யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?

யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?

By Sufi Manzil 0 Comment February 13, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி: 1. யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?

2. வலிமார்களிடம் நேரடியாக உதவி தேடுவது கூடுமா?

எம்.கே. முஹம்மது சுல்தான், தஞ்சை.

பதில் 1:

நபிமார்களையும், வலிமார்களையும் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பது குர்ஆன் ஹதீஸ்படி ஆகுமான செயலாகும்.

இதை மறுப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே 'யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன்' என அழைப்பதில் எவ்விதத் தவறுமில்லை.

அல்லாஹ் தரும் ஆதாரம்: அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! ஈமான் கொண்ட விசுவாசிகளே!) யா அய்யுஹன்னாசு (ஓ! மனிதர்களே!) என்பதாக பலரையும் பலவாறு அழைத்திருக்கின்றான். அரபி இலக்கணத்தில் 'யா' என்ற பதம் அருகில் இருப்பவர்களையும், தூரத்தில் இருப்பவர்களையும் அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அழைக்கப்படுவதற்கு அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! விசுவாசிகளே!) என அழைத்தது நபிகளார் காலத்தில் வாழ்ந்த முஃமின்களை மட்டுமல்ல மாறாக யுக முடிவு நாள் வரையுள்ள எல்லா முஃமின்களையும் எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதற்கு அவர்கள் நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புலனாகிறது. குர்ஆனின் ஆதாரப்படி 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதில் எவ்விதத் தவறுமில்லை.

நபிகளார் தரும் ஆதாரம்: பத்ருப் போர்க்களத்தில் அல்லாஹ் நபிகளாருக்கு வெற்றியை அளித்த போது போர்க்களத்தில் மரணித்தவர்களை காண்பதற்காக நபிகளார் சென்றார்கள். அப்போது அம்மைதானத்தில் மாண்டு கிடந்த அபூலஹப், உத்பா போன்ற காபிர்களை நோக்கி,

'ஓ! அபூ லஹபே, உத்பாவே எனக்கு வாக்களிக்கப்பட்டதை இன்று நான் பெற்றுக் கொண்டேன். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா?' என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது, அருகிலிருந்த இரண்டாம் கலீபா உமர் பாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'யாரசூலல்லாஹ்! இறந்தவர்கள் எப்படி கேள்விகேட்பார்கள்? என கேள்வி எழுப்பினார்கள். அப்போது இந்த சந்தேகத்தை தீர்க்கும் வண்ணமாக நபிகளார் இறந்தவர்கள் உம்மை விட நன்றாக கேட்பார்கள். உம் காலடி பாதத்தின் சப்தத்தைக் கூட உணர்கின்றார்கள்' என தெளிவாகவே பதிலளித்தார்கள்.

இதன் மூலம் இரு விஷயங்கள் நமக்கு விளங்குகின்றன.

1.    'யா' என்ற பதத்தைக் கொண்டு இறந்தவர்களையும் அழைக்கலாம்.
2.    மரணித்தவர்கள் மறைந்து இருக்கின்றார்களே தவிர அழிந்து விடவில்லை.

இதனால் தான் கப்ருஸ்தானுக்கு சென்றால் இறந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மை ஏவியுள்ளார்கள்.

முக்கிய குறிப்பு: மரணம் என்பது 'ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வதுதான். (அதாவது) அழியக் கூடிய இடத்தில் இருந்து அழியாத உலகிற்கு செல்வது) ஒருவன் இறந்தான் என்றால் நம் கண்பார்வையிலிருந்து மறைந்தான் என்றுதான் அர்த்தம். மாறாக அழிந்து விட்டான் என்று அர்த்தம் அல்ல. ஆக குர்ஆன்-ஹதீஸ் மூலம் யா என்ற பதத்தைக் கொண்டு தூரத்தில் இருப்பவர்களையும், நம் பார்வையிலிருந்து மறைந்து வாழ்பவர்களையும் அழைக்கலாம் என்பது தெளிவாகிறது. வலிமார்களையும், நபிமார்களையும் அழைப்பது எவ்விதத்திலும் தவறில்லை.

பதில் 2:

அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்;க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.

குர்ஆன் கூறுகிறது: 'பஸ் அலூ அஹ்லெத் திக்ரி இன்குன்தும் லா தஃலமூன்' உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' –அல்குர்ஆன் 16:43

இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்த காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்கு தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.

'அஹ்லெ திக்ர்' என்பவர்கள் அவ்லியாக்கள்தான். அவர்கள் அதிகமான திக்ரின் மூலம் தன் நிலையை மறந்து இறைவனின் அளவில் சேர்ந்தார்க்ள. 'தான்' என்ற அகங்காரத் தன்மையை நீக்கி 'அல்லாஹ் மட்டும்தான்' என்ற உயர் நிலையில் தம்மை ஆக்கிக் கொண்டார்கள். இவர்களைப் பற்றி சுபச் செய்தி கூறும் முகமாக அல்லாஹ் கூறியதாக நபிகளார் கூறினார்கள். 'அல்லாஹ்வை அதிகமாக நேசித்தால் அந்த அடியாரின் பார்வையாகவும், கரமாகவும், காலாகவும் அல்லாஹ் மாறிவிடுகிறான்' (ஹதீது குத்ஸி புகாரி)

அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான். மாறாக அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் கேட்பதாக ஆகாது.

நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால், மருத்துவரிடம் செல்கிறோம். மருந்து கொடுக்கிறார். நோய் குணமடைகிறது. இதில் நோயை குணப்படுத்தியது அல்லாஹ்தான். ஆனால் நாம் சென்றது மருத்துவரிடத்தில். இதுபோலத்தான் நம்முடைய தேவைகள் நிறைவேற வேண்டுமெனில் நாம் செல்ல வேண்டியது வலிமார்களிடத்தில். அவர்களின் மூலம் நமக்கு உதவுவது அல்லாஹ்தான். எனவே வலிமார்களிடத்தில் கேட்பதில் எவ்விதத் தவறுமில்லை.

ஹதீஸ்களின் பார்வையில்:

1.    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.'

ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.

2.    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை)க் கொண்டு உதவி தேடவும்'

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு

ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 5.

3.    'எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும் என்பதாக நபிகளார் பகர்ந்துள்ளார்கள். (ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹலீன்)

பற்பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்கு கட்டளையிடுகிறார்கள். உதவி தேடுவதற்கு அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் தனது நப்ஸை இறைவனின் பாதையில் போரிட்டு வெற்றி கண்ட அவர்கள் என்றும் ஜீவிதம் உடையவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்கிறான். (3:168) வலிமார்களை இறந்தவர்கள் எனக் கூறக் கூடாது (2:153)என்பது இறைவனின் கட்டளையாகும்.

வலிமார்கள் என்றும் உயிருடனே இருக்கிறார்கள். அவர்களிடம் உதவி தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

ஈமான் உள்ள சீமான்களே!

வலிமார்களை ஜியாரத் செய்வதும், அவர்களின் பேரில் கொடியேற்றுவதும், நேர்ச்சை செய்வதும், உதவி கேட்பதும் அவர்களை 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதும், உரூஸ் நடத்துவதும் இவையனைத்தும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இதனன்றி டி.வி. மூலம் பத்திரிகையின் மூலமும் இன்று இஸ்லாத்தை தூய வடிவில் விளக்குகிறோம் என கூறி திரியும் வழிகேடர்களின் பசப்பு வார்த்தையை நம்பி ஈமானை இழந்து வழி தவறிவிட வேண்டாம். அல்லாஹ் நம்மை நேர்வழி ஆக்கட்டும். ஆமீன்.

-இமாரத்தே ஷரயிய்யா,
தாருல் உலூம் கௌசிய்யா,
ஈத்காஹ் மஸ்ஜித், இரயில்வே காலனி, தஞ்சாவூர்.