உண்பது ஆகுமாக்கப்பட்ட பிராணிகளும், பிராணிகளை அறுப்பதற்குரிய சட்டவிளக்கமும்

உண்பது ஆகுமாக்கப்பட்ட பிராணிகளும், பிராணிகளை அறுப்பதற்குரிய சட்டவிளக்கமும்

By Sufi Manzil 0 Comment August 30, 2011

Print Friendly, PDF & Email

நாம் நமது உணவில் பிராணிகளின் மாமிசத்தை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் அது முஸ்லிம்களால் அறுக்கப்பட்டது என்பதுடன் மாத்திரம் தெரிந்து கொண்டு ஹலால் என்று முடிவு செய்து சாப்பிடுகிறோம். முஸ்லிம்களால் பிஸ்மி சொல்லி அறுக்கப்படுவதிலும் நிறைய சட்டங்கள் உள்ளன. அதன்படி செய்தால்தான் அந்த உணவே ஹலாலானதாக ஆகும். அந்த சட்டங்களைத் தெரிந்து கொள்வதற்கு உரிய சட்டவிளக்கங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சாப்பிடக்கூடிய பிராணிகள்:

நீரில் வாழும் பொருட்களில் மீன் இனம் அனைத்தும் ஹலாலாகும். சுறா, இறால், கணவாய், திருக்கை, ஈக்கி இறால், ஆவுலியா என்னும் கடற்பசு போன்றவை மீன் இனத்தில் சேருகிறது. தானாகச் செத்து மிதக்கின்ற மீன் மக்ரூஹ் ஆகும்.

மட்டி, சங்கு, சிப்பி, ஐவிரலி இவைகள் ஹராமாகும். மற்றொரு சொற்படி மக்ரூஹ் ஆகும். ஆமை, முதலை, அட்டை, அஞ்சாலை, பேத்தை, சொறி, நீர்ப்பாம்பு இவைகள் ஹராமாகும்.

நிலவாழ் பிராணிகளில் ஆடு, மாடு, ஒட்டகம், மான், குழி மான், கலைமான், மறை, முயல், உடும்பு, மாநிறமுள்ள வெள்ளெலி, முள்ளங்கோழி, முள்ளெலி, மரநாய், குழிநரி, அணில், குதிரை இன்னும் காலினால் அடித்துத் திண்ணாத பிராணிகள் அனைத்தும் ஹலாலாகும்.

பறவைகளில் கோழி, சேவல், வான்கோழி, கானாங்கோழி, கின்னிக்கோழி, நெருப்புக் கோழி, புறா, அன்னம், தாரா, குயில், காடை, கௌதாரி, சிட்டு, கொண்டைக்களாத்தி, பயிர்க்காகம், பொன்னி, அடைக்கலத்தான், அரபுநாட்டிலுள்ள பயிரில் விழும் ஒருவகை வெட்டுக் கிளி,அன்றில், கொக்கு, குருகு, நாரை, புல்புல் (பாடும் பறவை), சிறகி, உள்ளான், பூணி (ஒருவகை நீர்ப்பறவை), தூக்கணாங்குருவி, மற்றும் காலினால் இடுக்கித் திண்ணாத பறவைகள் அனைத்தும் ஹலாலாகும்.

சாப்பிடுவது ஹராமாக்கப்பட்ட ஆமை, காகம், பருந்து போன்றவற்றின் முட்டைகள் தீங்கு செய்யாததாக இருப்பதால் அதைச் சாப்பிடுவது மக்ரூஹ் தஹ்ரீமாகும். அறுக்காமல் தானே செத்த கோழி போன்றவற்றின் வயிற்றிலுள்ள முட்டை முழுமையாக இருப்பின் ஹலாலாகும்.

செத்தவற்றில் மீனும், மீன் வயிற்றில் செத்து நாறிவிடாத மீனும், பயிரில் விழும் மேற்கூறப்பட்ட வெட்டுக்கிளியில் செத்ததும் தவிர அறுக்காமல் செத்தவை அனைத்தும் ஹராமாகும்.

பெரிய மீனின் வயிற்றிலிருக்கும் நஜீஸை துப்புரவு செய்யாமல் கருவாடாக்கினால் பிறகு கழுவுவது கொண்டு துப்புரவாகிவிடும். கழுவாமல் ஹலாலாகாது. எறும்பு போன்றது தேன் போன்ற சாப்பிடும் பொருட்களில் விழுந்து செத்து, அதனை நீக்குவது சிரமமாக இருப்பின் அது ஹலாலாகும்.

சாப்பிடுவது ஹலாலான மிருகத்தில் உள்ள சூம்பிய உறுப்பு, முன்துவாரம், பின்துவாரம், ஆணுறுப்பு, கழலை, ஊத்தாம்பட்டி, தோல், சவ்வு, நரம்பு ஆகியவற்றை சாப்பிடுவது மக்ரூஹ் ஆகும்.ஆனால் அதிலுள்ள ரோமம், கொம்பு, திணியான எலும்பு போன்றவற்றை சாப்பிடுவது ஹராமாகும்.

நஜீஸில் முளைத்த கீரை, காய்கனிகளைச் சாப்பிடுவது மக்ரூஹ் அல்ல எனினும், மனிதர்களின் மலத்தில் முளைத்தவற்றை சாப்பிடுவதால் விதை வீக்கம் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஒட்டகச் சிவிங்கி போன்ற பிராணியை சாப்பிடுவது ஹலால் என்றும், ஹராம் என்றும் இரு கருத்துக்கள் உள்ளன. எனவே கருத்து வேற்றுமை சொல்லப்பட்ட பிராணிகளை சாப்பிடாமல் இருப்பதே பேணுதலாகும்.

ஒட்டகை, மாடு, ஆடு, கோழி ஆகியவை நஜீஸை திண்பவையாக இருந்தால் அதில் நஜீஸின் வாடை வெளிப்பட்டால் அதனுடைய பாலும், முட்டையும், இறைச்சியும் மக்ரூஹ் ஆகும். அவ்வாறு நஜீஸைத் தின்ற ஒட்டகத்திற்கு நாற்பது நாட்களும், மாட்டுக்கு முப்பது நாட்களும், ஆட்டுக்கு ஏழு நாட்களும், கோழிக்கு மூன்று நாட்களும் சுத்தமான தீனியைக் கொடுத்தால் மக்ரூஹ் நீங்கிவிடும். கழுவுவதினால் நீங்காது.

ஹனபி மத்ஹபுபடி மயில், ஆந்தை, கிளி ஆகிய பறவையினங்கள் ஹலாலாகும். மரங்கொத்திப் பறவையும், சாக்குருவியும், செம்புகமும் ஹனபி மத்ஹபுபடி சாப்பிடுவது மக்ரூஹ் ஆகும்.
மாலிகி மதுஹபுபடி உடலுக்குத் தீங்கு விளைவிக்காத சுத்தமான உயிரினங்கள் அனைத்தும் சாப்பிடுவதற்கு ஹலாலானவையே.

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ

 'முஃமினானவர்களே! அல்லாஹ்வுடைய பெயர் சொல்லப்படாததில் நின்றும் நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது(அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் சொல்லி அறுத்ததையும், செத்;ததையும் திண்பது) பெரும் பாவமாகும்.'-அல்குர்ஆன் 6:121
 

அறுப்பின் ஷர்த்துக்கள்:

அறுப்பில் ஐந்து ஷர்த்துக்கள் உண்டு;.

1. அறுப்பதினால் ஹலாலாக்குகிறேன் என்று நாடுவது. 2. அறுப்பவன் முஸ்லிமாக இருப்பது. 3. மூச்சுப் பிரிகிற முடிச்சை அறுப்பது. 4. தொண்டைக்குக் கீழுள்ள உணவுக் குழலை அறுப்பது. 5. அறுப்பு முடிகிறவரை கையை உயர்த்தாமலிருப்பது. ஆனால் அறுக்கும்போது அது துள்ளியதால் பதறிப்போய் கையை எடுத்துவிட்டால் சற்றும் தாமதிக்காமலும் இடையூறு செய்யாமலும் உடனே திரும்ப அறுத்தால் ஹலாலாகிவிடும்.

ஒரு பிராணியின் தலையை அறுக்கும்போது  துண்டித்துவிட்டால் அது ஹலாலாக மாட்டாது. ஆனால் தலையை துண்டிக்க வேண்டும் என்ற நாட்டம் இல்லாமல் அவன் அறுக்கும்போது தலை உடலை விட்டும் பிரிந்து விட்டால் அதைப் புசிப்பது மக்ரூஹ் ஆகும். இதனால்தான் அறுப்பு முடியும் முன் அப்பிராணி துள்ளாமலிருப்பதற்காக முடிச்சை விரைவாக அறுப்பது வாஜிபென்று சொல்லப்பட்டுள்ளது.

தொண்டையிலுள்ள முடிச்சு முழுவதையும் தலையுடன் சேர்த்து அறுத்தால் சுன்னத்து தவறிவிடுமே தவிர ஹராமாக மாட்டாது. முடிச்சில் கொஞ்சமாகவது தலையுடன் சேராமல் முழுவதும் உடல் பக்கம் சேர்ந்து விட்டால் அது ஹராமாகிவிடும்.

தாயை அறுக்கும்போது வயிற்றிலுள்ள குட்டி உடனே இறந்துவிட்டாலும், அல்லது உடனே வயிற்றைக் கிழித்து எடுத்ததில் அந்தக் குட்டி துடித்ததாக வெளியாகி இறந்தாலும் அந்தக் குட்டி ஹலாலாகும்.

நோயில்லாத பிராணிகளை அறுப்பதில், அறுப்பைத் தொடங்கும்போது தரிபாடான உயிர் அப்பிராணிக்கு இருக்க வேண்டும். அல்லது இருப்பதாக  உள்ள எண்ணம் அவனுக்கு இருக்க வேண்டும். அதாவது அதை அறுத்த பின் கடினமாக துடிப்பு அதற்கு ஏற்பட வேண்டும். அறுக்கும்போது இரத்தம் பீறிட்டு வெளியேறுவதாலும், அல்லது இரத்தம் ஒலித்தோடுவதாலும் தரிபாடான உயிர்  இருக்கிறது என்ற அவன் எண்ணம் நிறைவேறிவிடும். அல்லது தொண்டையில் இருந்து கரட்டு சப்தம் வெளியாவதும் இதற்கு சான்றாக அமையும். இவ்வடையாளங்களில் ஏதுமில்லாமலிருப்பின் தரிபாடான உயிர் இருப்பதில் சந்தேகம் ஏற்பட்டால் அதைப் புசிப்பது ஹராமாகும்.

நோயினால் அல்லது பசியினால் அரைகுறை உயிராக இருந்து அறுத்தால் ஹலாலாகும். இதில் தரிபாடான உயிர் இருக்க வேண்டும் என்பது ஷர்த்தல்ல.

ஒரு முஸ்லிம் பிஸ்மி சொல்லாமல் அறுத்தாலும் அதைப் புசிப்பது ஹலாலாகும்.

பூனை கோழியைக் கடித்து சற்று நேரத்தில் கோழி இறந்து விடுமென்று உறுதி ஏற்பட்டாலும் அல்லது மரணத்தை உண்டு பண்ணும் விஷமுள்ள புற்பூண்டை அது தின்றிருந்தாலும், அல்லது முகடு போன்றது இடித்து அதன் மீது விழுந்தாலும் அந்தப் பிராணியை அறுக்கும்போது அதற்கு உயிர் இருப்பின் புசிப்பது ஹலாலாகும்.

முடிச்சுக்கு மேல் அறுத்திருந்தாலும், குண்டு போன்றதால் தலை உராயப்பட்டிருந்தாலும், பிடரியின் புறத்திலிருந்து அறுத்து தொண்டையின் முடிச்சை அடையும் முன் இறந்து விட்டாலும் ஹராமாகும். ஆனால் கடைசியில் உள்ளதில் தரிபாடான உயிர் இருந்து உடனே முடிச்சை அறுத்து விட்டால் அது ஹலால் ஆகிவிடும். எனினும் அறுத்தவன் பாவியாவான்.

அறுப்பின் சுன்னத்துக்கள்:

அறுக்கப்படவிருக்கும் பிராணி தாகித்திருந்தால் தண்ணீர் புகட்டுவது, அறுக்குமிடத்திற்கு மெதுவாக இழுத்துச் செல்வது, கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்வது, அதன் கழுத்தையும் அறுப்பவன் முகத்தையும் கிப்லாவின் பக்கம் திருப்புவது, அறுக்கும்போதும், வேட்டையில் குறி வைக்கும்போதும், வலை வைக்கும்போதும், கண்ணி வைக்கும்போதும், தூண்டில் போடும்போதும் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் அல்லாஹும்ம சல்லி வஸல்லிம் அலா செய்யிதினா முஹம்மதின் வஆலிஹி' என்று ஓதுவது, கத்தியை கழுத்தில்(தொண்டையில்) பொறுப்பாக வைத்து மெதுவாக தன் சக்தியைக் கொண்டு நடத்தாட்டிப் பின் மீள வைத்து இரண்டு பக்கங்களின் நரம்புகளை அறுப்பது ஆகியவை சுன்னத்துகளாகும்.

ஒட்டகத்தை நிற்க வைத்து அல்லது முழங்கால்களை மடிக்கச் செய்து அவற்றின் மீது உட்கார வைத்து அறுக்க வேண்டும். மற்ற பிராணிகளை ஒருச் சாய்த்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். கரைக்கு வந்த பின்னும் உயிருடனிருக்கும் பெரிய மீனை அறுப்பின் முறைபோல் அறுப்பது சுன்னத்தாகும்.

அறுப்பதற்கு முன்னாலும் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பது நல்லது. பிஸ்மில்லாஹ்வுடன் அர்ரஹ்மானிர் ரஹீம் என்று சேர்த்து சொல்லத் தேவையில்லை. சலவாத்தை  சேர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

அறுக்கும்போது மற்றொருவரை பிடித்துக் கொள்ளும்படி உதவி தேடலாம். பிடித்துக் கொள்பவர் ஹைளு, ஜனாபத்துடையவராக இருந்தாலும், காபிராக இருந்தாலும் கூடும்.

அறுக்கப்படவிருக்கும் பிராணிக்கு எதிரில் கத்தியைத் தீட்டுவதும், அதன் முன்னிலையிலேயே மற்றொரு பிராணியை அறுப்பதும், இரவில் அல்லது இருட்டில் அறுப்பதும், பிஸ்மில்லாஹ்வை, சலவாத்தை விடுவதும், மழுங்கின கத்தியால் அறுப்பதும், பிராணியின் உயிர் போகும் முன் தலையை திருகுவதும், தோலை உரிப்பதும், உயிருள்ள சிறிய மீனை அறுப்பதும், அவசரத்திற்காக உயிருடனே அதை சமைப்பதும், பொரிப்பதும் மக்ரூஹ் ஆகும். மற்றொரு கிதாபில் மீனை சுடுவதும், பொரிப்பதும் ஹராமென்று கூறப்பட்டுள்ளது.

சாப்பிடாமலிருக்கும் நோக்கத்தில் ஒரு பிராணியை அறுப்பது ஹராமல்ல. எனினும் பாவியாவான். கன்றுக்குட்டிக்கு பால் தேவையில்லை என்ற நிலை ஏற்படும் முன் அதனைத் தாயை விட்டுப் பிரிப்பது ஹராம். எனினும் கன்றை அறுப்பது கூடும்.

தேவையில்லாமல் மிருகங்களை அடிப்பதும், அதிக சுமையை ஏற்றுவது, வழக்கமாக உள்ள சுமையை எப்பொழுதும் சுமத்திக் கொண்டே இருப்பது, எப்பொழுதும் வண்டியில் பூட்டிக் கொண்டே இருப்பது, அவற்றின் ரோமங்களை ஒட்ட வெட்டுவது, சிரைப்பது, வாலை வெட்டுவது அனைத்தும் ஹராமாகும்.

சாப்பிடப்படும் மிருகங்களில் சிறியதை விதையடிக்கலாம். பெரியதை விதையடிப்பது ஹராம். காதை வெட்டுவதும், முகத்தில் சூடு போடுவது ஹராம்.ஓர் எழுத்தில் அடையாளமிடலாம் என்றாலும் இரண்டு எழுத்தில் அடையாளமிடுவது ஹராம். நோய் நீங்குவதற்காகவோ, அடையாளத்திற்காகவோ குறை ஏற்படாதவிதத்தில் முகம் அல்லாத இடங்களில் சூடு போடலாம்.

மிருகங்கள் உடற்சேர்க்கை கொள்ளும் காலங்களில் ஒரே இடத்தில் ஆணையும், பெண்ணையும் சேகரமாக்குவது வாஜிப். குதிரை போன்ற பெரிய ஆண்குறி உள்ள பிராணியை மாடு போன்ற பிராணியுடன் சேரவிடுவது ஹராம். தமர்க்கிடாய், காளை போன்றதைச் சேர்க்கைக்காக விட்டு கூலி பெறுவது ஹராம்.

ஏதேனும் ஒரு மிருகத்தை அல்லது பறவையை சண்டைக்காக விடுவதும், அதற்காக வளர்ப்பதும் அதற்கு உதவி செய்வதும் ஹராம்.

மனிதனையோ(அவன் காபிராக இருப்பினும் சரி) அல்லது ஏதேனும் மிருகத்தையோ மூதேவி என்று சபிப்பது கூடாது.
ஒருவருடைய நிலத்தில் கூடுகட்டிய பறவையின் முட்டையை எடுப்பதும், அவனுடைய வலையில் சிக்கிய பிராணியை பிடிப்பதும், ஒருவன் தண்ணீரில் வலை விரித்த வலையில் அல்லது வைத்த கூட்டில் சிக்கிய மீனை எடுப்பதும் ஹராமாகும்.

வேட்டைப் பிராணிகள் பற்றிய சட்டங்கள்:

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗؕ

'(விசுவாசிகளே! தானாகச்) செத்த வஸ்துவைச் சாப்பிடுவதும், ஒலித்தோடும் இரத்தத்தைச் சாப்பிடுவதும், பன்றி இறைச்சியைச் சாப்பிடுவதும், அறுக்கும்போது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லப்பட்டதைச் சாப்பிடுவதும், கண்ணியில் மாட்டிச் செத்தது,(கம்பு கல் போன்றதைக் கொண்டு) அடித்து சாகடிக்கப்பட்டு செத்தது, (உயரத்தில் இருந்து) கீழே விழுந்து செத்தது (ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு) கொம்பால் குத்தப்பட்டு செத்தது), ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தது  ஆகியவற்றை சாப்பிடுவதும் உங்கள் பேரில் விலக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த வஸ்துக்களில் நின்றும் நீங்கள் (தரிபாடான உயிரைப் பெற்று முறைப்படி) அறுத்ததைத் தவிர. இன்னும் நட்டப்பட்ட கற்களுக்காக(விக்கிரகம் போன்றவற்றிற்காக) அறுக்கப்பட்டதும், இன்னும் கட்டையுருட்டி நீங்கள் குறி பார்ப்பதும் உங்கள் பேரில் விலக்கப்பட்டிருக்கின்றன. (அல்லது அம்பு எய்து குறிகேட்டு பாகம் பிரித்துக்  கொள்வதும் உங்கள் மீது விலக்கப்பட்டிருக்கின்றன. அதாவது: அந்நாளில் கஅபாவுடைய பூசாரியிடம் மூன்று அல்லது ஏழு கட்டைகள் இருந்தன. அதில் சூலம் போட்டிருந்தது. ஒரு சொல்படி அதில் ஆம் என்றும் இல்லை என்றும் இன்னும் ஒரு சொல்படி என் நாயன் செய்யச் சொன்னான் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதை உருட்டிப் பார்த்து அதில் செய்யும்படி வந்தால் செய்வார்கள். வேண்டாம் என்றால் விட்டுவிடுவார்கள்.) இவையாவும் பாவங்களாகும். – அல்குர்ஆன் 5:3

يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ ۖ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

'(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறும்: (சுத்தமான) நல்ல பொருட்கள் உங்களுக்கு ஆகுமாக்ககப்பட்டுள்ளன. அன்றி, அல்லாஹ் உங்களுக்கு கற்பித்திருக்கிறப் பிரகாரம் வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பட்சிகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி, தாம் புசிக்காமல்) உங்களுக்காகத் தடுத்(துவை)த்திருப்பவற்றையும் (அவை இறந்து விட்;ட போதிலும்) நீங்கள் அதைப் புசிக்கலாம். (எனினும் வேட்டைக்கு விடும் பொழுது பிஸ்மில்லாஹ் என்று) அவற்றின் மீது அல்லாஹ ;வின் பெயரைக் கூறியே விடுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கேட்பதில் மிகச் தீவிரமானவன்.' – அல்குர்ஆன் 5:4

சாப்பிடுவதற்கு ஆகுமான பிராணிகளில் காட்டிலுள்ள பிராணிகளை வேட்டையாடி இறந்தாலும், வீட்டு மிருகங்களை அறுத்தாலும் சாப்பிடுவது ஹலாலாகும். மிருகம் ஹலாலாவதற்கு ஷர்த்துக்கள் ஆறு.

1. வேட்டைக்காரன் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2. வேட்டையை நாட வேண்டும்.
3. பார்வை உள்ளவனாக இருக்க வேண்டும்.
4. பகுத்தறியும் தன்மைள்ளவனாக இருக்க வேண்டும்.
5. ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டாதவனாக இருக்க வேண்டும்.
6. காயப்படுத்தும் கூர்மையான அம்பினால் தைக்கப்பட்டு இறந்ததாகவும், பழகிய நாய், வல்வத்தான், ராஜாளி ஆகியவைகளை ஏவி அது பிடித்துச் செத்ததாகவும் அல்லது இறந்து விடப்போகிற துடிப்புடன் அதைக் கண்டபின் செத்ததாகவும் இருக்க வேண்டும்.

வேட்டைநாய் கடித்திருக்கும் இடத்தை கழுவிவிட வேண்டும். அந்த நாய் பிடித்ததில் கொஞ்சத்தை தின்றுவிட்;டாலும், அல்லது உடையவனைக் கண்டு அந்த நாய் விரண்டு பயப்படவில்லையானாலும், அந்த வேட்டைப் பொருளை அவனுக்குக் கொடுக்கவில்லையானாலும் வேட்டையின் ஷர்த்து தவறி விட்டதால் அது ஹலாலாகாது. இது இமாமுனா ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மத்ஹபுடைய சட்டம்.

வேட்டை மிருகம் வேட்டைப் பொருளிலிருந்து சிறிது சாப்பிட்டு விட்டாலும் அதைப்புசிப்பது ஹராமாகும். ஆனால் வேட்டைப் பறவை அதிலிருந்து சிறிது சாப்பிட்டு விட்டால் அதைப் புசிக்கலாம். ஏனெனில் வேட்டை மிருகம் வேட்டைப் பொருளிலிருந்து சிறிதையும் சாப்பிடாமல் அதை தனது எஜமானுக்காக பிடித்து வைத்துக் கொள்ளும் விதமாக அதைப் பழக்க முடியும். ஆனால் வேட்டைப் பறவையை அவ்வாறு பழக்க முடியாது என்பது அனுபவத்தால் ஊர்ஜிதமாகியுள்ளது. இது இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மத்ஹபுடைய சட்டமாகும்.

துப்பாக்கியால் சுட்டு அந்தத் துப்பாக்கிக் குண்டின் கனத்தினால் வேட்டைப் பொருள் இறந்து விடுமானால் அதைப் புசிப்பது ஹராமாகும்.

அறுக்கிற ஆயுதம் கூர்மையானதாக இருக்க வேண்டும். கத்தி, கூர்மையான மூங்கில், கண்ணாடி போன்றவற்றைக் கொண்டு அறுக்கலாம்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் ஹலாலான உணவைத் தந்தருள்வானாக! ஆமீன்.