ஆஷூரா நோன்பும் பலன்களும்
By Sufi Manzil
ஆஷூரா என்பது ஹீப்ரு சொல்லாகும். யூதர்களின் திஷ்ரி மாதத்தின் 10ஆம் நாளாகும். இன்றுதான் அரபிகளின் முஹர்ரம் மாதம் 10ஆம் நாளும் வருகிறது. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். ‘இந்நாளின் சிறப்பென்ன?’ என்று யூதர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாங்கள் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். மேலும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள், நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில் அடுத்த வருடம் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள்
அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி, முஸ்லிம்)
ஆஷூரா நோன்பின் சிறப்புகள்:
‘ரமழானின் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பாக அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளையிட்டார்கள்’. (ஆதாரம்: புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும்’ எனக் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அபூகதாதா ரழியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம்)
ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளாக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நூல்: புகாரி 1592
மற்றொரு அறிவிப்பில்
குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர், ‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நூல்: புகாரி 1893
ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹஹு அவர்களிடம் கேட்கப்பட்ட போது> இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை.
இந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)
ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்> கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஆஷூரா நோன்பை நோற்க ஆர்வமூட்டல்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விளையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம்.’ என்று றுபைய்யிஃ பின்த் முஅவ்வத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமைபடுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவுக்கு அவர்களுக்கு அந்த விளையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.
(பின்வரும் அறிவிப்பை) மக்களுக்கு அறிவிக்கும்படி அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாராவது உணவு உண்டிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும், காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நோன்பு நோற்கும் காலம்:
ஆஷுரா தினத்தன்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)
செய்ய வேண்டிய அமல்கள்:
ஆஷூரா அன்று நூஹ் நபி கப்பல் கரை ஒதுங்கி மக்கள் தரை இறங்கிய போது பத்திரமாக கரை சேர்த்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பு வைத்தனர். நோன்பு திறக்க உணவுப் பற்றாக்குறை. மிச்சம் மீதியிருந்த உணவுதானியங்கள் எல்லோருக்கும் பற்றாது. அதையெல்லாம் ஒன்றுசேர்த்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் அதில் பிஸ்மில்லாஹ் ஓதி சமைத்தனர். என்ன ஆச்சரியம் ! அனைவரும் வயிறுநிரம்ப உண்ணும் அளவுக்கு அதில் பரக்கத் உண்டானது.
அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் :
قِيلَ يَا نُوحُ اهْبِطْ بِسَلَامٍ مِّنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَىٰ أُمَمٍ مِّمَّن مَّعَكَ ۚ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ
நூஹே ! சாந்தியுடன் கப்பலிலிருந்து இறங்குவீராக! உம்மீதும் உம்முடன் உள்ள மக்களின் மீதும் பெரும் பாக்கியங்கள் பரக்கத்துகள் உண்டாவதாக ! (11:48)
இதுதான் பிரளயத்திற்கு பிறகு பூமியில் சமைக்கப்பட்ட முதல் உணவு. இதன் அடிப்படையில்தான் ஆஷூரா நாளில் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் பறிமாறி உண்டால் ஆண்டு முழுதும் பரக்கத் பெருகும்;. (இஆனா 2/267)
ஆஷூராவின் இரவில் விழித்திருந்து வணங்கும் வழக்கமுடையவர் மரணிக்கும் முன் தன் மரணத்தை அறிவிக்கப்படுவார் என்று வலிகள் கோமான் கௌது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்- எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செய்வாரோ அவருக்கு அந்த வருடம் முழுவதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான் (பைஹகீ)
இதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்’ என்று சுப்யான் இப்னு உயைனா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதும், தர்மம்செய்வதும், குளிப்பதும், கண்களுக்கு சுருமா இடுவதும், அனாதைகளின் தலையைத் தடவிக் கொடுப்பதும், மார்க்க அறிஞர்களைச் சென்று காண்பதும், தம் குடும்பத்தினர்களுக்குத் தாராளமாக செலவு செய்வதும், நகம் வெட்டிக் கொள்வதும், நஃபில் தொழுகை தொழுவதும், குல்ஹுவல்லாஹு சூரத்தை ஆயிரம் முறை ஓதுவதும் முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும். ஆதாரம்: மஙானீ.
இந்நாளில்தான் வானம், பூமி, சூரியன், சந்திரன், கோளங்கள், சுவனம், நரகம், லௌகு, கலம் ஆகியவைகளெல்லாம் படைக்கப்பட்டன. இந்நாளில்தான் உலகில் முதன்முதலாக மழை பெய்தது. ஆதம்> ஹவ்வா அலைஹிமிஸ்ஸாம் ஆகியோர் படைக்கப்பட்டதும் இந்நாளில்தான். அவ்விருவரும் சுவர்க்கம் சென்றதும் இந்நாளில்தான். இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்கு உயர்த்திக் கொள்ளப்பட்டதும் இந்நாளில்தான். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கப்பலிலிருந்து கரை இறங்கியதும், யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அரசாங்கம் மீண்டதும், இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததும் அவர்களுக்கு ‘கலீல்’ என்னும் பட்டம் இறைவனால் சூட்டப்பட்டதும், அவர்கள் நம்ரூத் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலையானதும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டதும், ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவை இறைவன் அதிகப்படுத்தியதும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விண்ணகத்திற்கு இறைவன் உயர்த்திக்கொண்டதும், இந்நாளிலேதான். இமாமுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கர்பலாக் களத்தில் ஷஹீதாக்கப்பட்டதும் இந்நாளிலேதான். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸல்லம் அவர்களின் ஆணைப்படி ஒவ்வோர் ஆண்டும் கஃபாவின் கதவுகள் திறக்கப்படுகின்றன. இந்நாளில்தான் உலகம் முடிவுறும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்..
இந்நாளில் குழந்தைகளுக்கு கல்வி துவக்கி வைப்பின் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்று கூறுவர் என்று இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது மஙானீ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் நம் அனைவர்களின் நாட்டதேட்டங்களை நம்முடைய கண்மணிகளான இமாமுனா ஹஸன், இமாமுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் பொருட்டால் நிறைவேற்றித் தந்தருள்வானாக! ஆமீன்.