அன்னை ஜெய்னப் பிந்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா
By Sufi Manzil
அண்ணல் நபிகளாரின் மாமியான உமையா பினத் அப்துல் முத்தலிபின் மகளாரான ஜெய்னப் நாயகியாரை, அடிமையாக இருந்து விடுதலை பெற்ற பின் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் மகனாராக வரித்துக் கொண்ட ஜெய்து இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு முதலில் மணம் செய்து வைத்தார்கள்.
தம்பதிகளுக்கு மத்தியில் உறவுகள் சீராக இருக்கவில்லை. எனவே ஜெய்து ரலியல்லாஹு அன்ஹு , அம்மையாரை மணவிடுதலை தலாக் செய்ய, இத்தா முடிந்ததும்,
“ஜெய்து அவர்களை விட்டு தனது தேவையைப் பூர்த்தி செய்துக் கொண்ட(தலாக் சொன்ன)போது நாம் அவர்களை (ஜெய்னப்பை) உங்களுக்கு (நபியவர்களுக்கு) நிகாஹ் செய்து வைத்துள்ளோம்“ (அல்குர்ஆன் 33 :37) என்ற திருவசனம் அருளப்பட,
அல்லாஹ் தனக்கு ஜெய்னப்பை மணம் முடித்து வைத்துள்ளான் என்ற நற்செய்தியை ஜெய்னப்பிடம் கூறுபவர் யார்? எனக் கேட்க, பணிப்பெண் ஒருவர் விரைந்து சென்று ஜெய்னப் அம்மையாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்.
மகிழ்வு மீக்குற்ற ஜெய்னப் நாயகியார் மங்களச் செய்தி சொன்ன அப்பெண்ணுக்கு தன்கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி அணிவித்து மகிழ்ந்தார்கள். பின்னர் கருணை நாயனுக்கு தன் நன்றிகளைச் சமர்ப்பிக்க சஜ்தா செய்தனர். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பும் வைத்தனர்.
அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை ஜெய்னப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் புரிந்து கொண்ட பின் எப்பொழுதும் செய்யாத அளவில் பிரமாண்டமான வலீமா விருந்து அளித்தனர். எல்லா தோழர்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் வயிறு புடைக்க ரொட்டியும், கறியும் உண்டனர்.
நூல் :புகாரி, மிஷ்காத் : 278
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அன்புத் துணைவியருள் இத்தனிச்சிறப்பினை அன்னை ஜெய்னப் அவர்களே பெற்றுள்ளனர். அத்தோடு இத்திருமணத்தை இறைவனே நடத்திவைத்தான்.
இவர்களின் வலீமா விருந்தில் நபித்தோழர்கள் கலந்து கொண்டு நீண்ட நேரம் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்ததால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூற மனமில்லாது தாங்களே வெளியே சென்று தங்கள் மனைவிகளைச் சந்தித்து சலாம் உரைத்து வந்தார்கள்.
இப்பொழுதுதான் அநாவசியமாக நபியின் வீட்டில் தங்கி உரையாடிக் கொண்டிருக்க வேண்;டாம் என்ற திருவசனமும்>. பர்தா பற்றிய அறிவிப்பும் இறைவனிடமிருந்து வந்தது.ஏழை எளியோருக்கு அதிக தானதர்மங்களை செய்து வந்தனர். அன்னை ஜெய்னப் அவர்கள்! கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் அன்னையாருக்கு!
ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என் மறைவிற்குப் பின்னர் என்னை முதலில் சந்திப்பவர் கைநீளமானவர் என்றனர். இது கேட்ட துணைவியர்கள் தத்தம் கைகளை அளந்து பார்த்து ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கரமே நீளமாக இருந்ததால் அவர்களே முதலில் வபாத்தாவார்கள் என எண்ணினர்.
ஆனால் அன்னை ஜெய்னப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களே முதலில் மௌத்தானார்கள். இப்போதுதான் “கை நீளமானவர்“என்றால் வெறும் நீளக் கை அல்ல! கருணையால், கொடையால் கை நீளமானவர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
உயர் தனிச் சிறப்புக்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்த அன்னையவர்கள் ஹிஜ்ரி 20 அல்லது 21இல் மதீனா முனவ்வராவில் வைத்து வபாத்தானார்கள். கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனாஸாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென ஆணை பிறப்பிக்க, பெரும் ஜன சமுத்திரமே திரண்டு விட்டது.
கலீபா அவர்களே ஜனாஸாத் தொழுகை நடத்தி வைக்க ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
நூல் : மதாரிஜுன் நுபுவ்வத் பாகம் – 02, பக்கம் – 276
ஜெய்னப் நாயகியார் அண்ணலார் மீது அளப்பிரிய அன்பு பூண்டிருந்தனர். தம்மை பெருமானார் மணமுடிக்கப் போகிற செய்தி அறிவித்த பெண்ணுக்கு தம் மாலையை அன்பளிப்பாக வழங்கியதோடு இறைவனுக்கு நன்றி செலுத்த சஜ்தா செய்து இரு மாத கால நோன்பும் வைத்தனர் என்றால் அன்னாரின் இறைபக்திக்கு வேறென்ன சான்று வேண்டும்?
முன்னரும் சரி, அண்ணலாரை மணம் புரிந்த பின்னரும் சரி தம் கைகளில் உள்ளதை அப்படியே ஏழை எளியோருக்கு தானமாக வழங்கி விடுவர். இதனாலேயே “கைநீளமானவர்“என்ற சிறப்பினையும் பெற்றனர்.
பெருமான் நபிகளார் மீது பேரன்பு பூண்டிருந்த காரணத்தால் மறைவுக்குப் பின்னரும் கூட அன்னாரை முதலில் சந்திக்கின்ற பெரும் பேற்றைப் பெற்றனர்.
தேவையுள்ளோரைத் தேடிப்பிடித்து தேவையை நிறைவு செய்து கொடுக்கும் அருங்குணமும், அண்ணலார் மீது அம்மையார் கொண்ட அன்பும் ஒவ்வொரு முஸ்லிம் சகோதரிக்கும் நல்ல முன்னுதாரணங்களாகும். அல்லாஹ் அவ்வழி செல்ல அருள் புரிவானாக!