ஸுஜூது பற்றிய சர்ச்சை விளக்கம்!-Sujood-Explanation!

ஸுஜூது பற்றிய சர்ச்சை விளக்கம்!-Sujood-Explanation!

By Sufi Manzil 0 Comment May 24, 2010

Print Friendly, PDF & Email

ஸுஜூது பற்றிய சர்ச்சை முழு விபரம்.

தென்னிந்தியா, காயல்பட்டணம் அதிகமான மார்க்கம் கற்றிந்த ஆலிமகள் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு ஊர் ஆகும். இங்கு எண்ணற்ற இறைநேச் செல்வர்கள் வாழ்ந்து மறைந்தும், வாழ்ந்தும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் சில மார்க்க அறைகுறை வேக்காடுகள் தோன்றி தங்கள் மனம் போன போக்கில் மார்க்கத்தை சொல்ல முற்படுவதும், அதற்கு நமது ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் ஆணித்தரமாக மறுப்புரைகள் வெளியிட்டு அவர்களின் குதர்க்கமான ஆக்கங்களுக்கு பதில் கொடுத்துள்ளனர்.

அவ்வகையில் 'ஸுஜூது' பற்றிய சர்சசை கடந்த 12-1-1976 அன்று T.M. ரஹ்மத்துல்லாஹ், பிரபு சாமு நெய்னா, M.A.M.. யாஸீன், A.R. இக்பால், M.A.நூகு தம்பி S.T. செய்கு அப்துல் காதர் ஆகியோர் ஒரு கூட்டறிக்கையினை  மஹ்லறா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரிகளுக்கு 'ஸுஜூது' பற்றி விளக்கம் கேட்டு வெளியிட்டனர். அதில்

'இஸ்லாம மார்க்கத்தின் ஆணிவேரும் மூலமந்திரமும் ஆகிய கலிமாவான லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற வணக்கத்திற்கு ஏக பாத்திரமான அல்லாஹ்(ஜல்)க்கு மிகவும் நெருங்கிய அவன் தனக்கே நாம் செய்ய உரித்தான 'ஸுஜூது' என்ற வணக்கத்தை சலி காலமாய் நம்மூர் உலமாக்களும், மற்றும் பிரசுரங்களும் இந்த ஸுஜூதைப் பிரித்து, 'ஸுஜூதே உபூதியத';, என்றும் 'ஸுஜூதே தஃழீம்' என்றும் கூறி அவற்றில் 'ஸுஜூதே தஃழீம்' என்பது ஹறாம் என்றும், ஷிர்க்கில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் இந்த இரண்டு வகையான 'ஸுஜூதாயினும், வேறு எந்த வகையான ஸுஜூதாயினும் ஷிர்க் எனும் இணைவைத்தலே எனவும், எந்த இமாம்களும் இதற்கு மாறான வியாக்கியானம் கூறவில்லை என்று சில உலமாக்கள் கூறுகின்றனர்……'

என்று கூறி அதற்கு விளக்கமளித்து எங்களை ஹலாக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கேட்டுள்ளார்கள்.

இவர்களின் இதேக் கூற்றை நமது ஊரின் முப்தின் சா.சாகுல் ஹமீது ஆலிம் (காயல்பட்டணம் ஜாவியா அறபிக் கல்லூரி முதல்வர்) என்பவர் இதற்கு ஒரு பத்வாவை அரபியில் வெளியிட்டார். அதை ஐதுரூஸ் ஆலிம் (பேஷ் இமாம், அல்-ஜாமிஉல் அஸ்ஹர்); என்பவர் தமிழில் மொழிபெயர்த்து புத்தக வடிவில் 20-3-76 ல் மக்கள் மத்தியில் கொண்டுவந்தார். அதை சரிகண்டு;  நமதூர் உலமாக்கள் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:-

செய்யிது முஹம்மது அவர்கள் குமாரர் முஹம்மது ஐதுரூஸ், அல்ஹாஜ் செய்யிது அஹ்மது அவர்கள் மகனார் செய்யிது முஹம்மது(பாகவி ஆலிம்),  சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் வழித் தோன்றல் முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அவர்களின் மகனார் மஹ்மூது சுலைமான் லெப்பை(ஆலிம்), தைக்காத் தெரு, மாநில ஜமாஅத்துல் உலமாவின் உப தலைவர் அல்லாமா மு.க. செய்யிது இப்றாகிம் ஆலிம் முப்தி, முஹம்மது இஸ்மாயில் அவர்கள் மகன் அபுல் ஹஸன் காஹிரி (சம்மான் கோட்டு பள்ளி இடமாம், கொழும்பு) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அந்த பத்வா உண்மைக்கு மாறானதும் மார்க்கத்திற்கு புறம்பானதுமாகும். அந்த  பத்வாவை வெளியிட்டு மக்களை குழப்பத்திலாக்கியயவர்கள்   தாங்கள் கொடுத்த இஸ்லாமியக் கொள்கைக்கு மாற்றமான பத்வாவிற்கு எதிராக தாங்களே செயல்பட்ட நிலையை இக் காயல்பட்டணம் கண்டது.

இந்த பத்வாவுடன் தொடர்புள்ளவர்கள் செய்த செயலைப் பாருங்கள்:

கடந்த 9-5-1969 அன்று ஜாமிவுல் அஸ்ஹரில் இந்து மத பூரி சங்கராச்சாரியார் அவர்களின் காலில் விழுந்து ஸுஜூது செய்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஜாஹிர் ஹூஸைன் அவர்களுக்கு (இது பற்றிய செய்தி மறுமலர்ச்சி 9-6-1967 ம் இதழில் மதகுருக்கள் இல்லங்களில் ஆஜராவது, ஆசி பெறுவது சமயசார்பற்ற நாட்டின் அதிபருக்கு பெருமை தருமா? என்ற தலைப்பில் கண்டனத்தோடு வெளிவந்துள்ளது) 'காயிப் ஜனாஸா' தொழுகையை, ஸுஜூது பத்வா வெளியிட்ட சாவண்ணா சாகுல் ஹமீது  ஆலிம் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க மற்றவர்கள் பின்தொடர்ந்து தொழுதார்களே! முஷ்ரிக்குக்கா தொழ வைத்தார்கள்? இதுதான் இவர்கள் பின்பற்றும் இஸ்லாமா?)

 

இந்த சுற்றறிக்கைக்கு ஹுஜ்ஜத் 1396 ஸபர் – மாதம் 1976 பிப்ரவரி இதழில் சரியான விளக்க மறுப்புரை வெளியிடப்பட்டது. அது இதோ:

ஷெய்த்தான்கள் வேதம் ஓதுகின்றன.

('இப்னு சாலிஹ்')

சென்ற 12-1-1976 அன்று T.M. ரஹ்மத்துல்லாஹ், பிரபு சாமு நெய்னா, M.A.M. யாஸீன், A.R. இக்பால், M.A.நூகு தம்பி, S.T. செய்கு அப்துல் காதர் என்ற அறுவரும் கையெழுத்திட்டு காயல்பட்டணத்திலிருந்து வெளிவந்த சிறு பிரசுரமொன்று கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். நமது சீருயிர் சமுதாயத்தில் இத்தகைய 'அரை வேக்காடுகளும்' நிறைந்திருக்கிறதே என எண்ணி உண்மையிலேயே மனவேதனை கொண்டேன். வேண்டுகோளாய் விடுக்கப்பட்டிருந்த அப்பிரசுரத்தின் பகுதியொன்று எனக்கு மென்மேலும் குழப்பத்தைத் தந்தது. அதை நீங்களும் படியுங்கள்:-

'இஸ்லாம் மார்க்கத்தின் ஆணிவேரும் மூலமந்திரமும் ஆகிய கலிமாவான லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற வணக்கத்திற்கு ஏக பாத்திரமான அல்லாஹ்(ஜல்)க்கு மிகவும் நெருங்கிய அவன் தனக்கே நாம் செய்ய உரித்தான 'ஸுஜூது' என்ற வணக்கத்தை சலி காலமாய் நம்மூர் உலமாக்களும், மற்றும் பிரசுரங்களும் இந்த ஸுஜூதைப் பிரித்து, 'ஸுஜூதே உபூதியத்', என்றும் 'ஸுஜூதே தஃழீம்' என்றும் கூறி அவற்றில் 'ஸுஜூதே தஃழீம்' என்பது ஹறாம் என்றும், 'ஷிர்க்கில்லை என்றும் கூறுகின்றனர்.'

சற்று சிந்தித்துப் பாருங்கள்! இப்பிரசுரத்தில் நாம் யாவரும் இதற்கு முன் கண்டும், கேட்டுமிராத வகையினில் 'லாஇலாஹ….' வுக்கு புதிய அர்த்தம் தரப்பட்டுள்ளது. குர்ஆன் மதரஸாவில் ஓதும் காலத்தே லெப்பபைமார்கள் பாலபாடத்திலேயே… 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் அன்றி வேறொருவருமில்லை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராயிருக்கும்' என்றுதான் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்த பிரசுரகத்தார்கள் என்னவோ கூறுகின்றனர். 'வணக்கத்திற்கு பாத்திரமான அல்லாஹ் (ஜல்லஷானஹு)க்கு மிகவும் நெருங்கிய அவன் தனக்கு….' என்று நீண்டு செல்கிறது இவர்களது விளக்கமும், விரிவுரையும். எங்கிருந்துதான் பெற்றார்களோ இந்த விளக்கவுரையயை. அந்தோ பரிதாபம்!

அதுதான் போகட்டும்!

அடுத்து பாருங்கள்!

ஒளலியாக்களும், ஷுஹதாக்களும் நிறைந்து இம்மால் ஒளி வீசி சிறப்புற்றிலங்கும் காயல் நகரின்-

தென்னகத்தின் சீருயர் 'சிறு மக்கம்' என பலராலும் ஏற்றிப்புகழப்படும் காயல் மாநகரின்-

உலமாக்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்யும் ஸுஜூதை 'உபூதிய்யத்' என்றும், 'தஃழீம்' என்றும் பிரித்து ஸுஜூதே தஃழீம்' ஹறாம்தான்.  ஷிர்க்கில்லை என்று கூறுகின்றனராம்.

இறைவனுக்கு மட்டுமே செய்ய உரித்தான ஸுஜூதை இப்படி பங்கு போடுகின்ற அதிமேதாவிகள் யார்? இதற்கு முன் கேட்டிருக்கிறோம். உண்மை நிலையும் அதுவேதான்.

அல்லாஹ் (ஜல்லஷானுஹு) 'ஸுஜூதை உபூதிய்யத்'தை தான் அன்றி பிறருக்குச் செய்ய எந்த சமூகத்தினருக்கும் உரிமை தரவில்லை. எனவே இந்த ஸுஜூதைப் பிறருக்கு செய்வது (ஷிர்க்) இணைவைத்தல் ஆகும்.

ஆனால் ஸுஜூதே தஃழீமை முன் சமூகத்திற்கு ஆகுமாக்கியிருந்தான். இவ்வகையைச் சார்ந்ததுவே யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்யப்பட்ட ஸுஜூதாகும், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அமரர்கள் செய்த ஸுஜூதுமாகும்.

எனினும் உம்மத்தே முஹம்மதிய்யாவுக்கு (நம்மவர்களுக்கு) இந்த ஸுஜூதும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஹறாமாகும். ஷிர்க் ஆகாது. ஹறாம் தான், ஷிர்க் இல்லை என்பதற்கு ஏராளம் ஆதாரங்கள் நிறைந்து காணக் கிடைக்கின்றன.

'கிதாபுல் இஃலாம் பி கவாதிஇல் இஸ்லாம்' என்ற தமது நூலில் மாபெரும் ஷாபிஈ சட்டமேதையான இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கண்ணியம் கருதி (தஃழீம்) ஸுஜூதுச் செய்வது ஹறாம் தான் (ஷிர்க்கில்லை) என்பதை நன்கு தெளிவு செய்கிறார்கள். வரட்டு வாதம் புரிவோர் தம் கண்களை அகலத் திறந்து உற்றுணர்ந்து உண்மை நிலையினை ஐயமறத் தெரிந்து கொள்ளட்டும்.

இதுமட்டுமல்ல. ஷாம் தேசம் சென்ற மஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அஹ்குள்ள மக்கள் தம் தலைவர்களுக்கு சிரவணக்கம்  செய்வது கண்ட அவர்கள், மதீனா திரும்பி வந்த போது  பெருமானாருக்கும் ஸுஜூது செய்தார்கள். உடனே நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்கள் பரஸ்பரம் ஸுஜூது செய்தல் கூடாது. அப்படி நான் ஸுஜூது செய்திட ஏவினால் கணவனுக்கு மனைவி ஸுஜூது செய்வதை ஏவியிருப்பேன்' எனக் கூறினர்.

இப்படி மஆத் ரலியல்லாஹு அன்ஹு ஸுஜூது செய்தது 'ஷிர்க்' (இணை வைத்தல்) என்றிருந்தால் மஆதுக்கு கலிமா சொல்லித் தந்திருப்பர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆனால் அப்படிச் செய்யாததே இவ்வகையான ஸுஜூது ஹறாம் தான் என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆனால் சில மெத்தப்படித்த தகர டப்பாக்கள் இதை 'ஷிர்க்' என்று கூறித்  திரிகின்றனர்.

விஷயங்கள் இப்படி இருக்கும்போது இந்த இரண்டுங்கெட்டான்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் ஸுஜூதையே இரண்டாகப் பிரிப்பதாக அப்பாவித்தனமாக அலறுகின்றனர்.

லாயிலாஹவுக்கும், ஸுஜூதுக்கும் அர்த்தங்களும் வித்தியாசங்களும் புரியாதவர்களும்-தெரியாதவர்களும் பிரசுரங்கள் மூலமாய் தங்கள் ஐயங்களைத் தெளிய முயற்சிப்பது ஆச்சரியமே!

இததோடு முடிந்துவிடவில்லை பிதற்றல். இன்னும் தொடர்கிறது பிரசுத்தில் இவ்வாறு:-

'ஆனால் இந்த இரண்டு வகையான 'ஸுஜூதாயினும், வேறு எந்த வகையான ஸுஜூதாயினும் ஷிர்க் எனும் இணைவைத்தலே எனவும், எந்த இமாம்களும் இதற்கு மாறான வியாக்கியானம் கூறவில்லை என்று சில உலமாக்கள் கூறுகின்றனர்……'

சற்று சிந்தனையை செலுத்தி இங்கே கவனித்துப் பாருங்கள்! எந்த வகையான ஸுஜூதாயினும் சரிதான் அதைச் செய்தவன் (முஷ்ரிக்) இணை வைத்தவனாகிவிடுகிறான். இந்தப் பேரறிவாளர்களது(?) இமாம்களின் கூற்றுப்படி.(மஆதல்லாஹ்)

இன்னும் விந்தையைப் பாருங்கள்!

எல்லா இமாம்களும் ஏகோபித்து இக்கருத்தைக் கூறியது மட்டுமின்றி 'இதற்கு மாறான வியாக்கியானம் கூறவில்லை'யாம்.

தங்களுக்குத்தான் ஸுஜூதைப் பற்றி எதுவும் புரியவில்லையாயின் கண்ணியத்திற்குரிய இமாம்களை ஏன் இதில் இழுத்து அவர்கள் மீது வீண் பழி சுமத்த வேண்டும்? 'புரளி' கிளப்ப வேண்டும்.?

இவர்கள் அறிவை எப்படி எடை போடுவது என்றே தெரியவில்லை?

இத மட்டுமா? இம்மதிகேடர்கள் தங்களின் இப்பிரசுரத்தை மாற்று மதத்தார் கண்டால் என்ன எண்ணுவார்கள்? 'உயர்ந்த மார்க்கம்', ஏக இறைவனையே வணங்கும் மார்க்கம் என்றெல்லாம் கூறிவரும் முஸ்லிமகள், 'அந்த ஏக இறைவனுக்கு சென்னி தாழ்த்தி சிர வணக்கம் புரிவதை இணைவைத்தலாகும்'. எனச் சட்டமியற்றி உள்ளார்களே என்றல்லவா தவறாக எண்ணுவார்கள்?
சுய அறிவை அடகு வைத்து விட்டார்களோ? இம் மே(ல்)தாவிகள்?

அஹ்லெ சுன்னத்-வல் ஜமாஅத்தின் அழகிய திருப்பாதைகளை கொள்கைகளைக் குறித்து கொஞ்சமும் தெரியாதாயினும் நெஞ்சுரம் மிகக் கொண்டு 'ஐயம் தீருங்கள்' என்று மனம் போன போக்கில் எழுதுவதை சற்று எண்ணிப் பாருங்கள்!

அல்லாஹ் (ஜல்லஷானுஹு) வுக்கு செய்யும் வணக்கங்களில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் சிறப்புறு ஸுஜூதை-அது (ஷிர்க்) இணைவைத்தல் என்று கூறும் இவர்களைக் குறித்து நீங்களே தீர்ப்பளியுங்கள்!

ஷைத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

கேப்பையில் நெய் வடிகிறதாம்!

கேட்பவர்கள் நாம் சிந்திக்கத்தானே வேண்டும்!

யா அல்லாஹ்! உனக்கு  செய்யும் ஸுஜூதை ஷிர்க் என்று கூறித் திரியும் இவ்வழி கேடர்களுக்கு ஹிதாயத்தை நேர்வழியை தந்தருள் புரிவாயாக!

ஸுஜூது பற்றிய விளக்கங்கள் வேண்டுவோர் 'ஹுஜ்ஜத்' இதழுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும். ஆசிரியர்.

முற்றும்