அல்லாஹ்வை சூழ்ச்சியாளன் என்று சொல்லலாமா?
By Sufi Manzil
கேள்வி :- நமது சுன்னத் வல் ஜமாஅத்தினர்களிலும் சிலர் வஹ்ஹாபிகள் கூறுவது போன்று அல்லாஹ்வைப் பற்றி அவன் சூழ்ச்சி செய்பவன் என்று சொல்கின்றனர். அதற்கு உதாரணமாக கீழ்காணும் ஆயத்தை காட்டுகின்றனர்.
وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ
“ (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்”
இந்த ஆயத்தின் மொழிபெயர்ப்பு சரிதானா? அது சுன்னத் வல் ஜமாஅத் அகீதாவிற்கு உட்பட்டதுதானா? நாம் அவ்வாறு அல்லாஹ்வை சொல்லலாமா?
பதில்: முதலில் பல குர்ஆனின் ஆயத்துகளுக்கு சரியான கருத்துப்படி அர்த்தம் வைக்காமல் தப்ஸீரைப் பார்த்து விளங்காமல் நேரடி அர்த்தம் கொள்வது நமது சுன்னத் ஜமாஅத் அகீதாவையே மாற்றிவிடும்.
அல்லாஹ்வின் சிபத்துகளை அறிந்திருப்பதும் – அவன் குறைகளற்றவன் என்றும் நம்பிக்கை கொள்வதுமே உண்மையான ஈமான்.
இங்கு சூழ்ச்சி என்பது ஒரு குறைவான பண்பு. அல்லாஹ் மீது அதை சுமத்துவது ஆகாது. ஆதலால் நாம் அவ்வாறு அர்த்தம் கொள்வது கூடாது. அதனால்தான் நமது அகீதா இமாம் அல்லாமா முப்தி ஹகீமுல் உம்மத் அஹ்மத் யார்கான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இதற்கு மிக அழகாக விளக்கம் தந்துள்ளார்கள்.
மேற்படி திருவசனத்திற்கு, “காபிர்கள் நபியவர்களுக்கு எதிராக மறைமுகமாகச் சதி செய்தனர். அல்லாஹுத்தஆலாஅவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக அவர்களின் சதியை முறியடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்கினான் . அப்படி மறைமுகமாக தண்டனை வழங்குவதில் அல்லாஹ் மேன்மையுடையவன்’ என்று நமது அகீதாவிற்கு பொருந்தும்படி அர்த்தம் வைத்து மொழி பெயர்த்துள்ளனர். இதுதான் சரியானதுமாகும்.
தப்ஸீர்களிலும் பெரியார்களின் சொற்களும் இப்படித்தான் காணக் கிடைக்கிறது.
அல்லாமா முஜத்தித் அஃலா ஹழ்ரத் பரேலவி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கன்ஜுல் ஈமானிலும் இவ்வாறே கூறியுள்ளார்கள்.