கனவுகளே… கனவுகளே…
By Sufi Manzil
இன்றைய விஞ்ஞானம் கனவைப் பற்றி அது நம் நினைவுகள் மற்றும் சிந்தனைகளின் பிம்பங்கள் என்றும் நாம் தூங்கும் சமயம் நமது மூளை மிகக் குறைந்த அளவில் வேலை செய்யும் போது அதில் தோன்றும் சில படக்காட்சிகள் என்றும் பல விதமான கருத்துக்கள் கூறுகின்றது.
அறிஞர் பெருமக்கள் கனவைப் பற்றி விளக்கம் தருகிற போது “விழித்திருக்கும் ஒரு மனிதனின் உள்ளத்தில் அல்லாஹ் சில விளக்கங்களை உருவாக்குவது போன்றே, தூங்கும் மனிதனின் உள்ளத்திலும் சில விளக்கங்களைப் போடுகின்றான். அதுவே கனவாகும்”.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உற்ற நண்பர் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்
اللَّهُ يَتَوَفَّى الْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا ۖ فَيُمْسِكُ الَّتِي قَضَىٰ عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَىٰ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
- அல்-குர்ஆன் 39:42
என்ற வசனத்திற்கு கீழ்கண்டவாறு விளக்கம் தருகிறார்கள். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா) -வும் ரூஹ் (உயிர்) – ம் உள்ளன. நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளன. ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளன. மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. ரூஹ் தனது அசையும் தன்மையால் அந்நேரத்தில் சுற்றித் திரிகிறது. அப்பொழுது அந்த ரூஹிற்கு மற்ற ரூஹ்களுடன் நடைபெறும் சம்பாஷனைகள் மற்றும் நிகழ்ச்சிகளே கனவுகளாகும். (நூல் : குர்துபி)
சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.
நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.
இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இதைத்தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் இருக்கும் நிலை என்கிறார்கள்.
கனவைப் பற்றிய ஹதீஸ்கள்
கனவு பற்றி நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்: “நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : ஸஹீஹுல் புஹாரி (பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் – 6983)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ ஸஈதினில் குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் எவரேனும் தனக்கு பிடித்தமானதை கனவில் கண்டால் நிச்சயமாக அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும். எனவே அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். மேலும் அதை அவர் யாரிடமேனும் கூறட்டும்” என்றும் வேறு அறிவிப்பில் “அவர் அந்த கனவை தன்னை விரும்பக் கூடிய, (தனக்கு நல்லதையே நாடக்கூடிய) அறிஞரான (இறையச்சமுடையவர்களில்) ஒருவரிடம் கூறட்டும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (நூல் : புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ கதாதா (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள். “நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தான் புறத்திலிருந்து வருவதாகும். எனவே உங்களில் ஒருவர் தனக்கு பிடிக்காத கெட்ட கனவு கண்டால் அவர் தனது இடது புறமாக (எச்சில் வராதவாறு) மூன்று முறை துப்பிக் கொள்ளட்டும். மேலும் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும். (அப்படி செய்தால்) அந்த கனவால் அவருக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது.” ( நூல் : புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘கெட்ட கனவு கண்டவர் தான் படுத்திருக்கும் முறையை மாற்றிக் கொள்ளட்டும்’ (நூல் : முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘கெட்ட கனவு கண்டவர் அதை யாரிடமும் கூற வேண்டாம். அவர் எழுந்து தொழுது கொள்ளட்டும்.’ (நூல் : திர்மிதி)
ஹழ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ ரஜீன் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘கனவு என்பது அதற்கு விளக்கம் கூறப்படாத வரை ஒரு பறவையின் காலில் கட்டப்பட்டதைப் போன்றிருக்கிறது. (அதாவது உறுதியாக தரிபடாததாக உள்ளது). யாரேனும் விளக்கம் கூறினால் அது நிகழ்ந்து விடும். (நூல் : திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “யார் கனவை பொய்யாக கூறுவாரோ கியாமத் நாளில் அல்லாஹு தஆலா இரண்டு கோதுமைகளை அவரிடம் கொடுத்து (இரண்டு கயிறுகளுக்கு மத்தியில் முடிச்சு போடுவதைப் போன்று) ஒரு கோதுமையை மற்றொன்றில் முடிச்சு போடச் சொல்லி நிர்ப்பந்திப்பான். (நூல் : இப்னு ஹிப்பான்)
ஹழ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ ஸஈதினில் குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கும் கீழ்காணும் ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. ‘கனவுகளில் மிக உண்மையானது ஸஹர் நேரங்களில் காணப்படும் கனவுகளாகும்.’ (நூல் : திர்மிதி)
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நற்செய்தி கூறுகின்றவை தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று நபி { ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } கூறிய போது, மக்கள் “நற்செய்தி கூறுகின்றவை என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி { ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள் “நல்ல கனவு” என்று விடை பகர்ந்தார்கள். ( நூல்: புகாரி )
இதன் அடிப்படையில்தான் கனவைப் பற்றி ஆரிபுபில்லாஹ் முஹம்மது காசிம் மரைக்காயர் என்ற சித்தி லெவ்வை மரைக்காயர் அவர்கள் தமது ‘அஸ்ராருல் ஆலம்‘ என்ற நூலில் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்கள்.
கனவு மூன்று வகைப்படும்.
முதலாவது நேர்வழி நடப்பவர்களுக்கு அல்லாஹுத் தஆலாவிடமிருந்து உண்டாகும் நற்செய்தி இது புஷ்றா எனப்படும்.
இரண்டாவது தன் மனதைக் கொண்டு உண்டாகும் கனவு.
மூன்றாவது ஷைத்தானின் தூண்டுதலால் வரும் கனவு.
நேர்வழி நடப்போருக்குத் தெரியும் கனவு நபித்துவத்தில் (நுபுவத்தில்) நாற்பத்தாறில் ஒரு பங்காய் இருக்கும் என நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
அல்லாஹுத்தஆலா கனவுக்காக அமரர் ஒருவரை திட்டப்படுத்தியுள்ளான். அவர் பெயர் ரூஹு என்பதாகும். அவர் கீழ்வானத்துக்குரியவர். தூங்குபவர்களுக்குத் தெரியும் உருவங்கள் எல்லாம் அவர் கையிலிருக்கும். ஒருவன் தூங்கினால் அல்லது தூங்காமல் தன்னை மறந்தவனாக இருந்தால் அல்லது ‘நாஸ்தி’யின் நிலையிலிருந்தால் அப்போது அந்த அமரர் காட்டுபவை விழிப்பேற்பட்டதும் நினைவுக்கு வரும்.
இதில் மூன்று பதவிகளுண்டு. முதலாவது அவனிருக்கும் தானத்தையும், அவன் எண்ணங்களையும் விளக்கும் கனவு.
இரண்டாவது அவனது நிலையைக் காட்டும் கனவு.
மூன்றாவது சன்மார்க்க ஞானங்கள் வெளியாகும் கனவு.
இவற்றில் பூரண அழகுமிக்க உருவமாகக் காட்சியாகித் தன்னுடன் அது பேசவும், தான் அதற்கு மரியாதை காட்டி பணிவுடன் இருக்கக் கண்டால் அது உண்மையான அமரர் தோன்றும் கனவாய் இருக்கும். அழகிய உருவங்களையும் அவலட்சணமான உருவங்களையும் கண்டால், அது தன் நிலையை வெளியாக்கும் கனவாகும்.
தனக்கு முன் நடந்த காரியங்களைச் சேர்ந்த கருமங்கள் தெரிந்தால் அது தன் கீழான மனத்தைக் கொண்டு உண்டான கனவாய் இருக்கும். பயங்கரமானவையும், வெறுக்கப்பட்டவையும் தெரிந்தால் அது ஷைத்தானால் உண்டானது என அறிந்து கொள்ளலாம். இத்தகைய கனவைக் கண்டு விழித்தவன் எழுந்ததும் இடப்புறம் திரும்பி மூன்று தடவை துப்பிவிட்டு, அல்லாஹுத்தஆலாவிடம் அதன் தீங்கை விட்டும் கார்மானம் தேடும்படியும், அப்படிச் செய்தால் தீங்கு எதுவும் வராது என்றும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
கெட்ட கனவு காண்பவன் அதைப் பிறரிடம் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் அவ்விதமே நடந்து விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
கனவு காணாத ஒருவன் ‘நான் இன்னவிதம் கனவு கண்டேன்’ என்று பொய் சொல்வானாயினும் கேட்பவனுடைய மனத்தில் இவனுக்கு நடக்கவிருக்கும் காரியம் உற்பத்தியாகி இவன் சொன்னபடி நடந்துவிடும். இதற்கு ஆதாரமாவது: யூஸுபு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருவர் தாங்கள் கனவு காணாமல், இன்னவிதமாக நாங்கள் கனவு கண்டோம் என்று சொன்னதும், யூஸுபு நபியின் எண்ணத்தில் அவர்களுக்கு நடக்கவிருப்பது உற்பத்தியாகி அந்த விளக்கத்தை அவ்விருவரிடமும் கூறினார்கள். அவ்விருவரும், ‘நாங்கள் இப்படி கனவு காணவில்லை. தங்களை சோதிப்பதற்காகவே இப்படி சொன்னோம்’ என்றனர். யூசுபு நபியவர்கள், ‘நீங்கள் வரவிருப்பதை உரைக்கும்படி கேட்டதால் நான் சொன்னேன். அது தீர்ப்பாகிப் போய்விட்டது’ என்று கூறிவிட்டார்கள். அவர்கள் சொன்னபடியே அவ்விருவர் விசயத்திலும் காரியங்கள் நடந்து விட்டன.
தனக்கு ஒரு பாலகன் பிறப்பதாக ஒருவன் கனவு கண்டு, அந்தக் கனவைக் கொண்டு தன் முதுகந்தண்டில் அந்தப் பாலகனின் உருவமுள்ளதாய் பாலகன் சமைந்து, அது தாயின் வயிற்றில் கர்ப்பமாகிப் பிறந்தால் அது கனவுக்குரிய பாலகனாகும். அந்தக் குழந்தைக்கும் மற்றக் குழந்தைகளுக்கும் வேற்றுமை இருக்கும். இந்தப் பாலகன் ‘ரூஹானிய்யாவின் குணம் உடையவனாக இருப்பான். இதற்கு ஆதாரம், நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பைப் பற்றி அன்னை ஆமினா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கண்ட கனவேயாகும் என்று இப்னு அரபி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
கனவிற்கு விளக்கம்
ஹழ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம் நீங்கள் யாரேனும் கனவு கண்டீர்களா? என்று கேட்டு அதற்கு விளக்கம் கூறுபவர்களாக இருந்தார்கள். ஹழ்ரத் யூஸுஃப் (அலைஹி ஸலாம்) அவர்கள் கனவிற்கு விளக்கம் கூறிய நிகழ்ச்சிகள் குர்ஆனிலும் இடம்பெற்றுள்ளன. இதனடிப்படையில் கனவிற்கு விளக்கங்கள் உண்டு. ஆனால் விளக்கம் கூறுவதற்கு அதைப் பற்றிய ஆழ்ந்த கல்வி ஞானமும் மாசற்ற இறையச்சமும் அதிகம் தேவை.
அல்குர்ஆனில் ஆதாரம்:
கனவிற்கு விளக்கம் சொல்லும் தகுதியை அல்லாஹ் சிலருக்கு கொடுத்திருக்கிறான். இத்தகுதி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும்போது,
وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ ؕ
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் – 12:6.
وَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِؕ
இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்.- 12:21
رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ ۚ
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய் – 12:101
கனவு என்பது இரு வகைப்படும். 1. நபிமார்கள் காணும் கனவுகள். 2. சாதரண மனிதர்கள் காணும் கனவுகள்.
இதில் சாதாரண மனிதர்கள் காணும் கனவுகளில் ஷைத்தான் குறுக்கிட வழியுண்டு. ஆனால், நபிமார்களின் கனவுகளைப் பொறுத்தவரை அது வஹீ இறைச் செய்தியாகும். ஷைத்தானுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது. மேலும், நபிமார்கள் காணும் கனவு கண்டிப்பாக நடந்தே தீரும். உதாரணமாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களது மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கனவில் அறுத்துப் பலியிடுவது போல் கண்டது.
அல்லாஹு சுப்ஹானஹுவத்தஆலா ஸூரத்து யூசுபில் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சரித்திரத்தைக் குறிப்பிடும்போது கனவுகளைப் பற்றியும், அதற்குரிய விளக்கத்தைப் பற்றியும் கூறுகிறான்.
‘ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்’ தில் இப்றாஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்;கள் தம் மகனை பலியிடுவதாக கனவு கண்டதைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰىؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” -37:102
நபிகளார் கண்ட கனவுகளும் அதற்குரிய விளக்கங்களும்
இதேபோன்று கனவுகளுக்கு விளக்கம் சொல்லுவதில் மிகவும் முதன்மை பெற்றவர்களாக நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்கள் கனவுக்கு விளக்கம்; சொன்ன கனவுகளில் சில:
பத்ரு போரில் வெற்றி பெறுவதாக கனவு காணுதல்
اِذْ يُرِيْكَهُمُ اللّٰهُ فِىْ مَنَامِكَ قَلِيْلًا ؕ وَّلَوْ اَرٰٮكَهُمْ كَثِيْرًا لَّـفَشِلْـتُمْ وَلَـتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَلٰـكِنَّ اللّٰهَ سَلَّمَؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
அல்-குர்ஆன் 8:43
புனித மக்காவிற்கு உம்றா செய்வதாக கனவு காணுதல்
لَـقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَـقِّ ۚ لَـتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَـرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَؕ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்;, (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் – (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்.-அல்-குர்ஆன் 48:27
மக்கா வெற்றியின் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்கள்தம் தோழர்களும் மக்காவில் நுழைந்து உம்றா செய்ததை இந்த ஆயத்து கூறுகிறது.
லைலத்துல் கத்ர் இரவு பற்றி கனவு காணுதல்
ஹழ்ரத் அபூ ஸயீத் (ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்: ‘நாங்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடன் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் எங்கள் பொருட்களைச் சேகரித்துக் கொண்டோம். அப்போது எங்களுடன் வந்த நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், ‘யார் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் தாம் இஃதிகாஃப் இருந்த இடத்திற்குச் செல்லட்டும். நிச்சயமாக நான் இந்த (லைலத்துல் கத்ர்) இரவைக் கனவில் கண்டேன். ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்வதாகக் கண்டேன்’ எனக் கூறினார்கள். அவர்கள், தாம் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றதும் வானத்தில் மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! அன்றைய தினம் கடைசி நேரத்தில் வானத்தில் மேகம் திரண்டது. (அன்றைய பள்ளிவாயில் பேரீச்சை ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் மூக்கிலும் மூக்கின் ஓரங்களிலும் ஈரமான களிமண்ணின் அடையாளத்தை கண்டேன்’.
-புகாரி : 2040
ஈஸா நபி, தஜ்ஜாலைப் பற்றி கனவு காணுதல்
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்’ ‘இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மா நிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மா நிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள் வரை நீண்டுள்ள முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான தலை முடி அவருக்கு இருந்தது; அந்த முடியை அவர் (படிய) வாரிவிட்டிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ‘இரண்டு மனிதர்களின் மீது’ அல்லது ‘இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது’ சாய்ந்தபடி அவர் கஅபாவைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். அப்போது நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘(இவர் தாம்) மர்யமின் குமாரர் மஸீஹ்(ஈசா)’ என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது நான் நிறைய சுருள்முடி கொண்ட வலக் கண்ட குருடான ஒரு மனிதனையும் பார்த்தேன். அவனுடைய கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. அப்போது நான், ‘யார் இவர்?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவன்தான் தஜ்ஜால் எனும் மஸீஹ்’ என்று பதிலளிக்கப்பட்டது’ என ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்.
-புகாரி : 6999
‘நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டாப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு ‘மார்க்கம்’ ‘ என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் விளக்கம் தந்தார்கள்’ என ஹழ்ரத் அபூ ஸயீதுல் குத்ரீ(ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்.
-புகாரி : 23.
‘நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீத மிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘கல்வி’ என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: என ஹழ்ரத் இப்னு உமர்(ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்.
-புகாரி : 82
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, ‘அதை ஊதி விடுவீராக!’ என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய்விட்டன. நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கிற (தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரண்டு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலிமாவாகவும் அமைந்தார்கள்’ என ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்.
-புகாரி : 3621
ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்’ நாங்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். ‘ உமர் இப்னு கத்தாப் அவர்களுடையது’ என்று (ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஹழ்ரத் உமர்(ரழியல்லாஹு அன்ஹு)அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.
-புகாரி : 3242
ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்: ‘நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், ‘நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, ‘யார் அது?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), ‘இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், ‘இது யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), ‘இது உமருடையது’ என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)’ என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரழியல்லாஹு அன்ஹு), ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்’ என்று கேட்டார்கள்.
-புகாரி : 3679
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்:’ நான் கனவில் (என்) வாள் ஒன்றை அசைக்க அதன் முனை முறிந்துவிட்டதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்ததை விட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் மீண்டும் ஒன்று திரண்டதையும் குறித்தது. என ஹழ்ரத் அபூ மூஸா(ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்.
-புகாரி : 7041
ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ‘இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘குபா’ எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) ஹழ்ரத் உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும்போது) உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுக்கு உணவளிப்பார்கள். உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் ஹழ்ரத் உபாதா இப்னு ஸாமித்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் ஹழ்ரத் உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம் உணவளித்தார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். பிறகு எழுந்து சிரித்தார்கள். உடனே ஹழ்ரத் உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடல் மீது பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர் களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள். என்று கூறினார்கள். உடனே, ‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்ற உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹு)கூறினார். அவ்வாறே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் தலையை வைத்து உறங்கினார்கள். பின்னர் விழித்துச் சிரித்தார்கள். அப்போதும் ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என ஹழ்ரத் உம்மு ஹராம் கேட்க, முன்போன்றே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, என்னையும் அவர்களில் ஒருவராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என உம்மு ஹராம் கேட்டுக் கொண்டார்கள் என ஹழ்ரத் உம்மு ஹராம் கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், ‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக விளங்குவீர்கள்’ என்றார்கள்.
அவ்வாறே ஹழ்ரத் உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் ஹழ்ரத் முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (அறப்போருக்காக) கடல் பயணம் மேற்கொண்டார்கள். கடலிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது தம் வாகனப் பிராணியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.
-புகாரி : 6282
அன்னை ஆயிஷா நாயகி (ரழியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி’ என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்’ என்று சொல்லிக் கொண்டேன்.
-புகாரி : 7011
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: ‘ தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து ‘மஹ்யஆ’ சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். ‘மஹ்யஆ’ என்பது ‘அல்ஜுஹ்ஃபா’ எனும் இடமாகும் என ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்கள்.
-புகாரி : 7038
செய்யிதத்தினா கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வரகத் இப்னு நௌபல் அவர்களின் மறுமை நிலை பற்றி நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவியபோது, ‘வெண்ணிற ஆடை அணிந்தவராக அவரை நான் சுவர்க்கத்தில் கண்டேன். அவர் நரகவாசியாக இருந்திருந்தால்வெண்மை ஆடை அவரிடம் இருந்திருக்காது’ என்றனர்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
நூல்: ஹாகிம்.
இப்னு ஸீரீன்
இதேபோன்று கனவைப் பற்றி எழுதும்போது இப்னு ஸீரீன் என்பவரைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவரின் பெயர் அபூபக்கர் முகம்மது இப்னு ஸீரீன் என்பதாகும். பஸராவைச் சார்ந்தவர். இவரின் தந்தை இப்னு ஸீரீன் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடிமையாக இருந்து 20000 திர்ஹம் தருவதாக ஒப்புக் கொண்டு விடுதலை பெற்று அவ்விதமே அப்பணத்தை செலுத்தினார். இவர் தந்தை செம்பு பாத்திரம் செய்பவர். இவர் அன்னை ஸபிய்யாவோ ஸெய்யிதினா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடிமையாக இருந்தவர்.
இப்னு ஸீரீன் ஹதீது கலையை ஹழ்ரத் அபூஹுரைரா, இப்னு உமர், இப்னு ஜுபைர், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களிடம் பயின்றார். பெரிய வணக்கசாலியான இவரிடம் பஸரா மக்கள் மாhர்க்கம் பற்றி ஆலோசனை செய்து கொண்டனர். ஹழ்ரத் ஹஸனுல் பஸரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களின் நெருங்கிய தோழராவார். இவர் ஒரே மனைவி மூலம் 30 ஆண் குழந்தைகளும், 11 பெண் மக்களையும் பெற்றார். அப்துல்லாஹ் என்பவரைத்; தவிர ஏனையோர் இவருக்கு முன்பே மறைந்து விட்டனர்.
இளமையில் துணிக்கடையில் வேலைபார்த்த இவரின் அழகின் மீது மையலுற்ற ஒரு பணக்கார விதவை இவரை துணியை வீட்டுக்கு கொண்டுவருமாறு செய்து, இவர் வீட்டிற்குள் வந்ததும் கதவை அடைத்துவிட்டு தம் இச்சைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். இவர் மலம் கழிக்குமிடத்திற்கு சென்று மலம் கழித்துவிட்டு அவள் இச்சையை தீர்த்து வைப்பதாக சொல்லி சென்றார். மலக்கூடத்திற்கு சென்று அங்கிருந்த மலத்தை வாரி தம் உடல் மீது பூசிக்கொண்டு வெளியே வர அந்த மாது நாற்றம் பொறுக்க முடியாமல் இவரை வெளியே அனுப்பினார். ஒரு கிணற்றில் குளித்து தம்மை சுத்தப்படுத்திக் கொண்ட இவர் பள்ளிவாசலுக்கு தொழ சென்றபோது அங்கிருந்தவர்கள், ‘என்ன ஒருவித வாடை வருகிறது என்று சொல்ல, இவர் தம் உடலிலிருந்துதான் அந்தவாடை வருகிறது என்று சொன்னார். அவர்கள் இவர்களின் சட்டையை முகர்ந்து பார்க்க ஒருவித கஸ்தூரி வாடை வீசியது. இதைத்தான் நாங்கள் சொன்னோம் என்றனர். அன்றிரவு ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவர்கள் கனவில் தோன்றி தமது மேலங்கியை அணிவித்துவிட்டு சென்றனர். அன்றுமுதல் இவருக்கு கனவு விளக்க அறிவு ஏற்பட்டதாக சொல்லுவர்.
இவர் கனவிற்கு சொன்ன விளக்கங்கள் சொன்னவாறே நடைபெற்றது. கனவு கண்ட இருவருக்கு அவர்களின் முகக்குறியைக் கொண்டே இவர் வௌ;வேறு பலன்கள் சொன்னார். அதுவும் அப்படியே நடந்தது. கனவு விளக்கத்தின் தந்தை என்றே இவரைக் கூறலாம்.
ஹழ்ரத் ஹஸன் பஸரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து சரியாக 100 நாட்கள் கழித்து ஹிஜ்ரி 110 ஷவ்வால் பிறை 9 வெள்ளிக் கிழமை பஸராவில் காலமானார்கள்.
நாதாக்கள் கண்ட கனவுகள்:
அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரழியல்லாஹு அன்ஹு)எனும் சீரிய நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில் நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.
ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள் கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில் அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!
இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள். தூரத்தில் இருந்து “இது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்களுக்குரியது” என்று அசரீரி வந்தது.
அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின் உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: “அவ்ஃபே! இது அல்லாஹ் நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.
அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர் கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்” என்றார்கள்.
அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் “அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரழியல்லாஹு அன்ஹு)அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.
ஏனெனில், அவர் உலகில் வாழும் போது தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய செல்வந்தனாக மாறிப்போனார்” என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் பதில் கூறினார்களாம்.
2. உமரிப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ‘நான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன். அவர்கள் அபூபக்கர், உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் உட்கார்ந்த பிறகு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும், முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் கொண்டு வந்து இருவரையும் ஒரு வீட்டிற்குள் விட்டுக் கதவைச் சாத்தினார்கள். உடனே அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை வெளியேக் கண்டேன். அவர்கள்,
قَضى لِيْ وَرَبِّ الْكَعْبَةِ
என்று சொன்னார்கள். இப்படிச் சொன்னதில் ‘எனக்கே நியாயம் கிடைத்தது’ என்பது அவர்கள் கருத்து. பிறகு சிறிது நேரத்தில் முஆவியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியே வந்தார்கள்.
غَفَرَلِيْ وَرَبِّ الْكَعْبَةِ
என்று சொன்னார்கள். இப்படிச் சொன்னதில், ‘எனக்கும் பிழை பொறுத்து மன்னித்தான்’ என்பது அவர்கள் கருத்து என்பதே.
ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதாவதற்கு முன்பு இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருநாள் நித்திரையிலெழுந்து>
اِنَّا لِلهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ
என்று சொன்னார்கள். அங்’கிருந்தவர்கள், ‘என்ன சம்பவித்தது?’ என்று கேட்க, ‘ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை வெட்டிப் போட்டார்கள்’ என்று சொன்னார்கள். அதெப்படி என்று கேட்க, ‘நான் இப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன்’ என்றும், அவர்கள் கையில் இரத்தம் நிரப்பிய ஒரு சீஷா இருந்தது என்றும், அதை எனக்குக் காட்டி ‘என் உம்மத்துகள் எனக்கு என்ன செய்தார்கள் பார்த்தாயா? என் மகன் ஹுஸைனைக் கொன்று போட்டார்கள். இது அவருடையவும், அவருடைய தோழர்களுடைய இரத்தமாகயிருக்கிறது. இந்த அநீதத்தை அல்லாஹ்விடம் முறையிடுவதற்காக இதைக் கொண்டு போகிறேன்’ என்று சொன்னார்கள். இதற்குப் பின் இருபத்தி நான்காம் நாள்அவர்களை அன்று ஷஹீதாக்கின செய்தி வந்தது.
3. சுப்யானு தவுரி ரஹிமஹுல்லாஹ் அவர்களை கனவில் கண்டு ‘அல்லாஹுத்தஆலா உமக்கு என்ன செய்தான்? என்று கேட்டதற்கு ‘ரஹ்மத்து செய்தான்’ என்று சொன்னார்கள். அவர்களிடத்தில் அப்துல்லாஹில் முபாரக்கு ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நிலை என்ன? என்று கேட்டதற்கு, ‘அவர்களுக்கு தினம் இரண்டு முறை அல்லாஹ்தஆலாவைத் தரிசித்துக் கொள்ளும்படியான பெருமை கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று சொன்னார்கள்.
4.இமாமுனா ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறதாவது:- ‘எனக்கு ஒரு கஷ்ட காரியம் நேரிட்டது, நான் அதில் ஆஜிஸாய்ப் போனேன். என் கனவில் ஒருவர் வந்து, ‘ஓ முஹம்மது இதுரீஸே! நீர்
اَللهُمَّ اِنِّيْ لَا اَمْلِكُ لِنَفْسِيْ ضَرًّا وَّلَا نَفْعًا وَلَا مَوْتًا وَلَا حَيٰوةً وَلَا نُشُوْرًا اِلَّا مَااَعْطَيْتَنِيْ وَلَا اَنْ اَتَّقِيَ اِلَّا مَا وَقَّيْتَنِيْ اَللهُمَّ وَفِّقْنِيْ لِمَا تُحِبُّ وَتَرْضٰى مِنَ الْقَوْلِ وَالْعَمَلِ فِيْ عَافِيَةٍ
என்கிற இந்த துஆவை ஓதும்’ என்று சொல்லக் கேட்டேன். நான் காலையில் விழித்தெழுந்து இந்த துஆவை ஓதினேன். முற்பகலாகிய லுஹர் நேரத்தில் அந்தக் காரியம் இலேசாயிற்று’ என்றார்கள்.
5. புர்தா என்னும் காப்பியத்தை இயற்றிய இமாம் முஹம்மத் பின் ஸயீத் அல்பூஸீரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் புர்தா காப்பியத்தை இயற்றினார்கள். ஒருநாள் உறங்கிக் கொண்டிருக்கையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் வந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினார்கள். உடனே இமாம் யுபூஸரி நாயகத்திற்கு ஏற்பட்ட பக்கவாத நோய் முற்றிலும் நீங்கி விட்டது.
6.சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷெய்க் முஹம்மதுஅப்துல் காதர் ஸூபி ஹழ்ரத் ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் மேடையில் பேசுவதற்கு தயக்கம் காட்டியபோது, கனவில் இமாமுனா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், கௌதுல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் வாயில் உமிழ்ந்ததன் பின்னர்தான் அவர்கள் சரளமாக மேடைப் பேச்சு பேச ஆரம்பித்தார்கள்.
இன்னும் இருக்கிறது….
பொய்க் கனவுகளும், தவறான விளக்கங்களும்
‘தன் தந்தையல்லாத இன்னொருவரைத் தந்தை எனக் கூறுவதும், கனவில் காணாததைக் கண்டதாகக் கூறுவதும், (இறைத்தூதராகிய) நான் கூறாததைக் கூறியதாகச் சொல்வதும் பொய்களில் மிகப் பெரிய பொய்களாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாஸிலா (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : புகாரீ 3509
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “யார் கனவை பொய்யாக கூறுவாரோ கியாமத் நாளில் அல்லாஹு தஆலா இரண்டு கோதுமைகளை அவரிடம் கொடுத்து (இரண்டு கயிறுகளுக்கு மத்தியில் முடிச்சு போடுவதைப் போன்று) ஒரு கோதுமையை மற்றொன்றில் முடிச்சு போடச் சொல்லி நிர்ப்பந்திப்பான். (நூல் : இப்னு ஹிப்பான்)
இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கடுமையாக எச்சரித்தும், இவ்வுலகில் தம்மைப் பெரிதுபடுத்திக் காட்டிக் கொள்ள எவ்வித அச்சமும் இல்லாமல் தாங்கள் கனவு காணாததை கண்டதாகவும், கனவு கண்டதாக கூறியவருக்கு தாமும் கனவிற்கு விளக்கம் சொல்லும் அளவிற்கு பெரியவர் என்று காட்ட அவர்களுக்கு, தவறான விளக்கங்களை சொல்லியதையும் அதனால் ஈமான் இழந்து காபிராகிப் போனதையும் இப்போது பார்க்கலாம்;.
தப்லீக் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் கனவு
‘தற்போதெல்லாம் எனக்கு கனவுகளில் மெய்யான ஞானங்கள் உதிக்கின்றன. ஆதலால் எனக்கு அதிகமாக தூக்கம் வருவதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். (வறட்சியின் காரணமாக தூக்கம் குறையத் தொடங்கியது. எனவே) நான் (மன்ஜூர் நுஃமானி) யுனானி மருத்துவர் மற்றும் ஆங்கில மருத்துவரின் ஆலோசனைப்படி தலையில் எண்ணெய் மாலிஷ் செய்வித்தேன். இதன் மூலம் தூக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.
மௌலவி இல்யாஸ் ஸாஹிப் கூறலானார்:-
இந்த தப்லீக் முறையும் எனக்கு கனவில் வெளியானதே. குன்த்தும் கைர உம்மத்தின் உக்ரிஜத் லின்னாஸி தஃமுருன பில்மஃருஃபி தன்வஹவ்ன அனில் முன்கரி வதுஃமி}ன பில்லாஹி என்று இறைவன் கூறுகிறான். இதன் விளக்கம் (தப்ஸீர்) எனக்கு கனவில் வெளியாயிற்று. ‘நீர் (மௌலவி இல்யாஸ்) நபிமார்கள் (அலைஹிமுஸ்ஸலாம்) போன்று மக்களுக்காக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றீர்’ (நூல்: மல்பூஜாத்தே மௌல்வி இல்யாஸ் பக்கம் 40,50)
பொய்யான கனவின் மூலம் பிரிட்டீஷ்காரர்களிடம் வாங்கிய காசுக்கு இஸ்லாத்தை பிளவுபடுத்திட தம்மை நபியின் அந்தஸ்துடையவராக உருவாக்கி புதிய கொள்கை கொண்ட கூட்டத்தையே உருவாக்கிவிட்டார் இந்த வழிகேடர்.
அஷ்ரப் அலி ரஸூலுல்லாஹ்(மஆதல்லாஹ்)
நான் எந்த மாதிரியான கனவு காண்கிறேனெனில் கனவில் ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்னும் கலிமாவை ஓதுகின்றேன். ஆனால் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்கிற இடத்தில் தங்களின் (அஷ்ரப் அலி தானவியின்) பெயரைக் கூறுகின்றேன். எனக்கு கனவிலும் விழிப்பிலும் உங்களின் நினைவுதான் இருந்தது. இருப்பினும் நல்ல நினைவோடு விழிப்பு நிலையிலிருக்கும் போது கலிமாவை தவறாக ஓதிவிட்டது நினைவுக்கு வந்தவுடன் இத்தகைய தவறான எண்ணங்களை விலக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். இந்தவாறு மீண்டும் நிகழ்ந்து விடக் கூடாதென்று கருதுகிறேன். இதே எண்ணத்தோடு அடியேன் உட்கார்ந்து விட்டேன்….
பின்னர் மறுபக்கம் மாறிப் படுத்தவனாக கலிமாவில் செய்துவிட்ட தவறுக்கு பரிகாரம் தேடிட, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; பேரில் ஸலவாத்து ஓதத் துவங்கினேன். ஆனால் மீண்டும் நான் என்ன சொல்கிறேன் என்றால், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா ஸையிதினா வ நபியினா வமௌலானா அஷ்ரப் அலி’ என்று ஓதுகிறேன். ஆனால் இப்போது நான் விழித்த நிலையிலிருக்கிறேன். வகையற்றவனாயுள்ளேன். எனது நாவு எனது கட்டுப்பாட்டில் இல்லை…! (என்று அஷ்ரப் அலியின் முரீது எழுதியது பற்றி தானவி ஸாஹிப் பதில் கொடுக்கிறார் இப்படி…) ‘இந்த நிகழ்ச்சியில் நிம்மதி இருக்கிறது. ஏனெனில் எவர் பக்கம் நீர் மீளுகின்(யாரிடம் இதைப் பற்றி வினவுகின்)றீரோ, அவர் (மௌலவி அஷ்ரப் அலி தானவி) இறைவனின் உதவியால் ஸுன்னத்துக்களை பேணக் கூடியவராக இருக்கிறார்.’ (ஆதாரம்: அல்-இம்தாத் எழுதியவர் அஷ்ரப் அலி தானவி. வெளியீடு தானாபவன் – ஸபர் மாதம் 1336> பக்கம்35)
நினைவிலும, கனவிலும் தன்னை ரஸூலாக சொல்லும் அதுவும் கலிமாவில் ஓதும் ஒருவருக்கு நீ சொல்வது தவறு உன் ஈமான் பறிபோய்விடும். எனவே தவ்பா செய்துகொள் என்று சொல்லி அவரை திருத்தாமல்,தன்னை ரஸூலாக சொல்லுவதை ஊக்குவிக்கும்விதமாக பதில் கொடுத்திருப்பதால் அஷ்ரப்அலிதானவியின் ஈமான் பறிபோய்விட்ட அவர் காபிராகி போய்விட்டார் என்று மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பர்ரத் மின் கஸ்வரா என்ற பெயரில் பத்வா வெளியிட்டார்கள்.
ஓரினச் சேர்க்கை ஆதரிப்பு:
அவர்கள்(மௌலனா ரஷீத் அஹ்மது கங்கோஹி ஸாஹிப்) ஒருமுறை கனவொன்றை விவரிக்கத் துவங்கினார். அதாவது ‘தாருல் உலூம் தேவ்பந்த் மத்ரஜாவின் ஸ்தாபகரான மௌல்வி காசிம் நானூத்தவி ஒரு மணமகன் உருவில் இருப்பதைக் கண்டேன். மேலும் அவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. (ஆதாரம்: தத்கிரத்துர் ரஷீத் பாகம்2, பக்கம் 245)
நான் ஒருமுறை (மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி சாகிப்) கனவில் என்ன பார்க்கிறேன் என்றால்> மௌலவி காசிம் (தாருல் உலூம் தேவ்பந்த் மத்ரஸாவின் ஸ்தாபகர்) மணமகளுடைய தோற்றத்திலிருக்கிறார். அவருடன் எனக்குத் திருமணமும் நடக்கின்றது. மேலும் எவ்வாறு ஒரு மனைவிக்கு அவளது கணவனிடமிருந்து ஒருவரைக் கொண்டு மற்றவருக்குப் பலன் கிடைக்குமோ, அவ்வாறே எனக்கு அவராலும், அவருக்கு என் மூலமும் பலன் கிடைக்கின்றது. (ஆதாரம் தத்கிரத்துர் ரஷீத் பாகம் 2, பக்கம் 289)
கணவன் மனைவிக்கிடையே கிடைக்கும் பலன் கிடைக்கிறது என்று சொல்வதால் – இஸ்லாம் வெறுத்த ஓரினச் சேர்க்கையை பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்.
உருதுமொழி பேசும் நாயகம்
ஒரு நல்லடியார் தமது கனவில் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காணும் பெரும் பேற்றினைப் பெற்றார். அப்போது பெருமானாரவர்கள் உர்தூ மொழி பேசுவதைக் கண்டு, பெருமானாரைப் பார்த்து… தாங்கள் அரபு நாட்டவராயிற்றே! தங்களுக்கு உர்து மொழி எப்படி வந்தது? என்று வினவ,… அதற்கு அண்ணலார், எப்போதிருந்து நமக்கு ‘தேவ்பந்த் மத்ரஸாவைச் சார்ந்த உலமாக்களில் தொடர்பு ஏற்பட்டதோ, அப்போதிருந்தே இம்மொழி நமக்கு வந்து விட்டது என்று கூறினார்கள். ஸுப்ஹானல்லாஹ்! இதன்மூலம் இந்த தேவ்பந்த் மத்ரஸாவின் சிறப்பு தெரியலாயிற்று. (நூல்: பராஹீனே காத்திஆ பக்கம் 26)
ஒவ்வொரு ஆஷிகீன்களும் அவரவர் மொழியிலும் தங்கள் நேசரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் கண்டு கொண்டு உரையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வல்ல நாயனும் தமது ஹபீபிற்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டான். தங்களது மத்ரஸாவையும் தங்கள் மௌல்விமார்களையும் பெரியவர்களாக்க இவர்கள் யார் மீது கை வைக்கிறார்கள் பாருங்கள். ஆனால் அல்லாஹ்…
(ஓ! முஹம்மதே!) நீர் ஒருபோதும் மறக்க முடியாதவண்ணம் உமக்கு கற்பிப்போம். – அல்-குர்ஆன்.
எனக்கு இறைவன் கற்றுக் கொடுத்தான். எனவே என்னுடைய கல்வி (மற்ற ஏனைய கல்வியுடையோரது கல்வியைக் காட்டிலும்) மிகச் சிறந்ததாகும். – அல்-ஹதீது.
ஸிராத்துல் முஸ்தகீம் பாலம்:
மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹி அவர்களின் மாணவர்களில் ஒருவரான ஹுஸைன் அலி என்பார் ‘பல்கத்துல் ஹைரான்’ என்னும் நூலில் கனவு ஒன்றை விவரிக்கிறார் பாருங்கள்:
‘அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (ஹுஸைன் அலியை) ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் அழைத்துக் கொண்டு செல்வதாகக் கனவு கண்டேன். அப்போது நபிகளார் பாலத்தினின்றும் தவறிக் கீழே விழுந்து கொண்டிருந்தனர். உடனே நான் பெருமானார் கீழே விழுவதினின்றும் தடுத்துக் கொண்டேன்’
உலகையே உய்விக்க வந்தவர்களும், உலக மாந்தர்கள் அனைவருக்கும் ஷபாஅத் செய்யும் எமது கண்மணி நாயகம் ஸிராத்தே முஸ்தகீம் பாலத்தினின்றும் கீழே விழுகிறார்களாம். என்னே இவர்கள் அறிவீனம்!
பாருங்கள்! இவர்கள் இவ்வாறு பொய்யும் புரட்டும் கொண்ட கட்டுக்கதை கனவுகளை உண்மைபோல் பேசியும், எழுதியும் தங்களை உயர்த்திக் கொள்ளப்பார்த்தார்கள். ஆனால் வல்ல நாயன் அவர்களின் எண்ணங்களை அவர்களின் எழுத்தின் வடிவிலே மக்கள் மத்தியில் அம்பலபடுத்தி அவர்களின் ஈமானைப் பிடுங்கிவிட்டான். அந்தோ பரிதாபம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை மீறி தங்களின் எசமானர்(பிரிட்டீஷ்காரர்கள்)களின் அடிவருடிகளாக செயல்பட்டதால் ஈமான் போனதுதான் மிச்சம்! பொய் கனவுகள் இவ்வாறுதான் ஈமானை இழக்கச் செய்யும்.
நாயகம் நமக்கறிவித்த நற்செய்தி:
‘யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரீ 610, 6197, முஸ்லிம், அபூ தாவூத்
என்னை யாராவது கனவில் கண்டால் விழிப்பில் என்னைக் காண்பான். ஏனெனில் ஷைத்தான் என் உருவில் வரமாட்டான்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 6993
சிலர் இந்த ஹதீதைக் கொண்டு நபிகள் நாயகத்தை கனவில் கண்டவர்கள் அவர்களை நேரில் காண்பது உறுதி. ஆனால் அது மறுமையில்தான் நடக்கும் என்று சொல்கின்றனர். இன்னும் சிலர் இந்த ஹதீது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திற்குரியது. அவர்களை காணாமலிருக்கும்போது கனவில் அவர்களைக் கண்டால் கண்டிப்பாக அவர்களை நேரில் காண்பார்கள் என்கின்றனர்.
ஆனால் நபிகள் நாயகத்தை மறுமையில் காண்பவர்களில் கனவில் காணாதவர்களும் அடங்குவர். அனைவருக்கும் ஷபாஅத்துச் செய்யும் நபிகளாரை மறுமையில் அனைவரும் கண்டுக் கொள்வார்கள் என்று நமக்கு ஹதீதுகள், சான்றோர்கள் மூலம் தெரியவருகிறது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பொன்மொழியை தம்முடைய காலத்திற்குரியவர்களுக்கு மட்டும் உரித்தானது என்று சொல்லவில்லை. மேலும் சுருங்கப் பேசி விளங்கப் பேசும் அவர்கள், வருங்காலத்தை முற்கூட்டியே அறிந்த அவர்கள் தமது ஆசிகீன்களை சந்தோஷப்படுத்த அவர்கள் முன் நேரிலேயே ஹாளிராவார்கள் என்பதுதான் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் அகீதா. அல்லாஹ் அதற்குரிய ஆற்றலை அன்னவர்களுக்கு கொடுத்திருக்கிறான். அதன்படியே இந்த ஹதீதும் எக்காலத்தையும் குறிப்பிடாமல் பொத்தம் பொதுவாக அனைத்துக் காலத்திற்குரிய மக்களையும் குறிக்கிறது.
ஆகவே இந்த ஹதீதுக்கு கருத்து என்னை கனவில் கண்டவன் இவ்வுலகிலேயே விழிப்பிலும் காண்பான் என்பதுதான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்றும் உண்மையே பேசி வந்துள்ளார்கள். என்றும் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மீறியதும் இல்லை. அதை நிறைவேற்றியே தீருவார்கள். எனவே அவர்கள் கூறியபடி அவர்களைக் கனவில் கண்டவன்; நிச்சயம் விழிப்பிலும் காண்பான் என்று அறிஞர் பெருமக்கள் தங்கள் நூல்களில் எழுதியுள்ளார்கள்.
மரணித்த ஒருவரை விழிப்பில் காண்பது எப்படி முடியும் என்று கேட்டால், சாத்தியமில்லாத எதையும் எங்கள் நபிகள் நாயகம் கூறுவதில்லை. அவர்களின் கூற்றே மறைந்த ஒருவரை விழிப்பில் காணமுடியும் என்பதற்கு ஆதாரம். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றை மறுப்பது, பொய்யாக்குவது குப்ரு ஆகும்.
இக்காலத்தில் இந்த ஹதீது அனுபவப்பூர்வமாகவும் நிறைவேறிக் கொண்டே இருக்கிறது. தங்கள் விழிப்பிலேயே அன்னாரைக் கண்ட பாக்கியவான்கள் பல்கிப் பெருகிக் கிடக்கிறார்கள்.
அல்லாஹுத்தஆலா நம் அனைவர்களுக்கும் நமது ஷெய்குமார்களின் பொருட்டால் நல்ல கனவுகளை காணும் பாக்கியத்தையும், அதிலும் நமது இனிய நேசர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டு தரிசித்து அதன்பயனாய் நேரில் கண்டு பரவசமடையும் பாக்கியத்தையும், அன்னாரைக் கண்டவாறே நமது ரூஹு பிரியும் பாக்கியத்தையும், கப்ரில் அன்னாரைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து முன்கர்நகீர் கேட்கும் கேள்விக்கு, இது அல்லாஹ்வின் இறுதித்தூதர் எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பதில் சொல்லி அதன்மூலம் சுவர்க்கம் சென்றடைந்து அன்னாரின் அருகிலேயே இருக்கும் பாக்கியத்தையும்> அன்னாருக்கு பணிவிடை செய்யும் நல்பதவியையும் தந்தருள்வானாக! ஆமீன்.
முற்றும்.