குத்பாகப் பிறந்தோரே…

குத்பாகப் பிறந்தோரே…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

குத்பாகப் பிறந்தோரே

       கௌதாகச் சிறந்தோரே

கத்தனின் அர்ஷு தனில்

       முத்தாக ஜொலிப்போரே

மஹ்பூபே சுப்ஹானி

       மஃசூக்கே ரஹ்மானி

கிந்தீலே நூரானி

       நிகரில்லா ஃபர்தானி!

வானமும் பூமியும்

       அர்ஷுடன் குர்ஸெல்லாம்

உமைத் துதித்து பாடிடுமே

       இறையருள் பெற்றிடுமே

வானவர் கோமானும்

நன்னபிகள் சீமானும்

வான் புகழ் ஹிழ்ரும்

       வந்து ஸலாம் கூறிடுவார்

ஆதவனும் நாணமுறும்

       முழு மதியம் மங்கி விடும்

ஜோதியின் மறு பெயராம்

       ஜீலானியின் உதயத்தால்!

ஞானத்தின் செங்கதிர்கள்

       ஞானிலத்தின் பரவிடவே

மோன நிலையில் கடந்துயர்ந்து

       மெய் நிலையில் நிலைத்தீரே!

கானகம் சென்றீரே

       கடுந்தவம் செய்தீரே

காவியம் ஆனீரே

       குவலயம் காத்தீரே!!

உம் பாதம் சுமந்திட்டோர்

       நற்பேறு அடைந்திட்டார்

இமைப் போல உம்மத்தை

       இமயமாய் காத்திட்டார்

மையித்தும் எழுந்திடுமே

       உம் ஆணை வெளிப்பட்டால்

மய்யித்தார் விழுந்திடுவார்

       உம் போதனைச் செவியுற்றால்!

தீனோரின் ரீங்காரம்

       தீன் ஸபைக்கு அலங்காரம்

மேதினிக்கு உபகாரம்

       தைய்யானிடம் புகழாரம்!

உயிரில்லா சடலத்தை

       ரூஹில்லா வணக்கத்தை

உயர்ப் பொங்கும்  சுடரொளியால்

       சீரிலங்கச் செய்தீரே!

ஷஃபாஅத்தின் சங்கீதம்

       இப்போதே தாருமய்யா

ஷிஃபா தனை வேண்டியே

       இருகரம் ஏந்துகிறோம்!

மஹ்ஷரின் வெப்பத்தை

       வெறுமையாய் ஆக்கிடுவீர்

மாஷர்ரின் கடுமைதனை

       மறைத்தே னீர்ப் போக்கிடுவீர்

நாசம் தரும் நரகத்தை

       கடும் கப்ரின் மோசத்தை

பாசம் தரும் இரக்கத் தால்

       இரைந்தே னீர் நீக்கிடுவீர்!

ஜீலானின் புதல்வராகப்

       பக்தாதின் முதல்வராய்

 மேலான அல்லாஹ்வின்

       தத்துவ ரகசியமாய்

நாதனின் தர்பாரில்

       வீற்றிருக்கும் முஹ்ய்யிதீன்

நீதர் முஹம்மதுவின்

       குல விளக்கு வலியுத்தீன்

மாந்தரின் இன்னலை

       கானலாய் மாற்றிடுவீர்

மாதவம் செய்தோரே

       மன்றாடிக் காப்பீரே!

(குத்பாக…)

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.