ஸூபிகளின் இறைஞானம்(வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தின் அடிப்படை)

ஸூபிகளின் இறைஞானம்(வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தின் அடிப்படை)

By Sufi Manzil 0 Comment February 24, 2012

Print Friendly, PDF & Email

தொகுப்பு:  குளம் ஜமால் முஹம்மது B.Com

முன்னுரை

அஸ்ஸலாமு அலைக்கும்.

     அங்கிங்கெனாதபடி எங்கும்; நிறைந்து இருக்கும் ஏகப் பரம்பொருளாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்,புகழ்ச்சியும் உண்டாவதாக! கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் மற்றும் இறைநேசச் செல்வர்கள், ஷெய்குமார்கள், சாலிஹீன்கள் ஆகியோர்கள் மீதும் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் ஓங்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமின்.

            ஓவ்வொரு காலத்திலும் மக்கள் சமுதாயத்திற்கு நேர் வழிகாட்டுவதற்கென்றே மெய்நிலை கண்ட நாதாக்களை அல்லாஹ் வெளிப்படுத்தி வருகின்றான். அவர்களின் ஞான போதனைகளால் அருள் பெற்று காமிலானோர் ஏராளம். ஆனால், தற்போது ஞான நாதாக்கள், ஸூஃபிகள் என்ற போர்வைகளில் போலியானவர்கள், ஏமாற்று வித்தைக்காரர்கள், அரைகுறை மதியாளர்கள் தோன்றி தன் மனம் போன போக்கில் ஞானம் என்ற பெயரில் வழி கெட்ட கருத்துக்களை பரப்பி ஒன்றும் தெரியாத பாமர முஸ்லிம்களை வழி கெடுத்து வருவதோடு மட்டுமில்லாமல், உண்மையான ஏகத்துவ கொள்கைகளை கொண்டிலங்கும் நாதாக்களை 'வழிதவறியவர்கள்;, காபிர்கள்' என்றும் கூறி வருகின்றனர். இது நமது மெய்ஞ்ஞான நாதாக்களின் வழிமுறை, கொள்கைகளுக்கு மாற்றமாக இருப்பதால், இதை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டி இந்த ஞானப் பொக்கிஷங்களை கோர்வை செய்துள்ளேன். இவையனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் அல்ல. மாறாக வஹ்தத்துல் வுஜுது எனும் மெய்ஞ்ஞான கொள்கைப் படி ஞானங்களை போதித்த மகான்களில் கௌதுல் அஃலம் முஹியித்தீன் அப்துல்காதிர் ஜீலானி, ஹழரத் ஷெய்குல் அக்பர் முஹியித்தீன் இபுனு அரபி, ஹழரத் அப்துல்கரீம் ஜீலி, இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி, மௌலானா ஜலாலுத்தீன் ரூமி, ஷைகு ஷாஹ் ஹக் முகத்திஸ் திஹ்லவி, ஹுஸைனிப்னு மன்ஸூர் ஹல்லாஜ், நாகூர் ஷாஹ் மீரான், உமர் ஒலி காஹிரி, கல்வத் நாயகம் ரழியல்லாஹு அன்ஹும் போன்ற நாதாக்களின் போதனைகளே. இதை படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் காமிலான ஷெய்குமார்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது. தான் தோன்றித்தனமாக விளக்கங்கள் கூறும் போலிகளிடம் சென்று வழி தவற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்நூல் வெளி வருவதற்கு பேரருள் புரிந்த வல்ல அல்லாஹ்விற்கும், இதை சரிபார்த்து தந்த எமது ஷெய்கு நாயகம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி, பாகவி, காதிரி, ஸூஃபி ஹஜ்ரத் மத்தலில்லாஹுல் ஆலி அவர்களுக்கும், இப்பணியில் உறுதுணையாக இருந்த அனைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்; கொள்கிறேன்.  இதை படித்துணர்வதின் பொருட்டு அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி, உயரிய படித்தரத்தை தந்தருள்வானாக! ஆமீன்.

குறிப்பு: கருத்து பிசகுதல் ஏற்படாமல் இருப்பதற்காகவும்;, அர்த்தம் மாறாமல் இருப்பதற்காகவும் வேண்டி நாதாக்கள் பயன்படுத்திய அரபி பதங்களை அப்படியே பயன்படுத்தி உள்ளேன்.  

وآخر دعواناالحمد لله رب العالمين

இவண்,

ஷெய்குமார்களின் ஊழியன்,

குளம் ஜமால் முஹம்மது.

 

ஸூஃபிகளின் இறைஞானம்.

بسم الله الرحمن الرحيم

'வஹ்தத்துல் உஜூது' (ஓர் உள்ளமை):

ஹக்கு சுபுஹுவானத்த ஆலாவின் 'தாத்-வுஜூது' மட்டுமே உண்மையானது. மற்றவை அனைத்தும் கற்பனையானது. மேலும் சிருஷ்டிகள் இறைவனின் வெளிப்பாடும், தோற்றமுமாகும். உலகும், சிருஷ்டிகளும் இறைவனின் மள்ஹருகளாவே (வெளியாகும் தலமாகவே) இருக்கின்றது என்பதே 'வஹ்தத்துல் வுஜூது' ஆகும். மனிதன் தான் ஏற்படுத்திக் கொண்ட கற்பனா உள்ளமையை இன்மையாக்கி நான் என்பதை அழித்துவிட்டால் அவனில் ஐக்கியமாகலாம். இதுவே மேலான படித்தரம் ஆகும்.

ஆனால் சில போலி ஷெய்குமார்கள் 'வஹ்தத்துல் வுஜூது' என்ற சித்தாந்தக் கொள்கையைப் போதிப்பதாகக் கூறிக் கொண்டு அதற்கு மாற்றமாக துவைதம்-இரு உள்ளமையை ஸ்தாபிக்கின்றனர். இதை 'வஹ்தத்துல் வுஜூது' என்றும், இதை மறுப்பவர்கள் வழிதவறியவர்கள்ளூ காபிர்கள் என்றும் கூறுகின்றனர். மஆதல்லாஹ்!

இவர்கள் கொள்கையாவது, உஜூது ஒன்று என்றும், தாத்துகள் எண்ணிக்கையானது என்றும் நம்புகின்றனர். ஆகவே வாஜிபுடைய தாத்தும், மும்கினுடைய தாத்தும் வேறு வேறாகும். ஆனால் இரண்டிற்கும் உஜூது ஒன்றாகும். இரண்டில் ஒன்றினுடைய உஜூது மற்றதன் ஐனுமாகும். மேலும் மவ்ஜூதான (வெளியான) பொருள் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் நம்புகின்றார்கள். இவர்கள் இரண்டு தாத்தை தரிபடுத்துவது எதற்காகவெனில் சில அஹ்காம், ஆதாறுகளை அல்லாஹ்வின் பக்கம் சேர்க்க இயலாது என்ற காரணத்தினால்தான். அவர்கள் தாத்துல் மும்கினை தீமை விளையுமிடமாகவும், தாத்துல் வாஜியை நன்மை விளையுமிடமாகவும் ஆக்குகிறார்கள். இந்த கலப்பற்ற ஷிர்க்கை தவ்ஹீது என்றும் கூறுகிறார்கள். குர்ஆனுக்கும், ஹதீதிற்;கும் மாற்றமாக ஆகிவிட்டார்கள். இவ்வாறு தான் தோன்றித்தனமாக நாதாக்களின் கொள்கைகளுக்கு மாற்றமாக 'வஹ்தத்துல் வுஜூது' என்ற போர்வையில் போதிப்பதால் உண்மைக் கொள்கையை விளக்கும்பொருட்டு,  நாதாக்களின் நூற்களிலிருந்து இதை கோர்வை செய்துள்ளேன்.

தாத்தும், உஜூதும்; வேறானவைகளா?

மெய்ஞ்ஞான சொரூபர் ஷாதுலிய்யா தரீகாவின் ஷெய்கு  பூஅலி ஷாஹ் மதார் ஆலிம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் தனது ஞானப் பிரகாசம் அல்லது நூருல் இர்பான் எனும் நூலில் ஆலம் (உலகம்) இஸ்முகள், சிபாத்துகளைக் காட்டும். இஸ்மும், சிபாத்தும் தாத்தென்ற உள்ளமையைக் காட்டும். தாத்'தென்பதும், உஜூது என்பதும் ஒன்றுதான். உஜூதென்பது ஹகீகத்தில் ஒன்றுதான். அது தய்யுன் தாத்து என்கிற நாம ரூபங்களைக் கொண்டு பலதாகயிருந்தாலும் சரி என்கிறார்கள்.

வஹ்தத்துல் உஜூது எனும் அத்வைதக் கொள்கையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் அத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலில் அஷ்ஷெய்கு முகம்மது இப்னு பளுலுல்லாஹி ரஹிமஹுல்லாஹு அவர்கள், ஹக்கு சுபுஹானஹுவத் தஆலா அவனுடைய தாத்தானது அவனது உஜூதானதாகவே இருக்கும். அதற்கு வேறானது அல்ல. இது வஹ்தத்துல் வுஜூதுஉஜூது ஒன்று என்று சொல்கிறவர்களிடத்திலேயாகும் என்கின்றனர்.

சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் ஷெய்கு முகம்மது அப்துல் காதிர் ஸூஃபி ஹழரத் ஹைதராபாதி ரஹிமஹுல்லாஹு அன்ஹு அவர்கள் தனது அஸ்ஸுலூக், அல்ஹகீகா போன்ற நூற்களில் தாத்தும், உஜூதும் ஒன்றுதான். நிச்சயமாக தாத்து, உஜூது என்பன ஒரே அர்த்தத்திற்குள்ள இரு பெயர்களாகும். அந்த அர்த்தமாகிறது தாத்தைக் கொண்டும், அஸ்மாக்கள் கொண்டுள்ள கமாலைக் கொண்ட வாஜிபான ஹக்காகும். எதன்பேரில் சிபாத்துகள் சேர்க்கப்படுமோ அதற்கு தாத்து என்று பெயர் வைப்பதை ஸூஃபிகள் வழக்கமாக்கி கொண்டார்கள். உண்மையில் தாத்'தென்பது ஹகீகிய்யான உஜூதாகும். உஜூதென்பது தாத்தாகும். ஹகீகியான உஜூதாகிய தாத்திற்கு மேலதிகமானது இல்லை என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு ஞானவான்களான  ஸூஃபிகள் உஜூதும், தாத்தும் ஒன்றுதான்  என்றிருக்க போலி ஷெய்குமார்கள் உஜூதையும், தாத்தையும் பிரித்து தன்மனம் போன போக்கில் கருத்துக்கள் சொல்கிறார்கள். பொதுமக்கள் இவ் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியமாகிறது. இவர்கள் இவ்வாறு சொல்வதில் பல்வேறு ஆட்சேபணைகள், தீமைகள் இருக்கின்றன. அதை பின்னர் விவரிப்போம்.

அதற்கு முன் ஏகப்பரம்பொருள் எவ்வாறு சிருஷ்டியாக தோற்றமளித்தது என்பதை விளங்கவேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் இந்த கொள்கை பற்றி உண்மை விளங்க வரும்.

ஏகப் பரம்பொருள் அநேகமாக(சிருஷ்டிகளாக) தோன்றியவிதம்:

சிருஷ்டி என்பது இறைவனின் மெய்ப் பொருளான வுஜூத்- உள்ளமையின் தோற்றமும் வெளிப்பாடும் ஆகும். உலகமும் அதிலுள்ள சிருஷ்டிகளும் அல்லாஹ்வின் மள்ஹருகளாகவே (வெளியாகும் தலமாகவே) இருக்கின்றன. அல்லாஹ் தன்னை அறிய நாடிய போது சிருஷ்டிகளைப் படைத்தான்.

'எப்பொருளையேனும் அவன் படைக்க நாடினால் அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் ஷகுன்| (ஆகிவிடுக) என்று கூறுவதுதான். உடனே அது ஆகிவிடுகிறது'அல்-குர்ஆன்23-36-82

அல்லாஹ் குன் எனும் கட்டளையிட்டது இன்மையை நோக்கி அல்ல. தனது சம்பூரண அறிவை நோக்கியே அவ்வாறு கூறினான். சம்பூரண அறிவில் தரிப்பட்டிருந்தவைகள் அவன் கட்டளையால் கோலங்களாயின. அல்லாஹ்வின் தாத்து பூர்வீகமானது போல அவன் அறிவும் பூர்வீகமானதுதான். அவன் அறிவிலிருந்துதான் இப்பிரபஞ்சம் கோலங்களாக வெளியாகியுள்ளது. அல்லாஹ்வின் அறிவில் தரிப்பட்டிருந்த தத்துவங்கள் கோலமாகி வெளியாகியிருப்பதால் ஹக்கின் உள்ளமையும், பிரபஞ்சத்தின் உள்ளமையும் ஓன்றே!

தாத்து தன்னை அறிய நாடிய போது தன்னை வெளிபடுத்த தோற்றுவித்த 6 படித்தரங்களை அறிய  வேண்டியது அவசியமாகிறது.

தாத்து(அஹதியத்):

ஹக்குடைய உள்ளமையே தாத்ஆகும். இவற்றில் சம்பூரண அறிவும், அறிவின் உள்ளிடைத் தத்துவங்களாகிய பண்புகளும், அவற்றின் செயல்பாடுகளும் மறை பொருளாய் இருக்கின்றன. ஹக்கு தன்னையே தான் உணராத நிலைதான் தாத்து’. இது அறிவைக் கொண்டு மட்டிட்டுக் கூறமுடியாத ஆச்சர்ய நிலையாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாத்துடைய நிலை பற்றி கூறும் போது மாசுரப்னாக்க ஹக்கன் மஃரிபதிக்கநான் உன்னை அறியக்கூடிய அளவிற்கு அறிந்து விடவில்லை என்றார்கள். நான் அவிக்தய புதையலாக இருந்தேன்  என்பது தாத்துடைய நிலையாகும். இதனை குன்ஹு தாத்து’, லாதய்யுன்’-குறிப்பற்ற மர்தபாஅஹதியத் என்றும் சொல்லப்படும்.

உதாரணமாக மனிதனின் மனம்- எந்த நினைவும், எண்ணமும் உண்டாகதவாறு அவையாவையும் விட்டு நீங்கிய வண்ணமுமாய் நீ உன்னிலே அமிழ்ந்து வேறு ஏதும் தெரியாத நிலையில் நீ ஆக முடியுமானால் அந்த நிலை அஹதிய்யத்தின் நிலையாகும். நீ இந்தத் தன்மையிலிருந்தாலும் உன் எண்ணங்கள், நினைவுகள் யாவும் உன்னுள் மறைந்து வெளிவராமல் இருக்கும். இதுபோன்றே அல்லாஹ் தஆலாவின் தாத்தில் பல மறைந்தவைகளாயிருப்பினும் அவனில் ஒன்றும் வெளியாகாது.

1.வஹ்தத்- முதற்குறிப்பு’- நூரே முஹம்மதிய்யா:

இது தாத்தின் உணர்வு நிலை. இதிலே சகல அகமியங்களும் வெளியாயின. தன்னைத்தான் அறியும் உணர்வு உண்டாயிற்று. அறியப்படாத நிலையிலிருந்த தாத்து தன்னில் தான் நோட்டமிட்டு தன்னில் சகலமும் அடங்கியிருக்கக் கண்ட பதவிதான் வஹ்தத் ஆகும். இதற்கு நூரே முஹம்மதிய்யா என்றும் சொல்லப்படும். இம் மர்தபாவில் சம்பூரண ஞானத்தைப் பெற்ற தாத்து, அதைக் கொண்டு மட்டிடப்படுகிறது. அதாவது, அல்லாஹூத் தஆலா சிருஷ்டியுடைய சகல சூரத்திலும் வெளியாவதற்கு அருகதை, ஏற்புத்தன்மைகளை தன்னில் பெற்றுக் கொண்டான். இன்னும் நான் சகல சிருஷ்டிகளின் சூரத்துகளிலும் வெளியாக முடியும் என அறிந்து கொண்டான். இந்த அறிவிற்கு இல்மு இஜ்மாலி’-பொது அறிவு எனப்படும். இதில் அறிவு, அறிந்தவன், அறியப்பட்டது ஆகிய மூன்றும் பரிசுத்த தாத்து ஒன்றே ஆகும். இங்கு அறவே வேற்றுமை என்பதில்லை. அல்லாஹுத் தஆலா சூரத்துகளின் பேரில் வெளியாகிற அறிவு மட்டும் உண்டானது. விபரமான அறிவு- அதாவது இன்ன இன்ன சூரத்தில் வெளியாக இயலும் என்ற அறிவு உண்டாகவில்லை. இந்த மர்தபாவில் உள்ளமையின் நாட்டமுண்டாயிற்று. ஆகுக(குன்) என்று சொன்னதெல்லாம் தன் ஞானத்தில் உருவாகியிருந்த தோற்றங்களை முன்னிலைப்படுத்தியே. இவ்விதம் அறிவை முன்னிலையாக்கிச் சொன்னதால் அதற்குநான் எனும் தன்மையுண்டாகி, கீழ்ப்படித்தரங்களில் பலவாய் பிறந்த ஒவ்வொன்றுக்கும் நான்என்ற தன்மை உண்டாக காரணமாயிற்று. இதுநான்என்ற ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்தானம்(விஜ்தான்) என்று மெய்ஞ்ஞானிகள் கூறுவர். இதுவே மனிதனுக்கு கடைசிப் படித்தரமாகும். இதற்குமேல் படித்தரம் இல்லை.

2.வாஹிதிய்யத்து’ – இரண்டாம் குறிப்பு:

ஹக்கின் உள்ளிடைத் தத்துவங்களை ஹக்கு இத் தானத்தில் பிரிவுபடுத்தி வகை வகையாயப் பார்த்தான். ஒவ்வொரு பண்பிலும் தன்னைத்தான் பார்த்தான். ஹக்கு பண்புகளை பரித்தறிந்த போதிலும் பண்புகள் தங்களைத்தான் அறிந்து கொள்ளவில்லை. இந்த படித்தரத்தில் ஆதியிலிருந்து அந்தம் வரையிலும் வெளியாகும் சூரத்துகள் மற்ற சூரத்துகளை விட்டும் பிரிந்ததாயிற்று. ஹக்கு, இதன் உசும்புதல், ஓடுங்குதல், நிலைமைகள், விதங்கள் ஆகியவைகளை ஒரே கணத்தில் அறிந்து கொண்டான்.

இந்த மர்தபாவில் ஹக்குதஆலா வேறுவேறாக அறிந்திருந்த சூரத்துகளையெல்லாம் கௌனிய்யான அஸ்மாக்கள்என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு சூரத்தும் இஸ்மாகும். எப்படியெனில், இன்ஸான் என்ற சூரத்தும் இஸ்மாகும். ஹயவான் என்ற சூரத்தும் இஸ்மாகும். இதற்கு இஸ்மு கௌனிய்யா என்றும் சொல்லப்படும். அஃயானுதாஃபிதா என்றும் சொல்லப்படும்.

இதேபோல் ஹக்குத்தஆலாவின் கல்யான குணங்களான ஹயாத்து, இல்மு, தத்துவம், குத்ரத்து, ஸம்உ,பஸறு, கலாம்-ஜீவன், அறிவு, நாட்டம், தத்துவம், கேள்வி, பார்வை பேச்சுகளாக அறியப்பட்ட சூரத்துகளாகிறது அஸ்மாவு இலாஹிய்யா’- இலாஹிய்யத்தான அஸ்மாக்கள் எனப்படும். இந்த அஸ்மா கியானி மற்றும் அஸ்மாவுல் இலாஹிய்யா -இலாஹிய்யத்தான அஸ்மாக்கள் ஒவ்வொன்றும் தாத்து தானாகும்.

ஏழு கல்யாண குணங்களான ஜீவன், அறிவு, நாட்டம், கேள்வி, தத்துவம், பார்வை, பேச்சு ஆகிய ஏழு சூரத்துகளையும் சேர்த்து ஒரு குறிப்பான சூரத்தில் தன்னை ஹக்குத்தஆலா பார்த்தானோ அந்த ஏழு சிபத்துகளும் சேர்ந்த சூரத்திற்கு தெய்வீக பெயர்என்று சொல்லப்படும். இதன் மொழித்தலான இஸ்முவிற்கு அல்லாஹ் என்று சொல்லப்படும்.

இன்னும் மொழித்தலான இஸ்முகளாகிய ஹயாத்து, இல்மு, குத்ரத்து, இறாதத்து, மற்றவைகளானவை இஸ்முக்கு இஸ்மாக இருக்கும். அதாவது ஹயாத்து என்ற மொழித்தலில் வரக்கூடிய இஸ்முடைய முஸம்மாவாகிறது (பெயர் வைக்கப்பட்ட பொருளாகிறது), அல்லாஹ்வின் அறிவில் தரிப்பட்டிருந்த ஹயாத்துஎனும் சூரத்தாக இருக்கும். இந்த மொழித்தலிலான இஸ்மாகிறது ஹகீகியான அதாவது அல்லாஹ்வின் அறிவில் தரிபட்டிருந்த இஸ்மிற்கு வேறானதாகும்.

அல்லாஹ் என்பது தெய்வீக சூரத்திற்கு இஸ்மு ளப்லியாகும்மொழித்தலிலான இஸ்மாகும். தெய்வீகத்தின் சூரத்து இஸ்மு ஹகீகியாகும். இது ஹக்குதஆலாவின் தாத் ஆகும். ஆகவே அல்லாஹ்என்ற மொழித்தலான இஸ்மாகிறது தாத்திற்கு வேறானதாகும்.

ஏழு சிபத்துகள் சேர்ந்த உலூஹிய்யத்தின் சூரத்து ஹக்கின் தாத்தாகும். இன்ஸான் இந்த ஏழு சிபத்துகளையும் சேர்த்துக் கொண்டவனாக இருப்பதினால்தான் இன்ஸான் அல்லாஹ்வின் சூரத்தில் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இவருக்குதான் இன்ஸான் காமில்சூரத்து முஹம்மதீ எனப்படும். எப்போது இந்த ஏழு சிபத்துகளின் அறிவு உண்டாகிவிட்டதோ அப்போது அல்லாஹ்வின் தாத்து தன்னை இலாஹுவாகவும் (தேவைகளை நிறைவேற்றுபவனாகவும்), அடியானை தேவைகளை உடையவனாகவும் பெற்று கொண்டான். இன்ஸான் காமிலானவர் இந்த ஏழு சிபத்துகளையும் சேர்ந்திருப்பதால் அல்லாஹ்வின் தாத்திற்கு இஸ்மானார். இன்னும் சகல உலகின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்கு வஸீலாவாக ஆனார். இவர் இல்லாமல் உலகத்தில் யாருடைய தேவைகளும் நிறைவேற்றப்பட முடியாது.

இம் மூன்று மர்தபாக்களும் ரப்பை சார்ந்தவை. இது பூர்வீகமானது. உஜூதுக்குள்ளாலான மர்தபாவாகும். குன்என்ற ஏவலுக்கு முன்னுள்ளதாகும்.

 

3. ஆலமுல் அர்வாஹ்’- மூன்றாம் இறக்கம்’ – ஆலமே ஜபரூத்’:

வாஹிதிய்யத்தான மர்தபாவில் – விபரமான அறிவில் ஹக்கின் தாத்தானது, ஒவ்வொரு சூரத்தையும் மற்ற சூரத்தை விட்டும் வேறானதாக அறிந்தது. ஆனால் எந்த சூரத்திற்கும் தன்னைப் பற்றிய அறிவும், வேறெந்த சூரத்தைப் பற்றிய அறிவும் இல்லாதிருந்தது. மேலும் ஹக்கின் தாத்தை பற்றிய அறிவும் இல்லாதிருந்தது. அதன் பின்னர் ஹக்குத் தஆலா தன் இல்மைக் கொண்டு கௌனிய்யான அஸ்மாக்கள்- அஃயானு தாஃபிதாவின் பேரில் தஜல்லியானான். அதாவது அந்த சூரத்துகளுக்கு அறிவைக் கொடுத்தான். அதனால் சூரத்துகள் தன்னையும், பிறவற்றையும் அறிந்து கொண்டன. நான் வானமாகும், நான் பூமியாகும், நான் மிருகமாகும் என்று அறிந்தது. உவமையில் மனிதன் தன்னையும், பிறவற்றையும், ஹக்கின் தாத்தையும் அறிந்தான். மேலும் அவை தங்களுக்கென்று ஒரு உள்ளமையை தாங்களே ஏற்படுத்திக் கொண்டன. மேலுள்ள இரு மர்தபாக்களையும் சிருஷ்டி, சிருஷ்டியில்லை என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் இங்கே அதே சூரத்திற்கு சிருஷ்டி என்பார்கள்.

ஒரு இறை வழி நடப்பவன் கவனிக்க வேண்டிய விஷயம்: சிருஷ்டிஎன்பதை மனிதன் தன்னை உணர்ந்ததால் மட்டுமே பெற்றான். எதுவரை மனிதன் தன்னை உணர்கிறானோ அதுவரை அவன் மனிதன். உணர்வற்று விட்டால், சிருஷ்டியில் இருப்பதற்குரிய கட்டளைகள் எடுபட்டு போய் வாஹிதிய்யத்துடைய மர்தபாவில் சென்று விடுகிறான்- மனிதன் அசலில் பனாவாகி விட்டான். ஹக்கு தஆலாவாகவே தரிபாடாகி விட்டான்.

4. ஆலமுல் மிதால்’- ஆலமுல் மலகூத்’- நான்காவது இறக்கம் – சூக்கும உலகு:

அல்லாஹ் தஆலா ஆலத்திற்குப் பரிபூரணமான வெளிப்பாட்டை கொடுக்க நாடினதும் ஆலமுல் அர்வாஹின் பேரில் நான்காவதாக தஜல்லியானான். இத் தோற்றத்தினால் ரூஹு ஒவ்வொன்றும் ஒரு தடிப்பமான உடையை அணிந்தது. எவ்வாறு மனிதனுடைய கற்பனையில் தோன்றிய உருவங்கள் பிளக்காமலும், ரேகிக்காமலும் இருக்கிறதோ அதே போல் மிதாலுடைய உருவங்களும். ஆலத்திலுள்ள ஒவ்வொரு அணுவிற்கும் கற்பனையான மாதிரி ஒன்று இங்கு உண்டு. சூக்கும சரீரம் சடலங்களனைத்தையும் அடைய வளைந்ததாய் இருக்கிறது. பூத உலகம் உண்டாகுமுன் (மீதாக் எனும் நாளில்) ஆத்ம உலகில் சகல ஆத்மாக்களுக்கும் சூக்கும சரீரம் இருந்தது. இப்போது ஸ்தூல சரீரம் அதற்கு இருப்பிடமாய் உள்ளது. இதுவே மனித ஆத்மாவின் அசல் ஆகும். தனக்கு வேண்டிய எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்ளும் சக்தி இதற்குண்டு. ஈருலகங்களின் கிரியைகள் அனைத்தும் அதையொட்டியவையாகவே இருக்கின்றன. நன்மை, தீமை, கேள்வி கணக்கு, இன்பம், துன்பம், வேதனையாவும் இதன் மீதேயாகும். இந்த நாஸூத்தெனும் உடலிலே அந்த சூக்கும் சரீரம் நிலை கொண்டுள்ளது, கம்பியில் தொனி இருப்பது போலாகும். கம்பி அசைவதால் அதில் தொனி உண்டாகிக் கம்பியின் இலட்சணத்தை வெளிப்படுத்தி பூர்த்தியாக்கி வைப்பது போல், சூக்கும சரீரம் இந்த ஸ்தூல சரீரத்தை சம்பூரணமாக்கி விடுகிறது. அவ்லியாக்களுக்கு சித்தியாகும் அக விளக்கமும், அபூர்வ நிகழ்ச்சிகளும் இந்த சூக்குமத்தின் விளக்கத்தினாலேயே உண்டாகின்றன.

5.ஆலம் அஜ்ஸாம்’-ஸ்தூல உலகம்':

இந்த தஜல்லியில் சம்பூரண தடிப்பம் சட்டத்தின் சூரத்தில் உண்டானது. சம்பூரண மர்தபா வெளியானது. இங்கு சடம் பூரண தடிப்பதின் காரணத்தால் பிளக்கவும், சேர்ந்து ரேகிக்கவும் செய்யும். ஆலம் அர்வாஹ், ஆலம் மிதால் ஆகியவை மரணத்தை விட்டும் பரிசுத்தமானதாகும். ஆனதால் மரணம் நமக்கு வருகிறதென்றால் இந்த சடவுலகில்தான்.

இதனால் மனிதன் எதார்த்தத்தில் மரணிக்க மாட்டான். ஆனால் நாஸூத்து எனும் சடவுலகத்தை விட்டும் வெளிப்பட்டு விடுவான். சடவுலகில் அவனுக்கு மரணம் ஒரு கற்பனையானது மட்டுமே. ஆனால் அவன் எப்போதும் ஜீவனுள்ளவனாகவே இருப்பான்.

6.மர்தபதுல் இன்ஸானியா’ –ஆறாம் இறக்கம்:

ஹக்குதஆலா மேற்கூறிய 5 மர்தபாக்களையும் ஒன்று சேர்த்து இம் மர்தபாவில் வெளியானான். இதற்கு பெயரே இன்ஸான் காமிலாகும். இந்த இன்ஸான் காமில் தான் வெளி சூரத்தை கவனித்து சிறிய உலகமாகும். உள்ரங்கத்தைப் பொறுத்து பெரிய உலகமாகும். பெரிய உலகத்தில் எத்தனை சூரத்துகள் வெளியாகியுள்ளதோ, இன்னும் காலாகாலம் எத்தனை சூரத்துகள் வெளியாக வேண்டியுள்ளதோ அத்தனையும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் அவரை கலீபாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

இன்ஸான் காமிலின் பொருட்டாலேயே உலகத்தின் ஒவ்வொரு அணுக்களின் நிலையுமிருக்கிறது. மேலும் இவர் மேலான அகமியங்களையும், கீழான அகமியங்களையும் சேர்த்து கொண்டிருக்கிறார்.

அல்லாஹ்வின் இலாஹிய்யான அகமியங்களுக்கு எதுகையானவராக இருப்பது அவரின் மிருதுவான பாகத்தினாலும், சிருஷ்டிகளைக் கொண்டு கொழுகிய அகமியங்களுக்கு அவரின் திண்ணமான பாகத்தினாலும் ஆகும்.

அல்லாஹ்வின் அருள் இன்ஸான் காமிலின் பேரில் இறங்குகிறது. இன்ஸான் காமிலின் சூரத்திலிருந்தே ஒவ்வொரு அணுக்களுக்கும் அதனதன் இயல்புகளுக்கும், அருகதைகளுக்கும் தக்கவாறு அந்த அருள்களிலிருந்து கொடுக்கப்படுகிறது. உலகத்தில் சகல அணுக்களுடைய உசும்புதல், வளர்ப்பு, கண்காணிப்பு போன்றவை இன்ஸான் காமில் மூலமாகவே ஆகிறது. இந்த இன்ஸான் காமிலுக்கு பெயர் ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதாகும்.

இவ்வாறு ஹக்கு சுபுஹுவானஹு வ தஆலா தன்னுடைய தாத்தின் புறத்திலிருந்தே சிருஷ்டியாக வெளியானான். இதில் இரு தாத்திற்கு இடமேயில்லை என்பது விளங்குகிறது.

ரூஹு:

மனிதன் இரண்டு ரூஹுகளால் ஆனவன்.

1.ஹக்கினால் ஊதப்பட்ட ரூஹு

2.குன்என்ற ஹக்கின் கட்டளையால் ஆன ரூஹு.

ஞானவான்கள் முந்தியதை ஷபரமாத்மா| என்றும், பிந்தியதை ஜீவாத்மா என்றும் அழைக்கின்றனர். குன் என்ற கட்டளையால் ஆன ரூஹு சரீர சம்பந்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. சரீர சம்பந்தத்தினால் இந்த இரு ரூஹுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொள்கின்றன. ஷரீஅத் சட்ட திட்டங்கள் சரீரத்தைக் கொழுகிய ஜீவாத்மாவுக்கே அல்லாது பரமாத்மாவிற்கு அல்ல. பரமாத்மாவை நான்என்பதால் ஜீவாத்மா பரமாத்மாவில் ஒன்றிக்க ஷரீஅத் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இதை காயல்பட்டணம் மெய்ஞ்ஞான சொரூபர் அஷ்ஷெய்கு உமர் வலியுல் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

'கல்பைக் கழுகினால் கரைசேரலாம்

கையைக் கழுகினதால் கரைபோமோ

கல்பதிலே ஒரு நாளைக்கு அறுபது

ஹக்கன் திருநோக் குண்டாகுமென்றார்நபி

                        மல்லான போரும் கிபுறும் ஹஸதையும்

மாற்றான் உண்டாக்கும் வஸ்வாசு அடங்கலும்

இல்லாமல் ஆக்கியே ஏகன் கிருபையால்

எப்போதும் தவ்ஹீதால் துப்புரவாகவே

                        அம்மாறத்தெனும் நப்ஸானதின் குணம்

அமலும் தமவும் கலபும் ஷஹ்வதும்

எம்மாத் திரமாகிலும் இருந்தாலுமே

ஏகன் ஜனாபினில் சேரஒட்டாது கான்' என்கின்றனர்.

சுவர்க்கத்திலும் மேலான இன்பம் ஹக்கனுடன் ஒன்றிப்பது தான் என்று கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.

 

ஹக்கும், கல்கும் :- உண்மை ஸூஃபியாக்களின் பார்வை:-

நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கிறான் என்பதனை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால் உங்களை போக்கி விட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்                                                                                                                                                            அல்-குர்ஆன் 14:19  

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான். அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்’.                                                                   அல்குர்ஆன் 16:3.     

நிச்சயமாக நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டேயல்லாது படைக்கவில்லை  

                           அல்-குர்ஆன் 15:85.

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது                                                                                                                 அல்-குர்ஆன்29:44

வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான். அன்றியும் உங்களை உருவாக்கி உங்கள் உருவங்களையும் அழகாக்கினான் அவனிடம் தான் யாவருக்கும் மீளுதல் இருக்கிறது                                                                                                                       அல்-குர்ஆன் 64:3

ஆகிய குர்ஆன் ஆயத்துக்கள் பிரபஞ்சம் ஹக்குடைய உள்ளமையிலிருந்தே வெளிப்பட்டது என்றும், பிரபஞ்சத்தின் உள்ளமையும், ஹக்கின் உள்ளமையும் ஒன்று தான் என்றும் தெளிவாக்குவதாக மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரபஞ்ச வஸ்துக்கள் ஒவ்வொன்றும் ஹக்கின் அறிவில் தரிப்பட்டிருந்த கோலங்களாகும்.  ஹக்கின் உள்ளமையின் சம்பந்தமில்லாமல் அவைகள் வெளிப்பட முடியாது. எழுத்துக்கள் இன்மையானது. சாயத்தின் உள்ளமையை கொண்டே வடிவத்தைப் பெறுகின்றன.

ஏக அறிவில் தரிபட்டிருந்த தத்துவங்கள் ஆலம் அர்வாஹில் தங்களுக்கென்று ஒரு கற்பனா உள்ளமையை ஏற்படுத்திக் கொண்டதால்அவைகள் காரண சரீரத்தையும், சூக்கும சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் பெற்றன. இந்த ஜீவனுக்குரிய இம் முத்தேகத்தை ஜீவன் கடக்காத வரை அவனுக்கு முக்திஏற்படாது. இதற்காகவே அல்லாஹ் மனித படைப்பை படைத்தான். இம் முத்தேகம் நானில்லைஎன்றும், ஏக அறிவே நான்என்று திடப்படுத்தி அதில் தரிபடவே இறைவன் ஏக அறிவை மனிதனில் தரிபடுத்தியிருக்கிறான் என்றும் மெய்ஞ்ஞானிகள் சொல்கின்றனர். இவர்கள் மனித சரீரத்தையும், அதை இயக்கும் ஜீவனையும் ஹக்குடைய கருவியாகக் கருதி ஷரீஅத் சட்டபடி நடக்கின்றனர். ஜீவன் ஏற்படுத்திக் கொண்ட கற்பனா உள்ளமையை நாஸ்தியாக்கி ஏக அறிவில் ஒன்றித்து விட்டால், மௌத் ஏற்படும் போது மனித ஜீவனை ஏக அறிவு தன்னோடு பொருந்திக் கொள்ளுமென்கின்றனர்.

ஹக்கே பிரபஞ்சமாக தோற்றமாயிருக்கிறது எனில், ஹக் வேறு சிருஷ்டி வேறில்லை என்று வருகிறதே! சிருஷ்டிகளெல்லாம் அல்லாஹ்தானா? என்று கேட்பீர்களேயானால், ஹக்கு தஆலாவிற்கும், உலகத்தில் உள்ள அணுக்களுக்குமிடையில் ஒற்றுமையின் விதத்தையும், வேற்றுமையின் விதத்தையும் அதற்குரிய குணபாடுகளையும், ஹுக்முகளையும் வேறானதாக ஸூஃபியாக்கள் அறிந்து அதன்படி நடக்கின்றனர்.

கண்ணியமிகு ஸூஃபியாக்கள் ஜைதுஅல்லாஹ் என்றோ, ரூஹுஅல்லாஹ் என்றோ, அம்றுஅல்லாஹ் என்றோ, ஒருபோதும் கூறுவதில்லை. அவர்களிடத்தில் தஅய்யுனுடைய மர்தபா’-குறிப்பான மர்தபா, லா-தஅய்யுனுடைய மர்தபா’- குறிப்பற்ற மர்தபாவை விட்டும் வேறானதாக இருக்கும். உஜூதுடைய ஒவ்வொரு மர்தபாவிற்கும் ஒரு ஹுக்மு உண்டு. மர்தபாவிற்கு இடையில் பாகுபாடு வைக்கவில்லையெனில் ஸிந்தீக்-பாவியாகி விடுவாய் என்கின்றனர்.

ஐனியத்தும், ஙைரியத்தும்:-

இரு வஸ்துக்கள் அவைகளுக்கிடையில் ஒன்று மற்றதானதாயிருப்பதும், ஹுக்முகள், ஆதாறுகளில் வேறுவேறானதாக இருப்பதையும், வஸ்துக்களிடையே ஐனியத்து ஹகீகி ஙைரியத்து வஹ்மியை – எதார்த்தத்தில் ஒன்று மற்றதானாயிருப்பதையும், கற்பனையில் வேறானதாயிருப்பதையும் விளங்க வேண்டும். ஒரு வஸ்துவுக்கு வேறு வஸ்து அல்லது வஸ்துக்களுடன் உண்டான வஜ்ஹ ஐனியத்து’- இது அதுதான் என்பதற்கான விதத்தில் அவைகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வு இல்லை. ஆனால் வஸ்துக்களுக்கிடையே ஏற்றத் தாழ்வானது வஜ்ஹ ஙைரியத்து’-வேறானது என்ற விதத்திலேயாகும்.

உதாரணமாக, மனிதர்கள் என்ற விதத்தில் கிறிஸ்துவர், இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் மானுசீக அந்தரங்கத்தின் அடிப்படையில் எதார்த்தத்தில் ஒருவர் மற்றவர் தானாகவே இருக்கும். மனிதர்கள் என்ற விதத்தில் ஒருவரை விட்டு ஒருவர் உயர்வு பெற்றவராக முடியாது. ஆனால் கொள்கை சித்தாந்தப்படி ஒருவரைக்கான ஒருவர் மேலானவர் என்ற மேம்பாட்டை உருவாக்கிவிட்டது. இதுஙைரியத்து’- வேற்றுமை என்ற விதத்திலாகும்.

ஐனியத்துடைய மர்தபாக்கள், ஹுக்;முகளை ஐனியத்திற்கும், ஙைரியத்துடைய மர்தபா ஹுக்முகளை ஙைரியத்திலும் வையுங்கள். ஒன்றோடு ஒன்று சேர்த்து பார்ப்பீர்களேயானால், பாவியாகி விடுவீர்கள். உதாரணமாக, தாய்-தந்தைக்கு மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோர் குர்ஆன் தீர்ப்புப்படி ஷபிள்ளைகள்| என்றே சொல்லப்படுகிறது. இது ஐனியத்துஎன்ற விதத்திலாகும். ஆனால், மனைவிஎன்பது ஙைரியத்துஎன்ற விதத்திலாகும்.

அல்லாஹ்வின் சொந்த அடியார்கள் அல்லாஹ் அல்ல. எனினும் அல்லாஹ்வை விட்டும் வேறானவர்களுமல்ல’.

உஜூது-பரம்பொருள் ஊடுருவியிருக்கிற விதத்தில் ஒன்று மற்றது தானாக இருக்கும். இன்னும் உஜூதுக்கும் தானானதாகவே இருக்கும். என்றாலும், வானத்தையோ, பூமியையோ அல்லது மனிதனையோ அல்லாஹ்என்று சொல்ல மாட்டார்கள். சகல மர்தபாக்களையும் ஸூஃபியாக்கள் நன்கு அறிவார்கள். ஒன்றின் ஹுக்மு, குணபாடுகளை மற்றதின் பேரில் சுமத்தாட்ட மாட்டார்கள்.

எப்படி குதிரை, கழுதை போன்றவைகள் உயிரினம்என்ற மர்தபாவில் (படித்தரத்தில்) மனிதன்தானதாக இருந்தும், மனிதன் குதிரை, கழுதை இல்லையோ அதே போல் ஒவ்வொரு அணுவும் ஹக்தானாகவிருந்தும் (உஜூதுடைய மர்தபாவில்) ஹக் அல்ல. இவ்வுலகம் சடவுலகம். இங்கு சடத்துடைய அதிகார ஆட்சிதான் செல்லுபடியாகும். எப்படி உருவம் இருக்கிறதோ அதன் படிக்கே தீர்ப்பும், ஹுக்மும் உண்டு.

எந்த உருவமாவது அதன் மூலாதரமான அசல் உருவத்தின் மேல் இடையூறாக வருமோ அந்த உருவத்தை ஙைரியத்து இஃதிபாரி’ – கவனிப்பிலான வேற்றுமையைக் கொண்டு வேறானது என்றும், அசல் உருவத்தை கவனித்து ஐனியத்து ஹகீகி’-எதார்த்தத்திலானது என்றும் தரிபடுத்துகிறார்கள். எந்த வஸ்து நீங்கிப் போகக் கூடியதாக இருக்கிறதோ, அதைக் கற்பனையான உஜூதைக் கொண்டு மவ்ஜூதானதுஎன்கிறார்கள்.

உதாரணமாக மண்ணினால் செய்யப்பட்ட பாண்டங்கள் மூலப் பொருளை கவனித்து மற்ற பாண்டத்திற்கும், இன்னும் தனது மூலமான மண்ணிற்கும் ஐனு ஹகீகியாகும். இன்னும் கவனிப்பிலான வேற்றுமையைக் கொண்டு வேறாகும். இதை நன்கு விளங்கிக் கொள்ள சில அடிப்படைக் கொள்கைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அவையாவன:-

1.உளதாக இருப்பது இல்லாததாகவும், இல்லாதது உளதாகவும் ஆகாது.

2.எதார்த்த சுய வடிவம் மாறுவது அசம்பாவிதம் ஆகும்.

3.சுய வடிவத்திற்கு அவசியமானவைகள் சுய வடிவத்தை விட்டும் நீங்காது.

4.ஆதேயங்களின் உஜூது ஆதாரங்களின் உஜூது தானாதாகவே இருக்கும்.

5.ஆதேயம் ஒவ்வொரு கணமும் அழிவதற்கும், நீங்கிப் போவதற்கும் இடமாகும்.

எந்தபொருள் அழிந்து போறதாயும், இல்லாமலாகிப் போறதாயும் உள்ளதோ அது உண்மையில் உள்ளதானதாக இல்லை. எந்த பொருள் தனது சுய உள்ளமையில்லாமல் வேறு பொருளின் உள்ளமையில் காட்சிக்குத் தோன்றுகிறதோ அதை கவனிப்பினாலானது- கற்பனையானதுஎன்கிறார்கள். இந்த உலகமும், அதிலுள்ளவைகளும் அழிந்து போகக் கூடியதாதலால் அவைகள் சுயமாக உள்ளமையுடையது அல்ல என்றும், ஹக்குத்த ஆலாவின் உஜூது தான் இந்த உலகாதி தோற்றங்கள் உண்டாகுமிடம் என்பதை அறிந்துகொண்டு, அலா குல்லுஷையின் மாகலல்லாஹி பாதினுன்’ –அல்லாஹ் அல்லாதவை அடங்கலும் இல்லாதவையாகும்என்ற லுபைது கவிஞரின் கவிதையை உண்மையாக்கிய ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஹதீதையும், குல்லு ஷையின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹுசகல வஸ்த்துக்களும் அழிந்தது, இல்லாததாகும். அல்லாஹ்வின் தாத்தைத் தவிரஎன்ற திருவசனத்தை நம்பி வழிபட்டு உலகமும் அதிலுள்ள வஸ்த்துக்களும் சுயமாக இல்லாதது. அவைகளின் தோற்றத்திற்கு காரணமானது அல்லாஹ்வின் உஜூதுதான் என்றார்கள். ஸூஃபியாக்களின் இந்த கொள்கைகளே குர்ஆன், ஹதீதிற்கு ஒற்றுமையானதாகும்.

உதாரணங்கள்:-

ஐசும், தண்ணீரும் இரண்டும் ஒன்று மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ, அதுவே ஐஸ் ஆகும். எது ஐஸோ அது தண்ணீராகும். தண்ணீர் ஐஸாக மாறும் போது தண்ணீரின் ஓடுகின்ற உருவம் மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உருவாகி விட்டது. ஐஸின் குணபாடுகளும், ஹுக்முகளும் தண்ணீரின் குணபாடு, ஹுக்முகளை விட்டும் வேறானதாகி விட்டது. ஆனால் ஐஸின் உஜூது’ – உள்ளமை எதார்த்தத்தில்  இல்லையென்றாலும் எது தண்ணீரின் உள்ளமையோ அதுவே ஐஸின் உள்ளமையாகும். ஐஸின் உருவம் வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கற்பனையிலுமே உள்ளது.

இப்போது காட்டுங்கள். ஐஸ் எப்படி இருந்தது, எப்போது வந்தது? எங்கிருந்து வந்தது? எப்போது அழிந்தது? சூரத்து நௌயிய்யாவின் உஜூது இஃதிபாரி’ – இன உருவத்தில் உள்ளமை கற்பிதமானது என்பதும், அது தன் தாத்தில் மஃதூமு ஹகீகி’ –  எதார்த்தத்தில் இல்லாமையானது என்பதும் உறுதியாகி விட்டது.

மோதிரம் என்னும் கோலம் தங்கத்தின் ஐனாக இருப்பதுடன், மோதிரம் எனும் கோலம் வெளியாவதற்கு முன் தங்கத்தின் தாத்தில் மறைந்திருந்தது. அது வெளியான பின் மோதிரம் எனும் பெயர் உண்டாயிற்று. மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும், சுற்றுமே ஆகும்.

மோதிரம் இல்லாமல் ஆகவும் செய்யும், அழியவும் செய்யும். அழியும் பொருட்களெல்லாம் ஹகீகத்தில் மவ்ஜூதாகஆகாது என்றாலும், அதை அறியப்படுவதெல்லாம் வஹ்மிலும், கியாலிலும் தான். அதமும், உஜூதும் உண்டாகிறது கியாலில்தான், வெளியில் அல்ல.

பின்பு அந்த மோதிரத்தின் கோலம் அழிந்து விட்டால் நீ அது இல்லாமலாகி விட்டது என்று எண்ணாதே. என்றாலும் அது அசலுக்கு திரும்பி விட்டது என்று அறிந்து கொள்.

நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்ப்பீர்களானால், எப்படி இன உருவமானதுசட உருவத்தின் பேரில் வந்த ஆதேயமாக இருக்கிறதோ, அதே போல் சட உருவமானது மூலப் பிரகிருதியின் (ஏக அறிவின்) பேரில் வந்த ஆதேயமாகும் என்பது விளங்கக் கூடும். எப்போது இன உருவம் தனது தாத்தில் இல்லாமலாகி விட்டதோ, அப்போது சட உருவம் மூலப் பிரகிருதியின் பேரில் வந்த ஆதேயமாக இருப்பதினால் அதுவும் தனது தாத்தில் இல்லாமலாகிப் போய் விட்டது, கற்பனைக் கவனிப்பினால் உண்டானதாகி விட்டது. இப்போது மூலப் பிரகிருதியை-  ஏக அறிவைப் பார்ப்பீர்களேயானால் அதுவும் உஜூதின் பேரில் வந்த ஆதேயமாகும் என்பதும், கற்பனை கவனிப்பினால் உண்டானது என்பதும் விளங்க வரும். இந்த எல்லா மர்தபாக்களிலும் மாறாததும் உருக்குலையாததும் ஏகப் பரம்பொருள் மட்டுமே என்பது நிரூபணமாகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

தன்ஸீஹும், தஷ்பீஹ்கும்:-

நிச்சயமாக தாத்திற்கு இரு மர்தபாக்கள் உண்டு.

கட்டுபடுத்தப்பட்ட மர்தபா-தஷ்பீஹ்

பொதுப்படையான மர்தபா- தன்ஸீஹ்

இந்த இரண்டு மர்தபாக்களுக்கும் அதற்கதற்கென்று சொந்தமாக்கப்பட்ட தீர்ப்புகளும், குணபாடுகளும் உண்டு. ஒன்றின் ஹுக்மை மற்றொன்றின் ஹுக்முகளோடு கலக்க கூடாது.

ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் அல்லாஹ்விற்கு உதவி செய்வீர்களேயானால், அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்என்று கூறினார்கள். அவர்கள் ஸஹாபாக்களை அல்லாஹ்வின் உதவி வெளியாகுமிடமாக கருதினார்கள். இது தஷ்பீஹ் உடைய மர்தபாவாகும்.

தன்ஸீஹ்’- தூய்மையுடயவன் என்று அறிவதாகும். சிருஷ்டித்தவனை சிருஷ்டிக்கப்பட்டவைகளுடன் எவ்வித ஒப்பு, உவமையும் கற்பிக்காமல் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே ஷைகு முஹம்மது இப்னு பளுலுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த ரப்பின் உள்ளமைக்கு எல்லையோ, உருவமோ, குறியோ இல்லைஎன்று கூறியுள்ளார்கள்.

ஸூஃபியாக்கள் தன்ஸீஹ்-வ-தஸ்பீஹ்’- தூய்மைப் பண்பையும், கற்பனைப் பண்பையும் சேர்த்து அறிவதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ஷெய்கு முஹிய்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நீ அல்லாஹ்வை தன்ஸீஹோடு மட்டும் கணித்துப் பேசினால் அவனைக் காணாதவனாகி விடுகிறாய்.

அவ்வாறின்றி தஷ்பீஹ்வுடன் மட்டும் கணித்துப் பேசினால் அவனுக்கு எல்லை வகுத்தவனாகி விடுகிறாய். எனவே, இரண்டையும் சேர்த்துக் கணித்தால் உண்டாகும் பொருளை அறிந்தால் நேர்வழி கண்டவனும், ஞானிகளின் தலைவனுமாகிறாய்என்கின்றனர்.

ஏவல்,விலக்கல், நன்மை,தீமை, களாகதிர் பற்றிய மஸ்அலா:-

இறைவனின் கட்டளைகள், குணபாடுகள் ஆகியவற்றைப் பின்பற்றும் விஷயத்தில் எத்தனையோ கால்கள் சறுகி விட்டது. இது மிக ஒரு நுட்பமான விஷயமாகும்.

அல்லாஹ்வாகிறவன் அவனுடைய பூர்வீக தேட்டத்தைக் கொண்டு ஒவ்வொரு கோலங்களுக்கும் ஒரு ஹுக்மையும், குணப் பண்பையும் ஏற்படுத்தினான். வழமைக்கு மாற்றமாக வரக் கூடிய வழியை அல்லாஹ் நாடினாலொழிய, இவை ஒருக்காலும் இவற்றை விட்டும் பிரியாது.

ஒவ்வொரு கோலங்களும் ஒரு வகையில் தேவையானதும் மற்றோர் வகையில் தேவையாக்கப்பட்டதுமாகும். ஏனெனில் கௌனிய்யான ஒவ்வொரு அணுக்களிலும் தெய்வீகத் தன்மை ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வாறெனில் குளிர் பிடித்த ஒருவன் வெப்பத்தின் பேரில் தேவையாகிறது போலவும், அறிவுத் தேடக் கூடிய ஒருவன் ஆசிரியரின் பேரில் தேவையாகிறது போலவும், நோயாளி வைத்தியரின் பேரில் தேவையாகிறது போலவும் ஆகும். அல்லாஹ்விற்கு எல்லாக் கோலங்களிலும் சொந்த கமாலியத்து உண்டு. இந்த சொந்தமான கமாலியத்து இந்த சொந்தமான கோலத்தின் வழியேதான் அவனிலிருந்து வெளிவரும்.

அல்லாஹ் பொதுவான ரஹ்மத்துடைய தேட்டத்திலிருந்து முர்சலான நபிமார்கள் மற்றும் அன்பியாக்களை அனுப்பி வேதங்களையும், ஹிக்மத்துகளையும் படித்துக் கொடுத்து, அதன்படி அவர்கள் மக்களிடையே போதுமான பயான் பண்ணினார்கள். ஷரீயத் படி ஹலால், ஹராம்களை எடுத்துரைத்தார்கள்.

மேலும் அவர்கள் கோலங்களும், அதன் குணபாடுகளும், அதன் தீர்ப்புகளும் அவனின்றி வேறில்லை என்று அறிந்து தொழுகையில் இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன்' என்று கூறினார்கள். ஒவ்வொரு அணுக்களின் சொந்தமான கமாலத்தாகிறது ஒருவனுக்கு அந்த சொந்தமான அணுக்களின் பக்கம் தேவையாவது கொண்டே கிடைக்கிறது என்றும், ஆகவே விலக்கப்பட்ட வஸ்துக்களை விலக்குவதும், ஏவப்பட்ட வஸ்துக்களுக்கு வழி படுவதும் இர்பானுடைய ஹகீகத்துடைய குணபாடாகும் என்றும் சொன்னார்கள்.

நன்மையும், தீமையும் இறைவனின் நாம தோற்றமேயாகும். அதாவது ஆலம் இஸ்முகளையும் (பெயர்களையும்), சிபாத்துகளையும் (பண்புகளையும்) காட்டும். இஸ்மும், சிபாத்தும் தாத்என்ற உள்ளமையைக் காட்டும். தாத்தானது சிபாத்து எனும் காரணத்தின் பிரகாசத்தால் காரியமெனும் முழு ஆலமும் விளங்குகிறது. காரணத்திற்கு அந்நியமாய் காரியமில்லை. உதாரணமாக, மண்ணுக்கு அந்நியமாய் மண் பாண்டங்கள் இல்லை.

இன்னும் ஆலமானது ஹக்கின் நாம ரூபங்களுக்கு அடையாளமாகவும், அவன் செயல் அவன் தத்துவங்களுக்கு கண்ணாடியாகவும் இருக்கிறது. அல்லாஹ்வின் காதிர்என்ற இஸ்மால் ஆலம் வெளியாக்கப்பட்டது. காலிகுஎன்ற இஸ்மால் படைக்கப்பட்டவைகள் உண்டாயின. இரணம் கொடுக்கப்பட்டவைகளுக்கு ராஜிக் என்ற இஸ்முடையவன் காரணமாகிறான். இவ்வாறே அல்லாஹ்வின் அனைத்து இஸ்முகளும் அதற்குரிய குணங்களையும் தத்துவங்களையும் வெளியாக்கி ஆலம் வழமை போல் நடைபெற்று வருகிறது.

மனிதருக்குள்ள இலாப, நஷ்டங்கள் லவ்ஹுல் மஹ்பூலில் முன்னரே பதியப்பட்டு விட்டது. லவ்ஹுல் மஹ்பூல் அல்லாஹ்வின் ஒளியாக இருக்கும். இது கசல படைப்புகளையும் சூழ்ந்திருக்கிறது. லவ்ஹுல் மஹ்பூலில் இல்மு உண்டாகக் காரணமாயிருந்த அக்லுல் அவ்வல்லவ்ஹுல் மஹ்பூலை சூழ்ந்திருக்கிறது. லவ்ஹுல் மஹ்பூலுக்கு நப்ஸுல் குல்லி    என்றும் சொல்லப்படுகிறது. ஆகையினால் கைரான கட்டளைகளும், ஷர்ரான கட்டளைகளும், இன்பமானதும் துன்பமானதும் அல்லாஹ்வினின்றுமுள்ளது என்பது விளங்குகிறது.

மேலும் நாட்டம் இறைவனைச் சார்ந்தது ஆகும். மனிதனுக்கு சொந்தமாக நாட்டமென்று ஒன்று கிடையாது. இறைவன் அவன் நாட்டத்தைக் கொண்டு உன்னை படைத்தான். தக்தீர்என்ற ஆதி கற்பனையைக் கொண்டு உனக்கு எவ்வௌற்றை கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை நீ சுலபமாக செய்து விட்டு உனது நாட்டத்தைக் கொண்டு செய்து விட்டதாகக் கூறுகிறாய். ஆனால் உனக்கு ஒரு சக்தியுமில்லை என்பதனை நீ உணர்வதில்லை. அஃயான்களை குறித்த காலத்திலும், இடத்திலும் வெளிப்படுத்தி வைக்க ஏவப்பட்ட ஆக்ஞைதான் களாவாகும். அஃயான்கள் தங்கள் வழிப்படியும், தகுதி அல்லது அளவிற்குத் தக்கவாறும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இதற்கு மாற்றமாக நடைபெறாது. உதாரணமாக, காதானது கண்ணினுடைய தொழிலை செய்யாது. அடுத்து அல்லாஹ் உங்களையும், நீங்கள் செய்வதையும் படைத்தான்’-அல் குர்ஆன்.

இதில் கல்கு அல்லாஹ்வின் பக்கமும், செயல்கள் அடியார்களின் பக்கமும் சொல்லப்படுவதற்கு காரணம் என்ன? செயலின் தொடர்பு உறுப்புகளுடன் சம்பந்தப்பட்டதா? இருதயத்துடன் சம்பந்தப்பட்டதா? உதாரணமாக, ஜெய்துஎன்பவன் அம்றுஎன்பவனை அடித்தான் என்றால், ஜெய்துடைய கையின் அசைவும், அடியும் அம்று என்பவனின் கன்னத்தில் ஏற்படுத்திய குணபாடும் ஜெய்துடைய செயல்களினால் வந்ததாகும். இந்த செயல்களெல்லாம் ஜெய்துடையதாகியதால் அல்லாஹ்வின் செயல்களை விட்டும் வேறானதாகி விட்டது.

ஆனால், செயல் இருதயத்துடன் தொடர்பு பட்டிருப்பின் அதற்கு மனதின் அசைவு, எண்ணம், நாட்டம் என்று சொல்லப்படும். அப்போது, அல்லாஹ் நாடியேயல்லாமல் நீங்கள் நாடுவதில்லைஎன்ற திருவாக்கியத்திற்கு என்ன சொல்லப்படும்? சாலிகுஎன்பவன் சுகைபுஎன்பவனை கொல்ல நாடுகிறான். இவன் நாட்டத்தை தெரிந்து கொண்ட அய்யூப்என்பவன் சுகைபைகொன்று விட்டால் தண்டனைக்குரியவர் சாலிஹா? அய்யூபா? நாடியதால், சாலிகு என்பவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் அது அநியாயமில்லையா? கண்டிப்பாக அநியாயமாகும்.

தீர்ப்பு வழங்கவும், குணபாடு செய்யவும் நாட்டமும், செயலும் அவசியமாகும். எப்போது நாட்டத்துடன் செயலும் உண்டாகிவிடுமோ அந்த செயலுக்கு தீர்ப்பும், குணபாடும் – நன்மையாக இருப்பின் சன்மானமும், தீயதாகயிருப்பின் தண்டனையும் உண்டாகி விடும்.

ஜெய்துஎன்பவர் அம்றுஎன்பவனைப் பற்றி அவன் பக்றுஎன்பவனின் வீட்டுக்குப் போனால் கொல்லப்பட்டு போவான் என்று அறிந்தும், அவன் அங்கு போகாமல் தடுக்க சக்தி பெற்றிருந்தும் தடுக்காமல் ஆயுதங்கள் கொடுத்து பக்றுஎன்பவனுடைய வீட்டுக்குப் போகவும் செய்து பக்றை காரணமின்றி அம்று வெட்டிப் போட்டானெனில், இந்த செயலுக்கு ஜெய்தும், அம்றும்கூட்டாளிகள் இல்லையா? நிச்சயமாக இருவரும் கூட்டாளிகள்தான்.

ஆக வெட்டியவனுடைய வெட்டுகிற செயலைப் பற்றி வெட்டியவனைப் படைக்க முன்னாடியே அல்லாஹ் நன்கு அறிந்திருந்தான். இன்னும் வெட்டியவனைப் படைத்ததோடு, அவனுக்கு அதற்குரிய சக்தியையும் கொடுத்தான். இன்னும் வெட்டு பட்டவனை வெட்டுண்டு போவதற்கும், செத்துப் போவதற்கு இலக்காக ஆக்குவதற்கு அவனே இழுத்துக் கொண்டு விட்டான். காரணமில்லாமல் வெட்டுப்பட்டவனை சாகவும் வைத்தான். மேலும், நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயக்காரனில்லை என்று முழங்கவும் செய்தான். இது தான் களாகதிரின் தீர்ப்பாகும்.

நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் பூர்வீக தீர்ப்பில் நின்றும் உள்ளதாகும். உரிய இடங்களில் வெளியாகும் விஷயங்கள் நன்மைகள் என்றும், அதற்குரிய இடமில்லாததில் வெளியாகும் விஷயங்கள் தீமைகள் என்றும் அல்லாஹ் தீர்ப்பளித்தான்.

உதாரணம், பழிவாங்குமிடத்தில் உண்டான கொலையானது சந்தேகமின்றி ஆகுமாக்கப்பட்டதாகும்(நன்மையாகும்).

உரிய இடமில்லாமல் உண்டாகும் கொலையானது சந்தேகமின்றி ஹராமாகும்.(தீமையாகும்)

இதனால்தான் ஸூஃபியாக்கள் சொன்னார்கள், நிச்சயமாக உண்டென்பது நன்மை விளையும் இடமாகும். இல்லாமை என்பது கெட்டது விளையும் இடமாகும்.

இல்லாமையைதீமை விளையுமிடமாக ஆக்கினது, இல்லாமையிலிருந்து தீமை உண்டாகிறது என்ற கருத்திற்கல்ல. ஏனெனில் இல்லாமையிலிருந்து ஒரு விசயம் உண்டாகாது. ஆகவே கெட்டது என்பது நன்மையைப் போலவே தெய்வீக வெளிப்பாட்டின் குணபாடு ஆகும். என்றாலும் ஸூஃபிகள், கெட்டதை விளக்க சட்டதிட்டங்களை (அதற்குரிய இடம் இல்லாத பக்கம்- இன்மையின் பக்கம்) சேர்ப்பதைக் கொண்டு ஆக்கினார்கள்.

உரிய இடம் (நன்மை விளையுமிடம்), உரிய இடமின்மை (தீமை விளையுமிடம்) ஆகிய இடங்களை விட்டும் பார்வையை உயர்த்துவாயானால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. இவை அனைத்தம் பூர்வீக தாத்தின் தேட்டத்திலுள்ளதுதான்.

அல்லாஹ்வுடைய தாத்து ஆதியிலிருந்து அவனுடைய சுற்றுகளில் சிலதை நல்லதாகவும், சிலதை கெட்டதாகவும் தேடியது. ஆகவே  சிலதை நன்மை என்பது கொண்டும், சிலதை தீமை என்பது கொண்டும் அல்லாஹ் தீர்ப்பளித்தான். ஆகவே எல்லாம் அவனின்றும் உள்ள வெளிப்பாடுதான்.

உதாரணம்:-

அல்லாஹ்வின் நாட்டப்படி எல்லாம் நடப்பதால் அவனுடைய ஏவலுக்கு மாற்றமான நடவடிக்கைகள் சாத்தியமாவது எப்படி? என்று வினவும்போது, உன் உடலை நடத்துவது உன் உயிர் என்பதையும், அந்த உயிர்தான் நீஎன்பதையும், உன் நாட்டத்திற்கு உன் உடல் வழிபட வேண்டும் என்பதையும் நீ அறிவாய். உன் கண்ணுக்கு வேதனை உண்டானதாக வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு துளி மருந்தை உன் கண்ணில் ஊற்ற நாடி, அதைத் திறக்கச் செய்யும் போது, அது திறக்காமல் மூடிக் கொள்கிறது. நீ அதை திறக்க முயல்கிறாய். வேறொரு தத்துவம் அதை திறக்க விடாமல் செய்து விடுகிறது. கண்ணை திறக்க செய்யும் தத்துவமும், திறக்க விடாமல் செய்யும் தத்துவமும் அந்த உயிருக்கு உரியவைதான். எனினும், நன்மையை நாடும் தெய்வீகக் குணமும், பயத்தை உண்டாக்கி கண்ணை மூடச் செய்யும் மனித மனத்தின் குணமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போல் தோன்றினாலும் இரண்டும் உயிரின் தத்துவத்தைக் கொண்டே நடாத்தாட்டப் படுகின்றன. இதே போலவே இறைவனின் நாட்டத்தைக் கொண்டே நன்மை, தீமை யாவும் நடக்கின்றன என்பதை அறிந்துகொள். சிருஷ்டி, சிருஷ்டித்தவன் எனும் பாகுபாடு இருக்கும் வரை நன்மை, தீமை என்ற பாகுபாடு இருக்கவே செய்யும். அந்தப் பிரிவற்று சிருஷ்டியும், சிருஷ்டிப்பவனும் ஒன்றான படித்தரத்தில் நன்மையென்றும், தீமையென்றும், மேலானதென்றும், கீழானதென்றும் இருக்காது.

 

தாத்தும்,உஜூதும் வேறானவை எனில் ஏற்படும் தீமைகளும், ஆட்சேபணைகளும்:-

தாத்துஅதிகம் என்பது கொண்டு அவர்களின்(போலி ஷெய்குமார்களின்) கருத்து, அல்லாஹ்வின் வெளி உஜூதிலிருந்து கற்பனையில் ஊகிக்கப்பட்ட விளக்கங்கள்என்றிருப்பின் அதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.

அவர்களின் நாட்டம் தாத்து என்பது கொண்டு வெளியில் உண்டான தாத்துதான் (உஜூது ஒன்றாயிருப்பதுடன்) என்றிருந்தால் ஏற்படும் தீமைகளையும், ஆட்சேபணைகளையும் பார்ப்போம்.

உஜூதாகிறது அவர்கள் ஊகத்தின் படி தாத்தை விட அதிகமானதாக ஆகியிருக்குமானால், தாத்தாகிறது தன் தாத்துடைய மர்தபாவில் அது தனித்து இல்லாததாகவும், உஜூதின் பக்கம் தேவைப் பட்டதாகவும் ஆக வேண்டி வரும். தேவைப்பட்டப் பொருள் இலாஹாக இருப்பதற்கு தகுதியற்றது ஆகும். மேலும் தாத்து உஜூதைத் தேடுது எனும் கூற்று அர்த்தமற்றதாகும். ஏனெனில் தேட்டம் என்பது உஜூதியான விசயமாகும். உஜூதியான விஷயம் அதமியான விஷயத்திலிருந்து எவ்வாறு உருவாகும்? அதமியான விஷயமாகிறது அதனுடைய மர்தபாவில் இல்லாமலான தாத்தாகும்.

அவர்கள் தாத்தை அதிகம் என்று கூறுவது மேலான அஹ்காம், ஆதாறுகளை மேலான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்க இயலாது என்ற காரணத்தினாலாகும். அவர்கள் தாத்துல் மும்கினை தீமை விளையுமிடமாகவும், தாத்துல் வாஜியை நன்மை விளையும் இடமாகவும் ஆக்கி குர்ஆன், ஹதீதுக்கு மாற்றமாகவும் ஆகி விட்டார்கள். அதில் எழும் ஆட்சேபனைணகளைப் பார்ப்போம்.

1.தாத்துல் மும்கின்என்பது அவர்களிடத்தில் ஆக்கப்படாததும், தன் தாத்தைக் கொண்டு தானே நிலை நிற்கின்றதும் வெளியாக்குகிறவன், உண்டாக்குகிறவன், படைக்கிறவனின் பேரில் தேவையில்லாத்;ததுமாக இருக்குமானால், தாத்துகள் பூர்வீகமானதாகி விடும். ஆகவே பூர்வீகமானது எண்ணிக்கையாவது இங்கு ஏற்படுகிறது. இது  தவ்ஹீதிற்கு மாற்றமானது ஆகும்.

 

2.இன்னும் அவர்களிடத்தில் மும்கினாத்துகளின் தாத்துக்கள் ஆக்கப்பட்டதாக இருக்குமானால், உண்டாக்குகிறவனின் உண்டாக்குதல் எனும் குணபாடு நிகழுவது மவ்ஜூதான விசயத்திலா? அல்லது மஃதூமான  விசயத்திலா? அந்த உண்டாக்குதல் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறான உஜூதியான விசயத்தில் நிகழுமானால், பூர்வீகம் எண்ணிக்கையாவது இங்கும் ஏற்படும். இனி அந்த உண்டாக்குதல் குணம் இல்லாத விசயத்தில் நிகழுமென்றால், இல்லாத விசயம் குணபாட்டை ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் இல்லாதது| உளதாக ஆகாது.

3. மும்கினாத்துகளுடைய தாத்தாகிறது தப்ஸீலியாவான (விரிவான) இல்முடைய மர்தபாவில் தரிபட்டது என்று சொல்வீர்களானால், அல்லாஹ்வுடைய இல்மு தாத்தின் ஐனாகும். இல்மியான கோலங்கள் என்பது அல்லாஹ்வின் அஸ்மாக்களாகும்.  அதாவது இல்முடைய மர்தபாவில் தாத்தியான ஷூஊனாத்துகளைக் (உடைகளைக்) கொண்டு               உடையணிவது கொண்டு வெளியான அஸ்மாக்களாகும். العلم  الذات  الشأن الصور  الحال என்பதெல்லாம் வாஜிபான ஹக்கான உஜூதுடைய நாமங்களாகும்.

இல்மியான கோலங்கள் தாத்துக்கு வேறானதும், புதிதானதும் என்று சொன்னால், தாத்துல் வாஜிபு புதியவைகளுக்கு இடமாகி விடும். ஏனெனில் ஷஇல்ம்| தாத்தின் ஐனாகும். அல்லாஹ்வின் இல்மில் தரிபட்ட கோலங்கள் ஆதியிலிருந்து அந்தம் வரை இல்முடைய மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது வெளியில் வெளியாவதில்லை. அந்த கோலங்களே மும்கினாத்துகளுடைய தாத்துகள் என்று சொல்வீர்களானால், அல்லாஹ்வுடைய இல்மில் குறைவு ஏற்படுவதும், இல்முடைய மர்பதாவில் அறியாமை ஏற்படுவதும் ஏற்பட்டு விடும். இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

வெளியில் உஜூதுடைய வாடையைக் கூட நுகராத மும்கினாத்துடைய (படைப்பினங்களுடைய) தாத்துக்களின் பக்கம் தீமைகளை சேர்ப்பதால் அது தீமையை விட்டும் ஒழியாது.

 

செயல்கள் நல்லதோ, கெட்டதோ அது உஜூதியான விஷயமாகும். உஜூதியான விஷயம் அதமியான விஷயத்திலிருந்து உண்டாகாது. உஜூதியான விஷயத்தை அதமியான விஷயத்தில் சேர்ப்பது இரு இலாஹை தரிபடுத்துவது ஆகும். மஜூஸிகளின் இமாமான ஸறது சத்து ஒரு இலாஹ் நன்மையைப் படைக்கிறான், ஒரு இலாஹ் தீமையைப் படைக்கிறான்என்று சொன்னது போல் இருக்கிறது.

அல்லாஹ் நன்மையையும், தீமையையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். அதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானின் ஷர்த்தாகவும் ஆக்கினார்கள். நீ நன்மையை அல்லாஹ்வின் பக்கமும், தீமையை மும்கினாத்துடைய தாத்துகளின் பக்கமும் சேர்ப்பது கொண்டு அல்லாஹ், ரஸூலுக்கு மாறு செய்தவனாகி விட்டாய். குர்ஆனில் சிலதைக் கொண்டு ஈமான் கொண்டும், சிலதை ஈமான் கொள்ளாதவர்களாகவும் உள்ள கூட்டத்தில் சேர்ந்து விடாதே!

உஜூது ஒன்று என்றும், மவ்ஜூது ஒன்று அல்ல என்றும,; வெளியில் உண்டாக்கப்பட்டபொருள் அல்லாஹ்வை அன்றி வேறில்லை என்றும், வெளியில் உண்டான அணுக்களின் உஜூதாகிறது அது வாஜிபான ஹக்குடைய உஜூதாகும் என்றும் சொல்கிறாய். இல்மியான மர்தபாவில் தரிபட்ட மும்கினாத்துகளின் தாத்துகள் வெளியில் வரவில்லை. அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை என்றும் சொல்கிறாய். உன்னுடைய இக்கொள்கை மூலம், செயல்கள் நல்லதாகட்டும், கெட்டதாகட்டும் ஹக்கான வாஜிபான உஜூதிலிருந்தே உண்டாகிறது என்பது தெரிய வருகிறது.

மும்கினுடைய தாத்துகளாகிறது உஜூதிய்யான விசயம் உண்டாவதை ஏற்றுக் கொள்ளததாகும். ஆகவே நன்மையும், தீமையும் இவை இரண்டும் உங்கள் கொள்கையின் படி ஹக்கான வாஜிபின் உஜூது பக்கம் சேர்ந்ததாகும்.

4.வெளியில் மவ்ஜூதான மும்கினில் மூன்று விசயம் ஒன்று சேர்கிறது.

1.தாத்துல் மும்கின் 2.தாத்துல் வாஜிபு 3.உஜூது ஆகும்.

 

  மும்கினின் தாத்தாகிறது சந்தேகமில்லாமல் சுயமே இல்லாதது ஆகும். வெளியில் உண்டான மும்கினுடைய தாத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அந்த வெளியில் உண்டான தாத்துல் மும்கினானது உஜூது வந்து சேர்ந்ததன் பிறகு அது உண்டானதா? அல்லது, அது இல்லாமலிருப்பதுடன் உஜூதுடன் சேர்ந்ததா? அல்லது, மும்கினுடைய தாத்து அதனுடைய இல்லாமை எனும் அசலின் பேரில் நிற்க உஜூது அதனுடைய கோலத்தின் பேரில் வெளியானதா?

முதலாவதுதான் எனில், ஹகீகத்து புரள்வது அசம்பாவிதமாகும்.

இரண்டாவதுதான் எனில், இரண்டு எதிரிடைகள் சேர்வது நிர்பந்தமாகும். மூன்றாவது எனில், அவன் வாஜிபுடைய தாத்து ஒன்று என்றும், வெளியில் வெளியானது அதனுடைய உஜூதுதான் என்றும் தீர்ப்பளிக்கிறான். இதுவே எமது நாட்டமும் ஆகும்.

நிச்சயமாக உஜூது என்பது வாஜிபுடைய தாத்துக்கு ஆதேயமாகும். தாத்துல் வாஜிபு அந்த உஜூதுக்கு ஆதாரமாகும். ஆதேயப் பொருள் ஆதாரப் பொருள்களுடனேயன்றி நிற்பதில்லை. ஆதாரப் பொருளின் நிலையாகிறது ஆதேயப் பொருளின் நிலையாகும். எப்போது எங்கு தரிபட்டாலும் ஆதேயத்தின் தரிபடுதல் ஆதாரத்தின் தரிபடுதல் ஆகும். ஏனெனில் அந்த ஆதேயம் நிலைப்பதற்கு ஆதாரத்தின் பேரில் தேவைப் பட்டதற்காக இருக்கும். இதிலிருந்து வெளியில் உண்டான மும்கினுடைய தாத்தின் உஜூது அசம்பாவிதம் என்பது நிர்பந்தமாகிறது. காரணம் இரு ஆதாரப் பொருளுக்கு ஒரு ஆதேயம் இருப்பது அசம்பாவிதம் ஆகும் என்பதாலும், முதல் ஆதாரப் பொருளை விட்டும் அந்த ஆதேயம் பிரிவது அசம்பாவிதம் ஆனதற்காகவும் ஆகும்.

நிச்சயமாக உஜூதாகிறது வாஜிபுடைய தாத்துடன் சேர்ந்து கொண்டு மும்கினுடைய தாத்துக்கு ஆதேயமாகும் என்று சொன்னால், ஒரு ஆதாரம் இன்னொரு ஆதாரத்திற்கு ஆதேயமாக இருப்பதும் அது அதில் விடுதி விடுவதும் அசம்பாவிதமாவதால் அது விலக்கப்பட்டதாகும்.

உஜூது என்பது தாத்திய்யான தேட்டத்தைக் கொண்டு தாத்துல் வாஜிபின் பேரில் இடையில் வந்த விசயமாகும். தாத்தியான விசயம் தாத்தை விட்டும் பிரியாது. மேற் கூறப்பட்ட சேர்க்கை ஒன்று சேர்வது நிர்ப்பந்தமாகும்.

5.ஒரு இல்லாத வஸ்து அதனைப் போன்று இல்லாத வஸ்துவை உண்டாக்குவதன் பேரில் சக்தி பெறுவது அசம்பாவிதமாகும். நிர்பந்தமாகும். வெளியில் உண்டான மும்கினுடைய உஜூதிலிருந்து உண்டான செயல்களாகிறது தனித்த மும்கினுடைய தாத்திலிருந்து உண்டாகுவது சுயமே இல்லாத ஒன்றிலிருந்து ஒரு விசயம் உண்டாவது நிர்ப்பந்தமாகும். இது அசம்பாவிதமாகும்.

இனி மும்கினுடைய தாத்திலிருந்தும், வாஜிபுடைய தாத்திலிருந்தும் கூட்டாக செயல்கள் உண்டாகுமானால் உஜூதானது தீமைகளை உண்டாக்குவதில் கூட்டாகி விட்டது. இது உங்கள் நம்பிக்கைக்குப் பிழையாகும்.

தனித்த மும்கினுடைய தாத்தின் பேரில் தீமைகளை சேர்க்கும் விசயத்தில் உஜூது சேர்வது உங்களுடைய நம்பிக்கைக்கு மாற்றமாகும். கூட்டு சேர்தல் என்பது இங்கு உஜூதுக்கு உண்டாக்க இயலாது. ஆதலால் தான் தாத்துல் மும்கினை அது பின்பற்றுகிறது. இந்த இரண்டு உஜூதுக்குமிடையே வேறு பிரித்தலும் இல்லை. காரணம் உங்கள் நம்பிக்கை உஜூது ஒன்று என்பதே! இவ்வாறானால், சுயமே இல்லாத தாத்துல் மும்கினை வாஜிபுல் உஜூது தொடர்வதும், அதனால் இதன் பேரில் தீர்ப்பளிக்கப்படுவதும் ஏற்படும். ஆகவே இயலாது என்ற விசயம் சக்தியுடைய இலாஹுக்கு தகுதியானதில்லை.

ஆகவே வாஜிபுல் உஜூதிலிருந்து தீமையான செயல்கள் உண்டாகுமேயானால் அப்போது உஜூது தீமைகள் உண்டாவதற்கு இடமாகி விடும். இது உங்களின் பேரில், நன்மைகள் விளையும் இடத்தில் தீமையைச் சேர்ப்பது என்ற ஆபத்து ஏற்பட்டு விடும். ஆகவே இரு தாத்தை தரிபடுத்துவதில் பலன் இல்லை.

6.வெளியில் உண்டான ஜைதுஎன்பவர் உங்களிடத்தில் அல்லாஹ்வுக்கு வேறானவன் அல்ல. ஏனெனில் நீங்கள் உஜூது ஒன்று என்பதன் பேரில் ஈமான் கொண்டுள்ளீர்கள். இப்போது ஜைதிலிருந்து உண்டாகக் கூடிய எல்லாத் தீமைகளும் அல்லாஹ்விலிருந்தே உண்டாகிறது. அந்த உஜுது ஜைதின் கோலத்தில் வேலை செய்கிறான். ஜைதுஉடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை. ஆகவே அறவே இல்லாத ஜைதின் தாத்தின் பக்கம் அவனிலிருந்து (ஜைதிலிருந்து) உண்டாகக் கூடிய தீமைகளை சேர்ப்பதானது உங்கள் ஈமான்படி (ஜைது என்பவர் அல்லாஹ்வாகும்) மடமையாகும்.

ஆகவே உண்மையில் நீங்கள் எதிலிருந்து விரண்டோடினீர்களோ அதன் பேரிலேயே- வாஜிபுல் உஜூதான தாத்தின் பக்கம் தீமையை சேர்ப்பதின் பேரிலேயே மீண்டு விட்டீர்கள் என்பது புலனாகிறது.

ஆக தாத்து, உஜூது என்பன வேறு வேறானவை என்பதில் குறைபாடுகள் இருப்பதினால் இக்கொள்கையைப் பின்பற்றி நடப்பது மடமையிலும் மடமையாகும். ஈடேற்றமும் கிடைக்காது. ஆனால் உண்மையான ஸூஃபிகள் கொள்கை என்னவென்று பார்ப்போமானால்,

தாத்என்பது உஜூதுக்கு ஐனாகும். உஜூது என்பது தாத்துக்கு ஐனாகும். வெளியில் ஒரு தாத்து அல்லது உஜூதைத் தவிர வேறில்லை. ஆகவே ஆலமாகிறது எல்லாக் கௌனுகளைக் கொண்டும் ஹக்கான உஜூதின் சுற்றுகளும், ஷூஊனாத்துகளுமாகும். உஜூதுடைய ஷுஊனாத்துகள் மட்டிலடங்காதது ஆகும். ஒரு ஷஃனுடைய உடையில் அவன் இரு தரம் வெளியாவதில்லை. ஒவ்வொரு அணுவிலும் ஒரு சொந்தமான கோலத்தைக் கொண்டு வெளியாகிறான். இந்த கோலத்தைக் கொண்டு வேறு அணுவில் வெளியாக மாட்டான். அவன் இதனால் அதிகமாகவோ,பேதகமாகவோ, எண்ணிக்கையாகவோ இல்லை. முன்னெப்போதும் உள்ள மாதிரியே இருக்கிறான். அவன் ஒருமையில் பன்மையானவனாகவும், பன்மையில் ஒருமையானவனாகவும் இருக்கிறான். ஒருமை பன்மையினதும், பன்மை ஒருமையினதும் ஐனாகும். எல்லாம் தனித்த நிலையிலும், சேர்ந்த நிலையிலும் அவனது ஐனாகும். ஆகவே தாத்து ஒன்றுதான், ஷுஊனாத்துகள் (உடைகள்) பலதாகும். இதுவே உண்மையான தவ்ஹீதாகும்.

 

மேலும், சங்கையான ஸூஃபியாக்களிடத்தில் ஹக்குத் தஆலாவின் உஜூது முழுவதுமல்ல; துண்டுமல்ல; பொதுவானதுமல்ல; குறிப்பானதுமல்ல; கட்டுப்பாடானது மல்ல; கட்டுப்பாடில்லாததுமல்ல. அவனது பரிசுத்த தாத்திற்காக உள்ளவை தாத்தை விட்டும் நீங்கிப் போகாது. இதனாலேயே அவன் ஒவ்வொரு மர்தபாவிலும், ஒவ்வொரு அணுவிலும் இருந்தும் எந்த வஸ்துடைய சுத்தத்தினாலும் அவன் சுத்தம் பெறுவதுமில்லை, எந்த அசுத்தத்தினாலும் அசுத்தமாவதுமில்லை. மேலும் சகல உலகத்துடைய காட்சிகளும், அவைகளின் கற்பனையான உள்ளமைகளும் அவனுடைய அற்ப சொற்பமானதோர் தோற்றமேயாகும். இவ்வாறிருந்தும் அவன் சகலத்துடனேயும், வேறாகவும் ஒட்டியும், ஒட்டாமலுமிருக்கிறான்.

கண்ணியமிகு ஸூஃபி நாதாக்கள் சொல்கிறார்கள்:-

நாங்கள் அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இட்ட கட்டளைகளெனும் சங்கிலிகளைக் கொண்டு கட்டப்பட்டவர்கள். உங்களையும், நீங்கள் செய்வதையும் அல்லாஹ் படைத்தான்என்ற குர்ஆன் ஆயத்தைக் கொண்டும், நீங்கள் நாடுவதில்லை அல்லாஹ் நாடியேயல்லாது என்ற ஆயத்தின் பேரிலும், உமக்கு வந்து சேரக் கூடிய நன்மைகளாகிறது அல்லாஹ்வில் நின்றுமுள்ளதாகும் என்ற வாக்கியத்தைக் கொண்டும், எவன் ஒரு நன்மை செய்கிறானோ அதுபோன்று அவனுக்கு பத்து உண்டுஎன்பதைக் கொண்டும், ஒரு தீமைக்கு அது போன்ற ஒரு தீமையே கூலிஎன்பதைக் கொண்டும், நல்லடியார்கள் சுவனத்திலும், கெட்டடியார்கள் நரகத்திலுமிருப்பார்கள் என்ற ஆயத்தைக் கொண்டும் ஈமான் கொள்வதோடு, இந்த ஆயத்துகளுக்கிடையே முரண்பாடு ஏற்படாத வண்ணம் அவைகளுக்குரிய ஸ்தானங்களையும், இடங்களையும் நன்கு அறிவோம்.

வேதம் முழுவதையும் ஈமான் கொண்டு ஈமான் கொள்வார்கள் என்ற அல்லாஹ்வின் திருவசனத்தில் சொல்லப்பட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்கள். நன்மை, தீமை அல்லாஹ்வின் களா கத்ரில் நின்றுமுள்ளது என்றும், எங்களுக்கு அல்லாஹ் விதித்ததேயல்லாமல் எங்களைத் தொடாது. அவன் எங்களுடைய நாயன். அல்லாஹ்வின் பேரிலேயே முஃமினானவர்கள் பரஞ்சாட்டுவார்கள்என்ற ஆயத்தைக் கொண்டும் ஈமான் கொள்கிறோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையான, சங்கையான ஸூஃபியாக்கள் பாதையில் செலுத்தி ஈடேற்றம்பெறவைப்பானாக!ஆமின்.

الهي كم تبقيني   اليك لا ترقيني

وعني لا تنقيني    بفيض منك ياالله

யா அல்லாஹ்! நானெனும் வேற்றுமையை விட்டும் உன் அருள்பொழிவதால் நீ என்னை பரிசுத்தப்படுத்தாமலும், உனது சன்னதிக்கு என்னை உயர்த்தாமலும் எவ்வளவு காலத்திற்கு வைப்பாய்!  

الهي لم تزل تبدي   لاسرار ولا تبدي

لسر جامع مبدي   جميع السر ياالله

யா அல்லாஹ்! இரகசியம் அனைத்தையும் வெளியாக்கிக் கொண்டு இருக்கும்படியான சகலவற்றையும் தனக்குள் ஒருங்கே சேகரித்துக் கொண்ட அந்தரங்க பொருளை வெளியாக்காமல் பல இரகசியங்களை உற்பத்தியாக்கி கொண்டே இருக்கிறாய்.

الهي الخلق فى التمثال    بثلج يضرب الامثال

فثلج مالد الامثال    بكل الحال ياالله

யா அல்லாஹ்! சிருஷ்டி பொருளானது உருவத்தில் பனிக்கட்டியைக் கொண்டு உதாரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அவ் வுதாரணத்தை கவனிக்கும் போது பனிக் கட்டியானது எல்லா நிலையிலும் தண்ணீராகத்தான் இருக்கிறது!

الهي الخلق مثل حباب     علا ماء لدى الاحباب

فماء فى الفناء حباب      وحال بقاه ياالله

யா அல்லாஹ்! உனது நேசர்களிடம் சிருஷ்டி பொருளானது நீரில் எழும் குமுளி போல இருக்கிறது. குமுளியானது இருப்பிலும், அழிவிலும் தண்ணீராகவே இருக்கிறது.

فاين انا اذا انتا    بذاتي دائما كنتا

فما بنت ولا بنتا   ولاتا بيننا الله

யா அல்லாஹ்! நீ எனது உள்ளமையின் நேமமாக இருக்க நான் என்பது எங்கே இருக்கிறது? நமக்கிடையில் நானும், நீயும் பிரியாமல் நான், நீ என்ற வேற்றுமையில்லை.

الهي انت ذوالجود  وطه منبع الجود

وغوث اعظم جودي  لفلك دار بحر الله

 யா அல்லாஹ்! நீயே கொடையாளன்.தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடை உருவாகும் ஊற்றாகயிருக்கிறார்கள். கௌதுல் அஃலம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இறை சமுத்திரத்தில் சுற்றித்திரியும் கப்பல் தங்கும் ஜூத்என்ற மலையாக இருக்கிறார்கள்.

الهي انت غفار  ذنوبا انت ستار

عيوبا انت جبار  كسير القلب ياالله

யா அல்லாஹ்!நீ பாவங்களை மன்னித்து, குறைகளை மறைத்து, உள்ளத்தின் ஓடிவைப் பொருத்துபவன்.

الهي صلين ازكى    صلاة سلمن اذكى

سلام باركن بركة    على الفك ياالله

الهى الال والصحب    مع التباع بالصحب

وغوث اعظم قطب    بلطف منك ياالله

யா அல்லாஹ்! உனது நண்பராகிய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளைஞர்கள், தோழர்கள் அவர்களைப் பின்பற்றி நடந்தவர்கள், குத்புல் அக்தாப் கௌஃதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும், உனது சூக்கும கிருபையால் மிக பரிசுத்தமான சலவாத்தும், மிக பிரகாசமான ஸலாமும் சொல்லி அவர்கள் மீது பரக்கத்தை அருள்வாயாக! ஆமின்.யா ரப்பல் ஆலமீன்.

ஆதாரத்திற்கான நூல்களின்பட்டியல்:

ஆதார நூல் பெயர்

மூலஆசிரியர்

மொழிபெயர்ப்பாசிரியர்

1.ஞானப்பிரகாசம் அல்லது நூருல் இர்பான்

ஷெய்கு பூஅலி ஷாஹ் மதார்

ஆலிம் சாஹிப் ரலியல்லாஹு

அன்ஹு அவர்கள்

————–

2.அஸ்ராரே அனல்ஹக்

ஷெய்குமுகம்மது இபுறாஹிம்

உசூரே இலாஹி அவர்கள்

மாமு.மஸ்தான் லெப்பை அவர்கள்

3.மெய்ஞ்ஞானப் பேரமுதம்

சித்திமுகம்மதுலெவ்வை-

ஆர்.பி.எம்.கனி அவர்கள் ;

——————

4.பைஜுல் ஹபீப் 

காஜாஹபீபுல்லாஹ் ஷாஹ்

சிஷ்தியுல் காதிரி அவர்கள்

—————–

5.அஸ்ஸுலூக்கு

ஹைதராபாத் ஸூஃபிஹஜ்ரத் ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள்

காயல்பட்டணம் ஸூஃபிஹஜ்ரத்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

6. அல்ஹக்கு

ஹைதராபாத் ஸூஃபிஹஜ்ரத்

ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்

காயல்பட்டணம் ஸூஃபிஹஜ்ரத்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

7.அல்ஹகீகா

ஹைதராபாத் ஸூஃபிஹஜ்ரத்

ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள்

பூக்கோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்

8.அத்துஹ்பதுல் முர்ஸலா 

 

 

 

அஷ்ஷெய்கு முகம்மது

இபுனு பளுலுல்லாஹி

அவர்கள்

காயல்பட்டணம் ஸூஃபிஹஜ்ரத்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

9.சிர்ருள் இன்ஸான்

யாசின் மௌலானா மேலப்பாளையம் அவர்கள்

————–