தப்லீக்கும் அதன் தலைவர்களும்- Thableegh and Its Leaders

தப்லீக்கும் அதன் தலைவர்களும்- Thableegh and Its Leaders

By Sufi Manzil 0 Comment September 2, 2012

Print Friendly, PDF & Email

 

தொகுத்தவர்: மௌல்வி ஹாபிஸ் M.S. அப்துல் காதிர் பாக்கவி

நூலாசிரியரைப் பற்றி:

கடையநல்லூரைச் சார்ந்த மௌல்வி எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் கல்லூரியில் பயின்று ஆலிம் பட்டம் பெற்றவர். பல்வேறு மத்ரஸாக்களில் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். பள்ளிவாயில்களில் இமாமாகவும் இருந்துள்ளார். 

இவர் காயல்பட்டினத்தில் மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளர். நூரி ஷாஹ்வின் போலி தரீகாவின் கலீபா பைஜிஷாஹ் என்ற பஷீர் மௌலானாவிடம் பைஅத் பெற்று கிலாபத்தையும் வாங்கிக் கொண்டார். அதனால் அவருக்கு ஐனி ஷாஹ் என்ற பெயர் ஏற்பட்டது. 

இதில் குறிப்பிடத் தக்க விசயம் என்னவெனில், மௌலானா அஷ்ரப் அலி தானவி என்பவரை இவர் வழிகெட்டவர், காபிர் என்று பகிரங்கமாக கூறுகிறார். 

தப்லீக்கும் அதன் தலைவர்களும்

மார்க்கத்தின் கருவூலங்களான கண்ணியத்திற்குரிய உலமாக்களே! மார்க்க சேவைக்கும், பாதுகாப்புக்கும் வாரி வழங்கும் செல்வ சீமான்களே! இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹு.

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களிடையே மார்க்க உபதேசத்துக்காக நம் முன்னோர்களாகிய இமாம்கள், அவ்லியாக்கள், உலமாக்கள் முதலானோர் கையாண்டு வந்த முறைகளை விடுத்து அவற்றுக்கு அப்பாற்பட்ட புதிய முறையில் மௌல்வி இல்யாஸ் என்பவர்கள் தப்லீக்(எத்தி வைக்குதல்) ஜமாஅத் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஹிஜ்ரி 1344 க்குப் பின் நடத்தி வரலானார். இந்த இயக்கம் இந்தியத் தலைநகர் டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

ஓர் இயக்கத்தின் ஸ்தாபகரின் கொள்கை அவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்துக்கு ஆன்மாவைப் போன்றதாகும். ஏனெனில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிற கொள்கைகளே அந்த இயக்கத்தின் கொள்கைகளாக பிரதிபலிக்கின்றன.

இந்த தப்லீக் இயக்கம் வெளித் தோற்றத்தில் மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் நல்லதோர் இயக்கமாகத் தோன்றுகிறது. ஆனால் மௌல்வி இல்யாஸும், அவருடைய குருமார்களும் தங்களுடைய நூல்களில் வெளியிட்டிருக்கக் கூடிய கொள்கைகளையும், இந்த் தப்லீக் இயக்கத்தின் குறிக்கோளைப் பற்றி எழுதியுள்ள வாசகங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது நம் சுன்னத் வல் ஜமாஅத்தின் நான்கு மத்ஹப்களின் அகாயித் எனும் மூலக் கொள்கைகள் லட்சியங்களுக்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கைகளை உடையவர்களென்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் வஹ்ஹாபிக் கொள்கைகளை நம்மிடை புகுத்தவே இந்த இயக்கத்தை துவக்கி நடத்தப்பட்டு வருகிறது என்ற உண்மையும் திண்ணமாய்ப் புலனாகும்.

மௌல்வி இல்யாஸ் தன்னுடைய நண்பரிடம் கூறுகிறார்: 'ளஹீருல் ஹஸன்! என்னுடைய கருத்தை ஒருவரும் விளங்கிக் கொள்கிறார் இல்லை. ஜனங்கள் நினைத்துக் கொள்கிறார்கள், இது தொழுகையைப் பற்றி ஏவக் கூடிய இயக்கம்  என்று. நான் சத்தியம் செய்து சொல்கிறேன். இது ஒரு போதும் தொழுகையைப் பற்றி ஏவக் கூடிய இயக்கம் அல்ல. எனது நோக்கம் ஒரு புதியக் கூட்டத்தை உண்டாக்குவதாகும்'. தப்லீக் பிரச்சாரகர் (முபல்லிகு) அபுல்ஹஸன் நத்வியால் தொகுத்து எழுதப்பட்ட இல்யாஸ் ஒளர் உன்கீ தீனி தஃவத் (இல்யாசும் அவரது மார்க்க அழைப்பும்) என்ற நூலில் 205-ஆம் பக்கத்தில் காணப்படுகிற வாக்கியங்கள் இவை. அதாவது முஸ்லிம்களுக்கு மத்தியில் தப்லீக் செய்து ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவது அவருடைய நோக்கம் என்று தெரிவிக்கிறார்.

அவர் முஸ்லிம்களை எத்தகைய கூட்டமாக மாற்ற விரும்புகிறார்? என்ற கேள்வி எழும்பினால் இல்யாஸ் எழுதிய மல்பூஜாத் என்ற நூலில் 32-வது பக்கத்தில் விடை கிடைக்கிறது.

'ஜனங்கள் என்னுடைய தப்லீக்கின் பரக்கத்துக்களை பார்த்து விட்டு வேலை நன்றாக நடக்கிறது என நினைக்கிறார்கள். வேலை என்பது ஒன்று பரக்கத் என்பது வேறொன்று. பாருங்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பான ஜனனத்திலிருந்தே பரக்கத்துக்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன. ஆனால் வேலையோ ரொம்ப பின்னால்தான் ஆரம்பமானது. அதே விதமாகவே இங்கும் நினையுங்கள். மெய்யாக நான் சொல்கிறேன், இதுவரையிலும் அசல் வேலை ஆரம்பமாகவில்லை. என்றைக்கு வேலை ஆரம்பமாகுமோ அன்றைக்கே முஸ்லிம்கள் (இன்றைக்கு) 700 வருடங்களுக்கு முன்னுள்ள நிலைக்கு மீளுவார்கள்.

மேலும் மௌல்வி மன்சூர் நுஃமானி என்பவரால் திரட்டப்பட்ட மௌல்வி இல்யாஸின் வார்த்தைகள் என்ற நூலின் 21வது பக்கத்தில் காணப்படுகிற வாசகத்தைக் கவனிப்போம்.

'நம்முடைய இந்த இயக்கத்தின் அசல் நோக்கம், நபி அவர்கள் கொண்டு வந்தது அத்தனையும் கற்பிக்கிறதாக இருக்கும்.' இப்படி போவதும் திரிவதும், இன்னும் கூட்டம் கூட்டமாக தப்லீக் கஷ்த்து செய்வதும் இவையெல்லாம் அந்த நோக்கத்திற்கு ஆரம்ப வழியேயாகும். மேலும் கலிமா, தொழுகையை படித்துக் கொடுப்பதும் போதிப்பதும் நம்முடைய பூரணத் திட்டத்திற்கு அலிப், பே, தே போன்றதாகும். அதாவது தப்லீக்கினால் என்றைக்கு அசல்வேலை ஆரம்பமாகுமோ அதுவரை கலிமாச் சொல்லிக் கொடுப்பதும், தொழுகைக்கு அழைப்பதும் ஆரம்ப அரிச்சுவடிப் பாடம் என்பது மௌல்வி இல்யாஸின் கூற்று.

எனவே 700 வருடங்களுக்கு முன் உள்ள நிலை என்று எதைக் குறிப்பிடுகிறார் என்று சற்று ஆராய்வோம். வஹ்ஹாபி கூட்டத்தை உருவாக்கிய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி தான் எழுதிய கிதாபுத் தவ்ஹீது என்ற வஹ்ஹாபிகளிடையே பிரசித்திப் பெற்ற நூலில் சுன்னத் வல் ஜமாஅத்துக்குப் புறம்பான பல மூடக் கொள்கைகளை வகுத்துக் கொடுத்ததோடு தன்னுடைய காலத்தில் இருந்து 600 வருடங்களுக்கு முன்வரை உள்ள சுன்னத் வல் ஜமாஅத்துக்காரர்களையெல்லாம் காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும் அவர்களை வெட்டுவதும், பொருள்களைக் கொள்ளையடிப்பதும் ஹலால் என்றும் எழுதியிருக்கிறார். (அவருடைய இந்த கூற்றை மக்கா முப்தியாக இருந்த செய்யது அஹ்மது ஜெய்னி தெஹ்லானி ரஹிமஹுல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் 'அத்துரருஸ்ஸனியா' என்ற நூலில் 29வது பக்கத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.) ஆகவேதான் தனது நஜ்து நகரிலிருந்து படையெடுத்துச் சென்று தாயிப் நகர மக்களையும் புனிதமிக்கதும் தூய்மையானதுமான ஹரம்ஷரீபில் அடைக்கலம் புகுந்திருந்த உலமாக்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்து அவர்களுடைய பொருள்களையும் சூறையாடினான். இந்த கொடியவனின் கொடுமைக்கு சுல்தான் மஹ்மூது அவர்கள் ஆட்சியில் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவைகளை மேற்கூறப்பட்ட அத்துரருஸ்ஸனிய்யா நூலில் 32, 33 ம் பக்கங்களில் காணலாம்.

அவருக்குப் பின் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பின் ஹிஜ்ரி 1303 ல் பிறந்த மௌல்வி இல்யாஸ் அவர் ஆரம்பித்திருக்கும் தப்லீக் இயக்கத்தின் அசல் வேலை ஆரம்பமாகும்போதுதான் முஸ்லிம்கள் 700 வருடங்களுக்கு முன் உள்ள நிலைக்கு மீளுவார்கள் என்று கூறுகிறார். அதாவது இப்னு அப்துல் வஹ்ஹாபைப் போன்று சுன்னத்வல் ஜமாஅத்தைச் சார்ந்த முஸ்லிம்களையெல்லாம் காபிர்கள், முஷ்ரிக்குகள் என்பதுதான் இந்த மௌல்வி இல்யாசுடைய கொள்கையுமாகும்.

ஆகவேதான் தப்லீகின் அசல் வேலையானது முஸ்லிம்களை 700 வருடங்களுக்கு முன் உள்ள நிலைக்கு மீளச் செய்வது என்று மௌல்வி இல்யாஸ் கூறுகிறார். சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்தவர்களையெல்லாம் முஷ்ரிக்குகள் என்ற கொள்கை இருப்பதால்தான் தப்லீக் வேலையின் உயிர் நாடி என்று கூறப்படும் கஷ்த்து என்னும் ஊரில் வலம் வருதலின் போது எதிரில் காணும் முஸ்லிம்களுக்கும் தொழுகைக்கு அழைக்கப்படும் முஸ்லிம்களுக்கும் கலிமா சொல்லிக் கொடுத்து நம்மையெல்லாம் இஸ்லாத்தில் ஆக்கி வரச் செய்திருக்கிறார். அவருடைய பரிபூரணத் திட்டமான வஹ்ஹாபிக் கொள்கைகளை படித்துக் கொடுப்பது என்று இருப்பதால்தான் கலிமா சொல்லிக் கொடுப்பதும் தொழுகைக்கு அழைப்பதும் அலிப், பே, தே என்ற ஆரம்ப அரிச்சுவடிப் பாடம் என்று கூறுகிறார்.

மௌல்வி இல்யாஸ் உடைய தப்லீக் இயக்கத்தின் அசல் வேலையைப் பற்றியும், அவருடைய கொள்கையைப் பற்றியும் அறிந்தோம். இனி 'என் உயிரிலும் உடலிலும் ஒன்றிவிட்டவர் என்றும், ஒலி, குத்பு என்றும் இன்னும் பலவாறாக மௌல்வி இல்யாஸ் அவர்களால் போற்றிப் புகழப்பட்ட அவருடைய குருமார்களுடைய வஹ்ஹாபி கொள்கைகள் சிலவற்றையும் அவற்றுக்கும் இல்யாசுடைய கொள்கைக்கும் உள்ள தொடர்பையும் ஒற்றுமையையும் பற்றி ஆராய்வோம்.

டில்லி மாநகரைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் என்பவர் தான் ஹஜ்ஹிற்குச் சென்றிருந்த போது முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியால் எழுதப்பட்ட 'கிதாபுத் தௌஹீது' என்ற நூலை டில்லிக்கு கொண்டு வந்து அதை உர்தூவில் மொழி பெயர்த்து அதற்கு 'தக்வியத்துல் ஈமான்' என பெயரிட்டார். அதனை வெளியிட்ட ஆரம்ப காலத்திலேயே அதில் நிரப்பப்பட்டிருந்த மூடக் கொள்கைகளின் காரணத்தினால் மக்கா, மதினா அதனைச் சுற்றியுள்ள இமாம்களால் இஸ்மாயில் திஹ்லவியை காபிர் என மார்க்கத் தீர்ப்பு வழங்கி ஸுயூபுல் பாரிகா அலா ரூஊஸில் பாஸிகா(துஷ்டர்களின் சிரசுகள் மீது செலுத்தப்படும் வாட்கள்) என்ற பெயரில் ஓர் நூல் வெளியிட்டிருக்கிறார்கள். அந்நூலில் காணக் கிடைக்கும் வஹ்ஹாபிக் கொள்கைகளின் வாசகங்களில் சில பின்வருமாறு:-

1. எல்லா சிருஷ்டிகளும் பெரியதோ, சிறியதோ அல்லாஹ்வின் முன்னால் செம்மானை (செருப்பு தைப்பவனை) விட மிக அற்பமானவர்களேயாகும். – பக்கம் 12.

2. மனிதர்கள் தம்மில் சகோதரர்கள். எவர் பெரியவரோ அவர் பெரிய சகோதரர். அதே கவனத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெரிய சகோதராரின் மரியாதை கொடுங்கள். – பக்கம் 50.

3. படைக்கப்பட்ட பொருட்கள் என்பதில் சூரியன், சந்திரன் நபி, வலி எல்லோருமே சமமாகும். – பக்கம் 31.

4. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் அற்ப அணுவை விடவும் குறைந்தவர்கள். – பக்கம் 45.

5. ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் தலைமை தாங்கும் தலைவன் போல், பல கால்நடை மிருகங்களுக்கு முதலாளி போல் ஒவ்வொரு கவ்முகளுக்கும் அனுப்பப்பட்ட நபிமார்கள் அவர்களுக்கு தலைவர்களாவார்கள். – பக்கம் 53.

6. நானும் ஒரு நாள் மௌத்தாகி மண்ணோடு மண்ணாய் சேர்ந்து போகக் கூடியவன் என ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களைப் பற்றிக் கூறினார்கள். – பக்கம் 50.

7. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷபாஅத்துச் செய்வார்கள் என்று யாராவது நம்புவானானால் அவன் அசல் முஷ்ரிக்காகவும் மடையனாகவும் ஆவான். –பக்கம் 25.

8. எவன் யாரஸூலல்லாஹ் என்று சொல்லுவானோ அவன் காபிர். –பக்கம் 66, 67.

9. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ரவ்லா ஷரீபை ஜியாரத்துச் செய்வதற்காக மட்டும் போவது ஷிர்க்காகும். – பக்கம் 10, 40.

10. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாடுவதனால் ஒன்றும் உண்டாகப் போவதில்லை. –பக்கம் 66.

அதாவது நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு ஷபாஅத்துச் செய்வாhக்ள், அவர்களை யாரஸூலல்லாஹ் என்று அழைப்பதும், அவர்களுக்கு சலவாத்து சலாம் கூறுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என நம்புவதும், ஷிர்க்கு (இணை வைத்தல்) என்பது அவருடைய கொள்கையாகும்.

இதுபோன்ற பல ஆபாச வசைபாடும் வசனங்கள் பல நிறைந்த இந்த தக்வியத்துல் ஈமான் என்னும் நூலைப் பற்றி மௌல்வி இல்யாசின் முதல் குருவும் வஹ்ஹாபிகளின் இரண்டாவது தலைவருமான ரஷீது அஹ்மது கங்கோஹி தான் எழுதிய 'பதாவா ரஷீதிய்யா' என்ற நூலில் கூறும் கருத்துக்களையும் கவனிப்போம்.

'தக்வியத்துல் ஈமான்' என்னும் நூல் ரொம்ப விசேஷமான உண்மையான நூலாகும். மேலும் ஈமானi சரிபடுத்தக் கூடியதும் ஈமானுக்கு வலுவைக் கொடுக்கக் கூடியதும் ஆகும். – 'பதாவா ரஷீதிய்யா' பக்கம் 41.

'அந்த நூல் ஷிர்க்கையும், பித்அத்தையும் மறுப்பதில் நிகரில்லாதது. அதனை வைத்திருப்பதும், படிப்பதும், அதன்படி அமல் செய்வதுமே இஸ்லாமாகும். (ஐனுல் இஸ்லாம்) மேலும் நற்கூலி கிடைக்க இதுவே காரணமாகும். அதை வைத்திருப்பது குபுர் என்று எவன் சொல்வானோ அவன் தானே காபிர் அல்லது பித்அத்துக்கார பாஸிக்காக இருக்கும்.' –பதாவா ரஷீதிய்யா பக்கம் 42.

மேலும் அந்த நூலின் பக்கம் 42ல் 'முத்தகீன்களைத் தவிர வேறு யாரும் அல்லாஹ் உடைய அவ்லியாக்களாக இல்லை' என்ற ஆயத்தின்படி வஹ்ஹாபிகளின் முதல் பிரதிநிதியான இஸ்மாயில் திஹ்லவி ஒலியாக இருக்கிறார் என புகழ்கிறார்.

'தக்வியத்துல் ஈமான்' என்னும் நூலின் மூலமான 'கிதாபுத் தௌஹீது' என்னும் நூலின் ஆசிரியர் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்ற வழி கெட்டவனைப் பற்றி ரஷீது அஹ்மது கங்கோஹி பின்வருமாறு தெரிவிக்கிறார்.

வினா: அப்துல் வஹ்ஹாப் நஜ்தி எத்தகைய மனிதர்?

விடை: முஹம்மது இபுனு அப்துல் வஹ்ஹாபை ஜனங்கள் வஹ்ஹாபி என்று சொல்வார்கள். அவர் நல்ல மனிதர்.' – பதாவா ரஷீதிய்யா, பக்கம் 237.

வினா: வஹ்ஹாபி என்பவர்கள் எந்த ஜனங்கள்? இப்னு அப்துல் வஹ்ஹாபுடைய கொள்கை என்ன? அவர் எத்தகைய மனிதர்?

விடை: முஹம்மது இப்னு அப்துல் வஹாபைத் தொடர்ந்தவர்களுக்கு வஹ்ஹாபி என்று சொல்வார்கள். அவரின் கொள்கை நல்லது. அவரின் மத்ஹபு ஹன்பலியாகும். நிச்சயமாக அவருடைய சுபாவத்தில் கடுமை இருந்தது. ஆனாலும் அவரும் அவரைத் தொடர்ந்தவர்களும் நல்லவர்கள்.' – பதாவா ரஷீதிய்யா பக்கம் 235.

இவ்வாறு இந்த கங்கோஹி நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய தீள கொள்கைகள், வசைபாடும் வசனங்கள் நிறைந்த நூலை ஒப்புக் கொண்டதுடன் மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறார். இத்துடன் அவரே கூறிய கருத்துக்களை கவனிப்போம்.

'அநேக கருமங்கள் நல்லடியார்களுடைய முஃஜிஸாத்துகள் என கணிக்கப்படுகின்றன. இம்மாதிரி என்ன இதை விட சக்தியிலும் பரிபூரணத்திலும் மேலானதையும் சூன்யக்காரர்களாலும் மந்திரவாதிகளாலும் செய்ய முடியும்.' –பதாவா ரஷீதிய்யா பக்கம் 171.

தக்வியத்துல் ஈமானுடைய ஆசிரியரான இஸ்மாயில் திஹ்லவியும் அவர் எழுதிய 'மன்சிப் இமாமத்' என்ற நூலில் 31ஆம் பக்கத்தில் நபிமார்களின் முஃஜிஸாவை சூன்யத்தையும் மந்திரத்தையும் விட மட்டமானதாக்கிக் காட்டியிருக்கிறார் என்பதை தனது பதாவா ரஷீதிய்யா நூலில் அதே 171ம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் நபிமார்களின் முஃஜிஸாக்களை மறுக்கின்றனர்.

'ரஹ்மத்துல்லில் ஆலமீன்' என்னும் உயர் பதவி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. மற்ற அன்பியாக்களும் உலமாக்களும் கூட ரஹ்மத்துல்லில் ஆலமீனாக இருக்கிறார்கள். –பதாவா ரஷீதிய்யா பக்கம் 96.

இந்த ரஷீது அஹ்மது கங்கோஹி தன்னுடைய அந்தஸ்தைப் பற்றிக் கூறுவதைக் கவனிப்போம். அவருடைய மற்றொரு நூலான 'ததுக்கிரத்துர் ரஷீத்' இரண்டாம் பாகம் 17ம் பக்கத்தில்,

'இக்காலத்தில் நேர்வழியும் ஈடேற்றமும் என்னைப் பின்பற்றுவதிலேயே தரிபட்டிருக்கிறது' என நபிமார்களுக்குத் தவிர மற்றவர்களுக்குத் தகுதியில்லாத வார்த்தையைக் கூசாமல் கூறுகிறார்.

இத்தகைய இந்திய வஹ்ஹாபிகளின் முதல் தலைவரான இஸ்மாயில் திஹ்லவி இரண்டாவது தலைவரான ரஷீது அஹ்மது கங்கோஹி அவரைச் சார்ந்த கலீல் அஹ்மது அம்பேட்டி, அஷ்ரப் அலி தானவி போன்ற வஹ்ஹாபிகளுக்கும், தப்லீக் இயக்கத்தை ஆரம்பித்த மௌல்வி இல்யாசுக்கும் உள்ள தொடர்புகளையும், கொள்கை ஒற்றுமைகளையும் பற்றி இனி ஆராய்வோம்.

வஹ்ஹாபிகளின் இரண்டாவது தலைவரான ரஷீத் அஹ்மது கங்கோஹியைப் பற்றி மௌல்வி இல்யாஸ் கூறுகிறார்: 'இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பாகவும், முஜத்திதாகவும் இருக்கும்.' -மல்பூஜாத் பக்கம் 114.

மேலும் தப்லீக் பிரச்சாரகர்(முபல்லிகு) அபுல் ஹஸன் நத்வி என்பவரால் திரட்டப்பட்ட 'இல்யாஸ் ஒளர் உன்கீ தீனி தஃவத்' என்ற நூலின் 43வது பக்கத்தில் மௌல்வி இல்யாசுக்கும், ரஷீது அஹ்மது கங்கோஹிக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதை பின்வருமாறு தெரிவிக்கிறார்.

'கங்கோஹ் என்ற ஊர் அந்தக் காலத்தில் நல்லோர்கள் பெரியோர்களின் உறைவிடமாக இருந்தது. அவர்களுடையவும் மேலும் மௌலானா ரஷீது அஹ்மது சாகிப் அவர்களுடையவும் சகவாசமும் அவர்களுடைய மஜ்லிசுகளில் கலந்து கொள்ளும் பாக்கியமும் மௌலானா இல்யாஸ் சாஹிப் அவர்களுக்கு இரவும் பகலும் கிடைத்தது.'

இந்த கங்கோஹியிடம் இரவும் பகலும் சகவாசம் செய்யும் 'பாக்கியம்' கிடைத்த மௌல்வி இல்யாஸ் 'பைஅத்' என்னும் தீட்சை பெற்று அவருடைய சீடராகிக் கொண்ட செய்தியை அதே 'தீனி தஃவத்' பக்கம் 44ல் காணலாம். அந்த செய்திப pன்வருமாறு:

'மௌலானா கங்கோஹி பொதுவாக சிறு பிள்ளைகளிடத்திலும் மாணவர்களிடத்திலும் வாக்குறுதி வாங்குகிறதில்லை, பூரணமாக ஓதி முடித்த பின்னர்தான் அவர்களுக்குச் சீடனாக வாக்குறுதி கொடுக்க அனுமதி கிடைக்கும்.  ஆனாலும் மௌலானா இல்யாசுடைய விசேஷ குணத்தின் காரணமாக அவரின் விருப்பத்தின் பேரிலும், தேட்டத்தின் பேரிலும் அவர்களிடம் பைஅத் வாங்கிக் கொண்டார்கள்.' இதன்மூலம் இவரும் வஹ்ஹாபியாகி விட்டது புலனாகும்.

கங்கோஹியின் மரணத்துக்குப் பின் மௌல்வி இல்யாசு தனது இரண்டாவது குருவாக மௌல்வி கலீல் அஹ்மதிடம் பைஅத் எடுத்துக் கொண்டார். (தீனி தஃவத் ப்ககம் 49, மௌலானா இல்யாஸ் பக்கம் 47) இல்யாஸின் இரண்டாவது குருவான அம்பேட்டி, தனது 'பராஹீனே காத்திஆ' என்னும் நூலின் 51ம் பக்கத்தில் கூறுவதையும் காணுவோம்.

'சைத்தான், மலக்குல் மவ்த் இவைகளின் நிலைமைகளைப் பார்த்துவிட்டு சரியான ஆதாரங்களுக்கு விரோதமாக தவறான வெறும் கற்பனையைக் கொண்டு மாத்திரம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பூமி முழுவதையும் அறியக் கூடிய அறிவு இருப்பதாக ஸ்தாபிப்பதானது ஷிர்க்கு அல்லாமல் ஈமானில் எந்த பாகத்ததைச் சார்ந்ததாகும்?' என்று கேட்கிறார்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட இப்லீசுக்கு அதிக அறிவு உண்டு என்பது போன்ற கருத்துக்களை எழுதப்பட்ட இந்த நூலை கங்கோஹி வரிவரியாக சரிபார்த்து கையெழுத்திட்டார் என்பதாக அதே 'பராஹீனே காத்திஆ' 51 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிவார்கள் என நம்புவது சுத்தமான ஷிர்க்காகும் என்று பதாவா ரஷீதிய்யாவின் 96ஆம் பக்கத்தில் கூறியுள்ள இவருக்கும் அவருக்கும் கொள்கையில் வேற்றுமை இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மௌல்வி இல்யாஸின் மூன்றாவது குருவான அஷ்ரப் அலி தானவி என்பாரும் இந்த கொள்கையில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர் ஏழுதிய 'ஹிப்ளுல் ஈமான்' என்னும் நூலின் 8ம் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பதை பின்வரும் மேற்கோள் தெளிவாகக் காட்டுகிறது.

'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருப்பது போன்ற அறிவை ஜெய்து, அம்ர், பக்ரு போன்ற சாதாரண மனிதனும்தான், ஒவ்வொரு மதளைக் குழந்தையும்தான், பைத்தியக்காரர்களும் தான் பெற்றிருந்தார்கள். ஏன் மிருகங்களும் தான் பெற்றிருக்கின்றன. நபியவர்களுக்கு இதில் என்ன விசேஷமிருக்கிறது?'

ஆகவே இல்யாசுடைய மூன்று குருமார்களும் நம் உயிரிலும் உயர்வான ஈருலக ரட்சகர் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவை மிருகத்தின் அறிவுக்கும், சபிக்கப்பட்ட இப்லீசின் அறிவுக்கும் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள் என்பது தெளிவு.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகவும் அற்பமானவர்களாக சித்தரித்துக் காட்டுவது வஹ்ஹாபிகளுடைய முக்கிய கொள்கையாக இருக்கிறது. இஸ்மாயில் திஹ்லவி தனது 'கிதாப் சிராத்துல் முஸ்தகீம்' என்ற நூலில் வாயால் மொழிவதற்கும் அருவருக்கத்தக்க இழிமொழிகளை எழுதி வைத்திருக்கிறார். அந்த நூலின் 97ம் பக்கத்தில் கூறப்படுவதைக் காண்போம்.

'தொழுகையில் ஷெய்கு, அவர் போன்ற பெரியார்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களானாலும் சரிதான், இவர்களுடைய ஞாபகம் வருவதானது ஜினா செய்கிற நினைப்பும் ஏன் தனது மாடு, கழுதையுடைய நினைப்பில் மூழ்குவதை விடவும் கெட்டதாகும்'.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அற்பமானவர்களாக காட்டும் முயற்சியில் அஷ்ரப் அலி தானவியுடைய பங்கைப் பற்றிக் காண்போம்.

'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹாளிர், நாளிர் (எங்கும் ஆஜராவார்கள்) உம்மத்துக்களுடைய அமல்களையெல்லாம் பார்க்கிறார்கள் என்று நம்புவதும், அவர்களை யாரஸூலுல்லாஹ், யா முஹம்மத் என்று கூப்பிடுவதும் ஷிர்க், ஹராம். -பெஹ்ஷ்திஜேவர் பாகம்1,பக்கம் 33,34.

மேற்கூறிய அஷ்ரப் அலி தானவியுடைய கூற்றைப் பற்றி குறிப்பிட்டு மௌல்வி இல்யாஸ் 'அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலுல்லாஹ்' என்று சொல்வதிலும் இதே பேச்சுத்தான். அதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஹாளிர், நாளிர் என்ற நம்பிக் கொண்டோ அல்லது பித்அத்துக்காரர்களுக்கு ஒப்பாகிற விதமாகவோ இருந்தால் அது விலக்கப்பட்டதாகும் என்று கூறுவதாக 'மக்தூபாத்' என்னும் நூலின் 90ம் பக்கத்தில் காணப்படுகிறது. வஹ்ஹாபியாக் கூட்டத்தை உருவாக்கிய இப்னு அப்துல் வஹ்ஹாப் கூறியதைப் போன்று மௌல்வி இல்யாசும் பித்அத்துக்காரர்கள் என்று சுன்னத் வல் ஜமாஅத்துக்காரர்களைக் குறிப்பிடுகிறார். இவற்றின் மூலம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைப்பது பற்றிய கொள்கையிலும், அவர்களை அற்பமாக்கிக் காட்டும் முயற்சியிலும் இந்தவஹ்ஹாபிகளுக்கிடையே கருத்து ஒற்றுமை நிலவுவதை விளங்க முடிகிறது.

நுபுவ்வத் (நபித்துவம்) நமதுநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு முடிவடைந்து விடவில்லை என்பது இந்த வஹ்ஹாபிக் கூட்டத்தார்களின் கொள்கைகளில் ஒன்றாகும். மௌல்வி இல்யாசின் ஆசிரியரான தேவ்பந்து மத்ரஸா ஸ்தாபகர் மௌல்வி காசிம் நானூத்தவி என்பவர் நுபுவ்வத் பற்றி கூறும் கருத்தையும் கவனிப்போம்.

'சாமானிய ஜனங்களின் அபிப்பிராயத்தில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு பொருள் அவர்கள் இறுதி நபியாக இருக்கும். அவர்களுக்குப் பின்பு வேறு நபி இல்லை என்பதாகும். ஆனால் காலத்தில் முந்துவதிலோ, பிந்துவதிலோ தனி விசேஷமில்லை என்பது புத்திமான்களுக்கு விளங்கும்.' -தஹ்தீருன்னாஸ் பக்கம் 13.

இவ்வாறு நபித்துவம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் முடிவடைந்து விடுவதில்லை. காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு இறுதி நபி என்று பொருள் கொள்வது மடையர்களின் கொள்ளை என்ற கொள்கை இருப்பதால்தான் வஹ்ஹாபியத் தலைவர்களும் தம்மைத்தாமே நபி என்று மிக லாவகமாகத் தெரிவிக்கின்றனர்.

வஹ்ஹாபிகளின் இரண்டாவது தலைவரான கங்கோஹி, 'இக்காலத்தில் நேர்வழியும், ஈடேற்றமும் என்னைப் பின்பற்றுவதிலேயே தரிபட்டிருக்கிறது' என்று நபிமார்கள் கூறுவதற்கு மட்டுமே தகுதி வாய்ந்த வார்த்தைகளைக் கூறுவதால் நானும் ஒரு நபி என சுட்டிக் காட்டுகிறார் என்பதை முன்பே நாம் கண்டோம்.

இனி மௌலவி இல்யாசின் மூன்றாவது குருவான அஷ்ரப் அலி தானவி தானும் ஒரு ரஸூல் என்பதாக விளம்பரப்படுத்திக் கொண்டதைக் காண்போம். இந்த தானவியின் முரீதுகளில் ஒருவர் கனவிலும், விழிப்பிலும் 'லாஇலாஹ இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரஸூலுல்லாஹ். அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா வ மௌலானா அஷ்ரப் அலி' என்று ஓதினார். (நவூதுபில்லாஹ்)

இதுவிஷயம் முரீதுவால் ஷெய்கான அஷ்ரப்அலி தானவிக்கு அறிவிக்கப்படவும், அவர் இந்த சமபவத்தில் நன்மாராயம் இருக்கிறது. நீர் எவர் பக்கம் மீளுகிறீரோ அவர் (தானவி) அல்லாஹ் உதவியால் மார்க்கத்தை தொடர்ந்தவராகும் என்று மாத்திரம் எழுதி  சீடரின் கொள்கையை சரி கண்டு ஒப்புக் கொண்டார். இச்செய்தி தானவியின் பிறப்பிடமாகிய தானாப்பூரிலிருந்து வெளிவந்த அல் இம்தாத் என்னும் பத்திரிகையின் ஹிஜ்ரி 1336 ஸபர் மாத இதழ் 35ம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அஷ்ரப் அலி தானவி நானும்ஒரு நபி, ரஸூல் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக மௌலானா அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல் அலீம் சித்தீகில் காதிரி அவர்கள் இந்த அஷ்ரப் அலியை காபிர் என பத்வா கொடுத்து பர்ரத் மின் கஸ்வரா என்ற நூல் வெளியாக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி மௌல்வி இல்யாஸ் கூறுவதைக் கவனிப்போம்.

'ஒரு சமயம் இல்யாஸ் சொன்னார்கள்: இந்த தப்லீக்கின் முறையும் கூட எனக்கு கனவில் வெளியாயிற்று. அல்லாஹ்வின் திருவசனமாகிய குன்தும் கைர உம்மத்தின் உஹ்ரிஜத் என்ற வேத வாக்கியத்தின் வியாக்கியானமும் பின்வருமாறு அறிவிக்கப்பட்டது. அதாவது நீங்கள் நபிமார்களைப் போன்றவர்கள். ஜனங்களுக்காக வெளியாக்கபட்டிருக்கிறீர்கள்.' – மல்பூஜாத் பக்கம் 40.

நாயகம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அருமைத் தோழர்களான சகாபாக்களோ,  அல்லாஹ்வுடைய நேசர்களான வலியுல்லாஹ்க்களோ, மார்க்க மேதைகளோ, இமாம்களோ யாரும் தங்களை நபிமார்களைப் போன்றவர்கள் என்று கூறிக் கொண்டதில்லை. கங்கோஹி, தானவி, இல்யாஸ் ஆகியோர்கள் இவ்வாறு நுபுவ்வத்தில் பங்கு கொள்ள துணிந்ததன் காரணம், இவர்களெல்லாம் வஹ்ஹாபிக் கூட்டத்தை உருவாக்கிய இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுவதுதான். அந்த நஜ்தி கூறியதை மக்கா முப்தி தெஹ்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் 'அத்துரருஸ்ஸனிய்யா' என்ற நூலின் 29வது பக்கத்தில் காணலாம். அதாவது:

'இன்றையிலிருந்து 600 வருடங்கள் வரையிலுமுள்ள முஸ்லிம்களெல்லாம் முஷ்ரிக்குகள், காபிhக்ள் என்று நீவிர் கூறும். உன்னுடைய மார்க்கம் முன்னோர்களுடன் தொடர்பில்லாதிருக்கிறது. நீவிர் இதனை எவரிடமிருந்து எடுத்தீர் என ஒருவர் வினவ், ஹிழ்ரு நபிக்கு கிடைத்தது போன்று எனக்கு இல்ஹாமிய்யான வஹிய்யு கொண்டு கிடைத்தது என பதிலளிக்கிறார்'

மௌல்வி இல்யாஸ் ஹதீதுக்களை கற்ற மௌல்வி மஹ்மூது ஹஸன் தேவ்பந்தியின் துடுக்கான வார்த்தைகளும் இல்யாஸின் பாடத் தோழர்கள் அப்துல் ஷுகூர் காக்கூரவி, மௌல்வி ஹுஸேன் அலி ஆகியோர் கூறிய வார்த்தைகளும் உண்மை முஃமின்களுடைய உள்ளத்தை உலுக்கி விடும். விளைவை அஞ்சிட வேண்டியதிருக்கிறது.

வஹ்ஹாபிக் கூட்டத்தை உருவாக்கிய இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி, இந்தியாவில் வஹ்ஹாபியத்தை புகுத்திய இஸ்லமாயில்  திஹ்லவி, தப்லீக் ஸ்தாபகர் இல்யாஸின் குருமார்களான ரஷீத் அஹ்மது கங்கோஹி, கலீல் அஹ்மது அம்பேட்டி, அஷ்ரப் அலி தானவி ஆகியோருடைய சுன்னத் வல் ஜமாஅத்துக்குப் புறம்பான கொள்கைகளையும், அந்த கொள்கைகளைNயு மௌல்வி இல்யாஸ் ஏற்றுக் கொண்டுள்ளதையும், அவர்களுக்கும் இல்யாசுக்கும் உள்ள தொடர்பினையும் ஓரளவு ஆராய்ந்தோம். வஹ்ஹாபிகளைக் குருவாக ஏற்று, அதன்படி செயல்பட்ட, வஹ்ஹாபியத்தின் முத்திரை வைக்கப்பட்ட மௌல்வி இல்யாஸ் கடைந்தெடுத்த வஹ்ஹாபி என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம்.

ஓர் இயக்கத்தின் ஸ்தாபகரின் கொள்கை அவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்துக்கு ஆன்மாவைப் போன்றதாகும். ஏனெனில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிற கொள்கைகளே அந்த இயக்கத்தின் கொள்கைகளாக பிரதிபலிக்கின்றன. மௌல்வி இல்யாஸ் சுன்னத் வல் ஜமாஅத்துக்கு புறம்பான வஹ்ஹாபி கொள்கையுடையவர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கிக் கொண்டோம். தப்லீக் ஜமாஅத் மக்களை தொழுகைக்கு அழைக்கும் இயக்கமாக தெரிந்தாலும் தங்களின் வஹ்ஹாபிக் கொள்கைகளை பரப்புவதற்காகத்தான் மௌல்வி இல்யாஸ் இந்த தப்லீக் ஜமாஅத்தை துவக்கி மக்களிடையே நடத்தி வருகிறார்.

மௌல்வி இல்யாஸ் கூறி இருப்பதைக் கவனிப்போம்:- 'ஒரு சமயம் இல்யாஸ் அவர்கள் சொன்னார்கள்: ஹஜ்ரத் தானவி (ரஹ்) அவர்கள் பெரும் வேலை செய்திருக்கிறார்கள். ஆகவே, என் மனம் விரும்புகிறது, போதனை அவர்களுடையதாகவும் தப்லீக்கின் முறை என்னுடையதாகவும் இருக்க வேண்டுமென்று.இவ்விதமாக அவர்களுடைய போதனை எங்கும் பிரஸ்தாபமாக வேண்டும்.'- மல்பூஜாத் பக்கம் 47.

அதாவது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை சிறுமையாக்கிக் காட்டி பல இழிமொழிகளைக் கூறி வசைபாடியதுடன் தானும் ஒரு ரஸூல் என்று சொல்லிக் கொண்ட அஷ்ரப் அலி தானவியை, 'எனது உயிரிலும் உடலிலும் குடிகொண்டு விட்டவர்' (மௌலானா இல்யாஸ், பக்கம் 49) என போற்றும் அந்த தானவியுடைய கொள்கைகளைப் பரப்புவதற்காகவே இந்த தப்லீகு இகயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை.

அவருடைய வஹ்ஹாபியக் கொள்கைகளைப் புகுத்த முதலில் மக்களிடையே தங்கள்பால் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு மறைமுகமாக தப்லீக் வேலையை செய்துவர வேண்டும் என்று பின்வருமாறு உபதேசிக்கிறார்:-

'எப்படியானாலும் பிரசங்கங்களிலோ, எழுத்துக்களிலோ, சந்தேகத்திற்குரிய வார்த்தைகள் வரக் கூடாது. மேலும் தீய எண்ணமும் தப்பபிப்பிராயமும் வளரக் கூடிய கொள்கைகளையும் வெளிப்படுத்தக் கூடாது.' -மக்தூபாத் பக்143.

நம் நான்கு மத்ஹபுகளிலும் ஷாபஈ என்னும் மார்க்க அனுஷ்டான சட்டதிட்டங்களிலோ அகீதா என்னும் மார்க்கத்தின் கொள்கைகளிலோ எவ்வித ஒளிவு மறைவுமின்றி நாம் போதித்தும் கடைப்பிடித்தும் வருகிறோம். இங்ஙனமிருக்க தீய எண்ணமும், தப்பபிப்பிராயமும் வளரக் கூடிய கொள்கைகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்? அதை ஏன் வெளிப்படுத்தக் கூடாது? என்று போதிக்கிறார் என்பதை விழிப்புடன் ஆழமாக சிந்திக்க வேண்டும். அவர் எழுதியுள்ள இந்த வார்த்தைகளிலிருந்து, 'தப்லீக் சீடர்களே! நீங்கள் நம்முடைய வஹ்ஹாபிக் கொள்கைகளை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்திவிட்டால் பொதுமக்கள் சந்தேகங் கொண்டு நம்முடைய உண்மை நிலை வெளிப்பட்டு வஹ்ஹாபியத்தின் கோட்டை ஆட்டம் கண்டு விடும். ஆகவே தப்லீக் ஜமாஅத், தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் எனவும் காட்டிக் கொண்டு மக்களிடையே நன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டபின் சன்னஞ்சன்னமாக நம் வஹ்ஹாபியக் கொள்கையை புகுத்திக் கொள்ளலாம்' என மௌல்வி இல்யாஸ் திட்டமிடுகிறார் என்பது தெளிவு. இப்படி தீய எண்ணங்கொண்டு செயல்பட்டு வரும் இத்தகைய கூட்டத்தாரிடம் மிகவும் விழிப்புடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நம்மிடம் நெருங்கவும் விடக் கூடாது.

மௌல்வி இல்யாஸ் வஹ்ஹாபியக் கொள்கையை பரப்புவதற்காகவே தப்லீக் ஜமாஅத்தை துவக்கி வைத்தார் என்பதைக் கண்டோம். இனி அவர் ஏற்படுத்திக் கொண்ட ஆறு அடிப்படைத் திட்டங்களில் எவ்வாறு வஹ்ஹாபியக் கொள்கைகள் பிரதிபலிக்கின்றன என்பதை ஆராய்வோம். அந்த ஆறு திட்டங்களையும் மேற்போக்காக பார்க்கும் போது நல்லதோர் திட்டமாக தெரிந்தாலும், தீர ஆராய்வோமானால் எத்தகைய தீய எண்ணத்தோடு இத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகும்.

இல்யாசுடைய ஆறு அடிப்படைத் திட்டத்தில் 1. கலிமா 2. தொழுகை 3. திக்ரு 4. இக்ராமுல் முஸ்லிமீன் 5. இக்லாஸ் 6. நேரம் ஒதுக்குதல் என்பவை அடங்கும். இவற்றில் கலிமாவும் தொழுகையும் பர்ளு ஐன் எனப்படும்- தனிநபர் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். ஏனைய நான்கும் பர்ளுஐன் என்ற வரையறைக்கு உட்பட்டதல்ல. நம் நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் வழிவழியாய் வந்த அனைத்து இமாம்களும் எவை எவை பர்ளு ஐன், பர்ளு கிபாயா, வாஜிபு, சுன்னத், முஸ்தஹப்பு, மக்ரூஹ், ஹராம், ஹலால் என்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவைகள் ஒன்றோடொன்று கலந்து விடாத வகையிலும், ஒன்றை மற்றொன்றை விட்டும் பிரித்து விளங்குவதற்கு தெளிவான விளக்கவுரைகள் செய்தும், மார்க்க நடைமுறை சட்டதிட்டங்களையும், அகீதா என்னும் மார்க்க கொள்கைகளையும் வகுத்துத் தந்திருக்கிறார்கள். ஆனால் இல்யாஸோ பர்ளுஐனில் சிலவற்றையும், பர்ளு ஐன் அல்லாத சிலவற்றையும் ஒன்று சேர்த்து அடிப்படைத் திட்டம் என்று வரையறுத்திருக்கிறார். 

மேலும் கலிமாவை உள்ளத்தால் உணர்ந்து, நாவால் மொழிந்து ஒருவரோ பலரோ இஸ்லாமியக் கோட்டைக்குள் புகுந்து விட்ட பின் போதிக்கப்படும் போதனைக்கு வஃலு, நசீஹத்து, பயான் என்றும், ஆரம்பப் பாடபோதனைக்கு தஃலிம் என்றும், குர்ஆன் ஷரீப், ஹதீது, பிக்ஹ் போன்ற உயர் கல்வி போதனைக்கு தத்ரீஸ் என்றும், நம் இமாம்கள் பரிபாஷை அமைத்துத் தந்திருக்கிறார்கள். இவ்வாறிருக்க மௌல்வி இல்யாஸ் அவர்களோ காபிர்களுக்கு மத்தியிலும் மார்க்கப் பிரச்சாரம் செய்வதைக் குறிக்கும் 'தப்லீக்' என்ற வார்த்தையை முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் பயன்படுத்துகிறார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிற சமூகத்தவர்களுக்கு மத்தியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வது, தப்லீக் ஜமாஅத்துடைய கொள்கை அல்ல என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது.

இல்யாஸ் சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களை எல்லாம் முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள்) என்று கருதுபவர் என்பதை முன்பு கண்டோம். ஆகவேதான் அவருடைய அடிப்படைப் பாடத் திட்டத்தில் முதலாவதாக கலிமாவை வைத்து தப்லீக் வேலைக்கு உயிர் நாடியாக அவர்கள் கூறும் கஷ்த் என்னும் ஊர்வலம் வருகையில் எதிர்படும் முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய மஜ்லிஸுகளில் கலந்து கொள்பவர்களுக்கும் கலிமாச் சொல்லிக் கொடுக்க ஏவியிருக்கிறார் என்ற உள்நோக்கம் தெளிவாகிறது.

மௌல்வி இல்யாஸ் அமைத்துக் கொண்ட இரண்டாவது திட்டமான தொழுகையும் நம் இமாம்கள் வகுத்துத் தந்த ஷரஈ, அகீதாக்களுக்கும் புறம்பானதாக இருக்கிறது. ஏனெனில் முன்னால் கூறப்பட்டது போல இல்யாசும் அவருடைய குருமார்களும் வகுத்துக் கொண்ட கொள்கைப்படி தொழுகையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைப்பு வருவது, தன் மனைவியிடம் போகம் செய்யும் நினைவு வருவதை விடவும், தனது ஆடு, கழுதையின் நினைவு வருவதைவிடவும் கெட்டதாகும்.

திக்ரு- மூன்றாவது அடிப்படைத்திட்டம்:- சுன்னத் ஜமாஅத்தின் கொள்கையின்படி ஒருவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஞாபகத்திலேயே மூழ்கி (ஆஷிக்கே ரஸூலாகி) இருப்பது வரவேற்கத் தக்க நிலையாகும். இந்தக் கொள்கைக்கு மாற்றமாக அல்லாஹ்வைத் தவிர ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட யாரையும் நினைவுக்கு கொண்டு வருவது ஷிர்க்கு என்பது அவர்களுடைய கொள்கையாகும் என்று முன்பே கண்டோம். அதன்படி அல்லாஹ்வை மட்டுமே நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுன்னத்தைச் சார்ந்த அமலாகிய திக்ரை பர்ளுஐனாக (அடிப்படைத் திட்டமாக) சேர்த்திருக்கிறார்.

இக்ராமுல் முஸ்லிமீன்- நான்காவது அடிப்படைத் திட்டம்:-ஈருலப இரட்சகர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகத்திலேயே முதல் தர அந்தஸ்து கொடுக்கப்பட்டவர்கள். அவர்களின் மேன்மைக்கு வேறு யாரும் சமமாக மாட்டார்கள். அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் சகல ஞானத்திற்கும் நிகராக வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களுடைய உம்மத்துக்கள் அனைவருக்கும் தந்தையின் அந்தஸ்த்தை வகிக்கிறார்கள் என்பதும் நம் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை.

இக்ராமுல் முஸ்லிமீன் என்பதற்கு முஸ்லிம்களுக்கிடையில் மரியாதை செய்தல் என்பது பொருளாகும். அதாவது இஸ்லாமிய சகோதரத்துவத்தைக் குறிக்கிறது. இக்ராமுல் முஸ்லிமீன் என்ற சகோதரத்துவம் அதபு என்னும் ஒழுக்கப் பயன்பாட்டைச் சேர்ந்தது. பர்லு, வாஜிபு என்ற வரையறைக்கு உட்படாத இதை பர்ளு ஐனாக (அடிப்படைத் திட்டமாக) இல்யாஸ் சேர்த்திருக்கிறார். இதற்கு காரணம் முஸ்லிம்களுக்கிடையில் வலியோ, நபியோ, ரஸூலோ அனைவரும் சம அந்தஸ்த்தும், சம மரியாதையும் கொடுக்கத்தக்கவர்கள் என்பதும், அவ்வாறு தனி அந்தஸ்த்து கொடுப்பது ஷிர்க்கு ஆகும் என்பதும் அவருடைய கொள்கையாகும். எனவேதான் இக்ராமுல் முஸ்லிமீன் என்பதை பர்ளுஐனாக (அடிப்படைத் திட்டமாக) சேர்த்திருக்கிறார்.

இக்லாஸ்-ஐந்தாவது அடிப்படைத் திட்டம்:- இக்லாஸ் என்பது முகஸ்துதியான எண்ணம் வருவதை விட்டும், பிறர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வருவதை விட்டும் நீங்கி இருப்பதாகும். வஹ்ஹாபிகளின் கொள்கைப்படி பிறரைக் கூட்டாக்குவதை விட்டும் தூய்மையாக்குவதும், பிறரிடம் எந்த ஆதரவையும் உதவியையும் தேடுவதை விட்டும் நீங்கி இருப்பதும் ஆகும். அதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு ஷாபஅத் செய்வார்கள். அவர்களை உதவிக்கு அழைத்தால் அவர்கள் பொருட்டால் உதவி கிடைக்கும். அவர்களைப் புகழ்பாடுவதால் பல நன்மைகளை அடையலாம் என்ற நம்பிக்கை கொள்வது, அவர்களுடைய கொள்கைப்படி ஷிர்க்காகும். ஆகவேதான் எந்த வலியிடத்திலும், எந்த நபியிடத்திலும் ரஸூலிடத்திலும் ஆதரவையும், உதவியையும் நாடாமல் மனதை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கெட்ட கொள்கையை புகுத்துவதற்காகவே இக்லாஸ் என்பதை பர்ளு ஐனாக (அடிப்படைத் திட்டமாக) சேர்த்திருக்கிறார்.

ஆறாவது திட்டமான நேரம் ஒதுக்குவது என்பதை எந்த நோக்கத்தில் சேர்த்திருக்கிறார் என்ற உண்மையை மல்பூஜாத்தில் அவருடைய வார்த்தைகள் நிரூபிக்கின்றன. 'சில நாள் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போது  என் விருப்பத்தை விளங்கிக் கொள்வீர்கள். தூரத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடியாது. நீங்கள் தப்லீக்கில் பங்கு எடுத்துக் கொள்கிறீர்கள். கூட்டங்களில் பிரசங்கம் செய்கிறீர்கள். உங்களுடைய பிரசங்கத்தினால் நற்பயனும் ஏற்படுகிறது என்பதை நான் அறிகிறேன். ஆனால் இந்த தப்லீக் நான் எதை விரும்புகிறேனோ அதுவல்ல' என்று மல்பூஜாத்தில் பல இடங்களில் வலியுறுத்துகிறார். அவர் விரும்பும் அம்மறைமுகமாக நோக்கம் என்ன என்பதை முன்பு அவருடைய கொள்கை விளக்கத்தில் கண்டோம். வஹ்ஹாபிக்கொள்கைகளை உள்ளடக்கிய இயக்கமாய் இருப்பதால் தப்லீக்கில் வேலை செய்வதாலோ, பயானை கேட்பதாலோ அந்த உள் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியாது என்பதால் வாழ்வில் ஒருமுறையாவது டில்லிக்கு விஜயம் செய்து, அவருடைய பயிற்சியில் இருக்கக் கூறுகிறார். ஆகவேதான் நேரம் ஒதுக்குவது என்பதை அடிப்பதை; திட்டத்தில் சேர்த்திருக்கிறார்.

நம் இமாம்கள் செய்திராத புதிய முறையிலும், புதிய கொள்கைகளையும் கொண்ட இத்தகைய கூட்டத்தாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நமது நபிகள் நாயகம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த கூட்டம் தோன்றுவதற்கு 1300 வருடங்களுக்கு முன்பே கூறிச் சென்றார்கள்.

'கடைசி காலத்தில் பொய்யர்களும், ஏமாற்றுக் காரர்களும் வருவார்கள். நீங்களும் உங்கள் மூதாதையர்களும் கேட்டிராத செய்திகளையெல்லாம் உங்களிடம் கொண்டு வருவார்கள். முஸ்லிம்களே! நீங்கள் அவர்களை விட்டும் தூராகி விடுங்கள். அவர்களை உங்களிடத்தில் வரவிடாதீர்கள். இப்படி இருப்பீர்களேயானால் அவர்கள் உங்களை வழிகெடுக்கவோ, குழப்பத்தில் சிக்கவைக்கவோ முடியாது. (ராவி: அபூஹுரைரா நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீதில் 1. ஏமாற்றுக் காரர்கள் 2. பொய்யர்கள் 3. நாமும் மூதாதைகளும் கேட்டிராத செய்திகளைக் கூறும் புதுமைக் கூற்றர்கள் ஆகிய மூன்று வித அம்சங்கள் இருக்கின்றன. இந்த அம்சங்களனைத்தும் வஹ்ஹாபியான இல்யாசுடைய தப்லீக் ஜமாஅத்திற்கே நன்றாகப் பொருந்துகிறது.

வஹ்ஹாபியக் கொள்கைகளை பரப்பும் கெட்ட நோக்கத்தை உள்ளடக்கி வெளித் தோற்றத்தில் தொழுகைக்கு அழைக்கும் மார்க்கப்பிரச்சார இயக்கமாக காட்டிக் கொள்ளும் ஏமாற்றுக் காரர்களாய் இருக்கிறார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மௌத்தாகி மண்ணோடு மண்ணாகிப் போகக் கூடியவர்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக கற்பனையாக ஹதீது உருவாக்கியும், அவர்கள் ஒவ்வொருவர்களும் நான்னும் ஒரு நபி என்றும் கூறும் பொய்யர்கள்.

திக்ரு, இக்ராமுல் முஸ்லிமீன், இக்லாஸ் இவைகளை பர்ளுஐனான தொழுகை, கலிமாவோடு இணைத்துக் காட்டியோ கலிமா தொழுகையை படித்துக் கொடுப்பதை அலிப், பே, தே என்ற ஆரம்ப அரிச்சுவடிக்கு ஒப்பிட்டோ, மார்க்க உபதேசத்தின் மூலம் தொழுகைக்கு அழைப்பது நோக்கமல்ல என்றோ நம் முன்னோர் யாரும் கூறிடாத செய்தியைக் கூறும் புதுமைக் கூற்றர்கள்.

ஆகவே இந்த ஹதீது அறிவுறுத்துவது போன்று இந்த வழிகெட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்தை நம்மிடம் நெருங்க விடாது  அவர்களை விட்டு விலகி இருந்து கொள்ள வேண்டியது நம் அனைவர் மீதும் கடமையாகும்.

எனவேதான் சங்கைமிக்க நம் உலமாக்கள் தப்லீக் ஜமாஅத்தார்கள் வழிகெட்ட கூட்டத்தார்கள் என்றும், அவர்களுடன் சேரக்கூடாது என்றும் மார்க்கத் தீர்ப்பு செய்து பத்வா கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் சில பின்வருமாறு:- 1. அல் அதாபுல் பஹஸ் அலா ரஃஸி இல்யாஸ் -இல்யாஸ் தலைக்கு கொடிய வேதனை என்ற பெயரில் முப்தி முஹம்மது மஹபூப் அலிகான் சாஹிப் காதிரி லக்னவி அவர்களால் வழங்கப்பட்டு சங்கைமிக்க 45 வட இந்திய உலமாக்களின் கையொப்பத்துடன் ஹிஜ்ரி 1372ல் வெளியிடப்பட்டுள்ளது. இதை ஹிஜ்ரி 1379 ஈஸவி 1960-ல் மௌலானா மௌல்வி பாஸீல் செய்கு அப்துல் காதிர் ஆலிம் சூபி சித்தீகி அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

2. கேரளாவைச் சார்ந்த கள்ளிக்கோட்டையிலுள்ள சமஸ்த கேரளா ஜம்இய்யத்துல் உலமா பத்வா கமிட்டியாரால் 29-8-65 ல் இந்த தப்லீக் கூட்டத்தார் வழி கெட்டவர்கள். நம் சுன்னத் வல் ஜமாஅத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3.மதராஸ் காஜி அல்லாமா முப்தி முஹம்மது ஹபீபுல்லாஹ் அவர்கள் ஈஸவி 1970ல் இந்த தப்லீக் கூட்டத்தார் வழி கெட்டவர்கள் எனவும் அவர்களுடைய மஜ்லிசுகளில் அமரக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

4. உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த அல்லாமா முப்தி செய்யிது ஷாஹ் மழ்ஹர் ரப்பானி அவர்கள் 'தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன? (தப்லீக் ஜமாஅத் கியாறை) என்ற பெயரில் நான்கு பாகங்களைக் கொண்ட பத்வா வெளியிட்டு சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களையெல்லாம் அதைவிட்டும் விலகி இருக்க வேண்டும் என்று தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.

5. மேலே கூறப்பட்ட ரஷீது அஹ்மது கங்கோஹி, கலீல் அஹ்மது அம்பேட்டி, அஷ்ரப் அலி தானவி ஆகியவர்கள் காபிர்கள், முர்தத்துகள் என்று மக்கா, மதீனாவிலுள்ள கண்ணியமிக்க 35 உலமாக்களால் ஹிஜ்ரி 1328ல் 'ஹுஸாமுல் ஹரமைன்' என்ற பெயரில் பத்வா கொடுக்கபட்டிருக்கிறது.

6. ஈஸவி 1956ல் தென்னகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாகத்தின் தலைமைப் பேராசிரியராய் இருந்த (மர்ஹும்) அல்லாமா முப்தி ஷெய்கு ஆதம் ஹஜ்ரத் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தின் திட்டங்கள் மார்க்கத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

7. வேலூர் மத்ரஸாவில் தலைமைப் பேராசிரியராக பணியாற்றியவர்களும், காயல்பட்டினம் மத்ரஸா மஹ்லறத்துல் காதிரிய்யாவில் தலைமை பேராசிரியராக பணியாற்றியவர்களுமான அல்லாமா முப்தி முஹம்மது அபூபக்கர் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் கொடுத்த மார்க்கத் தீர்ப்பில் பல ஆதாரங்களைக் காட்டி தெளிவாக்கியபின் இறுதியாக கூறியுள்ள பத்வாவின் வாசகம் பின்வருமாறு:-

'இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி தன்னுடைய கொள்கையைத் தவிர மற்ற நான்கு மத்ஹபுகளைச் சேர்ந்தவர்களையும் முஷ்ரிக்கு, காபிர்கள் என்றெல்லாம் அவர் தம் கிரந்தங்களில் கூறியிருக்கிறார்.

அந்த வஹ்ஹாபியாக்களின் கொள்கையை மறைமுகமாக கலிமா, தொழுகை என்னும் அழகிய போர்வையைப் போர்த்திக் கொண்டு தப்லீக் கட்சியினர் தோன்றியிருக்கிறார்கள். இவர்கள் தங்களல்லாத நான்கு மத்ஹபுகளைச் சேர்ந்தவர்களும் முஷ்ரிக்குகளாக ஆகிவிட்டதால் அந்த நான்கு மத்ஹபினருக்கு கலிமா சொல்லிக் கொடுக்க வேண்டும் . இவர்களை நாம் முதலில் இஸ்லாம் ஆக்க வேண்டும் என்ற கெட்ட அகீதாக்களை வைத்துக் கொண்டு இவ்விதத் தோற்றத்தில் தோன்றியிருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…………..மேலும் தற்காலத்திய தப்லீக் கட்சியினரின் கலிமா தொழுகையைக் கண்டு நாம் ஏமாந்து விடக் கூடாது. ……………. தப்லீக் கட்சி வழிகெட்ட கட்சி என்பதில் சந்தேகமில்லைஃ அதில் கண்டிப்பாக சேரக்கூடாது.'

அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் இருலோக ரட்சகர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தை பின்பற்றி பாதுகாத்து வரும் சுன்னத் வல் ஜமாஅத்துடைய உண்மையான உம்மத்துக்களாக ஆக்கி வைத்து அவர்களுடைய ஷபாஅத்திற்கு அருகதையாக்கி வைப்பானாக. ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

 மௌல்வி எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி,

  பேஷ் இமாம்,

செய்கோன் ஜாமிஆ மஸ்ஜித்.

11-10-71.

முடிவுரை

'நமது செயலின் பலாபலனை நமது எண்ணத்தின் தராதரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்' என்பது இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவமாகும். ஒருவனின் வெளிப்படையான செயலின் தரம் சிறந்ததாகத் தோன்றினால் மட்டும் போதாது. அதற்கான உள்நோக்கமும் சிறந்ததாக இருக்க வேண்டும். இஸ்லாத்திற்கும் ஏனைய சமூகத்திற்கும் உள்ள பிரதானமான வித்தியாசமே இதுதான். குர்ஆன் இதைத் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது.

முஸ்லிம்களின் அன்றாடக் கடமைகளில் தொழுகை முக்கியமானதாகும். இந்தத் தொழுகைக்கு அழைப்பது மட்டுமே தப்லீக்கின் நோக்கமாக இருந்தால் அது புனிதமான இயக்கம் தான்.  ஆனால் இந்த இயக்கத்தின் மூலம் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களை கவர்ந்து, அந்தக் கவர்ச்சியின் முடிவில் அவர்களை வஹ்ஹாபியத்தின் கொள்கைகளை ஏற்கச் செய்வதுதான் தப்லீக் இயக்கத் தலைவர்களின் உள்நோக்கமாக இருக்கிறது என்பதற்குத் தேவையான ஆதாரங்களை இந்நூல் தெளிவுபடுத்திவிட்டது. இதன் பிறகும் தப்லீக் இயக்கம் நமது முஸ்லிம்களுக்கு-அதாவது சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு அவசியம்தானா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

அதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியிலாவது முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். நமது மார்க்க அறிஞர்கள், இது சம்பந்தமாக விவாதித்து, உண்மை நிலையை முஸ்லிம் பொதுமக்களுக்கு விளக்கக் கடமைப் பட்டுள்ளனர். தவறான நம்பிக்கை கொள்வதிலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பது அவசியமும் அவசரமும் ஆகும். இந்த நன்னோக்கத்தின் தூண்டுதலினாலேயே இச்சிறு பிரசுரத்தை வெளியிட்டுள்ளோமென்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உண்மை உதயமானபின் பொய்மை அஸ்தமித்தே தீரும் என்று நம்பிக்கையும வைக்கிறோம்.

வெளியீடு:

J.M. ரஹ்மத்துல்லாஹ், B.A.

கூத்தாநல்லூர்.

10-06-72