மகான் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரி* கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் *வாழ்க்கை சுருக்கமும் மார்க்கப் பணியும்

மகான் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரி* கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் *வாழ்க்கை சுருக்கமும் மார்க்கப் பணியும்

By Zainul Abdeen 0 Comment April 24, 2022

மகான் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வாழ்க்கை சுருக்கமும் மார்க்கப் பணியும் .- ரமலான் பிறை 24 உரூஸ் முபாரக்.

தென் இந்தியா காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் புகழ்மிக்க கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமுறையில் பிறந்து, பொதக்குடி மத்ரஸாவில் ஓதி ஆலிம் நூரிய்யி ஸனதைப் பெற்று மெய்ஞான வள்ளல் சுல்தானுல் வாயிழீன் ஹைதராபாத் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களிடம் பைஅத்தும் கிலாபத்தும் பெற்று தமது ஆன்மீகப் பணியை துவங்கினார்கள்.

அன்னார் தன்னலமற்று செய்த மார்க்கச் சேவைகளில் சிலதை நினைவு கூறுவோம்:

தமிழகம் மற்றுமில்லாமல் கேரளா, இலங்கையிலும் சென்று தமது தீன்பணியைத் தொடர்ந்தார்கள். அன்னாரிடம் பைஅத் பெற்ற பலர் விலாயத் பெற்றுத் திகழ்ந்திருக்கிறார்கள். இக்காலத்தில் வடநாட்டில் தோன்றிய வழிகெட்ட இயக்கமான தப்லீக் இயக்கத்தைப் பற்றி முழுமையாக அறிந்து அதைப் பற்றியுள்ள கெடுதிகளை மக்கள் மத்தியில் தனியொரு ஆளாக நின்று துணிச்சலாக எடுத்துரைத்தார்கள். மேலும் வழிகெட்ட கொள்கைக்காரர்களான ஜமாஅத்தே இஸ்லாமி, காதியாணி, தேவ்பந்தி போன்றவைகளையும் தோலுரித்துக் காட்டினார்கள். இதற்காக அவர்கள் பட்ட சிரமங்கள், துன்பங்கள் எண்ணிலடங்கா. இதற்காக அவர்களை கொலை செய்யவும் துணிந்தனர். ஆனால் எதைக் கண்டும் அஞ்சாமல் அல்லாஹ்வுக்காகவும், அவனுடைய ரஸூலுக்காகவும் தாம் கொண்ட பணியை செவ்வனே செய்தார்கள். அவர்கள் இல்லையென்றால் தமிழ்பேசும் நல்லுலகம் இந்த வழிகேடர்களின் வலையில் சிக்கித் தவித்து தங்கள் ஈமானை இழக்கக் கூடிய நிலைக்கு ஆளாகியிருக்கும். அல்லாஹ் நம் அனைவரையும் அன்னாரின் பொருட்டால் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

அதேபோன்று ஸூபியாக்கள் என்னும் ஞானவான்கள் போதித்த வஹ்தத்துல் வுஜூது கொள்கையை மிகவும் தெளிவாகவும், வழிபிறழாதும் மக்களுக்கு போதித்தார்கள். ஆங்காங்கே ஸூபி மன்ஸில்களை ஏற்படுத்தி அதன்மூலம் இக்காரியங்களை செய்து வந்தார்கள். மேலும் அதற்கு வெளியேயும் இந்த உன்னதமான காரியங்கள் அன்னாரைக் கொண்டு நடைபெற்று வந்தது.

அன்னாரின் முரீதுப் பிள்ளைகளைக் கண்டாலே வழிகேடர்கள் விரண்டோட ஆரம்பித்தனர். மிகவும் பேணுதலான முரீதீன்களை உருவாக்கிய மகான் என்று இவர்களை போற்றுகிறார்கள்.

அன்னாரின் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. எப்போதும் பொதுமக்கள் செல்லும் பேருந்திலேயே பயணம் செய்வார்கள். இல்லாவிடில் நடந்தே செல்வார்கள். யாரும் கார் அனுப்புகிறேன் என்று சொன்னால் கூட எனக்கு வண்டி இருக்கிறது. அதில் வந்து விடுவேன் என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் சொல்வது நடைராஜா வண்டியைத்தான். அவர்கள் சொன்ன நேரத்திற்கு சரியாக சென்று விடுவார்கள்.

இலங்கையில் விஷக்கிருமிகள் புத்தகத்தை அடித்து அதில் இரண்டு கட்டுகளை இரண்டு கையிலும் எடுத்துக் கொண்டு காலி வீதியில் நடந்து சென்று ஆங்காங்கே தென்படும் முஸ்லிம்களிடமும், பள்ளிவாயில்களிலும் விநியோகித்து தப்லீகின் முகமூடியைக் கிழித்தெறிந்தார்கள்.

தப்லீக் ஜமாஅத்தினர்கள் விவாதம் என்று அழைத்தபோதெல்லாம் அதற்கு சென்று அவர்களை விரண்டோடச் செய்திருக்கிறார்கள். இலங்கை, மாத்தறை விவாவதத்தில் தப்லீக் ஜமாத்தினர் இவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் ஓடியதையும், அதற்குப் பின் அவர்கள் போலியாக தீர்ப்பு எழுதி வெளியிட்டதையும் அந்தப் போலி தீர்ப்பை இனங்காட்டியதையும் இந்த உலகு அறியும்.

இந்தியாவில் தமது முரீதீன்களை பார்க்க செல்லும்போது கமுதி என்ற முன்பின் அறிமுகமில்லாதவர்கள் இருந்த ஊரில் ஜும்ஆ தொழ நேரிட்டபோது, அங்கு தொழுது முடிந்தபின் தப்லீக் பற்றி ஒருவர் புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார். அவர் பேசி முடித்ததும் ஷெய்குனா அவர்கள் எழும்பி நின்று தப்லீக்கின் தவறுகளை விலாவாரியாக எவ்வித பயமும், திடுக்கமும் இன்றி துணிவுடன் சொல்லி முடித்தார்கள். அவர்களுடன் கூட சென்ற அன்னாரின் கலீபா அஸ்ஸெய்யிது சாதாத் முஹம்மது ஜலாலுத்தீன் பூகோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னது. இது அல்லாஹ்வின் நேசர்களுக்கு ஏற்படும் துணிவல்லவா!

அதேபோல் காயல்பட்டினத்தில் ஜும்ஆ குத்பாவிற்கு முன் தமிழில் பிரசங்கம் பண்ணுவது ஹராம் என்று ஷெய்குனா அவர்கள் பகிரங்கமாக குத்பா பள்ளியில் சொன்னபோது எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கவில்லை. சொந்தபந்தம் பற்றி நினைக்கவில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இதற்காக அவர்களை மடையர்கள் அடிக்கத் துணிந்தபோதும் அதற்கும் அஞ்சவில்லை. அவர்களை எதிர்த்தவர்கள் என்ன கதியானார்கள் என்பதை காயல்நகர் வரலாறு சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

காயல்பட்டினத்தில் புதிதாக ஜும்ஆ உண்டாக்குவதற்கு சாவண்ணா ஆலிம் அவர்கள் பத்வா வெளியிட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பத்வாவில் கையெழுத்திட்டவர்கள் நமது ஷெய்குனா அவர்கள். இதற்காக பல்வேறு சிரமங்களை சந்தித்தார்கள். ஆனாலும் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்கள். இறுதியாக அதற்காக புதிதாக பள்ளி ஒன்றை உருவாக்கிய போது தமது ஞானதிஷ்டியால் அதற்கு ‘அல் ஜாமிவுல் ளிரார்‘ என்று சொன்னார்கள். பின்பு இதற்காக திறப்பு விழா தள்ளிப் போடப்பட்டபோது அதற்கு ‘ அல் ஜாமிவுல் இழ்ரார்‘ – வழி கெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி என்று பொருத்தமான பெயரை அப்பள்ளிக்கு சொன்னார்கள். அவர்கள் சொன்னசொல்படி இன்றுவரை அப்பள்ளி மக்களை வழிகெடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

அல்லாஹ்விற்காகவும், அவனுடைய ரஸூலிற்காகவும் எவ்வித அச்சமுமின்றி மார்க்கத்தை உள்ளபடி துணிச்சலுடன் எவ்விடத்திலும், எந்த சூழ்நிலையிலும் உரத்து சொன்னவர்கள் எங்கள் ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்கள்.

இறைஞானங்களை தமது முரீதீன்களுக்கு தெளிவுறப் போதித்தார்கள். அவர்கள் ஸூபி மன்ஸிலில் இருந்து கொண்டு அங்கு வருவோருக்கு மார்க்கத்தை விளக்கிக் கொண்டிருப்பார்கள்.

கேரளாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் மார்க்க அறிஞர்களும், மேதாவிகளும், முஸ்லிம்களும் அன்னாரை சந்திக்க வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டே இருப்பார்கள். தமது மறைவைக் குறித்து முன்னறிவிப்பும் செய்திருக்கிறார்கள்.

தன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் நம்முடைய ரஸூலை குறைவுபடுத்தியதையோ அதை ஆதரிப்பதையோ பார்த்தால் அவர்களின் முகம் கோபத்தால் சிவந்து விடும். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்காமல் விடமாட்டார்கள்.

தமது தள்ளாத வயதிலும் எவ்விதப் பிரதிபலனும் பாராமால் மார்க்கத்திற்காக உழைத்த அந்த ஒப்பற்ற தியாகி 1982 ஆம் வருடம் ரமலான் பிறை 24 அன்று லைலத்துல் கத்ரு இரவு அன்று கொழும்பில் மறைந்து விட்டது.
(حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هِيَ فِي الْعَشْرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ . يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ. قَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ أَيُّوبَ. وَعَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ الْتَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’

‘லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!’
என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.

இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!’ என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

– புகாரி பாகம் 2, அத்தியாயம் 32, எண் 2022 )

தங்களுடைய மறைவிற்குப் பின்னும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி வரும் இப்பெரும்தகையின் அடக்கவிடத்தை நோக்கி மக்கள் நேர்ச்சையுடன் சாரிசாரியாக வந்தவண்ணம் இருக்கின்றனர். தங்களுடைய நேர்ச்சை நிறைவேறியதற்காக காணிக்கைகளை செலுத்தியவண்ணம் இருக்கின்றனர். அன்னாரின் புனித உடலை தாங்கியிருக்கும் பூமியை தரிசிக்கும்போது காணக் கிடைக்கும் காட்சிகள் நமக்கு பரவசத்தை தருகின்றன. அல்லாஹ் அன்னாரை அந்தளவிற்கு மேன்மைப்படுத்தியிருக்கிறான்.

ஆலமுல் ஃபர்ஜகில் அன்னாருக்கு உயர்ந்த பதவியை கொடுத்திருப்பதாக ஒரு மகான் அவர்கள் சொல்கிறார்கள்.

அன்னாரின் தரீகில் நாம் இருப்பதற்கும், அன்னாரை நாம் போற்றி புகழ்வதற்கும் உரிய பாக்கியத்தை தந்த வல்ல நாயனுக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாவதாக.

அன்னாரின் நினைவாக அன்னாரின் மறைவு நாளன்று (ரமலான் பிறை 24) இரவு 11மணியளவில் காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் குத்பிய்யாமஜ்லிஸும், கொழும்பு குப்பியாவத்தை அன்னாரின் மக்பராவில் மாபெரும் உரூஸ் முபாரக்கும் சஹர் உணவும், காயல்பட்டினம் ஸூபி மன்ஸிலில், காலை சுப்ஹு முதல் மாலை 5 மணி வரை அன்னாரின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாமும் வருடம்தோறும் நடைபெற்று வருகிறது.

வசதியுள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் அன்னாரின் பெயரால் நடைபெறும் விசேஷங்களில் கலந்து கொண்டு அன்னாரின் துஆபரக்கத்தை பெற்றேக வேண்டுகிறோம்.

அவர்கள் எழுதிய புத்தகங்களில் வழிகேட்டின் வடிவத்தை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பார்கள்.

அதேபோல் வஹ்தத்துல் வுஜூது கொள்கையை மிகத் திறம்பட தெளிவுபட போதித்திருப்பார்கள். மக்களுக்கு எது தேவையோ அவற்றையே அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். தமது சொந்த செலவிலேயே அனைத்தையும் செய்தார்கள்.

தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள் என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட மிகவும் கஷ்டப்பட்டார்கள். அந்தக் காலத்தில் அரபு, உருது மொழிகளை அச்சிட பிளாக் செய்து அதை புத்தகத்தில் அச்சிட வேண்டும். அந்தப் புத்தகத்தில் உள்ள உருது வாக்கியங்களை பிளாக் எடுப்பதற்காகவே பம்பாய் சென்று தங்கி இருந்து அந்த வேலையை முடித்துக் கொண்டு வந்தார்கள். இந்த நூல் வழிகேடான தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைகளை அவர்களின் நூற்களிலிருந்தே எடுத்துக் காட்டியது.

அந்த புத்தகத்தை வெளியிட்டதும் வழிகேடர்களின் முகமூடிகள் கிழிந்து தொங்கத் துவங்கின. மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ளத் துவங்கியதைப் பொறுக்காத வழிகேடர்கள் காயல்பட்டினம் சாவாண்ணா ஆலிம் அவர்கள் தலைமையில் அந்தப் புத்தகத்தில் இருந்த அச்சுப்பிழையை பெரிதுபடுத்தி பிரசுரம் வெளியிட்டனர். அதற்கும் ஷெய்குனா அவர்கள் தகுந்த முறையில் பதிலளித்து அதை முறியடித்தனர். அதனால் வழிகேடர்களின் கொட்டம் அடங்கியது.

தற்கால போலி தரீகாவாதிகளான நூரிஷாஹ் தரீகாவின் முகமூடியை அன்றே புலியைக் கண்டு ஓட்டம் என்ற ‘ பர்ரத் மின் கஸ்வரா’ பத்வாவை வெளியிட்டு அஷ்ரப் அலி தானவியின் குப்ரை வெளிப்படுத்தினார்கள். மேலும் போலி தரீகாவாதிகள் போற்றிப்புகழும் தப்லீக் தலைவர்களான இஸ்மாயீல் திஹ்லவி, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்றோரின் கொள்கைகள் வழிகேடானவை என்று நமக்கு பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டி சென்றுள்ளார்கள்.

இள்ஹாருல் ஹக் என்ற கொள்கை நூலை மத்ரஸா மாணவர்களும் விளங்கும் வண்ணம் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை, வழிகேடர்களின் கொள்கை போன்றவற்றை பிரித்து காட்டி தெளிவுபடுத்தினார்கள். இந்த புத்தகம் ஒன்றே போதும் வழிகேடர்களின் வாயை அடைப்பதற்கு.

இல்யாஸின் தலைக்கு கொடிய வேதனை என்ற பத்வா நூலை மொழிபெயர்த்து வெளியிட்டு இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தைப் பற்றிய உண்மை பத்வாவை மக்களுக்கு எடுத்துக் காட்டினார்கள். அவர்கள் குப்ரை விட்டும் தப்ப முடியாது என்றுஆணித்தரமாக விளக்கினார்கள்.

அஷ்ரப் அலி தானவி சுவர்க்க நகைகள் -பிஹிஷ்திஜேவர் என்ற நூலில் இஸ்லாமியர்களின் அன்றாட பழக்கவழக்கங்களை குப்ர்-ஷிர்க் என்று எழுதியிருந்தார். அவை ஷிர்க் அல்ல, என்பதை மிகத் தெளிவாக விளக்கி சுவர்க்க நகைகளா? அல்ல நரக விலங்குகள் என்ற தலைப்பில் நூல் வெளியிட்டார்கள் ஷெய்குனா அவர்கள்.

அதே போல் தப்லீக் என்றால் என்ன?என்ற தலைப்பில் உண்மைத் தப்லீக் பற்றிய விளக்கத்தை மிகத்திறம்பட எடுத்தியம்பியிருந்தார்கள். அதில் இலங்கை மாத்தறை விவாதத்தில் தப்லீக் ஜமாஅத்தினர் செய்த திருட்டுத்தனத்தை ஆதாரத்துடன் விசேஷ இணைப்பாக இணைத்து வெளியிட்டனர்.

ஜமாஅத்தே இஸ்லாமியைப் பற்றி ‘ மௌதூதி சாகிபும் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கமும் என்ற நூலில் அதைப் பற்றிய பத்வாவுடன் மொழிபெயர்த்து எழுதி வெளியிட்டார்கள்.

தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் தீய கொள்கைகள் காதியாணியின் நச்சுக் கருத்துக்களுக்கு உரித்தானது என்பதை ஆதாரப்பூர்வமாக ‘ காதியாணி தேவ்பந்தி சம்பாஷணை‘ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டார்கள்.

தப்லீக் ஜமாஅத்தினர் கொள்கை சரியானதுதான் என்று அவர்களின் தலைவர்கள் எழுதிய நூற்களின் வாசகங்களை ஆதரித்து கலீல்அஹ்மது கீரனூரி என்பவர் எழுதிய தப்லீக் ஜமாஅத் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதில்கள் என்ற நூலுக்கு மறுப்பாக ‘ தன்னறிவில்லாத தக்க பதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு’ என்ற நூல் மூலம் பதிலுரைத்தார்கள்.

இமாம் அஹ்மது ரிழாகான் நாயகம் அவர்கள் தொகுத்து வெளியிட்ட ஹுஸாமுல் ஹரமைன் என்ற நூலுக்கு மறுப்பாக தப்லீகைச் சார்ந்த கலீல் அஹ்மது அம்பேட்டி என்பவர் போலியாக பத்வா ஒன்றை தயாரித்து அல் முஹன்னது என்ற பெயரில் நூல் வெளியிட்டார். அது போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் விதமாக ‘ அல்முஹன்னதின் அண்டப்புளுகு‘ என்ற நூலை ஷெய்குனா அவர்கள் வெளியிட்டார்கள்.
இஸ்லாமிய கொள்கையை மட்டும் இவர்கள் எடுத்தியம்பவில்லை.

இஸ்லாமிய ஆன்மீகத்தை வஹ்தத்துல் வுஜீது என்ற சித்தாந்தத்தை மிகத் தெளிவாக பிசகில்லாமல் போதித்தார்கள்.

அதற்காக பல்வேறு ஞான நூற்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

அத்துஹ்பத்துல் முர்ஸலா என்ற அற்புதமான ஞானநூலை மொழி பெயர்த்தார்கள். அதற்குரிய விளக்கவுரையும், ஓரக்குறிப்பையும் அத்துடன் சேர்த்தே வெளியிட்டார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எவ்வித முரண்பாடுமில்லாமல் அதை மொழி பெயர்த்திருந்தார்கள். ஞானவான்கள் சொல்கிறார்கள்: இதை ஒருவர் மொழிபெயர்த்து வெளியிடுவது என்பது சாதாரண விசயமல்ல. விலாயத் உள்ள ஒருவராலேயே இதை மொழிபெயர்க்க முடியும் என்று.

ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் எழுதிய அல்ஹக்கு என்ற அத்வைதத்தின் ஆரம்ப அடிச்சுவடியை மிகத் தெளிவாக மொழிபெயர்த்து தமிழ் மக்களுக்கு தந்தது பயனுள்ளதாக இருந்தது. அதேபோல் அல்ஹக்கு1 என்ற நூலையும் மொழிபெயர்த்தார்கள்.

அதேபோல் மௌலானா ரூமி நாயகம் அவர்களின் மஸ்னவி ஷரீஃப் என்ற நூலின் ஒரு அடிக்கு விளக்கமாக அமைந்த நூல் அத்தகாயிகு. இதை உருதுவில் எழுதிய ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் எழுதினார்கள். அதை அழகுத்தமிழில் அனைவரும் விளங்கும்வண்ணம் ஷெய்குனா அவர்கள் அதேபெயரில் வெளியிட்டார்கள்.

அஸ்ஸுலூக் என்ற நூலை ஹைதராபாத் ஸூபி நாயகம் எழுதியிருந்தார்கள். அதையும் ஷெய்குனா அவர்கள் மொழிபெயர்த்தது தரீகத் வழி நடப்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

முஹ்யித்தீன்இப்னு அரபி நாயகம் அவர்களால் எழுதப்பட்ட அஸ்ராருல் கல்வத் என்ற நூலை கல்வத்தின் இரகசியங்கள் என்ற பெயரில் வெளியிட்டு கல்வத் இருப்போருக்கு வழிகாட்டியாக அமைந்தார்கள்.

இமாமுனா கஸ்ஸாலி நாயகம் அவர்கள் எழுதிய மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலை ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்கள்.

அதேபோல் அகமியக் கண்ணாடி என்ற அற்புதமான நூலையும் மொழிபெயர்த்தார்கள்.
வஹ்தத்துல் வுஜூது என்ற பெயரில் குப்ரையும் ஷிர்க்கையும் போதித்துக் கொண்டிருக்கும் இலங்கை காத்தான்குடி அப்துர் ரவூப் மிஸ்பாஹியையும் கண்டித்து அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமது முரீதீன்களுக்கும் முஹிப்பீன்களுக்கும் எழுத்து மூலம் கட்டளையிட்டார்கள்.

ஆன்மீகத்தையும் அத்துடன் ரஸூலின் முஹப்பத்தையும் ஒருங்கே போதித்து மக்களை நேர்வழி செலுத்த உதவிய எங்கள் ஷெய்குநாயகம் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் இந்தப் புனித சேவையை வல்ல நாயன் பொருந்திக் கொள்வானாக.

அன்னாரின் பொருட்டால் அல்லாஹ் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானையும், இனிய ஈருலக வாழ்வையும் தந்தருள்வானாக. ஆமீன்.
-www.sufimanzil.org

Add Comment

Your email address will not be published.