இமாம் நஸாயீ ரலியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
இவர்களின் இயற்பெயர் அஹ்மத் இப்னு ஷுஐப் என்பதாகும். ஹிஜ்ரி 241ல் குராஸானிலுள்ள நஸாயீ என்ற ஊரில் பிறந்ததினால் நஸாயீ என்றழைக்கப்பட்டனர்.
15வது வயதில் கதீபா பின் ஸயீத் என்பவரிடமும்,பின்பு இஸ்ஹாக் பின் ரஹ்வியா, அபூதாவூத் சஜஸ்தானி ஆகியோர்களிடம் ஹதீதுக்கலை கற்றனர். நெடுங்காலம் பழைய கெய்ரோவிலேயே தங்கி வாழ்ந்தனர்.
இவர்கள் ஹன்பலி மத்ஹபை பின்பற்றினார்கள் என்றும்> ஷாஃபி மத்ஹபை பின்பற்றினார்கள் என்றும் இரு கருத்துக்கள் உள்ளன.
துவக்கத்தில் ஸுனனுல் கபீருன் நிஸாயீ என்று ஒரு நூல் எழுதினர். அதிலிருந்து ஸஹீஹான ஹதீதுகளை பொறுக்கி எடுத்து ‘அல் முஜ்தபா’ என்ற நூல் இயற்றினர். அதுவே ‘ஸுனனே நஸாயீ’ என்னும் பெயருடன் இப்போது இருந்து வருகிறது.
இதைத் தவிர கிதாபுல் கஸாயிஸ் என்றும் ஒரு நூல் எழுதியுள்ளனர். அதில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாண்புகள் வரையப்பட்டுள்ளன. தாங்கள் கூறும் கூற்றுக்களுக்கு ஆதாரமாக இமாம் ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதுகளை ஆதாரமாக எடுத்துள்ளனர்.
இந்த நூலில் அலி நாயகத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறீர்களே! மற்ற சஹாபாக்களைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, நான் திமிஷ்கில் இருந்தபோது அலி நாயகத்தைப் பற்றி தவறான கருத்து நிலவுவதைக் கண்டேன். அதனால் உண்மையை எடுத்துரைக்க இதை எழுதினேன் என்றார்கள்.
அந்நூலை மேடை மீதேறி படிக்கத் துவங்கியபோது அதில் அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி எழுதியுள்ளீர்களா? என்று ஒருவர் வினவ, ‘முஆவியாவின் வயிற்றை அல்லாஹ் நிரப்பமாக்கி வைக்கமாட்டான்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஹதீதைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லையே’ என்று இவர்கள் கூறினர். அதன் காரணமாக மக்கள் சினமுற்று இவர்களை நையப் புடைத்தனர்.
அதனால் மயக்கமுற்றனர். மயக்கம் தெளிந்ததும் தம்மை மக்காவிற்கு எடுத்துச் செல்லுமாறு வேண்டினர். அவ்விதமே மக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது ஹிஜ்ரி 303ஸபர் 12ஆம் நாள் மக்காவிற்கு அண்மையில் மறைந்தார்கள். இவர்களின் உடல் ஸஃபா-மர்வாவிற்கு இடையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர்களை மார்க்கத்திற்காக உயிர் நீத்தவர் (ஷஹீத்) என்று இமாம் தாரகுத்னி கூறுகிறார்கள்.