குர்ஆனில் பொருளியல்
By Sufi Manzil
முன்னுரை:
ஏக வல்லோனாம் இறையோனைப் போற்றி இரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபி மீது நலவாத்து ஓதி ஆரம்பம்செய்கிறேன். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள். ‘பொருளும் ஆண்மக்களும் இவ்வுலக வாழ்வின் அலங்காரமாகும். நிலைத்திருக்கம்படியான நற்செயல்கள்தாம் உம்முடைய ரப்பிடத்தில் நன்மையில் சிறந்தவை’என்று குர்ஆனில் 18:46ல் அல்லாஹ் கூறுகிறான். வேத நூல்களில் கடைசியானதும், முடிவானதும், முத்திரையானதும, எல்லா வேதங்களின் சாரமும், சத்துமாக விளங்குவதும், எக்காலத்திற்கும் பொருந்துவதுமான இறைமறை அல்குர்ஆனில் பொருளியல் பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
பொருள் தேடுதல்:
இறைவணக்கத்திற்கு அடுத்தபடியாக இஸ்லாமிய வாழ்வில் இடம் பெறும் முக்கியமான அம்சம், தன் குழும்பத்தை செம்மையாக நடத்த ஒருவன் நேரான வழியில் பொருள் தேடுவதாகும். இதையேத்தான் அல்குர்ஆனும், ஆண்கள் உழைத்துச் சம்பாதிப்பது ஆண்களுக்குரியவை, பெண்கள் உழைத்துச் சம்பாதிப்பவை பெண்களுக்குரியவையாகும். எனவே, ஆண் பெண் இருபாலரும் உழைப்பின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைத் தேடுங்கள் என்று 4:32 வசனத்தில் கூறுகிறது.
வறுமை:
இல்லாமை என்னும் ஏழ்மை இறையச்சம் குறைந்தவர்களை குப்ரில் ஆக்கிவிடும் என்பது உண்மை. தன் குடும்பம் வறுமையில் வாடுவதைக் கண்டு ஷைத்தான் அவன் மனதைக் கலைத்து இறைவனை குறைகாண வைத்து விடும். எனவே மனிதன் உழைக்க வேண்டும். அதைக் கொண்டு தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு அவன் உழைக்கும் அளவேயன்றி உயர்வில்லை என்று குர்ஆன் 53:39 கூறுகிறது. எல்லாம் விதிப்படி நடக்கும் என்று கையை கட்டிக் கொண்டு இருப்பவனை இறைவன் நேசிப்பதில்லை.
வட்டி:
அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை தழைக்க வைக்கிறான் என்று குர்ஆன் 2:276 கூறுகிறது. வட்டி வாங்கி வயிறு கழுவுவது நேர்மையான பிழைப்பல்ல என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கி வைத்துள்ளான் என்று குர்ஆன் 2:275 கூறுகிறது. வட்டியால் பொருள் பெருகுவது போல் தெரிந்தாலும், அதில் இறைவனின் அபிவிருத்தி இருக்காது. ஏழை மக்கள் உழைத்து ஓடாகி கடனை அடைக்க முடியாமல் வட்டி என்னும் சாகரத்தில் மூழ்கி தத்தளிக்கிறார்கள். இந்த அவலநிலை நீங்க வேண்டுமானால் பணம் படைத்தவர்கள் மனம் திறந்து ஏழைகளுக்கு வட்டியில்லாது கடன் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
வாணிபத்தில் நேர்மை:
மக்களே! அளவையும், நிறுவையையும் குறைக்காதீர்கள். அளவிலும், நிறுத்தலிலும் நீதத்தை கையாளுங்கள் என குர்ஆனின் 11:84 கூறுகிறது. அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்து வாங்குகிறார்கள். மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தால் குறைத்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? என்று குர்ஆனில் 86: 1, 2, 3 ல் அல்லாஹ் எச்சரிகின்றான்.
வாணிபத்தில் கணக்கு வழக்கு:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையில் ஈடுபடும் கொடுக்கல், வாங்கல்களை எழுதிக் கொள்ளுங்கள். அன்றியும் அது சிறிதாயினும் பெரிதாயினும் அவ்வப்போது எழுதிக் கொள்ளுங்கள். தவணை வரும் வரையில் அதனை எழுதச் சோம்பல்பட்டு இருந்து விடாதீர்கள் என்று குர்ஆன் 2:28ல் கூறுகிறது. குர்ஆன் வாணிபத்தின் ஒரு சிறு பக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. மனிதனின் மறதியின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.
இலஞ்சம்:
உங்களுக்கிடையில் ஒருவர் மற்றொருவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். மற்ற மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் உண்ணுவதற்காக நீங்கள் உங்கள் தரப்பில் நியாயமில்லை என அறிந்திருந்தும் இலஞ்சம் கொடுக்க அதிகாரிகளிடம் செல்லாதீர்கள் என்று குர்ஆன் 2:188 கூறுகிறது. எத்துணை தூர நோக்குடன் தூய நோக்குடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலஞ்சத்தை குர்ஆன் எச்சரித்திருக்கிறது. பார்த்தீர்களா?
பேராசை:
செல்வங்கள் மேலும் மேலும் பெருக வேண்டும் என்று நீங்கள் பேராசை கொண்டு அதிகமாக தேடுவதானது அல்லாஹ்வை விட்டும் உங்களை பாராமுகமாக்கி விட்டது என குர்ஆன் 102:1 ல் கூறப்பட்டுள்ளது. தாகத்துக்காக கடல் நீரை அருந்தும் மனிதனின் தாகம் ஒருபோதும் தீராது. மேலும் மேலும் அது அதிகரிக்கவே செய்யும். அதன் மீது ஆசை அளவோடு இருக்க வேண்டும்.
Money is a Good Servant but a bad Master என்று ஆங்கிலப் பழமொழி உண்டு. பணம் நமக்கு பணி செய்யட்டும். நமக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால் அதற்கு நாம் அடிமையாகிவிட்டால் கப்ருகளை சந்திக்கும் வரை அதன் அடிமைத்தளையிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்ள முடியாது.
ஜகாத்:
பல பாவங்கள் பொருளை தேடுவதிலும் அதை சேமிப்பதிலும் ஏற்படுகின்றன. தன் சம்பாத்தியத்திலிருந்து ஆண்டவன் விதித்த தான தருமத்தை கொடுக்க மறுப்பவன் பாவியாகிறான். பாவத்தை விட்டும் தன்னை பரிசுத்தப்படுத்தியவன் வெற்றியடைந்து விட்டான் என்று குர்ஆன் 87:14ல் கூறுகிறது. முஃமின்கள் திட்டமாக வெற்றியடைந்து விட்டார்கள். அவர்கள் எத்தகையோரென்றால் ஜகாத்தை நிறைவேற்றுவார்கள் என்று குர்ஆன் 18:4ல் கூறப்பட்டுள்ளது. தேடிய பொருள் தூய்மையடைவதற்காக ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் பரக்கத் என்னும் அபிவிருத்தியும் ஏற்பட்டு ஏழை, எளியவர்களின் துயரும் துடைக்கப்படுகிறது.
தொழிலில் ஏற்றத்தாழ்வு:
வாணிபம் செய்யும் ஒருவனுக்கு இறைவன் எந்த வழியில் இலாபத்தை கொடுக்கிறான் என்பது சிலசமயம் வியாபாரிக்கே புலப்படாது. தானியத்தை பெருமளவில் கொள்முதல் செய்து வியாபாரம் செய்வான். ஆனால் இலாபம் அடையாமல் போட்ட முதல் கிடைத்தால் போதும் என்ற நிலையாகிவிடும். ஆனால் தவிடை வாங்கி ஒருவன் விற்பான். இலாபத்தில் அவனது பணப்பை நிரம்பிவிடும். பைசாவுக்கு பாக்கு பொட்டலம் போட்டு பணக்காரர் ஆனவர்களும், நகைக்கடை வதை;து நஷ்டப்பட்டவரும் நம் கண்ணெதிரேயே வாழ்ந்திருப்பார்கள். எனவே வியாபாரத்தில் ஏற்றதாழ்வு இல்லை. எனவே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உழைத்தால் வெற்றி நிச்சயம். இதையேதான் அல்குர்ஆனும் அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவனாகவும் மிகச் சிறந்த பாதுகாவலனாகவும் இருக்கிறான் என்று அவர்கள் கூறுபவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் மேன்மையையும் பெறுவார்கள். எந்த தீங்கும் அவர்களை தீண்டாது என்று குர்ஆன் 3:174ல் கூறுகிறது.
சிக்கனம்:
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாக அவற்றில் அவனுடைய பாகத்தையும் கொடுத்து விடுங்கள். ஆனால் வீண் செலவு செய்யாதீர்கள். ஏனெனில் வீண் செலவு செய்வோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை எனக்குர்ஆன் 6:141ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிக்கனமாக இருப்பதற்கும், சிக்கென முடிந்து வைத்துக் கொண்டு கஞ்சனாக வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இஸ்லாம் உலோபிகளை ஒரு போதும் விரும்புவதில்லை. மாறாக வெறுக்கிறது. செலவு செய்வதில் சிக்கனமாக இருப்பது, சம்பாத்தியத்தில் சரிபாதி என்று எம் பெருமானார் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். ‘A Penny Saved is a Pennu Earned’ என்பது ஆங்கிலேயப் பழமொழி.
கலப்படம்:
பணம், பணம் என்று பஞ்சாய்ப் பறக்கும் மனிதன் தன் சக சகோதரர்களுக்கு கேடு விளையுமே என்று கூட பாராது, அத்தியாவசியப் பொருள்களில் கலப்படம் செய்து, அதை திறமையான வாணிபம் என நினைத்து பொருள் சேர்க்க அலைகிறான். நாட்டு மக்களின் நல வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய வியாபாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எனவேதான் இறையச்சத்தை ஊட்டி இந்த தீய தொழிலை தடுக்க வழி சொல்கிறது குர்ஆன். எவர் ஓர் அணுவளவேனும் நன்மையைச் செய்தாலும் அதன் பயனைக் கண்டு கொள்வார். இன்னும் எவர் அணுவளவு தீமை செய்தாலும் அதன் பலனை கண்டு கொள்வார்’என்று குர்ஆன் 99:7, 8 கூறுகிறது.
சொத்து:
மனிதன் உழைப்பதும் பொருள் சேர்ப்பதும் தன் உணவுக்கும், வசதிக்காகவும் மட்டுமல்ல. தன்னைச் சார்ந்தோரும், சந்ததியும் சுபிட்சமாக வாழ வேண்டும். தான் விட்டுச் செல்வதில் தன் சந்ததியினருக்கு பங்கிருக்க வேண்டுமென்று விரும்புகின்றான். ஆனால் யார், யார் என்னென்ன பங்கினைப் பெறவேண்டுமென்பதில் பல சமய நூல்களும், நீதி நூல்களும் கவனம் செலுத்தவில்லை. மரபு வழியாக பன்னெடுங்காலமாக தந்தை விட்டுச் செல்லும் சொத்து ஆண் மக்களுக்கே உரியது என்ற ஒரு தலைப்பட்ச நியதியே இருந்து வந்தது. கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளாகத்தான் இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக பல நாடுகள் சட்டங்கள் இயற்ற ஆரம்பித்தன. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்துக்கு இந்த துறையில் எந்த சட்டமும் தேவையில்லை. ஏனெனில்,
‘இறந்து விட்ட பெற்றோரோ, உறவினரோ விட்டுச் சென்ற சொத்திலிருந்து ஆண்களுக்கும் பாகம் இருக்கிறது. பெண்களுக்கும் பாகம் இருக்கிறது’என்று பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்ணினத்திற்கு நீதி வழங்கி அல் குர்ஆனில் 4வது அத்தியாயம் 7வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
வாழ்வும், பொருளும்:
அல்லாஹ்தான் காப்பவன், இரட்சிப்பவன், உணவளிப்பவன் என்னும் உண்மையை மறந்து விட்டு பணம் ஒன்றையே தங்களின் சிந்தனையிலும் செயலிலும், பேச்சிலும், மூச்சிலும் குடியேற்றி அதை தங்கள் பாதுகாவலனாக கொண்டவர்கள் எதைக் கண்டு விட்டார்கள். உணவு, வசதி, சொத்து, சுகங்கள் ஆகியவற்றை அல்லாஹ் மனிதனுக்கு கொடுக்கும்போது மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை. தன்னுடைய புத்தி சாமர்த்தியம், திறமை, துணிச்சல் போன்ற தன்மைகளினால் அல்லவா இவை தனக்குக் கிடைத்திருக்கின்றன என பெருமையடைகிறான். உங்களுக்கும், நீங்கள் உணவளிப்பவர்களாக எவற்றிற்கு இல்லையோ அதற்கும் வாழ்வுக்கு வேண்டிய அனைத்தும் நாமே அமைத்தோம்’ என்று குர்ஆன் 15: 19, 20 கூறுகிறது.
மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். இதையேதான் குர்ஆனின் 68வது அத்தியாயம் 23வது வசனத்தில் இறைவன் நம்மை நோக்கி, ‘நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்’என்று கூறுகிறான். எனவே பொருளை இறைமறை வழியிலும், இரஸூல் நபி வழியிலும் தேடி நல்ல வழிகளில் செலவழித்து இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்ந்து இம்மை, மறுமை பேறுகளை அடைந்து கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வானாக. ஆமீன். யாரப்பல் ஆலமீன்.