கடனும் வட்டியும்

கடனும் வட்டியும்

By Sufi Manzil 0 Comment October 28, 2016

கடன் வாங்கியவனின் கைவசத்தில் கடன் கொடுத்தவனுடைய உடைமை ஏதேனும் இருந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  இவன் கையை விட்டு நீங்கி பிறகு மீண்டு வந்ததாக இருந்தாலும் சரி. ஆனால், அதனை ஈடு  வைத்திருந்தாலும், அடிமையை உரிமையிடுவதாகச் சீட்டு எழுதிக் கொடுத்திருந்தாலும் திருப்பக் கூடாது.

 கடன் வாங்கியவனிடம் வாங்கிய இடமல்லாததில் அந்தப் பொருளைத் திருப்பிக் கேட்டால் அப்படிக் கொடுக்க வேண்டுமென்பது அவசியமில்லை.

 கடன் வாங்கும் நேரத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி வாங்கியிருந்தால் கடன் கொடுத்தவனுக்கு ஏதேனும் அன்பளிப்புச் செய்யலாம். அது சுன்னத்துமாகும். ‘கடனை நிறைவேற்றும் பொழுது மிக அழகான முறையில் நிறைவேற்றுபவரே உங்களில் அழகானவர்’ என்று ஹதீதில் கூறப்பட்டுள்ளது. ஏதேனும் நிபந்தனையிட்டுக் கடன் கொடுத்தாலும், வாங்கினாலும் அது வட்டி ஆகும். அது ஏகோபித்த அபிப்பிராயப்படி ஹராமாகும். ‘ஏதேனும் ஒரு பலனை இழுத்துக் கொண்டுவரும் கடன் அனைத்தும் வட்டியாகும்’ என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

ஒருவன் தன் தோட்டத்தை, அல்லது வீட்டை அல்லது தோணி, கப்பல் போன்றவற்றை பாட்டத்துக்கோ, வாடகைக்கோ, கொடுக்கும்போது அதனதனுடைய பெறுமதியான கூலிக்கும் மேலாக கொடுக்க வேண்டுமென்று கடன் கொடுக்கும் ஆரம்பத்தில் பேசிக் கொள்வது ஹராமாகும். அதனைக் கட்டாயப்பத்தாமல் சாடையாகக் குறிப்பிடுவது மக்ரூஹ் ஆகும். பெரும்பாலான உலமாக்களிடத்தில் இதுவும் ஹராமாகும்.

எவ்வித நிபந்தனையும் பேசாதிருக்கும் நிலைமையில் கடன் கொடுத்தவனுக்குக் கடன் வாங்கியவன் ஏதாவது ஒரு பொருளை ஹத்யாவாக(அன்பளிப்பாக)க் கொடுப்பது எல்லா இமாம்களின் ஒருமித்த சொல்படி ஆகுமானதாக இருக்கும்.

கடன் கொடுப்பதற்கு ஒருவன் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவன் பொறுப்பாளி ஆகிவிடுவான்.(எனினும் இதில் இமாம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது)

 அடகு

 கொடுக்கும் கடனுக்கு நம்பிக்கைக்காக ஒரு பொருளை ஈடாகப் பெற்றுக் கொள்ளலாம். வக்பு செய்யப்பட்ட சொத்தையும், பிள்ளை பெற்ற உம்முவலத்(அல்லது சுர்ரியத்) என்ற அடிமைப் பெண்ணையும் ஈடாக வைப்பது கூடாது. சிறு குழந்தை, பைத்தியக்காரன் ஆகியோரின் பொருட்களை ஈடு வைக்கக் கூடாது. அதற்கு அதிகாரியாக இருப்பவர் தந்தையாக அல்லது பாட்டனாக இருப்பினும் சரி. எனினும், ஈடு வைத்து வட்டியில்லாமல் பொருளைப் பெற்று, அதில் வியாபாரம், விவசாயம் ஏதேனும் செய்து அவர்களின் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக வைக்கலாம்.

அமானிதப் பொருளை வைத்திருப்பவன், அவனுடைய கவனக்குறைவால் அப்பொருள் சேதமானலே தவிர அதற்குப் பொறுப்பாளியாக மாட்டான்.

ஈடு பிடிப்பவன் அதனைக் கைப்பற்றுமுன் உடைமைக்காரன், அதனை மற்றொருவனுக்கு அன்பளிப்புச் செய்வதினாலோ அல்லது மற்றொருவனிடம் ஈடு வைப்பதினாலோ முதல் ஈட்டை விட்டும் மீண்டு கொண்டவனாவான்.

ஈடு வைத்த பொருளை மற்றொருவனுக்கு ஈ:டு வைப்பதும், விற்பதும், வஃபு செய்வதும் ஈடுவைத்தவனுக்குக் கூடாது.

ஈடு வைத்தவனுக்கும்,  ஈடுபெற்றவனுக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டால் ஈடு வைத்தவனுடைய சொல்லே உண்மையாக்கப்படும்.

கடன் வாங்கிய ஒருவனுக்குப் பொருளிருக்கிறது என்று தெரிந்தால் அதனைத் தடை செய்து வைக்க வேண்டும். அது எவ்வளவாக இருப்பினும் சரி.

ஒரு கடனாளி எவ்விதப் பொருளாதார வசதியும் இல்லாதவன் என்று உறுதியானால் அவனுக்கு வசதி ஏற்படும்வரை அவனைத் தடை செய்யக் கூடாது.

அதேபோல் சாட்டுதல் (ஹவாலா) என்பது ஒருவனிடமிருந்து தனக்கு வரவேண்டிய பொருளை தான் கொடுக்க வேண்டிய மற்றொருவனுக்குக் கொடுக்கும்படி சாட்டி விடுதலாகும். அந்த சாட்டுதலால் சாட்டுகிறவன், சாட்டுதல் பெற்றவனுடைய கடனை விட்டும் நீங்கி விடுவான். அவ்வாறே சாட்டப்பட்டவன் சாட்டினவனுடைய கடனை விட்டும் நீங்கி விடுவான். சாட்டுதலைப் பொருந்திக் கொண்டவனுடைய உரிமை சாட்டப்பட்டவனின் மீது திரும்பி வரும். இது எல்லா இமாம்களுடைய ஏகோபித்த முடிவாகும்.

இவ்வாறு சாட்டப்பட்டபின் கொடுக்கல் வாங்கல் முடியவில்லையானால் சாட்டுதலைப் பொருந்திக் கொண்டவன் சாட்டியவனின் பால் திரும்பக் கூடாது.

கடன் பற்றிய எச்சரிக்கை

கஷ்டப்படும் முஸ்லிமான மனிதருக்கு எந்த முஸ்லிம் இரண்டு தடவை கடன் கொடுப்பாரோ அவருக்கு ஒரு தடவை ஸதகா செய்த நன்மை வழங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض بثمانية عشر، فقلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة  قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة

سنن ابن ماجة

 ஸதகா செய்தால் பத்து மடங்கு நன்மையும்,கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு நன்மையும் வழங்கப்படும் என்று சுவனத்தின் வாசலில் எழுதப்பட்டிருந்ததை நான் மிஃராஜ் இரவில் பார்த்தேன்.கடன் ஸதகாவை விட சிறந்ததா?என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள்,தர்மம் கேட்பவன் தன்னிடம் இருந்தாலும் கேட்பான்.ஆனால் கடன் கேட்பவன் தனக்கு தேவையான போது மட்டும் தான் கேட்பான் என்று பதில் கூறினார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

தன் அவசியமான தேவைக்காக கடன் வாங்கிய ஒருவர் கடும் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவருக்கு கடனை நிறவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள். இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் – (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.

கடன் வழங்கியவர் அவர் கொடுக்கும் அவகாசத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஸதகாவின் நன்மையை பெறுவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு படிமேலே, அந்த கடனை பெருந்தன்மையுடன் தள்ளுபடி செய்துவிட்டால் அல்லாஹ் அவருக்கு நிழலில்லாத அந்த மறுமை நாளில் நிழல் கொடுப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

கடன் கொடுப்பவர் விஷயத்தில் தாராள தன்மையுடனும்,விசாலமான மனதுடனும் நடந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம்,கடன் வாங்குபவர் விஷயத்தில் உச்ச கட்ட எச்சரிக்கை உணர்வை கடைபிடிக்கச்  சொல்கிறது.

கடன் பற்றிய விரிவான ஒழுங்குமுறைகளை கொண்ட வசனமே திருக்குர்ஆனின் மிகவும் பெரிய வசனமாகும்.

அவசியத்திற்காக கடன் வாங்கினாலும் கால தாமதம் செய்யாமல் அதை நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததாகும்.

மிகவும் சர்வசாதாரணமாகிப்போன கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கையை இஸ்லாம் கடைபிடிக்கிறது.

இறந்தவரின் சொத்தை பங்கு வைக்கும் முன் அவரின் கடனை நிறைவேற்றச் சொல்கிறது. தகப்பனின் சொத்துக்கு பங்கு கேட்கும் மகன் அவரின் கடனுக்கு முதலாவதாக பொறுப்பெடுக்கச்சொல்கிறது,காரணம் கடன் அவரை மறுமையில் சிறைபிடிக்கும்

ஹழ்ரத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மத்திப்னு அக்வஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.அப்போது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதரே! இதற்கு தொழவையுங்கள் என்றனர்  உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்றனர். இவர் ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று கேட்டபோது அதற்கும் இல்லை என்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மையித்துக்கு தொழ வைத்தார்கள்.

பின்பு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டு தொழவைக்கச்சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது –ஆம்!.என்றனர்.இவரின் கடனை நிறைவேற்ற ஏதும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது,ஆம் மூன்று தீனார்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறியபோது அவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ வைத்தார்கள்.

பின்பு மூன்றாவது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது.

அவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது ஆம்! என்று பதில் கூறினர்.  அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர் தன் கடனை நிறைவேற்ற வேறு ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்று பதில் கூறினார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே தொழவைத்துக்  கொள்ளுங்கள்.என்றார்கள்.அப்போது அந்த சபையில் இருந்த அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்கள் தொழவையுங்கள்.இவர் கடனுக்கு நான் பொருப்பேற்றுக்கொள்கிறேன்.என்றதும் -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழவைத்தார்கள்.                  –  புகாரி.

அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை சந்தித்தபோது- அபூ கதாதாவே! நீ வாக்களித்த அந்த கடனை நிறைவேற்றிவிட்டாயா?என்று கேட்டார்கள்.    அதற்கு நான் ஆம்!நிறைவேற்றிவிட்டேன் என்றதும் இப்போது இப்போது தான் அந்த மையித்தின் தோள் குளிர்ந்தது என்றார்கள்.

وفي جامع الترمذي بسند صحيح عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من فارق الروحُ الجسدَ وهو برئ من ثلاث دخل الجنة من الكبر،والغلول،والدين

உடலை விட்டும் உயிர் பிரிந்து விட்ட ஒருவர் பெருமை,மோசடி,கடன் இந்த மூன்றை விட்டும் நீங்கியிருந்தால் மட்டுமே சுவனம் நுழைவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

وفي رواية الحاكم ( إن صاحبكم حُبس على باب الجنة بدين كان عليه

கடனுக்காக சுவனத்தின் வாசலில் உங்கள் தோழர் ஒருவர் தடுக்கப்பட்டிருக்கிறார் என்று நபியின் சொல் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது பல ஜனாஸாக்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.அப்போது தங்களின் பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி, பின்பு தாழ்த்திவிட்டு, தங்களின் கையை நெற்றியில் வைத்து- சுப்ஹானல்லாஹ்!என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கிவிட்டது! என்றார்கள்.

மறுநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து அதற்கான விளக்கம் கேட்டபோது-  அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஒருவர்,மீண்டும் உயிர் பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு,மீண்டும் உயிர்பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு, இப்படி மூன்று தடவை அல்லாஹ்வின் பாதையில் தன் உயிரை தியாகம் செய்தாலும் அவர் மீது கடன் இருந்தால் அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழைக்கமாட்டான் என்று வஹி இறங்கியது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

இதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடனை விட்டும் அதிகமாக அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். அதைப்பற்றி காரணம் கேட்டபோது இப்படி சொன்னார்கள்

கடன் வாங்கியவன் பொய்பேசுவான்.வாக்குறுதிக்கு மாற்றம் செய்வான் என்றார்கள்.

வட்டி

வட்டிக்கும் கடனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் மெல்லியதே!  கடன் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக பெறுகிற எதுவும் வட்டியே!

வட்டிக்கு இலக்கணம் சொல்லும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிச்சொன்னார்கள்.

பலன் தரும் எந்த கடனும் வட்டியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

அடமானமாக வைக்கப்பட்ட வீட்டை பயன்படுத்துவது பலனை அடிப்படையாக கொண்ட கடனாகும் என்று மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

இருவர்களும் சம்மதித்துக்கொண்டாலும் இது ஹராமாகும் என்று இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وذكر ابن قدامة أيضا أن أحمد رحمه الله كان يقول عن الدور إذا كانت رهنا في قرض ينتفع بها المرتهن هو الربا المحض

மேலும் அவர்கள் கூறும் போது இது மிகத்தெளிவான வட்டியாகும் என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)

فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ

‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)’ (அல்குர்ஆன் 2:279)

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)

وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு)    புஹாரி 6857

இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

‘இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!

‘அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!’ எனக் கூறினார்கள்.’

அறிவிப்பாளர் : ஸமுரா(ரலியல்லாஹு அன்ஹு)

புஹாரி 2085

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலியல்லாஹு அன்ஹு)            புஹாரி 5347

‘வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்)

‘ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: தாரகுத்னீ)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு- புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

‘ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்ன போது, ‘சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!’ என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, ‘1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

வட்டி ஹராம் என்பதில் பல வகைகள் உள்ளன. முதலாவது இரண்டிலொரு பகரத்தை அதிகமாக்குவது. இது தானியங்களிலும், தங்கம் வெள்ளியிலும் உண்டாகும். இரண்டாவது கடன் வட்டி. அதாவது கடன் கொடுத்தவனுக்கு கடன் வாங்கியவன் அதிகமாகக் கொடுக்க வேண்டுமென நிபந்தனையிடுவது. மூன்றாவது விற்ற சரக்கைக் கைப்பற்றாமல் விற்ற இடத்தை விட்டும் இரண்டிலொருவர் பிரிந்து செல்வது. நான்காவது தவணை வட்டி. இரண்டிலொரு பகரத்தில் தவணையை நிபந்தனையிடுவது. இந்த நான்கு வகையும் ஹராமாகும்.

வட்டி கொடுக்காவிட்டால் கடன் கிடையாது என்று ஒருவன் சொல்கிறான். இவனுக்கு அதைத் தவிர வேறு எவ்வித வழியும் இல்லையானால் நிர்பந்தத்திற்காக அவனிடம் கடன் வாங்கி வட்டியுடன் கொடுக்கலாம். அதனால் வட்டியின் பாவம் ஏற்படாது என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ‘அதிகம் கொடுப்பதை வட்டி என்று கொடுக்காமல் அவனுக்கு நேர்ச்சை என்று பெயர் வைத்துக் கொடுக்கலாம். அப்பொழுதுதான் பாவம் ஏற்படாது என்று இப்னு ஜியாத் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

வட்டியின் தற்போதைய உருவங்கள்:

ஒத்தி

ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். இது வட்டியாகும்.

ஏலச்சீட்டு:

ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.

ஆனால் குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.

அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.

தவணை முறையில் பொருள் வாங்குவது:

இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.

இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.

வங்கி வட்டி ஆகுமானதா? (Is Bank Interest permissible?)

இன்றைய சூழலில் பேங்கில் வேலை பார்ப்பது கூடுமா? பேங்கிலிருந்து வரும் வட்டி ஆகுமானதா? பேங்கிற்கு கடன்வாங்கியதில் வட்டி செலுத்தலாமா? என்பது பற்றி இரு கருத்துக்கள் இந்திய திருநாட்டில் உள்ளது. ஷாபிஈ மத்ஹப்பின் அறிஞர்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக் கொண்டுத்தான் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் இந்தியா தாருல் ஹர்ப் இல்லை. எனவே வட்டி வாங்குவது கூடாது என்கின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் கூறும் கூற்றை பிரசுரம் மூலம் அறியலாம்.

ருவர் பேங்கு மூலம் கிடைக்கும் வட்டி கூடுமா? என்று எழுதி கேட்டிருந்தார். அதற்கு மௌலானா முப்தி முகமது ஷரீபுல்ஹக் அம்ஜதீ என்பவர் வட்டி கூடும் என்று பதில் அளித்தார். அதாவது தற்போது நம் நாட்டில் நடக்கும் அரசாங்கத்தின் வங்கியாகவும் அல்லது அதில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத சகோதரர்களின் வங்கிகளாக இருக்கும்பட்சத்தில் அதில் பணம் சேமித்தபின், அந்தப் பணத்தின் மீது அதிக தொகை கிடைப்பது அது முஸ்லீம்களுக்கு ஜாயிஸ் ஆகும். அதாவது கூடும். அந்த பணம் வட்டியல்ல என்று பதில் அளித்தார். அந்த பதில் முபாரக்பூர் அல்ஜாமியத்துல் அஷ்ரபியா என்னும் அரபிக்கலாசாலையின் மாதாந்திர பத்திரிகையில் 1989-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்தது. அதைப் படித்து பார்த்த முகமது அமீர்ஜான் என்பவர் மேலும் தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அதற்குப் பதிலும் அதே அஷ்ரபிய்யா பத்திரிகையில் மே, ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. அப்பதிலில் அவர் கீழ்கண்ட நபிநாயகத்தின் மேலும் ஒரு வாக்கியத்தை தமக்கு ஆதாரமாக எழுதியுள்ளார்.

‘முஸ்லீம்களுக்கும், சுதந்திர அந்தஸ்துள்ள முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் நடுவில் வட்டி இல்லை’ (அதாவது அவர்களுக்குள் நடைமுறையில் இருக்கும் வட்டி லேவாதாவி வட்டி எனக் கருதப்படாது)

ஆதாரம்:ADDDIRAYA FITAKRIJIL HIDAYA ALA-HAMISHIL HIDAYA பக்கம் 70 பாகம் 3

இஸ்லாமிய சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத முஸ்லீம் அல்லாத நபா, அவர் சுதந்திரமனாவர் என்று இஸ்லாமிய சட்டம் கருதுகிறது. முஸ்லீம் அல்லாத அவர் கிறிஸ்துவரோ யூதரோ அந்நிலையுள்ளவர், வேறு யாராகவும் இருக்கலாம். அவர்களுக்கு இடையில் பணம் கடனாக கொடுக்கப்பட்டு, கொடுக்கல் வாங்கலில் அதிக தொகை பெறுவது, அத்தொகை பெறுவதோ, செலுத்துவதோ வட்டியெனக் கருதப்படாது. அந்த தொகைக்கு வட்டி என்றப் பெயர் வழங்குகிறது. ஆனால் அது சட்டப்பூர்வமாக வட்டியே ஆகாது என்று அவர் ஆதாரம் கொடுத்துள்ளார். இன்னும் அவர் கூறியதாவது, முன் நாம் வெளியிட்ட பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு சரியானதும், உண்மையானதும் என்றும் உறுதியாக எழுதியுள்ளார்.

அது அவ்வாறிருக்க இதற்கு முன் நம் இந்தியா நாட்டில் வட்டி கூடுமா என்பது பற்றி பத்வா இருக்கிறதா என்று ஆராயும்போது முற்காலத்திலேயே பத்வாக்கள் இருப்பது தெரிய வருகிறது. அவற்றை கீழ்காண்க:-

ஆங்கிலேயர் வந்து நம் நாட்டை கைப்பற்றிய பின் நம்நாடு சுதந்திரம் இழந்து விட்டது. மக்களோ அவர்களுக்கு அடிமையாகிவிட்டனர். அச்சமயம் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களுக்கு பணம் கொடுத்து அதற்கு கிடைக்கும் வட்டி பெறலாமா? அல்லது பணம் வாங்கி வட்டி கொடுப்பது ஆகுமா? என்று கேட்டதற்கு தற்போது முஸ்லீம் ஆட்சி இல்லாததால் அவர்களிடமிருந்து கிடைக்கும் வட்டி பெறலாம். கொடுக்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் வட்டி கொடுப்பதில் தயக்கம் வேண்டும் என்று எச்சரித்துள்ளார். அந்த தீர்ப்பு அளித்தவர் அக்காலத்திலும்> நம் நாடு முழுவதிலும் எல்லா ஆலீம்களுக்கும் தலை சிறந்தவரான நாளது வரையிலும் மதிக்கப்பட்டு வருபவரான ஹஜ்ரத் மௌலானா ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி என்பவர் ஆவார். அதன் பின் பல வருடங்களுக்குப் பிறகு லக்னோ பரங்கி மகால் என்னும் இடத்தில் பெயர் பெற்ற ஆலீம்கள் குடும்பத்தில் பிறந்த கண்ணியமும், தலைசிறந்தவருமான மௌலான அப்துல் ஹய் என்பவரும்> ராம்பூர் நகரத்தில் உள்ள மௌலானா இர்ஷாத் உசேன் என்ற பெரியவரும் இந்த அரசாங்கத்pல் வட்டி கூடும் என்ற பத்வா கொடுத்துள்ளனர். அதை தவிர ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கலைக்கு தலைவரான மௌலானா மனாஜிர் ஹசன் கீலானி தேவ்பந்தி என்பவரும் பலகோணங்களில் ஆராய்ந்து வட்டி கூடும் என்று அளித்த பத்வா, ஹைதராபாத்திலிருந்து இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் ரஹ்பரேதக்கன் தினசரி பத்திரிகையின் 1338வது ஆண்டு இதழில் வெளிவந்துள்ளது. அதை அவர் அப்போதே விரிவாகவும் உற்சாகத்தோடும் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் பம்பாயிலிருந்து’உருது டைம்ஸ்‘ என்னும் ஒரு தினசரி வெளிவருகிறது. அந்த தினசரிக்கும் நிறைய மதிப்பும் அது நிறைய விற்பனையுமாகிறது. ஜனவரி மாதத்தில் முபாரக்பூர் அஷ்ரபியா மாத பத்திரிகையில் வெளிவந்த மேற்கண்ட மார்க்க தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அதனால் பற்பல நன்மைகள் ஏற்படக்கூடும் என்றும் பல உதாரணங்கள் கொடுத்தும் அதன் பல வெளியீடுகளில் கட்டுரைகள் வெளிவந்தன. அதை தவிர மௌலானா முகமது புரோகுல் காதிரி ASC என்பவர், பம்பாயிலுள்ள ‘அஷ்ரபிய்யாகரீப் நவாஸ்’ என்னும் மதரஸாவின் அரபிக்லிட்டரசர் புரோப்பசர் ஆவார். அவர் ‘மௌலானா அம்ஜதீ’ அவர்களுடைய மார்க்கத் தீர்ப்பை புகழ்வதோடு இந்திய அரசாங்க பேங்கு வகையறா மூலமும், நாட்டு சகோதரர்கள் மூலமும் கிடைக்கும் லாபத்தொகை, வட்டியே அல்ல. அதாவது வட்டிவகையில் சேர்ந்ததன்று. அது சுத்தமான இலாபமே என மிக ஆணித்தரமான ஆதாரத்தோடும் நுணுக்கமான தெளிவோடும் தீர்ப்பு அளித்ததோடு தெஹ்லவீ மௌலானா ஷா அப்துல் அஜீஸுடைய இன்னொரு தெளிவான தீர்ப்பையும் தனக்கு ஆதாரமாக நகல் செய்துள்ளார். இது கல்கத்தாவிலிருந்து 1989ம் ஆண்டு 1, ஜுலை ‘நவாயே-ஹபீப்‘ வராந்திர பத்திரிகையில் ‘பேங்கு மூலம் பெறும் – செலுத்தும் இலாபம் வட்டியே அல்ல’ என்ற தலைப்பில் வெளிவந்து உள்ளது. இது அனைத்தும் நம் இந்திய நாட்டுக்கு சம்பந்தமானதாகும். நம்நாட்டு பேங்கு, போஸ்டாபீஸ், இன்சூரன்ஸ் முதலிய இடங்களிலிருந்து கிடைக்கும் இலாபம் வட்டி> முஸ்லிம்களுக்கு தடையின்றி சுத்தமானது என்பது பொருளாகும். கடன்பெற்று வட்டி செலுத்துவதற்கும் தடையில்லை. அந்தப் பணத்தை எல்லா நற்காரியத்திற்கும் செலவு செய்ய தடை இல்லை என்றும், மேலும் அநேக பத்வாக்கள் உள்ளன. ஆனால் வட்டி வாங்குதல்,கொடுத்தல் விசயத்தில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். வட்டி பற்றிய, ஹியா ஆலிம்களின் கருத்தும் அதுவே. எந்தவேலை செய்தாலும் மனம் திருப்திபட்டு செய்வதுதான் சாலச்சிறந்தது. அதை அனுசரித்து இந்த பத்வாக்கள் வெளியிடப்படுகிறது. ஹைதராபாத்தில் தாருஸ்ஸலாம் கோ-ஆபரேட்டிவ் அர்பன் பேங்க் என்று 1987ம் ஆண்டில் ஹஜரத் மஷாஹிக் ஷாஆகா மொஹம்மத் தாவுத் அபுல் உலாஹி என்ற பெரியவரால் துவக்கப்பட்டு நல்ல சேவைகள் செய்து கொண்டு வருகிறது. சுல்தான் சலாவுத்தீன் உவைசி எம்.பி. என்பவரின் தூண்டுதலால் நவாப் மீர் நூருத்தின்கான் என்பவரின் முயற்சியிலும் அவர்களுடைய தலைமையில் துவக்கப்பட்டது. இது தவிர கர்நாடக மாநிலத்திலும் அமானத் பேங்க் என்ற பெயரால் ஒரு வங்கி சேவை செய்து வருகிறது. எல்லாம் வல்ல நாயகம் நம்மை தப்பான வழியிலிருந்து செல்வதை விட்டு காப்பாற்றி நேர்வழி செல்ல துணைபுரிவானாக! ஆமீன்.

  1. புகழும் பெயரும் பெற்று விளங்கும் அரபிக் அல்ஜாமி அதுல் அஷ்ரபியா என்னும் ‘அஷ்ரபியா’ மாத சஞ்சிகையின் முகவரி
  2. ‘Ashrafia, Mubarakpur Azamgarh District(U.P.) – 276404

குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு, ஆதாரங்கள் உருதுவில் கீழ்கண்ட புத்தகங்களில் நிறைய உள்ளன.

A.’Bank aur Dak Khana Ke Muafe Ka Sarih Hukum’ Rs.2.00

முகவரி: Manager,

Razvi Kitab Ghar,

No. 15, Gaibi Nagar,

Bhivandi -421 302

  1. THaqeequr Ribq Rs.5-00

By Maulana Iqbal Ahmed Suhail M.A., L.L.B. (Aligarh)

முகவரி: Manager,

Nizami Book Agency,

Budaun -243601

வங்கியின் வட்டி கூடும் என்பது பற்றி இரண்டாம் கட்டுரை தமிழாக்கம் கிடைக்குமிடம்

சையத் இஸ்மத் பாஷா சக்காப், கிள்ளை.

1-8-1989 – Hijri 1409. 12-Zulhaj

Saqaf Sahib,

Peria Taikal

Killai – 608 102.

வெளியீடு:

மனித உரிமை முன்னேற்ற சங்கம்,

24 கோரி குளசந்து,

ஜாபர்ஷா தெரு, திருச்சி 620008

கிளை: தம்மம்பட்டி.”

Add Comment

Your email address will not be published.