வழிகேடர்கள் எழுதிய நூற்களிலுள்ள அவ்ராதுகள், ஆயத்துகள், திக்ருகள், துஆக்கள் போன்றவற்றை நாம் ஓதலாமா? .
By Zainul Abdeen
அஸ்ஸலாமு அலைக்கும்
கேள்வி :
வழிகேடர்கள் எழுதிய நூற்களிலுள்ள அவ்ராதுகள், ஆயத்துகள், திக்ருகள், துஆக்கள் போன்றவற்றை நாம் ஓதலாமா? .
பதில் :
பொதுவாக இஸ்முகள், அவ்ராதுகள் ஓதுபவர் பெரியவர்களிடம் ஷைகுமார்களிடம் ஹிஜாஸத் (உத்திரவு) பெற்று ஓதுவது சிறப்பானது. ஓதுவதற்குரிய முழுப் பயனும் கிடைக்கும். பலனுள்ளதாக – பலமுள்ளதாக இருக்கும். அதேசமயம் வழிகேடர்களிடமோ அவர்களை ஆதரிப்பவர்களிடமோ உத்திரவு பெற்று ஓதுவது என்பது பயனற்றதாகவும் எவ்வித பலனில்லாததாகவும் அமையும்.
தற்காலங்களில் இஸ்முகள் அவ்ராதுகள் அடங்கிய கிதாபுகள் அச்சிடப்பட்டு பல்வேறு பெயர்களில் நம் மத்தியில் உலா வருகின்றன. அதில் மன்ஜில் என்ற கிதாபும் ஒன்று. தொகுத்தவர் ஜக்கரிய்யா மௌலானா என்று உள்ளது. இவர் ஒரு வழிகேடர்.
எனவே இந்த கிதாபை ஓதுவது கூடாது. அதற்கு எவ்வித பலனும் இல்லை.
அது குர்ஆன் ஆயத்துதானே என்று சொன்னாலும் ஆயத்தை ஓதிய பயன்தான் கிடைக்குமே தவிர உங்கள் நோக்கம் நிறைவேறக்கூடிய பலன் கிடைக்காது. ஏனெனில் இது வழிகேடர் தொகுத்த நூல்.
நமது கண்ணியமிகு இமாம்களும் ஷைகுமார்களும் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களும் நம்மை வழிகேட்டை விட்டும், வழிகேடர்களை விட்டும், அவர்கள் எழுதிய நூல்கள், பேச்சுக்கள், பதிவுகள் போன்றவற்றை விட்டும் நம்மை விலகியிருக்கும்படி எச்சரித்திருக்கிறார்கள். இந்த எச்சரிக்கை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்திரவிற்குட்பட்டதாகும்.
ஆகவே அவ்ராதுகள், துஆக்கள், மற்றும் ஏனையவைகள் அது சுன்னத் வல் ஜமாத்தின் ஷைகுமார்கள், பெரியவர்கள், ஆலிம்களின் இஜாஸத் பெற்றே ஓத வேண்டும். வழிகேடர்களான தப்லீக் ஜமாஅத்தினர், நூரிஷா தரீகத்தினர் இன்னும் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபட்ட கொள்கை கொண்ட அனைத்து கூட்டத்தினர்களின் பதிவுகள், புத்தகங்கள், வீடியோ ஆடியோ பேச்சுக்கள் அவ்ராதுகள், திக்ருகள், துஆக்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன். ஸல்லல்லாஹு அலா முஹம்மத். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.