حيض – மாதவிடாய் பற்றிய சட்டங்கள்
By Sufi Manzil
மாதவிடாய் என்பது ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கும் வேளையில் அப்பெண்ணின் கருவறையின் கடைசிப் பகுதியிலிருந்து வெளிப்படும் இரத்தமாகும். ஹைழ் ஏற்படுவதற்கு மிகவும் குறைந்த வயது ஒன்பது வயதாகும். ஓன்பது வயது நிரம்ப 16 நாட்களுக்குக் குறைவான நாட்களில் இவ்விதம் இரத்தம் வெளிப்பட்டால் அது ஹைழேயாகும். (ஹைழ்) மாதவிடாயின் குறைந்த கால அளவு ஓர் இரவு பகலாகும் (ஒரு நாளாகும்) கூடிய அளவு 15 நாட்களாகும். இரண்டு ஹைழுக்கு இடையில் ஏற்படும் சுத்தத்தின் குறைந்த கால அளவு 15 நாட்களாகும். அதிகத்திற்களவில்லை. பல வருடங்களாகவும் ஆகலாம். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட ஹைழின் மொத்த நேரம் ஒரு நாளை விடக் குறைவாக இருப்பின் அது ஹைழல்ல. எனவே அக்காலத்தில் விட்ட தொழுகைகளை கழாச் செய்வது அவசியமாகும். ஹைழின் குறைந்த நேரமான ஒரு நாளோ அல்லது அதிகக்காலமான 15 நாட்களோ அல்லது அதற்கு இடைப்பட்ட நாட்களோ ஹைழ் நின்று விடுமாயின் அது ஹைழேயாகும். ஹைழின் அதிகபட்சக்காலமான 15 நாட்களையும் கடந்து ஒரு பெண்ணுக்கு இரத்தம் ஓட்டம் இருந்தால் استحاضة (பெரும்பாடு) ஆகும். அப்பெண்ணை (مستحاضة) பெரும்பாட்டுக்காரி எனப்படும். ஒரு பெண்ணுக்கு ஒரு சமயம் இரத்தம் ஒரு சமயம் சுத்தமாகியும் இப்படியாக ஏற்பட்ட நிலை 15 நாட்களை தாண்டாமலும் அந்நிலையில் ஏற்பட்ட இரத்தத்தின் கூட்டுத்தொகை ஒரு நாளை விடவும் குறைவாக இருப்பின் இரத்தம் ஏற்பட்ட அக்காலமும் சுத்தமாயிருந்த அக்காலமும் ஹைழாகவே கணிக்கப்படும்.
நிஃபாஸ் எனும் பிள்ளைப்பேறு தொடக்கின் குறைந்த காலம் ஒரு நொடியாகும். அதிகம் 40 நாட்களும் மிக அதிகம் 60 நாட்களுமாகும். அதற்கும் அதிகமாக ஏற்பட்டால் அது استحاضة ஆகும்.
ஹைழ், நிஃபாஸால் ஹராமாகுபவை:
பெருந்தொடக்கால் ஹராமாகுபவையும், நோன்பும், பள்ளியை அசுத்தமாக்கிவிடும் என பயந்தால் பள்ளியினுள் கடந்து செல்வதும் உடலுறவு கொள்வதும், விவாகரத்தும், சிறு தொடக்கை நீக்குவதாக நிய்யத் வைத்து வுளு செய்வதும் ஹராமாகும். இரத்தம் வெளியேற்றம் (ஹைழ் , நிஃபாஸ்) நின்று விட்டால் நோன்பு, தலாக், பள்ளியினுள் கடந்து செல்வது, நிய்யத்துடன் வுளு செய்வது ஆகியவை கூடும். எனினும் மற்றவைகளில் ஹராம் எனும் சட்டம் குளித்த பின்னே தான் நீங்கும்.
مستحاضة பெண்மணி வுளுச் செய்யுமுன் தன் அபத்தைக் கழுவி இரத்தம் வடியாத அளவிற்கு கட்டுப்போட்டு அதன் பின்னே தான் வுளு செய்ய வேண்டும். செய்த பின் அவ்ரத்தை மறைப்பது, பாங்கு, ஜமாஅத்தை எதிர்பார்ப்பது போன்ற
தொழுகை சம்பந்தப்பட்ட காரியங்களைத் தவிர மற்ற எதற்காகவும் தொழுகையை பிற்படுத்துதல் கூடாது. அவ்வாறு பிற்படுத்தினால் மீண்டும் மேற்சொன்ன காரியங்களை செய்ய வேண்டும். இது போன்று மேற்சொன்ன ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தொழுகைக்கும் செய்ய வேண்டும். மேலும் سلس البول (தொங்கு நீர்) உள்ளவனுக்கும் மேற்சொன்ன சட்டமேயாகும்.