உணவு உண்பதின் சட்டங்கள்-Islamic law of Eating Foods

உணவு உண்பதின் சட்டங்கள்-Islamic law of Eating Foods

By Sufi Manzil 0 Comment August 24, 2011

Print Friendly, PDF & Email

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்.


இஸ்லாம் நமது வாழ்க்கை முறை சிறப்பாக அமைய ஒழுக்க முறைகளைக் கற்றுத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நல்லொழுக்கங்களை நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அதை நமது இமாம்கள், புகாஹாக்கள் சட்டங்களாக வகுத்து தந்திருக்கிறார்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! -(அல் குர்ஆன் 2:172)
 

يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். -அல்குர்ஆன் 7:31

إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.-அல்குர்ஆன் 17:27

சாப்பிடுவதில் பர்ளுகள் நான்கு, சுன்னத்துக்கள் நான்கு, ஒழுக்கங்கள் நான்கு உள்ளன.

பர்ளுகள்:

1. பிஸ்மில்லாஹ் சொல்வது. 2. சாப்பிடுவது ஹலால் என்பதை அறிந்து விளங்குவது. 3. அதனைப் பொருந்திக் கொள்வது. 4. நன்றி செலுத்துவது. இது இஹ்யா உலூமித்தீனில் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். பிஸ்மி சொல்வது ஸூபியாக்களிடத்தில் பர்ளும், மற்றவர்களிடத்தில் சுன்னத்துமாகும்.

சுன்னத்துக்கள்:

1. சாப்பிடும் முன் இரு கைகளையும் கழுகுதல். 2. வலது காலை நட்டு வைத்து இடது காலின் மீது உட்காருதல். 3. மூன்று விரல்களால் சாப்பிடுதல் (இது ரொட்டி சாப்பிடும்போதுதான்). 4. ஒரு கவளத்திற்கும் மற்றொரு கவளத்திற்குமிடையே பொறுமையைக் கடைப்பிடித்தல் – அவசர அவசரமாக சாப்பிடாமலிருத்தல்.

ஒழுக்கங்கள்:

1. தட்டில் தனக்கு முன்னாலுள்ளதை சாப்பிடுதல். 2. சிறு சிறு பிடியாக பிடித்து சாப்பிடுதல். 3. நன்றாக மென்று சாப்பிடுதல். 4. பலர் சாப்பிடும்போது அடுத்தவர் பாத்திரத்தைப் பார்க்காமலிருத்தல்.

உமர் பின் அபீ ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது 'நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.- நூல்: புகாரி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்'

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'பிஸ்மில்லாஹ்' கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)- நூல்: முஸ்லிம.;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் 'பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி' என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா), நூல்: திர்மிதி

பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்.

மேலும் இதிலிருந்து சில ஒழுக்கங்களாவன: சாப்பிடும் முன், பின் ஒரு கைகளையும், வாயையும் கழுவுதல், சிறிதளவு உப்பைச் சாப்பிடுதல், ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்று இரைந்து சொல்லுதல், ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்து விட்டால் நினைவு வந்தவுடன் இடையில் பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிறஹு என்று கூறுவது சுன்னத்து.

அடுத்தவருக்கும் உணர்வூட்டுவதற்காக பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு கூறுவது முஸ்தஹப்பாகும். விருந்து மஜ்லிஸுகளில் இதனால்தான் வீட்டுக்காரர் பிஸ்மில்லாஹ் என்று சப்தமிட்டுக் கூறுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், '(ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்' என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலியல்லாஹு அன்ஹு) – நூல்: புகாரி , முஸ்லிம்

சாய்ந்து கொண்டு, கையை ஊன்றிக் கொண்டு சாப்பிடுவது மக்ரூஹ். பழங்களை சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவதும், இறைச்சியை அதன் பிறகும் சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருட்களைக் கடைசியிலும் சாப்பிடுதல் அவசியம். ஆரம்பத்தில் ஆணம் படாமல் மூன்று பிடி உணவை சாப்பிடுவதும், அதிகமான சூட்டுடன் சாப்பிடாமலிருப்பதும், வாயினால் உணவை ஊதாமலிருப்பதும் விரும்பப்பட்ட செயல்களாகும்.

அல்லாஹ் குர்ஆனில சூரத்து வாக்கிஆவில்,

وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ،  وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ

'(சொர்க்கவாசிகளாகிய) இவர்கள் (பிரியப்பட்டு) தேர்ந்தெடுக்கக் கூடிய கனி(வர்க்கங்)களையும், விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (அந்த இளைஞர்கள் சுவனபதியில் தாங்கித் திரிவர்)' (56:20,21) என்று பழங்களை முதலில் குறிப்பிட்டுள்ளதால் பழங்களை சாப்பாட்டிற்கு முன் சாப்பிட வேண்டும்.

பலர் கூட்டாக சாப்பிடும்போது சஹனில் தனக்கு முன்பாக இருக்கும் உணவை எடுத்துச் சாப்பிடுவது சுன்னத்து. உடனிருப்பவருடைய பகுதியில் கையை போடுவதும், இறைச்சியைக் கத்தியினால் வெட்டி சாப்பிடுவதும் மக்ரூஹ்.

'உங்களில் ஒருவருக்கு கவள வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: முஸ்லிம்

உணவை அமைதியாக சுவைத்து மென்று விழுங்கிய பின் மறுபிடியை எடுப்பதும், உடனிருந்து சாப்பிடுபவர்களை கூர்ந்து பார்க்காமல் இருப்பதும், விரிப்பில் விழுந்த உணவை அது சுத்தமாக இருப்பின் எடுத்துச் சாப்பிடுவதும், கடைசியில் தட்டை வழித்துச் சாப்பிடுவதும், விரல்களை நன்றாக சூப்புவதும், விருந்தளிப்பவர் விருந்தாளிகளை நன்றாக சாப்பிடச் சொல்வதும் சுன்னத்துகளாகும்.

(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை சூப்புமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: முஸ்லிம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டால் விரல்கள் சிவந்து போகும் அளவிற்கு அவற்றை சூப்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கையை சூப்புவதினால் விரல்களில் உள்ள ஒரு தன்மை நமது உணவை செமிக்கச் செய்ய வைக்கிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உணவு விரிப்பில் சிந்தியதை (அது சுத்தமாயிருந்தால்) எடுத்துச் சாப்பிட்டு பல் இடுக்கில் உள்ளதை எடுத்தெறிந்து, பல்குத்தும் குச்சி, மிஸ்வாக்கு ஆகியவற்றை உபயோகித்தால் கண்வலி, காதுவலி, வயிற்றுவலி ஆகிய நோய்களை விட்டும் அச்சமற்றிடுவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

உணவுப் பொருட்களை அசுத்தமான இடத்திலோ அருவருப்பான இடத்திலோ போடுவதும், நிந்தனை செய்வதும் 'சீ' என்று சொல்வதும் கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் அதற்குரிய துஆவை ஓத வேண்டும்.

'அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்'

பொருள்: 'எனது எவ்வித சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்' என யாரேனும் கூறினால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

(அபூதாவூது, திர்மிதி)

உணவு சாப்பிடுவதன் மூலமாக வணக்கங்கள் செய்வதையும், மனைவி மக்களுக்கு உணவளிக்கச் சக்தி பெறுவதையும் நாட வேண்டுமே தவிர பாவங்கள் செய்யச் சக்தி பெறுவதை நாடுவது ஹராம்.

பாத்திரத்தை வழித்துச் சாப்பிடுவதும், விபச்சாரம் செய்யாமலிருப்பதும் செல்வ நிலையை உண்டாக்கும் என்று நபிமொழி உள்ளது.

மாட்டை போல வாயை மூடிக் கொண்டு சாப்பிட வேண்டாம். கூடியிருந்து ஆகுமான பேச்சுக்களை பேசி சாப்பிடவும் என்று ஹதீதில் கூறப்பட்டுள்ளது. தனிமையாக சாப்பிட்டாலும் அல்ஹம்துலில்லாஹ் நன்றாக இருக்கிறது என்று ஏதேனும் ஒன்றையாவது பேசுவது சுன்னத்தாகும்.

மனிதர்கள் சாப்பிடும்போது காறுவதும், சீறுவதும், அருவருப்பான பேச்சைப் பேசுவதும், தட்டையில் கையை உதறுவதும், ரொட்டி போன்றவற்றில் கையை துடைப்பதும் மக்ரூஹ் ஆகும்.

குழம்புகளில் தலைமையானது காடியும், கீரையுமாகும் என்று ஹதீதில் கூறப்பட்டுள்ளதால் ஊறுகாயையும், கீரையையும் முற்படுத்த வேண்டும்.

நபிமார்களின் குழம்பு கீரை, அரசர்களின் குழம்பு இறைச்சி என்றும்,

கீரையைக் கொண்டு உங்கள் உணவுகளை அலங்கரியுங்கள் என்றும் ஹதீதில் வந்திருக்கிறது.

மூடியிருக்கும்படியான கேத்தல், கூஜா போன்றவற்றிலிருந்து அப்படியே தண்ணீரைக் குடிக்கக் கூடாது. தண்ணீரைப் பார்த்து முதலில் கொஞ்சமாக வாயில் வைத்துப் பார்த்துக் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்'

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு 'அதிலே கொழுப்பு இருக்கிறது' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி

பாத்திரத்தில் மூச்சும், ஏப்பமும் விடாமல் குடிக்க வேண்டும். ஒரே மூச்சில் குடிக்காமல் மூன்று தடவை வாயை எடுத்து எடுத்து மூன்று மூச்சில் குடிக்க வேண்டும். முதலில் வாயை வைக்கும்போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்லி குடித்து வாயை எடுத்தவுடன் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதும், இரண்டாவது தடவை ரப்பில் ஆலமீன் என்று சொல்வதும், மூன்றாவது தடவை அர்ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்வதும் சுன்னத்து.

வெள்ளி, தங்க பாத்திரங்களில் உண்ணுவதையும்,குடிப்பதையும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தடுத்துள்ளார்கள்.

மேலும் முதல் மிடறு குடித்து முடித்தவுடன் சூரத்துல் பாத்திஹாவின் ஆரம்பத்திலிருந்து யவ்மித்தீன் வரையிலும், இரண்டாவது மிடறு குடித்தவுடன் இய்யாகாவிலிருந்து நஸ்தயீன் வரையிலும் மூன்றாவது மிடறு குடித்து முடித்தவுடன் இஹ்தினா விலிருந்து கடைசி வரையும் ஓதிக் குடித்தால் பல்வலியையும், மற்றுமுள்ள பல நோய்களையும் அல்லாஹ் நீக்கி விடுவான் என்று கூறப்பட்டுள்ளது.

சாப்பிட்ட பாத்திரத்தில் தேவையில்லாமல் குடிப்பதும், உடைந்த பாத்திரத்தில் குடிப்பதும், குடம், பானை போன்ற பாத்திரங்களில் மிருகத்தைப் போன்று வாயை வைத்துக் குடிப்பதும், வாயால் ஊதுவதும் மக்ரூஹ் ஆகும்.

நின்று கொண்டு சாப்பிடுவதும், குடிப்பதும் விரும்பத்தகாத செயல்களாகும். நின்று தண்ணீர் குடிப்பதால் குடல் இறக்கம் போன்ற நோய்கள் ஏற்படும் என்று விஞ்ஞான ரீதியாக அறியப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில ஒழுங்கு முறைகள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு 'வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்'

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்.'

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: முஸ்லிம் , திர்மிதி

அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.'
நூல்: புகாரி

'உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது'

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி