திருமறையின் தெளிவுரை

திருமறையின் தெளிவுரை

By Sufi Manzil 0 Comment December 4, 2011

Print Friendly, PDF & Email

தொகுப்பாசிரியர்: மௌலானா மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ் ஆ. அப்துர் ரஜ்ஜாக் காதிரி ஸூபி

திருமறை (குர்ஆனின்) தெளிவுரை

பொதுஜன முஸ்லிம்களின் அன்றைய நிலை:

அன்றைய முஸ்லிம்கள் குர்ஆன் ஷரீபை நன்மைக்காக ஓதிக் கொண்டு இருந்தனர். சுத்தம் தொழுகை, நோன்பு போன்ற அன்றாட மார்க்க நடைமுறை சட்டங்களை அறிவதில் ஆர்வம் காட்டி வந்தனர். சாதாரண முஸ்லிம்கள் திருமறைக்கு பொருள் கூற பயந்தனர். ஏனெனில் திருமறை என்பது கரையில்லா கடல். அதில் அதற்கு தகுதி வாய்ந்தவரே முக்குளித்து முத்தெடுக்க முடியும். அதன் ஆழம் தெரியாமல் மூழ்க எத்தனித்து உயிருக்கும் மேலான ஈமானை கைக்கழுவுவதற்குச் சமம் என்பதை நன்கு விளங்கி வைத்திருந்தனர்.

கல்வி கேள்விகளில் ஞானமின்றி அல்குர்ஆனுக்கு பொருள் கூற முனைவது தமது ஈமானையே அழிக்க எத்தனிப்பதாகும் என்பதையும் அறிந்திருந்தனர். அது மட்டுமல்ல அல்குர்ஆனுக்கு பொருள் விளக்கம் ஏன் அளிக்கவில்லை என்று நம்மிடம் கப்ரிலும் சரி, மஹ்ஷரிலும் சரி கேட்கப்படாது. நம்மிடம் கேட்கப்படுவதெல்லாம் வணக்கவியல், வாழ்வியல் சம்பந்தமான கேள்வி கணக்குத்தான் என்பதையும் அனைவரும் அறிந்திருந்தனர். எனவே நாம் அதிலே சரியாக இருந்து கொள்ள வேண்டும் என எண்ணி வந்தனர்.

குர்ஆன் விரிவுரையாளர்களின் தகுதியும், குணநலன்களும்:

அல்குர்ஆனுக்கு அர்த்தம் கூற வருபவர்கள் சர்ஃப், நஹு என்னும் இலக்கணத்திலும், மஆனி, பயான், பதீ போன்ற இலக்கியத்திலும், அதப் என்னும் அரபு மொழிப்  போங்கையும், லுகத் என்னும் அகராதியிலும், மன்திக், ஃபல்ஸஃபா போன்ற விவாத பேச்சுக் கலையிலும் ஹிஸாப் என்ற கணிதவியலிலும், ஜாமென்ட்ரி என்ற வடிவவியலிலும், ஜாகரஃபி என்ற புவியியலிலும், ஃபிகா என்னும் மார்க்கசட்டங்களிலும், தப்ஸீர் என்ற விரிவுரையிலும், கலாம் என்ற சொல்லாற்றலிலும், தஸவ்வுப் என்ற ஸூபியிஸத்திலும், உஸூல் என்னும் அடிப்படை சட்டங்களிலும், ஹதீஸ் என்ற நபிமொழி இயல், வரலாறு போன்ற 21 துறைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

இக்கலைகளில் தேர்ச்சிப் பெற வேண்டி உலமாக்கள் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்தனர். எப்போது இந்த அனைத்து கல்விக் கலைகளிலும் பூரணத் தேர்ச்சிப் பெறுகிறார்களோ அப்போதுதான் அல்குர்ஆனுக்கு தர்ஜமா (மொழிபெயர்ப்பு) செய்ய முன்வந்தார்கள். அதற்கு பின்பும் கூட  முதஷாபிஹத்தான வசனங்களில் கைவைக்கவே மாட்டார்கள். ஏனெனில் அது போன்ற வசனங்களின் விளக்கத்தையும்- அதன் இரகசியங்களையும் அல்லாஹ்வும் அவனது ரஸூலுமே நன்கறிவார்கள்.

மேலும் முஹக்கமாத்தான வசனங்களுக்கு மேற்கூறப்பட்ட அனைத்து கல்வி-கலைகளை கருத்திற் கொண்டும் திருமறை விளக்க உரையாளர்கள், ஹதீஸ் கலை வல்லுனர்கள், மார்க்க சட்ட வல்லுனர்களின் கூற்றுகளையும் கவனித்துதான் திருமறைக்கு அர்த்தம் சொன்னார்கள். இத்தனை தகுதிகள் இருந்தும், முழு முயற்சிசகளுக்குப் பின்பும் குர்ஆன் மற்றும் அதன் ஞான விளக்கங்களுக்கு முன் தன்னை ஒரு சிறு பாலகனாகவே பாவித்துக் கொண்டார்கள்.

இந்நேரிய வழிமுறையால் முஸ்லிம்கள் மார்க்கப்பற்றுடன் வழிகெடாது இருந்தனர். எனவேதான் அன்றைய முஸ்லிம்களுக்கு காதியாணி என்ற துஷ்டக் கூட்டத்தின் பெயர், தேவ்பந்தி என்ற ஷைத்தான்களின் பெயர், கைர் முகல்லிதியத் (இமாம்களை பின்பற்றாதோர்-நஜாத் குரூப்) என்ற பேராபத்தின் பெயர்கள் தெரியாமலிருந்தது.

உலமாக்களும் பொதுமக்களும்:

உலமாக்களின் உபதேங்களெல்லாம் அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும் என்றும்,அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது பேரன்பும், கண்ணியமும் கொள்ள வேண்டும் என்பன போன்ற விசயங்களிலும், கொடுக்கல், வாங்கல், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் மார்க்கம் கூறும் வாழ்வியல் சட்டதிட்டங்களை எடுத்துரைப்பதாகவே இருந்தன. இன்று பள்ளி மாணவர்கள் பாடங்களை மனனம் செய்வதைப் போல் அன்று முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் வாழ்வியல் நடைமுறைகளை திரும்பத் திரும்ப கேட்டு நினைவில் வைத்து செயல்பட்டு வந்தனர்.

அதாவது இன்று ஹஜ்ரத் அவர்கள் பயானில் இன்ன இன்ன மஸ்அலாக்களை (சட்டங்கள்) கூறினார்கள் என்று ஒருவருக்கொருவர் கூறியும் நினைவுபடுத்தியும் செயலாற்றி வந்தனர். இதை இப்போது சொல்வதின் நோக்கம்…. அந்தளவு அன்றைய காலம் சிறப்பான ஒளிமயமானதாக இருந்தது. மக்களும் நல்வழிப் பெற்ற மக்களாய் திகழ்ந்தனர்.

வழிகேடர்கள் கூறும் குர்ஆன் விளக்கம்:

இக்காலம் மிக கடுமையான பேராபத்தில் இருக்கிறது. ஆங்காங்கே தேவ்பந்திகளின், மிர்ஜா குலாம் காதியானிகளின், வஹ்ஹாபிகளின், ஜமாஅத்தே இஸ்லாமிகளின் குழப்பங்கள் புயலாய் வீசிக் கொண்டிருக்கிறது. அனுதினமும் புதிய புதிய வழிகெட்ட கூட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் வழிகெட்ட பிரிவினரும் திருமறையை அக்குளில் தூக்கி வைத்துக் கொண்டு நினைத்தபடி விளக்கம் கூற கிளம்பிவிட்டார்கள். எங்கும் நோக்கினாலும் ஒவ்வொருவரும் குர்ஆன் வசனத்தை மேற்கோள்காட்டி, தான் மட்டுமே சன்மார்க்கத்தார் என பகிரங்கப்படுத்திக் கொள்கிறார்கள். கடைந்தெடுத்த முட்டாள்கள் கூட தன்னை  பெரிய மேதையாகக் கருதிக் கொண்டு இஸ்லாமிய முன்னோர்களை, இறைநேசச் செல்வர்களை- ஏன் சஹாபாக்களையும் நம் உயிருக்கும் மேலான நபி பெருமானாரையும் கூட குறை காண எத்தனித்துவிட்டனர். மேலும் தமது நோக்கத்திற்கேற்ப குர்ஆன் வசனங்களுக்கு விளக்கங்கூறி பாமர – அப்பாவி முஸ்லிம்களை வழிகெடுக்க விழைந்து விட்டார்கள். குர்ஆனுக்கு பொருள் கூறுகிறோம் என்று கூறி இஸ்லாத்தை அழிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய குழப்பங்கள்:

பொதுமக்களை குர்ஆனுக்கு பொருள் கூறுவதிலும் கற்பிப்பதிலும் ஆசையூட்டி, 'குர்ஆன் பொதுமக்களுக்காகத் தான், பொது மக்களின் நேர்வழிக்காகத்தான்' என்றும் 'அதை விளங்குவது மிக எளிதுதான்'; என்று கூறி குழப்ப ஆரம்பித்தனர். இன்னும் 'அனைவரும் தன் அறிவால் அதை விளங்கி பொருள் கூறலாம், சட்டதிட்டங்களைவ வகுக்கலாம். அதற்கு எந்த இல்மும் தேவையில்லை' என்றெல்லாம் கூறலாயினர். மக்களிடம் இந்த எண்ணம் வளர வளர மக்கள் குர்ஆனை மற்ற சாதாரண நூலைப் போன்றும், குர்ஆனைப் பெற்று தந்த மாநபியை மற்ற சாதாரண மனிதரைப் போன்றும் பாவிக்களாயினர். இஷ்டப்படி குர்ஆனுக்கு பொருள் கூற ஆரம்பித்து விட்டார்கள். நபிகளாருக்கு கமாலாத் என்னும் பூரணத்துவ சிறப்புபகள் இருப்பதை மறுத்ததோடு தாமும் நபிக்கு நிகர்தான் என்று உளற ஆரம்பித்துவிட்டனர்.

குர்ஆனுக்கு மொழியாக்கம் செய்யும் முன்பு சில சட்டங்களை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.

குர்ஆனின் வசனங்கள் மூன்று விதம்:
1.    முதஷாபிஹாத் 2. முகத்த ஆத் 3. முஹக்கமாத்

1.    முதஷாபிஹாத்:

இதன் நோக்கத்தையோ, நேரடியான விளக்கத்தையோ நம் அறிவால் விளங்க முடியாது. ஆனால் அர்த்தம் தெரியவரும். அல்லாஹ் திருமறையில்
கூறுகிறான்….

நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு (2:115)

அவர்களின் கரங்களுக்கு மேல் அல்லாஹ்வின் கை இருக்கிறது.(48:10)

அல்லாஹ் அர்ஷின் மீது சமமானான் (7:54) (10:3)

இம்மூன்று வசனங்களில் அல்லாஹ்வின் முகம், கரம் என்றும் அல்லாஹ் அர்ஷின் மீது சமமானான் என்றும் வந்துள்ளது. ஆனால் அல்லாஹ்வின் மேன்மைக்கு உடல் உறுப்புகளை உருவகப்படுத்தி அப்படியே நேரடியான அர்த்தம் கொள்வது சரியானது அல்ல. இவ்வசனங்கள் முதஷாபிஹாத் வகையைச் சேர்ந்தவையாகும். இந்த ஆயத்துகளை இருப்பதின்படியே ஈமான் கொள்ள வேண்டும். விளக்கமளித்தல் சரியானது அல்ல.

1.    முகத்தஆத்:

இந்த ஆயத்துகள் முதஷாபிஹாத் வகையைச் சேர்ந்தது தான் என்றாலும் இதன் அர்த்தத்தையோ, விளக்கத்தையோ அறிய முடியாது. எடுத்துக்காட்டாக…. அலிப் லாம் மீம், யாஸீன் போன்றவையாகும். இதன் விளக்கத்தை அல்லாஹ்வே நன்கறிவான்.

2.    முஹக்கமாத்:

முஹக்கமாத் ஆயத்துகள் என்பவை மேற்கூறப்பட்டது போல் இல்லாமல் இதன் அர்த்தத்தையும் விளக்கத்தையும் தெளிவாக அறியலாம். அல்லாஹ் தன் திருமறையில் இதைப் பற்றி குறிப்பிடும்போது…

(நபியே!) உம்மீது இவ்வேதத்தை அருளியவன் அவனே. இதில் முஹக்கமாத் (விளக்கமான) வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல ஆதாரங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) உள்ளன. எனினும், எவர்களுடைய உள்ளங்களில்; வழிகேடு இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறியமாட்டார்கள். (அலகுர்ஆன் 3:7)

முஹக்கமாத்தின் வகைகள்:

இந்த முஹக்கமாத் ஆயத்துகளில் உள்ள ஒரு வகையானது நுசூசே கத்இய்யா எனப்படும். இவ்வகை வசனங்களின் அர்த்தத்தையும், விளக்கத்தையும் அறிவதில் சிரமம் இருக்காது. உதாரணமாக…

குல்ஹுவல்லாஹு அஹது- (நபியே) அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறுங்கள்.

முஹக்கமாத்தின் இன்னொரு வகையை நுசூசே கத்இய்யாவைப் போல் மிகத் தெளிவாக விளங்க முடியாவிட்டாலும் கொஞ்சம் சிந்தித்து, முயற்சித்து விளங்கிக் கொள்ளலாம்.

அதை விளங்க தப்ஸீர் என்னும் விளக்கவுரை அவசியம். தஃப்ஸீரை அறியாமல் தர்ஜமா செய்தால் அது அழிவுக்கு வழிவகுத்து விடும்.

இது போன்ற வசனங்களுக்கு நான்கு வழிகளில் ஒன்றில் விளக்கம் தேட வேண்டும்.

தஃப்ஸீர் குர்ஆன் பில் குர்ஆன்:

குர்ஆனின் மூலமே விளக்கம் காணுதல். ஏனெனில் சில வசனங்களுக்கு வேறு சில வசனங்கள் விளக்கமாக அமையும்.

தஃப்ஸீர் குர்ஆன் பில் ஹதீஸ்:

ஹதீஸ்கள் மூலம் விளக்கம் காணுதல். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளங்கியதைப் போல் வேறு எவராலும் குர்ஆனை விளங்க முடியாது அல்லவா? ஆகவே குர்ஆனில் ஒரு வசனத்தின் விளக்கம் குர்ஆனில் தெரிய வராதபோது நாம் அதை ஹதீஸ்களில் தேட வேண்டும்.

தஃப்ஸீர் குர்ஆன் பில் இஜ்மா:

உலமாக்கள் எல்லோரும் ஒப்புக் கொண்ட விளக்கம்.

தஃப்ஸீர் குர்ஆன் பி அக்வாலே முஜ்தஹிதீன்:

மார்க்க சட்ட வல்லுனர்கள் கூறும் விளக்கம்.

தஃப்ஸீர் குர்ஆன் பில் குர்ஆனின் விளக்கம்:

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்…

அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களை விட வழிகேடர்கள் யார்? (46:5)

முன்பு எவைகளை அழைத்து வந்தனரோ அவைகள் அவர்களை விட்டும் மறைந்து விட்டன. (41:48)

அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்தவை அணுவிலும் அதிகாரம் பெறவில்லை. (35:13)

மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ்வையன்றி பிறவற்றை அழைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அழைப்பவர்களை முஷ்ரிக் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆயத்தில் மின்தூனில்லாஹ் என்பதற்கு பொதுவாக அல்லாஹ்வையன்றி (பிறவற்றை அழைத்தல்) என்று பொருள் கொண்டால்…

எதிரே இருப்பவர்க மறைவிலிருப்பவர், உயிரோடு இருப்பவர், மரணித்தவர் என எவரையுமே அழைக்க கூடாது என்ற தவறான அர்த்தம் வந்து விடும். அப்படி நாம் தவறான அர்த்தத்தை வைத்தால் இது திருமறையின் வேறு சில வசனங்களுக்கு மாற்றமாக வரும். அல்லாஹ் கூறுகிறான்…

அவர்களை அவர்களின் தந்தையுடன் அழையுங்கள். (33:5)

உங்களுக்குப் பின்னாலிருந்து உங்களை அழைக்கிறார்கள். (3:153)

அந்த அறுத்த பிராணிகளை அழையுங்கள் (2:260)

உயிருள்ளவர்களையும் மரணித்தவர்களையும் அழைப்பது சம்பந்தமாக இதுபோன்ற வசனங்கள் உள்ளன. ஏன்! நாமே கூட நாள் முழுவதும் யாரையேனும் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். தொழுகையில் கூட அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பராகத்துஹு… என நபிகளாரை அழைத்து சலாம் உரைக்கிறோம்.

அப்படியென்றால், அல்லாஹ் அல்லாதவற்றை அழைக்கக் கூடாது என குர்ஆன் தடை செய்வது எதை என்ற கேள்வி எழுகிறது… அல்லாஹ் அல்லாஹதவற்றை அழைக்காதீர்கள் என்று வரும் வசனங்களுக்கு விளக்கம் யாது? என்ற வினா வருகிறது… அதற்கு குர்ஆனின் விளக்கத்தைப் பாருங்கள்…

வணங்குதலும், அழைத்தலும்:

யார் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கிறாரோ அவருக்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதன் கேள்வி கணக்கு அவனுக்கு இறைவனிடம் உண்டு.(அல்குர்ஆன் 23:117)

அல்லாஹ்வுடன் வேறெவரையும் அழைக்காதீர்கள். (அல்குர்ஆன் 28:88)

அல்லாஹ் அல்லாததை அழைக்காதீர்கள் என்றால்… அல்லாஹ் அல்லாத எவரையும் கடவுள் என்று கருதி அழைக்காதீர்கள். அதாவது வணங்காதீர்கள் என்ற விளக்கம் தான் என்பதை மேற்கண்ட இருவசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. எங்கெல்லாம் அல்லாஹ் அல்லாததை அழைக்க தடை செய்து வசனங்கள் வருகின்றனவோ அதற்கு இவ்விரு வசனங்கள்தான் தப்ஸீர் ஆகும்.

கியாமத் வேளையிலும் கூட அவை அவர்களுக்கு பதிலளிக்காது. இன்னும் அவர்களின் அழைப்பையே அறியாதவைகளான (அல்லாஹ் அல்லாதவற்றை) அழைப்பவனை விட மிக கேடு கெட்டவன் யார்? (அல் குர்ஆன் 46:5)

மனிதர்களை மறுபடியும் எழுப்பப்படும் கியாமத் நாளில் அவை இவர்களுக்கு எதிரிகளாகி மேலும் அவர்களின் வணக்கத்தை நிராகரித்து விடும். (அல் குர்ஆன் 46:6)

ஆக கியாமத் நாளில் முஷ்ரிக்குகள் வணங்கிய சிலைகள் அவர்களின் வணக்கத்தை நிராகரித்துவிடும். எனவே அழைத்தல் என்பதன் கருத்து இங்கே வணக்கமாக, கடவுள் என்று எண்ணி அல்லாஹ் அல்லாததை அழைப்பது தான் என்பதை மேற்படி வசனங்கள் தௌ;ளத் தெளிவாக விளங்குகின்றன.
 
அழைத்தல் என்பதை வணங்குதல் என பொருள் கொள்ளுதல்:

எனவே தான் பொதுவாக அனைத்து திருமறை விரிவுரையாளர்களும் (முஃபஸ்ஸிரீன்கள்) அல்லாஹ் அல்லாததை அழைப்பதை தடை செய்து வரும் வசனங்களுக்கு அழைத்தல் என்றால் வணங்குதல் என்றே பொருள் கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்கள்.

ஆனால், குழப்பவாதிகளான வஹ்ஹாபிகளும், தேவ்பந்திகளும் என்ன விளக்கம் கூறுகின்றார்கள் தெரியுமா?

அழைத்தல் –  துஆ என்ற வார்த்தைகளுக்கு குர்ஆனின் விளக்க மேதைகளான முஃபஸ்ஸரீன்களின் விளக்கத்தை எடுத்துக் கொள்ளாமல் தமது தவறான வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாக தமது புறத்திலிருந்து புதிய விளக்கங்களை… அழைத்தல் என்றால் இதுதான் வரையறைகளை வைத்துக் கொண்டார்கள். வழிகேடர்களின் பார்வையில் அழைத்தல் என்றால் தூரத்தில் உள்ளவர்களை அழைத்தல் என்பதுதான்.

இந்த வழிகெட்ட தேவ்பந்திகளும், வஹ்ஹாபிகளும் கூறும் இந்த விளக்கத்திற்கு குர்ஆனில் ஆதாரம் உள்'ளதா? என்றால் முற்றிலும் இவைகள் குர்ஆனின் விளக்கத்திற்கு மாற்றமானது.

வலி, அவுலியா என்பதின் விளக்கம்:

நபிமார்களும், சஹாபாக்களும் மரணித்தவர்களை அழைத்துள்ளனர். பல மைல் தூரத்திலிருந்தும் கூட அழைத்துள்ளனர். அவ்வழைப்பு செவியுறப்பட்டுள்ளது.

குர்ஆன் வசனங்களே குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமளிப்பதற்கு இன்னும் சில உதாரணங்களை காண்போம்.

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு நெருங்கியவரோ, உதவியாளரோ கிடையாது. (அல்குர்ஆன் 2:107)

அல்லாஹ் அல்லாததை நெருங்கியவராக ஆக்குபவர்களுக்கு உதாரணம் சிலந்தி வலையைப் போன்றது அது ஒரு கூட்டை அமைத்துக் கொள்ளும். நிச்சயமாக கூடுகளிலேயே மிக பலகீனமானது சிலந்தி கூடுதான். (அல்குர்ஆன் 29:41)

இந்த காபிர்கள் என்னை விட்டுவிட்டு என் அடியார்களை வலிகளாக ஆக்கிக் கொள்ள நினைக்கிறார்களா? நிச்சயமாக நாம் காபிர்களுக்கு நரகத்தை விருந்தாக தயார் படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)

இது போன்ற பல வசனங்கள் வருகின்றன. வலி அவ்லியா என்பதன் அர்த்தம் நண்பர், உதவி செய்பவர், உரிமையாளர்,போன்று பல உள்ளன. இவ்வசனங்களில் வல, அவ்லியா என்பதற்கு உதவி செய்பவர் என்று மட்டுமே எல்லா இடங்களிலும் அர்த்தம் வைத்தால அல்லாஹ் அல்லாத எவரையும் உதவி செய்பவர் என்று கருதியவர்கள் காபிர், முஷ்ரிக் என்று வந்து விடும். இது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் ஏன் அறிவிற்கும் முரணானது. காரணம் குர்ஆனில் அல்லாஹ் தமது அடியார்களை உதவி செய்பவராக கூறுகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் உதவியாளன். மேலும் ஜிப்ரயீல், சாலிஹான முஃமின்களும், அதன்பின் மலக்குமார்களும் உதவியாளர்களாவர். (அல்குர்ஆன் 66:4)

உங்களில் வலி(உதவியாளர்) அல்லாஹ்வும், ரசூலும் ருகூஃ செய்பவர்களான தொழுகையை நிலைநாட்டி ஜக்காத்தையும் வழங்கி வரும் முஃமின்களும் ஆவர். (அல்குர்ஆன் 5:55)

முஃமின்களான ஆண், பெண் சிலர் சிலருக்கு உதவியாளர்களாவர் (அல்குர்ஆன் 9:71)

இதுபோல் பல வசனங்கள் கிடைக்கும்.

உலக காரியமாகட்டும். மார்க்க காரியமாகட்டும். அது நடைப்பெற மற்றொருவரின் உதவி இருந்தாக வேண்டும். உதவுதல் நின்று விட்டால் உலக இயக்கமே சீர் குலைந்துவிடும்.

இப்போது கூறுங்கள்.இது போன்ற உதவிகளை தேடுபவரை முஷ்ரிக் என்று எப்படி கூற இயலும்?

சரி அப்படியானால் வலி கூடாது என்று வரும் வசனங்களுக்கு குர்ஆனின் மூலம் நமக்கு தெரியவருவது என்ன? யாரை வலியாக ஏற்றுக் கொள்ள அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான்.? குர்ஆனின் வசனங்களே நமது கேள்விகளுக்கு தெளிவாக விளக்கமளிப்பதைப் பாருங்கள்.
யாரை வலியாக ஏற்பது?

ஒருவரை வலியாக ஏற்பது என்பதை குறித்து குர்ஆன் நான்கு விதமான விளக்கங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. இந்த விளக்கங்களைக் குறித்து நாம் தெளிவு பெற்றால் தான் நமது ஈமானை வழி;கேடர்களின் தவறான விளக்கத்திலிருந்து பாதுகாக்கக முடியும். காரணம் அஹ்லெ சுன்னத் ஜமாஅத்தினைத் தவிர மற்ற எல்லா வழிகெட்ட கூட்டங்களும் இறையருள் பெற்ற வலிமார்களின் விசயத்தில் எதிராக ஒன்று கூடியுள்ளார்கள். எப்படியாவது உம்மத்தே முஹம்மதிய்யாவான நம்மை இறைவனின் அருளில் இருந்து விலக்கி அழிவின் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்வதில கைகோர்த்து உள்ளார்கள். எவர் அல்லாஹ்வின் ரகசியமான வலியுல்லாஹ்வின் சகவாசத்தில் இருக்கிறாரோ அவர் மீது இறைவனின் அருள் என்றும் நிலைத்து இருக்கும். அல்லாஹ்வின் அருள் எவர் மீது பரிபூரணமாய் இருக்குமோ அவரின் உள்ளத்தில் மட்டுமே வலியுல்லாஹ்வின் மீது அன்பு ஏற்படும்.

குர்ஆனின் வசனத்தைக் கொண்டே இந்த வழிகேடர்களான தேவ்பந்திகள், தப்லீக் ஜமாஅத்து, தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்து போன்ற அமைப்பினர் நம்மை குழப்பி நமது ஈமானை கேள்விக்குறியாக்குவதால் குர்ஆனின் தெளிவுகளை நீங்கள் நன்கு புரிந்து கொள்வது அவசியமாகிறது.

குர்ஆன் கூறும் வலி என்னும் பதத்திற்கு உண்டான விளக்கத்தை காண்போம். யாரை வலியாக ஏற்க வேண்:டும், யாரை வலியாக ஏற்க கூடாது என்ற தெளிவுகளைக் காணுங்கள்.

முதல் வகை:

இறைவன் பலகீனமானவன். அவனால் உதவி செய்ய இயலாது என்று எண்ணி மற்றவர்களிடம் உதவி தேடுதல்.

இவ்வாறு உதவி தேடுதல் குப்ராகவும், ஷிர்க்காகவும் உள்ளது. எனவே இவ்வாறு நினைத்து மற்றவரிடம் உதவி தேடக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்! பலகீனத்தின் காரணமாக அல்லாஹ்விற்கு உதவுபவர் எவருமில்லை. மேலும் அவனது பெருமையை தக்பீர் செய்வீராக. (அல்குர்ஆன் 17:111)

மேற்கண்ட தவறான எண்ணத்துடன் எந்த ஒரு முஸ்லிமும் இறைவனுக்கு மாறாக ஒரு வலியுல்லாஹ்வின் தர்பாருக்கு செல்வதில்லை. ஆனால் இந்த வழிகேடர்களான தேவ்பந்திய தப்லீக் வாதிகள், நஜ்திகள், ஜமாஅத்தே இஸ்லாமிகள் அப்பாவி பொதுமக்களை வழிகெடுக்கும் நோக்கில் இறைவனை நாம் பலகீனமானவனாகக் கருதுவதாக அபாண்டமான பழிசுமத்தி நமது பரிசுத்த ஈமானை அசுத்தப்படுத்துகின்றனர். இவர்களின் அபாண்டமான குற்றச்சாட்டை மடையர்கள் கூட ஏற்பதற்கில்லை. ஆனால் இந்த வழிகேடர்கள் மேற்கண்டவாறு கருதுவதால இவர்கள்தான் முஷ்ரிகுகள், காபிர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இரண்டாம் வகை:

இறைவனுக்கு இணையாக உதவி செய்பவர்கள் எனக் கருதுவது.

இறைவன் கூறுகிறான்! பூமியில் இக்காபிர்கள் இறைவனை இயலாமையில்
ஆழ்த்த முடியாது. அல்லாஹ்விற்கு நிகராக இவர்களுக்கு உதவுபவர் யாரும் இல்லை. (அல்குர்ஆன் 11:20)

இறைவனுக்கு இணையாக எந்த ஒரு வலியுல்லாஹ்வையும் எந்த ஒரு முஸ்லமும் கருதுவது இல்லை. மாறாக வலியுல்லாஹ் என்போரை இறைவனின் அருள்  பெற்ற நல்லடியார்களாகவே காண்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. இந்த வழிகேடர்கள் பொதுமக்களான அப்பாவி முஸ்லிம்கள் வலியுல்லாஹ்வை இறைவனாக கருதுவதாக பழிசுமத்துகின்றனர். உண்மையில் இந்த வழிகேடர்கள் தான் வலியுல்லாஹ்வை அல்லாஹ்விற்கு இணையாக கருதுகின்றனர். எனவேதான் அப்பாவி மக்கள் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். மேற்கண்டவாறு இறைவனுக்கு இணையாக இந்த வழி கெட்ட அமைப்பினர் கருதுவதால் இவர்கள்தான் காபிர்களும், முஷ்ரிகுகளும் ஆவார்கள்.

எனவே இவர்களை விட்டும் ஒதுங்கி இருப்பது முஸ்லிம்களின் கட்டாய கடமையாகும்.

வலியுல்லாஹ்க்கள் இறைவனின் விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை. இறைவனின் அருளை வெளிப்படுத்தும் மள்ஹராக-வெளியீட்டும் தலமாக உள்ளார்கள். இறைவனுக்கு இணை யாரும் இல்லை. இணை உண்டாவது என்பது எப்போதும் சாத்தியமற்ற ஒன்றாகும். காரணம் இறைவனுக்கு உருவம் இல்லாதபோது எப்படி அவனுக்கு இணை ஏற்படுத்த இயலும்? மனிதனில் வெளிப்படும் ஆற்றல் அனைத்தும் இறைவன்  மனிதனுக்கு அளித்த ஆற்றல். இதனை வெளிப்படுத்துவதால் அது இறைவனின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதே அன்றி இறைவனுக்கு நிகர் இல்லை.

எனவே எப்போதும், யாராலும் இறைவனுக்கு இணை ஏற்படுத்த இயலாது என்பதை நீங்கள் விளங்கிகக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கருத்துக்கு மாறாக இந்த வழிகேடர்கள் இறைவனுக்கு இணை ஏற்படுகிறது என்று கூறுவதால் இவர்களாகவே இறைவனுக்கு உருவத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது. இறைவனுக்கு உருவம் ஏற்படுத்திய இவர்கள் முஸ்லிம்களா? காபிர்களா? என்பதை முஸ்லிம்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மூன்றாவது வகை:

எவரையாவது உதவி செய்பவர் என்று கருதி அவரை வணங்குவது. அதாவது வலி என்னும் பதத்திற்கு வணகக்கத்திற்குரியவர் என்று அர்த்தம் வைப்பது.

'இறைவன் கூறுகிறான் அல்லாஹ்வை அன்றி மற்றதை வலியாக ஆக்கிக் கொண்டோர் கூறுகின்றனர் இவைகள் அல்லாஹ்வின்பால் எங்களை நெருக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர இவைகளை நாங்கள் வணங்கவில்லை.' (அல்குர்ஆன் 39:3)

இவ்வசனத்தில் வலி என்பதன் பொருள் வணக்கத்திற்குரியவர் -கடவுள் என்பதாகும்.

மேற்கண்ட வசனம் காபிர்களை குறித்து இறக்கப்பட்ட வசனமாகும். இந்த வசனத்தை முஸ்லிம்கள் மீது இந்த வழிகேடர்கள் திணிப்பது எவ்வளவு பெரிய மோசடித்தனம். காரணம் எந்த ஒரு முஸ்லிமும் வலியுல்லாஹ்க்களை இறைவனிடம் சேர்க்கும் கடவுளாக கருதுவதில்லை.

இறைவனின் ரகசியத்தை  வெளிப்படுத்தும் வழிக்காட்டிகளாகவே கருதுகின்றனர். இதனால் தான் வலியுல்லாஹ்கள் காட்டித் தரும் தரீக்காவில் தன்னை இணைத்து மனதை பக்குவப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுத்தி மேன்மக்களாக ஆகுவதற்காக வேண்டியே வலிமார்களை தங்களின் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்கின்றனர்.

நான்காம் வகை:

எவரையாவது அலலாஹ்வின் நல்லடியார் என்றும் அல்லாஹ்'வின் கட்டளைப்படியே அவர் நமக்கு உதவுகின்றார் என்றும் கருதி அவரிடம் உதவி தேடுதல்.

1.    இறiவா! உன் புறத்திலிருந்து எங்களுக்கொரு வலியை ஆக்குவாயாக. உன் புறத்திலிருந்து எங்களுக்கு உதவிபுரிபவரை ஆக்குவாயாக.

2.    உங்களின் வலி(உதவியாளர்) அல்லாஹ்வும், அவன் ரசூலும், தொழுகையை நிலைநாட்டி ஜகாத்தையும் வழங்கிவருபவரும், ஈமான் கொண்ட முஃமின்கள்தான். (அல்குர்ஆன் 5:55)

3.    முஃமினான ஆண்கள், பெண்கள் சிலர் சிலருக்கு வலியாவார்கள். (அல்குர்ஆன் 9:71)

மேற்கண்ட வசனங்களில் உதவியாளர் வலி என்னும்  பொருளில் வரும் அனைத்து வசனங்களிலும் நான்காம் வகையின் விளக்கத்தை காண முடியும். இவ்வகையான எண்ணத்துடன் உதவி தேடுதல் என்பது குர்ஆன் நமக்கு கற்றுக் கொடுக்கும் வழிமுறையாகும். இதில் எவ்வித தவறும் இல்லை. இறைவனே நமக்கு இந்த வலிமார்களை உதவியாளர்களாக காட்டித் தருகிறான். இதன் நோக்கம் நாம் இவர்களின் மூலமாக இறைவனின் உதவியையும், அருளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்.

அல்லாஹ்வையன்றி மற்றவர்களை வலியாக ஏற்கக் கூடாது என தடை வரும் வசனங்களில் கூறப்படும் நோக்கம் முதல்-இரண்டாம்- மூன்றாவது வகையின் தவறான எண்ணமும் கொள்கையுமாகும்.

ஆனால் நான்காம் வகையில் இறைவனின் வலியாக யாரை ஏற்பது என்ற விளக்கத்தில் குர்ஆனின் வசனங்களே ஏராளமான சாட்சிகளாக இருப்பதால் இவ்வகையான எண்ணத்துடன் வலிமார்களை ஒப்புக் கொள்ள வேண்டும். இதை மறுப்பது குர்ஆனின் வழிமுறைக்கு மாற்றம் செய்வதாகும்.

பொதுஜனங்கள் ஒரு வலிமார்களையும், நபிமார்களையும் இறைவனின் அடியார்களாகவே பார்க்கின்றனர். இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்தவர்களாகவே பார்க்கின்றார்கள். இறைவனின் அருள் வெளியாகும் ஸ்தலமாகவே உணர்கிறார்கள். இதற்கு மாறாக தனி கடவுளாகவோ, இறைவனாகவோ மனதால் கூட எண்ண மாட்டார்கள்.

நபிகளாரின் ஆற்றல்:

கண்பார்வை அற்ற ஒரு சஹாபி ஒருவர் யாரஸூலல்லாஹ்! என் கண் பார்வை கிடைக்க துஆ செய்யுங்கள் என மன்றாட தனது முபாரக்கான கரத்தால் தனது உமிழ்நீரை எடுத்து அந்த நபித்தோழரின் கண்ணில் தடவியபோது அக்கணமே பார்வை பெற்றார்கள் எனப்து புகாரியின் ஹதீதாகும்.

இந்த சம்பவத்தில் அந்த நபித்தோழர் நபிகளாரின் சமூகத்திற்கு சென்று தன் தேவையை வேண்ட காரணம் அவர்கள்  அல்லாஹ்வின் மிகவும் விருப்பத்திற்குரிய நபி-ரஸூல் என்பதை நன்கு உணர்ந்து இருந்தார். நபியவர்களை இறைவனின் அருள் வெளிப்படும் ஸ்தலமாகவே பார்த்தார்.

வழிகெட்ட வஹ்ஹாபியர்களைப் போல சாதாரண மனிதனாக பார்க்கவில்லை. நபியவர்கள் நிச்சயம் தனது தேவையை நிறைவேற்றுவார்கள் என உறுதியாக நம்பினார். வழிகேடர்களைப் போல அவநம்பிக்கை கொள்ளவில்லை. மனித கோலத்தில் இருந்தாலும் நபியவர்கள் இறைவனின் மிக சிறந்த தன்னிகரற்ற படைப்பு என்பதில் நபித்தோழர் பெருமக்கள் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தனர். சாதாரண மனிதனாக வாழ்ந்தாலும் எவராலும் புரிந்து கொள்ள முடியாத, இறைவனால் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய பேரொளியாக கண்டார்கள். இதனால் கண் பார்வையற்ற அந்த நபித்தோழரின் கோரிக்கை உடனே நிறைவேற்றித் தரப்பட்டது.

அல்லாஹ் நபியவர்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான். அவர்களின் புனித உமிழ்நீரின் பரக்கத்தால் அந்த சக்தியை இறைவன் நிறைவேற்றினான்.

எல்லா சக்திகளும் இறைவனால் நமது கண்மணி நாயகம் அவர்களுக்கு பரிபூரணமாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படாமல் இருந்தால் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதே உலகிற்கு தெரியாமல் போயிருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.

வலிமார்களின் ஆற்றல்:

இதைப் போன்றே வலிமார்களின் மூலமாக வெளிப்படும் ஆற்றல், அதி அற்புத சக்தி என்பது இறைவன் தனது ஆற்றலை அந்த வலியின் மூலமாக வெளிப்படுத்துகிறான்.

ஈமான் கொள்ளாத எவரையும் முஃமின்கள் வலியாகவே ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இந்த குழப்பவாதிகள் கூறுவது போன்று வலிமார்களிடம் உதவி தேடுதல் என்பது குர்ஆனிற்கு மாற்றமான செயல் ஆகாது. மாறாக குர்ஆன் நமக்கு காட்டித் தரும் வழிமுறையாகும். அல்லாஹ்வே தனது திருமறையில் வலி-உதவியாளர்களை காட்டித் தந்தபிறகு அவர்களிடம் உதவி தேடாமல் இருப்பது முறைதானா? சிந்தியுங்கள்….!

வலிமார்களிடம் உதவிதேட வேண்டும் என்பதே இறைவனின் விதித்த நியதி. இதை மறுத்து கூடாது எனக் கூறும் இந்த வழிகேடர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது. இறைவனின் நியதிக்கு மாறாக ஓர் நியதியை கற்றுத் தரும் இவர்கள் ஷைத்தானின் ஏஜெண்டுகள் என்பது இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை.

குர்ஆனின் விளக்கத்தைக் கொண்டே நாம் இதனை உங்களுக்கு விளக்கியுள்ளோம். இதற்கு மேலும் வலிமார்களிடம் உதவி தேடுதலை மறுப்பவனைப் பற்றி நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிடிவாதம் பேசுவோர் எத்தனை ஆதாரங்களையும் புறந்தள்ளி விடுவார்கள். இறைவனால் சபிக்கப்பட்டவர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இவர்களின் தவறான பாதையில் நீங்கள் செல்லக் கூடாது என்பதற்காகத்தான் இத்தகைய முயற்சி, அல்லாஹ் நமது நபியின் பொருட்டால் உண்மையான நபி நேசத்தை நம் இதயங்களில் ஏற்றி பிரகாசிக்கச் செய்வானாக. ஆமீன்.

அர்த்தம் அனர்த்தம் ஆகுதல்:

தற்காலத்தில் சில வார்த்தைகளுக்கு கூறப்படும் அர்த்தம் நபிமார்களின் காலத்தில் கூறப்பட்ட அர்த்தத்திற்கு நேர்மாறாக இருக்கின்றது. இவ்வாறு பல வார்த்தைகள் அர்த்தம் செய்யப்பட்டு புழங்கப்படுவதால் வழி கேடர்கள் இந்த அனர்த்தங்களை தங்களுக்கு சாதகமாக்கி குர்ஆனிற்கு தவறான பொருள் கூறி இஸ்லாத்தை அழிப்பதற்கும், நபிமார்களின் எல்லையில்லா கண்ணியத்தை சீர்குலைக்கவும் முற்படுகின்றனர். இன்றளவும் அந்த பாதக செயலை செய்து வருகின்றனர்.

இதற்கு மிகவும் முக்கிய காரணம் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தைகளே! எனவே நாம் இந்த குர்ஆனில் அரபியின் புழக்கம் எந்த நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்தப் போகிறோம். உங்களுக்கு விளங்க வைக்கும் வார்த்தை ஈமான் என்பதாகும்.

இந்த வார்த்தையின் தெளிவை விளங்கிய எவரும் வழிகெடவே மாட்டார்கள். வழிகெட்ட வஹ்ஹாபிய சிந்தனைகளை எவரேனும் ஒப்புக் கொண்டால் அவர் குர்ஆன் கூறும் ஈமான் என்னும் விளக்கத்தை முற்றிலும் அறியாத மடையராகவே இருப்பார்.

காரணம், இந்த வார்த்தையின் விளக்கத்திலேயே நபிகளாரின் கண்ணியம் உணர்த்தப்பட்டுள்ளது. நபிகளாரின் கண்ணியத்தை புரிந்து கொண்ட எவரும் வழிகெட்ட வஹ்ஹாபிய சிந்தனைகளை ஜீரணிக்க மாட்டார்கள்.

முக்கிய நோக்கம் வஹ்ஹாபிய வழிகேடர்களை இனம் காட்டுவதுடன் உண்மையான ஈமானை புரிந்து அதன்படி நடந்து வலிமார்களின் பாத சுவடுகளைப் பின்பற்றி நடக்க ஓர் ஊன்று கோலாய் இருக்க வேண்டும் என்பதே!

ஈமான்:

எனும் வார்த்தை அம்ன் எனும் மூலத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகும் அம்ன் எனும் வார்த்தையின் அகராதிப் பொருள் அபயமளித்தல் என்பதாகும். ஆனால் ஷரீஅத்துடைய புழக்கப்படி ஈமான் என்பது கொள்கையின் பொருளாகும். அக்கொள்கையினால் மட்டுமே நிரந்தர வேதனையிலிருந்து தப்ப முடியும்.

தவ்ஹீத் – ஏகத்துவம், ரிஸாலத்-தூதுத்துவம், ஹஷ்ர் எனும் கியாமத், வானவர்கள், சுவர்க்கம் நரகம், தக்தீர் எனும் விதி போன்றவற்றை ஈமான் கொள்வது அதாவது நம்பிக்கை கொள்ளுதல்.

குர்ஆன் வசனம்:

முஃமின்கள் அனைவரும் அல்லாஹ்வையும், அவனது மலக்குமார்களையும் அவனது வேதங்களையும் அவனது ரஸூல்மார்களையும்  ஈமான் கொண்டுள்ளனர். இன்னும் நாங்கள் அவனது ரஸூல்மார்களில் எவர் மத்தியிலும் வித்தியாசம் காண மாட்டோம் என்றும் கூறுகின்றனர்.

மேற்கண்ட வசனத்தில் முஃமின்கள் எந்த கொள்கைகள் மீது இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் ஈமான் என்பது அனைத்து கொள்கைகளுக்கும் அடிப்படையாக உள்ள விஷயத்தின் மீது கூறப்பட்டுள்ளது.

முஃமினின் உயிர்:

 அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபியவர்களை ஒவ்வொரு அடியானும் தனது மனதால் தீர்ப்;பளிப்பவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு அடியானும் தன்னை அண்ணல் நபிகளாரிடத்தில் அடிமைகளாக ஒப்படைக்க வேண்டும். முஃமின்களின் உயிர், பொருள், செல்வம் அனைத்தும் நபிகளாரின் அதிகாரத்திற்குட்பட்டதாகும்.

இன்னும் உயிரினும் மேலான நமது கண்மணி நபியவர்களுக்கு உலகிலுள்ள எல்லாபடைப்புகளையும் விட அதிக மரியாதையும் கண்ணியமும் செய்ய வேண்டும். இதை எவர் ஒப்புக் கொண்டு நபிகளாரின் சமூகத்திற்குச் சென்று தன்னை அர்ப்பணிக்கிறாரோ அவர்தாம் தவ்ஹீத் எனும் ஏகத்துவம், வேதங்கள், மலக்குமார்கள் போன்ற அனைத்தையும் ஏற்றுக் கொண்டவராகிறார்.

இதற்கு மாற்றமாக ஒருவர் நபிகளாரை நேசம் கொள்ளாமல் வெறுமனே மலக்குகளையும், சுவனம், நரகம், வேதம் போன்றவற்றை ஈமான் கொள்பவர் குர்ஆனின் தீர்ப்புப் படி அவர் முஃமின் அல்ல. மாறாக காபிர், முஷ்ரிகு என்றே அவர் அழைக்கப்படுவார்கள்.

இப்லீஸின் இபாதத்:

இப்லீஸ் பக்காவான தவ்ஹீத் வாதி. கடுமையான தொழுகையாளி. இறைவனை மிக அதிகம் ஸஜ்தா செய்தவன். மலக்குமார்களின் தலைமை பீடத்தில் இருந்தவன். கியாமத் நாளை நம்பிக்கை கொண்டவன். சுவனத்தையும், நரகத்தையும் நேரில் கண்டவன். கொள்கை ரீதியான எல்லா விசயத்திலும் அவன் நம்பிக்கை கொண்ட நிலையில் குர்ஆன் அவனைப் பார்த்து கூறியதென்ன?

ஆதம் நபியவர்களுக்கு ஸஜ்தா செய்ய மறுத்து பெருமையடித்த போது இறைவன் கூறினான் வகான மினல் காஃபிரீன் அவன் காபிராகிவிட்டான் என்று. இந்த இடத்தை கவனத்துடன் பார்த்தால் ஓர் மாபெரும் உண்மை நமக்கு புரியவரும். அதாவது, ஒருவன் அல்லாஹ்வையும், மலக்குமார்களையும், வேதங்களையும், கியாமத், சுவனம், நரகம் போன்ற விசயங்களை ஈமான் கொண்டாலும் குர்ஆனின் தீர்ப்புப் படி அவன் ஈமான் கொண்டவனில்லை. எதுவரை எனில் அவன் நமது நபிமார்களை ஈமான் கொள்ளவில்லையோ அதுவரை.

ஈமானின் உயிர்:

உண்மையான ஈமான் என்பது நபிகளாரை தன் உயிருக்கும் மேலாக நேசிப்பதுதான். இதன் பிறகுதான் மற்ற நம்பிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும். நபிகளாரை ஒருவர் நபி என நம்பிக்கை கொண்டாலே அவர்கள் கூறிய இறைவன், மலக்குகள், சுவனம், நரகம், வேதங்கள், கியாமத் என அனைத்தையும் ஒப்புக் கொண்டான் என்றே பொருள் கொள்ளப்படும்.

இப்லீஸ் நபியவர்களை கண்ணியப்படுத்தாமல் அலட்சியப்படுத்திய காரணத்தினால் அவனை காபிர் என இறைவன் தீhப்பளித்தான். இப்போது புரிகிறதா? குர்ஆன் கூறும் ஈமானின் அடிப்படை என்பது நபிகளாரின் கண்ணியம்தான் என்பது.

கீழ்காணும் வசனங்களில் இதற்கான ஆதாரத்தை பாருங்கள்…

நாயகமே! உமது இறைவன் மீதாணை! மக்கனைவரும் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு கொள்ளும் விசயத்தில் உங்களை நீதிபதியாக்கி தாங்கள் தீர்ப்பு கூறிய பின்பு அந்த தீர்ப்பை மனமுவந்து ஒப்புக் கொள்ளாதவரை அவர்கள் முஃமினாக மாட்டார்கள்.

மக்களில் சிலர் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஈமான் கொண்ட முஃமின்கள் அல்லர். (அல்குர்ஆன் 5:55)

முனாபிக்குகளில் பெரும்பான்மையானவர்கள் யஹுதிகளாகவே இருந்தனர். யஹுதிகள் இறைவன், கியாமத், போன்றவற்றையெல்லாம் ஏற்றிருந்தனர். ஆனால அல்லாஹ் அவர்களை காஃபிர்கள் என்கிறான். ஏன்?

அல்லாஹ்வை, கியாமத்தை ஏற்பதாக கூறியவர்கள் ரஸூலை ஏற்பதாக கூறவில்லை. எனவே இவர்களை அல்லாஹ் முஃமின்கள் என்று கூறாமால் முனாஃபிக்குகள் என்றே அழைக்கிறான்…

முனாஃபிக்குகள்:…

நாயகமே! தங்களின் சமூகத்திற்கு இந்த முனாபிக்குகள் வந்தால் 'நிச்சயமாக தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் இன்னும் தாங்களே அவனது தூதர் என அல்லாஹ்வும் அறிவிக்கிறான், நாங்களும் சாட்சி சுறுகிறோம்' என்று கூறுகின்றார்கள். ஆனால் அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்… இந்த முனாபிக்குகள்  பொய்யர்கள். (சூரத்துல் முனாபிகூன் முதல் வசனம்)

பார்த்தீர்களா? மேற்படி வசனத்தில நமக்கு விளங்குவது என்ன? நபிகளாரை வெறும் வாயால் மட்டும் ஒப்புக் கொள்பவன் முஃமின் அல்ல. அவன் முனாபிக். இதயப்பூர்வமாக அவர்களின் மீது நம்பிக்கை கொள்வது தான் ஈமான் ஆகும்.

இந்த முனாபிக் எனப்படும் நயவஞ்சகர்கள் வாயால் கூறிய சொல் உண்மைதான். ஆனால் அவர்கள் பொய்யாக, நம்மை ஏமாற்றுவதற்காகவே இதை கூறினார்கள். இன்று உள்ள பெயர் தாங்கிகளும் இப்படிதான் கூறுகிறார்கள். இதயத்தில் இதன் பேரில் நம்பிக்கை கொள்பவர்கே மு.ஃமின்கள்.

முனாபிக்குகள் எனப்படும் பெயர் தாங்கி முஸ்லிம்களான வஹ்ஹாபிய வழிகேடர்கள், வழிகெட்ட தப்லீக்வாதிகள், தேவ்பந்திகள், ஜமாஅத்தே இஸ்லாமிகள் மற்றும் உள்ள அத்துணை வழிகேடர்களும் நபிமார்களின் மீது பொய்யாக ஈமான் கொண்டதன் அடையாளம் நபிகளாரின் மீது இழிவான குறைகளையும் குற்றங்களையும் கூறுவதுதான். உண்மை முஃமின்கள் ஒருபோதும் இவ்வாறு கூறுவதற்கு துணிய மாட்டார்கள். நபிகளார் மீது அளவிலா அன்பும் பரிபூரண நம்பிக்கையும் கொண்டவர்கள் அவர்களிடம் நபியின் கட்டளை வந்து விட்டால சுயவிருப்பத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். கீழ்காணும் இறைவசனத்தை பாருங்கள் அல்லாஹ்வும் அவனது ரஸூலும் ஒன்றை தீர்ப்பு செய்து விட்டால் அந்த விசயத்தில்சுய விருப்பத்தை காண்பது எந்த ஒரு முஃமினான ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை'. (அல்குர்ஆன் 33:36)

இந்த வசனம் ஹஜ்ரத் ஜைனப் அவர்கள் ஹஜ்ரத் ஜைத் அவர்களை திருமணம் புரியும்படி கட்டளையாக வந்த வசனமாகும். இந்த வசனம்  இறங்கியவுடன் தன் சுய விருப்பத்திற்கு இடம் கொடுக்காமல் நபிகளாரின் கட்டளைப் படியே மணம் முடித்துக் கொண்டார்கள்.

நபிகளாரின் சமூகத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்தவர்களால் மட்டுமே அவர்களின் எல்லா கட்டளைகளுக்கு முழுமையாக தன்னை அர்ப்பணிக்க முடியும். நபிகளாரின் மீது பூரண அன்பு கொண்டு தன்னை அடிமையாக பாவிப்பவர்களே முஃமின்கள்.

நாம் நபிகளாரின் அடிமைகள்:

எல்லா முஃமினான ஆண் பெண் அனைவரும் நபிகளாருக்கு அடிமைகள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேற்படி வசனமும் இதையே குறிப்பிடுகின்றது.

உண்மையாகவே தன்னை நபிகளாரின் அடிமைகளாக ஆக்கிக் கொண்டவர்கள் தம் உயிருக்கும் மேலாக நபிகளாரை நேசிப்பவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். இதையே திருக்குர்ஆனின் வசனமும் கூறுகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு அவர்களின் உயிருக்கும் மேல்; அதிகாரமுடையவர்கள். நபிகளாரின் மனைவிமார்கள் முஃமின்களின் அன்னையாவார்கள்.

எப்போது நபிகளார் முஃமின்களின் உயிருக்கும் மேல் அதிகாரமிக்கவர்களாக ஆகிவிட்டார்களோ நமது பொருள், பிள்ளைகள், அனைத்திற்கும் அவர்களே உரிமையாளர் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமா?

நமது நபிகளின் மீ:து போலியான ஈமான் கொண்ட வேடதாரியான பொய்யர்கள்தாம் இன்று இஸ்லாத்தை நேர்வழிப் படுத்துகின்றார்களாம். இஸ்லாத்தை தூய்மைப்படுத்துகின்றார்களாம்! முஃமின்களே! இவர்களை நாம் பின்பற்றினால் என்ன ஆகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். குர்ஆன் ஷரீஃபில் இந்த பொய்யர்களைப் பற்றி மிகத் தெளிவாக கூறிய பின்பும் இத்தகைய வழிகெட்ட வஹ்ஹாபியர்களை –பெயர் தாங்கிகளை பின்பற்றுபவர்களை நாம் என்னவென்று கூறுவது? அவர்களின் வழியை ஒருகணம் அவர்களே மறுபரீசலனை செய்யட்டும். நபிகளாரை அணுஅளவேனும் அவமரியாதை செய்வது அவர்களின் மீது குறை கூறுவது அவர்களின் மனதை வருந்தச் செய்வது ஈமானுக்கு எதிரான குப்ராகும். அதாவது இறை மறுப்பாகும்.

எனவே இத்தகைய வழிகேடர்களின் சதி வலையில் மாட்டிக் கொள்ளாமல் உங்கள் ஈமானை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வல்ல இறைவன் உதவி செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


முற்றும்.

Add Comment

Your email address will not be published.