இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன?-Qathmul Quran to Zanaza

இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன?-Qathmul Quran to Zanaza

By Sufi Manzil 0 Comment May 11, 2011

Print Friendly, PDF & Email

இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன?

மௌலவி அ. முஹம்மது ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பஈ, பாழில் பாகவி அவர்கள்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

எல்லாப்புகழும் புகழ்ச்சியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் எம் ஈருலக ஸர்தார் எம்பிரான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களாகிய அஹ்லுபைத்துகள் என்ற ஸாதாத்துமார்கள் மீதும் இன்னும் அவர்களின் சத்திய சஹாபா பெருமக்கள் மீதும் வாஞ்சை மிகு வலிமார்கள், நாதாக்கள், நல்லோர்கள், வல்லோர்கள் எல்லோர்களின் மீதும் உண்டாவதாக!

அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்களின் தீர்க்கதரிசனத்தால் பிற்காலத்தில் நடக்கவிருக்கும் விபரீதங்கள் பற்றி தனித்தனியாக முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள். அப்படி சொல்லப்பட்டவைகளில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். அவைகளை நன்றாக விளங்கி மனதில் வைத்துக் கொண்டு அதன்பின் விஷயத்திற்குள் நுழைவது நல்லதென்று நினைக்கிறேன்.

யார் பேரிச்சம் பழச்சக்கைகள்:

முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்தில் வாழ்ந்த நல்லவர்களும் மரணித்து விடுவார்கள்(இப்படியே படிப்படியாக ஸாலிஹீன்கள் (நல்லவர்கள்) சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகளைப் போன்ற அல்லது பேரீச்சம் பழச்சக்கைகள் போன்ற குப்பைகள் தான் எஞ்சியிருப்பர். (அவர்கள் தங்களைப் பற்றி தாங்களே எல்லாம் அறிந்த மேதைகள் என்று பீற்றிக் கொள்வார்கள்.) ஆனால் அல்லாஹ் அவர்களை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(புகாரி ஷரீப் பாகம் 2 பக்கம் 952 ஹதீது எண் 6434 பாபு தஹாபிஸ் ஸாலிஹீன் கிதாபுர் ரிகாக், மிஷ்காத் பக்கம் 458 ஹதீது எண் 5362 பாபு தஙய்யுரின நாஸி)

ஹதீஸ்கள் வழிகெடுக்குமோ?

மேலும் கடைசி காலத்தில் அறிவுத் தெளிவும் அனுபவ முதிர்ச்சியும் அற்ற ஒரு கூட்டம் வரும். அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மெரியான ஹதீஸிலிருந்தே ஆதாரம் காட்டி பேசுவார்கள். ஆனால் அவர்களின்; ஈமான் (உதட்டளவில்தான் இருக்குமே தவிர) உள்ளத்தில் நுழைந்திருக்காது. மேலும் அவர்கள் புனித இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(புகாரி ஹதீது எண்:3611 கிதாபுல் மனாக்கிப் பாபு அலாமத்தின் நுபுவ்வத்தி, புகாரி ஹதீது எண்: 5057 பாபு இத்மி மன் ராஆ பி கிராஅத்தில் குர்ஆன் கிதாபு பழாஇலில் குர்ஆன், புகாரி ஹதீது எண்: 6930 பாபு கத்லில் கவாரிஜி கிதாபு இஸ்த்திதாபத்தில் முர்த்தத்தீன், முஸ்லிம் பாகம் 1 பக்கம் 342 ஹதீது எண்: 1066-154 பாபுத் தஹ்ரீழி அலா கத்லில் கவாரிஜ் கிதாபுஸ் ஸகாத், அபூதாவூது ஹதீது எண்: 4767 பாபுன் பீ கிதாலில் கவாரிஜ் கிதாபுஸ் ஸுன்னா, இப்னு மாஜா ஹதீது எண்: 168 பாபுன் பீ திக்ரில் கவாரிஜ் அல் முகத்திமா)

முன்னோர்களை சபிக்கலாமா?

மேலும் இந்த உம்மத்தைச் சார்ந்த பிற்காலத்தில் வாழும் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை நிந்திக்க ஆரம்பித்தார்களானால் (கலியுகம் வந்து விட்டதாக பொருள். ஆகவே) கியாமத்து நாளை எதிர்பாருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதி ஹதீது எண்: 2211 பாபு மா ஜாஅ பீ அலாமத்தி ஹூலுலில் மஸ்கி வல் கஸ்பி கிதாபுர் ரிகாக், மிஷ்காத் பக்கம் 470 ஹதீது எண்: 5450 பாபு அஷ்ராத்திஸ் ஸாஅத்தி கிதாபுல் ஃபிதன்)

இப்போது கூறப்பட்ட இம்மூன்று ஹதீஸ்களையும் இதே கருத்தில் வந்துள்ள இன்னும் அநேகமான ஹதீஸ்களையும் வைத்து ஆராய்ந்து பார்த்தோமானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய பிற்;காலம் (கலியுகம்) என்பது வேறு எந்த காலமும் அல்ல. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் காலத்தைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள் என்று திட்டவட்டமாக கூறலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய பெரும்பான்மையான விஷயங்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதை நிதர்சனமாக (கண்கூடாக) காண முடிகிறது. உதாரணமாக புனித ரமலானில் காலம் காலமாக தொழுது வரும் தராவீஹ் தொழுகையை எடுத்துக் கொண்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 8 ரக்அத்துகள் மட்டும் தொழுதுள்ளார்கள் என்றுதான் ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ளது. ஆகவே தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்துகள்தான். 20 அல்ல என்று நம்மில் சிலர் வாதிடுகிறார்கள். நீங்கள் ஆதாரம் காட்டும் ஹதீது தராவீஹ் பற்றி வந்தது அல்ல. மாறாக தஹஜ்ஜுத் பற்றி வந்துள்ளதாகும் என்று கூறினால் இல்லை, இல்லை தராவீஹ் பற்றிதான் வந்துள்ளது என்று மறுத்துக் கூறுகின்றனர். சரி அது இருக்கட்டும் ஸஹாபா பெருமக்கள் 20 ரக்அத்துகள் தொழுதுள்ளதாக ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ளதே. அந்த ஹதீஸ்களை வைத்தாவது தராவீஹ் 20 ரக்அத்துகள் தொழலாம் அல்லவா என்று கேட்டால், ஸஹாபாக்கள் செய்ததை நாம் ஆதாரமாக எடுக்கலாமா? என்று நம்மிடமே எதிர் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் நாம் மீலாது விழா கொண்டாடினாலோ, அல்லது மவ்லிது ஷரீபு ஓதினாலோ ஸஹாபாக்கள் செய்யாததை ஏன் செய்கிறீர்கள் என்று கூறி அவைகளை மறுக்கிறார்கள். அதற்காக ஒரு சில ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் வெளிப்படையாக (மேலோட்டமாக) விளங்கிக் கொண்டு ஆதாரம் காட்டுகிறார்கள். அவர்கள் கூறுகின்ற ஆதாரங்களை நன்றாக ஊன்றிப் பார்த்தால் அவைகளின் எதார்த்தமான விளக்கமும், கருத்தும் ஒன்று இருக்க அவைகளுக்கு இவர்கள் கூறும் கருத்தும் விளக்கமும் வேறொன்றாகவே அமைந்து இருக்கிறது. அப்படி இருந்தும் அவைகளையே தூய வடிவில் இஸ்லாம் என்று கூறி பாமர முஸ்லிம்களை குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் குறிப்பிடும் ஒவ்வொன்றிலும் உண்மை நிலைமை என்ன என்பதை அறிந்து செயல்படுவது நாம் யாவரின் மீதும் கடமையாகி இருக்கிறது. ஆகவே இச்சிறு நூலில் இறந்தவர்களுக்கு கத்தம் ஓதும் விஷயத்தில் அவர்கள் என்னென்ன குறுக்கீடுகள் தெரிவிக்கிறார்கள் என்பதை மொத்தமாக தொகுத்து தந்துவிட்டு அதன் பின் அவைகளில் ஒவ்வொன்றையும் அதற்கான விளக்கங்களையும் தனித்தனியாக குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். உண்மையை உண்மை என்று விளங்கி ஒற்றுமைப்பட முன்னுக்கு வர வேண்டும் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு தஆலா நாம் யாவருக்கும் நல்லருள் பாலிப்பானாக. ஆமீன்.

எதிர்தரப்பு வாதிகளின் குறுக்கீடுகள்:

1. கத்தம் என்ற வார்த்தைக்கும், கத்தம் தமாம் பண்ணுதல் என்ற வார்த்தைக்கும் என்ன பொருள்? மேலும் குர்ஆனை ஓதி முடித்து துஆ ஓதும் சமயத்தில் எல்லோரையும் ஒன்று கூடச்செய்வதற்கு ஆதாரம் ஏதும் உண்டா?

2. ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது இன்றி வேறில்லை. (சூறா அந்றஜ்ம் 19) என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஆகையால் இறந்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நற்காரியங்கள் இறந்தவர்களுக்கு போய் சேராது. அப்படி இருக்க இறந்தவர்களுக்கா கத்தம் ஓதி என்ன பயன்?

3. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படி இருக்க இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது எந்த வகையில் ஆகுமாகும்.

4. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது அவர்களுக்குப் போய் சேராது என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களே தெளிவாக கூறியிருக்கும் போது அவர்களை பின்பற்றுகிறோம் என்று கூறும் மத்ஹபுவாதிகள் தாங்கள் பின்பற்றும் இமாமின் சொல்லை மதிக்காமல் கத்தம் பாத்திஹா ஓதுவது எங்கனம் நியாயமாகும்?

5. மரணித்தவர்களுக்கு குர்ஆன் ஓதி கத்தம் தமாம்(நிறைவு) செய்யும் சமயத்தில் ஓதப்படும் அஸ்மாவுல் ஹுஸ்னாவுக்கும் திக்ரு தஸ்பீஹ் ஸலவாத்துகள் ஓதுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

6. இறந்தவர்களின் பெயரால் உணவு கொடுப்பது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான காரியம். எனவே அந்த உணவை உண்ணுவது ஹராமாகும் அல்லவா?

7. இறந்தவர்களை அடக்கம் செய்த அன்று ஓதப்படுகின்ற முதலாம் கத்தத்திற்கும் அதை தொடர்ந்து 3ம் நாள், 5ம் நாள், 7ம் நாள், 10ம் நாள், 30ம் நாள் 40ம் நாள் ஆகிய தினங்களில் ஓதப்படுகின்ற கத்தங்களுக்கும் வருடக்கத்தம் ஓதுவதற்கும் பராஅத்து என்ற நிஸ்பு ஷஃபான் தினத்தன்று (சில பகுதிகளில்)ரொட்டி சுட்டு வைத்து கத்தம் ஓதுவதற்கும் மார்க்கத்தில் இடமே இல்லை.

8. மய்யித் வீட்டினர் தங்களுடைய குடும்பத்தில் இறந்து விட்டவரை நினைத்து கவலையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்ற காரணத்தால், அவர்களுக்காக பக்கத்து வீட்டார்கள் உணவு சமைத்து கொடுப்பது சுன்னத் என்று அனைத்து மதுஹபு கிதாபுகளிலும் வந்திருக்கும் போது மைய்யித்து வீட்டினரே மற்றவர்களை அழைத்து கத்தம் ஓதுகிறோம் என்ற பெயரில் உணவு கொடுப்பது அவர்கள் பின்பற்றும் மத்ஹபுக்கு மாற்றம் செய்கின்ற செயல் அல்லவா?

9. மைய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா?

10. மைய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் என்ன பலன்?

கத்தம் என்றால் என்ன?

பதில்: 1. கத்தம் என்பது கத்மு என்ற அரபி வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல்லாகும். கத்மு என்பதன் பொருளாகிறது முடித்தல் என்பதாகும். என்றாலும், இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறை அந்த கத்மு என்ற வார்த்தையை குர்ஆன் ஓதிமுடித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றது. மேலும் தமாம் என்ற வார்த்தைக்கு நிறைவு, சம்பூரணம் என்று பொருளாகும். எனவேதான் குர்ஆன் ஷரீபு ஓதி முடிக்கப்பட்டு மார்க்கத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் அதை நிறைவு செய்வதற்கு கத்தம் தமாம் செய்தல் (அதாவது ஓதி முடிக்கப்பட்ட குர்ஆனை நிறைவு செய்தல்) என்று கூறப்படுகிறது.

கத்முல் குர்ஆன் மஜ்லிஸிற்கு ஒன்று கூடுவோமாக…..

1. பிரசித்திப் பெற்ற சஹாபாக்களில் ஒருவரும் பெருமானார் ஸல்லல்'லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பத்தாண்டு காலங்கள் பணிவிடை புரிந்தவர்களும் பல ஹதீஸ்களை ரிவாயத்து செய்தவர்களும் 103 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து 100 பிள்ளைகளை பெற்றவர்களுமான (அல் இக்மால்) ஸய்யிதினா அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஓதி நிறைவு செய்து விட்டால் தனது பிள்ளைகளையும் தனது வீட்டினர்களையும் ஒன்று சேர்த்து அவர்களுக்காக துஆ செய்வார்கள் என்று அபூகத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(தாரமி பாகம் 2 பக்கம் 469 பாபுன் பீ கத்மில் குர்ஆன் கித்தாபு பழாஇலில் குர்ஆன், அத்காருன் நவவி பக்கம் 88 பஸ்லுன் பீ ஆதாபில் கத்மி…. கிதாபு திலாவதில் குர்ஆன்)

2. நாங்கள் குர்ஆன் ஓதி முடித்து விட்டோம். குர்ஆன் ஓதி முடித்து விட்டு செய்யப்படுகின்ற பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கின்றது என்று எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. ஆகவே இந்தப் பிரார்த்தனை வைபவத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறி முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு, அப்தத் இப்னு அபீ லூபாபா ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு சஹாபாக்களும் எனக்கு ஆள் அனுப்பி வைத்திருந்தார்கள் என்று ஹக்கம் இப்னு உத்தைபா ரலியல்லாஹு அன்ஹு  என்ற தாபிஇ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(தாரமி பாகம் 2 பக்கம் 470 பாபுல் பீ கத்மில் குர்ஆனி கிதாபு பழாயிலில் குர்ஆன், அல் அத்கார் பக்கம் 88 பஸ்லுன் பீ ஆதாபில் கத்மி)

3. குர்ஆன் ஓதி கத்மு செய்யப்படுகின்ற இடங்களில் ரஹ்மத் இறங்குகின்றது என்று கூறிக் கொண்டு அவ்விடங்களில் ஸஹாபா பெருமக்கள் ஒன்று சேரக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (அல் அத்கார் பக்கம் 88)

4. குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தவர்கள் ஓதத் தெரியாதவர்கள் ஆக இரு பிரிவினரும் குர்ஆன் கத்மு நடக்கின்ற மஜ்லிஸ்களில் ஆஜராகுவது முஸ்த்தஹ்பாகும். (அல் அத்கார் பக்கம்88)

5. ஒருவர் மஸ்ஜிதுன் நபவியில் குர்ஆன் ஓத ஆரம்பித்தார். இதை கண்ணுற்ற ஸய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர் எப்போது குர்ஆனை ஓதி முடிக்கின்றார் என்பதை தமக்குத் தெரிவிப்பதற்காக ஒரு கண்காணிப்பாளரை நியமித்தார்கள் என்று கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தாரமி பகாம் 2 பக்கம் 468 பாபுன் பீ கத்மில் குர்ஆன் கிதாபு பழாயிலில் குர்ஆன்)

6. எவர் குர்ஆன் ஓத ஆரம்பிக்கும் நேரத்தில் (அங்கு) ஆஜராகிறாரோ அவர் போர்க்களத்தில் பெற்ற வெற்றியில் கலந்து கொண்டவரைப் போன்றவராவார். எவர் குர்ஆனை நிறைவு செய்யும் நேரத்தில் கலந்து கொள்கின்றாரோ அவர் போரில் கிடைத்த ஙனீமத் என்ற வெற்றிப் பொருளை பங்கு பிரிக்கும் நேரத்தில் கலந்து கொண்டவரைப் போன்றவர் என்று அபூ கிலாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. (தாரமி பாகம் 2 பக்கம் 468 பாபுன் பீ கதமில் குர்ஆன் கிதாபு பழாயிலில் குர்ஆன்)

குறிப்பு: எவர் குர்ஆன் ஓதி (முடித்து) விட்டு துஆ இறைஞ்சுகிறாரோ அவரின் துஆவுக்காக நான்காயிரம் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்று ஹுமைதுல் அஃரஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற (தாரமி பாகம் 2 பக்கம் 470 பாபுன் பீ கத்மில் குர்ஆனி கிதாபு பழாயிலில் குர்ஆன், அல் அத்கார் 88) செய்தியும் மேலும் குர்ஆன் ஓதி முடிக்கப்பட்டதின் பின்னால் துஆ ஓதுவது வலுவான முஸ்த்தஹப்பாகும் (அல் அத்கார் பக்கம் 88) என்று வந்துள்ள செய்தியும் இங்கு சிந்திக்கத் தகுந்ததாகும். ஆகவே இதுவரை கூறப்பட்ட விளக்கங்கள் மூலம் கத்முல் குர்ஆன் மஜ்லிஸில் கலந்து அந்த துஆவில் பங்கு பற்றுவது ஒரு பரக்கத்தான காரியமாக இருக்கின்றது என்று அறிந்து கொள்வோமாக!

கேள்வி:- ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது இன்றி வேறில்லை. (சூறா அந்றஜ்ம் 19) என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஆகையால் இறந்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நற்காரியங்கள் இறந்தவர்களுக்கு போய் சேராது. அப்படி இருக்க இறந்தவர்களுக்கா கத்தம் ஓதி என்ன பயன்?

பதில்:-
'ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது அன்றி வேறில்லை' என்று சூரத்து அந்நஜ்மில் வரும் 19வது வசனத்தை மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டு சன்மார்க்கத்தை சரியாக விளங்காத நமது சகோதரர்கள் ஒருவர் செய்த நல்லமலின் பலன் மற்றவர்களுக்கு போய்ச் சேராது என்கின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் அவர்களின் தலைவர்கள் கூறும் கூற்றே சரியானது என்று நம்பி அதிலேயே பிடிவாதமாக இருப்பதாகும். ஆனால் அந்த பிடிவாதத்தை விட்டு விட்டு அரபி இலக்கணத்தை நன்றாக அறிந்து அதன் துணை கொண்டு மேற்படி வசனத்தை பார்த்திருந்தாலோ அல்லது அந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்திருக்கிற ஏனைய வசனங்களின், ஹதீஸ்களின் துணை கொண்டு பார்த்திருந்தாலோ அல்லது அதன் தொடர் வசனங்களின் விளக்கங்களை கவனித்திருந்தாலோ கண்டிப்பாக இப்படிப்பட்ட விபரீதமான முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆகவே அதற்குரிய எதார்த்தமான பொருளை முதலில் கவனிப்போம்.

'வ அன் லைஸ லில் இன்ஸானி'- என்ற வசனத்தின் எதார்த்த விளக்கம்: இந்த ஆயத்தில் இடம் பெற்று இருக்கின்ற 'லில்' இன்ஸான் என்ற வார்த்தையில் உள்ள 'லாம்' என்ற எழுத்து அரபி இலக்கணப்படி சொந்தம், உரிமை என்ற பொருள்களைத் தரக்கூடியதாக இருக்கின்றது என்று அரபி மத்ரஸாக்களில் இரண்டாம் ஜும்ரா (வகுப்பு) ஓதும் மாணவர்கள் கூட நன்கு அறிவார்கள். இதன்படி பார்த்தால் மேற்கூறப்பட்ட வசனத்தின் பொருள், ஒரு மனிதனுக்கு உரிமையானதாக இல்லை அவன் முயற்சித்தது அன்றி என்று அமையும். இதை ஒரு உவமான ரீதியில் கூறுவதென்றால், ஒரு மனிதனுக்கு சொந்தமானதாக ஊதியம் இல்லை அவன் உழைத்தது அன்றி என்று ஆகும். எனவே இந்தக் கருத்தின்படி அவன் உழைத்து கிடைத்த ஊதியம் அவனுக்கு சொந்தமானதாகும். அவன் விரும்பினால் அவனே வைத்துக் கொள்ளலாம். அல்லது அதை மற்றவருக்கு அன்பளிப்புச் செய்ய விரும்பினால் மற்றவருக்கு அதை அன்பளிப்பாகவும் கொடுக்கலாம் என்று தான் பொருள் வரும். அதைப் போன்றே ஒருவன் செய்த நல்ல அமலின் பலனுக்கு அவனே முழு உரிமை பெற்றவனாக ஆகிறான். அவன் விரும்பினால் அவனே அதை வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை அடுத்தவருக்கு அன்பளிப்பு செய்ய விரும்பினால் அன்பளிப்பும் செய்யலாம் என்று பொருள் விரியும். ஆனால் ஒரு மனிதன் தான் செய்த நல்லமலின் பலனை மற்றவருக்கு சேர்ப்பித்தால் அது மற்றவருக்குப் போய் சேராது என்றோ அல்லது ஒருவன் செய்த நல்லமலின் மூலம் மற்றவர் பயன் அடைய முடியாது என்றோ மேற்படி வசனத்திற்கு பொருள் கொள்ள கிஞ்சிற்றும் இடமில்லை. அப்படி இருக்க இறந்தவர்களுக்காக ஓதப்படும் கத்தம் அவர்களை போய் சேராது என்பதற்கு மேற்படி வசனத்தின் (உள்ளார்ந்த விளக்கத்தை விளங்காமல் அதன்) வெளிரங்க விளக்கத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அதை ஆதாரமாக காட்டுவது கொஞ்சம் கூட பொருத்தமானதாக இல்லை என்படி மேற்படி சகோதரர்கள் நன்றாக விளங்கிக் கொள்வார்களாக (கிதாபுர் ரூஹ் அல் மஸாயில் பக்கம் 4)

மேலும் நமது அந்த சகோதரர்கள் கூறுகின்றபடி மேற்கூறப்பட்ட ஆயத்தின் பொருள் ஒருவருக்கு அவர் செய்தது மாத்திரம்தான் கிடைக்கும் மற்றவர்கள் செய்த நல்லமல்களின் பலன் அவருக்குப் போய்ச் சேராது என்று இருக்குமாயின், ஒருவருக்காக மற்றவர் செய்யும் தொழுகை, ஹஜ், தானதருமங்கள், பிழை பொறுக்கத் தேடுதல் போன்ற நல்லமல்கள் அவரைச் சென்றடையும் என்று கூறுகின்ற எண்ணற்ற ஆயத்துக்களுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்து விடும். அத்துடன் இறந்த மய்யித்திற்கு ஜனாஸா தொழுகை தொழ வைதப்பதிலும் ஒரு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும். மேலும் 'பெற்றோர் செய்த நற்செயலால் பிள்ளைகளுக்கு (அவர்களின் எவ்வித உழைப்புமின்றி) (தங்கப்)புதையல் கிடைத்தது' என்று கூறுகின்ற ஸூரத்துல் கஹ்பில் உள்'ள 82வது வசனத்திற்கும், இதுபோன்ற கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்களுக்கும் இடிப்பாக அமைந்து விடும். எனவே தான் முபஸ்ஸிர்கள் என்றதிருமறை விரிவுரையாளர்கள் மேற்படி வசனத்திற்கு அதன் நேரடிப் பொருளைக் கூறாமல் 20 வகையான வலிந்துரை விளக்கவுரைகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். (தப்ஸீர் அல் ஜமல் மேற்படி வசனத்தின் விரிவுரை) அது போன்றே முஹத்திஸ்கள் என்ற ஹதீஸ் கலை நிபுணர்களும் 8 வகையான விளக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 177-புகாரி ஹதீஸ் எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

ஆகவே மேற்படி வசனத்திற்கு அவர்கள் கூறும் விளக்கங்களில் ஒரு சிலவற்றை இப்போது கவனிப்போம்.

1. பிள்ளைகள் செய்த நற்காரியத்தால் பெற்றோர்கள் சுவனம் நுழைவிக்கப்படுகின்றனர் என்ற கருத்தை தருகின்ற அத்தூர் 21 வது வசனத்தின் மூலம் மேற்கூறப்பட்ட வசனம் மன்ஸூக் ஆகும். அதாவது அதை ஓதுவது (குர்ஆனிலிருந்து) நீக்கப்படாவிட்டாலும் அதனது சட்டம் மாற்றப்பட்டதாக இருக்கின்றது என்று அல்குர்ஆன் ஷரீபுக்கு விளக்கவுரை கூறுகின்ற விரிவுரையாளர்களில் தலைமைத்துவம் பெற்றவர்களான ஸய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

( உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 177, புகாரி ஹதீது எண்: 218 ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லாயஸ்தத்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

2. இந்த சட்டம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் சமூகத்தாருக்கு சொந்தமானதாகும். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தாருக்கு அல்ல. நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தைப் பொறுத்தவரை, அவர்கள் செய்ததும் அவர்களுக்கு; கிடைக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் செய்வதும் அவர்களுக்குப் போய்ச் சேரும் என்று ஸய்யிதுனா இக்ரீமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

குறிப்பு: மேற்படி ஆயத்தின் மன்பின் தொடர் வசனங்களைக் கவனித்தால் இப்போது கூறப்பட்ட இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கருத்தின் எதார்த்தம் நன்கு புலப்படும்.

3. இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள மனிதன் என்ற வார்த்தை காபிரான மனிதனைக் குறிப்பிடுகின்றது. ஆகவே ஒரு மனிதனுக்கு அவன் செய்தது மட்டுமே கிடைக்கும் என்பது காபிரான மனிதனுக்காகும். முஃமினான மனிதனுக்கு அல்ல என்று ஸய்யிதுனா ரபீவு இப்னு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

4. 'லில் இன்ஸான்'; என்ற வார்த்தையில் உள்ள 'லாம்'; என்ற எழுத்துக்கு 'அலா'(மேல்) எனடற எழுத்தின் பொருளாகும். அதன்படி பார்த்தால் மேற்கூறப்பட்ட வசனத்தின் பொருள் மனிதனின் மேல்(பாதகமாக) இல்லை. அவன் செய்ததே தவிர என்று ஆகும். அதாவது ஒருவன் செய்த குற்றம் (எக்காரணம் கொண்டும்) மற்றவனின் மேல் (சுமையாக) ஆகாது என்று பொருள் விரியும். இதை ஒரு உவமான ரீதியில் சொல்வதென்றால் இறைவா! நான் தொழாமல் இருந்து விட்டேன். எனவே அந்தக் குற்றத்தை என் மகனின் மீது சுமத்தி அவனுக்கு நீ தண்டனை கொடுப்பாயாக என்று ஒருவர் கேட்டால் அதை அல்லாஹ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதாகும். மேலும் 'ஒரு குற்றம் செய்த ஆத்மா இன்னொரு குற்றம் செய்த ஆத்மாவின் குற்றத்தை சுமந்து கொள்ளாது'.(ஸூரா அல் அன்ஆம்-165, அல் இஸ்ரா 15, அல் பாத்திர் 15, அல் ஸுமர் 7) என்று வருகின்ற வசனங்கள் மேற்கூறப்பட்ட கருத்தை உறுதி செய்யக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன.

5. மேற்படி வசனத்தின் மேலெழுந்த வாரியான பொருளாகிய அவன் முயற்சித்தது மாத்திரமே அவனுக்கு கிடைக்கும் என்பதாகும் என்றாலும் அந்த முயற்சி என்பதில் அவன் தானே செய்து கொண்ட நற்காரியங்களும் உள்ளடங்கும். அதுபோன்றே அந்த நற்காரியங்கள் உண்டாவதற்குரிய காரணங்களான அவன் பெற்று வளர்த்த பிள்ளைகளும் அவன் அன்பு காட்டி பழகிய நண்பர்களும் அவன் செய்த நற்சேவைகள் மூலம் அவனால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களும் அவனின் முயற்சியில் அடங்குவதால் அவனுக்காக இவர்களில் யார் ஒரு நற்காரியத்தை செய்தாலும் அது அவனுக்கு போய்ச் சேரும் என்று அஷஷெய்கு அபுல் பரஜ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்ற ஹதீஸ் கலை நிபுணர் குறிப்பிடுகின்றார்கள்.

(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 177, புகாரி ஹதீது எண் 218 ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 416 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மைய்யித்தி அத்தத்கிரா பக்கம் 109 பாபுன் மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி)
மேலும் நிச்சயமாக முஃமின்கள் ஒருவருக்கொருவர் (ஈமானிய) சகோதரர்களாக இருக்கின்றார்கள். (அல் ஹுஜ்ராத் 10) என்ற கோட்பாட்டின்படியும் ஒரு முஃமின் செய்கின்ற நற்காரியத்தின் பலன் தன் சகோதர முஃமினுக்கு போய்ச் சேரும் என்று கூற முடிகின்றது.

ஆகவே இப்பொழுது கூறப்பட்ட விளக்கங்கள் மூலம் இந்த வசனத்தின் வெளிப்படையான விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு எந்த வகையிலும் செயல்பட முடியாது என்பதை அறிந்து கொள்வோமாக!

மரணித்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நல்லமல்களின் நற்பயன்கள் மரணித்தவர்களைப் போய்ச் சேரும் என்று கூறுகின்ற ஆயத்துகளும், ஹதீதுகளும்:

1. ஒரு மனிதன் இறந்து விட்டால் அத்துடன் அவரின் அமல்கள் நின்றுவிடும். என்றாலும் நிரந்தரமான தானம், அவர் கற்பித்த கல்வி, அவருக்காக பிரார்த்திக்கும் அவரின் ஸாலிஹான (நல்ல) பிள்ளைகள் ஆகிய மூன்றும் அவரின் மரணத்திற்கு பின்பும் பயன் தரும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம் ஹதீஸ் எண்: 1631 பாபு மா யல்ஹக்குல் இன்ஸான மினஸ் ஸவாபி பஃத வபாத்திஹி கிதாபுல் வஸிய்யத், அபூதாவூத் ஹதீஸ் எண் 2880 பாபு மா ஜாஅ பிஸ்ஸதக்கத்தி அனில் மய்யித்தி கிதாபுல் வஸாயா, திர்மிதி ஹதீஸ் எண் 1376 பாபுன் பில் வக்ஃபி கிதாபுல் அஹ்காம், நஸாயி ஹதீது எண் 3651 பாபு பழ்லிஸ் ஸதக்கத்தி அனில் மய்யித்தி கிதாபுல் வஸாயா, மிஷ்காத் பக்கம் 32 ஹதீஸ் எண் 203 கிதாபுல் இல்மி)

2. ஒரு மனிதன் தனக்கு பின்னால் விட்டு செல்கின்றவைகளில் மிகச் சிறந்தவைகள் மூன்றாகும்.

1. தனக்காக பிரார்த்திக்கின்ற ஸாலிஹான பிள்ளை
2. எதனுடைய நன்மை அவனைச் சென்றடையுமோ அப்படிப்பட்ட நிரந்தரமான தானம்.
3. அவருக்குப் பின்னாலும் எதைக் கொண்டு அமல் செய்யப்பட்டு வருகின்றதோ அப்படிப்பட்ட அவரின் கல்வி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(இப்னு மாஜா ஹதீது எண்: 241 பாபு தவாபி முஅல்லிமின் நாஸல் கைர அல் முகத்திமா)

3. ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும் மேலும் (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும்) பரப்பிய கல்வியும் அவன் விட்டுச் சென்ற ஸாலிஹான பிள்ளையும் (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு) வாரி வழங்கிய குர்ஆன் ஷரீடீம் அவன் கட்டியப ள்ளியும், வழிப்போக்கர்களுக்கு அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும் அவன் ஓடச் செய்த ஆறும் அவன் இப்பூவுலக வாழ்வில்  ஹயாத்தாக இருக்கும் போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மவ்த்துக்குப் பிறகும் அவனைப் போய்ச் சேரும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னுமாஜா ஹதீஸ் எண்: 242 பாபு தவாபி முஅல்லமின் நாஸில் கைர அல் முகத்திமா, பைஹக்கி ஹதீஸ் எண் 3448 ஷுஅபுல் ஈமான் , மிஷ்காத் ஹதீஸ் எண் 254)

4. நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒரு மனிதனுக்கு அவன் பிள்ளை செய்யும் இஸ்திஃபார் மூலம் அவரின் அந்தஸ்த்தை சுவனத்தில் உயர்த்துகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(இப்னுமாஜா ஹதீஸ் எண் 3660 பாபு பிர்ரில் வாலிதைனி கிதாபுல் அதப், மிஷ்காத் ஹதீஸ் எண் 2354 பாபுல் இஸ்திஃபார்)

5. இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபோது எனது பெற்றோர் (என் மீது அருள் கூர்;ந்து) என்னை வளர்த்தது போன்று அவ்விருவருக்கும் உனது அருளைச் சொரிவாயாக! என்று நபியே நீர் கூறும் ( ஸூரா அல் இஸ்ரா 24)

குறிப்பு: மிக முக்கியமானதும் முதன்மையானதும்:  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமைக்குரிய பெற்றோர்கள் இருவரும் சுவனவாதிகள் என்றும் அவர்கள் பெற்றெடுத்த அருமைச் செல்வமும் இவ்வுலக அருட்கொடையுமான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் துஆவிற்கு அவ்விருவரும் என்றென்றும் உரித்தானவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த திருவசனமும் இன்னும் இதுபோன்ற வசனங்களும் தெட்டத் தெளிவாக இப்பாருக்குப் பறைசாற்றுகின்றன.
அப்படி இருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமைக்குரிய பெற்றோர்கள் விஷயத்தில் நம்மில் சிலர் மிதமிஞ்சி பேசித்திரிகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் நாவுகளைப் பேணிக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

6. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதன் வந்து 'நாயகமே! எனது தாயார் (எது குறித்தும்) வஸிய்யத் செய்யாமல் திடீரென மரணம் அடைந்து விட்டார்கள். அவர்கள் பேசி இருந்தால் ஏதேனும் தானதர்மங்கள் செய்திருப்பார்கள். ஆகையால் அவர்களுக்காக நான் ஸதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை உண்டா?' என்று கேட்;டார். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்' என்று பதில் கூறினார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.

(புகாரி ஹதீஸ் எண்: 1388 பாபு மவ்த்தில் புஜ்அத்தி கிதாபுல் ஜனாயிஸ், புகாரி ஹதீஸ் எண் 2760 -18வது பாபு கிதாபுல் வஸாயா, முஸ்லிம் ஹதீஸ் 1004 பாபு உஸூலி தவாபிஸ் ஸதக்கத்தி அனில் மைய்யித்தி இலைஹி கிதாபுஸ் ஸகாத், அபூதாவூத் ஹதீஸ் எண் 2881 பாபு மா ஜாஅ பீ மன் மாத்த அன் ஙைரி வஸிய்யத்தின்– கிதாபுல் வஸாயா நஸாயி பாகம் 6 பக்கம் 250 பாபு இதா மாத்தல் புஜ்அத்த கிதாபுல் வஸாயா)

7. ஸய்யிதுனா ஸஃது இப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் வபாத்தான நேரத்தில் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள். எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'நாயகமே! நான் வெளியூர் சென்றிருந்த வேளையில் எனது தாயார் மரணமடைந்து விட்டார்கள். அவர்களைத் தொட்டும் நான் ஸதக்கா செய்தால் அது அவர்களுக்கு பயன் அளிக்குமா? என்று கேட்டார்கள். 'ஆம. பயனளிக்கும்' என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது 'நிச்சயமாக எனது தோட்டம் அவர்களுக்காக ஸதக்காவாக இருக்கும் என்று தாங்களை சாட்சியாக்குகிறேன்' என்று ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி ஹதீது எண்: 2756 பாபு இதா கலா அர்ளீ அவ் புஸ்தானி ஸதக்கத்துன் கிதாபுல் வஸாயா, புகாரி ஹதீது எண: 2762 பாபுல் இஸ்ஹாதி பில் வக்பி வஸ்ஸதக்கத்தி கிதாபுல் வஸாயா, புகாரி ஹதீது எண் 2770 புhபுன் இதா வக்கப அர்ழன் கிதாபுல் வஸாயா, புகாரி ஹதீது எண் 2761 பாபு யுஸ்தஹப்பு லிமன் துவுப்பிய புஜ்அத்தன் கிதாபுல் வஸாயா, நஸாயி பாகம் 6 பக்கம் 250 பாபு இதா மாத்த அல் புஜ்அத்த ஹல் யுஸ்த்தஹப்பு லி அஹ்லிஹி….கிதாபுல் வஸாயா)

8. ஒரு பெண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் ஹஜ் செய்யாத நிலையில் மரணமடைந்து விட்டார்கள். அவர்களைத் தொட்டும் நான் ஹஜ்ஜு செய்யலாமா? என்று கேட்டார். ஆம். செய்யலாம். அவர்களுக்காக நீர் ஹஜ்ஜு செய்வீராக!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதி ஹதீஸ் எண்: 667 பாபு மா ஜாஅ பில் முதஸத்திகி கிதாபுஸ்ஸகாத்)

9. ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;டம் வந்து நாயகமே! எனது சகோதரி ஹஜ் செய்வதற்கு நேர்ச்சை செய்திருந்தாள். ஆனால் அவள் மரணித்து விட்டாள் என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் மீது கடன் இருந்தால் நீர் அதை நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அவர் பதில் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வுக்கு (செலுத்த வேண்டிய கடனை) நிறைவேற்றிவிடுவாயாக. அவன் நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானவன் என்று கூறினார்கள்.

(புகாரி ஹதீஸ் எண்: 6699 பாபு மன் மாத்த வஅலைஹி நத்ருன் கிதாபுல் அய்மானி வந்நுதூரி)

10. நிச்சயமாக ஒரு மனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்கள் மீது ஒரு மாத நோன்பு (நிறைவேற்றப்பட வேண்டியது) இருக்கிறது. அவர்களைத் தொட்டும் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து 'உனது தாயார் மீது கடன் இருந்தால் நீர் அதை அவர்களைத் தொட்டும் நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு 'ஆம்' என்று பதில் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வின் கடனாகிறது நிறைவேற்றப்படுவதற்கு மிக ஏற்றமாக இருக்கிறது என்று கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம் ஹதீஸ் எண்: 1148-155 பாபு கலாயிஸ் ஸியாமி அனில் மய்யித்தி கிதாபுஸ் ஸியாம்)

11. நிச்சயமாக ஒரு பெண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்கள் மீது ஒரு மாத நோன்பு (நிறைவேற்றப்பட வேண்டியது) இருக்கிறது. அவர்களைத் தொட்டும் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார்கள். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெண்ணைப் பார்த்தது உனது தாயார் மீது கடன் இருந்தால் நீர் அதை அவர்களைத் தொட்டும் நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அந்தப் பெண் பதில் கூறினார்கள் அப்படியானால் அல்லாஹ்வின் கடனாகிறது நிறைவேற்றப்படுவதற்கு மிக ஏற்றமாக இருக்கின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஸ்லிம் ஹதீஸ் எண்: 1148-154 பாபு களாஇஸ் ஸியாமி அனில் மைய்யித்தி கிதாபுஸ் ஸியாம்)

12. ஸய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை இரு ஆடுகளை குர்பானி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ஸய்யிதினா ஹனஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ஏன் இரண்டு குர்பானி கொடுத்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் தமக்காக ஒரு குர்பானி கொடுக்குமாறு வஸிய்யத் செய்திருந்தார்கள். ஆகையால் இவ்விரண்டில் ஒன்று அவர்களுக்கும் எனக்கும் என்று கூறினார்கள்.

(அபூதாவூத் ஹதீது எண்: 2790 உழ்ஹிய்யத்தி அனில் மய்யித்தி கிதாபுல் ழஹாயா, திர்மிதி ஹதீது எண்: 1495 பாபு மா ஜாஅ பில் உழ்ஹிய்யத்தி அனில் மய்யித்தி கிதாபுல் அலாஹி, மிஷ்காத் ஹதீது எண்: 1462 பாபுல் உழ்ஹிய்யா)

14. யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல கப்ரில் மரணித்த மய்யித்து தனது தந்தை அல்லது தனது தாய் அல்லது சகோதரன் அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை எதிர்பார்க்கிறது. அப்படி ஏதேனும் ஒரு துஆ அந்த மய்யித்தை சென்றடையுமானால் அதை துன்யா மற்றும் அதில் உள்ளவற்றை விட மிகப் பிரியமாக கருதுகிறது. நிச்சயமாக அல்லாஹு தஆலா பூலோகவாசிகளின் பிரார்த்தனை மூலம் கப்ருவாசிகளுக்கு மலைகளைப் போன்று ரஹ்மத்துகளை நுழைவிக்கிறான். இறந்தவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவது உயிரோடு இருப்போர் மரணித்தவர்களுக்காக வழங்குகின்ற சன்மானமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக செய்யிதினா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பைஹகி ஹதீது எண் 7904, மிஷ்காத் ஹதீது எண் 2355 பக்கம் 206 பாபுல் இஸ்திஃபார், அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 103 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இந்தல் கப்ரி ஹாலத்தத் தபனி வ பஃதஹு)

ஆகவே இதுவரை கூறப்பட்ட ஆதாரங்கள் மூலம் இறந்துவிட்ட பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்கின்ற நற்காரியங்களும், இறந்து போன பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்கின்ற நற்காரியங்களும,; இறந்து விட்ட தனது உடன் பிறந்த சகோதரனுக்காக அவனுடைய உடன்பிறந்த சகோதரன் செய்யும்' நற்காரியமும,; இறந்துவிட்ட ஒரு நண்பனுக்காக அவன் நண்பன் செய்யும் நற்காரியமும், ஒரு மரணித்துவிட்ட மார்க்க அறிஞருக்காக (அவரிடம் பயின்ற மாணவர்கள் மற்றும் அவருடைய நல்லுபதேசதைக் கேட்டு அதன்படி நடந்து வந்த பொதுமக்கள் மூலம்) அவர் கற்பித்த கல்வியின் பயனும் அவர்களைப் போய் சேரும் என்பதை தெளிவாக அறிந்தோம்.

ஓர் இறந்து விட்ட முஃமினான சகோதரருக்காக மற்றொரு முஃமினான சகோதரர் (அவ்விருவருக்கிடையே எவ்வித உறவு மற்றும் நட்புமின்றி) செய்யும் நற்காரியங்கள் அவரைப் போய்ச் சேரும் என்பதற்கு ஒரு சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

1. இறiவா! எங்களுக்கும் எங்களுக்கு முன் மரணித்து சென்றுவிட்ட எங்களின் முஃமினான சகோதரர்களுக்கும் (பாவங்களைப் பொறுத்து அருள் புரிவாயாக!) என்று பின்னால் வந்தவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான். (சூரா அல் ஹஷ்ர் 10)

2. அர்ஷை சுமக்கின்ற மலக்குகள் முஃமின்களுக்காக பிழை பொறுக்கத் தேடுகிறார்கள். (சூரா அல் முஃமின் வசனம் 7)

3. இறைவாஞ எனக்கும் எனது பெற்றோர்களுக்கும் ஏனைய முஃமின்களுக்கும் பிழை பொறுத்து அருள்வாயாக! என்று இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். (சூரா இப்றாஹீம் வசனம் 41)

4. மேலும் மய்யித்திற்காக நீங்கள் தொழுது முடித்து விட்டீர்களானால் மய்யித்திற்கு தூய்மையான எண்ணத்துடன் துஆ செய்யுங்கள் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(இப்னு மாஜா ஹதீது எண் 1497 பாபு மா ஜாஅ பித் துஆஇ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் ஹதீது எண் 3199 பாபுத் துஆஇ லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1674 கிதாபுல் ஜனாயிஸ்)

5. யா அல்லாஹ் எங்களில் ஹயாத்தாக உள்ளவர்களுக்கும் எங்களில் மரணித்தவர்களுக்கும் பிழை பொறுப்பாயாக! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என்று அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு மாஜா ஹதீது எண் 1498 பாபு மா ஜாஅ பித் துஆஇ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1675 பக்கம் 146 கிதாபுல் ஜனாயிஸ்)

6. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்து முடித்துவிட்டால் அவ்விடத்தில் நிற்பவர்களாக ஆகியிருந்தார்கள். மேலும், உங்களின் சகோதரருக்காக பழை பொறுக்கத் தேடுங்கள். பிறகு அவருக்காக தஸ்பீத்தையும் கேளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர் இப்போது கேள்வி கேட்கப்படுவார் என்று கூறுவார்கள் என்று உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத் ஹதீது எண் 3221 பாபு இஸ்திங்பாரி இந்தல் கபுரி லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் பக்கம் 26 ஹதீது எண் 133 பாபு இஸ்பாத்தி அதாபில் கபுரி)

குறிப்பு: தஸ்பீத்து என்பது இறiவா! தரிபாடான சொல்லைக் (கலிமா ஷஹாதாவைக்) கொண்டு இந்த மய்யித்தைத் தரிபடுத்தி வைப்பாயாக! என்று பிரார்த்திப்பதாகும்.

7. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களை அடக்கிய பின் அவர்களின் கபுருக்கு பக்கத்தில் நின்று பிரார்த்திக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று ஸுயூத்தி இமாம் அவர்கள் தாங்கள் எழுதிய அஸ்பாபுன் நுஸுல் என்ற கிரந்தத்தில் (நபியே! இறந்து விட்ட முனாபிக்கானவர்களில் எவரின் மீதும் தொழ வேண்டாம். மேலும் அவர்களின் கபுரின் மீது நிற்கவும் வேண்டாம் என்ற சூரா அத் தவ்பா 84 வது வசனத்தின் விளக்கவுரையில்) குறிப்பிட்டுள்ளார்கள்.

8. நபியே! நீங்கள் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள். நிச்சயமாக உங்களின் பிரார்த்தனை அவர்களுக்கு ரஹ்மத்தாக (அருளாக) இருக்கின்றது. (சூரா அத்தௌபா வசனம் 103)

9. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து குர்பானி செய்தபின் யா அல்லாஹ்! இதனை எனக்காகவும் எனது குடும்பத்தினருக்காவும், எனது உம்மத்துக்காகவும் ஏற்றுக் கொள்வாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்.

(முஸ்லிம் ஹதீது எண் 1967-19 பாபு இஸ்த்திஹ்பாபில் ழஹிய்யா வ தபிஹிஹா முபாஷரத்தன் கிதாபுல் அழாஹி, அபூதாவூத் ஹதீது எண் 2792 பாபு மா யுஸ்த்தஹப்பு மினல் ழஹாயா கிதாபுல் லஹாயா, மிஷ்காத் பக்கம் 127 ஹதீது எண் 11454 பாபுன் பில் உழ்ஹிய்யத்தி)

10. கருத்த நிறம் கொண்ட பெண்மணி ஒருத்தி நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசலை (கூட்டி) சுத்தம் செய்பவளாக இருந்தாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணை சில நாட்கள் காணவில்லை. அதனால் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அந்தப் பெண் இறந்து விட்டாள் என்று கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைப் பற்றி எமக்கு நீங்கள் அறிவித்து இருக்கக் கூடாதா? என்று கேட்டு விட்டு அவளின் கப்ரை எனக்கு காட்டுங்கள் என்று கூறினார்கள். உடனே ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவளின் கப்ரை காட்டி கொடுத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணின் மீது தொழுதார்கள். பிறகு நிச்சயமாக இந்த கபுர்கள் அந்த கபுர்வாசிகளின் மீது இருளால் நிறப்பப்பட்டவைகளாக இருக்கின்றன. நிச்சயமாக நான் அவைகளின் மீது தொழுத காரணத்தினால் அல்லாஹு தஆலா அந்த மண்ணறைகளை அந்த மண்ணறை வாசிகளுக்கு ஒளிமயமானதாக ஆக்கிக் கொடுத்து விட்டான் என்று கூறினார்கள்.

(புகாரி ஹதீது எண் 1337 பாபுஸ்ஸலாத்தி அலல் கப்ரி பஃத மா யுத்பனு கிதாபுல் ஜனாயிஸ், முஸ்லிம் ஹதீது எண் 956 பாபுஸ்ஸலாத்தி அலல் கப்ரி கிதாபுல் ஜனாயிஸ், முஸ்னத் அஹ்மத் பாகம் 2 பக்கம் 388, மிஷ்காத் ஹதீது எண் 1659 பக்கம் 145 பாபுல் மஷ்யி பில் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண் 1533 பாபு மா ஜாஅ பிஸ்ஸலாத்தி அலல் கப்ரி கிதாபுல் ஜனாயிஸ்)

11. இறைவா! நாங்கள் இந்த மய்யித்திற்காக பரிந்துரை செய்கின்றோம்(எங்கள் பரிந்துரையை ஏற்று) இவரின் பாவங்களை பொருத்தருள்வாயாக! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸா தொழுகையில் பிரார்த்திப்பார்கள்.

(அபூதாவூத் ஹதீது எண்: 3200 பாபுத் துஆஇ லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், அஹ்மத் பாகம் 2 பக்கம் 458, மிஷ்காத் பக்கம் 147 ஹதீது எண் 1688 பாபு மஷ்யி பில் ஜனாஸா)

12. ஒரு முஸ்லிம் மய்யித்திற்கு தொழுகை நடத்தும் நேரத்தில் முஸ்லிம்கள் மூன்று ஸப்புகளாக நின்று தொழுவார்களானால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா அந்த மய்யித்திற்கு சுவர்க்கத்தை வாஜிபாக்கி விடுவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அபூதாவூத் ஹதீது எண்: 3166 பாபுன் பிஸ் ஸுபூப்பி அலல் ஜனாஸா கிதாபுல் ஜனாயிஸ், திர்மிதி ஹதீது எண் 1028 பாபு மா ஜாஅ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸத்தி வஷ்ஷபாஅத்தி லில் மைய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண்: 1490 பாபு மா ஜாஅ பீ மன் ஸல்லா அலைஹி ஜமாஅத்துன் மினல் முஸ்லிமீன் கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் பக்கம் 147 ஹதீது எண் 1687 பாபுல் மஷ்யி பில் ஜனாஸா கிதாபுல் ஜனாயிஸ்)

13. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸதவிற்கு தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய துஆவிலிருந்து சிலதை நான் பாடமாக்கி கொண்டேன். இறiவா! இந்த மய்யித்தின் குற்றத்தை மன்னித்து அதன் மீது கிருபை காட்டுவாயாக! மேலும் அவருக்கு நற்சுகத்தைக் கொடுப்பாகயாக! அவரின் பிழைகளை பொறுத்தருள்வாயாக! அவருக்குரிய விருந்துபசசாரத்தை சங்கையாக்கி வைப்பாயாக! அவரின் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! மேலும் அவரை நீராலும், பனிக்கட்டியாலும், ஜஸ் கட்டியாலும் கழுகுவாயாக! மேலும் வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து கழுவி சுத்தமாக்குவது போல அவரின் பாவத்தை விட்டு அவரை பரிசுத்தப்படுத்துவாயாக! அவரின் வீட்டை விட சிறந்த வீட்டை அவருக்கு பகரமாக்கி கொடுப்பாயாக! அவரின் குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தையும் அவரின் மனைவியை விட சிறந்த மனைவியையும் அவருக்கு பகரமாக்கி கொடுப்பாயாக! அவரை சுவனத்தில் நுழையச் செய்வாயாக! மேலும் கப்ருடைய வேதனையிலிருந்தும் நரகத்துடைய வேதனையிலிருந்தும் அவரைக் காப்பாற்றுவாயாக! என்று துஆ செய்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த இந்த துஆவின் பெருமிதத்தைக் கண்ட போது நானே அந்த மய்யித்தாக ஆகியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே! என்று நினைத்தேன் என்று அவ்பு பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

(முஸ்லிம் ஹதீது எண்: 963-85 பாபுத் துஆயி லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண்: 1500 பாபு மாஜாஅ பித்துஆஇ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸாத்தி கிதாபுல் ஜனாயிஸ், நஸாயி பாகம் 4 பக்கம் 73 பாபுன் அத்துஆஇ பில் ஜனாஸா கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் பக்கம் 145 ஹதீது எண்1655 பாபுல் மஷ்யி பில் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ்)

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு:

14. ஒரு நாள் சில ஸஹாபாக்கள் ஒரு ஜனாஸாவிற்கு பக்கத்தில் நடந்து சென்றார்கள். அப்போது  (அவர்கள் அனைவரும்) அந்த ஜனாஸாவைப் பற்றி புகழ்ந்து கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாஜிபாகிவிட்டது- கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். அதன்பிறகு வேறொரு ஜனாஸாவிற்கு பக்கத்தில் நடந்து சென்றார்கள். அப்போது அந்த ஜனாஸாவைப் பற்றி எல்லோரும் இகழ்ந்து பேசிக் கொண்டார்கள். அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஜபத் என்று கூறினார்கள். அப்போது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாயகமே! என்ன வாஜிபாகிவிட்டது என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதோ இவரை நீங்கள் எல்லோரும் நல்லவர் என்று புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் வாஜிபாகிவிட்டது என்று கூறினேன். மற்றவரை ப்றறிக் குறையாகப் பேசிக் கொண்டீர்கள் எனவே அவருக்கு நரகம் வாஜிபாகிவிட்டது என்று கூறினேன. நீங்கள் பூமயில் (உள்ள) அல்லாஹ்வின் ஷுஹதாக்களாக-சாட்சியாளர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். (வேறொரு அறிவிப்பில் முஃமின்கள் பூமியில் (உள்ள) அல்லாஹ்வின் ஷுஹதாக்கள் என்று கூறினார்கள்) என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி ஹதீது எண் 1367 பாபு தனாஇன் நாஸி கிதாபுல் ஜனாஇஸ், புகாரி ஹதீது எண் 2642 பாபுன் தஃதீலு கம் யஜ்ஸு கிதாபுஷ்ஷஹாதத், முஸ்லிம் ஹதீது எண் 949-60 பாபுன் பீ மன் யுத்னா அலைஹி கைருன் அவ் ஷர்ருன் மினல் மௌத்தா கிதாபுல் ஜனாஇஸ், திர்மிதி ஹதீது எண் 1059 பாபு மா ஜாஅ பித்தனாஇல் ஹஸனி அலல் மய்யித்தி, நஸாயி ஹதீது எண் 1931 பாபுஸ் ஸனாயி கிதாபுல் ஜனாயிஸ், அஹ்மத் பாகம் 03 பக்கம் 281 ஹதீது அனஸ் ரலியல்லாஹு அன்ஹு, மிஷ்காத் ஹதீது எண் 1662 பாபுல் மஷ்இ பில் ஜனாஸத்தி-கிதாபுல் ஜனாஸா)

குறிப்பு:1

ஷாபி மத்ஹபின் முக்கிய இமாம்களில் ஒருவரும் முஸ்லிம் ஷரீபுக்கு விளக்கவுரை எழுதியவர்களுமான இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்களின் அல் அத்கார் என்ற நூலில் மய்யித்தைப் பற்றி மற்றவர்கள் சொல்கின்ற நல்ல சொற்கள் கூட மய்யித்திற்கு பயன் அளிக்கும் என்று தலையங்கம் அமைத்து அதற்கு கீழ் மேற்கூறப்பட்ட ஹதீஸை கொண்டு வந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆகவே இதுவரை கூறிய திருவசனங்களும் நபிமொழிகளும் ஒருவர் தொழுத தொழுகை அவர் ஓதிய இஸ்திஃபார் தஸ்பீத், துஆ மற்றும் நற்காரியங்களின் பலன்கள் அவரைப் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகள் அனைத்தும் இறந்தவர்களுக்கு (அவர்களின் முயற்சி இன்றியே) போய்ச் சேருகிறது என்பதைத் தெளிவாக காட்டுகின்றன.

இந்துக்கள் ஏன் சாவு கொட்டு அடிக்கிறார்கள்?;

குறிப்பு:2

மேலும் மைய்யித்தைப் பற்றி மற்ற மக்கள் கூறுகின்ற நல்ல வார்த்தைகளால் மைய்யித்திற்கு கவனம் கடமையாகின்றது என்று இப்போது கூறப்பட்ட ஹதீதும் – மேலும், உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள் அவர்களின் கெட்ட விசயங்களை சொல்லாதீர்கள் என்ற ஹதீதும் (அபூதாவூது ஹதீது எண் 4900 கிதாபுல் அதப் பாபுன் பின்னஹ்யி அன் ஸப்பில் மவ்த்தா, திர்மிதி ஹதீது எண் 1019 கிதாபுல் ஜனாயிஸ் 34வது பாபுல் மிஷ்காத் ஹதீது எண் 1678 பாபுல் மஷ்யி பில் ஜனாஸத்தி)
குறிப்பிடுவது போன்று ஒருவர் இறந்து விட்டால் அவரைப் பற்றி நல்லவர் இருந்தார் செத்துப் போயிட்டார், நல்லவர் இருந்தார் செத்துப் போயிட்டார், நல்லவர் இருந்தார் செத்துப் போயிட்டார் என்று சொல்வதற்கென்றே ஒரு ஆளை (கூலிக்கு) நியமிக்கும் வழக்கம் முற்காலத்தில் ஹிந்து மத சகோதரர்களிடம் இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்த வழக்கம் ஓய்ந்து நல்லவன் இருந்தான் செத்துப் போயிட்டான் நல்லவன் இருந்தான் செத்துப் போயிட்டான் நல்லவன் இருந்தான் செத்துப் போயிட்டான் என்ற கருத்தைப் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் அஅமைந்துள்ள டன்டனக்கா டனக்கு டக்கா – டன்டனக்கா டனக்கு டக்கா என்ற ஓசையை கிளப்புவதற்காக மேளம் அடிக்கின்ற ஆட்களை (கூலிக்கு) நியமிப்பது அவர்களின் தற்கால வழமையாக இருந்து வருகின்றது. அவர்கள் என்ன தான் பறை அறைந்தாலும் ஈமான் இல்லாமல் சுவனம் புகமுடியாது என்பது திண்ணம்.

மஸ்ஜிதுல் அஷ்ஷாரின் தொழுகை:

மேலும் நாங்கள் ஹஜ்ஜு செய்வதற்காக பயணமாகி சென்றோம். அப்போது அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களைப் பார்த்து உபுல்லா என்ற கிராமத்திற்கு பக்கத்தில் செல்வீர்களா என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று நாங்கள் பதில் கூறினோம். அப்போது அவர்கள் உங்களில் யாராவது (அந்த கிராமத்தில் இருக்கின்ற) மஸ்ஜிதுல் அஷ்ஷார் என்ற பள்ளியில் எனக்காக இரண்டு ரக்அத்துகளோ அல்லது நான்கு ரக்அத்துகளோ தொழுது இது அபூ ஹுரைராவுக்கு உரியதாகும் என்று கூறுவீர்களா? ஏனெனில் நிச்சயமாக அல்லாஹுதஆலா மஸ்ஜிதுல் அஷ்ஸஷாரிலிருந்து கியாமத்து நாளையில் பத்ரு ஷுஹதாக்களுக்கு நிகரான பல ஷஹீதுகளை எழுப்புவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவூத் ஹதீது எண் 4308 பாபுன் பீ திகரில் பஸரா, மிஷ்காத் பக்கம் 468 ஹதீது எண் 5434 பாபுல் மலாஹ1pம் கிதாபுர் ரிக்காக்கி)

மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்த மாநபியின் வாக்கு:

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உம்ராவுக்குச் செல்வதற்காக அனுமதி கேட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு அனுமதி வழங்கி என் அன்புச் சகோதரரே! உங்களின் (புனிதமான) துஆக்களில் மறந்து விடாமல் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இந்த வார்த்தையின் மூலம் இந்த உலகையே எனக்கு தந்தால் என்ன மகிழ்ச்சி ஏற்படுமே அதை விடவும் மிக அதிகமான மகிழ்ச்சி அடைந்தேன் என்று ஸய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதி ஹதீது எண் 3562 -110 வது பாபு கிதாபுத் தஅவாத், அபூதாவூத் ஹதீது எண் 1498 பாபுத் துஆஇ கிதாபுஸ் ஸலாத், இப்னுமாஜா ஹதீது எண் 2894 பாபு பழ்லி துஆஇல் ஹாஜ்ஜி கிதாபுல் மனாஸிக், மிஷ்காத் ஹதீது எண் 2248 பக்கம் 195 கிதாபுத் தஅவாத்)

பரிந்துரைப்பும் பயனளிக்கும்

மேலும் கியாமத் நாளையில் கேள்வி கணக்குக்காக அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கும் வேளையில் தாங்களைக் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டுமென்று கேட்டு பாவிகள் யாவரும் சில நபிமார்களின் சமூகத்திற்கு சென்று கெஞ்சுவார்கள். பிறகு இறுதியாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பாவிகளுக்காக அல்லாஹ்விடம் மன்றாடி கரை சேர்ப்பார்கள்.

(புகாரி பாகம் 1 பக்கம் 199 ஹதீது எண் 1475 கிதாபு ஸக்காத்தி பாபு மன்ஜஅலன் னாஸ தகத்ஸுரன், பத்ஹுல் பாரி –புகாரி ஹதீது எண் 6565 கிதாபுத் தஅவாத் பாபு ஸிபத்தில் ஜன்னத்தி வன்னாரி என்ற ஹதீஸின் விளக்கவுரை)

ஒருவருக்கு அவர் செய்த முயற்சியின் மூலம் நற்பலன் கிடைக்கும் என்பதைக் காட்டக் கூடியதாக இருந்தாலும் ஒருவனுடைய தொழுகை, துஆ, ஷபாஅத் ஆகியவைகள் மூலம் மற்றவர்களுக்கு பயன் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே இதன்பிறகும் ஒரு மனிதனுக்கு அவன் செய்த முயற்சி இன்றி வேறில்லை என்ற மேற்படி வசனத்தின் வெளிக்கருத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு நாம் செய்கின்ற நற்காரியங்கள் இறந்தவர்களுக்கு போய் சேராது என்று அவர்கள் வாதிடுவார்களானால் அது அவர்களுடைய பிடிவாதத்தின் வெளிப்பாடாகும். ஆகவே வாதத்திற்கு மருந்து உண்டு, பிடிவாதத்திற்கு மருந்து இல்லை என்ற முதுமொழிக்கேற்ப பிடிவாதத்திற்கு ஒரு வசனம் அல்ல ஓராயிரம் வசனங்களை ஆதாரங்களாக காட்டினாலும் ஹக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

கேள்வி: இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா?

பதில்:
1. எவர் கப்ருகளுக்குச் சென்று குல்ஹுவல்லாஹு அஹது என்ற சூராவை 11 தடவை ஓதி அதன் நன்மையை கப்ராளிக்கு சேர்த்தாரோ அவருக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அளவு நன்மை கிடைக்கும் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176- புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

2. யார் கப்ருஸ்தானுக்குச் சென்று யாஸீன் சூரா ஓதுவாரோ அந்நாளில் அல்லாஹுதஆலா அவர்களின் (வேதனைகளை) இலேசாக்குவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 – புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

3. யார் தனது தாய் தந்தையர்களில் இருவரையோ அல்லது அவர்களில் ஒருவரையோ ஸியாரத் செய்து அவ்விடத்தில் யாஸீன் ஓதுகிறாரோ அவரின் பாவங்கள் பொறுக்கப்படுகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 –புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

4. எவராவது கபுருஸ்தானத்திற்கு சென்று ஸூரத்து யாஸீன் ஓதினால் அல்லாஹுதஆலா அந்த கபுருவாசிகளைத் தொட்டும் வேதனையை இலேசாக்குவான். மேலும் அந்த கப்ருஸ்தானில் அடங்கி இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையளவுக்கு அவருக்கு நன்மைகள் இருக்கின்றது என்று நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறினார்கள் என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஷரஹுல் ஸுதூர் பக்கம் 418 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி லில் மைய்யித்தி)

5. உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நல்லடக்கம் செய்துவிடுங்கள். மேலும் அவரின் தலைமாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பப்பகுதியையும், அவரின் கால்மாட்டில் பகரா சூராவின் கடைசிப் பகுதியையும் ஓதுங்கள் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(மிஷ்காத் ஹதீது எண்: 1717 பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்) பைஹகி பாகம் 7 பக்கம் 16 ஹதீது எண் 9294)

6. உங்களில் இறந்தவர்கள் மீது யாஸீன் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 466 ஹதீஸ் எண் 1448 பாபு மா ஜாஅ பீ மாயுக்காலு இந்தல் மரீழி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் பாகம் 3 பக்கம் 191 ஹதீது எண் 3121 பாபுல் கிராஅத்தி இந்தல் மய்யித்தி கிதாபு ஜனாயிஸ், அஹ்மது பாகம் 5 பக்கம் 26, மிஷ்காத் பக்கம் 141 ஹதீது எண் 1622 பாபு மா யுகாலு இந்த மன் ஹழரஹுல் மௌத்து கிதாபுல் ஜனாயிஸ்)

7. யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று மஃகில் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத் பக்கம் 26, பைஹக்கி அபுல் ஈமான் பாகம் 2 பக்கம் 479 ஹதீது எண் 2458, மிஷ்காத் பக்கம் 189 ஹதீது எண் 2178 கிதாபு பலாஇலில் குர்ஆன்)

8. அன்ஸாரி ஸஹாபிகளில் ஒருவர் மரணித்து விட்டால் அவரின் கப்ருக்கு அந்த ஸஹாபாக்கள் பலவாறாக பிரிந்து சென்று அவ்விடத்தில் குர்ஆன் ஓதுபவர்களாக இருந்து கொண்டிருப்பார்கள்.

(கிதாபுர் ரூஹ் பக்கம் 14 அகீதத்துஸ்ஸுன்னா பக்கம் 304 ஷரஹுல் ஸுதுர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மய்யித்தி…)

9. அன்ஸாரி ஸஹாபாக்கள் இறந்தவர்களுக்காக பகரா சூரா ஓதுபவர்களாக இருந்தார்கள். (முஸன்னப் இப்னி ஷைபா பாகம் 3 பக்கம் 121)

10. அன்ஸாரி ஸஹாபாக்களின் ஸுன்னத்தாகிறது அடக்கம் செய்வதற்காக மய்யித்தை சுமந்து செல்லும் நேரத்தில் அதோடு ஸூரத்துல் பகராவை ஓதிக் கொண்டு செல்வதாகும்.

(அத்தத்கிரா பக்கம் 111 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இந்தல் கப்ரி ஹாலத் தபனி வபஃதஹு)

11. தனது கப்ருக்கு பக்கத்தில் ஸூரத்துல் பகரா ஓத வேண்டும் என்று ஸய்யிதினா அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு இட்டார்கள்.

(அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 107 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இன்தல் கபுரி ஹாலத்தத் தபனி வ பஃதஹு)

12. எவர் கப்ருக்குச் சென்று அல்ஹம்து ஸூராவையும் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் அல்ஹாக்கு முத்தகாதுரு என்ற ஸூராவையும் ஓதி அதன் பிறகு இறiவா! உமது கலாமிலிருந்து நான் இப்போது ஓதிய ஸூராக்களின் தவாபை முஃமினான கப்ருவாசிகளுக்கு ஆக்கிவிட்டேன் என்று சொல்வாரானால் அவருக்காக அந்த கபுருவாசிகள் அல்லாஹ்வின்பால் பரிந்துரை செய்பவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று ஸய்யிதினா அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஷரஹுல் ஸுதூர் பக்கம் 418 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி லில் மைய்யித்தி)

13. தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை இத்தரணிக்கு தொகுத்து தந்தவர்களில் தலைமைத்துவம் பெற்றவர்களான இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஷைகாகிய முஹம்மது பின் இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பத்தாயிரத்துக்கும் மேலாக திருக்குர்ஆன் ஓதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கத்தம் தமாம் செய்ததாக துஹ்பா பாகம் 9 பக்கம் 368ல் வந்துள்ளது.

14. ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ருக்கருகே நடந்து செல்லும்போது தமது தோழர்களை நோக்கி இவ்விரு மண்ணறைவாசிகளில் ஒருவர் சிறுநீரை சுத்தம் செய்வதில் அசட்டையாக இருந்ததற்காகவும், மற்றொருவர் புறம் பேசித் திரிந்ததற்காகவும் வேதனை செய்யப்படுகின்றனரே அன்றி பெருங்குற்றங்கள் செய்த காரணத்தினால் அல்ல எனக் கூறிவிட்டு அருகிலிருந்த பேரீத்த மரத்தின் குச்சியொன்றை எடுத்து அதனை இரண்டாகப் பிளந்து ஒரு கப்ருகள் மீது நாட்டினார்கள். இதற்குரிய காரணம் வினவப்பட்ட போது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இக்குச்சிகள் காயும்வரை (அவை செய்யும் தஸ்பீஹின் காரணத்தால்) அவர்களது வேதனை எளிதாக்கப்படும் என்று கூறினார்கள்.

(புஹாரி ஹதீது எண் 216 பாபுன் மினல் கபாஇரி – கிதாபுல் உலூஇ, புஹாரி ஹதீது எண் 218 பாபு மாஜாஅ பீ ஙஸ்லில் பௌலி கிதாபுல் உலூஇ, புஹாரி ஹதீது எண் 1361 பாபுல் ஜரீதத்தி அலல் கப்ரி கிதாபுல் ஜனாயிஸ், புஹாரி ஹதீது எண் 1378 பாபு அதாபில் கப்ரி மினல் ஙீபத்தி வல் பௌலி கிதாபுல் ஜனாயிஸ, புஹாரி ஹதீது எண் 6052 பாபுல் ஙீபத்தி கிதாபுல் அதப், புஹாரி ஹதீது எண் 6055 பாபுன் அன் நமீமத்து மனில் கபாயிரி கிதாபுல் அதப், முஸ்லிம் ஹதீது எண் 292 பாபுத் தலீலி அலா நஜாஸத்தில் பௌலி கிதாபுத் தஹாரா, திர்முதி ஹதீது எண் 70 பாபு மாஜாஅ பித்தஷ்தீதி பில் பௌலி அப்வாபுத் தஹாரா, இப்னுமாஜா ஹதீது எண் 347 பாபுன் பித்தஷ்தீதி பில் பௌலி கிதாபுத் தஹாரா, அபூதாவூத் ஹதீது எண் 20 பாபு ஆதாபில் கலாஇ கிதாபுத் தஹாரா, மிஷ்காத் ஹதீது எண் 338 பக்கம் 42 பாபு ஆதாபில் கலாஇ)

குறிப்பு:1.

உயிரற்ற உணர்வற்ற ஒரு பேரீத்தம் குச்சி ஓதுகின்ற தஸ்பீஹ் மண்ணறைவாசிகளுக்கு போய்ச் சேருகின்றது. அதன் மூலம் அவர்களுக்கு வேதனையும் இலேசாக்கப்படுகிறது என்பது இப்போது கூறப்பட்ட ஹதீஸின் மூலம் உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டதால் முஃமினான ஒரு மனிதன் ஓதுகின்ற குர்ஆனின் நன்மைகள் மண்ணறைவாசிகளுகு;கு போய்ச சேர்ந்து அதன் மூலம் அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படுகிறது என்பது உண்மையிலும் உண்மையாகவும் ஏற்றத்திலும் ஏற்றமாகவும் ஆகிவிடும் அல்லவா? எனவேதான் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதலாம் என்பதற்கும் அதன் மூலம் அவர்கள் பயன் அடைகிறார்கள் என்பதற்கும் கூறப்படுகின்ற ஆதாரங்களில் மேற்கூறப்பட்ட ஹதீஸையும் உலமாக்கள் சேர்த்துள்ளார்கள் என்று கீழ்வரும் கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(பத்ஹுல் பாரி புகாரி ஹதீது எண் 216 க்குரிய விளக்கவுரை, உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 119 புஹாரி ஹதீது எண் 216க்குரிய விளக்கவுரை, ஷரஹ் முஸ்லிம் முஹ்ஸிம் ஹதீது எண் 292க்குரிய விளக்கவுரை, மிஷ்காத் 42ம் பக்கத்தில் உள்ள 8வது ஓரக்குறிப்பு ஹதீது எண் 338க்குரிய விளக்கவுரை, அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 101 பாபு மாஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி)

15. மேலும் ஸய்யிதினா புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது கப்ரில் இரண்டு பேரீத்தம் பாலைகளை வைக்குமாறு வஸியத்து செய்தார்கள். (ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 420 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி என்ற பாடத்திலுள்ள பஸ்லு)

குறிப்பு 2: இப்போது கூறப்பட்ட 15 ஹதீஸ்களில் முந்திய 3 ஹதீஸ்கள் புஹாரி ஷரீபுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கவுரைகளில் மிகவம் பிரசித்திப் பெற்ற மூன்றில் ஒன்றான உம்தத்துல் காரி(ஐனி) என்ற கிரந்தத்தில் இடம் பெற்றவைகளாகும். ஆகவே இதுவரை கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் மரணித்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவது ஆகுமான காரியம் என்றும் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் செயல்படுத்தி வந்த சுன்னத்தான காரியம் என்றும் தெளிவாக அறிந்து கொள்வோமாக!
கேள்வி: இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்வது அவர்களுக்கு போய்ச் சேராது என்று நமது ஷாபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னதாக வந்திருக்கும் சொல்லின் விளக்கம் என்ன?
பதில்: நமது ஷாபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கூறியவாறு சொன்ன சொல்லின் எதார்த்தமான பொருளாகிறது குர்ஆன் மய்யித்தின் முன்னிலையில் ஓதப்படாத நிலையிலேயும் அல்லது தான் ஓதிய குர்ஆனின் நன்மையை மய்யித்திற்கு சேர்ப்பிக்கிறேன் என்று நிய்யத்து வைத்து துஆ ஓதப்படாமல் இருக்கும் கட்டத்திலுமாகும். பொதுவாக அல்ல என்று இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (துஹ்பா பாகம் 7 பக்கம் 74 பஸ்லுன் பீ அஹ்காமின் மஃனவிய்யத்தின் கிதாபுல் வஸாயா)

(அதாவது ஒருவன் ஓதிய ஓதலின் நன்மைக்கு அவனே சொந்தக்காரனாக இருக்கிறான் என்பதால் நான் ஓதிய குர்ஆனின் நன்மையை இன்ன மய்யித்திற்கு ஹதியா செய்கிறேன் என்று அவன் சொல்ல வேண்டும் அல்லது அவன் மனதிலே மய்யித்தை நினைத்து நிய்யத்து செய்து ஓத வேண்டும். இல்லாவிட்டால் சேராது என்பதாகும்.)

மேலும் இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி துஆ செய்வது முஸ்தஹப்பான காரியம் என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களே தாங்கள் எழுதிய அல் உம்மு என்ற கிதாபில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். (அல் உம்மு பாகம் 1 பக்கம் 322 பாபு அததி கபனில் மைய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்)
மேலும் மைய்யித்தை அடக்கி முடிந்தவுடன் குர்ஆனிலிருந்து கொஞ்சத்தை ஓதுவது விரும்பத்தகுந்ததாகும். குர்ஆன் பூராவையும் முழுமையாக ஓதி முடிப்பது மிக்க அழகான காரியமாக இருக்கும் என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் மாணவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள் என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிரந்தங்களில் வந்துள்ளது.

(அல் அத்கார் பக்கம் 137 பாபு மாயக்கூலுஹு பஃதத் தபனி, ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆன் லில் மய்யித்தி அவ் அலல் கப்ரி)

மேலும் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி நன்மையைச் சேர்ப்பிப்பதை ஷாபி மத்ஹபைச் சார்ந்த பிரசித்தி பெற்ற இமாம்களான இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்கள் எழுதிய மின்ஹாஜ் என்ற கிதாபிலும் (பாகம் 3 பக்கம் 202) இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் துஹ்பா என்ற கிரந்தத்திலும் (பாகம் 3 பக்கம் 202 பஸ்லுன் பித்தபனி கிதாபுல் ஜனாயிஸ்), இமாம் ரமளி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் பதாவா ரமலி என்ற நூலிலும் (பாகம் 1 பக்கம் 430)

ஸுயூத்தி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் அல்ஹாவி லில் பதாவா என்ற நூலிலும் (பாகம் 2 பக்கம் 194) ஆகுமென்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலம் அது போன்றே ஷாபி மதுஹபைச் சார்ந்த மாணவர்களுக்கு அரவி மத்ரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படுகின்ற பத்ஹுல் முயீன் (பாபுன் பில் வஸிய்யத்தி –மத்லபுன் பில் ஈஸாயி) என்ற கிதாபிலும் வந்திருக்கின்றது. மேலும் கபுறுகளுக்குச் சென்றால் பாத்திஹா சூராவயும் (ஸூரத்துல் பலக், ஸூரத்துந் நாஸ் என்ற) முஅவ்விதத்தைனியையும் குல்ஹுவல்லாஹு அஹதையும் ஓதி அதன் நன்மையை கபுராளிகளுக்கு சேர்த்து வைய்யுங்கள். கண்டிப்பாக அது அவர்களைச் சென்றடையும் என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பித்தியோக மாணவராகிய இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கின்ற செய்தி இங்கு கவனிக்கத் தக்கதாகும். (மிர்காத் பாகம் 2 பக்கம் 351, இஆனா பாகம் 2 பஸ்லுன் பிஸ் ஸலாத்தி அலல் மைய்யித்தி)

மேலம் ஷாபி மத்ஹபில் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான இஸ்ஸு இப்னு அபதுஸ்ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பூவுலகத்தில் வாழந்து கொண்டிருக்கும் போது இறந்தவர்களுக்காக ஓதப்படும் குர்ஆனின் நன்மை இறந்தவர்களுக்கு போய்ச் சேராது என்று பத்வா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த போது அவர்களின் மாணவர்களில் சிலர் அவர்களைக் கனவில் கண்டு இறந்தவர்களுகு;கு குhத்ஆன் ஓதுவதின் நன்மை அவர்களுக்க போய்ச் சேராது என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்களே அது பற்றி இப்போது உங்களின் கருத்து என்னவென்று கேட்டார்கள். அதற்கவர்கள் நான் துன்யாவில் இருக்கும் போது தான் அப்படிச் சொல்பவனாக இருந்தோன். இப்போது நான் அந்தக் கருத்திலிருந்து (ருஜுஃ) வாபஸ் ஆகிவிட்டேன். ஏனெனில் அது விஷயத்தில் அல்லாஹு தஆலா மிக தயாளம் உள்ளவனாக இருக்கின்றான் என்பதையும் நிச்சயமாக குர்ஆன் ஓதிய நன்மைகள் மய்யித்தைப் போய்ச்சேருகிறது என்பதையும் நன்றாக கண்டு கொண்டேன் என்று கூறினார்கள்.
(ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனில் லில் மய்யித்தி அவ் அலல் கபுரி, அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 111 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இன்தல் கபுரி)

மேலும் மய்யித்திற்காக துஆ செய்வது எப்படி மய்யித்தை சென்றடைகிறதோ அது போன்றே குர்ஆன் ஓதுவதும் மய்யித்தை சென்றடைகிறது என்றும் அது மய்யித்தினுடைய பிள்ளைகளிலிருந்து அவானின் மனைவியிலிருந்தும் நண்பர்களிலிருந்தும் இன்னும் ஏனைய முஃமின்களிலிருந்தும் ஸதக்காவாக இருக்கின்றது என்றும் (அத்தத்கிரா பக்கம் 108) கபுரு ஸியாரத் செய்பவர்கள் குர்ஆனிலிருந்து கொஞ்சத்தை ஓதி கபுராளிக்கு சேர்ப்பது அவர்களுக்கு செலுத்தும் காணிக்கையாக இருக்கின்றது என்றும்;(அத்தத்கிரா பக்கம் 103) ஸதகாவின் நன்மை எப்படி மய்யித்திற்கு போய்ச் சேருகிறதோ அப்படியே குர்ஆன் ஓதுதல், துஆ செய்தல், இஸ்திஃபார் செய்தல் ஆகியவைகளும் அவர்களைச் சென்றடையும் . ஏனென்றால் அவைகள் அனைத்துமே ஸதக்காகவே இருக்கின்றது. மேலும் ஸதக்கா என்பது பொருளுக்கு மட்டும் சொந்தமில்லை. ஏனெனில் ஒவ்வொரு தஸ்பீஹும் ஸதக்காவாகும். ஒவ்வொரு தக்பீரும் ஸதகாக்காவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஸதகாவாகும். (முஸ்லிம் ஹதீது எண் 270 – 84 பாபு இஸ்த்திஹ்பாபி ஸலாத்தில் லுஹா கிதாபு ஸலாத்தில் முஸாபிரீன்) ஒவ்வொரு நல்ல வார்த்தைகளும் ஸதக்காவாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி ஹதீது எண் 2989 பாபு மன் அகத பிர்ரிகாபி வனஹ்விஹி கிதாபுல் ஜிஹாத்) என்றும் அத்தத்கிரா என்ற கிரந்தத்தில் (பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி) வந்துள்ளது.

ஆகவே இதுவரை கூறப்பட்ட விளக்கங்களின் மூலம் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்வது மற்ற மத்ஹபுகளில் சுன்னத் என்று இருப்பது போல ஷாபி மத்ஹபிலும் சுன்னத்தான காரியம் என்பதை அறநிது கொள்வதுடன் ஷாபி மத்ஹபைச் சார்ந்தோர் ஷாபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சொல்லுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கின்றனர் என்பதையும் சன்மார்க்கத்தை சரியாக விளங்காத சகோதரர்கள் அறிந்து கொள்வார்களாக!

கேள்வி: குர்ஆன் ஓதி தமாம் செய்யும் போது ஸலவாத், அஸ்மாவுல் ஹுஸ்னா மற்றும் வ இலாஹுக்கும் இலாஹுன் வாஹித் என்று தொடரும் வசனங்களை ஓதி அதன்பின் துஆ ஓதுகின்றார்களே. அதற்கு என்ன ஆதாரம்?

ஸலவாத் அவசியம்

பதில்:
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பள்ளியில்) அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழுதார். தொழுது முடித்தவுடன் இறiவா! என் பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் எனக்கு கிருபை செய்வாயாக! என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுபவரே! அவசரப்பட்டு விட்டீர். தொழுது முடித்து (துஆவுக்காக) அமர்ந்து விட்டால் அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான வார்த்தைகளால் புகழ்வீராக! இன்னும் என் மீது ஸலவாத் சொல்லி அதன் பிறகு அவனிடம் பிரார்த்திப்பீராக!' என்று கூறினார்கள். இந்நிழ்வு நடந் சிறிது நேரத்தில் வேறொரு மனிதர் வந்து தொழுதார். அதன் பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மீது ஸலவாத் சொன்னார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து தொழுதவரே நீர் பிரார்த்திப்பீரானால் உமது துஆ ஒப்புக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.      

(திர்முதி ஹதீது எண் 3476-65 வது பாபு கிதாபுத் தஅவாத், நஸாஇ பாகம் 3 பக்கம் 44 ஹதீது எண் 1284 பாபுத் தம்ஜீத், அஹ்மது பாகம் 6 பக்கம் 18, மிஷ்காத் ஹதீது எண் 930 பக்கம் 86 பாபுஸ்ஸலாத்தி அலன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

நிச்சயமாக பிரார்த்தனைகள் அனைத்தும் வானம் பூமிக்கிடையே தடுத்து வைக்கப்படுகின்றன. உமது நபியின் பேரில் ஸலவாத் சொல்லுகின்றவரை அது (வானத்தின் பால்) உயராது என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

(திர்மிதி ஹதீது எண் 486 பாகம் 2 பக்கம் 356 பாபு மா ஜாஅ பீ பழ்லிஸ் ஸலாத்தி அலன் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நஸாஇ ஹதீது எண் 1309, மிஷ்காத் பக்கம் 87 ஹதீது எண் 938 பாபுஸ் ஸலாத்தி அலன் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

குறிப்பு:: இப்போது கூறப்பட்ட ஹதீதுகளில் முதலாவது ஹதீது துஆவை துவங்கும் போது ஸலவாத் ஓதுவது அவசியம் என்பதையும், இரண்டாவது ஹதீது துஆ ஓதிமுடித்த பின் ஸலவாத்து சொல்வது அவசியம் என்பதைக் காட்டுவதுடன் ஸலவாத்தை வஸீலாவாக ஆக்கப்படாவிட்டால் துஆ ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது                                    என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

அல் அஸ்மாவுல் ஹுஸ்னா                                   

மேலும்அல்லாஹ்வுக்குஅழகியதிருநாமகங்கள் இருக்கின்றன. ஆகவே அவற்றை (வஸீலாவாக) வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். (அல் அஃராப் 180) என்று அல்லாஹு கூறுகின்றான்.

இஸ்முல் அஃலம் எதில் இருக்கிறது?

அல்லாஹ்வுடைய இஸ்முல் அஃலம் என்பது இவ்விரு ஆயத்துகளில் இருக்கிறது. (முதலாவது) வ இலாஹுக்கும் இலாஹுன் வாஹிதுன் லாஇலாஹ இல்லாஹுவர் ரஹ்மானுர் ரஹீம் என்ற (பகரா சூராவின் 163வது) ஆயத்தாகும். (இரண்டாவது) ஆல இம்ரான் சூராவின் ஆரம்பமான அலிப் லாம் மீம். அல்லாஹு லாஇலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் என்பதாகும் என்று திட்டமாக திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத் ஹதீது எண் 1496 பாபுத் துஆ இ கிதாபுஸ் ஸலாத்தி, மிஷ்காத் பக்கம் 200 ஹதீது எண் 2291 கிதாபு அஸ்மா இல்லாஹி தஆலா)

குறிப்பு: எனவே தான் சுன்னத் வல் ஜமாஅத்துடைய உலமாப் பெருந்தகைகள் கத்தம், பாத்திஹா போன்ற பிரார்த்தனை வைபவங்கள் அனைத்திலும் அஸ்மாவுல் ஹுஸ்னாவுக்கும், இஸ்முல் அஃலம் உள்ளடங்கி இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் குறிப்பிடப்பட்ட மேற்படி இரு ஆயத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஓதி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமாக!

இஸ்முல் அஃலம் என்றால் என்ன?

 எதை (ஓதி) பிரார்த்தித்தால் அல்லாஹ் அங்கீகரிப்பானோ எதை (ஓதி) கேட்டால் அல்லாஹ் கொடுப்பானோ அப்படிப்பட்ட ஒரு வாசகமாகும்.

(திர்முதி ஹதீது எண்: 3475 பாபு ஜாமிஇத் தஅவாத்தி கிதாபுத் தஅவாத்தி, அபூதாவூத் ஹதீது எண் 1493 பாபுத் துஆஇ கிதாபுஸ் ஸலாத்தி, இப்னு மாஜா ஹதீது எண் 3857 பாபு இஸ்மில் லாஹில் அஃலம் கிதாபுல் அதப், மிஷ்காத் பக்கம் 200 ஹதீது எண் 2289 கிதாபு அஸ்மா இல்லாஹி தஆலா)

கேள்வி: மேற்படி வைபவத்தில் ஏன் தஸ்பீஹ் ஓதுகிறார்கள்?

பதில்: ஸய்யிதினா ஸஃது இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டபோது திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுப்ஹானல்லாஹ் என்று ஓதினார்கள். அவர்களுடன் சேர்ந்து ஸஹாபாக்களும் நீணு;ட நேரம் தஸ்பீஹ் ஓதினார்கள். பிறகு அல்லாஹு அக்பர் என்று தக்பீர் ஓதினார்கள். பிறகு ஸஹாபா பெருமக்கள் நாயகமே! ஏன் தஸ்பீஹ் ஓதினீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஸாலிஹான மனிதருக்கு அவரின் கபுர் நெருக்கமாகிவிட்டது. நாம் ஓதிய தஸ்பீஹ் மூலம் அந்த கஷ்டத்தை அல்லாஹ் நீக்கிவிட்டான் என்று கூறினார்கள்.

(அஹ்மத் பாகம் 3 பக்கம் 360, மிஷ்காத் பக்கம் 26 ஹதீது எண் 135 பாபு இஸ்பாத்தி அதாபில் கபுரி)

கேள்வி: மேற்படி மஜ்லிஸ்களில் ஏன் தஹ்லீல் (லா இலாஹ இல்லல்லாஹு) ஓதுகிறார்கள்?

பதில்: ஜனாஸாவின் ஹக்கில் லாஇலாஹ இல்லல்லாஹு என்ற சொல்லை அதிகப்படுத்துங்கள் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அல்ஜாமிவுஸ் ஸகீர் பாகம் 1 பக்கம் 209 ஹதீது எண் 1408)

மேலும் எவர் லாஇலாஹ இல்லல்லாஹு என்று எழுபதாயிரம் தடைவ ஓதுகிறாரோ அவரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் வந்துள்ளது.

(அல்மிர்ஆத் பாகம் 3 பக்கம் 517 -இர்ஷாதுல் இபாத் பக்கம் 10 பாபுல் ஈமான்)

கேள்வி: இறந்தவரின் பெயரால் உணவு வழங்குவதற்கு ஆதாரம் உண்டா?

பதில்: திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது துணைவியார் கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வபாத்தாகிவிட்டபோது அதிகம் அதிகம் அவர்களை ஞாபகம் செய்பவர்களாக இருந்தார்கள். சில சமயங்களில் ஆட்டை அறுத்து தனித்தனி உறுப்புகளாக வெட்டி கதீஜா நாயகி அவர்களின் தோழிமார்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்பார்கள் என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி ஹதீது எண் 3818 பாபு தஸ்வீஜின் நபி கதீஜத்த ரலியல்லாஹு அன்ஹா கிதாபு பழாஇலி அஸ்ஹாபின் நபிய்யி, புஹாரி ஹதீது எண் 6004 பாபு ஹுஸ்னில் அஹ்தி மினல் ஈமானி கிதாபுல் அதப், முஸ்லிம் ஹதீது எண் 2435 பாபு பழாஇலி கதீஜா கிதாபு பழாயிலிஸ் ஸஹாபத்தி, திர்மிதி ஹதீது எண் 3875 கிதாபுல் மனாக்கிப் பாபு பழ்லி கதீஜத்த ரலியல்லாஹு அன்ஹா, தி;மிதி ஹதீது எண் 2017 பாபு மா ஜாஅ பீ ஹுஸ்னில் அஹ்தி கிதாபுல் பிர்ரி வஸ்ஸிலத்தி, மிஷ்காத் பக்கம் 573 ஹதீது எண் 6186 கிதாபுல் மனாகிப்)

கேள்வி: மய்யித்தை அடக்கிய அன்று ஓதப்படுகின்ற முதலாம் கத்தத்திற்கும் அதைத் தொடர்ந்துள்ள 3,5,7,15,20,30,40 ஆகிய தினங்களில் ஓதப்படுகின்ற கத்தங்களுக்கும் மற்றும் வரு வருஷக் கத்தம் ஓதுவதற்கும் ஏதேனும் ஆதாரம் உண்டா?

பதில்: முதலாம் கத்தம்.

1. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரின் மேல் நின்று கொண்டு கப்று தோன்றுபவரைப் பார்த்து மய்யித்தின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் குழியை விசாலப்படுத்துமாறு யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து திரும்பியபோது இறந்தவரின் மனைவி அனுப்பி வைத்த அழைப்பாளர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (உணவு உண்பதற்காக) அழைத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. உடனே உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். பிறகு எல்லோரும் சாப்பிட்டார்கள் என்று ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத் ஹதீது எண் 3332 பாபுன் பீ இஜ்தினாபிஷ் ஷுப்ஹாத்தி கிதாபுல் புயூஇ, மிஷ்காத் பக்கம் 544 ஹதீஸ் எண்: 5942 பாபுன் பில் முஃஜிஸாத்தி)

2. ஸய்யிதத்துனா ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பத்தாரில் எவரேனம் வபாத்தாகிவிட்டால் அதற்காக பெண்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு அந்த மய்யித்து வீட்டுடையவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தவிர மற்றவர்கள் உவ்வாம் போய்விடுவார்கள். உடனே ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சட்டியில் பாயாசம் தயார் செய்யுமாறு கூறுவார்கள். பிறகு ரொட்டி சமைக்கப்பட்டு அதன் மீது அந்த பாயாசத்தை ஊற்றி அந்தப் பெண்களைப் பார்த்து சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள். (இந்த உணவுக்கு தல்பீனிய்யா என்று பெயர்). மேலும் இந்த உணவு நோயாளிகளின் இதயத்திற்கு வலுவூட்டக் கூடியதாகவும் கவலையைப் போக்கக் கூடியதாகவும் இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்றும் கூறுவார்கள்.

(புஹாரி ஹதீது எண் 5417 பாபுத் தல்பீனா கிதாபுல் அத்இமா, புகாரி ஹதீது எண் 5689 பாபுத் தல்பீனத்தி லில் மரீழி கிதாபுத் திப்பி, முஸ்லிம் ஹதீது எண் 2216-90 பாபுன் அத் தல்பீனத்து முஜிம்மத்து-கிதாபுஸ்ஸலாம், முஸ்னத் அஹ்மத் பாகம் 6 பக்கம் 80 ஹதீது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு, மிஷ்காத் ஹதீது எண் 4179 பக்கம் 364 கிதாபுல் அத்இமா)

3. இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அவர்கள் தனது மரணத் தருவாயில் பின்வருமாறு வஸிய்யத்து செய்தார்கள். 'நான் மரணித்து என்னை கப்ரில் அடக்கம் செய்தபின் மக்கள் திரும்பி வந்தால் நீங்கள் ஒட்டகத்தை அறுத்து அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும்' என்று (தனது உருத்தாளிகளுக்கு) கூறினார்கள்.

(தபகாத் இப்னு ஸஹ்து பாகம் 7 பக்கம் 12)

4. ஸஹாபாக்களில் பிரசித்தி பெற்ற அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது மரணத்தருவாயில் தனது பெண்மக்களை அழைத்து 'நான் மரணித்'துவிட்டால் என் (ஜனாஸா) தொழுகையில் கலந்து கொள்வதற்காக மக்கள் வருகைத் தருவார்கள். அதன் பின் என்னை நல்லடக்கம் செய்துவிட்டு மீண்டும் நம் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து நீங்கள் உணவு கொடுங்கள்' என்று வஸிய்யத்து செய்தார்கள். இதைப் பற்றி கில்காலி ரலியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழர் கூறுகையில், நாங்கள் பதினான்குபேர் அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மைய்யித்துத் தொழுகையிலும் நல்லடக்கத்திலும் பங்கு பற்றினோம். பிறகு அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் அழைத்ததற்கிணங்க உணவு உண்ணுவதற்காக அவர்களின் வீட்டிற்குச் சென்றோம் என்று கூறினார்கள். இந்த நிகழ்ச்சியை இப்னு ஜரீர் அத்தப்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தாரீகுல் உமம் வல் முலூக் என்ற கிதாபில் (பாகம் 2 பக்கம் 679) பதிவு செய்துள்ளார்கள்.

4. ஜுனைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மரணம் நெருங்கிய சமயத்தில் அபூ முஹம்மது அல்ஜரீரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து தமது ஜனாஸாவை அடக்கிவிட்டு திரும்பி வருபவர்களுக்கு கல்யாண (வலீமா) விருந்தைப் போன்று உணவு சமைத்துக் கொடுக்குமாறு வஸிய்யத்து செய்தார்கள்.

(அல் மிர்காத் பாகம் 4 பக்கம் 585 அஸ்ஸதகத்து அலல் மய்யித்தி)

குறிப்பு: இப்போது கூறப்பட்ட 5 ஹதீஸ்களும் இறந்தவரை நல்லடக்கம் செய்த அன்று முதலாம் கத்தம் என்ற பெயரில் அந்த மய்யித்திற்காக கொடுக்கப்படுகின்ற விருந்தைப் பற்றி மாத்திரமே தெளிவு படுத்தக் கூடியதாக இருக்கின்றது என்றாலும் மய்யித்திற்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்தல் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் மூலமாகவும் அது சம்பந்தமாக பின்னால் வருகின்ற விஷயங்கள் மூலமாகவும் அன்றைய தினத்தில் குர்ஆன் ஓதி ஹத்யா செய்வதற்கு ஆதாரம் எடுத்துக் கொள்ள முடியும். மேலும் மய்யித்திற்காக குர்ஆன் ஓதி ஹதியா செய்வதற்கு நமது வசதிக்காகத்தான் நமது முன்னோர்கள் சில ஹதீஸ்களையும் ஸஹாபாக்களின் வழிமுறைகளையும் ஆதாரமாக வைத்து சில நாட்களை குறிப்பாக்கித் தந்து இருக்கிறார்களே தவிர அந்த நாட்களில் மட்டும்தான் ஓத வேண்டும் என்பதற்கு அல்ல. மரணித்து விட்ட நமது குடும்பத்தவரை நினைத்து எந்த நேரத்தில் குர்ஆன் ஓதி அவர்களுக்காக ஹதியா செய்தாலும் அல்லாஹு தஆலா அதை ஏற்று அவர்களுக்கு சேர்ப்பிக்க போதுமானவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வோமாக!.

3ம் நாள் கத்தம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகனார் இப்றாஹீம் ரலியல்'லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகி மூன்றாம் நாள் அன்று அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழம், பால், தொலிக் கோதுமையால் ஆன ரொட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வைத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ஹம்து சூராவை ஒருவிடுத்தம் குல்ஹுவல்லாஹு அஹது சூரா 3 விடுத்தம் ஓதி கையை உயர்த்தி பிரார்த்தித்து விட்டு கையை முகத்தில் தடவினார்கள். பிறகு அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இதை மக்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடு;ங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(பதாவா அர்வஹன்தி தஸ்ஹீஹுல் அகாயித் பக்கம் 128)

5ம் நாள் கத்தம்:

உடம்பை விட்டும் உயிர் பிரிந்து மூன்று நாட்கள் கழிந்தும விட்டால் அந்த ஆன்மா அல்லாஹ்வின் சமூகத்தில் நாயனே! நான் இருந்து வந்த உடம்பை பார்த்து வருவதற்கு எனக்கு அனுமதி அளிப்பாயாக என்று கேட்கின்றது. உடனே அல்லாஹு தஆலா அது சென்று வருவதற்கு அனுமதி அளிப்பான். அப்போது அந்த ஆன்மா தனது கப்;ருக்கு சற்று தூரத்தில் இருந்து  கொண்டு தனது உடம்பைப் பார்க்கும். அப்போது இரு மூக்கு துவாரத்திலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும். இதைக் கண்ணுற்ற அந்த ஆத்மா தனது உடம்பின் நிலையை நினைத்து நீண்ட நேரம் அழுதுவிட்டு பிறகு திரும்பிச் சென்று விடும். ஐந்து நாட்கள் கழிந்து விட்;டால் மீண்டும் அல்லாஹ்விடம் அனுமதி பெற்று தனது உடம்பைப் பார்ப்பதற்காக வரும். அப்போது அதன் வாயிலிருந்து இரத்தமும் அதனடைய ஒரு காதுகளிலிருந்து சீலும் ஊனமும் வடிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மீண்டும் அழுது விட்டு சென்று விடும். பிறகு ஏழாவது நாளில் மீண்டும் வந்து தனது உடம்பைப் பார்க்கும். அப்போது தனது உடம்பை புழுக்கள் கடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மீண்டும் அழ ஆரம்பித்துவிடும். மேலும் தான் இப்பூவுலகில் வாழ்ந்த சொகுசான வாழ்க்கையைத் தற்போதுள்ள கபுருடைய கஷ்டமான வாழ்க்கையோடு ஒவ்வொரு வகையிலும் ஒப்பிட்டு பார்த்தவண்ணம் தன் நிலையை நினைத்து நினைத்து நீண்ட நேரம் அழுது விட்டு மீண்டும் சென்று விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் வந்துள்ளது. (தக்காயிகுல் அக்பார் 16வது பக்கம் 9வது பாபு அத்துரருல் ஹிஸாப் பக்கம் 16) இப்போது கூறப்பட்ட இந்த ஹதீஸில் வந்துள்ளது போன்று தனது உடம்பு நாதியற்று கிடக்கும் நிலையையும் தனது குடும்பத்தாரோ உறவினர்களோ கைகொடுத்து காப்பாற்றாமல் தான் மட்டும் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கிறோமே என்றும் நினைத்து கவலைப்படுகின்ற நேரத்தில் அந்த மய்யித்தை நினைத்து ஓதப்படுகின்ற கத்தத்தின் நன்மை அதற்கு போய்ச் சேருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றது என்ற காரணத்தினால் மேற்கூறப்பட்ட       தினங்களில் அதாவது 3,5,7 ஆகிய தினங்களில் கத்தம் ஓதப்படுகின்றது.

7ம் நாள் கத்தம்:

மரணித்தவர்கள் நிச்சயமாக தாங்களின் கபுருகளில் 7 நாட்கள் குழப்பத்தில் உட்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள் அந்த ஏழு நாட்களில் தாங்கள் பெயரால் உணவுமூ கொடுக்கப்படுவதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தாவூஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இமாம் அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஸுஹ்து என்ற நூலிலும் அபூநயீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஹில்யா என்ற நூலிலும் கூறுகிறார்கள் என்று ஷரஹுஸ்ஸுதூர் என்ற நூலின் 139 வது பக்கத்திலும் பிக்ஹுஸுன்னா 369வது பக்கத்திலும் ஹாவி பாகம் 2 பக்கம் 178 வது பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹதீதை இப்னு ஹஜர் இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹீஹ் ஆனது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.             

(அல்மி;ர்ஆத் பாகம் 4 பக்கம் 584 மற்றும் பாகம் 3 பக்கம் 514)

மேலும் நிச்சயமாக கபுராளிகளைத் தொட்டும் செய்யப்படும் தானதருமங்கள் அவர்களுடைய கபுருகளில் உள்ள சூட்டை (உஷ்ணத்தை) அமர்த்தி விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் என்று உக்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு தபரானியில் பதிவாகியுள்ள ஹதீது (பிக்ஹு ஸுன்னா பக்கம் 368 – அல் மி;ஆத் பாகம் 3 பக்கம் 514) இங்கு சிந்தனைக்குரியதாகும். மேலும் 7 நாட்கள் உணவு கொடுக்கும் பழக்கம் ஸஹாபாக்கள் காலம் தொட்டு இதுகாலம் வரை மக்கா, மதீனாவில் நடந்து வருகிறது என்று ஹாவியில் (பாகம் 2 பக்கம் 194) ஸுயூத்தி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோன்றே அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 585லிலும் வந்துள்ளது.                                          

30 ம் நாள் பாத்திஹா:

ஒரு முஃமினான மனிதன் இறந்து விட்டால் அவனுடைய ஆன்மா தனது சொத்துக்களை தனது வாரிசுகள் எப்படி பங்கு வைக்கிறார்கள், தனது கடன்களை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைக் கவனித்த வண்ணம் ஒருமாத காலம் (30 நாட்கள்) அவனது வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. மேலும் ஒரு மாதம் நிறைவாகி விட்டால் அவனது கப்ருக்குச் சென்று தனது வாரிசுகளில் தன்னை நினைத்து கவலைப்படுபவர்கள் யார் தனக்காக துஆ செய்பவர்கள் யார் என்பதை கவனித்த வண்ணம் ஒரு வருடம் வரை அவனது கப்ரைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. ஒரு வருடம் நிறைவாகிவிட்டால் கியாமத் நாள்வரை அவனது ஆன்மா (வானத்தளவில்) உயர்த்தப்பட்டு விடுகின்றது என்று அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கபபட்டுள்ள செய்தி வந்துள்ளதால் 30 ம் நாள் பாத்திஹா அனுஷ்டிக்கப்படுகிறது.              

(அத்துரருல் ஹிஸான் பக்கம் 12, தக்காயிருல் அக்பர் பக்கம் 17-19வது பாபு, ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 358 பாபு தலாக்கி அர்வாஹில் மவ்தா…)

40 ம் நாள் பாத்திஹா:

மேற்கூறப்பட்ட ஹதீஸைப் போன்றே இறந்தவர்கள் 40 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதனால் அந்த நாட்களில் அவர்களுக்காக உணவு கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்புவதாகவும் இதன் நிமித்தம் ஸஹாபாக்கள் காலத்திலும் இந்த முறை இருந்து வந்ததாகவும் பிக்ஸுன்னா 369ம் பக்கத்திலும் அல் மிர்ஆத் 584வது பக்கத்திலும் வந்துள்ளது.                        

எனவேதான் அந்த 40 நாட்களுக்கும் உணவு கொடுப்பது சிரமமாகும் என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் சில குறிப்பிட்ட நாட்களை அதாவது 1, 3, 5, 7, 10, 20, 30, 40 என்றோ அல்லது 1, 3, 5, 7, 10, 15, 25, 40 என்Nறூ குறிப்பிட்டு   இருக்கிறார்கள் என்பதை அறிந்து  கொள்வோமாக.                     

வருட பாத்திஹா:

இறந்த மய்யித்தின் ஆன்மா வருடாவருடம் தன் இல்லத்திற்கு வருகை தருகிறது என்று 'தகாயிகுல் அக்பார்' போன்ற கிரந்தங்களில் (நாம் சற்று முன்பு குறிப்பிட்டுள்ளது போல) வந்துள்ளதாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருடந்தோறும் ஷுஹதாக்களின் கப்ருகளுக்கு சென்று துஆ செய்து விட்டு வருதாக தப்ரானி இமாம் அவர்களுக்குரிய அவ்ஸத் என்ற ஹீது கிதாபில் (பாகம் 3 பக்கம் 241) வந்துள்ளதாலும் வருடாவருடம் மய்யித்தின் பேரில் ஸதக்காவாக செய்யப்படுகின்ற விருந்துபச்சார வைபவம்(கத்தம்) முற்காலம் தொட்டு செய்யப்பட்டு வருகின்ற காரியமாகவும் அதன் நோக்கம் மார்க்க அறிஞர்களையும் மற்றவர்களையும் அழைத்து மய்யித்தின் பேரில் கிருபை கொண்டு பிரார்த்திக் வைப்பதாகவும் இருப்பதால் இது ஒரு நல்ல காரியம் என்று மகான்களாகிய நமது முன்னோர்களின் தெளிவான மார்க்கத் தீர்ப்பு இருப்பதாலும் (அல்மி;ஆத் பாகம் 4 பக்கம் 585) வருடபாத்திஹா அனுஷ்டிக்கப்படுகிறது.                     

கேள்வி:
ஏன் பராஅத் அன்று (சில பகுதிகளில்) ரொட்டி சுட்டு கத்தம் ஓதப்படுகின்றது?

பதில்:

1. நோன்புப் பெருநாள், துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள், ரஜபு மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை, ஷஃபான் மாதத்தின் 15வது இரவு, வெள்ளிக்கிழமை இரவு ஆகிய தினங்களில் மய்யித்துகள் தாங்களின் கபுருகளிலிருந்து வெளியாகி தங்களுடைய வீட்டு வாசல்களில் நின்று கொண்டு இந்த இரவில் எங்கள் மீது ரொட்டியால் ஆன ஒரு கவளம் உணவை ஸதக்கா செய்வதின் மூலமாவது எங்களின் மீது கிருபை காட்டுங்கள்.ஏனெனில் நிச்சயமாக நாங்கள் அதன்பால் மிகத்தேவையானவர்களாக இருக்கின்றோம் என்று கூறுகின்றன. அப்படி எதையேனும் பெற்றுக் கொள்ளாவிட்டால் மிக நஷ்டத்துடன் திரும்பிச் செல்கின்றன என்று ஸய்யிதினா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த மிகப்பெரும் இமாம்களில் ஒருவரும் உலகத்தரிலுள்ள அத்தனை அரபி கலாபீடத்திலும் பாடமாக நடத்தப்படுகின்ற தப்ஸீர் ஜலாலைன் கிரந்தத்தையும் இன்னும் எண்ணற்ற கிரந்தங்களையும் இவ்வுலகுக்கு காணிக்கையாக்கி தந்த மிகப்பெரும் மார்க்க மேதையான ஸுயூத்தி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்களின் அத்துரருல் ஹிஸான் என்ற நூலின் 12ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.                                

2. மேலும் பெருநாள் இரவு, ஆஷூரா நாள், ரஜபு மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை, பராஅத்துடைய இரவு, லைலத்துல் கத்ரு இரவு, வெள்ளிக்கிழமை இரவு ஆகிய தினங்களில் அம்வாத்துக்களின் ஆன்மாக்கள் தங்களின் கபுருகளிலிருந்து வெளிக்கிளம்பி தாங்களின் வீட்டு வாசல்களில் வந்து நின்று கொண்டு இதுபோன்ற புனிதமான இரவுகளில் ஸதக்கா செய்வது கொண்டோ அல்லது ஒரு கவளம் உணவைக் கொண்டோ எங்களின் மீது கிருபை காட்டுங்கள். ஏனெனில் நிச்சயமாக நாங்கள் அதன்பால் தேவையானவர்களாக இருக்கின்றோம். மேலும் அதில் கஞ்சத்தனம் காட்டீனீர்களானால் பாத்திஹா ஸூராவை ஓதுவதன் மூலமாவது எங்களை நினைத்துப் பாருங்கள் என்று கூறுகின்றார்கள் என்று ஸய்யிதினா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அல் இமாம் அப்துர் ரஹீம் இப்னு அஹ்மதுல் காழி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்முடைய தக்காயிக்குல் அக்பார் என்ற கிதாபில் 17ம் பக்கத்தில்      குறிப்பிட்டுள்ளார்கள்.

பராஅத் அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விசேஷ ஸியாரத் செய்துள்ளார்கள்.                                       

ஒரு நாள் இரவு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அவர்களோ ஜன்னத்துல் பகீவு என்று மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தவையை வானத்தின் பக்கம் உயர்த்pயவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.  நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்;ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                    

(திர்முதி ஹதீது எண் 739 பாபு மா ஜாஅ பீ லைலத்தின் நிஸ்பி மின் ஷஃபான் கிதாபுஸ் ஸவ்ம், இப்னுமாஜா ஹதீது 1389 பாபு மா ஜாஅ பீ லைலத்தின் நிஸ்பி மின் ஷஃபான் கிதாபு இக்காமத்திஸ் ஸலாத்தி, முஸ்னத் அஹ்மத் பாகம் 6 பக்கம் 238 ஹதீஸ் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, மிஷ்காத் பக்கம்115 ஹதீது எண் 1299 பாபு கியாமி ஷஹ்ரி ரமலான்)

பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும்  இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இராவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது என்று நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று ஆயஜஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (மிஷ்காத் பக்கம் 115 ஹதீது எண் 1305 பாபு கியாமி ஷஹ்ரி ரமலான்)

கேள்வி 8:

மைய்யித் வீட்டினர் தங்களுடைய குடும்பத்தில் இறந்து விட்டவரை நினைத்து கவலையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்காக பக்கத்து வீட்டவர்கள் உணவு சமைத்துக் கொடுப்பது சுன்னத் என்று அனைத்து மத்ஹபு கிதாபுகளிலும் வந்திருக்கும் போது மய்யித் வீட்டினரே மற்றவர்களை அழைத்து கத்தம் ஓதுகிறோம் என்ற பெயரில் உணவு கொடுப்பது அவர்கள் பின்பற்றும் மத்ஹபுக்கே மாற்றம் செய்கின்ற செயலாகும் அல்லவா?

பதில்:

மைய்யித் வீட்டினருக்காக பக்கத்து வீட்டினர் உணவு தயாரித்து கொடுப்பது ஸுன்னத் என்று மத்ஹபுடைய கிதாபுகளில் சொல்லப்பட்டிருப்பதற்கு காரணம் என்னவென்றால் (கேள்வியில் குறிப்பிட்டது போன்று) மய்யித்து வீட்டினர் தமது குடும்பத்தில் உள்ள ஒருவர் தங்களை விட்டுப் பிரிந்து விட்டாரே என்ற கவலையில் இருந்து கொண்டு உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள் என்ற காரணத்தினாலாகும். இந்தக் கருத்தைத் தான் ஸய்யிதினா ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூத்தா போரில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சேர்ந்த போது ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தாருக்கு உணவு தயாரித்து கொடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்களுக்கு கவலைத் தரக்கூடியது வந்து விட்டது என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதி ஹதீது எண் 998 பாபு மா ஜாஅ பித்தஆமி யுஸ்னவு லி அஹ்லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் ஹதீது எண் 3132 பாபு ஸுன்அத்தித் தஆமி லி அஹ்லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண் 1610 பாபு மா ஜாஅ பித் தஆமி…. கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1739 பாபு பகாஇ அலல் மய்யித்தி)

என்ற ஹதீஸ் தெளிவுபடுத்தக் கூடியதாக இருக்கின்றது. ஆனால், சன்மார்க்கத்தை சரியாக விளங்காத நமது சகோதரர்கள் கூறுவது போன்று இறந்த வீட்டில் அறவே உணவு தயாரிக்கக் கூடாது என்பது அல்ல. அவர்கள் கூறுவது போன்று இறந்த வீட்டில் உணவு தயாரிப்பது முற்றிலும் தடையானது என்று இருந்திருக்குமேயானால் மேற்கூறப்பட்ட ஹதீதுகளில் வந்துள்ளது போன்று ஸய்யிதினா ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்த வீட்டில் தல்பீனியா உணவு சமைத்திருக்க மாட்டார்கள். மேலும் மைய்யித்தை அடக்கி முடிந்த கையுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் அந்த மய்யித் வீட்டிற்கு உணவு அருந்த சென்றிருக்க மாட்டார்கள். மேலம் ஸய்யிதினா இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்மை நல்லடக்கம் செய்து விட்டு திரும்பி வருபவர்களுக்கு ஒட்டகம் அறுத்து உணவு சமைத்துக் கொடுக்க வேண்டுமென்று தமது குடும்பத்தாரிடம் வஸிய்யத் செய்திருக்க மாட்டார்கள்.
மேலும் தம்மை அடக்கம் செய்து விட்டு வருவோருக்கு ஆடு அறுத்து உணவு கொடுக்க வேண்டுமென்று ஸய்யிதினா அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வஸிய்யத் செய்திருக்க மாட்டார்கள். மேலும் பிரசித்திப் பெற்ற மிகப்பெரும் ஸூபியான ஜுனைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்மை அடக்கம் பண்ணிவிட்டு வருபவர்களுக்கு வலீமா விருந்து கொடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் ஜாஹிலிய்யா காலத்து மக்களிடம் இருந்து வந்தது போன்று இறந்தவரை நினைத்து ஒப்பாரி வைப்பதும் அதற்காக கூலிக்கு மாரடிப்போரை பிடிப்பதும் அவர்களுக்காக இறந்த வீட்டில் உணவு தயார் செய்வதும் முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். இதைத்தான் இறந்தவரின் வீட்டில் பலர் ஒன்று கூடுவதையும் அவர்களுக்காக மைய்யித் வீட்டினர் உணவு சமைப்பதையும் ஒப்பாரியிலிருந்து உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம் என்று ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

(இப்னுமாஜா ஹதீது எண் 1612 பாபு மா ஜாஅ பின் நஹ்இ அனில் இஜ்திமாஇ)

மேலும் இதைக் குறித்து பிக்ஹு கிதாபுகளிலும் ஹராம் என்று தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஜாஹிலிய்யா காலத்து மக்களிடம் இருந்து வந்த அந்த பழக்கம் இப்போதும் முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தவர்களிடம் இருந்து வருவதை நாம் யாவரும் நன்கறிவோம். இது போன்ற அமைப்பு இல்லாதிருக்கும் பட்சத்தில் இறந்தவரின் வீட்டில் உணவு சமைப்பதில் எவ்வித தடையும் இல்லை. (பிக்ஹு ஸுன்னா பக்கம் 370 மிர்காத் பாகம் 11 பக்கம் 223) மேலும் மய்யித்தின் நிமித்தம் கிராமங்களிலிருந்தும் தூரமான இடங்களிலிருந்தும் வந்திருப்பவர்கள் வாகன வசதியில்லாத காரணத்தினால் திரும்பிச் செல்வதற்கு முடியாமல் மய்யித்தின் வீட்டில் இரவு தங்கிவிடக் கூடும். இது போன்ற சூழ்நிலையில் வந்தவர்களை உபசரிப்பதற்காக உணவு தயார் செய்வது மைய்யித்தின் வீட்டினருக்கு கடமையாக ஆகிவிடுகின்றது.

(அல் முங்னி லி இப்னி குதாமா பாகம் 2 பக்கம் 215 மஸ்அலா எண் 1660)

மேலும் ஸஹாபாக்கள் காலத்திலேயும் இறந்தவர்களின் வீட்டில் ஒன்று கூடி உணவருந்தும் அமைப்பு இருந்து வந்தது என்று ஸய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனார் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் குறிப்பிடும் n சய்தி இப்னு குதாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய முங்னி என்ற கிரந்தத்தில் (பாகம் 2 பக்கம் அ215) காணக் கிடைக்கின்றது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு அந்த மய்யித்தின் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்கள் என்று ஏற்கனவே கூறப்பட்ட ஹதீஸின் (மிஷ்காத் ஹதீது எண் 5942, அபூதாவூத் ஹதீது எண் 3332) மூலம் மய்யித்தின் வீட்டில் உணவருந்துவது கூடாது என்று நமது காலத்தில் வாழ்கின்ற மக்களின் நாவுகளில் பிரபல்யமாக இருக்கின்ற சொல்லுக்கு மறுப்பு இருக்கின்றது என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது என்று மேற்கூறப்பட்ட ஹதீஸின் விளக்கவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 585) மேலும் இறந்தவர்கள் வீட்டில் உணவு தயார் செய்வது அறவே கூடாது என்று கூறுவதற்கும் அதைக்காரணமாக காட்டி மய்யித்தின் பேரில் கொடுக்கப்படும் உணவைத் தடுப்பதற்கும் எவ்வித முகாந்திரமும் இல்லை. ஏனெனில் மய்யித்தின் வீட்டில் உணவு தயார் செய்ய முடியாவிட்டாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட சொந்தக்காரர்களின் வீடுகளில் உணவு தயார் செய்து கொடுப்பதும் போதுமானதாகவே இருக்கின்றது என்று (அல் மிர்ஆத் பாகம் 3 பக்கம் 514 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே மத்ஹபுவாதிகளில் ஒரு சிலரின் வீடுகளில்இறந்த அன்று நிர்பந்த சூழ்நிலைக்காக உணவு சமைப்பது மத்ஹபுக்கு ஏன் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிக்கு மாறுபட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்வோமாக.

கேள்வி:

மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா?

பதில்:

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்களின் மகனார் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கபுரின் மீது தண்ணீர் தெளித்தார்கள். மேலும் அதன் மீது பொடிக்கற்களை வைத்தார்கள் என்று ஜஃபர் இப்னு முஹம்மத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(மிஷ்காத் பக்கம் 148 ஹதீது எண் 1708 பாபு தப்னில் மைய்யித்தி, ஷரஹுஸ்ஸுன்னா பாகம் 5 பக்கம் 401 ஹதீது எண் 1515)

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களை (அடக்கம் செய்வதற்காக கொண்டு  வரப்படும் பலகையிலிருந்து) மெதுவாக எடுத்தார்கள். மேலும் அவர்களின் கபுரின் மேல் தண்ணீரைத் தெளித்தார்கள் என்று அபூராபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இப்னுமாஜா ஹதீது எண் 1551 பாபு மா ஜாஅ பீ இத்காலில் மய்யித்தி அல் கப்ர கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1719 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்)

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு தோல் துருத்தியின் மூலம் தண்ணீர் ஊற்றியவர்கள் பிலால் பின் ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும். தலைமாட்டிலிருந்து துவங்கி கால்மாடு முடியும்வரை ஊற்றினார்கள்.

(பைஹக்கி, மிஷ்காத் ஹதீது எண் 1710 பக்கம் 149 பாபுல் புக்காஜ் அலல் மய்யித்தி)

கேள்வி: மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் என்ன பயன்?

பதில்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது ஸஹாபாக்கள் யாவரும் அதை நன்மை என்று கருதிய காரணத்தினாலாகும். மற்றவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு காரணம் என்னn வன்றால் ரஹ்மத் இறங்க வேண்டும், குற்றங்கள் கழுவப் பட வேண்டும், பாவங்கள் பொறுக்கப்பட வேண்டும் என்று ஆதரவு வைத்தலாகும். அத்துடன் கபுரின் மேலுள்ள மண் பரந்து செல்லாமல் தடுக்கப்பட வேண்டும் என்று நாடுவதுமாகும் என்று மிஷ்காத்  பக்கம் 149 ல் உள்ள இரண்டாவது ஓரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் மேற்கூறப்பட்ட நன்மைகள் கிடைப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் சுன்னத்தைப் பேணிய நன்மையும் கிடைக்கும் என்பதையும் அறிந்து செயல்படுவோமாக! எல்லாம் வல்ல நாயன் எம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டியருள்வானாக! ஆமீன்.

முற்றும்.