கஃபா வலியை தவாபு செய்யுமா?

கஃபா வலியை தவாபு செய்யுமா?

By Sufi Manzil 0 Comment February 7, 2012

கேள்வி: கஃபா வலிமார்களை தவாபு செய்யுமா?

பதில்: கஃபா என்பது மக்காவிலுள்ள இறையில்லம். இது நான்காம் வானத்திலுள்ள பைத்துல் மஃமூர் என்னும் மஸ்ஜிதுக்கு நேர் கீழாக அமைந்;துள்ளது. இந்த மஸ்ஜிதில்தான் இறைவன் தனது வேதமாகிய திருக்குர்ஆனை லவ்ஹுல் மஹ்பூள் என்னும் பாதுகாகக்கப்பட்ட பலகையிலிருந்து ஒரு சேர ரமலான் மாதம் இறக்கினான்.  அதன்பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இருபத்தி மூன்று வருடங்களில் இறக்கி வைக்கப்பட்டது.

இன்று கஃபா உலக முஸ்லிம்களின் கிப்லாவாக –முன்னோக்கும் தலமாக விளங்கி வருகிறது. கஃபா ஏன் கிப்லாவாக கொள்ளப்பட்டது எனில், அது இறைவனது ஜோதியான 'நூர்' இறங்கும் ஸ்தலமாக இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

வலிமார்களின் உள்ளமானது, இறைவன் வசிக்கும் இல்லமாகவும், அவனது ஜோதி தஜல்லியாகும் ஸ்தலமாகவும் விளங்குகின்றது. இதுபற்றி இறைவன் ஹதீது குத்ஸியில்…

'மனித சரீரத்தில் நான் ஒரு சதைக் கட்டியைத் தேர்ந்தெடுத்தேன். அந்த சதைக் கட்டியில் ஒரு கல்பை தேர்ந்தெடுத்தேன். அந்த கல்பில் ஒரு ரூஹைத் தேர்ந்தெடுத்தேன். அந்த ரூஹில் ஒரு ஸிர்ரைத் தேர்ந்தெடுத்தேன். அந்த ஸிர்ரில் ஒரு நூரைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நூரில் ஒரு மறைவைத் தேர்ந்தெடுத்தேன். அந்த மறைவில் நான் இருக்கிறேன்;' என்று கூறுகின்றான்.

இன்னும் அந்த கஃபாவில் இறைவனின் ஜோதி வெளியீடாகிறது. ஆனால் வலிமார்களின் கல்புகளில் இறைவனே வெளியீடாவதால் அந்த இறைவனை கஃபா தவாபு செய்கின்றது என்பதைத்தான் ராபியா பஸரீ ரலியல்லாஹு அன்ஹா அவர்களை கஃபா தவாபு செய்தது என்பதாக சரித்திரங்களில் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது.

இன்னும் ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் என்று மலக்குகளுக்கு நாம் கூறிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக) இப்லீஸைத் தவிர்த்து அவர்கள் ஸுஜுது செய்தனர். களிமண்ணால் படைக்கப்பட்டவருக்கு நான் ஸுஜுது செய்வேனா என்று இப்லீஸ் கூறினான். (அல்குர்ஆன் 7:11,12)

இவ்வசனத்திற்கு இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் 'தாவீலாத்துன் நஜ்மிய்யா' என்னும் நூலில் விரிவுரை செய்யும் போது, 'அல்லாஹ் ஆதம் நபி அவர்களை சிருஷ்டித்து அவரில் தஜல்லி(வெளி)யானான். ஆதலின், ஸுஜுது செய்யுமாறு கட்டளையிட்டதானது, அந்தரங்கத்தில் அல்லாஹ்வுக்குத்தான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸுஜுதுக்கு கிப்லாவாக கஃபாவுடைய அந்தஸ்த்திலேயே இருந்தார்கள்'; என்று கூறுகின்றனர்.

எனவே ஆதம் கஃபாவாயிருப்பதுடன் தம்மிறைவனை தன்னிலிருந்து வெளியீடாக்கும் அந்தஸ்த்தையும் பெற்றிருப்பதால் தான் மலக்குகள் அவர்களைத் தவாபு செய்து கொண்டிருந்தனர் என்பதாக ஸஹீஹான ஹதீதுகளில் வந்திருப்பதாக 'அன்வாரெ முஹம்மதி' என்ற நூலில் வந்துள்ளது.

ஹஜ்ரத் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள,; 'மஸ்ஜித் என்பது வலிமார்களின் கல்பாயிருக்கும். அது எல்லோருக்கும் ஸஜ்தா செய்யும் ஸ்தானமாகவும் இறைவன் குடிகொண்டிருக்கும் இல்லமாகவும் இருப்பதால் கஃபா மனிதர்களை (வலிமார்களை) தவாபு செய்வது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல' என்று கூறுகிறார்கள்.  

ஆதாரம்: வஸீலா என்றால்என்ன?