ஷெய்குனா அவர்கள் ஜும்ஆ பள்ளில் குத்பாவிற்கு முன் பயான் பண்ணுவது பற்றி தங்கள் கைப்பட எழுதிய விரிவான அறிக்கை:

Print Friendly, PDF & Email

ஜும்ஆ பள்ளியில் குத்பா பள்ளியில் குத்பா ஓதுவதற்கு முன்னால் ஜவாலுக்கு முந்தியோ பிந்தியோ பிரசங்கம் செய்வது கூடாது என்றும், கூடும் என்றும் வாக்குவாதம் ஏற்பட்டபின் இருசாரார்களும் தங்கள் தங்கள் வாத்திற்கு ஆதாரமாக மார்க்க அடிப்படையில் பத்வாக்கள் சேகரித்து குத்பா பெரிய பள்ளி மானேஜர் குளம் லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்லப்பட்டபடி இருசாரார்களும் பத்வாக்களை சேகரித்து அனுப்பிக் கொடுத்தார்கள். பின்னர் இருதரப்பினருடைய பத்வாக்களையும் பாதிசீலனை செய்வதற்காக இரு தரப்பு உலமாக்கள் பரீசலனை செய்வதை பார்வையிடுவதற்காக வேண்டி பொதுமக்களுக்கும் அழைப்புக் கொடுத்திருந்தார்கள். எல்லோர்களும் குழுமி இருந்த சபையில் எல்லாப் பத்வாக்களையும் வாசித்துக் காட்டப்பட்டது.

பிரசங்கம் செய்வது ஆகுமென்று சொல்கிறவர்களின் பத்வாவில்:-பிரசங்கம் செய்வதனால் தொழுகிறவர்கள் சிலருக்கு இடைஞ்சல் ஏற்பட்ட போதிலும் பிரசங்கத்தை கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருப்பதனால் பிரசங்கம் செய்வது ஆகும் என்றும், அதற்கு ஆதாரமாக இமாம் நவவி அவர்கள் தங்கள் பத்வாவில் 'பள்ளிவாசலில் ஒரு கூட்டத்தார்கள் சப்தமிட்டு குர்ஆனை ஓதுகிறார்கள். அவர்கள் ஓதலைக் கேட்டு பல ஜனங்கள் பயனடைகிறார்கள். (ஓதலைக் கேட்பதனால் அவர்களுக்கு தவாபு கிடைக்கிறது) வேறு சில தொழுகிறவர்களுக்கு இடைஞ்சலாகி வருத்தப்படுகிறார்கள். இந்த நிலைமையில் சப்தமிட்டு ஓதுவதை கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருந்தால் சப்பதமிட்டு குர்ஆன் ஓதுவது ஆகும். மாற்றமாக இருந்தால் ஆகாது. அதாவது தொழுகிறவர்கள் மிகுந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் சப்தமிட்டு ஓதுவது மக்ரூஹு' என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகையினால் பிரசங்கம் செய்வதை கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருப்பதினால் பிரசங்கம் செய்வது ஆகும் என்று சொல்கிறார்கள். குத்பாவுக்கு முன் பிரசங்கம் ஆகும் என்று சொல்கிறார்கள்.

குத்பாவுக்கு முன் பிரசங்கம் செய்வது ஆகாது என்று சொல்கிறவர்களின் பத்வாவில்: குத்பாவுக்கு முன் பிரசங்கம் செய்வது ரசூலுல்லாஹ்வின் காலத்திலும், சஹாபாக்கள் தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் இமாம்களுடைய காலங்களிலும் எங்குமே நடக்காத 'பித்அத்தாகும்.'(நூதனமாகும்) மேலும் ஜும்ஆ நாளில் பள்ளியில் இமாம் குத்பா ஓதுகிறவரையிலும் மக்கள் செய்ய வேண்டிய தொழுகை, குர்ஆன், சலவாத்து ஓதுதல், திக்று பிக்று, தஸ்பீஹ் தஹ்லீல்களாகிய சுன்னத்தான அமல்களை செய்ய விடாமல் இந்த பிரசங்கம் தடுக்கக் கூடியதுமாகும். ஆகவே இந்த பிரசங்கம் பித்அத்துஸ் ஸய்யிஆ –கெட்ட பித்அத்தாகும். நவவி இமாம் அவர்களின் பத்வாவில் வெள்ளிக்கிழமையில் இமாம் குத்பா ஓதும் வரையிலும் தொழுவதும், குர்ஆன் ஓதுவதும் ஸுன்னத்தான அமல்களாகும். இதில் ஒன்றை செய்வதினால் மற்றொன்றை செய்கிறவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுமானால், இடைஞ்சல் ஏற்படுகிறவர்கள் சுருக்கமானவர்களாவும், பயனடைகிறவர்கள் அதிகமானவர்களாகவுமிருந்தால் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவது ஆகும் என்றும் இடைஞ்சல் படுகிறவர்கள் அதிகமானவர்களாகவும் பயனடைகிறவர்கள் குறைவாகவும் இருந்தால் சப்தமிட்டு குர்ஆன் ஓதுவது மக்ரூஹு என்று நவவி இமாம் அவர்கள் சொன்னதை இந்த கெட்ட பித்அத்தான விலக்கப்பட்ட கருமமான பிரசங்கத்திலும் கியாஸ் செய்து பிரசங்கத்தையும் கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருப்பதால் ஆகுமென்று சொன்னது சரியில்லை. தவறான கியாஸாகும். இந்த வேலையே ஆகாத விலக்கப்பட்டதாக இருக்கிறதே என்றும் சொல்கிறார்கள்.

இரு தரப்பார்களுடைய பத்வாக்களையும் வாசித்துக் காட்டப்பட்டதும் பொதுமக்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். மத்தியமாக இருந்த குத்பா பள்ளி மானேஜர் குளம் லெப்பை தம்பி ஆலம் அவர்கள் மார்க்க அடிப்படையிலான இந்த பத்வாக்களை பரிசீலனை செய்து பார்த்ததில் இந்த பிரசங்கம் விலக்கப்பட்ட கெட்ட பித்அத்தாகும். இனிமேல் இதை செய்ய மாட்டோம் என்று சொல்ல வேண்டும். நீதிக்கு மாற்றமாக பொது ஜனங்கள் மிகுந்தவர்கள் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று விரும்புவதினால் பிரசங்கம் செய்ய போகிறோம் என்று தீர்ப்பு சொல்லி விட்டார். சபை குழப்பத்தோடு கலைந்தது. பின்னர் முகிய்யத்தீன் பள்ளி ஜமாஅத்தார், சிறுநெய்னார் பள்ளி ஜமாஅத்தார், காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா ஜமாஅத்தார்களும் பல பேர்கள் கையொப்பத்தோடு லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களுடைய இந்த தீர்ப்பைப் பற்றி பல கண்டன மனுக்கள் கொடுத்தார்கள். அவைகளையும் பொருட்படுத்தாமல் தாங்கள் சொன்ன தீர்ப்புப் படி பொதுஜனங்களுடைய அபிப்பிராயப்படி பிரசங்கம் செய்யத்தான் செய்வோமென்று அறிவித்து விட்டு பிரசங்கத்தை நடத்தியே வருகிறார்கள். அல்லாஹ் போதுமானவன்.