவே இது நோன்பின் ஜகாத் என்று சொல்வது சரியல்ல. ஜகாத் உடைய சட்டதிட்டங்களை அறிய:
அடுத்து, மனைவி, மக்கள், மக்களின் வழித் தோன்றல்கள் ஆகியோருக்காக குடும்பத் தலைவனும், தாய் தந்தை, தாய் தந்தையின் பெற்றோர் ஆகியோருக்காக பிள்ளைகளும் ஜீவனாம்சம் கொடுப்பது கடமையாகும். இவர்களைத் தவிர உள்ள உறவினர் ஒருவர் மற்றவருக்காக ஜீவனாம்சம் கொடுப்பது உபரியானதாகும். கடமையான ஜீவனாம்சம் போதுமானதாக இல்லாவிட்டால் மட்டுமே ஜீவனாம்சம் கொடுப்பவர்கள் தம்மிடம் ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கு ஜகாத் கொடுக்கலாம்.
ஒருவர் தன் சகோதர, சகோதரிகளுக்கு அன்றாடம் போதுமான அளவு ஜீவனாம்சம் கொடுத்தாலும் தமது ஜகாத் பணத்தை அவர்களுக்கு ஜகாத் ஆகவும் கொடுக்கலாம். ஏனெனில் சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்படுபவை உபரியான ஜீவனாம்சம் ஆகும்.
கடமையான ஜீவனாம்சம் போதுமானதாக இருந்தாலும் ஃபகீர், மிஸ்கீன் என்ற காரணம் தவிரவுள்ள வழிபோக்கர், போராளி, கடனாளி போன்ற மற்ற காரணங்கள் கொண்டு ஜீவனாம்சம் கொடுப்பவர்களிடமிருந்தே ஜகாத் பெறலாம்.
மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுப்பதோடு கணவன் ஏழையாகவும் மனைவி செல்வமுள்ளவளாகவும் இருந்தால் மனைவி தன் ஜகாத் பொருளை கணவனுக்குக் கொடுக்கலாம். இது சுன்னத் ஆகும்.