அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்
By Zainul Abdeen
அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் வாழ்க்கை சுருக்கம்
காதிரிய்யத்துல் அலிய்யா தரீகாவின் 41 ஆவது ஷெய்காக வரும் ஷெய்குனா முஹம்மதலி சைபுத்தீன் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள்
பிறப்பு
மர்ஹும் செய்யிது முஹம்மது ஹம்மாது – மர்ஹுமா சபூரியத் பீவி ஆகிய பெற்றோர்களுக்கு ஆறாவது மகனாக கி.பி. 15-08-1945 ஹிஜ்ரி 1364 ரமலான் பிறை 6 ல் தென்னிந்தியா தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி காலங்குடியிருப்பு பெரிய தெருவில் அமைந்திருக்கும் தொன்மைவாய்ந்த வீட்டில் பிறந்தார்கள்.
அக்காலத்தில் தங்கள்மார்கள் (ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்தக் குடம்பத்தினர்கள்) வருகை தருவதும், வீடுகளுக்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பதும், கண்ணியப்படுத்துவதுமான காலத்தில் தங்கள்மார்கள் சூட்டக்கூடிய பெயரான ‘சைபுத்தீன் – தீனின் வாள்’ என்ற பெயர் அன்னாருக்கு சூட்டப்பட்டது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும், கௌதுல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும், அன்னாரது மூத்த மகனார் அவர்களினதும், சங்கைமிகு ஷெய்குமார்கள், தங்கள்மார்களினதும் பெயருக்கு கிடைத்திருப்பதுபோல் ஷெய்குநாயகத்திற்கும் இப்பெயர் அன்னார்களின் துஆ பேற்றினால் கிடைக்கப் பெற்றிருக்கிறது.
ஆரம்பக் கல்வி
குர்ஆன் பாடம் மர்ஹுமா லெப்பை ராத்தா அவர்களிடம் கற்றார்கள். பாடங்கள் கற்பதற்கு தாய், தந்தை, சாச்சி (சின்னம்மா) போன்றோர் ஊக்கம் கொடுத்தனர்.
1952 காலங்குடியிருப்பு நெய்னார் பிள்ளைத் தெரு ஆரம்பப் பாடசாலையில் சேர்ந்து 5 ஆம் வகுப்பு வரை படித்தார்கள்.
காயல்பட்டினம் மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கைக்குரிய மா.மு.க. முஹ்யித்தீன் தம்பி ஆலிம் முப்தி அவர்களால் காலங்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ‘அல்மத்ரஸத்துல் முஹம்மதிய்யா’ அரபிக் கலாசாலையில் 02-06-1958 ல் சேர்ந்து ஆரம்பப்பாடமான ‘மீஸான் கிதாபை’ தொடங்கி 2 ஜும்ரா வரை ஓதினார்கள்.
பின்பு தஞ்சை மாவட்டம் மாயாவரம் தாலுகா, கிளியனூர் கிராமம் ‘அல்மத்ரஸத்துர் ரஹ்மானிய்யா’ அரபிக் கல்லூரியில் சேர்ந்தார்கள். 5 ஆண்டு காலம் 3ஆம் ஜும்ராவிலிருந்து 7ஆம் ஜும்ரா வரை கற்றார்கள். கல்லூரி முதல்வரான மௌலவி அப்துல் ஹமீது ஹழ்ரத் அவர்கள் (பொதக்குடி அப்துல் கரீம் ஹழ்ரத் அவர்களிடம் கல்வி பயின்றவர்கள்) வகுப்பில் முதல் மாணவனாக அன்னாரைத் தேர்ந்தெடுத்து ஹிஜ்ரி 1385 ஷஃபான் பிறை 8, (02-12-1965)ல் மௌலவி ஆலிம் ரஹ்மானி என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
அப்பட்டத்தை வழங்கும்போது,
وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا
(பூமியில் எந்த ஒரு பிராணிக்கும் அல்லாஹ் மீது அவைகளின் ரிஸ்க் – உணவு(பொறுப்பாக) இருந்தே அல்லாமல் இல்லை’
என்ற திருக்குர்ஆன் 11:6 வசனத்தை ஓதி கொடுத்தார்கள். அதன் அடிப்படையிலேயே தங்கள் வாழ்வை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.
மேற்படிப்பு – முதவ்வல்:
அதன்பின் வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மேற்படிப்புக்காக முதவல்லுக்காக சேர்ந்தார்கள். அங்கு உத்தமபாளையம் அல்லாமா அபூபக்கர் கிப்லா ஹழ்ரத் அவர்கள் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கேரளா தானூரைச் சார்ந்த கே.கே. அபூபக்கர் முஸ்லியார் அவர்கள் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த நாதாக்களிடமும் கால்மடித்து கல்வி பயின்று ஹிஜ்ரி 1386 ஷஃபான் பிறை 10 (27-11-1966) ல் மௌலவி ஆலிம் பாகவி ஸனதைப் பெற்றார்கள்.
மத்ரஸாவில் பயின்று கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் நடைபெறும் சொற்பயிற்சி மன்றமான ‘லஜ்னத்துல் இர்ஷாத் மாணவர் சொற்பயிற்சி மன்றத்’தின் செயலாளராக செயல்பட்டு வந்தார்கள்.
மஹ்லறாவில் பணி:
அதன்பின் கல்விப்பட்டணமாம் காயல்பட்டினத்தில் 21-01-1967 ஷவ்வால் பிறை 15ல் மஹ்லறா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார்கள்.
இக்காலகட்டத்தில் மஹ்லறா மாணவர்களுக்கு உணவகம் மத்ரஸாவிலேயே ஏற்படுத்தி விட்டால் அதிக மாணவர்களை சேர்க்க இயலும் என்று கருதி அதற்கு முயற்சி செய்தார்கள்.
அதற்கு மர்ஹும் ஏ.கே.எம். முஹம்மது மீரா சாகிபு காக்கா அவர்களும், மர்ஹும் சாளை முஹம்மது அப்துல் காதிர் காக்கா அவர்களும் உறுதுணையாக இருந்தார்கள். இச்சமயத்தில் மஹ்லறாவின் செயலாளராக இருந்த மர்ஹும் ஸ்டார் எம்.ஏ. அப்துர் ரஷீது ஹாஜி அவர்கள் இதற்கு மிகவும் துணை நின்றார்கள்.
இதேகாலகட்டத்தில்தான் தப்லீக் ஜமாஅத்தை எதிர்த்ததால் பாக்கியாத்தை விட்டு வெளியேறி கேரளாவில் உஸ்தாதாக பணியாற்றிக் கொண்டிருந்த அல்லாமா கிப்லா ஹழ்ரத் அவர்களை காயல்பட்டினம் மஹ்லறா அரபிக் கல்லூரிக்கு முதல்வராக கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிக்கு ஷெய்குனா சைபுத்தீன் ஹழ்ரத் அவர்களும் உறுதுணையாக நின்றார்கள்.
1967 ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டுவரை அன்னாரின் 32 வருட கல்விசேவையில் மஹ்லரி பட்டம் பெற்ற மௌலவிமார்கள் அனைவரும் ஷெய்குனாவிடம் கல்வி பயின்றவர்களாகவே இருந்தார்கள்.
இமாமத் மற்றும் தைக்காவில் தொழ வைத்தல்:
ஹிஜ்ரி 1397 (04-03-1977) ம் ஆண்டு முதல் 15-06-2001 ஆம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் குத்பா சிறுபள்ளியில் ஐந்துவேளை தொழ வைக்கும் பேஷ்இமாமாக பணிபுரிந்தார்கள்.
மஹ்லறாவிலும் சரி, பேஷ் இமாம் வேலையிலும் சரி நேரத்தை சரிவர கடைப்பிடித்தார்கள். லீவு எடுத்தால் முற்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அதற்குரிய சம்பள பணத்தை வாங்க மாட்டார்கள். லீவு காலங்களில் தம்முடைய பாடத்தை நடத்தும் உஸ்தாதுமார்களுக்கு அந்த சம்பளத்தை பிரித்துக் கொடுத்து விடுவார்கள். மிகவும் இறையச்சத்துடன் தங்கள் பணியில் நடந்து கொண்டார்கள். பணியில் தம்மை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடந்தார்கள்.
காயல்பட்டினத்தில் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை ஸலவாத் ஓதவும், திக்ரு செய்யவும், மௌலிது நடத்திடவும், தராவீஹ் காலங்களில் பெண்களுக்கு தொழுகை நடத்தவும், பெருநாள் தொழுகை நடத்திடவும் பெண்கள் இன்னபிற இபாதத் செய்திடவும் தைக்காக்கள் ஆங்காங்கே இருக்கின்றன. இதில் நெய்னார் தெருவில் அமைந்திருந்த கைரிய்யா தைக்காவில் நமது ஷெய்கு நாயகம் அவர்கள் இப்பணிக்கு 1967ம் ஆண்டு முதல் தொடர்ந்து 50 ஆண்டுகள் தராவீஹ், பெருநாள் தொழுகைகள் தொழவைத்து வந்துள்ளார்கள்.
அவர்களின் சேவையை பாராட்டி கேடயமும், கவுரவமும் கொடுக்கப்பட்டது. அவர்களின் மறைவுச் செய்திக்கு ஒரு முன்னறிவிப்பாக அமைந்து விட்டது. அவர்கள் கேடயம் பெற்ற வருடத்தோடு அன்னாரின் மறைவும் நடந்து விட்டது. இது ஒரு அற்புதமாகும்.
பைஅத் பெறுதல்:
ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களிடம் 1967 ஆம் ஆண்டு முஹ்யித்தீன் பள்ளியில் வைத்து இஷாத் தொழுகைக்குப் பின் பைஅத் பெற்றார்கள். அதைப் பெரும்பாக்கியமாகவும் கருதினார்கள். அன்னாரைக் கொண்டு தான் பெற்ற ஏற்றங்கள் இருந்தன என்று அடிக்கடி சைபுத்தீன் ஹழ்ரத் அவர்கள் கூறிக் கொண்டிருப்பார்கள்.
ஸூபி மன்ஸில் புதிய கட்டிடம் கட்டும் முன் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் அசர் தொழுகையிலிருந்து மஹ்ரிபு தொழுகை வரைக்கும் அங்கு வருவோர்க்கு சந்திப்பும் உபதேசமும் ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களால் கிடைத்துக் கொண்டிருக்கும். அதில் சைபுத்தீன் ஹழ்ரத் அவர்களும் மஹ்லறா பணி முடிந்தவுடன் வந்து கலந்து கொள்வார்கள்.
அவர்கள் இலங்கையிலிருந்து வருகை தந்தபோதெல்லாம் அன்னாருடன் நெருங்கிப் பழகி அன்னாரோடேயே இருந்து அதபு, தரீகாவின் ஒழுக்கங்கள், மார்க்க நுணுக்கங்கள், ஞானப் பயிற்சிகள் பெற்றார்கள்.
1975 ஆம் ஆண்டிற்கு முன் பனை ஓலையால் வேயப்பட்ட ஸூபி மன்ஸிலில் பிரதி வெள்ளியிரவு ராத்திபு மஜ்லிஸ் நடைபெறும். அங்கே வைத்துதான் ‘அத்துஹ்பத்துல் முர்ஸலா’ கிதாபை முழமையாக ஷெய்கனாவிடமிருந்து கற்றார்கள். மேலும் ஞானசம்பந்தமான விசேச விளக்கவுரைகளையும் விளங்கினார்கள்.
ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் ஊர் வரும்போது அடிக்கடி மஹ்லறாவிற்கு விசயம் செய்து அங்குள்ள பேராசிரியர்களுடன் அளவளாவி பேசுவார்கள். பலமுறை இவர்கள் மஹ்லறாவில் பயான் செய்திருக்கிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்தவர்களில் ஹழ்ரத் அவர்களும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்.
செய்குனா இல்லாத காலகட்டங்களில் அனைத்து ராத்திபு மஜ்லிஸுகளையும் சைபுத்தீன் ஹழ்ரத் அவர்களே நடத்தி வந்திருக்கிறார்கள். தாங்கள் ஊரிலிருக்கும் போது (இயலாத காலங்களைத் தவிர்த்து) ஸூபி மன்ஜிலில் பிரதி வெள்ளியிரவு நடைபெறும் எந்தவொரு ராத்திபு மஜ்லிஸையும் நடத்தாமலிருந்ததில்லை. அந்த இரவு எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புக் கொள்வதில்லை. பயான் பண்ணகூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அந்தளவு ஷெய்குனாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இறுதிவரை நடந்தார்கள்.
ஷெய்குவின் கட்டளைக்கு அடிபணிதல்:
1977 ஆம் ஆண்டில் மஹ்லறாவில் வெள்ளி, திங்கள் ராத்திபு செய்யும் வேலைக்கு ஆள் தேவைப்பட்டபோது, முஹிப்பீன்களும், தரீகத் சகோதரர்களும் அந்தப் பணியை ஏற்றுக் கொள்ள ஷெய்குனாவை வேண்டியபோது, அன்னார் தமது செய்கான ஸூபி ஹழ்ரத் அவர்களுக்கு கடிதம் எழுதிக் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், நீங்கள் மன்ஜில் ராத்திபை நேமமாக நடத்தி வரும்போது மற்ற ராத்திபுகள் செய்ய வேண்டாம். நம் ராத்திபுகளின் அதபு – ஒழுக்கம் தனியானது. வேறு ராத்திபுகளின் அமைப்பு வேறானதாகும். ஆனதால் அந்த வேலையை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விட்டதால் தங்கள் கஷ்ட நிலையிலும் அவர்கள் அந்தப் பணியை ஒப்புக் கொள்ள வில்லை.
மிகவும் குறைந்த ஊதியத்தில் மஹ்லறாவில் மார்க்கப் பணி ஆற்றி வந்ததால் வெளிநாடு சென்று பொருள்தேடி நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டு அதற்கான பயண ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்கள். இதை அறிந்த ஷெய்குனா அவர்கள் நீங்கள் சென்றுவிட்டால் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை கற்றுக் கொடுப்பதற்கும், வழிகெட்டவர்கள் உள்ளே வரவிடாமல் தடுப்பதற்கும் ஆட்கள் இல்லாமல் போய்விடும். சொந்த ஊரில் மனைவி, மக்களுடன் சிறிய வருமானத்தில் இருப்பதல்லவா சந்தோசம். எனவே இங்கிருந்து நீங்களாகவே நீங்கிப் போக வேண்டாம் என்று கூறி வெளிநாட்டுப் பயணத்தை தடுத்து விட்டார்கள்.
இடையில் சிற்சில பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் நீங்களாகவே நீங்கிப் போக வேண்டாம் என்ற ஷெய்குவின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து மஹ்லறாவிலேயே பணியாற்றி வந்தார்கள்.
கிலாபத் பெறுதல்:
ஹிஜ்ரி 1398 ரபீயுல் ஆகிர் பிறை 7 (13-03-1978) வெள்ளிக் கிழமை இரவு ஸூபி மன்ஸிலில் வைத்து திக்று ராத்திபு முடிந்தபின் ‘கிலாபத் – குருபீடம்’ என்னும் அனுமதி ஸூபி ஹழ்ரத் அவர்களின் திருக்கரத்தால் எழுதப்பட்டு கையொப்பமிட்ட புத்தகம் வழங்கி, அவர்கள் அணிந்திருந்த ஜுப்பாவில் ஏறாவூர் கனம் மர்ஹும் வெள்ளைத் தம்பி டைலர் அவர்களால் தைக்கப்பட்ட தொப்பியை அணிவித்தார்கள்.
அவர்களுக்கு அவர்களது ஷெய்குநாயகம் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் 1346 ரஜப்பிறை 5 (29-12-1927) ஆம் ஆண்டு பைஅத்தும் கிலாபத்தும் வழங்கும்போது அவர்களது திருக்கரத்தால் எழுதிக் கொடுத்த பிரதியை அப்படியே நகல் எடுத்து எழுதியிருந்தார்கள். ஷெய்குநாயகம் அவர்கள் கைப்பட எழுதி கையொப்பமிட்ட பிரதி புத்தகத்தை சைபுத்தீன் ஹழ்ரத் அவர்களுக்கே கொடுத்தார்கள்.
ஸூபி மன்ஸில் கட்டிடம் கட்டும் பணி:
காயல்பட்டினம் ஸூபி மன்ஜில் கட்டிட துவக்கம்:1974 ஹிஜ்ரி 1394 ல் ஸூபி மன்ஜிலில் கட்டிட வேலைத் துவங்கும்போது ஊர் வழக்கப்படடி அஸ்திவாரம் போடும்போது அதில் வைக்கப்படும் கல்லை ஹழ்ரத் அவர்களை ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் வைக்கச் சொன்னார்கள். அதன்படி அவர்கள் வைத்தார்கள்.
இந்த மன்ஜிலை கட்டிடும் பொறுப்பை ஷெய்குனா அவர்கள் மர்ஹும் காதிர் ஹாஜி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அன்னாரால் அழகிய முறையில் கட்டிடம் கட்டப்பட்டு 21-12-1975 ஞாயிற்றுக் கிழமை மன்ஜில் திறப்புவிழாக் கண்டது. அல்ஹம்துலில்லாஹ்.
நூல் வெளியிடும் பணி
ஹிஸ்புல்லாஹ் சபை ஸூபி மன்ஜில் நூலை வெளியிடும் பொறுப்பை ஹழ்ரத் அவர்களிடம் ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் கொடுத்தார்கள். முதன் முதலில் அத்துஹ்பத்துல் முர்ஸலா நூலை 17-05-1976 ல் முதல் பதிப்பாக வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து பல்வேறு நூற்களை மன்ஜில் சார்பாக வெளியிட்டார்கள்.
திருமணம்:
ஹிஜ்ரி 1391 ரஜப் பிறை 25, 1971ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ல் காயல்பட்டினம் ஆசாத் தெருவைச் சார்ந்த மர்ஹும் அப்துலு; ஹமீது அவர்களின் மகளாரான முஹ்யித்தீன் பாத்திமா என்ற மணாளியை நிகாஹ் செய்யப்பட்டது. மஹ்லறத்துல் காதிரிய்யாவில் வைத்து இத்திருமணம் நடைபெற்றது. சங்கைமிகு கிப்லா ஹழ்ரத் அவர்கள் இலங்கையில் இருந்து கொண்டிருந்த ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் துஆ பரக்கத்தோடு நடத்தி வைத்தார்கள்.
இவர்களுக்கு,
1. மௌலானா மௌலவி அல்ஹாஜ் அபூபக்கர் ஹம்மாது ஆலிம் மஹ்லரி அவர்கள்
2. மக்தூம் சபூரிய்யத் பீவி
3. மர்யம் ருகையா
4. ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி
5. ஆயிஷா இர்ரீபா
ஆகிய குழந்தைகள் இருக்கிறார்கள்.
புனித ஹஜ், உம்ரா, ஜியாரத்:
ஹிஜ்ரி 1418ஃ1998, 2000, 2001, 2002, 2004 2005, (இலங்கை), 2007, 2009 ஆகிய வருடங்களில் புனித ஹஜ், உம்ரா, ஜியாரத் செய்திருக்கிறார்கள்.இதில் தமது மனைவியுடன் 2002 ஆம் ஆண்டிலும்,
2004, 2014, 2012, 2013, 2014 (இலங்கையிலிருந்து) புனித உம்ரா, ஜியாரத் செய்திருக்கிறார்கள். தமது தாயார், மனைவியுடன் 2004 ஆம் ஆண்டிலும் உம்ரா, ஜியாரத் செய்திருக்கிறார்கள்.
ஆக மொத்தம் 8 ஹஜ்,உம்ரா, ஜியாரத்தும் 5 உம்ரா ஜியாரத்தும் செய்தார்கள்.
1998 ஆம் வருடம் ஹஜ் செய்துவிட்டு மதீனா முனவ்வராவின் ஜியாரத்திற்காக சென்றார்கள். மஸ்ஜித் நபவியில் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுதுவிட்டு அளவு கடந்த நேசத்தோடு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் புனித இடத்தை தரிசிக்க அவர்கள் முன் நின்றபோது நாயகத்தின் கப்ருஷரீபை சுற்றிப் போடப்பட்டிருந்த திரை அகன்று கப்ருஷரீப் காட்சி தந்தது. இதை அன்னாருடன் சென்ற இப்றாஹீம் ரப்பானி ஹழ்ரத் அவர்களும், குளம் ஜமால் அவர்களும் கண்ணாரக் கண்டார்கள்.
2000 ஆம் வருடம் இலங்கை தரீகத் சகோதர சகோதரிகளுடன் தங்கள் வாப்பா அவர்கள் ஹஜ் செய்யவிருந்தபோது அன்னாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அன்னாரை பயணம் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டதால் அந்தப் பயணத்திற்கு ஹழ்ரத் அவர்களை தங்கள்வாப்பா அவர்கள் தேர்ந்தெடுத்து ஹஜ் பயணம் செய்ய அனுப்பி வைத்தார்கள்.
எழுதிய நூற்கள்:
1. அத்தஸவ்வுப் – ஸூபியிஸம்
2.அஷ்ஸெய்கு வல் பைஅத் – குருவும், தீட்சையும்
3. ஹஜ், உம்ரா, ஜியாரத்தின் விளக்கம்
4. காதிரிய்யா ராத்திபு கிதாப்
4. திப்யானுல் ஹக் – சத்திய விளக்கம் பாகம் 1
6. திப்யானுல் ஹக் – சத்திய விளக்கம் பாகம் 2
7. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மைப் போன்ற மனிதரா?
8. மீலாது ஷரீப் கொண்டாடலாமா?
9. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முந்தைய நபிமார்களும் அலைஹிமிஸ்ஸலாம்
10. யாரஸூலல்லாஹ் என அழைக்கலாமா?
11. தக்லீது – இமாம்களைப் பின்தொடர்தல்
12. முப்பெரும் மகான்களின் வரலாற்றுச் சுருக்கமும், என் சுய சரிதையும்.
பூக்கோயாத் தங்களுடன் நெருக்கம்:
ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் நேசத்தைப் பெற்றதைப் போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிவந்த அந்தரத் தீவு பூக்கோயா தங்கள் அவர்களின் நேசத்தையும் பெற்றார்கள். பூக்கோயாத் தங்கள் காயல்பட்டினம் வந்தால் ஹழ்ரத் அவர்கள் வீட்டில்தான் தங்குவார்கள். அவர்கள் தங்குவதற்கென்றே தங்கள் வீட்டில் மேல்மாடியினை சகல வசதியுடன் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது பயணத்திற்கோ செல்வதாயிருந்தாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள்.
தங்கள்வாப்பா அறிமுகப்படுத்துதல்:
அவர்களின் நேசத்தின் வெளிப்பாட்டினால்தான் 2000 ஆம் ஆண்டு தாம் செல்லவிருந்த புனித ஹஜ் பயணத்திற்கு தாம் சுகவீனம் அடைந்ததால் ஹழ்ரத் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அச்சமயம் இலங்கை சென்றிருந்த ஹழ்ரத் அவர்களை பூக்கோயாத் தங்கள் வாப்பா அவர்கள் இலங்கையிலுள்ள எல்லா ஸூபி மன்ஜில்களுக்கும், மேலும் அடிக்கடி போய்வராத ஊர்களுக்கும் அழைத்துச் சென்று பயான் செய்ய வைத்து, திக்ரு நடத்திடவும் செய்ய சொல்லி தங்களுக்குப் பின் இவர்கள்தான் என்று தங்கள் செய்கு ஸூபி ஹழ்ரத் அவர்கள் அன்னாரை அறிமுகப்படுத்தியதுபோன்று தமக்குப் பிறகு இவர்கள்தான் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
ஷெய்குனாவின் கந்தூரியில் சிறப்பு அதிதி:
1983 ஜூலை மாதம் ஷெய்குனா அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி கொழும்பு குப்பியாவத்தை ஜும்ஆ பள்ளியில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு அதிதியாக ஹழ்ரத் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
2000 ஆம் ஆண்டுவரை சங்கைமிகு செய்குநாயகம் அவர்களின் கந்தூரி வைபவத்தை அவர்களின் வபாத்து தினமான ரமலான் பிறை 24 அன்று குப்பியாவத்தையில் பூக்கோயா தங்கள் வாப்பா அவர்களே நடத்தி வந்தார்கள். அன்னாரின் மறைவுக்குப் பின்னர் ஹழ்ரத் அவர்களே நடத்தி வந்தார்கள். அதைத் தொடர்ந்து கிழக்கிலங்கையில் ஏனைய மன்ஜில்களில் நடைபெற்ற கந்தூரி வைபவங்களையும், அட்டாளச்சேனை வெள்ளிமீரான் ஸூபி நாயகத்தின் கந்தூரி விழாவையும் அன்னவர்களே நடத்தி வந்தார்கள்.
அதேபோல் இந்தியாவில் கேரளா பீமாப் பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி, மேலப்பாளையம், வியாசர்பாடி, தஞ்சாவூர் ஸூபி மன்ஜில்களில் நடைபெறும் கந்தூரிகளையும் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார்கள்.
கொழும்பில் ஸூபி மன்ஸில்:
இலங்கை கொழும்பில் ஸூபி மன்ஜில் அமைக்க முயன்று செய்குனா காலத்தில் முயற்சி கைகூடாமல் போய்விட்டது. 16-03-2006ல் கொழும்பு தெமட்டகொட ரோட்டில் ஸூபி மன்ஜில் திறப்புவிழா கண்டது.
மன்ஸில்களின் நோக்கங்கள், ராத்திபு, மவ்லிதுகள் நடைபெற்று வருகிறது. ஷெய்குமார்களின் கந்தூரிதினம் அஸருக்குப் பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இலங்கை மற்ற ஊர்களிலுள்ள இதர ஹிஸ்புல்லாஹ் சபை ஸூபி மன்ஸில்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
ஏனைய ஸூபி மன்ஸில்கள் அமைத்தல்:
இதேபோல் மாத்தளையில் ஹிஜ்ரி 1427 ஜமாதுல் ஊலா பிறை 26 (22-06-2006) அன்று ஹிஸ்புல்லாஹ் சபை ஸூபி மன்ஜில் திறக்கப்பட்டது.
ஏறாவூர் மீராகேனி பகுதியிலும் ஏற்கனவே ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியில் இயங்கி வருகிற மன்ஸிலுக்கு கிளையாக ஸூபி மன்ஸிலும், குர்ஆன் மத்ரஸா – அல்மத்ரஸத்துர் ரஹ்மானிய்யாவும் ஹிஜ்ரி 1434 துல்கஃதா பிறை 11 (18-09-2013) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் கீழவாசல் சிராஜுத்தீன் நகரில் ஹிஜ்ரி 1429 ரபீயுல் அவ்வல் பிறை 29 (22-02-2012) ல் ஹிஸ்புல்லாஹ் சபை ஸூபி மன்ஸில் திறக்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடியில் ஹிஜ்ரி 1429 ஸபர் பிறை 15 (22-02-2008) ல் ஹிஸ்புல்லாஹ் சபை ஸூபி மன்ஸிலுக்காக சொந்தமாக கட்டிடம் வாங்கப்பட்டது.
சுன்னத் ஜமாத் உலமா சபை தலைவர்
1984ம் ஆண்டு ஜூலை 7,8 தினங்களில் திருச்சி நவாப் மஸ்ஜிதில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டில் ‘மஜ்லிஸு உலமாஇ அஹ்லிஸ் ஸுன்னத்தி வல்ஜமாஅ தமிழ்நாடு’ என்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபைக்கு ஹழ்ரத் அவர்களை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் வபாத்துவரை நீடித்தார்கள்.
திருச்சியில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டில் அஷ்ஷெய்குல் காமில் ஆஷிகே ரஸூல் ஸெய்யிதுஸ் ஸாதாத் அல்லாமா மழ்ஹர் ரப்பானி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் ஹழ்ரத் அவர்களைப் பார்த்து சைபுத்தீன் என்று விளித்து, பேருக்கு ஏற்றாற்போல் தீனின் வாளாக இருக்கிறீர்கள். இந்த சபைக்குத் தலைவர் தகுதியானவர்தான் என்று சிறப்பித்துக் கூறினார்கள்.
வழிகெட்ட கொள்கைகளை இனம் காட்டுதல்
வழிகெட்ட இயக்கங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை நேரடியாக எதிர்க்கவும், மக்களிடம் அடையாளம் காட்டிடவும் ஷெய்குனா அவர்கள் தயங்கியதில்லை.
வழிகெட்ட இயக்கமான நூரிஷா தரீகத் மக்கள் மத்தியில் காலூன்ற முயற்சித்தபோது அதன் வழிகேடுகளைப் பற்றியும், செயல்பாடுகளைப் பற்றியும் மக்கள் மத்தியில் தைரியமாக நேரடியாக சொன்னவர்கள் ஸைபுத்தீன் ஹழ்ரத் அவர்கள். நூரிஷாஹ் தரீகாவின் சில்சிலாவில் வழிகேடன் சையித் அஹ்மத் ரேபரேலி என்பவர் ஷெய்காக வருகிறார் என்று முதன்முதலில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சொன்னவர்கள் ஸைபுத்தீன் ஹழ்ரத் அவர்கள்.
அதேபோல் வழிகேட்டு இயக்கமான தஃவத்தே இஸ்லாமி என்ற இயகத்தைப் பற்றி அது வழிகேடானது என்று தமிழ்பேசும் முஸ்லிம்கள் மத்தியில் நேரடியாக சொன்னவர்கள் ஷெய்குனா அவர்கள்.
அதேபோல் கேரளாவில் தொழிக்கோட்டில் அப்துர் ரஷீத் என்பவர்கள் செய்து கொண்டிருக்கும் மார்க்க முரணனான செயல்கள் பற்றியும் தெளிவாக சொன்னார்கள். எந்த இயக்கமானாலும், எந்த ரூபத்தில் வந்தாலும் அது சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமாக இருந்தால் முதன்முதலில் எதிர்ப்பவர்களாக ஷெய்குனா ஸைபுத்தீன் ஹழ்ரத் அவர்கள் இருந்தார்கள்.
பணியில் நேர்மை
தாம் பணியாற்றிய மஹ்லறாவில் சிறிய சிறிய கிதாபுகளை எடுக்க மாட்டார்கள். சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்வார்கள். பெரிய கிதாபுகள் தேவைப்படின் நூலகரின் அனுமதி பெற்று எடுத்து தேவை முடிந்ததும் கொடுத்து விடுவார்கள்.
தம்மை நாடி வருபவர்களுக்கு மார்க்க சட்டத்தை எடுத்துக் கூறுவதிலும், ஞானவிசயங்களை விளக்கிக் கொடுப்பதிலும் கொஞ்சம் கூட சளைப்பதில்லை. தம்மிடம் நிவாரணம் தேடி ஓதிப் பார்க்க வருகிறவர்களுக்கு ஓதிப் பார்த்து அனுப்புவார்கள். தேவைப்படுபவர்களுக்கு தாவீது எழுதி கொடுப்பார்கள். அன்னாரிடம் துஆப் பேறினைப் பெற்றவர்கள் எண்ணிலடங்கா.
மறைவு:
தாங்கள் மறைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே சுகவீனமுற்று, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இருந்தும் அனைத்து ஸூபி மன்ஸில்களில் நடைபெறும் நிகழ்வுகளை வீட்டிலிருந்தவாறே கண்காணித்து வந்தனர்.
இதன்காரணமாகவே ஏறாவூர் மஆனிமுல் முஸ்தபா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவையும் தள்ளிப் போட்டனர். ஆனாலும் அன்னாரின் உடல்நிலை அந்நிகழ்வில் கலந்து கொள்ள விடவில்லை.அதற்காக தமது மூத்த மகனார் மௌலவி ஹம்மாது ஆலிம் அவர்களை சிறப்பு அதிதியாக அனுப்பி வைத்தனர்.
பட்டமளிப்பு விழா பிப்ரவரி 25,2018 அன்று வைக்கப்பட்டிருந்தது. ஹழ்ரத் அவர்கள் மதுரையில் பிப்ரவரி 24 அன்றே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தனர்.
பட்டமளிப்புவிழா முடிந்ததும் மௌலவி ஹம்மாது ஆலிம் அவர்கள் பிப்ரவரி 25 அன்று மதுரை வந்து ஹழ்ரத் அவர்களுடன் கூடவே இருந்தார்கள்.
சுமார் 9 நாட்கள் மதுரையில் தங்கியிருந்தபோதும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மார்க்கத்திற்காக, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்காக இறுதிவரை தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர்களும், தமது ஷெய்கான ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வழியில் அடிபிறழாமல் நடந்தவர்களும், இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஏனைய மாநிலங்களிலும், இலங்கையிலும் ஆயிரக்கணக்கான முரீதீன்களைப் பெற்றிருந்தவர்களுமான ஷெய்குனா முஹம்மதலி சைபுத்தீன் ஹழ்ரத் ஸூபி காதிரி அவர்கள் இறைவனின் களா கட்டளைப்படி மார்ச் 6, 2018 ஜமாத்துல் ஆகிர் பிறை 17 செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் கலிமாவை மொழிந்தவர்களாக, அல்லாஹ் என்ற உச்சரிப்புடன் தம் இரு கண்களையும் மூடிக் கொண்டு இவ்வுலகத்தை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ்வின் நேசர்களுக்கு மரணம் என்பது ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்கு குடிபுகுவது போன்றுதான்.
அன்னாரின் பொன்னுடல் மறுநாள் மார்ச் 7 அன்று காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி வடபுற மையவாடியில் அடக்கப்பட்டது. அன்னாருக்காக மக்பரா கட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது. அன்னாரின் ஜியாரத் நடைபெற்று வருகிறது.
அன்னார் தங்களின் கலீபாக்களாக,
- மௌலானா மௌலவி நாகூர் மீரான் ஆலிம் பாகவி காதிரி ஸூபி (தென்னிந்தியா செய்துங்கநல்லூர்)
- மௌலானா மௌலவி சைபுத்தீன் ஸகாபி ஆலிம் தங்கள் ஹஸனி (இந்தியா, அந்தரத்தீவு)
- மௌலானா மௌலவி அபூபக்கர் ஹம்மாது ஆலிம் மஹ்லரி (காயல்பட்டினம், இந்தியா)
ஆகியோர்களை நியமித்தார்கள்.
இறுதியாக தமது மகனார் ஹம்மாது ஆலிம் அவர்களை கலீபாவாக நியமித்தபிறகு சுமார் 4 வருடங்களில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள்.
இது ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களுக்கு அன்னாரின் ஷெய்கு ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் அவர்கள் கிலாபத் கொடுத்து 4 வருடங்கள் கழித்தும், அதேபோல் ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் சைபுத்தீன் ஹழ்ரத் அவர்களுக்கு கிலாபத் கொடுத்து 4 வருடங்கள் கழித்தும் மறைந்திருக்கிறார்கள்.
கொள்கை உறுதிக்காக பட்ட இன்னல்கள்:
ஜும்ஆ பயான் பிரச்சினை:
நவீனவாதிகள் புதிதாக வழக்கத்திற்கு மாற்றமாக ஜும்ஆ தொழுகைக்கு முன் உள்பள்ளியில் வைத்து தமிழில் பயான் செய்வதை காயல்பட்டினம் குத்பா பெரிய, சிறிய பள்ளியில் செயல்படுத்தினார்கள்.
இது முன்னோர்களின் வழக்கத்திற்கும், குத்பாவிற்கு முன் நாம் செய்யும் வணக்கவழிபாட்டிற்கும், அதிலும் அடுத்தடுத்து வருபவர்களின் தஹிய்யத்துல் மஸ்ஜிது – பள்ளிவாசல் காணிக்கைத் தொழுகைக்கு இடையூறாக இருப்பதாலும், இந்த பயான் ஹராமாகும் என்று சொல்லி ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் ஊரிலிருக்கும்போது ஜும்ஆ போன சமயம் அதை தடுத்து நிறுத்தினார்கள்.
பள்ளிவாசல் நிர்வாகிகள், சந்தர்ப்பவாத உலமாக்கள் மிகவும் ஆத்திரமடைந்தார்கள். இவர் சொல்லி நாம் கேட்பதா என்று மானப் பிரச்சினையாக்கினார்கள்.
இரு தரப்பினருக்கும் 1981 ஆம் வருடம் குத்பா பெரியபள்ளியி முன்ஹாலில் மக்கள் முன்னிலையில் விவாதம் நடைபெற்றது.
இறுதியாக ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் நீங்கள் கொண்டுவந்த ஆதாரங்கள், பத்வாக்கள் எல்லாம் ஜாயிஸ் – ஆகும் என்றுதான் இருக்கிறது. சுன்னத் என்றில்லை. நாங்கள் கொண்டு வந்த ஆதாரங்கள், பத்வாக்கள் ஹராம் என்றிருக்கின்றன.
ஆகும், ஆகாது என்ற தலீல்கள் – ஆதாரங்கள் ஒன்றுக் கொன்று முரண்பட்டால் நான்கு மத்ஹபுகளின் உஸூல் பிக்ஹு – மார்க்க அசல் சட்டப்பிரகாரம் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றுதானே இருக்கிறது. ஆகவே இந்தப் பயானை விடுங்கள். வேண்டுமானால் உள்பள்ளிக்க வெளியே குத்பா தொழுகை முடிந்தபின் செய்யுங்கள். முன்னோர்கள் இப்படித்தான் செய்து வந்தார்கள் என்றார்கள்.
அதற்கவர்கள் நாங்கள்தான் மெஜாரிட்டி. அதனால் அந்தப் பயானை விட முடியாது என்று கூச்சலிட்டார்கள்.
ஷெய்குநாயகம் மார்க்கத்தில் மெஜாரிட்டி, மைனாரிட்டி கிடையாது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மேலும்மேலும் கூச்சலிட்டு விவாதக் கூட்டத்தைக் கலைத்து அடிதடிக்கு இறங்கி விட்டார்கள்.
ஷெய்குனா அவர்களை ஹழ்ரத் அவர்களும் மற்ற கலீபாக்கள்,முரீதீன்கள் சூழ்ந்து கொண்டு அரணாக நின்றார்கள்;.
இந்தப் பிரச்சினையில் ஷெய்குனாவை எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள் என்று காலம் நமக்கு உணர்த்திற்று.
எங்கள் நிர்வாகத்திற்கு கீழ் நடைபெறும் மஹ்லறாவில் பேராசிரியராகவும், குத்பா சிறு பள்ளியில் பேஷ் இமாமாகவும் பணிபுரிவதால் நீங்களும் ஜும்ஆ குத்பா தொழுகைக்கு முன் பயான் செய்ய வேண்டும் இல்லையானால் உங்களை பணி நீக்கம் செய்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்தபோது,
எங்கள் ஷெய்குனா அவர்களும், மற்றும் எங்கள் உஸ்தாதுமார்களும், கேரள உலமாக்களும் ஹராம் என்று சொல்கிறார்கள். நாங்கள் படித்துக் கொடுக்கும் கிதாபுகளிலும் ஹராம் என்று தெளிவாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது அந்த ஹராமான பயானை எங்களால் செய்ய முடியாது. வேண்டுமானால் எங்களை நீக்கி விடுங்கள் என்று உறுதியாக ஹழ்ரத் அவர்கள் சொல்லி விட்டார்கள். அவர்களின் உறுதிமொழியைக் கண்டு பிரச்சினையை பின்தள்ளி விட்டார்கள். ஆனாலும் மனதை விட்டு நீக்கவில்லை போலும்.
இப் பிரச்சினைக்குப் பின் ஹழ்ரத் அவர்கள் மீது மஹ்லறா நிர்வாகத்தினர் திருப்தியில்லாத ஒரு குரோத மனப்பான்மையுடன் செயல்படத் துவங்கினார்கள்.
மஹ்லறாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அம்பலமரைக்கார் தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்து வந்தார்கள். அந்த வீடு மஹ்லறா நிர்வாகிகளில் ஒருவருக்கு சொந்தமானது.
குத்பா பயான் பிரச்சினையில் ஷெய்குநாயகம் அவர்களுக்கு ஹழ்ரத் அவர்கள் சப்போர்ட்டாக இருந்ததினால், அன்னாருக்கு கடும் தொந்திரவு கொடுக்கப்பட்டது.
வீட்டை காலி பண்ணி புதுவீடு புகுதல்:
இக்காலகட்டத்தில் ஹழ்ரத் அவர்கள் பஞ்சாயத்து ரோட்டில் நிலம் வாங்கி சிறுகச் சிறுக வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகளும் முடிவடையவில்லை. நிலைகளுக்கு கதவுகளும் போடப்படவில்லை. குடியிருப்பதற்கு அப்போது தகுதியானதாக, பாதுகாப்பானதாக அது இருக்கவில்லை.
இந்நிலையில் மஹ்லறாவின் அந்த நிர்வாகி அம்பலமரைக்கார் தெருவில் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்ய நெருக்கடி கொடுத்தார். ஹழ்ரத் அவர்கள் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவர்களாக, எவ்வித மறுப்பும் சொல்லாமல் உடனே அவ்வீட்டை காலி செய்து புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கதவுகள் இல்லாத வீட்டில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார்கள். வாசற்கதவுகளை தகரத்தால் தாங்களே அடித்துக் கொண்டார்கள். எதைக் கண்டும் பயப்படவில்லை. அல்லாஹ்வின் மீதே தவக்கல் வைத்தவர்களாக சென்றார்கள். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைக் கட்டி முடித்தார்கள். இவ்விசயத்தில் அல்லாஹ் அவ்விடத்தில் அன்னாரை மேலும் கண்ணியப்படுத்தினான்.
ஹழ்ரத் அவர்கள் மிகவும் ரோஷக்காரர்களாக இருந்தார்கள். இதுபற்றி அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ் ரோஷக்காரன் என்று சொல்வார்கள்.
ஹழ்ரத் மீது கண்டனத் தீர்மானமும் அதன் விளைவும்:
1996 ஆம் வருடம் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற தொடர் சொற்பொழிவின்போது நீங்கள் தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி பேசக் கூடாது. பொதுவானதை பேசுங்கள் என்று கட்டளையிட்டனர்.
ஹழ்ரத் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி பேசவேண்டும் என்று இருக்கவில்லை. ஆனால் இவர்கள் சொன்னதன்பின் தப்லீக்கைப் பற்றிப் பேசவேண்டும் என்று உறுதி கொண்டு தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி சுமார் ஒன்றேகால் மணிநேரம் பேசி முடித்தார்கள்.
இது நிர்வாக சபையினருக்கு கடும்கோபத்தை உண்டாக்கி விட்டது. இதற்காக கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் கனம் கதீபு ஜலீல் ஹாஜி போன்றவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனாலும் ஹக்கை எடுத்துச் சொன்னதற்கு கண்டனத் தீர்மானமா? அதுவும் சுன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாவிலா? அல்லாஹ் அதற்குரிய கூலியை சரியாக ஒருவருடத்தில் கொடுத்தான். ஊர்மக்கள் அனைவரும் பார்க்கத்தான் செய்தார்கள்.
மஹ்லறாவிலிருந்து நீக்கம்:
ஹழ்ரத் அவர்களை நீக்குவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
1998 ஆம் வருடம் ஷவ்வால் மாதம் முழுத்தேர்வு விடுமுறை வந்தது. அத்தோடு நிர்வாகத் தலைவர் மூலம் ஒரு தபாலும் வந்தது. அதில் உங்களை நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை., திருப்தியில்லை இத்துடன் உங்களை நீக்கி விட்டோம் என்று மஹ்லறா முதல்வரைத் தவிர அங்கு பணிபுரிந்த ஏழு உஸ்தாதுமார்களுக்கு கடிதம் சென்றது.
அல்ஹம்துலில்லாஹ் என்று மன சந்தோஷத்துடன் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஹழ்ரத்திற்கு வேண்டிய ஜமாஅத்தார்கள் வழக்கிற்கு செல்லலாம் என்று ஹழ்ரத் அவர்களிடம் சொன்னபோது, ‘வழக்கு எல்லாம் போட வேண்டாம். அல்லாஹ் பார்த்துக் கொள்வான். ஒரு வழியை அடைத்தால் பல வழியை அல்லாஹ் திறப்பான்’ என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் நிர்வாகத்தினர் ஹழ்ரத் மற்றும் உஸ்தாதுகள் பேரில் கோர்ட்டில் கேவியட் எடுத்து அனுப்பி வைத்தார்கள். சுமார் 32 ஆண்டுகாலம் பணியாற்றிய ஹழ்ரத் அவர்களை ஒற்றை வரி தபால் மூலம் நீக்கினார்கள். அல்லாஹ் அன்னாருக்கு ரிஸ்க்கினை மென்மேலும் வாரி வழங்கினான்.
ஸூபி நாயகம் அவர்கள் ஹழ்ரத் அவர்களிடம் கல்லூரியை விட்டு நீங்களாக நீங்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள். அதனால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் மஹ்லறாவில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். ஷெய்குனாவின் முன்னறிவிப்புப் படி யே எல்லாம் நடந்தது. இது ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் அற்புதம்.
அதன்பின் ஹழ்ரத் அவர்களுக்கு பல்வேறு மத்ரஸாக்களிலிருந்து பணி செய்வதற்கான அழைப்புகள் வந்தது. 32 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றிய மத்ரஸாவிலிருந்தே எவ்வித அறிவிப்பும் தராமல் நீக்கி விட்டார்கள் என்ற மனவருத்தத்துடன் இருந்தார்கள். அதனால் எவ்வித பணியினையும் ஒப்புக் கொள்ளவில்லை.
அதன்பின் இலங்கை சென்று ஷெய்குனா அவர்கள் செய்த பணியையும், தங்கள் வாப்பா அவர்கள் செய்த பணியையும் தங்கள் வாப்பாவின் அறிமுகத்தின்பின் செய்தார்கள். தரீகத்தை வளர்த்தார்கள். ஆன்மீகத்தின் உச்சத்தை அடைந்தார்கள்.
கண்ட கனவுகளும், திருக்காட்சிகளும்:
பல்வேறு முறை நமது கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவிலும், விழிப்பிலும் கண்டுள்ளார்கள். இறைநேசச் செல்வர்களையும் இதுபோல் கண்டிருக்கிறார்கள்.
ஷைய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களிடம் கிலாபத் பெற்றுவிட்டாலும் அன்னார் இப்பூவுலகில் இருக்கும் வரை ஹழ்ரத் அவர்கள் யாருக்கும் பைஅத் கொடுக்கவில்லை. தம்மிடம் பைஅத் கேட்டு வருபவர்களிடம் தமது ஷெய்கு நாயகத்தையே சுட்டிக் காட்டி விடுவார்கள்.
இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூவுலகில் இருந்தபோது மற்ற கலீபாக்களுக்கு வேலையில்லை. தங்களிடம் வரும் நபர்களை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள். அதுபோல் ஷெய்குநாயகம் இருக்கிறவரை அவர்களிடமே தொடர்பு இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள்.
ஷெய்குநாயகம் அவர்கள் மறைந்ததன் பின்னர்தான் ஹழ்ரத் அவர்கள் பைஅத் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
ஒருமுறை குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் (தற்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுவரும் இடத்தில்) வெளியூரைச் சார்ந்த நபர் ஒருவர் ஹழ்ரத் அவர்களின் உற்ற தோழர் மீராசாகிபு காக்கா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களிடம் பைஅத் பெற விரும்பி ஊர் வந்திருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தபோது, காக்கா அவர்கள் ஷெய்குனா அவர்கள் வபாத் ஆன செய்தியை சொல்லிக் கொண்டிருக்கும்போது மிகவும் கைசேதப்பட்டு அன்னாரிடம் பைஅத் பெறமுடியாமல் போய்விட்டதே என்று கூறிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் திடீரென ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் வாடை இப்போது அடிக்கிறது. ஸூபி ஹழ்ரத் அவர்கள் வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே அந்த பள்ளி வளாகத்தை விட்டு வெளியே ஓடிச் சென்று அங்குமிங்கும் போகாமல் நெய்னார் தெருவை நோக்கி ஓடிச் செல்கிறார். அவர் பின்னால் மீராசாகிபு காக்கா அவர்களும் செல்கிறார்கள். அங்கு வாகனத்தில் ஹழ்ரத் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். உடனே அந்த வாகனத்தை நிறுத்தி ஹழ்ரத் அவர்களை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்து நான் தேடிய ஸூபி ஹழ்ரத்தின் வாடை இவர்களிடம் அடிக்கிறது என்று சொன்னதும், மீராசாகிப் காக்கா அவர்கள் அவரிடம் இவர்கள் ஷெய்குனாவின் கலீபா என்று சொன்னதும் இவர்களிடமே பைஅத் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி ஹழ்ரத் அவர்களிடமே பைஅத் வாங்கிச் சென்றார்கள்.
ஹழ்ரத் அவர்கள் தாம் கொண்ட பணியில் நேரம் தவறாமையை மிகவும் கவனமுடன் கடைப்பிடித்தார்கள். அவர்களை எந்தவித விழாக்களுக்கும் அழைத்தால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தந்துவிடுவார்கள். விழாக்கள் அவர்களினால் சுணங்கியது கிடையாது.
அதேபோல் வரவு-செலவு விசயங்களிலும் நேர்மையை கடைபிடித்தார்கள். யாருக்கும் பாக்கி வைத்ததில்லை.
தாங்கள் அச்சடிக்கும் புத்தகங்கள், மற்றும் ஸூபி மன்ஜில் புத்தகங்கள் அனைத்தையும் தங்கள் சொந்த பணத்தில் வாங்கிக் கொண்டு இலங்கைக்கு கொண்டு சென்று தங்கள் கொள்கைகளை பரப்பினார்கள். புத்தகங்களை வாங்கியவர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள்.
ஹழ்ரத் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்திரவின் பேரிலேயே தங்கள் கலீபாக்களை நியமித்தார்கள்.
ஹழ்ரத் அவர்களின் முரீது ஒருவர் ஒரு கனவு காண்கிறார். அதில் : ‘ நாகூர் மீரான் ஹழ்ரத் (ஹழ்ரத் அவர்களின் கலீபா) ஒருவரின் கனவில் வந்து ‘நான் எதற்கும் ஆசைப்பட்டதில்லை. என்னிடம் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வந்து உனக்கு சிறப்பானதைத் தருவோம’; என்று சொன்னார்கள். என்னருகில் சைபுத்தீன் ஹழ்ரத் அவர்கள் இருக்கிறார்கள். இதைக் கேட்டு ஹழ்ரத் அவர்கள் லேசாகப் புன்முறவல் பூத்தார்கள்.
அந்த நபருக்கு நாகூர் மீரான் மௌலவிக்கு கிலாபத் கொடுத்து தெரியாது. ஆனால் கொஞ்சநாள் கழித்து ஹழ்ரத் அவர்கள் ஊர்வந்த போது அன்னாருக்கு கிலாபத் கொடுத்தது தெரியவந்தது. இப்போது அவருக்கு கனவின் பலன் புரிந்தது.
ஷெய்குநாயகம் அவர்கள் சொன்னபிரகாரம் அடிபிறழாமல் நடந்து முற்றிலுமாக ஷெய்குக்கு அடிபணிந்து நடந்தார்கள். கிஞ்சிற்றும் ஷெய்குக்கு மாற்றம் செய்யவில்லை. அதனால்தான் அவர்களை அல்லாஹ் மேன்மையாக உயர்த்திவிட்டான்.
விவாதங்கள்:
காயல்பட்டினத்தில் தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த மத்ரஸாவான ஜாவியத்துல் பாஸியத்துஷ் ஷாதுலிய்யா மத்ரஸாவின் ஆலிம்களோடு, சுன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாவான மஹ்லறத்துல் காதிரிய்யா மத்ரஸாவின் ஆலிம்கள் 11-8-1998 ல் விவாதம் ஒன்றை வைத்தனர்.
இந்த விவாதத்தில் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் ஹழ்ரத் அவர்களின் தலைமையில் விவாதத்தில் கலந்து கொண்டனர். நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொண்டு சிலர் ஹழ்ரத் அவர்களை தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த மௌலவி அப்துல் வதூத் என்பவரை அழைத்துக் கொண்டு விவாதத்திற்கு அழைப்பதற்கு ஹழ்ரத் அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அந்த மௌலவி ஹழ்ரத் அவர்களிடம் நடந்த கண்ணியக் குறைவான செயலையும் ஹழ்ரத் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். மக்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காகவே விவாதத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.
அந்த விவாதத்தில், ரஷீத் அஹ்மது கங்கோஹி முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை புகழ்ந்தும், வஹ்ஹாபியக் கொள்கையை ஆதரித்தும் பேசியது பற்றி கேள்வி கேட்ட ஹழ்ரத் அவர்களின் கேள்விக்கு சரியாக பதிலுரைக்க முடியாமல் தப்லீக் ஜமாஅத்தினர் மழுப்பினர்.
அல்லாஹ் பொய் சொல்ல சக்தியுடையவன் என்ற தலைப்பில் விவாதத்தை தப்லீக் ஜமாஅத் மௌலவி ஹாமித் பக்ரி, அப்துல்லாஹ் ஆலிம் ஆகிய ஆலிம்களுடன் (மீ.சு. அபுல்ஹஸன் ஆலிம் அவர்களின் ஒப்புதலுடன்) ஹழ்ரத் அவர்களும் ஊண்டி ஆலிம் அவர்களும் விவாதம் செய்தனர். ஆரம்ப விவாதத்திலேயே அவர்கள் பதிலுரைக்க முடியாமல் திணறினர். இன்றுவரை அவதற்கு அவர்கள் பதிலுரைக்க முடியவில்லை.
திருச்சியில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டில் காயல்பட்டினம், தூத்துக்குடி நகரிலிருந்து இரண்டு பேருந்துகள் சென்றன. அவைகள் மாநாடு முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது பொரவாச்சேரி என்ற ஊர் வந்தது. அங்கு நூரிஷாஹ் என்ற வழிகேட்டுத் தரீகத்தின் கலீபா ஜமாலிஷா என்பவர் பைஜுல் ஹஸனாத் என்ற கல்லூரியில் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கு வண்டி நிற்கிறது. அவர்களைப் பற்றி ஹழ்ரத் அவர்கள் விளக்கினார்கள். அங்கு இறங்க வேண்டாம் என்று சொன்னார்கள். அதில் ஒரு வண்டியில் உள்ளவர்கள் முற்றிலுமாக கேட்டு நடந்து கொண்டார்கள். அதில் இறங்காமல் வண்டி சென்று விட்டது. பின் வண்டியில் வந்தவர்கள் அவர் எப்படித்தான் இருக்கிறார் என்று இறங்கித்தான் பார்ப்போமே என்று இறங்கி போனார்கள். பின் அந்த வண்டியில் பிரச்சினை ஏற்பட்டு மிகவும் தாமதமாக மிகவும் கஷ்டப்பட்டு ஊர் வந்து சேர்ந்தது.
காயல்பட்டினத்தில் பெரிய பள்ளி மையவாடியில் ஜனாஸாக்கள் அடக்கப்படும் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட முயற்சி எடுக்கப்பட்ட போது ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் அதற்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்க சட்டவிதிகளைக் கூறி தடுத்தார்கள். ஆனால் அவர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்ததினால் அதைக் கேட்கவில்லை. தங்கள் இஷ்டம் போல் மார்க்கத்திற்கு முரணாக கட்டிடம் கட்டினர்.
இதன் காரணமாக ஹழ்ரத் அவர்களுக்கு அன்னார் பேரில் மிகவும் வருத்தமுண்டாயிற்று. அந்த செல்வந்தர்கள் நடத்தும் விழாக்களில் பயான் பேச அழைத்தால் அதில் பேச மறுத்துவிடுவார்கள். காரணம் கேட்டபோது மார்க்கமேதையான ஷெய்குனாவின் பேச்சையும், மார்க்க சட்டத்தையுமே மதிக்காமல் ஜனாஸா அடக்குமிடத்தில் கட்டிடம் கட்டி மார்க்கத்தோடு விளையாடுகிறார்கள். அவர்கள் நடத்தும் விழாக்களின் பயான் பண்ணி என்ன பிரயோஜனம்? என்று சொன்னார்கள்.
ஊரில் யாரும் ஓதிப் பார்க்க அழைத்தாலோ, விசேசங்களுக்கு அழைத்தாலோ நேரமிருப்பின் எவ்வித மறுப்புமின்றி குறித்த நேரத்திற்கு செல்வார்கள்.
தங்கள் வாழ்நாள் முழுவதும் ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் தமது வாழ்நாளில் எதிர்த்த அனைத்தையும் எதிர்த்தும், ஆதரித்த அனைத்தையும் ஆதரித்தும் வந்தார்கள். தம்முடைய ஷெய்குக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்ததாலேயே அல்லாஹ் அன்னவருக்கு அன்னாருடைய ஷெய்கின் பொருட்டினால் இத்தகைய மேன்மைமிகு பதவியை வழங்கியுள்ளான் போலும்.
அல்லாஹ் நம் அனைவர்க்கும் தூய வாழ்வு வாழ்ந்த இந்த இறைநேசர் ஷெய்குனா முஹம்மதலி சைபுத்தீன் ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் பொருட்டால் நமது ஈமானைப் பலப்படுத்தி, ஈருலக பாக்கியங்களைத் தந்தருள்வானாக! ஆமீன்.