மக்கா மதீனாவில் மீலாது விழா – வரலாற்றுக் குறிப்புகள்
By Zainul Abdeen
வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புனித மக்கா மற்றும் மதீனாவில் நடைபெற்ற மீலாத்துந் நபி தின கொண்டாட்டங்கள்
1. அல்லாமா முல்லா அலி காரீ( மறைவு: கி.பி. 1605) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தின் போது மதீனாமக்களின் வழக்கத்தை இவ்வாறு கூறுகின்றார்.
” மதீனாவாசிகள் (அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிவானாக) அத்தினத்தில் மவ்லித் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் உற்சாகத்துடனும் நேர்மையான முறையிலும் கலந்துகொள்கின்றனர். ”
நூல்: மவ்ரித் அர்-ராவி பி மவ்லித் அந் நபவி, பக்கம் 29
2.இப்ன் அல்-ஜவ்ஸி (இறப்பு : கி.பி.1256) பின்வருமாறு கூறுகின்றார்.
” மக்கா முக்கர்ரமா மற்றும் மதீனா முவ்வரா, எகிப்து, யெமன், சிரியா மேலும் அரேபியாவின் கிழக்கு மற்றும் மேற்கு நகரங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.ரபிய்யுல் அவ்வல் பிறை தென்பட்டதும் அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். அவர்கள் குளித்து தம்மிடமுள்ள சிறந்த உடைகளை அணிந்து, நறுமணங்களை பூசிக்கொள்கின்றனர். அத்தினத்தில் ஏழைகளுக்கு மிக சந்தோஷத்துடன் உதவி செய்கின்றனர், மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லித்களை( புகழ்மாலைகளை) கேட்பதில் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவதன் மூலம் வருடம் முழுவதும் நலவுகள் நடக்கின்றது எனவும்,பாதுகாப்பும் கிடைக்கின்றது எனவும்,பிள்ளைகள் மற்றும் செல்வம் அதிகரிக்கின்றது எனவும், நகரங்களில் மற்றும் வீடுகளில் சமாதானம் நிலவுகின்றது எனவும் அவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ”
நூல்கள் :
* அல்-மீலாத்துன் நபவி, பக்கம் 58
* தப்ஸீர் ரூஹுல் பயான் – அல்லாமா இஸ்மாயில் ஹக்கி பாகம் 9: பக்கம் 56
* அத்- துர்ரல் முனஸ்ஸம், பக்கம் 100,101
3.ஷைகு யூசுப் பின் இஸ்மாயில் அந்-நப்ஹானி(1849-1932) கூறுகின்றார்.
” மக்காவாசிகள் ஒவ்வொரு வருடமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தன்று பெரும் மவ்லித் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர்”
நூல் : ஜவாஹிர் அல்-பிஹார், பக்கம் 122
4.ஷாஹ் வலியுல்லாஹ் (கி.பி. 1703-1762) கூறுகின்றார்கள்.
” ஒவ்வொரு வருடமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினம் மக்காவாசிகளால் கொண்டாடப்பட்டதுடன், அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். ”
நூல் : புயூத் அல்-ஹரமைன்
5.மக்கா முக்கர்ரமாவின் அல்-கிப்லா பத்திரிகையில் வெளியாகிய செய்தி இதனை சான்று பகிர்கின்றது.
” நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டங்களை புனித மக்கா நகரில் அவதானிக்கலாம். மக்காவாசிகள் இத்தினத்தை யவ்ம் அல்-ஈத் மவ்லித் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என அழைக்கின்றனர். இத்தினத்தில் மக்கள் சுவையான உணவுகளை தயாரிக்கின்றனர். மேலும், மக்காவின் ஆளுநரும் மற்றும் ஹிஜாஸின் இராணுவத் தளபதி உட்பட அவர்களது படையினர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரிசிப்பதற்கு, கஸீதாக்களை பாடியவர்களாக அணிவகுத்து செல்கின்றனர். புனித ஹரம் அல்-மக்கிக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்திற்கும் இடையில் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். மேலும், அப்பாதையில் இருக்கும் கடைகளும், வீடுகளும் சோடிக்கப்பட்டிருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தில்,முழுநாளும் மக்கள் கஸீதாக்களை ( புகழ் மாலைகளை) பாடிக் கொண்டிருப்பர். ரபீய்யுல் அவ்வல் பிறை 11இல் இஷாவிற்கு பின்னர் மவ்லித் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் “
உசாத்துனை :
அல்-கிப்லா பத்திரிகை – மக்கா முகர்ரமா
தரீக்கத் சஞ்சிகை – லாகூர், ஜனவரி 1917, பக்கம் 2-3
6. ஹிஜ்ரி 7ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர்களான ஷைகு அபூ அல்-அப்பாஸ் மற்றும் அவரது மகன் அபூ அல்-காஸிம் கூறுகின்றார்கள்.
” பக்தியுள்ள யாத்திரீகர்கள் மற்றும் நாடுகாண் பயணிகள் சாட்சியமளித்துள்ளார்கள். அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தின்று மக்காவில் கொடுக்கல், வாங்கல், வியாபாரங்கள் கூட நடைபெற மாட்டாது. மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரிசிப்பதில் வேலையாக இருப்பார்கள், அங்கு சன நெருக்கமாக இருக்கும். மேலும் அந்நாளில் புனித கஃபதுல்லாஹ்வை தரிசிப்பதற்காக திறக்கப்பட்டு இருக்கும்.”
நூல் : கித்தாப் அல்-துர் அல்-முனஸ்ஸம்
7. ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியரும், நாடுகாண் பயணியுமான இப்ன் பத்துதா அவரது புத்தாகமான ” ரிஹ்லாவில் ” இவ்வாறு கூறுகின்றார்.
” ஒவ்வொரு ஜூம்ஆ தொழுகையின் பின்பும்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தன்றும் பனூ ஷைபா கோத்திரத்தின் தலைவரால் புனித கஃபாஹ் திறக்கப்படுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில், மக்கா முகர்ரமாவின் ஷாபி மத்ஹப்பின் தலமை நீதிபதி நஜ்ஜுமுத்தீன் இப்ன் அல்-இமாம் முஹியித்தீன் அல்-தபரி அவர்களால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாருக்கும், மக்கா வாசிகளுக்கும் உணவு பரிமாறப்படுகின்றது. “
8.வரலாற்று ஆசிரியர் ஷைகு இப்ன் ஸாஹிரா அல்-ஹனபி அவரது ‘ஜாமி அல்-லத்தீப் பி பாதில் மக்கதா வ-அகிலா’ (பக்கம்-326) என்ற புத்தகத்திலும், இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி அவரது ‘கிதாப் அல்-மவ்லித் அல்-ஷரீப் அல்- முஅஸ்ஸம்’ என்ற புத்தகத்திலும், வரலாற்று ஆசிரியர் ஷைகு அல்-நஹ்வலி அவரது ‘அல்ஈலம் பிஆலம் பைத் அல்லாஹ் அல்-ஹரம்’ (பக்கம்-205) என்ற புத்தகத்திலும் பின்வருமாறு கூறுகின்றனர்.
“ஒவ்வவொரு வருடமும் ரபீய்யுல் அவ்வல் பிறை 12ல், மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர், மக்கா முக்கர்ரமாவின் நான்கு காதிகளும் (நான்கு மத்ஹபை பிரிநிதித்துவம் செய்யும் நான்கு காதிகள்) மற்றும் மக்கா முக்கராவின் நீதிபதிகள், குறிப்பிடத்தக்கவர்கள்,செய்குமார்கள், ஸாவியா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அறிஞர்கள் அடங்கிய பெரிய குழுவினர்கள் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரசிப்பதற்காக திக்ர் மற்றும் தஹ்லில் மொழிந்தவர்களாக செல்கின்றனர்.
அவர்கள் செல்லும் பாதை விளக்குகளாலும், மெழுகு வர்த்திகளாலும்ஒளியூட்டப்பட்டிருக்கும். அங்குள்ள மக்கள் விசேட உடைகளை அணிந்தவர்களாக பாதை வழியே இருப்பார்கள். அவர்கள் தமது பிள்ளைகளையும் கூட்டிவருவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ளே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின உரை இடம்பெறும். அதன் பின்னர், உஸ்மானிய சுல்தான்,மக்கா முகர்ராமாவின் அமீர் ஆகியோருக்கு துஆ செய்யப்படும். அதனை ஷாபி மத்ஹபின் காதி நிறைவேற்றுவார். இஷாத் தொழுகைக்கு சற்று முன்னர் அவர்கள் அனைவரும் புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலுக்கு திரும்புவர்.அங்கு மக்காமு இப்ராஹீம் அலைஹிஸ்லாம் அருகில்
வரிசையாக உட்காருவர். “
பிற்குறிப்பு :
புனித மக்காவின் ஹரம் ஷரீப் மற்றும் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் மீலாத்துன் நபி தின நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
1924 ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பிரித்தானியாவின் உதவியுடன் இப்னு ஸவ்த்தால் ஹிஜாஸ் பிரதேசம் ஒன்றிணைகக்கபட்டு சவூதி அரேபியா உருவாக்கப்பட்டது. 1925ஆம் ஆண்டு ஜன்னத்துல் பக்கி உட்பட பல இஸ்லாமிய வரலாற்று சின்னங்கள் உடைக்கப்பட்டன. மேலும், புனித ஹரம் ஷரீப் மற்றும் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் மீலாத்துன் நபி தின நிகழ்வுகள் முற்றாக நிறுத்தப்பட்டன.
நன்றி: தரீகா வே