ஃபித்ரா – சட்டவிளக்கம்
By Zainul Abdeen
ஃபித்ரா
நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரி 2ஆம் ஆண்டிலேயே இதுவும் கடமையாக்கப்பட்டது. ஒருவர் நோன்பு நோற்கும்போது செய்யும் சிறுசிறு தவறுகளால் அந்நோன்புகள் விண்ணை எட்டாமல், மண்ணிற்கும் விண்ணிற்கும் இடையே தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஃபித்ரா கொடுப்பது அத்தடையை அகற்றி அவற்றை விண்ணுலகை அடையச் செய்கிறது’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
தமது உடமைகளுக்கு ஸகாத் கொடுப்பது போன்று தனது உடலுக்கு ஸகாத்தாக ஸகாத்துல் பித்ரு அமைகிறது என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஒரு முஸ்லிம் தனக்காகவும் அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் பெருநாள் பகல் மற்றும் இரவு உணவுக்கும் குடும்பச் செலவுக்கும், செலுத்த வேண்டிய கடன் தொகைக்கும் ஏற்பாடு செய்த பின்பும் அவரிடம் பொருள் வசதியிருப்பின் ‘தனக்காகவும் அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் ‘ஃபித்ரா ஜகாத்’ கொடுப்பது அவர் மீது கடமையாகும்.
ஒருவர் தனக்காக ஃபித்ரா கொடுக்கும்போது தான் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும், தன் மனைவி மக்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஃபித்ரா செலுத்தும்போது அவர்கள் ஊரிலிருக்கும் ஏழைகளுக்கும் அந்தந்த ஊரில் பிரதான உணவாக உட்கொள்ளும் தானியத்திலிருந்து ஃபித்ரா கொடுக்க வேண்டும். (ஊரில் பெரும்பான்மையோர் அரிசி சாப்பிட ஒருசிலர் கோதும சாப்பிடுகிறார்கள் என்றால் அரிசியைத் தான் கொடுக்க வேண்டும்.)
தானியத்தின் கிரயத்தையோ, பிரதான உணவில்லாத தானியத்தையோ கெட்டுப்போன தானியங்களையோ ஃபித்ரா கொடுப்பத கூடாது.
கடைசி நோன்பின் மஃரிபு முதல் அதாவது ஷவ்வால் பிறை 1 முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வரை பித்ரா நல்குவதற்குரிய காலமாகும். பெருநாள் தொழுகைக்குப் பின் காலம் தாழ்த்துவது மக்ரூஹ் ஆகும். எனினும் சொந்தத்தில் உள்ள ஏழை, அண்டை வீட்டுக்கார ஏழை போன்றோரை எதிர்பார்த்து பிற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களுக்காக பிற்படுத்துவது சுன்னத்துதான். ஆனால் சூரியன் மறைவதற்குள் வழங்கி விட வேண்டும். ரமலான் மாதம் முதலே பித்ரா வழங்குவது கூடும். பெருநாளைக்குப் பிறகு பிற்படுத்துவது ஹராம் ஆகும்.
வசதியான சிறுவனுக்காக தந்தை கொடுப்பது வாஜிபல்ல.மாறாக அச்சிறுவனின் பொருளிலிருந்துதான் வழங்கப்பட வேண்டும்.
விபச்சாரத்தில் பிறந்த குழந்தைக்கான ஜகாத்துல் பித்ரு அதன் தாயின் மீது கடமையாகும். சம்பாதிப்பதற்கு சக்தியுடைய பெரிய மகனுக்காக கொடுப்பது தந்தையின் மீது கடமையில்லை. தனது மனைவியின் பணிவிடைக்காக அமர்த்தப்பட்டிருக்கும் அடிமைக்கும் கணவனே கொடுக்க வேண்டும். அவ்வடிமை தனது அடிமையாக இருப்பினும் சரியே!
அளவு: ஒரு சாஃ மரக்காலாகும். ஒரு மரக்கால் என்பது நான்கு முத்துகளாகும். அதாவது 2 கிலோவும் 420 கிராம் எடையும் கொண்ட அளவாகும். ஒரு முத்து என்பது ஒரு ராத்தலும் ஒரு ராத்தலில் மூன்றில் ஒரு பங்குமாகும்.