அண்ணல் நபி அவர்களை அல்லாஹ் கண்டித்தானா?

அண்ணல் நபி அவர்களை அல்லாஹ் கண்டித்தானா?

By Sufi Manzil 0 Comment June 27, 2012

Print Friendly, PDF & Email

தொகுப்பு: மௌலானா மௌலவி அல்ஹாபிழ் எம்.கே. முஹம்மது காஸிம் மஹ்லரி

வாழ்வளித்த வள்ளல், வளம் தந்த கொண்டல் நலம் நல்கிய அண்ணல் எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்விடம் எல்லா நபிமார்களையும் விட மிக நெருக்கமானவர்கள். எனவே அவர்களை அல்லாஹ் தன்னுடைய ஹபீபாக (நேசராக) தேர்ந்தெடுத்தான். நபிகள் நாயகம் அவர்களுடைய எந்த ஒரு சொல்லும் செயலும் அல்லாஹ்வுக்கு கோபத்தையோ, அதிருப்தியையோ ஏற்படுத்தியதில்லை.

அல்லாஹ்வே குர்ஆனில் சொல்கிறான்…

              مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ  , وَاللَّيْلِ إِذَا سَجَىٰ  , وَالضُّحَىٰ 

'காலை பொழுதின் மீது சத்தியமாக! மறைத்துக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (நபியே) உங்கள் இறைவன் உங்களை கைவிடவுமில்லை, உங்களை வெறுக்கவும் இல்லை. (அல்-குர்ஆன் 93: 1-3)

அல்லாஹ் அண்ணல் நபியைக் கண்டித்தான் என்று சில அறிவாளிகள்? புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் இன்னொருவரை கண்டிப்பதென்றால் இவருக்கு அவர் மீது கோபமோ வெறுப்போ வரவேண்டும். கோபம் அல்லது வெறுப்பு இல்லாமல் கண்டிப்பு என்னும் செயல் உருவாக முடியாது. இது உலகம் அறிந்த உண்மை. நபியே! உங்களை அவன் வெறுக்க வில்லை என்ற சொல், கடந்த காலத்தை குறிக்கின்றது. அப்படியென்றால் கடந்த காலங்களில் ஒரு நிமிடம் கூட அண்ணல் நபி அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு மாறு செய்யவில்லை என்று தெரிகின்றது. மாறு செய்யாத எவரையும், இறைவன் வெறுக்க மாட்டான். கோபப்பட மாட்டான். அவன் கோபம் கொள்ளாமல் யாரையும் கண்டிக்கவும் மாட்டான். வள்ளுஹா சூராவை ஒழுங்காக விளங்காதவர்கள்தான் 'அபஸவதவல்லா, யா அய்யுஹன்னபிய்யு லிம துஹர்ரிமு' போன்ற ஆயத்துக்களை தவறாக விளங்கிக் கொண்டு அண்ணல் நபியை அல்லாஹ் கண்டித்தான் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்கள். இதோ அந்த இரண்டு ஆயத்துக்களின் விளக்கத்தைக் காண்போம்.

يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ۖ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ ۚ

ஓ மறைவானவற்றை அறிவிக்கக் கூடியவரே (நபியே) நீங்கள் உங்களுடைய மனைவிகளின் பொருத்தத்திற்காக அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்ததை உங்கள் மீது நீங்கள் ஏன் ஹராமாக்கிக் கொள்கிறீர்கள்?
-அல்குர்ஆன் 66:1

இந்த வசனம் இறங்க காரணமாவது ஹஜ்ரத் நபிகள் நாயகம் அவர்கள் அடிக்கடி தனது துணைவியார் ஹஜ்ரத் ஜைனப் பின்து ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இல்லம் சென்று அவர்கள் தரும் தேனை பிரியமாக அருந்துவார்கள். இதனால் ஆங்கே அதிக நேரம் தங்கும் நிலை ஏற்பட்டது.

இது ஹழ்ரத் ஆயிஸா ரலியல்லாஹு அன்ஹா, ஹழ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. ரோஷம் ஏற்பட்டது. எனவே இருவரும் கூடிப்பேசி ஒரு முடிவெடுத்தனர்.

நம் இருவரில் யாரிடம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தாலும் நாம் இப்படிச் சொல்ல வேண்டும். 'யாரசூலல்லாஹ்! உங்கள் வாயிலிருந்து கருவேல பிசின் வாடை வீசுகிறதே அதைச் சாப்பிட்டீர்களா? என்று நாம் கேட்க வேண்டும். ஹழ்ரத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலில் ஹழ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா இடம் வந்தார்கள். அப்போது திட்டமிட்டபடி ஹழ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹுஅன்ஹா கேட்டார்கள். 'நான் கருவேல பிசின் சாப்பிடவில்லையே. ஜைனப் இடம் தேனைத்தான் சாப்பிட்டேன். (தேன் சாப்பிடுவதால் அதிக நேரம் நான் ஜைனப் அவர்களிடம் தங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லை) எனவே இனி அந்த தேனை நான் சாப்பிட மாட்டேன்' என்று சத்தியம் செய்த நபிகள் நாயகம் அவர்கள் 'இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
நூல்: புகாரி ஷரீஃப் வால்யூம் 2, பக்கம் 729.

ஹழ்ரத் ஆயிஷா, ஹழ்ரத் ஹஃப்ஸா, ஹழ்ரத் உம்மு ஹபீபா, ஹழ்ரத் ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய ஐவரும் குறைஷி குலத்தைச் சார்ந்தவர்கள்.

ஹழ்ரத் ஜைனப் பின்த் ஜஹ்ஷ், ஹழ்ரத் மைமூனா, ஹழ்ரத் ஜுவைரிய்யா, ஹழ்ரத் ஸஃபிய்யா ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய நால்வரும் குறைஷி அல்லாதவர்கள்.

ஹழ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'இனி நான் தேன் அருந்த மாட்டேன்' என்று சொன்னதோடு 'எனக்குப் பின்னர் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உன் தந்தை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கலீஃபா ஆவார்கள்' என்றும் சுபச் செய்தி சொன்னார்கள்.
நூல்: தஃப்ஸீர் நூருல் இர்ஃபான் பக்கம் 894.

ஆக நான் தேன் அருந்தமாட்டேன் என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தியமிட்டபோதுதான் 'ஓ நபியே! (மறைவானவற்றை அறிவிப்பவரே) அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்ததை நீங்கள் ஏன் ஹராமாக்கிக் கொள்ளாதீர்கள்' (அல்குர்ஆன் 66:1) என்று நபியை பார்த்து அன்போடு கேட்கும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான். இந்த தஹ்ரீம் சூரா வந்த பிறகு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் அடிமையை உரிமையிட்டு சத்தியப் பரிகாரம் செய்து கொண்டார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் எந்த தடை உத்தரவையும் மீறவில்லை. எனவே இறைவன் அவர்களை கண்டிக்கவில்லை. நீங்கள் தேனை மீண்டும் பருகுங்கள் எனும் கருத்தை அன்புடன் அல்லாஹ் சொல்கிறான். யாரிடமும் சொல்லாதே என்று ஹஃபாஸாவிடம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன இரண்டு ரகசியங்களை(தேன், கலீஃபாக்கள் விஷயம்) ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஹழ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்லி விட்டார்கள். அல்குர்ஆன் 66:3.

ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஹழ்ரத் ஹஃப்ஜா ரலியல்லாஹு அன்ஹா ஆகிய இருவரும் ஒன்று கூடி 'யாரசூலல்லாஹ் உங்கள் வாயிலிருந்து கருவேலப் பிசின் வாடை வீசுகிறதே' என்று நாம் நபியிடம் சொல்ல வேண்டும் – என்று திட்டமிட்டது, ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஹழ்ரத் ஹஃப்ஜா ரலியல்லாஹு அன்ஹா ஆகியோரிடமிருந்து உருவான உண்மைக்குப் புறம்பான தகவலாகும். இதை அல்லாஹ் சொன்னபடி அம்மாதரசிகள் இருவரும் தவ்பா செய்து விட்டார்கள்.

ஸஹாபிகள் பாவமே செய்ய முடியாத நபிமார்களைப் போல பாதுகாக்கப்பட்ட மஃஸுமீன்கள் அல்ல. எனவே ஸஹாபிகளிடமிருந்து பாவம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் பாவத்தின் மீது நிலைத்திருக்க மாட்டார்கள். பாவம்  செய்தால் உடன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு விடுவார்கள். ஏனெனில் அல்லாஹ் ஸஹாபிகளைப் பற்றி சொல்கிறான்:

தக்வா என்னும் பரிசுத்த வாக்கியத்மை அவர்கள் மீது அல்லாஹ் உறுதிப்படுத்தினான். (அல்குர்ஆன் 48:26) ஆதமின் மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்கள். தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள், தவறை உணர்ந்து தவ்பா செய்பவர்கள்.

அறிவிப்பு: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி, மிஷ்காத் பக்கம் 204.

எனவே ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஹழ்ரத் ஹஃப்ஜா ரலியல்லாஹு அன்ஹா ஆகியோர்கள் மிகச் சிறந்தவர்களாவர்.

மேலும் ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஹழ்ரத் ஹஃப்ஜா ரலியல்லாஹு அன்ஹா ஆகிய இருவரும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கம் தாங்களிருவருக்கும் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நபி அவர்களிடம் தேன் விஷயத்தில் உண்மைக்குப் புறம்பான தகவலைத் தந்தனர்.

இது போலத்தான் ஹழ்ரத் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நெருக்கம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹழ்ரத் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்கள், யூசுஃப் நபி விஷயத்தில் ஹழ்ரத் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் உண்மைக்குப் மாறான தகவலைத் தந்தார்கள். அவர்களும் தவறு செய்தார்கள்.

ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஹழ்ரத் ஹஃப்ஜா ரலியல்லாஹு அன்ஹா மற்றும் ஹழ்ரத் யூசுஃப் நபி அவர்களின் சகோதரர்கள் செய்த தவறுகள் நபிமார்களின் நெருக்கத்தைப் பெறுவதற்காக செய்த தவறுகளாகும். எனவே அவர்களுக்கெல்லாம் அல்லாஹ் தவ்பா செய்யும் வாய்ப்பை வழங்கினான்.

ஹழ்ரத் யூசுஃப் நபியின் சகோதரர்கள் செய்த தவ்பா அல்குர்ஆன் 12:96ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஷைத்தான், உண்மைக்குப் புறம்பான தகவலைத் தந்ததுடன் தடுக்கப்பட்ட மரம் விஷயத்தில் பொய் சத்தியமும் செய்தான். (அல்குர்ஆன் 7:20,21)

ஷைத்தான் சொன்ன இந்தப் பொய், ஹழ்ரத் ஆதம் நபி அவர்களின் நெருக்கத்தைப் பெறுவதற்காக அல்ல. மாறாக அவர்களின் மீது அவன் கொண்ட பொறாமையின் காரணத்தால். எனவே அல்லாஹ் அவனுக்கு கியாம நாள் வரை தவ்பா செய்யும் தவ்ஃபீகைத் தரவில்லை. இறைநேசர்கள் மீது மனிதன் கொள்ளும் பொறாமை, அவனுக்கு தௌபாவின் கதவை திறக்க வாய்ப்பில்லாமல் ஆக்கிவிடும். அல்லாஹ் இத்தகு பொறாமையை விட்டும் நம்மைக் காப்பானாக! ஆமீன். இனி அபஸ சூராவை பார்ப்போம்.

 
عَبَسَ وَتَوَلَّىٰ ٭أَن جَاءَهُ الْأَعْمَىٰ ٭وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ

தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக (நபி அவர்கள்) கடுகடுத்தார்கள். முகம் திருப்பிக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 80:1,2,3)

ஒன்றும் தெரியாமல் இருந்த மக்காவின் மாக்களை மக்களாக மாற்றிய மக்கள் திலகம் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள ஒரு  முறை அபூஜஹில், உத்பா, ஷைபா, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப், உமையா, வலீதிப்னு முகீரா ஆகிய பெருந்தலைவர்களை ஒன்று திரட்டி சத்திய இஸ்லாத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் யாராவது ஒரு தலைவர் இஸ்லாத்திற்கு வந்தாலும் அவரது தொண்டர்கள் பலரும் இஸ்லாத்திற்கு வந்து விடுவார்கள் எனும் ஆசையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தத் தலைவர்களு;கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த போது ஆங்கே கண் தெரியாத ஸஹாபி ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து, 'யாரசூலல்லாஹ் இறைவன் உங்களுக்கு பயிற்றுவித்ததை எனக்குக் கற்றுத் தாருங்கள். அது கொண்டு நான் பயனடைவேன் என்று திரும்பத் திரும்ப சொன்னார்கள்.

பலருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென குறுக்கே புகுந்து ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி பேசியது பெருமானார் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கடுகடுத்ததுடன் திருவதனம் திருப்பிக் கொண்டார்கள். அப்போதுதான் மேற்கண்ட அபஸ வதவல்லா வசனங்கள் இறங்கின.

இந்த  ஆயத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான் என்று சில மே(ல்)தாவிகள் சொல்வது பொருத்தமற்றது. ஏனெனில், இங்கே அண்ணல் நபி அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் அனுமதி பெறாமல் குறுக்கே பேசும் தவறை செய்தார்கள்.அவர்கள் கண் தெரியாதவராக இருப்பதாலும் அண்ணல் நபியின் மீ:து அளவிற்கடந்த பிரியம் வைத்திருப்பதாலும் அவரிலிருந்து ஏற்பட்ட இந்தத் தவறை அல்லாஹ் மன்னித்தான்.

மிஸ்ர் நாட்டு மங்கைகள், அகிலத்து ஆணழகன் அழகிற் சிறந்த பெருமகன் முத்துப் பல்லழகன் ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எழிலில் மதிமயங்கி கையிலிருந்த கனியை அறுத்தபின் தங்கள் கைகளையும் அறுத்தக் கொண்டார்களே. (அல்குர்ஆன் 12:31)

அவர்கள் பாவிகளல்லவே. அதுபோல ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பாவியல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுகடுத்ததை மேற்கண்ட (80:1,2,3) ஆகிய வசனங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னிலை ஆக்காமல் காயிப் ஸீகாவாக அதாவது படர்க்கையாக நபி கடுகடுத்தார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுவதே அண்ணலார் மீது அல்லாஹ் பொழியும் அன்பைக் காட்டுகிறது.

மேலும் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவைக்கு விஜயம் செய்தது இபாதத் ஆகும். இபாதத்தின் மீது சந்தோஷப்பட வேண்டும். அதை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுக்க வேண்டாம் என்பது மேற்படி அல்குர்ஆன் 80:1,2 ஆகிய வசனத்தின் கருத்தாகும்.

அபஸ வதவல்லா எனும் சூராவின் வெளித்தோற்றம் அண்ணலாரைக் கண்டிப்பது போல் இருப்பதைக் கண்ட முனாபிக் ஒருவன் தன்னுடைய கூட்டத்தாருக்கு இமாமாக தொழுகை நடத்தி வந்தான். எப்போதும் அவன் தொழுகையில் அபஸ சூராவை தான் ஓதி வந்தான். இத்தகவல் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்த போது, இதன் மூலம் அவன் காபிராகி விட்டான் என்று சொல்லி அவனை வெட்டுவதற்கு ஆளனுப்பினார்கள். அவ்வாறே அவன் தலை துண்டிக்கப்பட்டது.

ஆதாரம்: ரூஹுல் பயான், வால்யூம் 10, பக்கம் 331 மற்றும் ஷானெ ஹபீபுர் ரஹ்மான், ஆசிரியர்: அல்லாமா அஹ்மத் யார் கான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இஸ்லாத்தில் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நியமிக்கப்பட்ட இரண்டாவது முஅத்தினார் ஆவார்கள். 'நீங்கள் அதிகாலையில் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாங்கு சொல்லும் வரை நோன்பு காலத்தில் சாப்பிடுங்கள். குடியுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். மேலும் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆரம்பகாலத்தில் ஹிஜ்ரத் செய்த புனிதராவார்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போருக்காக வெளியூர் சென்றபோது இவர்களை மதீனாவில் இரண்டு முறை தன்னுடைய கலீஃபாவாக (பிரதிநிதியாக) நியமனம் செய்தார்கள். மூன்று முறை எனவும் மற்றொரு குறிப்பு கிடைக்கிறது.

இவர்கள் மதீனாவில் வஃபாத்தாகி நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் எனவும் கூஃபாவின் பக்கத்தில் காதிஸிய்யா எனும் சிற்றூரில் நடந்த போரில் கத்தி எடுத்து யுத்தம் செய்து ரத்தம் சிந்தி ஷஹீதானார்கள் எனவும் சொல்லப்படுகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன். அடுத்து, ஆயத்தைப் பார்ப்போம்.

َيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ

(நபியே) இந்த விசயம் உங்களுக்கு பொருத்தமானதல்ல. (அல்லாஹ்) அவர்களை தவ்பா செய்ய வைக்கலாம் அல்லது அவர்களை அவன் வேதனை செய்யலாம். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அநீதியாளர்கள் தாம்.
(அல்குர்ஆன் 3: 128)

அண்ணல் பெருமான் அஹ்மதெங்கள் கோமான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைக் கவசம் உஹத் போர் களத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. சிரசு உடைந்து செங்குருதி சொட்டியது. கருணை நபியின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன் பல் உடைக்கப்பட்டது. அது சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள தமது நபியை காயப்படுத்திய கூட்டம் எப்படி வெற்றி அடையும் என்று சொன்னார்கள். –நூல்: புகாரி பாகம் 2, பக்கம் 582.

அப்போதுதான் மேற்கண்ட லைஸ லக்க மனில் அம்ரி ஷைவுன் என்ற 28வது வசனம் இறங்கியது. –அல்குர்ஆன் 3:128.

இந்த ஆயத்து இறங்கியதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது மக்காவிற்கும் உஸ்ஃபான் எனும் ஊருக்குமிடையிலுள்ள பிஃரெமஊனா என்ற ஊரைச் சார்ந்த சிலர், ஹழ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'யாரசூலல்லாஹ் எங்கள் ஊர் மக்கள் இஸ்லாத்தைப் பயிற்றுவிப்பதற்காக எங்களுக்கு சில உலமாக்களை அனுப்புங்கள்' என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹழ்ரத் முன்திர் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் 70 காரிகளை அனுப்பி வைத்தார்கள்.

சன்மார்க்கம் காக்கப் புறப்பட்ட இந்த ஸஹாபாக்கள் படை, பீஃரமஊனாவை அடைந்ததும், ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த வட்டாரத்தில் வாழ்ந்த ரிஃலு, தக்வான், உஸையா, பனீலிஹ்யான் ஆகிய கோத்திரத்தார் ஆமிர் இப்னு துஃபைல் என்பவன் தலைமையில் 70 ஸஹாபிகளையும் திடீரென நயவஞ்சகத்தனமாகத் தாக்கினான்.

சத்திய ஸஹாபிகள் ஷஹீதானார்கள். ஹஜ்ரத் கஃப் இப்னு ஜைத் நஜ்ஜாரீ ரலியல்லாஹு அன்ஹு எனும் ஸஹாபி மட்டும் கடைசி கட்டத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இந்த செய்தி சாந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செவியில் சென்றதும் சோகத்தில் மூழ்கினார்கள். மேலும் 'யா அல்லாஹ்! இன்ன கூட்டத்தினரை நாசப்படுத்துவாயாக! என்று சுப்ஹு தொழுகையின் இரண்டாம் ரக்அத்தின் ருகூவிற்குப் பிறகு தொடர்ந்து ஒரு மாதம் குனூத் நாஜிலா ஓத் சபித்தார்கள்.

நூல்: புகாரி, வால்யூம் 2, பக்கம் 655,582 மற்றும் தப்ஸீர் நயீமி பாகம் 4, பக்கம் 153.

அப்போதுதான் மேற்கூறப்பட்ட 3:128 வது வசனம் இறங்கியது. ஆக 'லைஸலக்க மினல் ஆம்ரி' எனும் ஆயத் இறங்கியதற்கு இரண்டு சம்பவங்கள் சொல்லப்படுகின்றன.

(நபியே) இந்த விசயம் உங்களுக்கு பொருத்தமானதல்ல என்ற இந்த ஆயத்தின் விளக்கம் என்னவென்றால் ஓ நபியே! உஹத் போரில் தங்களை காயப்படுத்தியவர்களுக்கு எதிராகவோ அல்லது பிஃரம ஊனாவில் 70 ஸஹாபிகளை கொலை செய்தவர்களுக்கு எதிராகவோ நீங்கள் பத்துஆ (சாபம்) செய்ய வேண்டாம். ஏனெனில் நீங்கள் ரஹ்மத்துலில் ஆலமீனாக (அகில உலகத்திற்கும் அருளாக) இருக்கின்றீர்கள். எனவே உங்களுக்கு இது பொருத்தமாகாது. இந்த விசயத்தை அல்லாஹ்விடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுக்கு தவ்பா செய்யும் வாய்ப்பை வழங்கி அவர்களை உங்கள் பொற்பாதத்தில் விழவைப்பான். அவர்கள் உங்கள் அடிவருடிகளாக ஆகிவிடுவாhகள் அல்லது அவர்கள் அநீதியாளர்களாக இருப்பதால் அவர்களை அவன் அதாபு செய்வான்.

மேலும் நபியே! காபிர்களை தப்வா செய்ய வைக்கும் அதிகாரம் உங்களிடம் இருந்தால் இவ்வுலகில் ஒரு காஃபிர் கூட இருக்க முடியாது. அனைவரும் முஸ்லிம்களாகிவிடுவர். காரணம் நீங்கள் அகிலத்தின் அருட்கொடையாக இருக்கிறீர்கள். நானோ கஃப்பார் ஆக (பாவங்களை மன்னிப்பவனாக)வும் இருக்கிறேன். ஜப்பார் ஆக (அடக்கியாள்பவனாக)வும் இருக்கிறேன். அந்த கொடிய காபிர்களை நான் மன்னித்தால் எனது மன்னிக்கும் ஸிஃபத் (தன்மை) வெளிப்படும். அவர்களுக்கு நான் தண்டனை வழங்கினால் எனது அடக்கியாளும் ஸிஃபத் வெளிப்படும். இரண்டில் நான் எதை செய்தாலும் சரிதான்.

இதுதான் மேற்படி வசனத்தின் விளக்கமாகும். ஆனால் சில அறிவுஜீவிகள்(!) இப்படித் தகுமான விளக்கம் சொல்லாமல் காபிர்களுக்கு எதிராக துஆ செய்த நபியை, அல்லாஹ் துஆ செய்யக் கூடாது என்று கண்டித்து தடுத்து விட்டான் என்று தவறான விளக்கம் தருகிறார்கள். ஆனால் ஹழ்ரத் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் மூஸா அலைஹிஸ்ஸலாம் போன்றவர்கள் குஃப்ஃபார் குண்டர்களுக்கு எதிராக துஆ செய்ததை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இதோ ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் செய்த பத்துஆ: 'எம் இறைவா! அவர்களின் பொருட்களை நாசப்படுத்தி அவர்களின் உள்ளங்களை கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை காணும் வரை அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் 10:88)

இங்கே நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் இந்தக் கடுமையான பத்துஆவை அல்லாஹ் கொஞ்சமும் தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. அவர்களின் பத்துவாவை முற்றாக அங்கீகரித்து மூஸா நபி கேட்டுக்க கொண்டபடி ஃபிர்அவ்னையும் அவனின் கூட்டத்தையும் கூண்டோடு நைல் நதியில் மூழ்கடித்து சாகடித்தான். ஃபிர்அவ்னின் உடல் மக்கள் படிப்பினைக்காக (எகிப்து மியூஸியத்தில் இன்னமும்) பாதுகாக்கப்பட்டு வருகிறது. (அல்குர்ஆன் 10:92)

ஹஜ்ரத் நூஹ் நபி செய்த பத்துஆ இதோ: என் ரப்பே! இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ விட்டு வைக்காதே. (அல்குர்ஆன் 71: 26)

இங்கே நம் சிந்தனைக்கு வேலை என்னவென்றால் நூஹ் நபியின் இந்த துஆவை தடுக்காத இறைவன், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்துக் காபிர்களையும் மகா உலகப் பிரளயத்தில் மூழ்கி சாக வைத்தான். காபிராக இருந்த அவர்களின் மகன் கூட இதில் உள்ளடக்கம்.

ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் சாப துஆவை தடுக்காதிருந்த இறைவன், தனது ஹபீப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை – காபிர்களுக்கு எதிராக துஆ செய்ய வேண்டாம். இது உங்களுக்கு பொருத்தமானதல்ல என்று சொன்னதற்கு காரணம் நபியே! ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம், ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் போன்றார் ஜலால் (கோப சக்தி) உடையவர்கள்.

நீங்களோ ஜமால் (சாந்த சக்தி) மிகைத்தவர்கள். அத்துடன் நீங்கள் ரஃவூப், ரஹீம் அன்புடையவர். இரக்கமுடையவர் மற்றும் ரஹ்மத்துல் லில் ஆலமீன் ஆகிய தன்மைகள் உடையவராக தாங்கள் இருக்கின்றீர்கள் என்று இறைவன் சொல்கிறான். மொத்தத்தில் இந்த ஆயத்தில் அண்ணல் நபி அவர்களை அல்லாஹ் சிறிதும் கண்டிக்கவில்லை. மாறாக இந்த ஆயத்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் புகழாரம் சூட்டுகிறது.

கேள்வி: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஃரமஊனா என்ற ஊரைச் சார்ந்த  காபிர்களை சபித்து ஒரு மாதம் சுபுஹ் தொழுகையில் குனூத்து நாஜிலா ஓதினார்களே அது சரியா? தவறா?

சரி என்றால் லைஸ லக்க மினல் அம்ரி ஷைவுன். நபியே! இந்த விஷயம் உங்களுக்கு பொருத்தமானதல்ல (அல்குர்ஆன் 3:128) என்று சொல்லி இறைவன் ஏன் தடுத்தான்?

தவறு என்றால் அதை அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் செய்தார்கள்?

பதில்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள், தன்னுடைய 69 ஸஹாபிகளையும் நயவஞ்சகத்தனமாக கொன்று குவித்த  பிஃரமஊனா காஃபிர்களுக்கு எதிராக பத்துஆ செய்ததும் சரிதான். பிறகு செய்யாமல் விட்டதும் சரிதான். இரண்டும் சரிதான். அதாவது சபித்து துஆ செய்தது சரியானது. பின்னர் அதை விட்டது மிகச் சரியானது. இதற்கு உதாரணமாவது: அல்லாஹ், திருக்குர்ஆனில் ஸஹாபாக்களைப் பார்த்து சொல்கிறான்: நீங்கள் பழிவாங்கினால் உங்களை துன்புறுத்தப்பட்ட அளவே அவர்களை நீங்கள் பழிக்குப் பழி வாங்குங்கள். (அதிகமாக பழிவாங்கலாகா) நீங்கள் பழி வாங்காமல் பொறுமை செய்தால் நிச்சயமாக அது பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்தது. (அல்குர்ஆன் 16:126)

இந்த இறைவசனம் சுட்டிக் காட்டும் கருத்து என்னவென்றால், நமக்கு இன்னா செய்தாரை பழிவாங்குவது சரியானது. பழிவாங்காது பொறுமை காப்பது மிகச் சரியானது. அது போல்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குப்பார்களுக்கு எதிராக பத்துஆ செய்தது சரியானதே. பிற்பாடு செய்யாமல்விட்டது மிகச் சரியானதே.

இந்த வினாவும் விடையும் தஃப்ஸீர் கபீர், தப்சீர் ரூஹுல் மஆனீ, தப்சீர் நயீமி ஆகிய நூல்களில் காணலாம்.

மேலும் வஹ்ஹாபிகள் தொடுக்கும் மற்றொரு கேள்வி?

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்முல் ஙைப் (மறைவான ஞானம்) இருக்கின்றது என்றால் பிஃரமஊனா ஊரைச் சார்ந்த முனாபிக்கீன்கள் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏமாற்றி எப்படி 70 தோழர்களை கூட்டிச் சென்று கொலை செய்தார்கள்.?

பதில்: பிஃரமஊனாவாசிகள் நயவஞ்சகர்கள் என்பதும், 70 ஸஹ hபிகளையும் அவர்கள் தாக்குவார்கள் என்பதும், தனது தோழர்கள் ஷஹாதத் (வீரமரணம்) அடையும் நேரம் அண்மி விட்டது என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும் அவர்கள் மௌனம் காத்ததற்கு காரணம், அல்லாஹ்வின் களா கத்ருக்கு (நாட்டத்திற்கு) கட்டுப்பட்டு அதை பொருந்திக் கொள்வதே அடியானுக்கு அழகாகும்.

ஹஜ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தன் கண்மணி மகனின் கழுத்தில் கத்தி வைத்து அறுப்பதில்தான் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கிறது என்பதை தள்ளாத வயதில் கண்ட பொல்லாத கனவின் மூலம் புரிந்து செயல்படவில்லையா? அதுபோல்தான் இந்த நிகழ்வும்!

 வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துப் படைப்புகளின் ஏற்பாடுகளை(தக்தீரை)யும் அல்லாஹ், (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) எழுதிவிட்டான். அப்போது அவனின் அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீருக்கு மேலே (தண்ணீரைத் தொடாமல் உயரமாக) இருந்தது.

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்;ரு ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: முஸ்லிம், மிஷ்காத், பக்கம் 19.

அல்லாஹுத்தஆலா இவ்வுலகில் நடைபெறவிருக்கும் எல்லா விஷயங்களையும் லவ்ஹுல் மஹ்ஃபூல் பலகையில் ஏன் எழுதிவைத்தான்? மறதி, அறியாமை இரண்டும் இறைவனுக்கு கிடையாது. பிறகு ஏன் அவன் எழுதி வைத்தான் என்றால் தனது நெருக்கத்திற்குரிய நல்லடியார்கள் அதைப் பார்;க்க வேண்டும் என்பதற்காகத்தான். திட்டமாக என் இரு கண்கள் லவ்ஹுல் மஹ்பூல் பலகையை பார்க்கின்றன என்று குவலயம் போற்றும் குத்பு நாயகம் ஹழ்ரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.

வலிகள் கோமானின் பார்வைக்கு இவ்வளவு பவர் என்றால், நபிகள் கோமானின் பார்வைக்கு எவ்வளவு பவர் இருக்கும்? எனவே பிஃரமஊனாவில் ஸஹாபிகளுக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சி லவ்ஹுல் மஹ்பூல் மூலம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

இப்போது மேலே உள்ள முஸ்லிம் ஷரீஃப் ஹதீதை மீண்டும் ஒருமுறை படியுங்கள். தாஹா நபியின் தகுதியை விளங்கும் ஆற்றலை அல்லாஹ் நம் எல்லோருக்கும் தருவானாக! ஆமீன்.

அல்லாஹ்வும் அவன் ரஸூலும் மிக அறிந்தவர்கள்.

முடிந்தது.