அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா
By Sufi Manzil
ஹலரத் அபூசுப்யான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் அருமைப் புதல்வியும், முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்புச் சோதரியுமான அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயாரின் பெயர் ஸபிய்யா பின்த் ஆஸ். இவர் அமீருல் முஃமினீன் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாமியார் ஆவார்.
உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அவர்களை வாழ்க்கைத் துணைவராக வரித்துக்கொண்ட உம்மு ஹபீபா, ஏந்தல் நபி நாயகத்தின் ஏகத்துவ அழைப்பினை ஏற்று கணவரோடு இஸ்லாத்தைத் தழுவி அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றனர். அபிசீனியா சென்ற பின்னர், உபைதுல்லாஹ் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். புதிய இடத்தில் கிடைத்த புது நண்பர்களோடு சேர்ந்து மது உண்டு மயங்கியே அவர் மரணமுற்றார்.
ஆனாலும் அன்னை உம்மு ஹபிபா தமது ஈமானில் உறுதி குலையாது நின்றார். இடுக்கண்களை இன்முகத்தோடு ஏற்று சாதனை படைத்தார். இவர்களின் சோக வரலாறு சோதி நபி நாயகத்தின் காதுகளுக்கு எட்டியபோது அன்னார் நெஞ்சம் நெகிழ்ந்தார்கள்.
அருள் சுரக்கும் நெஞ்சம் கொண்ட அண்ணல் நபியவர்கள் அபிசீனியாவிற்கு அம்ரு இப்னு உமைய்யா ரலியல்லாஹு அன்ஹு என்ற தோழரிடம் அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு கடிதம் ஒன்று கொடுத்தனுப்பினார்கள். அவ்வேளையில் தமது பிரதிநிதியாக இருந்து உம்மு ஹபிபாவை தமக்கு மணம் செய்து வைக்க நஜ்ஜாஷிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.
ஓலை பெற்ற மன்னர் தனது அடிமை அப்ரஹா மூலம் பெருவிருப்பத்தை உம்மு ஹபிபாவிற்கு தெரியப்படுத்தினார். சேதியறிந்து ஆனந்தம் மீக்குற்ற அன்னையவர்கள் தம் காதணியைக் கழற்றி அப்ரஹாவுக்கு வழங்கி விட்டு, தனது உறவினர் காலிது இப்னு ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தமது பிரதிநிதியாக மன்னரிடம் அனுப்பி வைத்தார்.
கணிசமாக முஹாஜிர்களைக் திரட்டி, அவர்கள் அவையில் உம்மு ஹபிபா அவர்களை அண்ணல் நபியவர்களுக்கு மணம் புரிந்து வைத்தார் மன்னர் நஜ்ஜாஷி. மஹர்தொகை கூட மன்னரே வழங்கினார். பின்னர் மிக்க மரியாதையோடும், ஷர்ஜீல் பின்ஹஸனா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துணையோடும் மதீனா வாழும் மன்னர் மஹ்மூதா தம் சமூகத்திற்கு அன்னாரை மன்னர் வழியனுப்பி வைத்தார்.
அன்னை உம்மு ஹபீபா அவர்கள் மார்க்கப்பற்று பத்தினித் தனம், ஈகை, வீரம் ஆகிய அனைத்து குணநலன்களும் பெற்றிருந்ததோடு ஈமானில் குன்றாத உறுதி கொண்ட கோமகளாகத் திகழ்ந்தார்கள்.
அன்னையவர்களின் தந்தை அபூசுப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க முன்னர் ஒரு நாள் மதீனா வந்தார். தனது மகளின் இல்லத்திற்குச் சென்றார்கள். அங்கே காணப்பட்ட அண்ணலாரின் புனிதமிகு விரிப்பில் சென்று அமர்ந்தார். இதனைக் கண்ணுற்ற அன்னையவர்கள் அவ்விரிப்பிலிருந்து தந்தையென்றும் பாராது எழுப்பி விட்டு கூறினார்கள். “புனிதமற்ற ஒரு முஷ்ரிக் புனிதத்துவம் கொண்ட அண்ணலாரின் விரிப்பில் அமர்வதா? இதனை ஒருபோதும் யான் சகியேன்!“
உணர்ச்சிமிக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் அன்னையவர்களின் வாழ்வில் ஏராளமுண்டு. அதிகமான நபிமொழிகளை மனனம் செய்திருந்த அன்னார் அதிக வணக்க வழிபாடுகளிலும் பெருவிருப்பம் பூண்டிருந்தார். அண்ணலாருக்கு அரும்பணிகள் புரிவதில் ஆனந்தம் கண்ட அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 44இல் மதீனா முனவ்வராவில் தம் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்……..) ஜன்னத்துல் பகீகில் இதர துணைவிகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
ஸர்கானி : பாகம் – 03, பக்கம் – 242, மதாரிஜுன் நுபுவ்வத் : பாகம் – 02, பக்கம் – 48
உதுமான் ரலியல்லாஹு ஆட்சி காலத்தில் கலககக்காரர்கள் கலீபாவின் இல்லத்தை முற்றுகையிட்ட பொது அவ்வில்லத்தினர்களுக்கு ஒரு தோல் பையில் இவர் தண்ணீர் கொண்டு சென்றார் என்றும், எனினும் கலகக்காரர்கள் இவரைத் தடுத்து நிறுத்தி அத்தோல் பையை கிழித்து விட்டனர்.
ஹிஜ்ரி 42 இல் 73 ஆவது வயதில் தம் சகோதரர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கிலாஃபத்தின் போது மதீனாலில் மறைந்து ஜன்னத்துல் பகீயில் அடக்கப்பெற்றார்கள்.