காணக் கண் கோடி…

காணக் கண் கோடி…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

காணக் கண் கோடி

       வேண்டும் கஃபாவை

ஹஜ்ஜுக் காட்சிக் கிணையாக

       உலகில் எதுவுமே இல்லை!

தீனோர்கள் கூடு மிடம்

       திரு நபிகள் பிறந்த இடம்

வானோர்கள் வாழ்த்தி நிற்கும்

       வல்லோனின் புனித இடம்

இதயம் கவருமிடம்

       இன்பமெல்லாம் பொங்குமிடம்

வதைக்கும் பாவமெல்லாம்

       ஓடி மறையும் ஒரே இடம்

லட்சக் கணக்கில் மக்களையெல்லாம்

       அங்கே காணலாம்

லட்சியத் தூதர் இப்றாஹீம் நபி

       தலத்தைக் காணலாம்

தூய்மை நிறைந்த ஹஜ்ருல் அஸ்வத்

       கல்லைக் காணலாம்

துன்பம் நீக்கும் ஜம்ஜம் கிணற்றை

       அங்கே காணலாம்

அன்னை கதீஜா நாயகியாரின்

       கோட்டையைக் காணலாம்ளூ

لَبَّيْكْ لَبَّيْكْ اَللّٰهُمَّ لَبَّيْكْ

       اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ

لَكَ وَالْمُلْكُ لَبَّيْكْ  لَاشَرِيْكَ لَكْ

       لَبَّيْكْ لَبَّيْكَ .

தல்பியாவை முழங்கிக் கொண்டே

       வலம் வரும் கூட்டம்

தன்மை ஓங்கும் இறைவன் அருளே

       அவர்களின் நாட்டம்

கல் மனம் உருகும் துஆவைக் கேட்டு

       கண்ணீர்ப் பெருகுமே

கல்பினில் பக்தி ஆகிய நூரே

       எழும்பும் எப்போதுமே

காவலன் அல்லாஹ் நினைவு எழுந்து

       கவலையும் தீருமே –எல்லாக்(2)

(لَبَّيْكْ)

துல்   ஹஜ் மாதம் எட்டாம் பிறையில்

       மக்காவில் இருந்தே

துல்லியமான இஹ்ரா மென்னும்

வெண்ணாடை அணிந்தே

மினாவலிருக்கும் மஸ்ஜிதில் கைபில்

கூடாரம் அடித்து

மேன்மை வாய்ந்த ஐந்து வேளைத்

தொழுகையை முடித்து

மேதினில் போற்றும் தௌஹீத்

       நெறியை மேலாய் மதிப்பார்கள் !

(لَبَّيْكْ)

அடுத்த நாளில் அரபாத் அடைந்து

       ஜபலர் ரஹ்மத்திலே

அரும்பகல் கழித்து கண்ணீர் வடித்து

       துஆவும் ஓதியே

அன்று இரவு மஜ்தலிபாவில்

       அனைவரும் தங்குவார்

அருளாம் மக்ரிபு இஷாவும் தொழுது

       திக்ரும் முழங்குவார்

அமைதியாகத் தொழுது முடிந்ததும்

       ஆயத்த மாகிடுவார்! (2)

 (لَبَّيْكْ)

அடுத்து கல்லைப் பொறுக்குவார்கள்

       ஷைத்தானை விரட்ட

அழகுறும் மினா சென்று அங்கே

       கூடுவார் யாவரும்

எடுத்தக் கல்லை வீசி எறிவார்

       ஷைத்தான் மீதிலே

இங்கித ஹாஜிகள் குர்பானிக் கொடுத்து

       தலை முடி நீக்கிடுவார்

இஹ்ராம் என்னும் வெண்ணிறை

       ஆடையைக் களைந்திடுவார்களே!

 ( لَبَّيْكْ)

அன்று மாலை மக்கா வந்து

       தவாபு செய்த பின்னே

அழகிய ஸபர் மர்வா யென்னும்

       மலைக்கு இடையினிலே

ஆர்வமுடனே ஏழு முறைகள்

       தொங்கோட்டம் ஓடியே

மீண்டும் புனித மினாவுக்கு வந்து

       இரு தினம் தங்கியே

மறுபடியும் கல்லை எடுத்து எறிவார்

       ஷைத்தானை நோக்கியே!

لَبَّيْكْ

அற்புதமான ஹஜ்ஜை முடித்த

       ஹாஜிகள் எல்லோரும்

அன்று பிறந்தக் குழந்தையைப்

       போல பாவம் நீங்கிடுவார்

நற் பயன் தந்திடும் கஃபா வந்து

       தவாபு செய்திடுவார்

நாயன் அல்லாஹ்வின் கடமை

       முடித்த நன்மை எய்திடுவார்

நிறைவு செய்த ரஹ்மானுக்கே

       நன்றிகள் கூறிடுவார் – மகிழ்ந்து (2)

لَبَّيْكْ

இறுதி கடமையை பூர்த்தி செய்த

       ஹாஜிகள் யாவரும்

இதயந் தன்னில் தூய்மையான

       ஆர்வங் கொண்டவராய்

மறை நபி முஹம்மது ரசூலுல்லாஹ்வின்

       மதீனா நகர்ச் சென்று

மனிதருள் மாணிக்கம் அண்ணல்

       நபியை ஜியாரத் செய்திடுவார்

மனங் கனிந்து கண்ணீர் வடித்து

       ஸலாமும் கூறிடுவார்!

இதய ஸலவாத் ஓதிடுவார்! (2)

யா நபி ஸலாம் அலைக்கும்

       யாரசூல் ஸலாம் அலைக்கும்

யா ஹபீப் ஸலாம் அலைக்கும்

       ஸலவாத் துல்லாஹி அலைக்கும்!

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.