Imam Muhammad Bakir-இமாம் முஹம்மது பாக்கிர் ரலியல்லாஹு அன்ஹு.

Imam Muhammad Bakir-இமாம் முஹம்மது பாக்கிர் ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment April 7, 2010

Print Friendly, PDF & Email

இமாம் முஹம்மது பாக்கிர் ரலியல்லாஹு அன்ஹு

        இமாம் ஹஸன் ரலியல்லாஹு அவர்களின் பேத்தியான உம்மு அப்துல்லாஹ் என்பவர்களுக்கும், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனான இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் மகனாக கி.பி. 676, டிசம்பர்17 (ஹிஜ்ரி 57, ஸஃபர் பிறை3) செவ்வாய்க் கிழமை மதனாவில் பிறந்தார்கள். ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலமானபோது இவர்களுக்கு வயது 3. முஹம்மது என்ற இயற்பெயர் உடைய இவர்கள் அறிவை கூறுபடுத்தி பிளந்து ஆராய்ச்சி செய்ததினால் 'அல்-பாக்கிர்' எனும் பெயர் பெற்றனர் என்றும் அதிகமாக(தபரக்கான) அறிவைப் பெற்றிருந்ததினால் இப் பெயர் பெற்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஹிஜ்ரி 106 ம் ஆண்டு தம் மகன் இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களுடன் ஹஜ் செய்ய மக்கா வந்திருந்த போது உமையா கலீபா ஹிஷாமும் அங்கு வந்திருந்தார். ஆனால் அவ்விருவரையும் கலீபா சந்திக்காமல் திமிஷ்க் சென்று அவ்விருவரையும் வற்புறுத்தி தம்மிடம் அனுப்பி வைக்குமாறு மதீனா ஆளுநருக்கு கடிதம் மூலம் வேண்டினார். அதன்படி அங்கு சென்ற அவ்விருவரையும் 3 நாட்கள் வரை கலீபா சந்திக்காமல் 4ம் நாள் சந்தித்தபோது, இவர்களை ஒரு குறியை நோக்கி அம்பு எய்துமாறு கூற, 'நான் இளைஞனுமல்ல. எனக்கு அம்பு எய்தவும் தெரியாது' என்று இவர்கள் கூற, அவ்விதமாயின் நீர் உயிரோடிருந்து என்ன பயன்?' என்று கூறி இவரின் தலையை நோக்கி அம்பு எய்து கொல்லுமாறு தம் அதிகாரிகளிடம் வேண்டினார் கலீபா. உடனே இவர்கள் அந்த அதிகாரியின் கையிலிருந்தஅம்பைப் பிடுங்கி, அவர் சொன்ன குறியை நோக்கி ஒன்று, இரண்டு, மூன்று என்று பல அம்புகள் சரியாக எய்தினர். இது கண்டு வியப்புற்ற கலீபா, 'நான் உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன் என்று கூறி, தம் ஆசனத்தில் அவர்களை அமர்த்தி,'நாம் இருவரும் ஒரே குலத்தில் பிறந்தவர்கள். அவ்வாறிருக்க நமக்குள் ஏன் இந்த பகைமை? என்றார்.

     'ஆம்! நம்மிருவரையும் இறைவன் ஒரே குலத்தில்தான் உதிக்கச் செய்தான். நம்மிருவருக்கும் இருவேறு அலுவல்களைத் தந்துள்ளான். தன் இரகசியங்களை எங்களிடமே ஒப்படைத்துள்ளான்' என்றார்கள் இமாம் அவர்கள். பின்னர் இவர்களிடம் பல்வேறு மார்க்க வினாக்களை கேட்டு தெளிவு பெற்ற ஹிஷாம், ' தங்களுக்கு என்னால் ஆக வேண்டியது ஏதேனுமிருப்பின் கூறுங்கள்' என்று வேண்டினார். 'எங்களின் ஊரிலேயே எங்களை அறவாழ்வு வாழ அனுமதியுங்கள். வீணாக எங்களுக்கு தொந்தரவு தராதீர்கள்' என்று கூறினார்கள் இமாம் அவர்கள்.
     

  திமிஷ்கிலிருந்து திரும்பி வரும்போது, ஆண்டுக்கொருமுறை தரிசனம் தரும் கிறித்துவத் துறவி ஒருவரை இவர்கள் சந்தித்தார்கள். துறவியும் அவர்களை விளங்கிக் கொண்டபின், அவர்களை மடக்கப் பல கேளள்விகள் கேட்டார்கள். அந்த கேள்விகளும் அதற்களித்த பதில்களும் வருமாறு:-

துறவி:- சுவனவாசிகள் உணவுண்டபோதினும் அவர்களிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளியாவதில்லை என்று கூறுகிறார்களே! அது எங்கனம்?

இமாம்:- அன்னையின் கருவிலிருக்கும் குழந்தை அன்னை உண்ணும் உணவின் சத்தை உட்கொண்ட போதினும் அதிலிருந்து கழிவுப் பொருட்கள் எவ்வாறு வெளியாவதில்லையோ! அவ்வாறு.

துறவி:- சுவனவாசிகள் சுவனத்துக் கனிகளை உண்டபோதினும் அது குறைவதில்லை என்று கூறுகிறார்களே! அது எவ்வாறு?

இமாம்:- ஒரு விளக்கால் கோடிகோடி விளக்குகளை ஏற்றிய போதினும் முதல் விளக்கின் ஒளி குறையவா செய்கின்றது?

துறவி:- ஒரு பெண் ஒரே சூலில் ஒரே பொழுதில் இரண்டு ஆண் மக்களை ஈன்றெடுத்தாள். இருவரும் ஒரே நேரத்தில் இறப்பெய்தினர். ஆனால் இப்பொழுது ஒருவருக்கு வயது 150. மற்றவருக்கு வயது 50. என்கிறார்கள். எவ்வாறு பொருந்தும்?

இமாம்:- நீங்கள் குறிப்பிட்ட உடன் பிறந்தார் அஜீஸ், உஜைர் என்பவர்கள். இருவரும் 30 வயது வரை வாழ்ந்தனர். பின்னர் இறைவன் உஜைரை தன்பால் அழைத்து நூறு ஆண்டுகளுக்குப் பின் அவரை உயிர்ப்பித்தான். பின்னர் அவ்விருவரும் 20 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்து ஒரே நாளில் இறப்பெய்தினர். எனNவு அஜீஸுக்கு வயது 150. உஜைருக்கு வயது 50 என்றாகிறது.

இப்பதில்களைக் கேட்ட துறவி இமாம் அவர்களின் கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார். இவர்கள் கிறித்துவ துறவியை சந்தித்ததை அறிந்த கலீபா, இவர்கள் மதம் மாறிவிட்டார்கள் என்றும் இவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் நாடெங்கும் பிரகடனப்படுத்திவிட்டார். மக்கள் இவர்களை மார்க்க விரோதியாகவே பார்த்தனர். அந்நிலையில் ஒரு முதியவர் தோன்றி, இமாhம் அவர்களைப் புறக்கணிப்பவர்கள் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை புறக்கணித்தவர்கள் அடைந்த கதியே அடைவர்' என்று கூற மக்கள் அறிவுத் தெளிவு பெற்று இவர்களை ஆதரித்தனர்.

இவர்கள் ஹுமைமா என்ற இடத்தில் ஹிஜ்ரி114 துல்ஹஜ் பிறை 7 திங்கள் இரவு தங்கள் 57வது வயதில் மறைந்தார்கள். இவர்கள் உடல் மதீனா கொண்டு வரப்பட்டு ஜன்னத்துல் பகீயில் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கப்பட்டது. கலீபா ஹிஷாம் இவர்களை நஞ்சிட்டுக் கொன்றார் என்றும் கூறப்படுகிறது.