அஷ்ஷெய்க் அஷ்ஷாஹ் இப்ராஹீம் எர்ஜி தெஹ்லவி (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்)
By Zainul Abdeen
அஷ்ஷாஹ் இப்ராஹீம் எர்ஜி(ஏரோச்சி) தெஹ்லவி (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்)
(மறைவு: கி.பி. 1546-06-05 ஹிஜ்ரி 953, ரபீஉல் ஆகிர், பிறை 05, டில்லி)
காதிரிய்யா அலிய்யா ஸில்ஸிலாவில் 29வது குருமகானாக வருகிறார்கள்.
ஹழ்ரத் இப்ராஹிம் எர்ஜி தெஹ்லவி அவர்கள் எரஜ் எனும் சிற்றூரில் (ஜலூன் மாவட்டம், பஞ்சாப், இந்தியா) செய்யித் மொய்ன் என்பவர்களுடைய மகனாக பிறந்தார்கள்.
அவர்கள் அக்காலத்தில் தலை சிறந்த அறிஞர்களின் காலடிக்குச் சென்று மார்க்கக் கல்விகளை பூர்த்தி செய்தார்கள். குறிப்பாக ஹழ்ரத் ஷெய்ஹ் அலீமுதீன் முஹத்தித் (குத்திஸ சிர்ரூஹு) அவர்களிடமிருந்து ஷரீஆ, தரீக்காவுடைய அறிவுகளை பெற்றார்கள்.
மேலும், ஹழ்ரத் பஹாஉத்தீன் ஜுனைதி அன்ஸாரி காதிரி சத்தாரி (குத்திஸ சிர்ரூஹு) அவர்களிடமிருந்து இறை ஞானங்களைப்பெற்றார்கள்.
காதிரிய்யா தரீக்காவின் பைஅத்தையும் கிலாபத்தையும் அவர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டார்கள்.
ஞானகுரு அஷ்ஷாஹ் பஹாஉத்தீன் ஷத்தாரி(குத்திஸ சிர்ரூஹு) அவர்கள் ‘அஸ்ஙர் ஓ அஷ்ஙல்’ என்ற தொகுப்பை அஷ்ஷெய்ஹ் இப்றாஹிம் எர்ஜி அவர்களுக்காகவே எழுதி கையளித்தார்கள். வரலாற்றாசிரியர்கள் இந்த தொகுப்பை ‘ரிஸாலா ஏ ஷத்தாரிய்யா’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
ஹழ்ரத் அப்துல் ஹக் முஹத்தித் தெஹ்லவி அவர்கள் எழுதிய பிரசித்தி பெற்ற நூலான ‘அக்பார் உல் அக்யார்’ என்ற நூலில் ஷெய்ஹ் அவர்களின் விவரங்களுடன் அவர்களின் தகுதிகளையும் குணங்களையும் எழுதியுள்ளார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
“உண்மை என்னவென்றால் டெல்லியில் அந்நேரத்தில் ஹழ்ரத் இப்றாஹிம் இர்ஜி அவர்களுக்கு நிகராக அறிவிலும் ஞானத்தில் யாரும் காணப்படவில்லை. ஆயினும் மக்கள் அவர்களிடமிருந்து பயனடையவில்லை. அவர்களுடைய அறிவுஞானத் திறனை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. இதன்மூலம் அம்மக்கள் தமக்கே அநீதியிழைத்துக் கொண்டனர்”
ஹழ்ரத் இப்றாஹிம் எர்ஜி அவர்கள் தம்முடைய காலத்தில் சிறந்த தத்துவ ஞானியாகவும் மார்க்க அறிவில் நிகரற்றவர்களாகவும் வாழ்வியல் நடைமுறையில் புத்திக் கூர்மையுள்ளவர்களாகவும் இருக்கக் கூடிய ஒர் காமிலான ஷெய்ஹாக திகழ்ந்தார்கள்.
மக்களுடைய அறியாமை, அநீதி மற்றும் கவனக்குறைவு காரணமாக அவர்களிடமிருந்து ஒதுங்கி அதிகமான ஞான நூற்களை வாசிப்பதிலும் தம்மை நாடி வருபவர்களை பண்படுத்துவதிலும் காலத்தை செலவழித்து வந்தார்கள்.
மக்களில் வெகு சிலர் மாத்திரமே அவர்களை தம் நல்வழிக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ஹழ்ரத் அவர்களுடைய போதனைகளின் சிறப்பினால் அறிவார்ந்த மக்கள் சாதனைகளையும் ஆன்மீக உயர் அந்தஸ்துக்களையும் அடைந்தனர்.
ஸூபிஸ வழியில் செல்பவர்கள் அவர்களின் காலடிக்கு வந்து இஸ்லாமிய இறைஞானங்களை பெற்றுச்செல்பவர்களாக இருந்தனர். அக்கால ஸூபி மகான்கள் கூட ஹழ்ரத் அவர்களிடம் கற்றுக்கொள்வதை பாக்கியமாக கருதினர்.
எனினும் தம்மை வந்து சந்திக்கும் பெரியார்களிடமிருந்து மேலும் கற்றுக்கொள்ளும் அளவுக்கு மனத்தாழ்மை மிக்கவராகவும் ஹழ்ரத் இருந்தார்கள். இருப்பினும், சாதாரண மக்களுக்கு கற்பிப்பதில் அவர்களுக்கு மிக்க ஆர்வம் இருந்தது.
அவர்களுடைய திருச் சந்நிதானம் அன்மீகத்தை அள்ளி வழங்கக்கூடிய சிறப்பானதொரு மையமாக காணப்பட்டது.
ஹழ்ரத் அவர்கள் நூற்களை அதிகம் விரும்பினார்கள். கற்றுக்கொள்ளும் நன்நோக்கில் தம்மிடம் வருபவர்களுக்கு நூற்களை கையளிப்பார்கள்.
பல் துறைகளிலும் உள்ள நூற்களை வாசித்து அவற்றை தம் கையாலேயே அடிக்குறிப்பெழுதி திருத்தவும் செய்தார்கள். அதாவது ஒரு ஆசிரியரின் உதவியின்றி ஒரு சாதாரண வாசகர் அவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்களின் கடினமான வாசகங்களை தீர்த்து இலகுபடுத்தி எழுதி வைப்பதில் மகிழ்ச்சியடையக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இமாமுல் அவுலியா ஹழ்ரத் செய்யிதுனா இப்ராஹிம் எர்ஜி தெஹ்லவி (குத்திஸ ஸிர்ருஹு) அவர்கள் ஹிஜ்ரி 953, ரபியுல் அகிர் 5 (05-06-1546) இல் காலமானார்கள். எனவே ரபியுல் ஆகிர் 5அவர்களுடைய உரூஸ் தினமாகும்.
டெல்லியில் உள்ள சுல்தானுல் மஷாயிஹ் அஷ்ஷெய்ஹ் நிஜாமுத்தீன் அவுலியா மற்றும் ஹஸ்ரத் அமீர் குஸ்ரோ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) ஆகியோரின் புனித தர்ஹா ஷரீப் வளாகத்தில் இவர்களுடைய தர்ஹா அமைந்துள்ளது.
ஹழ்ரத் இப்றாஹிம் எர்ஜி அவர்களுடைய கலீபாக்கள்;
1. ஹழ்ரத் செய்யித் காரி முஹம்மத் நிஸாமுத்தீன் ஷாஹ் பீஹாரி (கி.பி.1485-1572) (Kakori),
2. ஹழ்ரத் ருக்னுத்தீன் இப்னு அப்துல் குத்தூஸ் கங்கோஹி
3. ஹழ்ரத் அப்துல் அஸீஸ் இப்னு ஹஸன் ஸகர்பாரி (மறைவு: கி.பி.1567)
ஹழ்ரத் ஸகர்பாரி (கி.பி.1493-1567) அவர்கள் ஊடாக ஸில்ஸிலா எம்மை வந்தடைகிறது.
Source:facebook