அப்துர் ரஹீம் அல் புர்யீ ரலியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அளவற்ற காதல் கொண்டு தம்மையே தாம் உருக்கி நீராக ஆக்கிச் சுவனம் புகுத்த இப்பெரியாருக்கு ‘ரயீஸுல் உஷ்ஷாக்'(பேரின்பக் காதலர்களின் தலைவர்) என்ற சிறப்புப் பெயர் உண்டு.
இவர்கள் லுத்புல் இலாஹி என்ற அரபுக் கவிதையொன்று இறைவனைப் பற்றி எழுதினர்.
அண்ணலாரின் அடக்கவிடத்தை தரிசிப்பதற்காக அடங்காக் காதலுடன் ஸலவாத் முழங்கிய வண்ணம் இவர்கள் மதீனாவை நோக்கி வரும் போது மதீனாவின் ஆளுனரின் கனவில் பெருமானார் தோன்றி அன்னாரின் அடையாளங்களை சொல்லி அவரை மதீனா நுழையவிடாமல் தடுத்திடுமாறு கூறினர். அவரும் அவர்களை அடையாளம் கண்டு அவ்வாறே தடுத்து நிறுத்தினார். அதனால் அவர்களுக்கு அண்ணலார் மீது இருந்த காதல் பெருந்தீ போன்றாகி நீர் போன்று உருகி அவ்விடத்திலேயே மறைந்தனர். உடனே மதீனாவின் ஆளுநரும் ஏனையோரும் இவர்களின் எலும்புகளை ஒன்று சேர்த்து அவ்விடத்திலேயே நல்லடக்கம் செய்து விட்டு மதீனா திரும்பினர்.
இவர்களின் அடக்கவிடம் பத்ரிலிருந்து மதீனா செல்லும் வழியில் சற்று விலகி மலையடிவாரத்தில் உள்ளது.
இவர்களை ஏன் அண்ணலார் தடுக்க வேண்டும் என்ற சந்தேகத்தோடு ஆளுநர் அவர்கள் படுத்துறங்கினார். அன்னாருக்கு அண்ணலார் கனவில் தோன்றி அவர் என்மீது எத்தகு காதல் கொண்டாரோ அத்தகு காதலை நானும் அவர் மீது கொண்டுள்ளேன். எனவே அவர் என்னை அண்மியதும் என்னையறியாமல் நான் எழுந்து அவரை வரவேற்பின் அது ஷரீஅத்திற்கு மாற்றமாகி விடுமே என்று கருதி அவர் என்னை அடையுமுன் தடுத்து நிறுத்த சொன்னேன் என்று சொல்லி மறைந்து சென்றார்கள்.