அபுல்ஹஸன் அலியுஷ் ஷாதுலி ரழியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
குத்புல்அஸ்கர் ஷெய்குனா அபுல்ஹஸன் அலியுஷ் ஷாதுலி ரழியல்லாஹு அன்ஹு.
பிறப்பு
வட ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் அல்ஜீரிய்யா, திரிப்போலி, மொராக்கோ, தூனீஸ் ஆகிய முஸ்லிம் நாடுகள் உள்ளன. இவற்ளை ஒட்டியிருந்த முஸ்லிம் ஸ்பெயினையும் சேர்த்து அக்காலத்தில் மக்ரிப் (மேனாடுகள்) என்று அழைத்து வந்தனர். இவற்றுள் திரிப்போலியிலுள்ள சியூதா என்ற நகரையடுத்து கெமாரா என்ற ஊரில்தான் ஷாதுலி நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 593 துஅல் கஃதா மாதம் (கி.பி. 1196-1197) பிறந்தார்கள்.
இமாமுனா கஸ்ஸாலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 88 ஆண்டுகள், ஹழ்ரத் கௌதுல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 32 ஆண்டுகள், ஸுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மது கபீர் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 15 ஆண்டுகள் மற்றும் குத்புல் ஹிந்த ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் 63 வயதில் அஜ்மீரில் அமர்ந்து ஞானம் போதித்து கொண்டிருக்கிறார்கள். இப்னு அரபி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வட ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தில்தான் அபுல் ஹஸன்அலீ ஷாதுலி நாயகம் அவர்கள் தோன்றினார்கள்.
வமிச பரம்பரை
அபுல் ஹஸன் அலீ ஷாதுலி – அப்துல்லாஹ்-அப்துல் ஜப்பார் – தமீம் – ஹுர்மூஜ் -ஹாத்தீம் – குஸை – யூஸுப் – யூஷஉ – வர்து – பத்தால் – அஹ்மது – முஹம்மது – ஈஸா – முஹம்மது – ஹஸனுல் முதன்னா – அலீ நாயகம் ரழியல்லாஹு அன்ஹும்.
ஷாதுலி நாயகத்தின் தாயார் பெயர் உம்மு ஹபீபா என்ற ஸாதிகுல் ஜன்னா ரழியல்லாஹு அன்ஹா.
கல்வி
சிறு வயதிலேயே கல்வி ஆர்வம் மிக்கவர்களாக விளங்கினார்கள். பாலப் பருவத்திலேயே திருக்குர்ஆனை மனனம் செய்துத விட்டார்கள். ஆரம்h கால மாணவர்களுக்கான கல்விகளை கற்றபின் மத்ரஸா படிப்பிற்காக துனீஸ் பட்டணம் சென்றார்கள். ஓதிய அனைத்துப் பாடங்களிலும் மிகவும் தேர்ச்சிப் பெற்றார்கள். குறிப்பாக நஜ்முத்தீன் இஸ்பஹானி என்ற பெரியாரிடம் அவர்கள் இந்த லௌகீகக் கலைகளில் பாடபோதனை பெற்றிருந்தார்கள்.
எல்லாப் பாடங்களையும் நினைவிலிருத்தியிருந்த போதிலும் இறைவனை அறியும் ஞானத்துக்கு வழிகாட்டும் ஆத்மஞானப் போதனைகளைத் தரும் நூற்களில் நாயகமவர்களுக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது. இமாம் கஸ்ஸாலி நாயகமவர்களின் இஹ்யா உலூமுத்தீனையும், அபூதாலிபுல் மக்கியின் ‘கூதுல் குலூப்’பையும் அவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள்.
மேலும் ஆத்மஞான உபதேசங்களைக் கேட்பதிலும் மிகவம் ஆர்வம் காட்டினார்கள். முஹ்யித்தீன் இப்னு அரபி நாயகமவர்களின் ஆத்ம ஞான போதனைகளை கேட்டறிந்த முஹம்மது இப்னு அலி இப்னு ஹிர்ஜிம் என்பவர்களின் போதனைகளைக் கேட்க ஃபாஸ் பட்டணத்திற்கு சென்று கேட்டார்கள். ஆத்ம ஞானத்தில் அனுபவம் பெற இச்சம்பவங்கள் அன்னாருக்கு தாகத்தை ஏற்படுத்தியது.
இளமையிலேயே ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றினார்கள். பிறகு தமக்குரிய ஆசானைத் தேடி ஈராக் நாடு சென்றார்கள். பக்தாத் நகர் சென்று செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி நாயகமவர்களின் சீடரான அபுல் பத்ஹு வாஸித்தி அவர்களின் சபையில் அமர்ந்து அவர்களின் போதனைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். ஒருநாள் அந்த ஆசான் ஷாதுலி நாயகமவர்களை அழைத்து ‘அபுல் ஹஸனே! நீர் உமக்குரிய ஞான குருவைத் தேடுகிறீர். அவர் உமது நாட்டிலேயே உமது பகுதியிலேயே இருக்கிறார். நீர் அங்கு செல்லும்’ என்று கூறிவிட்டார்கள். அதன்பின் ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து விட்டு தம் தாய் நாட்டிற்கே திரும்பினார்கள்.
ஷெய்கை சந்தித்தல்
தங்கள் ஊருக்கு அருகாமையிலுள்ள மலையொன்றின் மீது மொராக்கோவைச் சார்ந்த மகானொருவர் அமர்ந்துத நீண்ட நாட்களாக தவம் செய்து வருவதாக ஷாதுலி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேள்விப் பட்டார்கள். அந்த மகான் பெயர் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் என்றும் அவர்கள் ஞானக் கடலாக விளங்குபவர்கள் என்றும் அறிந்து அவர்களைக் காணச் சென்றார்கள்.
மேலே நடந்த விசயங்களை நாயகம் அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்:’ அந்த மலையடிவாரத்தை நான் எய்தியதுமே அங்கிருந்த நீர்ச்சுனையொன்றில் குளித்தேன். பின்னர் மலைமீது ஏறலானேன். அச்சமயம் ‘தஜ்ரீத்’ (நல்லமல்கள் அதிகம் ஒன்றும் செய்துவிடவுமில்லை. ஆத்மஞானம் பொருந்திய கலைகளை எதுவும் கற்றுவிடவுமில்லை) என்ற உணர்வுடன் நடக்கலானேன். மலையின் ஒரு பொதும்பில் வெளியில் அமர்ந்திருந்த மகானவர்கள் நான் தஜ்ரீத் நிலையில் வருவதைக் கண்டு எழுந்து எதிர்கொண்டு என்னை அழைத்தார்கள். எனது வமிசாவழியைக் கூறி வரவேற்றார்கள். அலீயே! உமது வரவு நல்வரவாகட்டும். நீர் உம்முடைய அமல், கல்வி யாவையும் துறந்த ஏழையாக எம்மிடம் வந்துள்ளீர்கள். எல்லாம் வல்ல நாயகம் உமக்கு ஈருலகிலும் உன்னதமான பதவிகளை நல்குவான்’ என்று ஆசிர்வதித்தார்கள்.
அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் நாயகம் அவர்கள் சாதாரணமாக யாரையும் பார்ப்பதுமில்லை. யாருக்கும் ஞானதீட்சை அளிப்பதுமில்லை. அவர்கள் ஷாதுலி நாயகத்தை எதிர்பார்த்திருந்தார்கள். தங்களிடம் உள்ள ஞானங்களைப் பெறுவதற்கு உரித்தானவர் அவர்கள் தாம் என்று உணர்ந்திருந்தார்கள். அன்னார் மஷீஷ் நாயகத்திடம் தங்கியிருந்த சில நாட்களில் தமக்கு தீட்சை வேண்டி விண்ணப்பித்தார்கள். அன்னாரும் அவர்களுக்கு தீட்சை கொடுத்தார்கள்.
ஞானவழிப் பரம்பரை:
அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் – அபூ முஹம்மது அப்துர் ரஹ்மான் – குத்பு தகியுத்தீன் – குத்பு பக்ருத்தீன் – குத்பு நூருத்தீன் – குத்பு தாஜுத்தீன் – குத்பு ஷம்சுத்தீன் (துருக்கி) – குத்பு ஜைனுல் கஜ்விஃ- செய்யிது இஸ்ஹாக் இப்றாஹிம் – அஹ்மதுல் மர்வானி – முஹம்மது ஸஃத் – அபூ முஹம்மத் சயீது – முஹம்மது சஃத் – முஹம்மது ஜாபிர் – சைய்யிதினா ஹஸன் – சைய்யிதினா அலீ ரழியல்லாஹு அன்ஹும் – செய்யிதினா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
மகானவர்கள் சாதுலி நாயகத்தை லாஇலாஹ இல்லல்லாஹ்!, – அல்லாஹ் அல்லாஹ் என்ற இரு திக்ருகளிலும் மூழ்குமாறு ஆணையிட்டார்கள். மேலும் சிருஷ்டிகளின் பெயர்கள் உமது நாவில் வராதபடி நாவைப் பேணும். சிருஷ்டிகளின் பந்தபாசத்தில் உமது மனதில் உண்டாகக் கூடிய உருவங்களை அகற்றி உமது இதயத்தை பரிசுத்தமானதாக்கும். உமது கை, கால் முதலிய அவயங்களை பாவத்தில் ஈடுபடாதவாறு பேணிக் கொள்ளும். கடமையான வணக்கங்களை சரிவர செய்யும். நபிலான வணக்கங்களில் அதிகம் ஈடுபடும். இவ்விதம் ஒழுகி வந்தால் உம்முடைய விலாயத் சம்பூரணமாகும் என்றும் உபதேசித்தார்கள். மேலும் இறiவா! சிருஷ்டிகளை மனத்தில் எண்ணாதவாறும், அவர்களால் இடையூறுகள் உண்டாகதவாறும் என்னைக் காப்பாற்றியருள்! அவர்களுடைய தீமைகளிலிருந்து எனக்கு பாதுகாப்பளி! உன்னிடமே நான் தேவையுள்ளவனாக, அவர்களின் தேவையை ஆசிக்காதவனாக என்னை ஆக்கியருள்! என்று பிரார்த்தித்து வாரும்.
அபுல் ஹசனே! அல்லாஹ் உமக்கு நன்மையருள்வான் என்பதை எதிர்பார்ப்பதையன்றி வேறு எந்தத் திக்கிலும் நீர் முகம் திரும்ப வேண்டாம். அவனுக்கு மாறு செய்யும் எந்த இடத்திலும் அமர வேண்டாம். அல்லாஹ்வுக்கு நீர் வழிபடுவதில் உமக்கு உதவக் கூடியவனையன்றி, வேறு யாரையும் உமது தோழனாக ஏற்கவும் கூடாது. அத்தகைய நல்தோழர்கள் கிடைப்பது கடினமான காரியம்தான்’ என்றும் உபதேசித்தார்கள்.
தவநிலை
குருமகானின் ஞான உபதேசங்களை கேட்ட ஷாதுலிநாயகம் ரழியல்லாஹு அன்ஹு தியானத்தில் ஈடுபடலானார்கள். அவர்கள் காட்டியவழியில் தம் நப்ஸை அடக்கலானார்கள். சில ஆண்டுகளில் ஆத்மஞானப் படித்தரங்கள் பலவற்றை கடந்தார்கள். ஆத்மஞான படித்தரங்கள் பலவற்றை கடந்து விட்டபடியால் அல்லாஹ் அன்னாருக்கு உதிப்பின் (கஷப்பின்) மூலம் தெரிவித்தான்: ஜனங்களிடையே சென்று அவர்களுக்கு சன்மார்க்க போதனை புரியுங்கள் என்று.
அதன்படி அவர்கள் மலையை விட்டு கீழிறங்கி தமது குருநாதரான அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் நாயகம் அவர்களின் ஆசியை வேண்டி நிற்க தமது சீடரை ஆசிர்வதித்து அனுப்பினார்கள்.
குருவின் கட்டளைக்கிணங்க ஷாதுலி நாயகம் ஷாதிலா என்னும் ஊருக்குச் சென்று குடியிருக்கலானார்கள். அங்கிருந்துதான் நாயகத்தின் ஆத்மஞான போதனைகள் வெளிப்படலாயின. எனவேதான் அவர்கள் பெயரில் அந்த ஊரைத் தொட்டதாக ஷாதுலி என்ற நாமம் சேர்ந்தது. எனவேதான் அவர்கள் போதித்த ஆத்மஞானப் பாதைக்கு ‘ஷாதுலிய்யா தரீக்கா‘ என்ற பெயர் உண்டாயிற்று. சுமார் ஓர் ஆண்டுக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தூனீஸ் நகர் சென்றடைந்தார்கள். தூனீஸில் நுழைந்த போது ஆயிரக்கணக்கானவர்கள் கூடி நின்று அவர்களை வரவேற்றனர்.
அல்லாஹ் தமக்கிட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றினார்கள். மார்க்கத்திற்கு முரணான செயல்களைத் தடுத்து நிறுத்தினார்கள். ஷரீஅத் படி நடக்காத அனைவரையும் கண்டித்தார்கள். மனதால் தொழுதால் போதும் தொழுகை தேவையில்லை என்ற போலித் துறவிகளை வன்மையாக கண்டித்தார்கள். புகழுக்காகவும், பணத்திற்காகவும் செயல்பட்ட ஆலிம்களையும் தாக்கினார்கள். அன்னாரின் அற்புதமான உரைகளை கேட்க எண்ணற்றவர்கள் கூடினர். ஷாதுலி நாயகத்தின் புகழ் பெருமை நெடுகிலும் பரவலாயிற்று.
ஆனால் கற்றவர்களில் சிலர் அவர்களுக்கு ஏற்பட்டு வரும் புகழைக் கண்டு பொறாமை கொண்டனர். அவர்களில் இப்னு பர்ரா என்ற தூனீஸ் நகரின் பிரதான காஜியாக விளங்கினார். தூனீஸ் சுல்தான் அபூ ஜக்கரிய்யா என்பவரிடம் சென்று ஷாதுலி நாயகத்தைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லலானார். சுல்தானும் அவர்களை வரவழைத்து விசாரித்து அதில் உண்மையில்லை என்று தெரிந்து கொண்டார்.
ஆனால் இப்னு பர்ரா தொடர்ந்து மீண்டும் வலியுறுத்தி சொல்லவே ஷாதுலி நாயகத்தை சிறையில் அடைத்தார் சுல்தான். சிறையில் அடைத்த சிறிது நேரத்தில் சுல்தான் நேசித்து வந்த அவரின் பட்டத்தரசிக்கு சமமான அடிமைப் பெண் திடீரென இறந்து போனாள். இதனால் சுல்தான் மிகவும் மனவேதனைப்பட்டு துக்கத்தில் ஆழ்ந்து விட்டார். மேலும் பல்வேறு துயர சம்பவங்களும் அவருக்கு நிகழ்ந்தன. இதனால் தாம் செய்த தவறை உணர்ந்த சுல்தான் ஷாதுலி நாயகத்தை விடுதலை செய்ய சொன்னார். அன்னாரும் விடுதலைப் பெற்றனர்.
இதற்குப் பின் சில மாதங்கள் வரை ஷாதுலி நாயகமவர்கள் தூனீஸில் தங்கியிருந்து உபதேசங்கள் புரிந்தார்க்ள. அதன்பின்னர் மக்கா சென்று ஹஜ் செய்வதற்காகவும், கிழக்கு முஸ்லிம் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்வதற்காகவும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
நாயகம் அவர்களுடன் சீடர்கள் பலரும் சேர்ந்து பயணப்பட்டிருந்தனர். அவர்களுள் அபுல் அஜாயிம் மஆலி என்பவரும் ஒருவர். இவர் நாயகமவர்களுடன் கடைசிவரை பணியாளராக இருந்து தொண்டு செய்தார். அப்போது நாயகம் அவர்களுக்கு வயது 43. அங்கிருந்து அலக்சாந்திரியா சென்றார்கள். மங்கோலியர்கள் படையெடுப்பால் எகிப்து அரசு தமது நாட்டின் எல்லையை விட்டு மக்கள் செல்ல தடை விதித்திருந்தது. எல்லைக்கும் பலத்த காவல் போட்டிருந்தது. எகிப்தின் தலைமைக் காஜியா இருந்த பெரியார் இஜ்ஜுத்தீன் இப்னு ஸலாம் என்பவர்கள் அபாயகரமான காலத்தில் ஹஜுக்கு புறப்படுவது கூடாது – ஹராம் என்று பத்வா வெளியிட்டிருந்தனர். அங்கு மகான் ஷெய்கு அபுல் பத்ஹு வாஸித்தி அவர்கள் தங்கியிருந்தார்கள். ஷாதுலி நாயகம் அவர்கள் தங்கள் சீடர்களுள் ஒருவரை அனுப்பி தாங்கள் நகரினுள் வருவதற்கு அனுமதி வேண்டி நின்றார்கள். ஆனால் ஷெய்கு வாஸித்தி அவர்கள் ஒரு தொப்பி இரண்டு தலைகளுக்கு எப்படி பொருந்தும்? என்று கேட்டுவிட்டு வேறு எதுவும் கூறாமலிருந்து விட்டார்கள். பின்னர் அன்றிரவே ஷெய்கு வாஸித்தி அவர்கள் காலமாகி விட்டார்கள். மறுநாள் காலையில் இச்செய்தி ஷாதுலி நாயகத்திற்கு எட்டியது. அவர்கள் நகருக்குள் நுழைந்து அந்த மகானின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டார்கள்.
பின்னர் காழி இஜ்ஜுத்தீனை சந்திக்க கெய்ரோ சென்று அன்னாரிடமிருந்து தாமும் தம் சீடரும் ஹஜ்ஜு செய்ய அனுமதி பெற்று ஹஜ்ஜு செய்தார்கள். ஹஜ்ஜு கடமைகளை முடித்து தூனீஸ் சென்றடைந்தார்கள். அங்கு நகர மக்கள் லட்சக்கணக்கில் கூடி நின்ற அவர்களை வரவேற்றனர். ஷாதுலி நாயகம் அவர்களுக்கு செய்யப்படும் மரியாதையைக் கண்டு இப்னுல் பர்ரா பொறாமையால் புழுங்கினார்.
ஷாதுலி நாயகத்தின் உபதேசங்கள் லட்சக்கணக்கானவர்களை நேர்வழிப்படுத்தி வந்தது. அவர்கள் வெளியில் புறப்பட்டால் பல்லாயிரக்கணக்கானோர் பின்தொடரும் நிலை உண்டாயிற்று. இந்நிலையில் எகிப்து சென்று அங்கும் பிரச்சாரம் செய்தார்கள். இச்சமயத்தில் எகிப்து மன்னருக்கு இப்னுல் பர்ரா ஷாதுலி நாயகத்தைப் பற்றி அவதூறாக கடிதம் எழுதி உங்கள் நாட்டு மக்களை அவரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் என்று எழுதினார். ஒரு நீதிபதியிடமிருந்து கடிதம் வந்ததில் அது உண்மையானதாக இருக்கும் என்று நம்பி அரசரும் ஷாதுலி நாயகத்தை சிறை செய்ய உத்திரவு செய்தார்.
ஷாதுலி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு கபாயிலுள்ள சாதுகளுக்காக பரிந்து பேச மன்னரை சந்தித்தபோது, மன்னர் அன்னாரை சிறை செய்ய உத்திரவிட்டது பற்றி சொல்ல, நானும் நீங்களும் அல்லாஹ்வின் பிடியில் இருக்கிறோம். உங்களால் இயலுமாயின் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி நாயகம் அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். அவர்கள் வெளியில் கால் வைக்கும்முன் சுல்தான் மயங்கி விழுந்து விட்டார். அவரை எவ்வளவோ எழுப்பியும் எழும்பவில்லை.
இவ்விசயத்தை ஷாதுலி நாயகத்திடம் சொன்ன போது,அவர்கள் அரசர் மயங்கி கிடந்த இடத்திற்கு வந்து அவரை தட்டி எழுப்ப அவர் தூக்கத்திலிருந்து விழிப்பவர் போல் எழும்பினார். பின்னர் சுல்தான் நாயகத்திடம் மன்னிப்புக் கோரினார். கபாயிலுள்ள சாதுக்களை தொந்திரவு படுத்தக் கூடாது என்று தமது அதிகாரிகளுக்கு உத்திரவும் இட்டார்.
இவ்வாறு பல்வேறு வகையில் ஷாதுலி நாயகத்திற்கு தொல்லை கொடுத்து வந்து இப்னு பர்ரா என்பவர் மிகவும் இழிநிலை அடைந்தார். காழியான அவர் தீர்ப்புக்கு நாட்டில் எந்த மரியாதையும் இல்லாது போயிற்று. அவனது மகன் மிஸ்கீன் என்பவன் தம் தந்தைக்கு மிகவும் கெட்ட பெயரை உண்டாக்கினான். அவருடைய செல்வமெல்லாம் மகனுடைய குடி, விபச்சாரத்தால் அழிந்தது. வறுமை அவரை வாட்டிட்று. பின் அவர் பிறந்த தேசத்தை விட்டு வெளிநாடு சென்று ஒட்டகம் மேய்க்கவும் தயார் என்று வீடுவீடாக வேலைத் தேடி அலைந்தார். பின்னர் அவருடைய அறிவு பேதலித்து வாழ்ந்து அழிந்து போனார்.
அபுல் ஹஸன் ஷாதுலி நாயகமவர்களுடைய கலீபாவான அபுல் அப்பாஸ் முர்ஸீ நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்: ‘நான் தெய்வ நேசர்களான மகான்களுடைய சரிதைகளையெல்லாம் பார்த்து விட்டேன். அவர்களை நிந்தித்த யாரும் நல் மரணமடையவில்லைஎன்று.
ஷாதுலி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘தெய்வநேசர்களான ஆரீபீன்களை தூஷிப்பவன் தன்னுடைய இயற்கையான மரணத்துக்கு முன்பே மூன்று தடவைகள் மரணமடைவான். முதலாவது மரணம், அவன் அபகீர்த்தி பெற்று இகழப்படுவதாகும். இரண்டாவது மரணம், அவன் வறுமையால் பீடிக்கப்பட்டு உழல்வதாகும். மூன்றாவது மரணமாவது, அவன் தன் தேவைகளுக்காக மனிதர்களின் கையையே எதிர்பார்த்திருக்க யாரும் அவனைப் பொருட்படுத்தாமலிருப்பதாம்’ என்று.
இறுதி நாட்கள்
ஷாதுலி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சன்மார்க்கப் பிரச்சாரமும், ஆத்மஞான உபதேசமும் செய்துகொண்டே தங்கள் வாழ்நாளைக் கழித்து வந்தார்கள். அன்னாரின் இறுதி காலத்தைப் பற்றிய விபரத்தை அன்னாருக்கு நீண்ட நாட்கள் பணிவிடை செய்தவர்களான அபுல் அஜாயிம் மஆலி அவர்கள்: ‘ஒரு நாள் நாயகமவர்கள் பிரயாணம் புறப்படுவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு வரவேண்டும் என்று உத்திரவிட்டார்கள். நானோ அச்சமயம் அலெக்சாந்திரியாவைச் சார்ந்த பெண்ணை மணம் முடித்திருந்தேன். அவள் கர்ப்பமாகி பிரசவிக்கும் தருணத்தில் இருந்தாள். அவளிடம் நான் விடைபெற்று சென்றபோது இந்நிலையில் தம்மை விட்டுப் போகவேண்டாம் என்று அழுதாள். நான் இவ்விசயத்தை நாயகமவர்களிடம் சொன்னேன்.
அதற்கு அவர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வரும்படி சொன்னார்கள். நான் அவ்விதமே அழைத்து வந்தேன். அவளைக் கண்டதும் நாயகமவர்கள்: ‘அப்துத் தாயிமின் தாயே உனது கணவர் என்னோடு பிரயாணப்பட அனுமதி கொடு. உனக்கு அல்லாஹ் நன்மையே செய்வான்’ என்று கூறினார்கள். அந்த சுபச் செய்தி கேட்ட அவள் உடனே எனக்கு அனுமதியளித்து விட்டாள். நானும் மற்றும் சீடர்களுடன் சிலரும் நாயகமவர்களோடு புறப்பட்டோம்.
நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது எனது மனைவி அழகான ஆண்குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள் என்ற செய்தி எனக்கு கிட்டியது. அதற்கு அப்துத் தாயிம் என்று பெயர் சூட்டினேன்.
அன்னாரின் மூத்த புதல்வாரன ஷைகு ஷர்புத்தீன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் : ‘எப்போதுமில்லாத வழக்கமாக இந்தத் தடைவ பிரயாணம் புறப்பட்டபோது எங்கள் குடும்பத்தார் அனைவரையும் தங்களோடு புறப்படும்படி எங்கள் தந்தையார் ஆணையிட்டார்கள்.
நாங்கள் ஹுமைத்திராவை அடையும் முன்னரே எங்கள் தந்தையருக்கு நோய் கண்டு விட்டது. தம்மோடு வந்த இளைஞரின் மறைவுக்கு ஹுமைத்திராவில் அன்னாரே தொழுகை நடத்தி அடக்கம் செய்தார்கள். பின்னர் தங்கள் முரீதுகளை நோக்கி, ‘ எனது அன்பான சீடர்களே! நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஹிஸ்புல் பஹ்ர் என்ற ஹிஸ்பை படித்துக் கொடுங்ள். அதை அவர்கள் தினமும் தவறாது ஓதிவரப் பணியுங்கள். அதில் ‘இஸ்முல் அஃலம்’ அடங்கியுள்ளது’ என்று உபதேசித்தார்கள்.
பின்னர் எங்களோடு வந்திருந்த பெரியார் அபுல் அப்பாஸ் முர்ஸி அவர்களை தன்னருகில் அழைத்து அவர்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கினார்கள். பின்பு முரீதுகளை அழைத்து, நான் காலமான பின் இந்த பெரியார் அபுல் அப்பாஸ் முர்ஸீ அவர்களையே உங்கள் ஷெய்காக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் எனது கலீபாவாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அல்லாஹ்வின் சமீத்துவத்தைப் பெற்ற புனித சீலர் ஆவார்கள் என்று உபதேசித்தார்கள்.
அருகிலுள்ள உப்புக் கரிக்கும் கிணற்றிலுள்ள தண்ணீரை எடுத்து வாயில் வைத்திருந்துவிட்டு பின்பு அதை உமிழ்ந்து அந்த கிணற்றில் ஊற்றும்படி செய்தார்கள். பின் அந்த கிணறு நல்ல தண்ணீர் கொண்ட கிணறாக மாறிவிட்டது.
அன்றிவு என் தந்தையார்கள் தனிமையில் அமர்ந்து,நல் வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ‘இலாஹி இலாஹி’ என்ற திக்ரை அவர்கள் ஓதிக்கொண்டிருந்ததை வெகுநேரம் வரை நாங்கள் கேட்டோம். சஹ்ரு நேரம் வந்ததும் அந்த திக்ரு சப்தமும் நின்று விட்டது. அவர்கள் அயர்ந்து தூங்குகிறார்கள் என்று நாங்கள் நினைத்து கொண்டோம். சிறிது நேரம் கழித்து அவர்களை எழுப்பினோம். அவர்கள் எழும்பவில்லை. அப்போதுதான் தெரிந்தது அன்னாரின் பரிசுத்த ஆன்மா அவர்களின் பூதஉடலை விட்டு பிரிந்து விட்டது என்று. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
சாதுலி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு மறையும் போது அவர்களுக்கு அறுபத்து மூன்று வயதாகியிருந்தது. ஹிஜ்ரி 656 ஷவ்வால் பிறை 10 (கி.பி.1158) அவர்கள் காலமானார்கள். ஹுமைத்திராவிலேயே அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அவர்கள் தலைமாட்டிலுள்ள கல்லில் இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களில் போய் முடியும் அவர்களுடைய வமிச பரம்பரை எழுதப்பட்டிருந்தது. பின்னர் எகிப்தை ஆண்ட அடிமை சுல்தான் ஒருவர் அதன் மீது கலையழகு நிரம்பிய மண்டபத்தை (குப்பாவை) கட்டினார்.
குடும்ப வாழ்வு
ஷாதுலி நாயகத்திற்கு இளமையிலேயே திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு நான்கு மக்களிருந்தனர். அவர்களுள் ஷைகு ஷர்புத்தீன், ஷைகு ஷிஹாபுத்தீன், அலீ ஆகிய மூன்று ஆண் மக்களும், இர்ரீபத்துல் கைர் ( அல்லது வஜீஹா) என்ற பெண்பிள்ளையும் இருந்தனர்.
உருவ அமைப்பு.
ஷாதுலி நாயகம் அவர்கள் உயரமானவர்களாகவும் ஒல்லியானவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மாநிறம் உடையவர்கள். அவர்களுடைய கன்னங்கள் ஒடுங்கியிருந்தன. புயங்கள் மெலிந்திருந்தன. கையும், கைவிரலும் நீளமானவை. அவர்கள் மிருதுவான சுபாவமுடையவர்கள். மிகவும் இனிமையாகவும் நளினமாகவும் உரையாடுவார்கள். பேச்சு முத்து முத்தாக உதிரும். தங்கள் உரையாடலால் அவர்கள் யாரையும் இலகுவில் கவர்ந்து விடுவார்கள். மிகுந்த பணிவுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
துறவு நாட்களில் மிகவும் எளிய உடையே உடுத்தினார்கள். அவ்வித உடையுடனேதான் உபதேசிப்பார்கள். ஒரு தடவை அவர்கள் விலையுயர்ந்த எமன் நாட்டு உடையை அணிந்து கொண்டு உபதேசித்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் பேச்சிடையே துறவு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த சபையில் கந்தலுடை உடுத்திய ஸூபி ஒருவர் தம் மனத்தில், ‘சுல்தானுடைய உடையை போன்று அணிந்து கொண்டு துறவு பற்றி உபதேசிக்கும்இவர் உண்மையான துறவி அல்லர். நான்தான் உண்மையான துறவி’ என்று எண்ணினார்.
அவரை அழைத்த ஷாதுலி நாயகம் ‘ நீங்கள் உடுத்தியுள்ள உடையைக் கண்டால் உங்களை யாசிக்க வந்தவர் என்று தானே யாரும் நினைப்பார்கள். இதோ என் உடையைப் பாருங்கள். நான்; யாரிடமும் எதையும் யாசிக்க மாட்டேன். எனக்குத் தேவையும் இராது என்று தானே என்னை மதிப்பிடுவார்கள். உண்மையும் அதுதான். எனக்கு ஜனங்களுடைய ஐஸ்வரியங்கள் தேவையில்லை. நான் யாரிடமும் எதையும் யாசிக்க மாட்டேன்’ என்று கூறினார்கள். மேலும் இனி கந்தலான உடைகள் உடுத்த வேண்டாம் என்று உபதேசித்து, பிரார்த்தனை புரிந்து அனுப்பினார்கள்.
ஹுப்புர் ரஸூல்
ஷாதுலி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த அன்பை அடிக்கடி வெளிப்புடுத்தி வந்துள்ளார்கள். மேலும் சதாவும் அவர்களை தங்கள் மனக்கண் முன் தரிசிப்பவர்களாக இருந்துள்ளார்கள்.
அவர்கள் சொல்கிறார்கள்: ‘எம் திருப்பாட்டனார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு கணமேனும் என்னை விட்டு மறைக்கப்படுமேயாயின் நான் என்னை ஒரு மெய்விசுவாசி(மூமின்) என்று எண்ண மாட்டேன்.அவர்கள் நடந்து காட்டிய புனிதமான அழகிய முன்மாதிரியின் படி நான் நடக்காமலிருப்பினும் என்னை நான் ஒரு முஸ்லிமாகவே கருதமாட்டேன்’ என்று.
முரீதுகள் பேண வேண்டிய ஐந்து அம்சங்கள்:
ஷாதுலிய்யா தரீகாவை பின்பற்றும் முரீது ஐந்து நியதி(உஸூல்)களை பின்பற்ற வேண்டும்.
- பகிரங்கத்திலும், அந்தரங்கத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.
- சொல்லிலும்,செயலிலும் ஷரீஅத்தைப் பின்பற்ற வேண்டும்.
- சகல கருமங்களிலும் செல்வமான, வறுமையான சகல நிலைகளிலும் சிருஷ்டிகளை ஒதுக்கி அல்லாஹ்வையே முன்னிலையாக கொள்ள வேண்டும்.
- அல்லாஹ்வின் அருட்கொடைகள் அதிகமாகவோ குறைவாகவோ அருளப்படும்போது அல்லாஹ்வின் திருவுளச் சித்தத்துக்குப் பூரணமாக இணங்கி நடக்க வேண்டும்.
- மகிழ்விலும், துயரத்திலும் (நன்மை, தீமை சம்பவிக்கும் போது அவை அல்லாஹ்வின் நாட்டப்படியேதான் நடந்துள்ளன என்று பூரண நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வின் பக்கமே திரும்பி விட வேண்டும்.
எழுதிய அவ்ராதுகள், ஹிஸ்புகள்:
ஷாதுலி நாயகம் அவர்கள் ஆத்மீக அப்பியாசங்களுக்காகவும், பல்வேறு நோக்கங்கள் சித்தியடைவதற்காகவும் ஓதியதும் பயன்தரும் அவ்ராதுகள், ஹிஸ்புகள் பல எழுதியுள்ளார்கள்.
- அல்முகத்தமல் கஜியா 2. கிதாபுல் உக்வா 3. ஹிஸ்புல் பர் 4. ஹிஸ்புல் பஹ்ர் 5. ஹிஸ்புல் கபீர். 6. ஹிஸ்புல் தம்ஸ் அலா உயூனில் ஐதா 7. ஹிஸ்புந் நஸ்ரு. 8. ஹிஸ்புல் லுத்பு 9. ஹிஸ்புல் பத்ஹ் 10. ஸலாத்துல் பத்ஹ் மக்ரிப் 11. ஒளராதுக் களஞ்சியம். 12. வஜீபாக்கள்.
ஷெய்கு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் நாயகம் அவர்கள் அருளிய ஸலவாத்து
ஷாதுலி நாயகம் அவர்களின் குருநாதரான குத்பு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் அருளிய இந்த அருமையான ஸலவாத்து மிகவும் பாரதூரமான பயனுடையதாகும். இதை மனப்பாடமிட்டு அர்த்தத்தை உணர்ந்து, நியமமாகவும், உருக்கமாகவும் ஓதிவந்தால் மனத் தெளிவு ஏற்படும். ஆத்மஞான உதிப்புகள் உண்டாகும். இறைவனை ஏகத்துப்படுத்தும் உணர்வு அதிகரிக்கும்.
بسم الله الرحمن الرحيم.
اَللهُمَّ صَلِّ عَلٰى مَنْ مِنْهُ انْشَقَّتِ الْاَسْرَارُ وَانْفَلَقَتِ الْاَنْوَارُ وَفِيْهِ ارْتَقَتِ الْحَقَائِقُ وَتَنَزَّلَتْ عُلُوْمُ اٰدَمَ فَاَعْجَزَ الْخَلَائِقَ وَلَهُ تَضَآءَلَتِ الْفُهُوْمُ فَلَمْ يُدْرِكْهُ مِنَّا سَابِقُ وَلَا لَاحِقُ فَرِيَاضُ الْمَلَكُوْتِ بِزَهْرِ جَمَالِهٖ مُوْنِقَةُ وَحِيَاضُ الْجَبَرُوْتِ بِفَيْضِ اَنْوَارِهٖ مُتَدَ فِّقَةُ وَلَا شَيْئَ اِلَّا وَهُوَ بِهٖ مَنُوْطُ اِذْ لَوْ لَا الْوَاسِطَةُ لَذَهَبَ كَمَا قِيْلَ الْمَوْصُوْطُ صَلَاةً تَلِيْقُ بِكَ مِنْكَ اِلَيْهِ كَمَا هُوَ اَهْلُهُ – اَللّٰهُمَّ اِنَّهُ سِرُّكَ الْجَامِعُ الدَّآلُّ عَلَيْكَ وَحَجَابُكَ الْاَعْظَمُ الْقَائِمُ لَكَ بَيْنَ يَدَيْكَ. اَللّٰهُمَّ اَلْحِقْنِىْ بِنَسَبِهٖ رَحَقِّقْنِىْ بِحَسَبِهٖ وَعَرَّفْنِىْ اِيَّاهُ مَعْرِفَةً اَسْلَامُ بِهَا مِنْ مَوَارِدِ الْجَهْلِ وَاَكْرَعُ بِهَا مِنْ مَوَارِدِ الْفَضْلِ وَاحْمِلْنِىْ عَلٰ سَبِيْلِهٖ اِلٰى حَضْرَتِكَ حَمْلًا مَحْفُوْفًا بِنُصْرَتِكَ وَاقْذِفْ بِىْ عَلَى الْبَاطِلِ فَاَدْمَغَهُ وَزُجَّ بِىْ فِےبِحَارِ الْاَحَدِيَّةِ وَانْشُلْنِىْ مِنْ اَوْحَالِ التَّوْحِيْدِ وَاَغْرِقْنِىىْ فِىْ عَيْنِ بَحْرِ الْوَحْدَةِ حَتّٰى لَااَرىٰ وَلَا اَسْمَعَ وَلَا اَجِدَ وَلَا اُحِسَّ اِلَّا بِهَا وَاجْعَلِ الْحِجَابَ الَاَعْظَمَ حَيَاةَ رُوْحِىْ وَرُوْحَهُ سِرَّ حَقِيْقَتِىْ وَحِقِيْقَتَهُ جَامِعَ عَوَالِمِىْ بِتَحْقِيْقِ الْحَقِّ الْاَوَّلِ يَا اَوَّلُ يَااٰخِرُ يَاظَاهِرُ يَابَاطِنُ اسْمَعْ نِدَائِ بِمَا سَمِعْتَ بِهٖ نِدَآءَ عَبْدِكَ زَكَرِيَّاءَ وَانْصُرْنِےْ بِكَ لَكَ وَاَيِّدْنِىىْ بِكَ لَكَ وَاجْمَعْ بَيْنِىْ وَبَيْنَكَ وَحُلْ بَيْنِىْ وَبَيْنَ غَيْرِكَ(۳) اَللهُ اللهُ اللهُ. اِنَّ الَّذِىْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنُ لَرَآدُّكَ اِلٰى مَعَادٍ. رَبَّنَا اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئَ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا(۳) اِنَّ اللهَ وَلَآئِكَتَهُ يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّ يَآاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْ صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا. صَلَوَاتُ اللهِ وَسَلَامُهُ وَتَحِيَّاتُهُ وَرَحْمَتُهُ وَبَرَكَاتُهُ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ عَبْدِكَ وَنَبِيِّكَ وَرَسُوْلِكَ النَّبِيِّ الْاُمِّيِّ وَعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ عَدَدَ الشَّفْعِ وَالْوَتْرِ وَعَدَدَ كَلِمَاتِ رَبِّنَا التَّآمَّاتِ الْمُبَارَكَاتِ. سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْن. وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْن.
பொருள்:
இறைவா! எந்த பரிசுத்தத் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து மெய்ஞான அகமியங்கள் புறப்பட்டனவோ, எவர்களிடமிருந்து ஒளிக்கரணங்கள் வெளியாகின்றனவோ, சத்திய ஜோதி உயர்கிறதோ, யாருடைய ஜோதி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆத்ம ரகசியங்கள் துலக்கமாகவும், அவர்கள் ஏனைய சிருஷ்டிகளைப் புறத்தே தள்ளிவிட்டு முன்னே சென்று அமரவும் உதவியதோ, எவர்கள் அமர்ந்துள்ள ஸ்தானத்தை முன்னோர், பின்னோர் அவர்களின் ஞானங்கள் ஆகியவற்றாலும் அறிந்து கொள்ள முடியாதோ,
எவர்களின் எழிலின் மாண்பால் அமரலோகத்தின் பூங்கா ஜொலிக்கின்றதோ, எவர்களின் பாக்கியத்தால் சூட்சும லோகத்தின் ஊற்றுக் கண் பெருக்கெடுத்துப் பொங்கி வழிகிறதோ,
அவர்களின் (அந்தத் திருநபி எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மூலமாகத்தான் சர்வ சிருஷ்டிகளும் தொடர்பு கொண்டு நிற்கின்றன. ஊன்றுமிடமில்லாவிடின் ஊன்ற முடியாதது போல, நாங்கள் ஊன்றி நிற்கும் தலமாக அமைந்த திருநபியின் மீது உன் அருளை (ஸலவாத்தைப் ) பொழிவாயாக.
இறைவா! உன் மாண்புக்குத் தக்கவாறான ஸலவாத்தை அவர்கள் மீது வருஷிப்பாயாக!
இறைவா! திண்ணமாக அவர்களே உன் அகமியங்கள் அனைத்தையும் தாங்கி நின்று, சிருஷ்டிகள் அனைத்தும் உன்னை அறிந்து கொள்ளக் கைகாட்டியாய் உள்ளவர்கள். மேலும் உனக்காக உன் திருச்சந்நிதியில் சிறப்பாக தொங்கா நிற்கும் புனிதத் திரையாகவும் அவர்கள் அமைந்துள்ளார்கள். இறைவா!, அந்தத் திருநபியின் மகத்துவத்தாலும், மாண்பாலும், என்னைப் பிணைத்து உறுதிப்படுத்துவாயாக! என் அறிவீனமகன்று, புனிதப்படும் வகையான மெய்ஞானங்கள் செழித்து வளரவும் உன் அருளைப் பொழிவாயாக! உன் சந்நிதிவரை சத்திய வழியைக் காட்டுவாயாக! உன் ஏகத்துவக் கடலில் மெய்யாகவே நான் நீந்தித் திளைக்க அருள் புரிவாயாக!
என்னை ஏகத்துவ வாரியில் மூழ்கடித்துவிடு. அதன் மூலம் நான் பார்ப்பதனைத்தும், கேட்பதனைத்தும், எனக்கு அருளப்படுபவையனைத்தும், உன் உணர்வனைத்தும் ஏகமான ஏகத்துவமாகவே காட்சித்தரக் கருணை புரிவாயாக.
இறைவா!, மெய்ஞான அகமியத் திரையைக் கொண்டே என் ஆத்மாவை இயங்கச் செய். மெய்ஞானமென்ற புனித அகமியத் திரையையே என் உள்ளமையாகவும் ஆக்கி அருள்புரி. மேலும் அந்தத் திரையை யதார்த்தமாக நான் வேண்டுபவன் என்ற முறையில் அதையே என் சர்வலோகமாகவும் ஆக்கியருள்.
ஆதிக்கும் ஆதியானவனே! அந்தமுமானவனே! உள்ளும் வெளியுமானவனே! உன் புனித அடியார் ஜக்கரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றதுபோல் என் பிரார்த்தனையையும் ஏற்பாயாக! உன் உள்ளமைக்கே சொந்தமாயுள்ள அந்தப் புனித நல்லுதவியை அருளி அதை உன் புனிதப் பாதையிலேயே, உனக்காகவே அர்ப்பணிக்க அருள்புரிவாயாக!
நீ அல்லாத மற்றச் சிருஷ்டிகளுடன் நான் பிணைந்து கொள்ளாமல் எனக்கும் அவைகளுக்குமிடையில் திரையாகச் சமைந்து என்னைத் தடுத்து காப்பாயாக! அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்!
‘நிச்சயமாக திருக்குர்ஆனை உம்மீது இறக்கியவன் (அல்லாஹ்) உம்மை மீண்டும் தரிபடும் தலத்தில் மீள வைப்பான்’
‘எங்கள் இறைவா! உன் புறத்தால் எங்களுக்கு அருள்மாரியை வருஷிப்பாயாக. மேலும் எங்களுக்கு எங்கள் காரியங்களில் வெற்றியையும், புனிதத்தையும் தந்தருள்வாயாக!’ (மூன்று தடவை ஓதவும்)
‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது அமரர்களும் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ‘ஸலவாத்து'(அருள்மாரியைப்) பொழிகின்றனர். மெய்விசுவாசிகளே, நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தையும் ஸலாமையும் கூறுவீர்களாக! அருளும் (ஸலவாத்தும்) சாந்தியும் (ஸலாமும்) சன்மானமும் (தஹிய்யத்தும்,) நல்லருளும் (பரக்கத்தும்) அவன் அடியாரும், நபியும், தூதருமான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் உறவினர்கள், தோழர்கள் மீதும் இரட்டையாகவும், ஒற்றையாகவும் அவன் சம்பூரணமான புனித கலிமாவின் அளவுக்கு உண்டாவதாக.
ஸுப்ஹா னரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மா யஸிபூன் வஸலாமுன் அலல் முர்ஸலீன் வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.