அல்லாஹ்வுக்காக நேசிப்பதும், பகைப்பதும்
By Sufi Manzil
ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாமுனா ஙஸ்ஸாலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய கீமியாயே சஆதத் என்ற நூலில் அல்லாஹ்வுக்காக நேசம் வைப்பதைப் பற்றியும், அல்லாஹ்வுக்காக பகைமை வைப்பதைப் பற்றியும் விவரித்துள்ளார்கள். அவை இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.
அல்லாஹ்வுக்காக நேசிப்பது:
அல்லாஹ்வுக்காக ஒருவனை நேசிப்பதானது தீனில் மிகச் சிறந்த இபாத்துகளில் ஒன்றாகவும்,பெரிய பதவிகளில் சேர்ந்ததாகவும் இருக்கிறது.
யாராவதொருவன் அல்லாஹ்வுடைய பாதையில் மற்றொருவனை தன்னுடைய சகோதரனாக்கிவிடுவானாகில் அவனுக்கு சொர்க்கத்தில் எந்த அமலுக்கும் கிடைக்காத ஒரு பதவி கிடைக்கும் என்றும்,
இரண்டு முஃமின்கள் சேர்வதினால் ஒருவனால் மற்றொருவனுக்கு ஏதாவது ஒரு பிரயோஜனம் உண்டாகாமல் போகாது என்றும்
கியாமத்து நாளில் அர்ஷைச் சுற்றிலும் நாற்காலிகள் போடப்படும். அந்த நாற்காலிகளின் மீது மனிதர்களில் நின்றும் ஓர் கூட்டம் உட்காரும். அவர்களுடைய முகங்கள் பூரணச் சந்திரன் போல் பிரகாசமாயிருக்கும். எல்லோரும் அந்த நாளில் அச்சமுற்றவர்களாக இருக்க, இவர்கள் அச்சமில்லாதவர்களாகவும், எல்லோரும் திடுக்கம் நிறைந்தவர்களாக இருக்க, இவர்கள் தீரமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அல்லாஹுத்தஆவுடைய நேசர்களாகயிருப்பார்கள். இவர்களுக்கு பயமும், துக்கமும் இருக்காது என்று நாயகமவர்கள் சொன்னார்கள். அப்போது யாரஸூலுல்லாஹ் இவர்கள் யாராகயிருப்பார்கள்? என்று கேட்கப்பட்டது,
அதற்கு இவர்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரையொருவர் நேசித்தவர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவளினார்கள்.
அல்லாஹ்விற்காக வைக்கும் நேசம் என்பது எது?
அல்லாஹ்விற்காக நேசிக்கும் நேசமானது ஈமானில்லாதவர்களில் ஏற்படாது. இது இரண்டு வகையாக இருக்கிறது.
முதல் வகை: ஏதாவது ஒரு பிரயோஜனத்தை நாடி ஒருவனை நேசிப்பதாகும். ஆனால் அது தீன் சம்பந்தமான பிரயோஜனமாகவும், அல்லாஹ்வுக்காக என்று நாடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
உதாரணமாக: ஆசிரியர் உனக்கு இல்லைம படித்துக் கொடுக்கிறபடியால் அவரை நீ நேசிப்பது அல்லாஹ்வுக்காக நேசிக்கிற நேசமாகும். ஆனால், இல்மைப் படிப்பதில் நீ கருதிய பொருள் ஆகிறத்தாயிருக்க வேண்டும். பெருமையும், பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமிருக்க கூடாது. துன்யா சம்பந்தமான நோக்கமிருந்தால் அந்த நேசம் இதில் சேராது.
இரண்டாம் வகை: ஒருவனால் எவ்வித பிரயோசனத்தையும் நாடாமல் அல்லாஹ்வுக்காகவே அவனை நேசிப்பதாகும். இது பெரிய வகை. ஒருவனிடத்தில் இல்மைப் படிக்கவுமில்லை, அவனுக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை. அவனால் தீன் சம்பந்தமான வேலைகளுக்காக நேரத்தை செலவு செய்யவுமில்லை. ஆனால், அவன் அல்லாஹுத்தஆலாவிற்கு வழிப்பட்ட அடிமையாகவும், அவன் மீது ஆசையுள்ளவனாய் இருப்பதால் ஒருவன் அவனை நேசிக்கிறான். இப்படி நேசிப்பது அல்லாஹுக்காக நேசிப்பதாகும். இது பெரிய நேசமாகும்.
ஏனெனில் இது அல்லாஹ்தஆலாவின் மீது அதிக ஆசையிருப்பதினால் உண்டாகிற நேசமாகும். ஆஷிக்கானவன் தன் மஃஸூக் இருக்கிற தெருவையும், அவன் வசிக்கின்ற இடத்தையும்,அந்த மஃஸூக் வசிக்கிற வீட்டின் சுவற்றையும், மேலும் மஃஸூக் வசிக்கிற தெருவிலிருக்கும் நாயை மற்ற நாயை நேசிப்பதைக் காட்டிலும் நேசிக்கிறான். ஏனென்றால் அந்த ஆஷிக் மஃஸூக் மீது கொண்ட இஷ்கின் காரணத்தால் அவன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நேசிக்கிறான்.
இதேபோல் எவன் ஒருவனுக்கு அல்லாஹ்தஆலாவின் மீது இஷ்கின் எல்லைக்கு வந்துவிட்டானாகில் அவன் அல்லாஹுத்தஆலாவுடைய எல்லா அடியார்களையும் அதிலும் சொந்தமாக அவனின் உவப்புள்ள அடியார்களையும் அவனுடைய எல்லா சிருஷ்டிகளையும் நேசிப்பான். ஏனென்றால் உண்டாக்கப்பட்டிருப்பவைகள் எல்லாம் தன் மஹ்பூபாகிய அல்லாஹுவுடைய வல்லமையாகிய சக்திக்கும் படைப்பிற்கும் அறிகுறியான அடையாளங்களாயிருப்பதினால் ஆகும்.
இனி அல்லாஹ்தஆலாவை நேசிப்பது இரண்டு வகையாகும்.
முதலாவது, துன்யா ஆகிரத்து இவைகளுடைய நிஃமத்தாகிய செல்வத்துக்காக நேசிப்பதாகும்.
இரண்டாவது, எவ்விதக் காரணமுமில்லாமல் அல்லாஹுத் தஆலாவிற்காக மாத்திரம் அவனை நேசிப்பதாகும். இது நிரப்பமான நேசமாகும். அல்லாஹுத்தஆலாவுடைய மஹப்பத்தின் உறுதியானது ஈமானின் உறுதியைப் போலிருக்கும். ஈமான் எந்தளவு உறுதியாயிருக்கிறதோ அவ்வளவு அதிகமாய் அல்லாஹுத்தஆலாவுடைய மஹப்பத்தும் உறுதிப்பட்டு அதன்பிறகு அந்த மஹப்பத்தானது அவனுடைய உவப்புள்ள மக்பூலான அடியார்களில் செல்கிறது.
ஒருவன் ஆலிம்களையும், செய்யிதுமார்களையும், சூபியாக்களையும், ஆபிதுகளையும் இவர்களுடைய ஊழியர்களையும் இவர்களை நேசிப்பவர்களையும் நேசிப்பானாகில் அவன் அல்லாஹ்வுக்காக நேசித்தவன் என்றாகுவான்.
அல்லாஹ்வுக்காக பகைக்கும் பகை:
எவன் ஒருவன் அல்லாஹ்வுக்காக வழிபடுகிறவர்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறானோ அவன் நிச்சயம் காபிர்களையும், அக்கிரமக்காரர்களையும், பாஸிகுகளையும் பாவிகளையும் பகைப்பான்.
ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதியாக இருப்பதினால்.
ஒருவன் மற்றொருவனை நேசித்தால் அவன் நேசர்களையும் நேசித்து அவன் பகைவர்களையும் பகைப்பான்.
ஒரு முஸ்லிமானவன் பாஸிகாக இருந்தால் அவனுடைய இஸ்லாத்திற்காக நேசமும், அவனுடைய பாஸிகுதனத்திற்காக அவன்மேல் பகையுமிருக்க வேண்டும். ஆகவே நேசத்தையும், பகையையும் ஒன்று சேர்ப்பான்.
எவனொருவன் பாவம் செய்வதினால் அல்லாஹ்வுத் தஆலாவை விரோதப்படுத்துகிறானோ அவன் உனக்கு விரோதம் செய்ததுபோல் நீ எண்ண வேண்டும். அப்போது அந்த விரோதத்திற்கு தக்க அளவாய் அவனை பகைப்பாய், ஒற்றுமையின் அளவாய் நேசிப்பாய். இதன் அடையாளம் நீங்கள் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளும் நடவடிக்கைகளிலும், கலந்திருப்பதிலும், பேசுவதிலும் வெளியாக வேண்டும். எப்படியென்றால் பாவிகளின் மேல் கோபம் கொண்டு கடிந்து பேச வேண்டும். அவன் பாவம் அதிகமாயிருந்தால் அதிகம் கோபம் காட்ட வேண்டும். வரம்பு மீறியிருந்தால் அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.
ஆனால் ஒருவன் சொந்தமாக உன் விசயத்தில் கொடுமை செய்தால் அதை அப்போது நீ மன்னிப்பதும், பொறுத்துக்கொள்வதும் மிக நன்மையாயிருக்கும்.
ஒருவன் தன் விசயத்தில் கோபிக்கிறவனாகவும், அல்லாஹுவுடைய விசயத்தில் மவுனம் சாதிப்பவனாகவும் இருந்தால் இது லேசாக்குவதும், முனாபிக் தனமும் மடத்தனமுமாயிருக்கும்.
அல்லாஹ்வுடைய பகைவர்கள் பல பிரிவினராக இருக்கின்றனர். எனவே அவர்கள் மீது கோபம் கொள்வதும் பல பிரிவினதாக இருக்கிறது.
முதலாவது காபிர்களின் பிரிவு:
இவர்கள் ஹர்பிகளாக இருப்பின் இவர்கள் மீது பகை கொள்வது பர்ளாகும். இவர்களைக் கொல்வதும், சிறைபிடிப்பதும் நாம் செய்யும் நடவடிக்கையாகும்.
திம்மி காபிர்களாகயிருப்பின், இவர்கள் மீதும் பகை வைப்பதும் நம் மீது கடமையாகும். இவர்களை லேசாக நினைக்க வேண்டும். கடுமையாக நடப்பது கூடாது. இவர்களை நேசிப்பது பெரிய மக்ரூஹாக இருக்கிறது.
இவர்கள் மேல் நம்பிக்கை வைப்பதும், இவர்களை அரசு வேலைகளில் முஸ்லிம்களின் மீது அதிகாரியாக்குவதும் இஸ்லாமைத் தாழ்த்துவதாகவும், பெரும்பாவமாகவும் இருக்கிறது.
அல்லாஹ்மீதும் இறுதிநாளின் மீதும் விசுவாசம் கொண்டவர்கள் அல்லாஹ்வுடைய பகைவர்களை நேசிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன்)
இரண்டாவது பிரிவு: ஜனங்களை பித்அத்தின் பக்கம் அழைக்கின்ற பித்அத்காரர்களின் பிரிவாகும்.
இவர்களிடத்தில் பகையை வெளிப்படுத்துவது முக்கியமானது. ஏனென்றால் இவர்களின் மீது ஜனங்கள் வெறுப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக. இவர்களுக்கு சலாமுரைப்பதும், சலாத்திற்கு பதிலுரைப்பதும் ஏற்றமானதல்ல.
மூன்றாவது பிரிவினர்: ஜனங்களுக்கு வருத்தத்தை உண்டாக்குகிற ஒரு பாவமான காரியத்தை செய்கிறவர்களின் பிரிவாகும். உதாரணமாக பொய் சாட்சி சொல்லுதல், கொடுமை செய்தல்,ஓரவஞ்சகமாக தீர்ப்பு சொல்லுதல், புறங்கூறல், கலகத்தை உண்டாக்குதல்.
இவர்களை விட்டும் முகம் திருப்புவதும், இவர்களைக் கண்டிப்பதும் மிக நன்மையாக இருக்கும். இவர்களை நேசிப்பது கடினமான மக்ரூஹாக இருக்கும். ஆனால், ளாஹிறு பத்துவாவில் ஹறாமல்ல. ஏனெனில் தக்லீபென்னும் விதிவிலக்குகளின் கட்டுப்பாட்டில் இது வராமையினால்.
நான்காவது பிரிவினர்: ஒருவன் சாராயம் குடிக்கிறதிலும், பாவம் செய்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறான். அவனால் ஒருவருக்கும் தொந்திரவு இல்லாமல் போனால் அவன் ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கையிருந்தால் அதைப்பற்றி அவனுக்கு மெதுவாக புத்தி சொல்வது ஏற்றமாகும். இல்லாவிட்டால் அவனை விட்டும் முகந்திருப்புவது ஏற்றமாகும். எனினும் அவன் சலாத்திற்கு பதிலுரைக்க வேண்டும். அவனை சபிக்க கூடாது.