பராஅத் ரொட்டி
By Zainul Abdeen
தமிழ் முஸ்லிம்கள் என்ற ரீதியில் விரும்பியோ விரும்பாமலோ வழமைகள், பாரம்பரியங்கள் என்பனவற்றில் இருந்து தற்கால குழப்பவாதிகளால் வேகமாக தூரப்படுத்தப்பட்டுள்ளோம். பாராஅத் இரவு அல்லது ஷஃபான் மாதம் 15ம் பிறை இரவு தமிழ் முஸ்லிம்கள் பாரம்பரிய அடையாளங்களில் தவிர்க்க முடியாத அம்சம்.
தமிழகத்திலும், இலங்கையிலும் நிஸ்புஷ் ஷஃபான் / பராஅத் இரவில் வீடுகளிலிலும் பள்ளிவாசல்களிலும் ஒன்று சேர்ந்து
1.ஆயுளை நீடிக்கவும்,
2.பலாய் முஸீபத்துக்களில் இருந்து தம்மை பாதுகாக்கவும்
3.பிற மனிதர்களின் தேவைகளிலிருந்து தம்மை பாதுகாக்கவும்
வேண்டி சூறா யாசீனை தனித்தனியாக ஒவ்வொரு விடுத்தம் மஃரிபிற்குப் பின் இஷாவிற்குள்ளாக ஓதி துஆ செய்து கொள்வதும்,
அதற்கு முன்னதாக ஷஃபான் பிறை 14 இரவன்று கப்ராளிகள் பேரால் 3 மூன்று யாஸீன் ஸூரா ஓதி தமாம் செய்து கொள்ளும் வழக்கம் மிக நீண்டகாலமாக பாரம்பரியமாக இருந்து வருகிறது.
அதற்குமுன் கப்ரஸ்தான் இருக்கும் பள்ளிவாயில்களுக்குஅரிசிமாவில் ரொட்டி சுட்டு அத்துடன் காம்புள்ள வாழைப்பழங்களும் இனிப்புகளும் கொடுப்பது வழக்கம்.
அந்த மையவாடியில் அடங்கப்பட்டிருக்கும் தம் சொந்தங்களுக்கு கத்முல் குர்ஆன் ஓதி பள்ளிவாயில்களில் தமாம் செய்வது வழக்கம். இவ்வழக்கங்கள் தொன்றுதொட்டு நடைபெற்று வருவது கண்கூடு.
ஷஃபான் இரவில் இறைவன் மனிதனின் அமல்களை விஷேசமாக அவதானிக்கின்றான் என்ற அடிப்படையில் எமது ஸலபுகளும், மூதாதையர்ளும் அன்றைய தினத்தை முக்கியமாகக் கருதுகிறார்கள்.
”உணவு வழங்குதல் என்ற செயல் மிகவும் சிறந்த ஸதகா” என்ற ரீதியிலும், ஏழை செல்வந்தர்கள் அனைவருக்கும் இலகுவாக வழங்கக் கூடிய உணவு ரொட்டி என்ற ரீதியில் வீடுகளில் சுடப்படும் ரொட்டி குடும்பத்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஸதகாவினால் எமது விதிகள் கூட மாற்றப்படலாம் என்பதை நபி மொழிகளில் வாசித்திருக்கின்றோம். அவற்றை அடிப்படையாக வைத்தே எம் முன்னோர்கள் இந்த நடைமுறையை பின்பற்றினார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அழகிய வழக்கங்களை எதிர்க்கவில்லை. அவற்றுக்கு மதிப்பளித்தே வந்திருக்கிறார்கள். பராஅத் ரொட்டியும் தமிழ் முஸ்லிம்களின் வழமைகளில் ஒன்று.
வீடுகளில் தாய் தந்தை பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து குர்ஆனை ஒதுவது மிகச் சிறந்த நடைமுறையாகும்.
எமது முன்னோர்கள் காட்டித்ததந்த நடைமுறைகளில் பரகத் நிறைந்த தாத்பரியங்கள் இருப்பதை இன்று நினைத்து பெருமைபட வேண்டும்.
இஸ்லாம் பாரம்பரிய, கலாசார, பண்பாடுகள் அற்ற வறண்ட மார்க்கமாக சிலரால் அடையாளப்படுத்தப்பட்டு வருவது இந்நடைமுறைகள் தொடர்வதால் தகர்க்கப்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை. இந்த செயல்களை நாம் ஊக்கப்படுத்துவது காலத்திற்கேற்ற அவசியமாகும்.
வல்ல நாயன் நம் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக. ஆமீன்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம