அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.

அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment December 20, 2014

Print Friendly, PDF & Email

 கஸ்ரஜ் பெருங்குலத்தின் பிரிவான பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவர் அபூதல்ஹாவின் இயற்பெயர் ஸைத் இப்னு சஹ்ல் அந்நஜ்ஜாரீ.  யத்ரிப் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரை ஒரு மரணச் செய்தி வந்தடைந்தது. ஆனால் அவருக்கு அது, சற்று உற்சாகத்தை அளித்த செய்தி!

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்னை ருமைஸா  என்ற உம்முஸுலைமின் இரண்டாவது கணவரான இவர்கள் உம்முஸுலைமை மணக்க விரும்பியபோது, உம்முஸுலைம் கூறினார்: “அபூதல்ஹா! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சாட்சியாகக் கொண்டு பகர்கிறேன். நீங்கள் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நான் உங்களிடமிடமிருந்து ஒரு குன்றுமணி தங்கம், வெள்ளி என்று எதுவும் பெறாமல், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதை மட்டுமே மணக்கொடையாக (மஹ்ராக) ஏற்றுக் கொண்டு நான் உங்களை மணந்து கொள்வேன்”.
உம்முஸுலைமின் பதில் அபூதல்ஹாவை மிகவும் யோசிக்க வைத்தது.

யோசனையின் இறுதியில் இணங்கினார் அபூதல்ஹா. “நான் முஸ்லிம் ஆக வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்?”
“கூறுகிறேன். மிக எளிது. ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்று சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தாங்கள் வாயால் சாட்சி பகர வேண்டும். அவ்வளவே! வீட்டிற்குச் சென்றதும் தங்களது சிலைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்”.

“வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்”.

பூரண திருப்தியுடன் இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் அபூதல்ஹா அல்அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு. அடுத்த சிலநாட்களில் இருவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது. வியந்தது மதீனா.

அபூதல்ஹா அழகானவர் மட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த இனத்தின் தலைவர். ஏராளமான சொத்து இருந்தது; சமூகத்தில் நல்ல அந்தஸ்து இருந்தது. உம்முஸுலைமின் அதே பனூ நஜ்ஜார் கோத்திரம்தான் இவரும். தவிர அக்கோத்திரத்தின் மிகச் சிறந்த போர் வீரர். யத்ரிப் நகரிலேயே அவர் ஓர் அசாத்திய வில்லாளி.

நபியவர்களை அகபாவில் சந்தித்து சத்தியப் பிரமாணம் (இரண்டாவது அகபா உடன்படிக்கை) செய்த 75 பேர் கொண்ட குழுவில் முக்கியமானவர்கள் அபூதல்ஹாவும் அவருடைய மனைவி உம்முஸுலைமும். அன்றைய உடன்படிக்கையின்போது யத்ரிபில் ஏற்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு 12 பேர்களைத் தலைவராக நியமித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதில் அபூதல்ஹாவும் ஒருவர்.

நபியவர்கள் மேல் அபூதல்ஹா பாசம் கொள்ள ஆரம்பித்தார்.. நபியவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் அலாதி ஆனந்தம் அடைந்தார் அபூதல்ஹா! கண்கள் அசதி மறந்தன. நபியவர்களுடன் உரையாடுவது என்பது அவருக்கு அளவிலா இனிமையாய் இருந்தது.
நபியவர்களிடமே ஒருநாள் கூறினார், “உங்களுக்காக நான் என்னுடைய ஆவியைத் தரத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய திருமுகத்திற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாமல் நான் என்னுடைய முகத்தைக் கொண்டு தடுப்பேன்”.
அது கபடமற்ற பேச்சு. விரைவில் நிரூபணம் ஆனது.
உஹதுப் போர் – முஸ்லிம் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, குரைஷிகளின் படை முன்னேறி தாக்கிக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் அவர்கள் முஸ்லிம்களைச் சூழ ஆரம்பித்திருந்தனர். நிலைமை மிகவும் கடுமையடைந்து, நபிகளாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. அவர்களது நெற்றியில் ஆழமான வெட்டு, உதட்டிலும் வெட்டுக் காயம்.

அந்தக் களேபரமான சூழ்நிலையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி ஒன்று தீயாய்ப் பரவ ஆரம்பித்தது. அது குரைஷிகள் மத்தியில் அதிக உற்சாகத்தை அளிக்க ஆரம்பித்தது. முஸ்லிம் வீரர்களையோ அது மேலும் பலவீனப்படுத்தி, பலர் செயலிழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட, மிகச் சிறிய அளவிலான படைக்குழு ஒன்று மட்டுமே நபியவர்களை அப்பொழுது சூழ்ந்திருந்தது; எஞ்சியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் அபூதல்ஹா.

அந்தச் சிறிய அளவிலான தோழர்கள் கடும் ஆக்ரோஷத்துடன் முஹம்மது நபியைச் சுற்றி அரண் அமைத்தார்கள். அதுவரை முஸ்லிம் படைகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை வலிமையாய் அத்துடன் தடுத்து நிறுத்தினார்கள்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் ஒரு மனிதக் கேடயமாக வந்து குதித்தார் அபூதல்ஹா. நபிகள் நாயகத்தின் மீது மேற்கொண்டு யாரும் எதுவும் தாக்க இயலாவண்ணம் ஒரு மலை போல் நின்று கொண்டார். வில்லைப் பூட்டினார். அம்பெய்ய ஆரம்பித்து விட்டார். குறி தவறாது பாய்ந்து சென்றன அவரது அம்புகள். குரைஷிப் படை வீரர்களைத் தாக்கிச் சாய்க்க ஆரம்பித்தன. அதேநேரத்தில் களத்தில் நபியவர்கள் தாக்கப்படாமலிருக்க, அவர்களின் காப்புக் கேடயமாகச் சுழன்று கொண்டிருந்தார் அபூதல்ஹா.

முன்னால் என்ன நடக்கிறது என்பதைக் காண அவரது தோளைத் தாண்டி முஹம்மது நபி காண முற்படும்போதெல்லாம், அவர்களைத் தடுத்து பின்னுக்கு நகர்த்தி, “அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பெற்றோரை உங்களுக்குப் பகரமாய் இழப்பேன். தயவுசெய்து தாங்கள் எதிரிகளைக் காண முற்பட வேண்டாம். அவர்கள் உங்கள்மீது அம்பெய்தி விடலாம். அதைவிட எனது கழுத்திலும், மார்பிலும் அது தைப்பது எனக்கு மிகவும் உவப்பானது. நான் தங்களுக்காக என்னையே இழக்கத் தயாராயிருக்கிறேன் யா ரஸூலல்லாஹ்!” என்று பதட்டமானார் அபூதல்ஹா..

எண்ணற்ற குரைஷி வீரர்கள் அவரால் அன்று கொல்லப்பட்டனர். எண்ணற்றக் காயங்களுடன் வரலாற்றில் தனது அத்தியாயத்தை அன்று பதிவு செய்தார் அபூதல்ஹா.

இப்போரில் எதிரிகளின் அம்புகள் குறிபார்து அண்ணலாரைநோக்கி வந்தபோது அதைத் தம் கைகளால் தடுத்ததால் அவர்களின் விரல்கள் எப்போதும் பயன்படாவண்ணம் படுகாயமுற்றன. இவர்கள் உஹது போரில் தமது ஒரு கையை இழந்தனர் என்று மற்றொரு வரலாறு கூறுகிறது.

போர் முடிந்ததும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதல்ஹாவின் உடலைப் பார்த்த போதுஅதில் எழுபது காயங்கள் இருந்தன. கையில் மட்டும் இருத்திநான்கு காயங்கள் காணப்பட்டன.

இப்போரில் அண்ணலார் அபூதல்ஹா அவர்களை ‘தல்ஹத்துல் கைர்(நல்ல தல்ஹா) என்றும், ஹுனைன் போரில் இவர்களை ‘தல்ஹதுல் ஜூத்’ (தயாளமுள்ள தல்ஹா) என்றும், அஷீரா போரில் ‘தல்ஹத்துல் பையால்'(உதவும் தல்ஹா) என்றும் அழைத்தனர்.

போரில் தல்ஹா இடும் பெரும் சத்தம் ஒரு படையினர் போடும் சத்தத்தை விட மிகைத்தது என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.அபூதல்ஹா காலையில் எழுந்து சுப்ஹுத் தொழத் தயாராவார். நபிகள் நாயகத்துடன் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுதுவிட்டு, அவருடன் ஏறக்குறைய பாதிநாள் அளவு தங்கியிருப்பார். பிறகு வீட்டிற்கு வந்து குட்டித் தூக்கம், உணவு, நண்பகல் தொழுகை. பிறகு மீண்டும் தயாராகி கிளம்பிச் செல்பவர், தனது தொழில், அலுவல் எல்லாம் பார்த்து முடித்து இரவு இஷா நேரத்தில்தான் வீடு திரும்புவார். அனாவசியங்களில் நேரத்தைத் தொலைக்காத வாழ்க்கை.

மதீனாவிலேயே, பேரீச்ச மரத்தோட்டங்கள் மிக அதிகமானவற்றுக்குச் சொந்தக்காரச் செல்வந்தர் அபூதல்ஹா. அவரிடம் பைருஹா என்றொரு தோட்டம் இருந்தது. அவருக்கு மிகவும் விருப்பமானது அது. அந்த பைருஹா, மஸ்ஜிதுந் நபவீயின் எதிரே அமைந்திருந்தது. முஹம்மது நபி அவ்வப்போது அங்குச் சென்று அதிலோடும் சுனையின் சுவையான நீரை அருந்துவது வழக்கம்.

ஒருநாள் நபியவர்களுக்கு வசனம் ஒன்று இறைவனால் அருளப்பட்டது:

“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”அல்குர்ஆன் 3:92)

இது அருளப்பெற்றதும் அத்தோட்டத்தை அல்லாஹ்வின் வழியில் அறம் செய்துவிட எண்ணினர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆலோசனைப்படி அதை உறவினர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டனர்.

பேரீச்ச மரங்கள், திராட்சைக் கொடிகள் நிரம்பிய அழகான தோட்டம் ஒன்றும் அபூதல்ஹாவிடம் இருந்தது. ஒருநாள் அந்தத் தோட்டத்தில் மரநிழலில் அபூதல்ஹா தொழுது கொண்டிருந்தார். அப்பொழுது எங்கிருந்தோ பறந்து வந்தது அழகிய பறவை அங்கும் இங்கும் பறந்ததால் அவர்களின் கவனம் சிதறிவிட்டது. தாம் தொழுதது எத்தனை ரக்அத்துகள் என்பதை மறந்து விட்டார்கள். அதனால், ஒரு தொழுகை தட்டுக்கெட்டுப் போனதற்கு மொத்தத் தோட்டத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டார் அபூதல்ஹா.

தொழுகை மட்டுமல்ல, அபூதல்ஹா நோற்ற நோன்புகளும் அலாதியானவை. வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளின்படி அவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவிற்கு முன்னர் பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டதால் நோற்க முடியாமல்போன ஸுன்னத்தான நோன்புகளை நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இரு பெருநாள்கள் தவிர ஓராண்டின் பெரும்பாலான நாட்களிலும் அவர் நோன்பிருந்திருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.
தள்ளாத வயதை அடைந்த பின்னரும் இறைவனின் பாதையில் போரிடுவதை அவர் விடவில்லை.

இந்நிலையில்தான் மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலத்தில் கடல் தாண்டிய படையெடுப்பிற்கு அழைப்பு வந்தபோது மகன்களின் பாசத் தடையை மீறிக் கிளம்பிவிட்டார் அவர். கடலில் முன்னேறிக் கொண்டிருந்தது முஸ்லிம்களின் படை. அப்பொழுது அபூதல்ஹாவை வந்துத் தழுவியது நோய்!. வயோதிகம், நடுக்கடல் என்பதால் பெரிய அளவில் சிகிச்சை ஏதும் அளிக்க இயலாத நிலை, பிரயாணத்தின் கடுமை வேறு. அவருடைய உடல் நிலை மோசமடைந்து கொண்டே வந்து இறுதியில் இறைவனின் பாதையில் தமது 51ஆவது வயதில் மரணமடைந்தார் அபூதல்ஹா.
முஸ்லிம்கள், அவரை நல்லடக்கம் செய்ய அருகில் ஏதும் நிலம் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் தீவு ஒன்று தென்பட்டது. ஆனால் அதற்குள் ஏழு நாட்கள் கழிந்துவிடடன. அந்த அத்தனை நாட்களும், கப்பலில் இருந்த அவரது உடல், அப்படியே உறங்கிக் கொண்டிருப்பவரைப் போல், கெடாமல் பத்திரமாக இருந்துள்ளது!

இவர்கள் ஜமல் போரில் மறைந்ததாக ‘தாரீகெ காமிலி’ல் கூறப்பட்டுள்ளது.