ஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்-Odukku Fatwa and Shaikuna

ஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்-Odukku Fatwa and Shaikuna

By Sufi Manzil 0 Comment July 16, 2010

Print Friendly, PDF & Email

ஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்:

காயல்பட்டணம் ஜாவியாவில் மவுத்தானவர்களுக்கு 3ம் நாள் பாத்திஹா, 40ம் நாள் பாத்திஹா, வருட பாத்திஹா ஓதுவது கூடாது, மய்யித்தை அடக்கச் செல்லும் போது அத்துடன் ரொட்டி, பழம், உப்பு போன்ற பொருட்களை சுமந்து சென்று தருமம் செய்வது (ஒடுக்கு) கொடுப்பது கூடாது என்றும் பத்வா ஒன்றை 5-1-1967 ல் வெளியிட்டனர். இந்த பத்வாவை வெளியிட்டவர் மௌலவி சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தின் (ஜாவியா அரபிக் கல்லூரி முதல்வர், காயல்பட்டணம்) அவர்கள். காயல்பட்டணத்தைச் சார்ந்த மௌலவி பாளையம் மஹ்மூது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள், மௌலவி ஐதுரூஸ் ஆலிம் பாகவி அவர்கள் போன்றோர்களும் இதை சரிகண்டு கையொப்பமிட்டுள்ளனர். (இதற்கு மாற்றமாக ஒடுக்கு கூடும் என்றும், 3ம் நாள் பாத்திஹா, 40ம் நாள் பாத்திஹா கூடும் என்று  பத்வா  மஹ்லறா அரபிக் கல்லூரியிலிருந்து வெளிவந்தது. இதை தொகுத்தவர்: மௌலவி எம்.எஸ்.அப்துல் காதிர் பாகவி (சதர் முதர்ரிஸ், மஹ்லறா, காயல்பட்டணம்)அவர்கள்.)

ஒடுக்கு பத்வா பற்றி விவாதிக்கத் தயார் என்று பகிரங்கமாக மஹ்லறத்துல் காதிரிய்யா சபையினரால் வெளியிடப்பட்ட பிரசுரத்தின் பிரதி:

இந்த ஜாவியா மத்ரஸாவின் பத்வாவினால் காயல்பட்டணத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறந்துவிட்ட மாமாவுக்கு 40 வது கத்தம் ஓதப்படுமானால் உனது சகோதரியை (எனது மனைவியை) தலாக் சொல்லிவிடுவேன் என்று ஒருவர் மிரட்ட, அப்படித் தலாக் சொன்னால் எனது மனைவியான உனது சகோதரியை நானும் தலாக் சொல்லி விடுவேன்' என்று 40-வது கத்தம் என் தந்தைக்கு ஓதுவேன் என்று கூறியவர் பதிலுக்குக் கூற ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக செல்வம் படைத்த அந்த வீட்டில் மௌனமாகவே 40 வது கத்தம் ஓதப்பட்டது! இந் நிகழ்ச்சி நமதூர் குறுக்குத் தெருவில்தான் நடைபெற்றது. இக்குழப்பத்தை தீர்க்கவும், மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை உலமாக்கள் கலந்து பேசுவதின் மூலம் தீர்த்து ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்திட 'சன்மார்க்க ஊழியர் குழு' அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் N.M.K. இபுறாஹீம்(மவ்லானா), M.K.S.A. தாஹிர், P.S. முஹிய்யத்தீன், S.M.B. மஹ்மூது ஹுஸைன், T.S.A.ஜிப்ரீ, S.K.M.. சதக்கத்துல்லாஹ், K.M.K. காதிர் சுலைமான் ஆகியோர் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்.

இவர்கள் ஒடுக்கு பற்றிய பிரச்சனைக்கும், தப்லீக் பற்றிய பிரச்சனைக்கும் உலமாக்கள் பேசி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை உலமாக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களிடம் ஒப்பம் பெற்று உலமாக்கள் மாநாட்டைக் கூட்ட இந்த குழு கடந்த 16-11-67 அன்று ஒரு பிரசுரம் வெளியிட்டது. அதன் பின் 17-11-67 ல் மஹ்லறா சென்று ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் அவர்களிடமும், S.M.H. முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் அவர்களிடமும், M.S. முஹம்மது அப்துல் காதிர் பாகவி அவர்களிடமும் ஒப்புதல் பெற்று வந்தனர். பின்னர், 18-11-67 அன்று ஜாமியுல் அஸ்ஹர் சென்று அங்கு இருந்த மௌலவி மு.க. செய்யிது இபுறாகீம் ஆலிம் முப்தி, சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தி (சாவண்ணா ஆலிம்), தை. ஷெய்கு அலி ஆலிம் ஆகிய உலமாக்களிடம் சென்று வந்த நோக்கத்தைக் கூறி கையெழுத்துக் கேட்டனர். அதற்கு அவர்கள் பலவாறு பேசி பிரச்சனையை திசை திருப்பிட முயன்றபோது (ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆலிமுல் கைபு மற்றும் ஸுஜூது பற்றி தப்பும் தவறுமாக பேசியிருப்பதாகவும் அதற்கும் சேர்த்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் செய்யிது ஆலிம் அவர்கள் சொல்ல), சென்றிருந்தவர்கள் நாங்கள் அவர்களிடம் சென்று பேசி ஒப்புதல் வாங்கி வருகிறோம் என்று சொல்லி சென்றார்கள்.

அதன்பின் 19-11-67 ல் கனம் ஸூபி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து விவரம் கூறி அனுமதி கேட்டனர். அதற்கு அவர்களும், நான் பேசியது சரிதான். அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதற்குரிய விளக்கத்தை கலீபா அப்பா தைக்காவில் பேசும்போது நான் விளக்கி பேசிவிட்டேன். இருந்தபோதும், அவர்கள் இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளதான் வேண்டும் என்றால் அதற்கும் நாங்கள் தயார் என்று சொன்னார்கள்.

இவ்விஷயத்தை பட்டறை செய்யது ஆலிம் அவர்களிடம் சொன்னபோது, சரி நீங்கள் சொன்ன இரு பிரச்சனைகளை மட்டும் பேசி விவாதிக்கலாம், நாளை வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். அதன்பிறகு பலமுறை அவர்களை சந்தித்து கேட்டபோதும் அலைக் கழித்தார்களே தவிர அதற்குரிய பதிலை அவர்களிடமிருந்து பெற முடியவில்லை. அதனால் அந்தக் குழுவினர் ஆலிம்களை தனித்தனியாக சந்தித்து ஒப்புதல் பெற முயற்சியை மேற்கொண்டனர். முதலில் மௌலவி ஐதுரூஸ் பாகவி அவர்களையும், புதுப்பள்ளி பேஷ் இமாம் T.A.S. செய்யிது முஹம்மது பாகவி அவர்களையும், மௌலவி மஹ்மூது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களையும் , பிறகு முத்துவாப்பா தைக்காவில் வைத்து T.E.S. ஷெய்க் அலி ஆலிம் அவர்களை சந்தித்து இதுபற்றி கூறி அதற்கு ஒப்புதல் கேட்க அவர்கள் அனைவர்களும் சாக்குபோக்கு சொல்லி இறுதிவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் கொண்ட கொள்கையிலேயே உறுதியாக இருந்தனர். தாங்கள் வெளியிட்ட  (சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான) பத்வா சரியானது என்ற கொள்கையிலேயே இருந்தனர். இறுதியில் இந்த பிரச்சனை பேசி முடிவெடுக்க முடியாமலேயே முடிந்து விட்டது.

ஆக ஊரில் வஹ்ஹாபியக் கருத்துக்களை முதன்முதலில் பரப்பியவர்கள் மௌலவி மு.க.செய்யிது ஆலிம் முப்தியும், அவரின் அடிவருடியாக செயல்பட்ட சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தி போன்றவர்களும் அவர்களின் சகாக்களும்தான்  என்று தெரிகிறது.

சுன்னத் ஜமாஅத்திற்கு மாறுபட்ட கொள்கை கொண்ட பிரச்சனையாக இருந்தால் அதைப் பற்றி விவாதித்து அதற்கு விளக்கம் அளிக்க ஷெய்குனா அவர்கள் எக்காலத்திலும் பின்வாங்கியதில்லை. எதற்கும் தயங்கியதில்லை என்பது 'காயல்பட்டினத்தில் உலமாக்கள் மாநாட்டைக் கூட்டிவைக்க சன்மார்க்க ஊழியர் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளக்கம்' என்ற தலைப்பில் 12-01-1968 ல் M.K.S.A. தாஹிர் (அமைப்பாளர், சன்மார்கக் ஊழியர் குழு) என்பவரால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஆணித்தரமாக தெரிவிக்கிறது.

Print