அன்னையும் பிதாவும்- Importance of Parents

அன்னையும் பிதாவும்- Importance of Parents

By Sufi Manzil 0 Comment August 22, 2012

Print Friendly, PDF & Email

மூலம்: மௌலவி முஜத்தித் இமாம் அஃலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் பாஜில் பரேலவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

தமிழில்: மௌலவி அல்ஹாபிழ் F.M. இப்றாஹிம் ரப்பானி ஆலிம் ரஹிமஹுல்லாஹு அவர்கள்.

பிள்ளைகள் மீது பெற்றோருக்குரிய கடமைகளைக் குறித்து நாம் முதலில் இறைமறையில் விபரிக்கப்படும் சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்.

இறைவனைத் தவிர்த்து வேறு எவரையும் நீங்கள் வணங்காதீர்கள். உங்களின் பெற்றோருடன் ஒருவரோ அல்லது இருவருமோ விருத்தாப்பிய வயதை எய்தி விட்டால் (சிறுவயதில் குழந்தைகள் எவ்வாறு உடலுறுப்புகள் பலவீனமான நிலையில் இருப்பாரோ, அவ்வாறு அவர்களிருப்பதால்) அவர்களோடு நன்முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும் அவர்களை நோக்கி கடுமையான (சீ) வார்த்தைகளைக் கொண்டு வெருட்டாதீர்கள். (அவர்களது மனம் புண்படும் வகையில் பேசாதீர்கள்) கண்ணியமான முறையில் மிகுந்த மரியாதையோடு நடந்து கொள்ளுங்கள். அவ்விருவருக்காகவும் உங்களின் இளகிய உள்ளத்தை காட்டுங்கள். அவர்கள் களைப்புற்றுப் போகும் சந்தர்ப்பங்களில் உங்களின் அன்பை அவர்கள் மீது பொழியுங்கள்.

அன்றி நீங்கள் சிறு குழந்தைகளாயிருந்த போது அவர்கள் எவ்வாறு உங்கள் மீது அன்பு பாராட்டினார்களோ, அவ்வாறே நீங்களும் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் பொருளை அவர்களுக்காக செலவு செய்ய தயக்கம் காட்டாதீர்கள்.

 

இறைவா! அவ்விருவரும் நான் சிறு குழந்தையாயிருந்த போது, என்மீது அன்பு காட்டியதைப் போன்று, நீ அவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக என்று அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்குர்ஆன்.

ஆதலால் ஒருவன் தனது பெற்றோருக்கு இவ்வுலகில் எத்துணை தான் பணிவிடைகள் செய்தாலும் நன்முறையில் நடந்து கொண்டாலும் அவன் தனது பெற்றோர் தன்னைப் பெற்றெடுத்த நன்றியை செலுத்தியவனாகான் என்பது இதன் கருத்தாகும். இறைவன் இதனால்தான் நம்மை நமது பெற்றோருக்காக இரக்கம் காட்டுமாறு பிரார்த்திக்க வேண்டுமெனப் பணிக்கிறான்.

மேலும், இறைவா! என்மீது எனது பெற்றோர் செய்த உபகாரத்திற்கு என்னால் பிரதி செலுத்த முடியாதென்பதால் அவர்கள் மீது நீ உனது ரஹ்மத்தாகிய இரக்கத்தையும் அன்பையும் பொழிவாயாக என்று பிரார்த்திப்பது ஒன்றுதான் நமது பெற்றோருக்கு நாம் செய்யும் பிரதியாகும்.

படிப்பினை:

ஒருவர் தனது பெற்றோரை பெயர் சொல்லி அழைத்தல் கூடாது. ஏனெனில் பெயரைக் கூறி அழைப்பது மரியாதைக் குறைவும் ஒழுக்கக் கேடுமாகும். அதன்றி பெற்றோரைப் பெயர் சொல்லி அழைத்தர் அதனால் அவர்களது மனம் புண்படும். இருப்பினும் அவசியத்தின் நிமித்தம் தனது பெற்றோர் தன் முன் இல்லாத போது மற்றவர்களிடம் அவர்களின் பெயரைக் கூறலாம்.

மேலும் ஒரு அடிமை தனது எஜமான் முன் நின்று பணிவோடு பேசுவதைப் போன்று பிள்ளைகள் தமது பெற்றோரிடம் நின்று பேச வேண்டும்.

(ரப்பிர்ஹம்ஹுமா) என்னும் இந்த வசனத்தைக் கொண்டு (அவ்விருவர் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக) இதர முஸ்லிம்களுக்காக வேண்டி இறைவனிடம் அன்பு, இரக்கம், கருணை, பாவமன்னிப்பு போன்றவற்றை தருமாறு பிரார்த்தித்தல் கூடுமென்பதையம், அதில் மிகுந்த பிரயோஜனம் உண்டென்பதையும் புரிந்து கொள்ளலாம். இறந்தோருக்காக செய்யப்படும் பிரார்த்தனையில் (ஈஸால் தவாப்) ரஹ்மத்தைக் குறித்து கேட்கப்படுகிறது. அதற்கு இவ்வசனமே ஆதாரமாகும்.

பெற்றோர் காபிர்களாக இருந்தால் அவர்கள் நேர்வழி பெற வேண்டி பிரார்த்திக்க வேண்டும். காபிரான பெற்றோர்களுக்கு இவ்வசனத்திலுள்ள பிரார்த்தனைதான் ரஹ்மத்தாகும்.

(ஆதாரம்: கன்ஜூல் ஈமான் தப்ஸீர் கஜாயினுல் இர்பான்)

இனி இறைவன் தனது திருமறையில் மற்றோரிடத்திதல் பனீ இஸ்ராயில்களுக்கு அவர்கள் செய்து கொடுத்த ஒப்பந்தத்தை நினைவூட்டும் போது பெற்றோர் மீதுள்ள கடமைப் பற்றியும் அவன் கூறுவதைப் பாருங்கள்.

இறைவனையன்றி வேறு எவரையும் வணங்கக் கூடாதென்றும், இன்னும் உங்களின் பெற்றோருக்கு நன்மை(இஹ்ஸான்) பணிவிடை செய்யுங்கள் என்றும் நாம் பனீ இஸ்ராயீல்களிடம் உடன்பாடு செய்தோம். (மூலம்: ரஜ்விய்யா)

இறைவன் இவ்வசனத்திலும் இதற்கு முந்திய வசனத்திலும் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென கட்டளை பிறப்பிப்பதுடன், பெற்றோருக்கு பணிவிடை செய்வதும் அவசியமான கடமையான ஒன்றென்பதையும் எடுத்துக் காண்பிக்கிறான்.

இங்கு பெற்றோருக்கு பணிவிடை புரியுதல் என்பதன் கருத்தென்னவெனில், அவர்களின் மனம் புண்படும் வகையில் பேசாதிருப்பதும் அவர்கள் விரும்பாத காரியங்களை அறவே செய்யாதிருப்பதும் இதன் கருத்தாகும்.

மேலும் தமது உடலாலும் பொருளாலும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதில், எவ்விதக் குறைபாடும் நேராத வண்ணம் செய்ய வேண்டும். நமது தேவை நமது சேவை நமது பெற்றோருக்கு அவசியப்படும் போதெல்லாம் நாம் அவர்கள் முன் ஆஜராயிருக்க வேண்டும்.

பெற்றோர் மீது பிள்ளைகளுக்குரிய மார்க்கச் சட்டம்:

1.            தமக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு, பெற்றோர் பிள்ளைகளிடம், நபிலான வணக்கங்களை விட்டுவிடச் சொன்னால் உடனே அவற்றை விட்டு விட்டு, பெற்றோரது பணிவிடைக்காக விரைதல் வேண்டும்.

2.            பெற்றோருக்கு பணிவிடை செய்வதற்காக பர்ளான வாஜிபான வாஜிபான வணக்கங்களை விட்டுவிடலாகாது.

இனி பெற்றோருக்குப் பணிவிடை செய்தல் பற்றிய சில விதிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.

1.            ஆழ்ந்த ஆத்மார்த்தமான உள்ளத்துடன் அவர்கள் மீது பிரியம் வைக்க வேண்டும்.

2.            ஒழுக்கத்தோடும் பணிவோடும் அவர்கள் முன் நடந்து கொள்ள வேண்டும்.

3.            பெற்றோரிடம் பேசும் போது மிக்க கண்ணியமான முறையில் மரியாதையோடு பேச வேண்டும்.

4.            அவர்களின் திருப்திக்காகவே அவர்களை நேசிக்க வேண்டும். அத்துடன் அவர்களது திருப்தியைப் பெற விடாமுயற்சி செய்யவேண்டும்.

5.            தமது விலை உயர்ந்த பொருட்களை தமது பெற்றோருக்குத்  தெரியமால் மறைத்து வைத்தல் கூடாது.

6.            பெற்றோர்களது மரணத்திற்குப் பின் அவர்கள் நமக்கு மரணத் தருவாயில் கூறிச் சென்ற வஸியத்துக் (உபதேசங்களை) கடைபிடித்து வரவேண்டும்.

7.            அவர்களின் ஆத்ம சாந்திக்காக, பாத்திஹா, தான தருமம், குர்ஆன் கத்தம் போன்ற நன்மைபயக்கும் காரியங்களை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

8.            ஒவ்வொரு தொழுகையிலும் அவர்களின் ஈடேற்றத்திற்காகவும், பாவமன்னிப்புக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

9.            வாரத்தில் ஒரு முறையேனும் அவர்களது கப்ருகளுக்குச் சென்று அவர்களை ஜியாரத்துச் செய்து வரவேண்டும்.

(ஆதாரம்: தப்ஸீர் பத்ஹுல் அஜீஸ் கஜாயினுல் இர்பான்)

அடுத்து திருமறை வசனத்தைப் பாருங்கள்:

இவ்வுலகில் (நன்மையான காரியங்களில்) அவ்விருவருடனும் நீர் அன்புடன் ஒத்து வாழுவீராக அல்குர்ஆன் 31: 15

மற்றோரிடத்தில் குறிப்பாக ஒரு தாயுடைய வேதனைப் பற்றியும், அவரது பேருபகாரத்தைப் பற்றியும் நினைவூட்டி இறைவன் கூறுகின்றான்.

மனிதனை, தனது பெற்றோருக்கு நன்றி செலுத்துமாறு நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம்.

அவனுடைய தாய் கஷ்டத்துடனேயே அவனைச் சுமந்திருந்து, கஷ்டத்துடனேயே அவனைப் பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து இவன் பால்குடி மறக்கும்வரை முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன் செல்கின்றன)

இனி பெற்றோரது மனம் நோகாத வகையில் அவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளுதல் என்பது இஸ்லாமியச் சட்டம் அனுமதித்துள்ள எல்லைக் கோடு வரைதான். அவ்வாறின்றி பெற்றோரின் மனத்திருப்பதிக்காக வேண்டி இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்காத ஷரீஅத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுவதோ, தவறான காரியங்களில் ஈடுபடுவதோ கூடாது. இதைப் பற்றி திருமறையில் மிகத் தெளிவான நேர்வழி பெறும் பொருட்டு இறைவன்…

இன்னும் பெற்றோருக்கு வழிப்பட்டு நடக்குமாறு மனித இனத்திற்கு நாம் கட்டளையிட்டோம். (எனினும் இறைவன் என்பதற்கு) நீர்  அறியாதவற்றை எனக்கு இணையாக்கும்படி அவர்கள் உன்னை நிர்பந்தித்தால் நீர் அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். அல்குர்ஆன் 29:8 (கன்ஜுல் ஈமான்)

இவ்வசனம் அருளப்பட்டதைக் குறித்து ஒரு சம்பவம் ஹதீதில் காணப்படுகிறது. அது யாதெனில்,…

இஸ்லாத்தின் துவக்க காலத்திலேயே அதில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் ஹழ்ரத் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு என்னும் நபித் தோழர். இவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதைக் கேள்வியுற்ற இவர்களின் தாய் ஹம்னா பின்த்து அபீ ஸுப்யான் என்பவர் தம் மகனை நோக்கி…

மகனே! நீ ஏற்றுள்ள முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மார்க்கத்தை விட்டு விடு. அன்றி நீ மறுத்தால் நீ அம்மார்க்கத்தை விட்டு வெளியேறும் வரை நான் எதையும் உண்ணாது அருந்தாது உண்ணாவிரதமிருப்பேன். ஒருவேளை நான் அதில் இறந்து போய் விட்டால் பத்து மாதம் உன்னை சுமந்து பெற்ற ஒரு தாயின் பாவனம் உன்னை சும்மா விடாது. எல்லோரும் உன்னை தாயை கொன்ற மாபாவியென பழிப்பார்கள் என்று கூறி அவ்வாறே உண்ணாவிரம் இருந்தனர். இந்நிலையில் ஒரு வாரம் கடந்து சென்றது. உண்ணாவிரதம் இருந்ததால் ஹம்ஸா பின்த்து அபீ ஸுப்யான் உடைய உடல் களைத் து அதன் காரணமாக மயக்கமடையத் தொடங்கினர். இந்நிலையில் ஒருநாள் இரவு ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அன்னையிடம் வந்து…

அன்னையே! உனக்கு ஒரு நூறு உயிர் இருந்து அதில் ஒவ்வொன்றாக நீ நான் இஸ்லாத்தை விட்டு விட வேண்டி அர்ப்பணித்தாலும் சரி. அப்போதும் நான் ஏற்றுள்ள எனது மார்க்கத்தைவிட்டுவிட ஒரு சிறிதும் சம்மதிக்க மாட்டேன். முடிவாகச் சொல்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால் உணவருந்துங்கள். இல்லையெனில் உங்களிஷ்டம்! என்றுக் கூற,

இதுகேட்ட ஸஃத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் தனது மகனுடைய பிடிவாதத்தைக் கண்டு அவர் மீது வெறுப்புற்று உணவருந்தத் துவங்கினார்.  அத்தருணத்தில் தான் இறைவன் மேற்கண்ட வசனத்தை இறக்கி…

நீங்கள் உங்களது பெற்றோருக்கு வழிப்படுவதுடன், அவர்கள் இறைவனுக்கு இணை வைக்குமாறு உங்களை ஏவினால் அவர்களுக்கு நீங்கள் வழிப்பட வேண்டாமென கட்டளை பிறப்பித்தான்.

ஆகையால் எவற்றை இறைவன் வெறுக்கின்றானோ, அவற்றை செய்யுமாறு பெற்றோரே ஏவினாலும் அவ்விஷயத்தில் அவர்களுக்கு வழிப்படுதல் மார்க்கத்திற்கு விரோதமான செயலாகும். (கஜாயினுல் இர்பான்)

பெற்றோர் பற்றி பெருமானார் ஹதீதுகளில்…

பெற்றோருடன் பிள்ளைகள் இணக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றியும் இவ்வாறே பெற்றோர் மீது பெற்றோர்களுக்குரிய கடமையினைப் பற்றியும் இரு லோகத்திற்கும் மூல பிதாவான எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்தியம்பும் சில ஹதீதுகளைப் பார்ப்போம்.

ஹதீது நெ 1:-

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபீ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்

ஒருமுறை அண்ணல் நபியவர்கள் ஒருவனது மூக்கு நாசமாகட்டும் என்று மும்முறை திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அப்போது நபித் தோழர்கள் பெருமானாரை நோக்கி, யாரஸூலல்லாஹ்! யார் அவன்? என்று வினவ…

அதற்கு அண்ணலாரவர்கள் எவன் தனது வாழ்வில் வயது முதிர்ந்த பெற்றோரில் இருவரையோ, அல்லது ஒருவரையோ வாய்க்கப்பெற்றிருந்தும் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ளவில்லையே! அவன் என்று சொன்னார்கள்.

அதாவது எந்த விஷயங்களில் தனது பெற்றோரின் மனம் மகிழ்வுறுமோ, அதைச் செய்தோ அல்லது பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்வதைக் கொண்டோ, தன்னை சுவர்க்கத்திற்குத் தகுதி வாய்ந்தவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாதவன் மூக்கறுந்துப் போன மூளியான அவலட்சணமுடையவனாகட்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அண்ணலாரின் இக்கடுமையான எச்சரிக்கை மூலம் பெற்றோரின் அதிருப்தியைப் பெறுவோர் இதனைக் கொண்டு பாடம் கற்றுக் கொள்வாராக! மேலும் இத்தகையோரின் முடிவு மிகத் தீராதென்பதையும் அறிந்துக் கொள்வாராக!

(முஸ்;லிம் பாகம் 2, பக்கம் 314, மிஷ்காத் பக்கம் 418)

ஹதீது நெ: 2

உலக மாந்தரின் கண்ணீரைத் துடைத்த பூமான் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

பெற்றோரை கஷ்டப்படுத்தி நோவினை செய்வதைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அதன் காரணமாக அவர் சுவனத்தின் வாடையை ஆயிரம் வருடத் தொலைவுக்கப்பால் அன்றி பெற்றுக் கொள்ள மாட்டார். (அதாவது பெற்றோரை துன்புறுத்துவோன் ஒருநாளும் சுவனத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ள மாட்;டான்) இவ்வாறே உங்களில் பந்தத்துவத்தை முறித்துக் கொள்பவனும், விபச்சாரம் புரியும் கிழவனும், பெருமைக்காக தனது ஆடைகளைத் தளர்த்தி கணுக்காலுக்குக் கீழே அணிபவனும் சுவனத்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். (அதாவது இத்தகையோரும் சுவனத்தின் வாடையை கூட பெற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னும் திடனாக பெருமை இறைவனுக்கு மட்டுமே சொந்தமான ஓர் குணமாகும்.

(ஆதாரம்: தப்ஸீர் மதாரிக், பாகம் 2, பக்கம் 312)

ஹதீது நெ: 3

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்

ஒருமுறை அண்ணல் நபியவர்கள் தமது தோழர்களை நோக்கி, ஒருவன் தனது பெற்றோரை ஏசுவதும் பெரும் பாவங்களைச் சார்ந்ததே என்று கூற… அதற்கு நபித்தோழர்கள் யாரஸூலல்லாஹ்! ஒருவன் தனது பெற்றோரைக் கூடவா ஏசுவான்? என்று மிக்க ஆச்சரியத்தோடு வினவினர்.

அதற்கு நபிகளார் அவர்கள் ஆம்! அவன் மற்றவனின் பெற்றோரை ஏசும்போது, அந்த மற்றவன் இவனது பெற்றோரை திருப்பி ஏசுவதாவது இவன் தனது பெற்றோரை ஏசியதற்குச் சமமாகும் என்று கூறினர்.

(புகாரி, திர்மி;தீ, பாகம் 2, பக்கம் 12, மிஷ்காத் பக்கம் 419)

ஹதீது நெ: 4

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபீ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்:

உங்களின் பிரார்த்தனைகளில் மூன்று நபர்களது பிரார்த்தனையை இறைவன் நிச்சயம் அங்கீகரிக்கிறான். அவர்கள்…

1.            அநீதமிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை.

2.            பயணத்திலுள்ள முஸாபிரின் பிரார்த்தனை.

3.            பிள்ளைகளுக்கெதிராக பெற்றோர் செய்யும் பிரார்த்தனை.

(ஆதாரம்: திர்மிதீ பாகம் 2, பக்கம் 13)

ஆதலால் பிள்ளைகள் தமது பெற்றோரின் மனம் நோகாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர் மனம் நொந்து  பிள்ளைகளுக்கெதிராக பிரார்த்தனை (பத்துஆ) செய்யுமளவிற்குரிய காரியங்களை எக்காரணம் கொண்டும் அறவே செய்யக் கூடாது. இவ்வாறே பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுக்கெதிராக இயன்றவரை பிரார்த்தனை (பத்துஆ) செய்வதை விட்டும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அப்பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படும் போது அதைக் கண்டு பெற்றோரும் வருத்தமடைய நேரும்.

ஹதீது நெ 5

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்:

உங்களில் தமது பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளை தமது பெற்றோரை ரஹ்மத்;துடைய இரக்கமுள்ள ஒரு பார்வை பார்ப்பாராயின் இறைவன் அப்பிள்ளைக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜுடைய நன்மையை அளிக்கிறான் என்று சொல்ல, அப்போது நபித்தோழர்கள் யாரஸூலல்லாஹ்! ஒரு நாளைக்கு நூறுமுறை இவ்விதம் பார்த்தாலுமா? என்று வினவ, அதற்கு நபியவர்கள் ஆம்! அல்லாஹ் மிகப் பெரியவன். பரிசுத்தமானவன் என்று பதிலளித்தனர்.

(ஆதாரம்: மிஷ்காத் பக்கம் 421, பைஹக்கீ)

ஹதீது நெ: 6

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்:

அல்லாஹ்வுக்கு இணை வைத்தலும், பெற்றோரை நோவினை செய்வதும் ஷரீஅத்திற்குப் புறம்பான வகையில் கொலை செய்வதும், பொய் சத்தியம் செய்வதும் பெரும் பாவங்களில் நின்றுமுள்ளதாகும் என்று கூறினார்கள்.

(ஆதாரம்: புகாரி, மிஷ்காத் பக்கம் 17)

ஹதீது நெ: 7

நபிமார்களை கொலை செய்பவர் அல்லது நபிமார்களால் கொல்லப்பட்டோர் தமது பெற்றோரில் இருவரையோ, அல்லது ஒருவரையோ கொலை செய்வோர் உருவப் படங்களை வரையும் ஓவியர், தாம் கற்ற கல்வியால் பலன் பெறாத ஆலிம் (அறிஞர்) போன்றோர் நிச்சயமாக மறுமையில் மிகக் கொடிய வேதனைக்குள்ளாவர் என்று நபிகளார் கூறினார்கள்.

(ஆதாரம்: பைஹக்கீ, துர்ருல் மன்தூர் பாகம் 4, பக்கம் 174)

ஹதீது நெ: 8

ஒருமுறை அபீ ரஜீனில் உகைலி ரலியல்லாஹு அன்ஹு என்னும் நபித்தோழர் ஒருவர் பெருமானாரிடம் வந்து, யாரஸூலல்லாஹ்! என் தந்தை மிகவும் வயது முதிர்ந்த விருத்தாப்பிய நிலையிலுள்ளார். தற்போது அவரால் ஹஜ்ஜுச் செய்யவோ, உம்ரா செய்யவோ அல்லது வேறு எந்த நற்காரியங்களுக்காகவும் பிரயாணம் செய்யவோ இயலாத நிலையில் இருக்கின்றார் என்று கூற, அதற்கு அண்ணல் நபியவர்கள்…

அபீ ரஜீனே! உமது தந்தைக்காக நீர் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வீராக! என்று கூறினார்கள்.

(ஆதாரம்: மிஷ்காத் பக்கம் 222)

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர். ஒருமுறை அண்ணல் நபியிடம் ஒருவர் வந்து நாயகமே! நான் பெரும் பாவமொன்றை செய்து விட்டேன். என் பாவத்திற்கு மன்னிப்புண்டா? என்று கேட்க, அதற்கு அண்ணல் நபியவர்கள் அவரை நோக்கி…

உமது தாய் உயிருடன் இருக்கின்றார்களா? என்று வினவினர். அதற்கவர் இல்லையென்று சொல்ல, பின்னர் மீண்டும் பெருமானவர்கள்…

உமது தாயுடன் பிறந்த சகோதரி (சிறிய தாயார்) உயிருடன் இருக்கின்றார்களா? என்று கேட்க, அதற்கவர், ஆம்! என்று சொல்ல…

அவ்வாறாயின் நீர் அவருடன் அழகிய முறையில் நடந்து கொள்வீராக என்று சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதீ)

மேற்கண்ட ஹதீதைக் கொண்டு எவர் தமது பெற்றோர் பந்துக்கள் போன்றோருடன் அழகிய முறையில் நடந்து கொள்கின்றாரோ, அவரது குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை விளங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அவர்களோடு நன்முறையில் நடந்து கொள்வதால் நன்மை செய்யும் வாய்ப்பும் கிடைக்கின்றதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீது நெ: 10

ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அறிவிக்கின்றார்கள்:

உங்களில் எவர் தமது வாழ்நாள் நீடிக்க வேண்டுமென விரும்புகின்றாரோ, இரணத்தில் விஸ்தீரணம் ஏற்பட வேண்டுமென ஆசைப்படுகின்றாரோ, அவர் தமது பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து கொள்வாராக! உறவினர்களையும், பந்துக்களையும் முறித்துக் கொள்ளாமல் அவர்களோடு சேர்ந்து கலந்திருப்பாராக என்று கூறினார்கள்.

(ஆதாரம்: பைஹக்கீ, துர்ருல் மன்தூர்)

ஹதீது நெ: 11

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றனர்…

உங்களில் எவர் தமது தந்தையை வெறுப்பான பார்வை கொண்டு பார்த்தாரோ, அவர் தமது தந்தையுடன் அழகிய முறையில் நடந்தவராக மாட்டார்.

(ஆதாரம்: பைஹக்கீ, தப்ஸீர் துர்ருல் மன்தூர் பாகம் 4, பக்கம் 171)

ஹதீது நெ: 12

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹழ்ரத் அபீஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்:

நீங்கள் பிற பெண்களை தீய எண்ணத்தோடு பார்க்க வேண்டாம். அவ்வாறாயின் உங்களது குடும்பப் பெண்கள் பிற ஆடவர்களை தீய எண்ணத்தோடு பார்க்காதிருப்பர். இனி இதுபோன்று உங்கள் பெற்றோருடன் நீங்கள் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். அவ்வாறாயின் உங்களது பிள்ளைகளும் உங்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வர்.

இவ்வாறே உங்களின் சகோதரர் உங்களிடம் ஏதாவதோர் காரியத்தை குறித்து வந்தால், அது தகுதியானதா இல்லையா? என்பதை நோக்காது, அவருக்கு நிறைவேற்றிக் கொடுங்கள்.

இனி மேற்கண்டவாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லையெனில் எனது ஹவ்ளுல் கவ்தர் (தடாகம்) அருகில் கூட நீங்கள் வரஇயலாது. எனது ஹவ்ளில் தண்ணீர் அருந்த உங்களுக்கு எவ்வித உரிமையுமில்லை என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்தத்ரக் ஹாகிம், பாகம்4, பக்கம் 154.

பிள்ளைகளுக்கு பெற்றோரில் எவர் மீது அதிக உரிமை?

பெற்றோர்களில் தந்தைக்குச் செலுத்த வேண்டிய கடமைதான் பிள்ளைகள் மீது அதிகமென்று சொல்லப்பட்டாலும், தாய் மீதுள்ள கடமையே மிக அதிகமென்று இறைவன் தன் திருமறையில் எடுத்துக் காண்பிக்கிறான். உங்கள் இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

மனிதனை தனது பெற்றோருக்கு நன்றி செலுத்துமாறு நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் கஷ்டத்துடனேயே அவனைச் சுமந்திருந்து, கஷ்டத்துடனேயே அவனைப் பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும்வரை முப்பது மாதங்கள்.(மிக்க கஷ்டத்துடன் செல்கின்றன).

இறைவன் மேற்கண்ட வசனத்தில், பெற்றோருக்குரிய உரிமைகளைக் கூறியபின் தாயின் தனிப்பட்ட சிறப்பம்சங்களை விபரிக்கிறான். மிகுந்த சிரமத்திற்கிடையில் அவனை வயிற்றில் சுமந்தாள். அவ்வாறே சிரமத்தோடு பெற்றெடுத்தாள். பின்னர் தனது உதிரத்தை அமுதமாக்கிப் பாலூட்டினாள். இதன் காரணமாகவே தாயின் உரிமைகள் தந்தையை விட மேன்மைக்குரியதாகின்றன.

இனி பிறிதோரிடத்தில்…

பெற்றோருக்கு நன்மையானதை செய்யுமாறு மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனது தாய் அவளை சிரமத்திற்கு மேல் சிரமத்துடன் வயிற்றில் சுமந்தாள். மேலும் இரு வருடங்கள் வரை பாலூட்டி நிறுத்தினாள். ஆதலால் எனக்கும் உனது பெற்றோருக்கும் நீ நன்றி செலுத்துவாயாக.

மேற்படி வசனத்திற்கு வேத வியாக்யானிகளைக் கொண்டு ஹழ்ரத் சுப்யான் இப்னு உயைனா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்.

எவன் ஐவேளையும் தொழுதானோ, அவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாவான். இனி இது போன்றே எவன் ஐவேளை தொழுகைக்குப் பின்பும் தமது பெற்றோருக்காக இறைவனிடம் பிரார்த்தனை  செய்பவன் பெற்றோருக்கு நன்றி செலுத்தியவனாவான் என்று கூறுகின்றனர்.

(தப்ஸீர் கஜாயினுல் இர்பான்)

பிள்ளைகள்மீது பெற்றோருக்குரிய உரிமை இவ்வளவு தான் என்று இறைவன் வரையறுத்துக் கூறவில்லை. எனினும் தனது கீர்த்தி வாய்ந்த உரிமைகளை தன்னடியானுக்கு விபரிக்கும் போது, இறைவன் தனது உரிமைகளுடன் பெற்றோர்களது உரிமைகளையும் இணைத்து எனக்கும் உங்களின் பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துங்கள் என்று அவான் குறிப்பிடுவதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா அவர்கள் அறிவிக்கின்றனர்:

ஒருமுறை நான் அண்ணல் நபியிடம், பெண்கள் மீது யாருடைய உரிமை (கடமை) முக்கதியத்துவம் வாய்ந்ததென்று கேட்க, அதற்கு நபிகளார்…

கணவரின் உரிமைகளே! என்று கூறினர். பின்னர் மீண்டும் நான், நபிகளாரிடம், ஆண்கள் மீது யாருடைய உரிமை முக்கியத்துவம் வாய்ந்தது என்று கேட்க, தாயின் உரிமைகளே! என்று அண்ணல் நபி கூறினர்.

மனைவி வந்ததும் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, மனைவியின் பேச்சை கேட்டு தாயை கொடுமைப் படுத்தும் ஆண்கள் சிந்தித்துப் பார்த்திட வேண்டும்.

ஹழ்ரத் அபீ ஹுறைறா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்: ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். வந்தவர் அண்ணலாரை நோக்கி, யாரஸூலல்லாஹ்! மனிதர்களிலேயே அழகிய முறையில் தோழமை கொள்ளத் தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்க, அதற்கு நபியவர்கள், உனது தாய் என்று கூற, திரும்பவும் அவர் யார் என்று வினவ, உனது தாய் என்று நபியவர்கள் சொல்ல, மூன்றாம் முறையும்  அவர்கள் யார்? என்று வினவ, உனது தாய் என்று நபியவர்கள் சொல்ல, நான்காவது முறையும் அவர் யார் என்று கேட்க, உனது தந்தை என்று அண்ணல் நபியவர்கள் பதில் தந்தனர்.

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு ஹழ்ரம் அபீ ஸல்மா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்:

தாயின் விஷயத்தில் மனிதர்களுக்கு நான் வஸியத் (இறுதி உபதேசம்) செய்கிறேன் என்று திரும்பத் திரும்ப மூன்று முறை அண்ணல் நபியவர்கள் கூறியபின், நான்காவது முறையில் தந்தையுடைய விஷயத்தில் உங்களுக்கு நான் வஸியத்து செய்கிறேன் என்று கூறினர்.

(ஆதாரம்: இமாம் அஹ்மத், இப்னுமாஜா, ஹாகிம், பைஹகீ)

இத்துணை அதிகமாகத் தாயைப் பற்றி ஏன் கூறப்பட்டதெனில், பெற்றோருக்குப் பணிவிடை செய்வதில், தந்தையைக் காண முதலில் தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

உதாரணமாக, ஒருமகன் நூறு ரூபாயை பெற்றோருக்குச் செலவு செய்திட எண்ணினால், அதில் இருபத்தி ஐந்து ரூபாயை தந்தைக்கும், மீதி எழுபத்தி ஐந்து ரூபாயை தாய்க்கும் செலவளித்தல் வேண்டும்.

இவ்வாறே பெற்றோர் இருவரும் ஒரே சமயத்தில் தண்ணீர் கேட்டால் முதலில் தாய்க்குத் தந்து விட்டு, பின்னர் தந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வண்ணமே, பெற்றோர் இவருவரும் பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தால், முதலில் தாய்க்கும், பின்னர் தந்தைக்கும் பணிவிடை செய்ய வேண்டும். இப்படியே ஒவ்வோர் விஷயத்திலும் தாயை முதன்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்றி, பெற்றோர்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டால், தான் எப்பக்கமும் சாராது இருவரையும் சமாதானப் படுத்த முயல வேண்டும். அதை விட்டு, ஒருதலைப் பட்சமாக நடப்பதோ, பதிலளிப்பதோ, ஒழுக்கமின்றி மரியாதைக் குறைவாக பார்ப்பதோ கூடாது. இவையனைத்தும் ஹராமாகும்.

இனி இவ்வாறே இறைவனுக்குப் பொருத்தமில்லாத காரியங்களில் பெற்றோருக்கு வழிப்படக் கூடாது. பெற்றோர் இருவரில் ஒருவரை மட்டும் நட்பு கொண்டு மற்றொருவரை வெறுப்பது கூடாது. மேலும் பெற்றோர் தான் ஒருபிள்ளைக்கு சுவர்க்கமும் நரகமுமாக இருக்கின்றனர். இருவரில் எவரை நோவினை செய்தாலும் அவன் செல்லுமிடம் நரகமென்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இறைவன் நம்மைக் காப்பாற்றுவானாக!

இன்னும் இறைவனுக்கு மாறு புரியும் விஷயத்தில் எவருக்குமே வழிப்படக் கூடாது. உதாரணமா, ஒரு தாய் தனது பிள்ளைகள் மூலம், தந்தைக்கு தொல்லை தர விரும்பினால், இவ்விஷயத்தில் தாய் தன் மீது அதிருப்தியுற்றாலும் பிள்ளை தாய்க்கு வழிப்படக் கூடாது. தாய் அதிருப்தியடையட்டும். பரவாயில்லை. ஆனால் தந்தைக்கு எதிராக தாயே தூண்டிவிடும் விஷயத்தில் மட்டும் தாய்க்கு வழிப்படாதீர்கள். இவ்வாறே தந்தை தாயை நோவினை செய்யுமாறு அல்லது ஏசுமாறு கூறினால் இவ்விஷயத்தில் தந்தைக்கு கட்டுப்படத் தேவையில்லை.

எனினும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த உலமாக்கள் பணிவிடை செய்வதில் தாய்க்கே முன்னுரிமை வழங்கியுள்ளனர். இதனை முன்னால் நாம் கூறி வந்துள்ள உதாரணங்களைக் கொண்டு அறியலாம்.

அத்துடன் தந்தைக்கு அதிகமான கண்ணியமளித்தல் வேண்டும். ஏனெனில் தந்தை, தாய்க்கும் பிள்ளைக்கும் எஜமானனாகவும், அவர்களை வழி நடத்தும் நிர்வாகியாகவும் இருக்கின்றாரல்லவா!

பெற்றோரின் மரணத்திற்குப் பின் பிள்ளைகளின் உரிமை

1.            பெற்றோர் மரணித்தால் உடனே பிள்ளைகள் அவர்களை அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டும். அத்துடன் குளிப்பாட்டுதல், கபனிடுதல், ஜனாஸா தொழுகை நடத்துதல், கப்ரில் அடக்கம் செய்தல் போன்றவையனைத்தும் பிள்ளைகள் மீது கடமையாகும். அதில் எல்லா வகையான ஸுன்னத்துக்களையும், முஸ்தஹப்புகளையும் பேணுதல் அவசியம். அதன் காரணமாக மைய்யித்திற்கு நன்மை ரஹ்மத், விஸ்தீரணம் போன்றவை உண்டென்று ஆதரவு வைக்க வேண்டும்.

2.            தமது பெற்றோருக்காக எப்போதும் அவர்களின் பாவமன்னிப்புக்காக துஆ செய்தல் மிகவும் அவசியம்.

3.            நற்கிரிகைகள், தானதர்மங்கள் செய்து அதன் நன்மையை பெற்றோருக்கு எத்தி வைக்க வேண்டும். இயன்ற வரை இதிலே எவ்விதக் குறையும் வைக்கக் கூடாது. நாம் தொழும் போதெல்லாம் அவர்களுக்காக தொழுவதும், தாம் நோன்பு நோற்கும் தோறும் அவர்களுக்காக நோன்பு நோற்றும் அதன் நன்மைகளை பெற்றோர் மற்றும் எல்லா முஸ்லிம்களுக்கும் ஹதியா செய்தல் அவசியமாகும். இதில் அனைவருக்கும் சம அளவுக்குரிய நன்மையே கிடைக்கும். குறைவு ஏதும் ஏற்படாது.

4.            பெற்றோர் மீது கடன் சுமை ஏதேனும் இருப்பின் அதனை பிள்ளைகள் விரைவில் தீர்க்க முயல வேண்டும். அதன்றி பிள்ளைகள் தமது உழைப்பிலிருந்து அக்கடனை தீர்த்து வைப்பதில் ஈருலகிலும் தனக்கு மிகுந்த பிரயோஜனமுண்டு என்பதையறிய வேண்டும். தம்மால் அக்கடனை தீர்க்க இயலாவிடின், நல்ல மனிதர்கள், உறவினர்கள், பந்துக்கள் போன்றோரிடம் உதவி ஒத்தாசை பெற்றேனுமு; அக்கடனை தீர்த்தேயாக வேண்டும்.

5.            பெற்றோர் மீது பர்ளான கடமைகள் ஏதும் மீதமிருந்தால் இயன்றவரை அதனை நிறைவேற்ற வேண்டும். அல்லது முயற்சியாவது செய்ய வேண்டும்.

உதாரணமாக பெற்றோர் ஹஜ்ஜுச் செய்யாது அக்கடமை அவர்கள் மீது மீதமிருந்தால் அதனை தாமோ,அல்லது மற்றவர் மூலமோ பெற்றோருக்குப் பகரமாக ஹஜ்ஜுச் செய்ய வேண்டும். ஜகாத்,(ஏழைவரி), கொடுக்காது அக்கடமை பாக்கியிருந்தால் பெற்றோருக்குப் பகரமாக தாம் அதனைக் கொடுக்க வேண்டும். தொழுகை, நோன்பு போன்றவை பெற்றோர் மீது 'களாவாக' இருப்பின் பிள்ளைகள் அதற்குக் 'கப்பாரா' கொடுக்க வேண்டும். இவ்வாறே எல்லா ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு நன்மையானதைச் செய்ய முயலுதல் மிகவும் அவசியம்.

6.            மார்க்கத்துடைய ஷரீஅத் சட்டம் அனுமதிக்கும் வண்ணம் பெற்றோர் 'வஸிய்யத்'(இறுதி உபதேசம்) செய்திருப்பின் முடிந்தவரை அதை நிறைவேற்ற முயல வேண்டும். ஷரீஅத்துடைய சட்டப்படி தம் மீது அவசியமில்லாத ஒன்றாயிருப்பினும் கூட அது தமக்கு நன்மை செய்யுமென்று எண்ணிச் செய்ய வேண்டும்.

உதாரணமாக, எவரேனும் பெரியார்கள், வாரிசுகள் உரிமையற்ற அன்னியர்கள் போன்றோருக்கு வஸிய்யத் செய்திருப்பின் அதனை வாரிசுகளின் அனுமதியின்றி கொடுப்பது ஷரீஅத்துடைய சட்டப்படி கொடுப்பது கூடாது. இருப்பினும் பெற்றோரது இறுதி உபதேசங்களை பிள்ளைகள் ஏற்று அவர்களின் மனத்திருப்திக்கா ஆத்ம சாந்திக்காக நிறைவேற்றுதல் கூடும்.

7.            பெற்றோரின் மரணத்துடைய மறைவுக்குப் பின்பும் கூட அவர்கள் செய்து கொடுத்த சத்தியங்கள், வாக்குத்தத்தம் போன்றவைகளைக் காப்பாற்ற வேண்டும்.

உதாரணமாக, இறப்புத் தருவாயில் தன் பிள்ளையிடம், நீ இன்ன நபருடைய வீட்டிற்குப் போகக் கூடாதென்றோ, அல்லது இன்ன மனிதருடன் சேரக் கூடாதென்றோ, சத்தியம் செய்து கூறியிருப்பின் அதை பிள்ளைகள் ஏற்று நடக்க வேண்டும். அவர்கள் தான் தற்போது நம்மிடம் இல்லையே! ஆதலால் நாம் அவர்களின் சத்தியத்தைக் காப்றாற்ற வேண்டிய அவசியமில்லை என்று எண்ணி, மேற்படி பெற்றோரின் சத்தியத்தை முறித்தல் கூடாது. மாறாக பெற்றோர் உயிரோடிருக்கும் தருணத்தில் எவ்வாறு அவர்களது பேச்சைக் கேட்டு பிள்ளைகள் நடந்து கொள்வரோ, அவ்வாறே அவர்களது இறப்புக்குப் பின்னரும் நடந்து கொள்ளல்மிக மிக அவசியம். ஷரீஅத்திற்கு முரணான செயல்களாயிருப்பின் அதனைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. மார்க்கம் அனுமதிக்கத் தக்க விஷயங்களாக பெற்றோர்களது சத்தியங்கள் இருப்பின் அவைகளை நிறைவேற்றி பிள்ளைகள் தமது பெற்றோரின் திருப்தியைப் பெற முயல வேண்டும்.

8.            ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தமது பெற்றோரின் கப்ரை ஜியாரத்துச் செய்ய போக வேண்டும். அங்கு சென்று சப்தத்துடன் ஸூறா யாசீனை ஓதி அதன் நன்மையை அவர்களது ஆன்மாவுக்கு (ரூஹுக்கு) சேர்த்து வைக்க வேண்டும். சப்தமிட்டு ஏன் ஓத வேண்டுமெனில், நீங்கள் அவ்வாறு ஓதுவததை அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மைய்யித்துக்கள் கேட்கின்றனர் என்பதாலும், அவர்களுக்கு தம் இறைவனைக் குறித்து உண்டான அறிவு மென்மேலும் விரிவடைவதால் இவ்வாறு சப்தமிட்டு ஓத வேண்டும். அவசரமான அலுவல் நிமித்தம் தமது பெற்றோர்களது கப்ருகள் உள்ள ஸ்தலத்தை கடக்க நேரிட்டால் கண்டிப்பாக அங்கு ஒரு வினாடியேனும் தாமதித்து ஸலாமும் பாத்திஹாவும் ஓதி விட்டுச் செல்லுதல் மிகவும் அவசியம்.

9.            தமது பெற்றோரது உறவினர்களுடன் வாழ்நாள் முழுவதும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.

10.          பெற்றோரது நண்பர்களுடன் பிள்ளைகளும் நட்புறவு கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அந்த நண்பர்களுக்கு மதிப்பும் கண்ணியமும் தர வேண்டும்.

11.          எப்போதும் எவர் பெற்றோரைப் பற்றியும் தாழ்வாக எண்ணவோ, பேசவோ கூடாது.

12.          பிள்ளைகள் ஏதேனும் ஷரீஅத்திற்குப் புறம்பான விலக்கப்பட்ட பெரும் பாவங்கள் போன்ற காரியங்களை செய்து அதன் காரணமாக கப்ரிலுள்ள தமது பெற்றோர்களுக்கு கஷ்டம் கொடுத்தல் கூடாது. ஏனெனில் பிள்ளைகளது ஒவ்வோர் செயலும் அவரது பெற்றோர்களுக்கு  உடனுக்குடன் அவ்வப்போது எடுத்துக் காண்பிக்கப்படுவதால் பிள்ளைகள் நன்மையான காரியங்களை செய்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களின் முகமும் பிரகாசிக்கத் தலைப்படுகின்றது. அவ்வாறின்றி பிள்ளைகள் பாவம் செய்தால் அதன் காரணத்தால் பெற்றோர் துக்கமடைகின்றனர். அத்துடன் அவர்களது உள்ளத்தில் ஒருவித வேதனையும் வலியும் உருப் பெறுகின்றது. பெற்றோர் இறந்து கப்ரில் அடக்கப்பட்ட பின்னரும் அவர்களது மனதில் வலியை வேதனையை ஏற்படுத்துவது பிள்ளைகளுக்கு உகந்த செயலல்ல என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

எனவே இரக்கமுடையோனும் மன்னிக்கிறவனுமான இறைவன் தனது ஹபீபாகிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் முஸ்லிம்களனைவரும் நன்மையான செயலை செய்வதற்கு தவ்பீக் என்னும் அருள் பாலிப்பானாக! நம்மை பாவங்களை விட்டும் காப்பானாக! நமது முன்னோர்களின் (பெற்றோர்களின்) கப்ருகளை பிரகாசமுடையதாக்கி மனமகிழ்ச்சியைத் தந்தருள்வானாக. அவனே மாபெரும் தத்துவமுடையவன். அவனே தேவையற்றவன்.

சில ஹதீதுகளும், அதைக் கொண்டு பெறப்படும் சட்டங்களும்…

1.            ஒரு அன்சாரி நபித் தோழர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, நாயகமே! பெற்றோர் இறந்தபின் அவர்களுக்காக நான் செய்ய வேண்டிய கடமை ஏதேனும் என்மீது உள்ளதா? என்று வினவ, அதற்கு நபியவர்கள், ஆம்! உம்மீது நான்கு கடமைகள் உள்ளன. அவை:

1.            அவர்களுக்காக நீர் தொழுது அதன் நன்மையை அவர்கள் மீது எத்திவைக்க வேண்டும்.

2.            அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவர்களது ஹக்கில் நீர் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.

3.            அவர்கள் தமது மரணத்தருவாயில் உமக்குச் செய்த இறுதி உபதேசங்களை நீர் பேணி நடக்க வேண்டும்.

4.            அவர்களது நண்பர்களு;ககுக் கண்ணியமளித்து, அவர்கள் உமக்கு உறவுமுறை இல்லாவிடினும் அவர்களது உறவினர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும். அவர்களது மரணத்திற்குப் பின் அவர்களுக்கு நன்மையானவற்றை சேர்த்து வைக்க வேண்டும்.

(இப்னு நஜ்ஜார், பைஹக்கி, அபீதாவூத், இப்னு மாஜா)

2.            பெற்றோர்கள் இறந்த பின் அவர்களுக்கு நன்மையைச் சேர்ப்பித்தல் என்பதன் கருத்தானது, அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையும், பாவ மன்னிப்புமேயாகும். (இப்னு நஜ்ஜார்)

3.            ஒரு மனிதர் தமது பெற்றோருக்காக பிரார்த்தனை புரிவதை நிறுத்திக் கொள்ளும் போது, அவருக்கு இரணமளிப்பது துண்டிக்கப்படும் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

(அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திப்ரானி, தைலமி.)

4.            நபிலான தர்மங்களை ஒருவர் செய்ய நாடினால் அதனை அவர் தமது பெற்றோருக்காகவே செய்யட்டும். (அதாவது அத்தர்மத்தின் நன்மையை தமது பெற்றோருக்கு (எத்தி வைப்பராக) இதில் அவரது பெற்றோருக்கும் நன்மை கிடைக்கும். பிள்ளைக்கும் நன்மை கிடைக்கும். இதில் எவரது நன்மையும் குறைந்து போகாது என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திப்ரானி, இப்னு அஸாகிர், தைலமி.)

5.            ஒரு நபித் தோழர் அண்ணல் நபியிடம் வந்து, நாயகமே! எனது பெற்றோர் தற்போது உயிரோடுள்ளனர். அவர்களுடன் நான் நல்ல முறையில் இணக்கத்தோடு நடந்து வருகிறேன். இனி எனது பெற்றோர் இறந்த பின் நான் அவர்களோடு இணக்கமான முறையில் நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்.? என்று வினவ, அதற்கு அண்ணல் நபி அவர்கள் நீர் தொழும்போது அவர்களுக்காகத் தொழுதும் நீர் நோன்பு வைக்கும்போது அவர்களுக்காக நோன்பு வையும் என்று கூறினர். (தார குத்னீ)

அதாவது தாம் நன்மைசெய்யும் பொருட்டு நபிலான தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை நிகழ்த்தும் தோறும், தமது பெற்றோர்களது நன்மைக்கா வேண்டியும் நபிலான தொழுகை, நோன்பு போன்றவற்றை செய்து அதன் நன்மையை பெற்றோருக்கு சேர்த்து வைக்க வேண்டும். இனி அவ்வாறின்றி, தனக்காக வேண்டி நபிலான தொழுகை நோன்பு போன்றவற்றை செய்தால், தமது நிய்யத்தில் பெற்றோர்களையும் இணைத்துக் கொண்டாலும் போதுமானதே! இதில் இவனுக்கு எவ்வித நன்மைக் குறைவும் நேராது. இவனது பெற்றோரும் பலனடைவர்.

(ஆதாரம்: முஹீத், தாதார்கானியா, ரத்துல் முக்தார்)

6.            ஒருவர் நபிலான வணக்கம் தானதர்மம் போன்றவற்றைச் செய்யும் போது அதில் எல்லா முஃமினான ஆண் பெண்ணiயும்  இணைத்து நிய்யத்துச் செய்தலே சிறப்பிற்குரியதாகும்.  அவ்வாறு செய்தல் அனைவருக்கும் நன்மை பயக்கும். அத்துடன் இவருக்குக் கிடைக்கும் நன்மையில் எள்ளத்தனையும் குறைவேற்படாது.

7.            எவர் தமது பெற்றோருக்காக வேண்டி ஹஜ்ஹுச் செய்தாரோ, அல்லுது அவர்களது கடனைத் தீர்த்தாரோ அவர் மறுமையில் அப்ரார்களுடன் எழுப்பப்படுவார் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திப்ரானி, தார குத்னீ)

8.            அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரியும்போது, அவர்களுக்கு எண்பதினாயிரம் தீனார் கடனிருந்தது. அப்போது உமர் ரலியல்லாஹு அன்ஹு தமது மகனை அழைத்து…

மகனே! எனது உடமைகளனைத்தையும் விற்று என் கடனைத் தீர்த்துவிடு. பணம் போதாவிட்டால் என் உறவினர்களான பனீ அதிய்யி சமூகத்தாரிடம் வாங்கிக் கொள். அதுவும் போதாவிட்டால், குறைஷிகளிடம் வாங்கிக் கொள். இனி அதுவும் போதாவிட்டால் எவரிடமும் கேட்காதே! என்று கூறிவிட்டு…

மீண்டும் தமது மகனை நோக்கி, மகனே! எனது கடனுக்கு நீ பொறுப்பேற்றுக் கொள் என்று சொல்ல மகனும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய் எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் முன் அங்கு கூடியிருந்த அன்ஸார் முஹாஜிர்களை நோக்கி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன்…

எனது தந்தை தரவேண்டிய கடனுக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அறிவித்தனர். பின்னர் எல்லா கடன்களையும் ஒரே வாரத்திற்குள் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்த்து விட்டனர்.

(அறிவிப்பாளர்: இப்னு ஸஃது ரலியல்லாஹு அன்ஹு நூல்: தபகாத் )

9.            ஜஹ்னிய்யா கிளையைச் சார்ந்த ஒரு பெண் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,நாயகமே! எனது தாய் ஹஜ்ஜுச் செய்வதற்காக பெரும் முயற்சி கொண்டிருந்த போது இறந்து விட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு பகரமாக நான் ஹஜ்ஜு செய்ய வேண்டுமா, என்று வினவ, அதற்கு நபியவர்கள்…

ஆம்! உமது தாய்க்காக நீ ஹஜ்ஜு செய். உன் தாயார் கடன் பட்டிருந்தால் அதனை நீ அடைக்க மாட்டாயா? இவ்வாறே இறைவனுடைய கடன் (ஹஜ்ஜை நிறைவேற்றுதல்) உன்மீது கடமையே! அல்லாஹ் மிகவும் தகுதி வாய்ந்தவன்.

(அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)

10.          ஒருவர் தமது பெற்றோருக்காக ஹஜ்ஜுச் செய்வாராயின் அதனை அவருக்காகவும் அவரது பெற்றோருக்காகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வானிலுள்ள அவர்களது ஆன்மாக்களுக்கு சுபச் செய்தி அறிவிக்கப்படுகின்றது. அல்லாஹ்விடம் இவர் தமது பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து கொண்டாரென்றும், எழுதப்படுகிறது என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றனர். (தார குத்னீ)

11.          எவர் தமது பெற்றோருக்காக வேண்டி ஹஜ்ஜுச் செய்தாரோ, அப்போது அவர் மீது கடமையாக்ககப்பட்ட அவரது ஹஜ்ஜும் ஏற்கப்படுகின்றது. மேலும் அவருக்கு பத்து ஹஜ்ஜுடைய நன்மையும் அவரது பட்டோலையில் எழுதப்படுகின்றனது என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

12.          எவர் தமது பெற்றோரின் சத்தியங்களை காப்பாற்றுகின்றாரோ, அவர்கள் பட்ட கடனை தீர்க்கின்றாரோ, அவர்களை ஏசாதிருக்கின்றாரோ, அவர்களை நன்மையாளர்களோடு சேர்க்கப்படும். அவர்தம் பெற்றோர் ஜீவித்திருந்த காலத்தில் அவர்களை நோவினை செய்திருந்தாலும் சரியே!

இனி இவ்வாறே எவர் தமது பெற்றோரின் சத்தியத்தைக் காப்பாற்றவில்லையோ அவர்கள் பட்ட கடனை தீர்க்கவில்லையோ, அவர்களை ஏசுகின்றாரோ, அவரை நோவினை செய்வர் பட்டியலில் எழுதப்படும். அவர்தம் பெற்றோர் ஜீவித்திருந்த காலத்தில் தமது பெற்றோருக்கு நன்மை செய்திருந்தாலும் சரியே! என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு ஹுமைரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: திப்ரானி.)

13.          ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும், எவர் தமது பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரையோ ஜியாரத்துச் செய்கிறாரோ அவரது பாவங்களை இறைவன் மன்னித்து நல்லோரின் பட்டியலில் இணைக்கப்படும் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பவர்: அபீஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. நூல்: திர்மிதி)

14.          எவர் வெள்ளியன்று தமது பெற்றோரில் இருவரது அல்லது ஒருவரது கப்ரை ஜியாரத்துச் செய்து பின்னர் ஸூறா யாஸினை ஓதுவாராயின், அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பவர்: அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு நூல்: இப்னு அதிய்யி)

15.          எவர் ஒருவர் ஜும்ஆவுடைய தினத்தன்றும், தமது பெற்றோரில் இருவரது அல்லது ஒருவரது கப்ரை ஜியாரத்துச் செய்து யாஸீன் ஸூறாவை ஓதுகின்றாரோ, அதிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையளவுக்கு அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பாளர்: ஆயிஷா, அபீஹா ரலியல்லாஹு அன்ஹுமா. நூல்: இப்னு அதிய்யி, தைலமி, இப்னு நஜ்ஜார்)

16.          எவர் நன்மையைப் பெறும் எண்ணத்தோடு தமது பெற்றோர்களிருவர் அல்லது ஒருவரின் கப்ரை ஜியாத்துச் செய்கிறாரோ, அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஹஜ்ஜுடைய நன்மையை எழுதப்படும்.

மேலும் தமது பெற்றோரின் கப்ரை ஜியாரத்துச் செய்கிறாரோ அவரது கப்ரை ஜியாரத்துச் செய்ய மலக்குகள் வருவர் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் நவின்றனர்.

(அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி, இப்னு அதிய்யி)

முஹத்திஸ் இமாம் இப்னு ஜௌஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், தமது 'உயூனுல் ஹிகாயாத்' என்னும் நூலில், முஹம்மத் பின் அப்பாஸ் உர்ராக் என்பாரைக் கொண்டு ஒரு சம்பவமொன்றினை குறிப்பிடுகின்றனர்.

ஒருவர் தமது மகனுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழியில் தந்தை இறந்து விடவே, முல்லைக் கொடிகள் நிறைந்த அக்காட்டில் ஒரு கொடிக்குக் கீழே தமது தந்தையை நல்லடக்கம் செய்து விட்டு தாம் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி  மகன் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்று தமது வேலையை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இரவு நேரம் தமது தந்தையை நல்லடக்கம் செய்திருந்த இடத்தருகே வந்தபோது, தம் தந்தையின் கப்ரை நோக்கி ஸலாம் கூட சொல்லாது செல்லத் தலைப்பட்ட போது…

அசரீரியாக ஒரு சப்தம், ஓ! மனிதரே! உன்னை நான் பார்க்கிறேன். இந்த நடுநிசியில் நீ காட்டை கடந்து சென்று கொண்டுள்ளாய். அத்துடன் அவர் அம்முல்லைக் கொடிக்குக் கீழே இருந்து கொண்டுள்ளார். (அதாவது உமது தந்தை) அவரைக் கண்டு பேசுவது உமக்கு அவசியமில்லை என்று எண்ணுகிறாய். இருப்பினும் அவர் அக்கொடியின் கீழ்தான் இருக்கின்றார். அவ்வாறின்றி ஒருவேளை நீ அவ்விடத்திலிருந்தால் அவர் திரும்பி இவ்வழியாக வரும்போது நிச்சயம் உனது கப்ருக்கருகே வந்து ஸலாம் சொல்லியிருப்பார் என்று வந்தது.

17.          எவர் தமது பெற்றோரது இறப்புக்குப் பின்பும் அவர்களோடு இணைந்திருக்க(கப்ரிலுள்ள பெற்றோருக்கு நன்மை செய்) நாடுகின்றாரோ, அவர் தமது பெற்றோரது இறப்புக்குப் பின்னரும் அவர்களது நண்பர்களோடு சேர்ந்து இருப்பாராக என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: இப்னு ஹப்பான்)

18.          உமது தந்தையுடைய நண்பர்களோடு நீர் சேர்ந்திருப்பது உமக்கு நன்மையாகும் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(ஆதாரம்: திப்ரானி)

19.          தந்தையின் நண்பர்களை பிள்ளைகள் நேசிப்பது நன்மை பயப்பதாகும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத், புகாரி, முஸ்லிம், அபீதாவூத், திர்மிதி)

20.          பெற்றோர்களது நண்பர்களின் நேசத்தினை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அவர்களின் நேசத்தை துண்டித்துக் கொள்ளாதீர்கள். அன்றி, மீறி துண்டிப்பீர்களாயின் இறைவன் உங்களின் நூரை (ஜோதியை) அழித்து விடுவான் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினர்.

(அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி, திப்ரானி, பைஹகீ)

உங்களின் ஒவ்வொரு கிரியைகளும் திங்கள், வியாழன்று இறைவனிடம் எடுத்துக் காண்பிக்கப்படுகிறது. ஜும்ஆ நாளன்று நபிகளார் பெற்றோர்கள் போன்றோருக்கு உங்களின் கிரியைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. உங்களின் கிரியை நன்மையானதாயிருப்பின், அதைக் கேட்டு உங்களின் பெற்றோர் மகிழ்ச்சியுறுகின்றனர். அவர்களின் முகத்துடைய வெண்மை மிகைக்கின்றது. எனவே உங்களின் இறந்தோருக்கு நோவினை செய்தவன் மூலம் அவர்களை துக்கத்திலாழ்த்துவதை விட்டும் இறைவனை பயந்து கொள்ளுங்கள்.

(அறிவிப்பாளர்: வாலித் அப்துல் அஜீஸ் நூல்: இமாமுல் ஹகீம்)

ஆதலால் பெற்றோர் என்பவர்கள் பிள்ளைகளது பிறப்புக்கும் அவர்களது ஜீவியத்திற்கும் காரணகர்தாக்களாயுள்ளனர். பிள்ளைகள் இம்மை, மறுமை சம்பந்தமான எந்த அருட்கொடையினைப் பெற்றாலும், அவை பெற்றோரது பாக்கியத்ததைக் கொண்டுதான் கிடைக்கின்றது.

மேலும் பிள்ளைகள் பெறக்கூடிய அருட்கொடைகளும்,செல்வமும், கல்வியும் பெற்றோராது பிறப்பைக் கொண்டுதான் அமைந்துள்ளது. ஏனெனில், அவர்களுக்கு இவர்கள் பிள்ளையர் பிறந்ததால் தானே அந்தச் செல்வங்கள் பிள்ளைகளான இவர்களுக்குக் கிடைத்தன.

இனி தாய் தந்தை என்னும் ஒரு ஸ்தானத்தை எய்தப் பெறுதல் என்பதே ஒரு மாபெரும் பாக்கியமாகும். ஆகையால் எந்தக் காரணம் கொண்டும் தமது பெற்றோரை தீமைகளுக்குப் பொறுப்பாக்கக் கூடாது. அவர்கள் ஓய்வு பெறும்வரை தமது பிள்ளைகளுக்காக எத்துனை கஷ்டங்களை துன்பங்களை அனுபவிக்கின்றனர். வயிற்றிலே, சுமப்பதும், பாலூட்டி வளர்ப்பதும், சீராட்டி பாராட்டுவதுமான எத்தனை சிரமங்கள். இதற்குரிய நன்றியை பிள்ளைகளான நாம் செலுத்திட முடியுமா என்ன? பெற்றோர் தமது பிள்ளைகளுக்காக அல்லாஹ் ரஸூலுடைய தரப்பிலிருந்து நிழல் தரும் விருட்சமாயுள்ளனர். பின்னும் பெற்றோர் இறைவனது ரப்பு என்னும் ருபூபிய்யத் (ரட்சித்தல்);, ரஹீம் என்னும் ரஹ்மத்(கருணை) வெளியீடாகும் துறைகளாக பெற்றோர் இருக்கின்றனர்.

இதனால்தான் இறைவன் தனது திருமறையில் 'எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!' என்று கூறுகின்றான்.

ஒரு நபித்தோழர் அண்ணல் நபியிடம் வந்து, 'நாயகமே! இறைச்சித் துண்டொன்றை கல்லின் மீது போட்டால் அது காய்ந்து வெந்து போய் விடுமே! அத்தகைய கற்கள் நிறைந்த மிகக் கொடுமையான வெயிலில் எனது தாயை ஆறுமைல் தொலைவு வரை எனது கழுத்திலேயே தூக்கிச் சுமந்து கொண்டு நடந்து சென்றேன். இப்போதாவது  என் தாய் என்னை பெற்றெடுத்ததற்கு நன்றி பாராட்டியவன் ஆவேனா? என்று வினவ, அதற்கு அண்ணல் நபியவர்கள்….

உமது தாய் உம்மை பெற்'றெடுக்கும் போது பிரசவ வலியால் துடித்தாளே! அந்த வேதனையில் ஒரு இம்மியளவு வேதனைக்குக் கூட உமது செயல் பிரதிபலனாகவோ, நன்றியாகவோ ஆக மாட்டாது என்று கூறினர்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது வெறுப்படைவதானது, இறைவன் வெறுப்படைவதைப் போன்றதாகும். ஏனெனில் பெற்றோரின் அதிருப்தியே இறைவனது அதிருப்தியாகும்.

இனி ஒருவர் தமது பெற்றோரை திருப்திபடுத்தினால் அதுவே சுவர்க்கமும் அதிருப்தி அடையச் செய்தால் அதுவே நரகமுமாகும்.

மேலும் ஒருவர் பெற்றோரது திருப்தியைப் பெறும் வகையில் நடக்காதவரை அவரது அனைத்து வகையான பர்ளு, வாஜிபு, நபில் போன்ற எந்த வணக்கங்களும் அறவே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மறுமையில் கொடிய வேதனைக்குள்ளாவதோடு இவ்வுலகிலேயே நெருக்கடியான வாழ்வும், துன்பங்களும் அவனைத் தொடர்ந்து வரும். இறக்கும் தருவாயில் நாவில் கலிமா வெளியாவதிலும் சந்தேகமென்றும் பயமுள்ளது. (இறைவன் நம்மைக் காப்பானாக)

1.பெற்றோர்க்கு வழிப்படுதல் இறைவனுக்கு வழிப்பட்டதாயும், அவர்களுக்கு மாறு செய்தல் இறைவனுக்கு மாறு செய்வதுமாகும் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

2.இறைவனது திருப்தி என்பது பெற்றோரது திருப்தியிலும், இறைவனின் கோபம் பெற்றோர் கோபமுறுவதிலும் அடங்கியுள்ளது என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.

(ஆதாரம்: திர்மிதீ, இப்னு ஹப்பான்)

3.பெற்றோர்கள் தாம் உங்களின் நரகமும் சுவர்க்கமுமாகும் என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவிலுகின்றனர்.

(அறிவிப்பாளர்: அபீஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா.)

4.தந்தை சுவர்க்கத்தின் நடுவாசலாகும். நீ நாடினால் அவ்வாசலை உனது கரங்களால் அணைத்துக் கொள்! இல்லையெனில், உதறிவிடு என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(ஆதாரம்: திர்மிதி, இப்னு ஹப்பான்)

5.மூன்று சாரார் சுவர்க்கம் புகுத மாட்;டார்கள். அவர்கள்: 1. பெற்றோருக்கு வழிப்படாதவன். 2. தய்யூஸ். 3. தன்னை ஆணாக சித்தரித்துக் காட்டுகின்ற பெண் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

(அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: நஸாயீ, ஹாக்கிம்.)

6.உங்களில் மூன்ற நபர்களது பர்ளான நபிலான எந்த வணக்கத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவர்கள்: 1.மற்றவைர காரணமின்றி துன்புறுத்துபவன். 2. செய்த தருமங்களை சொல்லிக் காட்டுபவன் 3. நன்மை தீமை இறைவனது நாட்டப்படி நடைபெறுகின்றது என்பதை ஒப்புக்  கொள்ள மறுப்பவன் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (இப்னு அபீ ஆஸிம், அபீ உமாமா ரலியல்லாஹு அன்ஹுமா)

7.பெற்றோருக்கு நோவினை செய்ததற்குரிய தண்டனையைத் தவிர மற்ற எல்லா பாவங்களது தண்டனையையும் இறைவன் மறுமைநாள் வரை பிற்படுத்துவான். ஆனால் பெற்றோருக்குரிய தண்டனையை மட்டும் இறைவன் இவனது மரணத்திற்கு முன்னரே தீவிரப்படுத்துவான் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினர்.(அறிவிப்பாளர்: அபீபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகீம், திப்ரானி, இஸ்பஹானி)

8.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஒருமுறை தமது தோழர்களை நோக்கி, மிகப் பெரும் பாவமொன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மும்முறை கேட்க, அதற்கு நபித்தோழர்கள்: அறிவியுங்கள் நாயகமே! என்று கூற, அதற்கு நபியவர்கள், இறைவனுக்கு இணை வைப்பதும், பெற்றோர்களை நோவினை செய்வதுமேயாகும் என்றனர்.

(அறிவிப்பாளர்: அபீபக்கர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ)

9.பெற்றோருக்கு நோவினை செய்பவன் சபிக்கப்பட்டவனாவான் என்று மும்முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினர்.

(அறிவிப்பாளர்:அபீ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. நூல்: திப்ரானி, ஹாகிம்.)

10.ஒரு நபித்தோழர் ஒருவருக்கு மரணத் தருவாயில் கலிமா வரவில்லை. அண்ணல் நபியவர்களுக்கு இச் செய்தி அறிவிக்கப்பட்ட போது, அண்ணலார் ஸ்தலத்திற்குச் சென்று அந்நபித் தோழரைப் பார்த்து, லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் என்று கூற, அதற்கவர், எனக்கு சொல் நா எழவில்லையென்று கூறினார். அப்போது பெருமானாரவர்கள் அங்கு கூடியிருந்தோரை நோக்கி, அவர் தமது வாழ்வில் என்ன குற்றம் புரிந்தார் என்று கேட்க, அங்கிருந்தோர், அவர் தமது தாயை துன்புறுத்தியவர் என்று கூறவும், அண்ணலார் உடனே அவரது தாயை அழைத்து, இவர் உமது மகன்தானே என்று கேட்டனர். அதற்கு அப்பெண்மணி, ஆம்;! என்று கூற, உமது மகனை நெருப்பிலிட்டு எரிக்கப் போகிறோம். நீ சிபாரிசு செய்தால் அவரை விட்டு விடுவோம். இல்லையெனில் உம் மகனை எரித்து விடுவோம் என்று உம்மிடம் கூறப்பட்டால் அப்போது உமது மகனை நீ மன்னித்து விடுவாயா? அவருக்கு சிபாரிசுச் செய்வாயா? என்று நபியவர்கள் வினவ, அதற்கு அம்மாது நாயகமே! நான் எனது மகனுக்காக சிபாரிசு செய்கிறேன் என்று கூறவும், அதற்கு அண்ணல் நபியவர்கள்…

அல்லாஹ்வையும் என்னையும் சாட்சியாக வைத்து உனது பிள்ளை மீது நீ திருப்தி  (பொருந்திக்) கொண்டதாக சொல் என்றனர். அவ்வாறே அம்மாதும் அல்லாஹ்வையும், ரஸூலையும் சாட்சியாக வைத்து மதது மகனை பொருந்திக் கொண்டதாகக் கூறினர்.

அதன்பின் அண்ணலவர்கள் அத்தோழரிடம் வந்து, லாஇலாஹ இல்லல்லாஹு  வஹ்தஹு லாஷரீக்கலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு என்று கூறுமாறு சொல்ல,

அவர் கலிமாவை கூறினார். கூறியவுடன் இறப்பெய்தினார். அப்போது அண்ணல் நபியவர்கள் எனது வஸீலாவைக் கொண்டு அவரை நரகிலிருந்து காத்தருள் புரிந்த இறைவனுக்கே புகழனைத்தும் என்று கூறினர்.

(அறிவிப்பாளர்: இப்னு அபீ அவ்ஃபா ரலியல்லாஹு அன்ஹு நூல்: திப்ரானி)

ஹழ்ரத் அவாம் பின் ஹவ்ஷப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி நூற்றி நாற்பத்தி எட்டில் இறப்பெய்திய தபவுத்தாபியீன்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் கூறுகின்றனர்…

நான் ஒரு தெருவுக்குப்போனேன். அத் தெருவின் ஒரு மூலையில் கப்ருஸ்தான் ஒன்றிருந்தது. அப்போது அஸருடைய நேரம் திடீரென அங்கிருந்த கப்ருகளில் ஒரு கப்ரு பிளந்து அதிலிருந்து ஒரு மனிதர் வெளியே வந்தார். அவரது தலை கழுதையின் தலைபோலவும், உடல் மனித உருவிலுமிருந்தது. வெளியே வந்தவர் கழுதையைப் போலவே மூன்று முறை சப்தமிட்டார். பின்னர் கப்ரு முன் போலவே மூடிக்கொண்டது. சற்றுத் தொலைவில் ஒரு கிழவி அமர்ந்திருந்தாள்.

அப்போது ஒரு பெண் என்னை நோக்கி, அந்தக் கிழவியை பார்க்கின்றீரா? என்று கேட்கவும், அதற்கு நான் அக்கிழவியைப் பற்றிய விஷயமென்ன? என்று வினவ, அக்கிழவி இப்போது கப்ரு பிளந்து வெளியே வந்து கழுதைப் போன்று கத்தினானே ஒரு மனிதன். அவனது தாய் தான் அவள். அவன் உயிரோடிருக்கும் போது தினமும் சாராயம் குடித்து விட்டு வருவான். அவனது தாயான இக்கிழவி அவனிடம் மகனே! இறைவனைப் பயந்து கொள்! எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அசூசையை குடிப்பாய் என்று கூறுவாள். அதற்கவன் தனது தாயை நோக்கி, ஏன் கழுதையைப் போன்று எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டிருக்கிறாய் என்று திட்டுவான்.

இந்நிலையில் ஒருநாள் அவன் அஸருடைய நேரம் இறந்து போனான். அன்றிலிருந்து தினந்தோறும் இவனது கப்ரு பிளந்து வெளியே வந்து கழுதையைப் போல் மூன்றுமுறை கத்துவான். பின்னர் கப்ரு மூடிக் கொள்ளும் எனக் கூறினாள்.

(ஆதாரம்: ஷரஹுல் ஹுகூக் லிதஹில் உகூக், இஸ்பஹானி)

பெற்றோரின் திருப்தியைத் தேடுதல் ஜிஹாத், ஹிஜ்ரத்தை விட மேலானது.

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதானது ஜிஹாத் பீஸபீல்(இறைவனது பாதையில் போரிடுவதை) விட சிறந்ததாகுமென்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினர்.

1.            ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்: நான் பெருமானாரிடம் ஒருமுறை, நாயகமே! வணக்கங்களில் எது இறைவனுக்குப் பிரியமானது என்று வினவ, அதற்கு அண்ணலாரவர்கள், தொழுகையை அதற்குரிய நேரங்களில் நிறைவேற்றுவதாகும் என்றனர். பின்பு மீண்டும் நான் எந்த வணக்கம் என்று திரும்ப கேட்க, பெற்றோர்க்குப் பணிவிடை செய்வதென்றனர். பின்னர் மீண்டும் மூன்றாம்  முறையாக எந்த வணக்கம் என்று நான் வினவ, இறைவனின் பாதையில் போரிடுவது என்று கூறினர்.

(ஆதாரம்: அஹ்மத், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ)

குறிப்பு: பெற்றோர்களுக்கு பணிவிடைசெய்தல் என்பதன் கருத்தானது, அவர்களுக்கு வழிப்பட்டு நடப்பது  மட்டுமல்ல. மாறாக அவர்களுக்கு மாறு புரியாதிருப்பதும், அவர்களுக்கு விருப்பமில்லாதவர்களை நாமும் விரும்பாதிருப்பதும் ஆகும். இனி பெற்றோருக்கு வழிப்படுவதும் அவர்களை சந்தோஷப் படுத்துவதும் வாஜிபாகும். அவ்வாறின்றி அவர்கள் வெறுப்படையும் வகையிலோ, அவர்களை மீறி நடப்பதோ ஹராமான விலக்கப்பட்டதாகும்.

2.            ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்: ஒருமுறை அண்ணல் நபியிடம் ஒருவர் வந்து நாயகமே! நான் ஹிஜ்ரத்தும், ஜிஹாதும் செய்வதற்கு தங்களிம் பைஅத்(உடன்பாடு) செய்கிறேன். அதற்குரிய பலனை இறைவனிடம் தேடுகிறேன் என்று கூற, அதற்கு நபியவர்கள், அவரை நோக்கி உமது பெற்றோரில் இருவரோ, அல்லது ஒருவரோ உயிருடன் இருக்கின்றனரா? என்று திருப்பிக் கேட்க, அதற்கவர் ஆம்! இருவருமே உயிருடன் உள்ளனர் என்று கூறினார். பின்னர் மீண்டும் அவரை நோக்கி, இறைவனிடமிருந்து நற்கூலி எதையேனும் நீர் எதிர்பார்க்கிறீரா? என்று வினவ, அதற்கவர் ஆம். என்று கூறவும்,

நபியவர்கள், அவ்வாறாயின் உமது பெற்றோரிடம் திரும்பிச் செல்லும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளும் என்று கூறினர். (ஆதாரம்: முஸ்லிம்)

 

3.            ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்: ஒருவர் பெருமானாரிடம் வந்து, எனது பெற்றோர் இருவரையும் அழ வைத்து விட்டு நான் ஹிஜ்ரத்துச் செய்ய உங்களிடம் பைஅத் (உடன்படிக்கை) செய்ய வந்துள்ளேன் என்று கூற, அதற்கு நபியவர்கள் வந்தவரை நோக்கி, உடனே நீர் உமது பெற்றோரிடம் திரும்பிச் செல்லும். அவ்விருவரையும் நீர் எவ்வாறு அழ வைத்து விட்டு வந்தீரோ அவ்வாறே அவர்களை சிரிக்கச் செய்யும் என்று கூறியனுப்பினர்.

(ஆதாரம்: அபீதாவூத்)

4.            ஹழ்ரத் அபூ ஸயீதுல் குர்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்: எமன் தேசத்திலிருந்து ஒருவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் வந்து, தமக்கு ஜிஹாத் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கு நபியவர்கள், எமனில் உமக்கு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டனர். அதற்வர், ஆம்! எனது பெற்றோரிருவரும் உள்ளனர் என்று கூற, நபியவர்கள் வந்தவரை நோக்கி, அவ்விருவரும் உமக்கு அனுமதியளித்தார்களா? என்று வினவ, இல்லையென்று கூறினார். உடனே அண்ணல் நபியவர்கள் அவரைப் பார்த்து, உடனே உமது பெற்றோரிடம் திரும்பிச் செல்வீராக! அவ்விருவரும் உமக்கு ஜிஹாத் செய்ய அனுமதியளித்தால் ஜிஹாது செய்யும். இல்லையெனில், அவ்விருவருக்கும் பணிவிடை செய்வீராக என்று கூறியனுப்பினர்.

5.            ஹழ்ரத் முஆவியா இப்னு ஜாஹிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்: நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிம் வந்து நாயகமே! நான் ஹிஜ்ரத் செய்ய நாடுகிறேன்.  அது விஷயமாக தங்களின் மேலான ஆலோசனையை நாடி வந்துள்ளேன் என்று கேட்க, அதற்கு அண்ணலாரவர்கள், உமது தாய் உயிருடன் உள்ளார்களா? என்று வினவ, அதற்கு நான் ஆம்! என்று கூறவும், அவ்வாறாயின் நீர் உமது தாய்க்குப் பணிவிடை செய்யும். நிச்சயமாக சுவர்க்கம் உமது தாயின் பாதத்தின் கீழ்தான் உள்ளது என்று பதிலளித்தனர். (ஆதாரம்: திப்ரானி)

6.            திப்ரானி இமாம் அறிவிக்கின்றனர்:  நான் அண்ணல் நபியிடம் வந்து ஜிஹாத் விஷயமாக ஆலோசனைக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், உமது பெற்றோர் உயிருடன் உள்ளனரா? என்று கேட்க, அதற்கு நான் ஆம். என்று கூறவும், அவ்வாறாயின் அவர்களுக்கு பணிவிடை செய்வதில் தரிப்படும். நிச்சயமாக சுவர்க்கம் அவர்களது காலடியில் தான் இருக்கிறது எனக் கூறினர்.

(ஆதாரம்: நஸாயி, இப்னு மாஜா, ஹாகிம், ஸஹீஹுன் அலாஷர்த்தி முஸ்லிம்)

7.            ஹஜ்ரத் தல்ஹா இப்னு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றனர்: நான் அண்ணல் நபியிடம் வந்து நாயகமே! நான் இறைப்பாதையில் ஜிஹாது செய்ய நாடுகிறேன் என்று கேட்கவும், அதற்கு நபியவர்கள், உமது தாய் உயிருடனுள்ளார்களா? என்று வினவ, நான் ஆம். என்று கூறவும், அவ்வாறாயின் அவர்களது காலைப் பற்றிப் பிடியும். அங்கு தான் உமது சுவர்க்கம் உள்ளது என்று கூறினர்.

(ஆதாரம்: திப்ரானி)

தலைசிறந்த தாபியீனும், இறைநேசச் செல்வருமான உவைஸுல் கர்னீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தமது தாய்க்கு பணிவிடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இறுதிவரை தமது புறக்கண்ணால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை அவர்களை ஜியாரத்துச் செய்வதைக் கூட தடுத்து விட்டது. (தல்கீஸ்)

ஆசிரியருக்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய கடமைகள்:

ஆசிரியர் என்பவர் தந்தைக்குச் சமமானவர். ஏன்! சிற்சில காரணங்களைக் கொண்டு நோக்கும் போது, ஆசிரியரின் மகத்துவம் தந்தையின் மகத்துவத்தை விட உயர்வானதாயிருக்கின்றது. ஆகையால் ஆசிரியர் மீது மாணவர்களுக்கு உரிய கடமைகள் சிலவற்றை எடுத்து விபரிக்கிறோம்.

இமாம் ஹாபிஸுத்தீன் அவர்கள் பதாவா ஆலம் கீரியில் கூறுகின்றனர்: இமாம் ஜன்ந்தூஸ்தீ அவர்கள், ஆலிம்களின் உரிமைகள், அறிவிலிகள் மீதும், ஆசிரியரது உரிமைகள் மாணவர்கள் மீதும் கடமையாவதில் இரண்டும் சமமே! மேலும் அறிஞர் ஆசிரியர் போன்றோர் முன் அறிவிலிகளும் மாணவர்களும் முந்திக் கொண்டு பேசாதிருப்பதும், அவர்கள் அமரும் இடத்தில் அமராதிருப்பதும், அவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி புறம் பேசாதிருப்பதும், அவர்களுடன் நடந்து செல்லும்போது அவர்களை முந்திக் கொண்டு செல்லாதிருப்பதும் அறிஞர் ஆசிரியர்க்குரிய உரிமைகளாகும். ஆதலால் அவர்களை மதித்து நப்பீர்களாக!.

ஒருவர் தமது ஆசிரியருக்குரிய கடமைகள் ஒழுக்கங்களை சரிவர பேணி நடப்பது அவசியம். தனது பொருளிலிருந்து ஆசிரியருக்கு செலவு செய்வதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது. ஆசிரியர் விரும்பினால் தமது பொருட்களை மகிழ்வோடு அவர்களது காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர் அதை ஒப்புக் கொள்வதே மாணவருக்கு உபகாரமும் சீதேவித்தனமுமாகும் என்பதை விளங்கியறிதல் அவசியம்.

தாத்தார்கானியாவிலிருந்து ஆலம்கீரியில் கூறப்படுகின்றது: ஒரு மனிதர் தமது பெற்றோர் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்குரிய கடமைகளை விட தமது ஆசிரியரது கடமைகளை முற்படுத்துதல் வேண்டும். தமக்கு நல்ல நன்மை பயக்கும் விஷயங்களை கற்றுத் தருவோருக்குப் பணிந்து நடப்பார். அது ஒரு அட்சரமாயினும் சரியே! அவருக்கு உதவிகள் செய்வது மிக்க அவசியமாகும். தமது ஆசிரியரை விட மற்றவர்க்கு முக்கியத்துவம் தரமாட்டார். இவற்றை கடைபிடித்தொழுகுபவர் இஸ்லாத்தின் கயிறுகளில் ஒரு கயிற்றைப் பற்றிப் பிடித்தவராவார். ஆசிரியர் வீட்டினுள் இருந்தால் கதவை தட்டி ஆசிரியரை அழைக்காது, அவர் வெளியே வரும்வரை எதிர்பார்த்து நிற்பது அவசியமாகும்.

இதைப் பற்றி இறைவன் தனது திருமறையில்…

(நபியே!) உம்மை அறைக்கு வெளியேயிருந்து அழைப்போரில் மிகுதமானோர் அறிவில்லாதவர்களே! நீங்களாக வெளிவரும் வரை அவர்கள் பொறுமையுடன் காத்து நிற்பது நல்லதாகும். மேலும் இறைவன் மன்னிப்பவனும், அன்புடையோனுமாயிருக்கிறான்.

ஆலிமாகிய ஓர் அறிஞருக்கு அனைத்து முஸ்லிம்கள் மீதும், ஆசிரியருக்கு மாணவர் மீதும் இன்றியமையாத எண்ணற்ற கடமைகள் உள்ளன. இவற்றில் குறிப்பாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு நம்மிடமிருந்து அநேக உரிமைகள் (கடமைகள்) உண்டு.

இனி இறைவனுக்கு மாறு செய்யும் விசயத்தில் எவருக்குமே வழிப்படக் கூடாதென ஹதீதில் வந்துள்ளது. அவ்வாறு வழிப்படாதிருப்பதிலும் வீணாக எவரையும் ஏசுவதோ, அவமதிப்பதோ இருக்கக் கூடாது. ஏனெனில் தீமைகள், தீமையானவற்றை விட்டும் ஒருபோதும் நீங்குவதேயில்லை. இனி ஷரீஅத்திற்கு மாற்றமான ஒன்றை எவரேனும் ஏவினால் முடிந்தவரை தனது இயலாமையை சொல்லிக் காட்டியாவது அதனைச் செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி ஷரீஅத்தில் ஏவப்பட்ட ஒரு விஷயமாயிருப்பின் அதனைத் தமக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதி நிறைவேற்ற வேண்டும். இனி ஷரீஅத்தில் விலக்கப்பட்ட ஒன்றை ஒருவர் ஏவினால் அவர் இஸ்லாத்தில் புதியதோர் கூட்டத்திற்கு அடிகோலியவராவார்.

உலமாக்கள் கூறுகின்றனர்: எவரேனும் தமது ஆசிரியருக்கு துன்பம் விளைவிப்பாராயின் அவர் கல்வியின் விஸ்தீரணத்தை விட்டும் துரத்தப்பட்டவராவார். அன்றி ஆசிரியரின் கட்டளை ஷரீஅத்தில் வாஜிபானதாயிருப்பின் அதனை நிறைவேற்றுவது மாணவர் மீது கட்டாயமான கடமையென்பது வெள்ளிடைமலை. அன்றி அவ்விஷயத்தில் ஆசிரியர் கட்டளைக்கு மாணவர் பணிய மறுப்பாராயின் அவர் ஒதுங்குமிடம் நரகத்தையன்றி வேறு கிடையாது. இறைவன் நம்மை காப்பானாக!

அடுத்து ஆசிரியருக்கு நன்றி செலுத்தாமை மிகப் பெரும் திடுக்கிடத்தக்க பலாயாகவும், கொல்லும் வியாதியாயுமிருக்கும். அதன்காரணமாக மாணவரின் கல்வி ஞானம் மறைந்து போய்விடும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்….

உங்களில் எவர் மனிதர்களுக்குரிய நன்றியை செலுத்தவில்லையோ, அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார் என்று கூறினர்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஹ்மத். நூல்: முஸ்னத், திர்மிதி)

இன்னும் இறைவன் தனது திருமறையில்…

எனக்கு நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நான் மென்மேலும் அதிகப்படுத்துவேன். அவ்வாறின்றி எனக்கு நன்றி செலுத்தாவிடில் திடனாக என்வேதனை மிகக் கொடியதே என்று கூறுகின்றான்.

மேலும் இறைவன் தன் திருமறையில்…

திடனாக இறைவன் மோசடிக்காரனையும், நன்றி பாராட்டதவனையும் நேசிக்க மாட்டான் என்றும், யார் நன்றி செலுத்தவில்லையோ, அவர்களை நாம் தண்டிப்போம் என்றும் கூறுகின்றான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் எவர் பிறர்  செய்த உபகாரத்தை எடுத்துக் கூறுகின்றாரோ, அவர் அதற்குப் பிரதியாக ஏதேனும் பெறாதிருப்பின் நிச்சயமாக அவர் உபகாரம் செய்தவருக்கு நன்றி செலுத்தியவராவார். அன்றி எவர் பிறரது உபகாரத்தை மற்றவர்க்கு எடுத்துக் கூறாது மறைத்து விடுகின்றாரோ, அவர் நன்றி செலுத்தியவராக மாட்டார் என்று நவின்றனர்.

(ஆதாரம்: புகாரி, அபீதாவூத், திர்மிதி, இப்னு ஹப்பான்)

 

ஆசிரியருக்கு நன்றி செலுத்தாமையும், அவரை கண்ணியப்படுத்தாமையும் தந்தையுடன் வெறுப்புடன் நடப்பதன் பக்கமாக இணைக்கப்படும். ஆதலால் ஆசிரியருக்கு தந்தையின் அந்தஸ்த்தில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்க!

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறுகின்றனர்…

நான் உ ங்களின் தந்தையேதான். ஏனெனில், நான் உங்களுக்கும் கல்வியைக் கற்றுத் தருகிறேன்.

(ஆதாரம்: அஹ்மத், தாரமி, அபீதாவூத், நஸாயீ, இப்னு மாஜா, இப்னு ஹப்பான்)

இனி பெற்றோரது உரிமையைக் காட்டிலும் ஆசிரியரது உரிமையை முற்படுத்த வேண்டும் என்பதாக உலமாக்கள் கூறுகின்றனர். ஏனெனில், பெற்றோர் உடல் சம்பந்தமான வாழ்க்கைக்கு ஆதாரமாயிருக்கின்றனர். ஆனால் ஆசிரியர் என்பார் ஆன்ம சம்பந்தமான வாழ்க்கைக்கு ஆதரமாயிருக்கின்றாரே! அதனால் என்பதைப் புரிந்து கொள்க!

இக்கடைசி அத்தியாயத்தில் ஏராளமான ஹதீதுகளை உங்கள் முன் சமர்ப்பித்துள்ளோம். ஆசிரியரை கேவலப்படுத்துவதும், அவருக்கு நன்றி செலுத்தாதிருப்பதும், ஒரு அடிமை தன்  எஜமானை ஏமாற்றி விட்டு ஓடுவதற்கு சமமாகும். இதனால் விளையும் தீமைகள் மிகக் கடுமையான முடிவை வருத்தும் என்பதைக் கண்டோம். ஓடிப்போன அடிமை தனது எஜமானிடம் திரும்பி வரும்வரை அவனது பர்லான நபிலான வணக்கங்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

(ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, திப்ரானி, இப்னு மாஜா, இப்னு ஹப்பான்)

எவர் இறைவனுடைய வேதத்தினின்றும் ஒருவருக்கு ஒரு வசனத்தையேனும் கற்றுத் தருகின்றாரோ அவரே அவரது எஜமானன் என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறுகின்றனர்.

(அறிவிப்பாளர்: அபீ உமாமா ரலியல்லாஹு அன்ஹு.ஆதாரம்: திப்ரானி.)

ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், எவர் எனக்கு ஒரேயொரு அட்சரத்தையேனும் கற்றுத் தருகின்றாரோ, அவருக்கு நான் அடிமையாகி விடுவேன். அவர் விரும்பினால் என்னை விற்கலாம். இல்லையெனில் உரிமை விட்டு விடலாம் என்று கூறுகின்றனர்.

முஹத்திஸ் ஷுபா பின் ஹிஜாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களைக் கொண்டு இமாம் ஷம்ஸுத்தீன் ஸகாவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றனர்:

'நான் எவரிடமிருந்து நான்கு அல்லது ஐந்து ஹதீதுகளை எழுதுகின்றேனோ, அவருக்கு நான் இறக்கும்வரை அடிமையாகி விடுவேன் என்று.

ஹழ்ரத் அபீ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர்:

இல்மை(கல்வியை) கற்றுக் கொள்ளுங்கள். இன்னும் அக் கல்விக்கு கண்ணியமளியுங்கள். எவரிடமிருந்து நீங்கள் கல்வியைக் கற்றீர்களோ, அவருக்குப் பணிந்து நடந்து கொள்ளுங்கள் என்பதாகக் கூறினர்.

(ஆதாரம்: திப்ரானி, இப்னு அதிய்யி)

முற்றும்.