Abubacker Sibli-அபூபக்கர் ஷிப்லி

Abubacker Sibli-அபூபக்கர் ஷிப்லி

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

அபூ பக்ர் ஷிப்லி ரலில்லாஹு அன்ஹு.

 ஷிப்லா என்ற ஊரிலிருந்து பிழைப்பின் பொருட்டு ஸாமிரா நகரம் வந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் கலீபாவின் அரண்மனையில் பெரும் பதவி வகித்து வந்தார்.ஹிஜ்ரி 247 ஆம் ஆண்டு அவருக்கு பிறந்த மகனுக்கு அபூபக்கர் என்று பெயரிட்டு, சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அவர் இளம் வயதில் திருக் குர்ஆனை ஓதி முடித்து, இலக்கணம் பயில்வதற்காக இலக்கணப் பள்ளிக்குச் சென்றார். அங்கு ஆசிரியர், ஜைது அம்ரைஅடித்தான்' என்று பாடத்தை துவக்கிய போது, ஜைது அம்ரை உண்மையில் அடித்தானா? என்று அபுபக்கர் அவர்கள் கேட்டனர். ஆசிரியர் அவர்கள், இல்லை. மேற்கோளுக்காக கூறுகிறேன்' என்று கூறினார். முதலிலேயே பொய்யைக் கொண்டு துவங்கும் இக் கல்வி எனக்கு வேண்டாம் என்று சொல்லி அப் பள்ளியை விட்டு வெளியேறினார்.

தம் மூதாதையர் பின்பற்றி வந்த மாலிக் மத்ஹபை பின்பற்றி வந்த அவர், அந்த மத்ஹபின் மூல நூலான 'முஅத்தா'வை ஓதத்துவங்கி, அதனை விரைவில் மனனம் செய்து விட்டார். பின்னர் மார்க்க சட்டதிட்டக் கல்வியை பல்லாண்டு பயின்ற பின், அவர்களுக்கு இறைஞானம் பற்றி அறிய பேராவல் ஏற்பட்டது. பல்வேறு ஆசிரியர்களிடம் சென்று அதனைத் தமக்கு போதித்து தருமாறு வேண்ட, அவர்களெல்லாம் அதுபற்றி தமக்கு ஏதும் தெரியாத என்று கையை விரித்துவிட்டனர். அது கண்டு மிகவும் ஏமாற்றம் அடைந்த அவர்கள் அரசாங்கத் துறையில் புகுந்து,தமாவந்த் மாநில ஆளுநராக பணியாற்றி வந்தார்.

ஆளுநராக பணியாற்றி வரும்காலை, கலீபாவிடமிருந்து தம்மை சந்திக்க வருமாறு அழைப்பு வந்ததையடுத்து, தம்முடன் ரை மாநில ஆளுநரையும் மற்றும் பிரமுகர்களையும் அழைத்துக் கொண்டு பக்தாது புறப்பட்டார். கலீபாவின் அரண்மனையை சென்றடைந்ததும், தாம் கொண்டு வந்த காணிக்கைகளை அவருக்கு அளித்து கலீபாவின் நற்மதிப்பையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு திரும்பும்போது, ரை மாநில ஆளுநருக்கு தும்மல் ஏற்பட்டு சளி வெளிபட்டுவிட்டது. அங்கு அதை துடைத்தெடுப்பதற்கு துணி ஏதும் இல்லாததால், கலீபா அவர்கள் தந்த விலையுயர்ந்த துணியைக் கொண்டு அதை துடைத்தார். இதனை எவனோ ஒருவன் கலீபாவிடம் சொல்ல, கலீபாவுக்கோ ஏற்பட்ட சினத்திற்கு அளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதினார். எனவே அவரை அழைத்து சவுக்கால் அடித்து பதவியிலிருந்து நீக்க உத்தரவிட்டார். அடுத்தகணமே அது நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்ட அபுபக்கர் அவர்களுக்கு வருத்தமே ஏற்பட்டது. கலீபா ஒருவருக்கு அளித்த விலையுயர்ந்த ஆடையை, அவர் கண்ணியக் குறைவாய் பயன்படுத்தியதற்கு அவருக்கு இத்தண்டனை என்றால், இறைவன் தமக்களித்த விலைமதிக்கதக்க ஆடையாகிய வாழ்வு என்பதைக் கண்ணியக் குறைவாகத் தாம் பயன்படுத்தின், தமக்கு எத்தகைய தண்டனை இறைவனால் வழங்கப்படும என்று அவர் எண்ணினார். எண்ணியதும் உடலெல்லாம் அதிர்ந்தது. உடனே அவர் கலீபாவின் முன் சென்று தம் பதவியைத் துறந்து வெளியேறினார். இதிலிருந்து அவருடைய வாழ்வில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது.

மாநில ஆளுநர் பதவி துறந்த அபூபக்கர் துலாப் பின் ஜஃதர் அவர்கள், இறைஞானக் கல்வியில் தேர்ச்சி பெற்ற கைருந் நஸ்ஸாஜ் என்பவரை அணுகி தமக்கு இறைஞானக் கல்வியை போதிக்க வேண்டினர். அவர்கள், அபுபக்கர் அவர்களை ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அங்கு வருகை தந்த அவர்களின் இனிய பேச்சால் முகம் மலர்ந்த ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அவர்கள் அவர்களுக்கு ஆன்மீக பயிற்சியளிக்க முடிவெடுத்தனர்.  

ஆரம்பமாக  அவர்களை ஓராண்டு காலம் கடைத் தெருவில் கற்பூரம் விற்று வருமாறு பணித்தனர். அதன்படி செய்துவிட்டு ஓராண்டு கழித்து வருகை தந்த அவர்களிடம், ஒரு தர்வேஷாகி ஓராண்டு காலம் தெ?ருத் தெருவாக அலைந்து பிச்சை எடுக்கச் சொன்னார்கள். ஒருவர் கூட அவர்களுக்கு பிச்சையிட முன்வரவில்லை. அதன்பின் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அவர்களை சந்தித்த அவர்கள் நடந்த சம்பவங்களை சொன்னார்கள். அதற்கு ஜுனைது அவர்கள், நான் உங்களை பிச்சை எடுக்கச் சொன்னது, உம்மை பரிபக்குவபடுத்துவதற்காகவேயன்றி ஆதாயம் பெற அல்ல என்று கூறி, 'நீர் முன்பு தமாவந்த் ஆளுநராக பணியாற்றி வந்திருக்கிறீர். அச்சமயத்தில் உம்மை அறியாமல் எத்தனையோ அநீதிகள் நடந்திருக்கலாம். எனவே அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவர்களிடம் நற் சான்று பெற்றுவிட்டு வாரும் என்று கூறினர். அவ்வாறே அவர்கள்அங்கு சென்று ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் ஏறி இறங்கி,அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கேட்டு கெஞ்சி அழுதனர். மக்களுக்கு தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.அவர்களும் மன்னிப்பு வழங்கினர். இவ்வலுவல்களை முடிப்பதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அதன்பின் ஜுனைத் அவர்களை சந்தித்தனர். அவர்கள், இன்னும் உம் உள்ளத்தில் அகங்காரம் இருப்பதைக் காண்கிறேன். எனவே அதைக் கிள்ளியெறிய இன்னும் ஓராண்டு பிச்சை எடும் என்று கூறினர். அடுத்த கணமே ஒன்றும் கூறாது பிச்சையெடுக்க சென்றுவிட்டனர். ஷிப்லி அவர்களின் மாண்பினை உணர்ந்த மக்கள் அவர்களுக்கு இ;ப்போது தாராளமாக பிச்சை வழங்கினர். அவற்றை தம் ஆசானின் கால்களில் வைத்தபோது அதை அவர்கள் ஏழைகளுக்கு அறம் செய்துவிட்டனர். ஷிப்லி அவர்களுக்கோ அவற்றிலிருந்து அணுவத்தனையும் கொடுப்பதில்லை.எனவே பட்டினியும் பசியுமாக நாட்களை கழித்தனர்.

இவ்வாறு ஓராண்டு கழிந்தபின் நாம் உங்களுக்கு தீட்சை வழங்குகிறோம். எனினும் நீர் இன்னும் ஓராண்டு துறவிகளுக்கு ஊழியம் புரிய Nவுண்டும் என்று ஜுனைத் அவர்கள் கூறினார்கள். அவ்விதம் செய்து முடித்தபின் ஷிப்லி அவர்கள் தம் ஆசான் முன்வந்தமர்ந்து இன்னும் என்ன செய்யNவுண்டும்? சொல்லுங்கள் செய்ய காத்திருக்கிறேன். என்றனர். அவர்களை ஏறஇறங்கப் பார்த்த ஜுனைத் அவர்கள், 'அபூபக்கரே! இப்பொழுது நீர் உம்மை எவ்வாறு மதிக்கின்றீர்? என்று வினவினர். 'நான் என்னை இறைவனின் படைப்புக்களில் மிகவும் தாழ்ந்தவனாக நினைக்கிறேன். என்று ஷிப்லி அவர்கள் கூறினார்கள். இச்சொல் ஜுனைத் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கnhடுத்தது. உடனே அவர்களுக்கு 'தீட்சை' வழங்கினர். இதன்பின் பல்லாண்டுகள் ஜுனைத் அவர்கள் காலடியில் அமர்ந்து ஆன்மீகக் கல்வி பயின்றனர்.

இச்சமயத்தில் மாணவர்கள்,ஷிப்லி அவர்களின் வணக்கம்,நேர்மை ஆகியவைப் பற்றி பெரிதும் புகழ்ந்துரைத்தபோது, 'நீங்கள் கூறுவது தவறு. ஷிப்லி மார்க்கத்திற்கு முரணான கொள்கையுடையவர். இதனை நீங்கள் அறிமாட்டீர்கள். நான் அறிவேன். அவரை இக்கணமே இவ்விடத்தைவிட்டு அப்புறப்படுத்துங்கள்;' என்று வெஞ்சினத்துடன் கூறினர். அவ்விதமே அவர்கள் அப்புறப்படத்தப்பட்டார்கள்.

சிறிது நோரம் கழித்து மாணவர்களை ஒருங்கழைத்த ஜுனைத் அவர்கள், 'நான் ஷிப்லியை ஏன் வெளியேற்றினேன் தெரியுமா? நீங்கள் அவர் முன்னால் அவரை புகழ்ந்துரைத்து அவரை கொன்றீர்கள். அக்கணத்தில் அவரை இழித்துரைத்து வெளிNயு அனுப்பாவிடின், 'தான்' என்ற மமதை ஏற்பட்டு அவர்கள் படுகுழியில் விழுந்திருப்பார். எனவே அதிலிருந்து காப்பாற்றவே அவ்வாறு செய்தேன்' என்றார்கள்.

இறைக் காதலில் மூழ்கி திளைத்த ஷிப்லி அவர்கள், சில சமயம் தன்னுணர்வு அற்றவர்களாகயிருந்து மேடை மீது ஏறிநின்று இறைஞான ரகசியங்களை மக்கள் மத்தியில் பகிரங்கமாக எடுத்துரைக்கலானார்கள்.

ஜுனைத் அவர்கள், தம் மாணவர் ஷிப்லி அவர்கள் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள். 'ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மணிமகுடம் உண்டு. உங்களுக்கு மணிமகுடம் போன்றவர் ஷிப்லி அவர்கள்' என்று அவர்கள் மீது புகழ்ந்துரைத்தார்கள். மேலும், நீங்கள் ஒருவர் மற்றொருவரைப் பார்க்கும் கண்களுடன், அவரையும் பார்க்காதீர்கள்.காரணம் அவர் அல்லாஹ்வின் கண்களைக் கொண்டு பார்க்கிறார்' என்று புகழுரை பகர்ந்தார்கள்.

தம் ஆசான் உயிருடன் இருக்கும்போது எத்துணை மதிப்பு, மரியாதை வைத்திருந்தார்களோ அத்தனை மரியாதை, மதிப்பு அவர்கள் மறைந்த பின்னும் வைத்திருந்தார்கள் ஷிப்லி அவர்கள். ஒருநாள் அவர்கள் தம் ஆசானின் அடக்கவிடத்தில் கைகட்டி தலைகுனிந்து மரியாதையுடன் நின்றிருக்கும்போது ஒருவர் வந்து மார்க்கம் பற்றிய வினாவை அவர்களிடம் வினவினார். அவர்கள் அதற்கு பதிலுரைக்காமல், என் ஆசான் உயிருடன் இருந்தால் நான் எப்படியிருப்பேனோ அவ்வாறே இப்பொழுதும் உள்ளேன். எனவே அவர்கள் முன் பதிலுரைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்கள்.  

இரவில் உறங்காது விழித்திருந்து இறைவனை வணங்குவதற்காக, தம் கண்ணில் உப்புப் பொடியைத் தூவிக் கொள்வார்கள். நப்ஃஸை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தினார்கள். இறைக்காதலில் அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டனர். தாம் உடுத்தியிருக்கும் வேட்டியை கிழித்துக் கnhண்டு, அவர்கள் தலைவிரிகோலமாக ஏதாவது வாயில் வந்தவண்ணம் பிதற்றிக் கொண்டு திரிவதைக் கண்டு சிறுவர்கள் அவர்களை பைத்தியக்காரரென்று கல்லால் அடித்'தனர். அவர்கள் கால்கள் இரத்தம் சிந்தின. சிலசமயம் கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு  தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

ஒருநாள் இப்னு முஜாயித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மாணவர்களுடன் பள்ளியில் அமர்ந்திருந்த பொழுது, அங்கு ஷிப்லீ அவர்கள் வரவே, எழுந்து நி;ன்றார்கள். அவர்களின் மாணவர்களில் ஒருவர். 'அமைச்சர் அலி இப்னு ஈஸா அவர்கள் வந்தபோது கூட எழுந்திருக்கவில்லையே! தாங்கள் ஷிப்லீ அவர்கள் வந்தபோது எழுந்து நின்றீர்கள்' என்று தம் ஆசிரியரிடம் வினவினார். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மதிக்கப்படும் ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டாமா? நேற்றிரவு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் கனவில் தோற்றம் வழங்கி, 'சுவனவாசிகளில் ஒருவர் நாளை உம்மிடம் வருகிறார்' என்று சொல்லிவிட்டு மறைந்தனர். அவர்கள் கூறியவாறு ஷிப்லீ அவர்களே வந்தனர். எனவே நான் அவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செய்தேன்' என்று கூறினர்.

இதற்கு இரண்டு நாட்களுக்குப்பின்னர் மீண்டும் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு முஜாயித் அவர்களின் கனவில் தோன்றி, 'சுவனவாசிகளில் ஒருவரை நீர் கவுரவித்தீர் அதன்காரணமாக இறைவன் உம்மையும் சுவனவாசிகளில் ஒருவராக ஆக்கியுள்ளான்' என்று கூறினர். அப்போது இப்னு ஜியாத் அவர்கள்.,ஷிப்லி அவர்கள் சுவனவாசியாக காரணம் என்ன? என்று வினவினர். அவர் எண்பது ஆண்டுகளாக ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் திக்ரு, ஸலவாத் ஆகியவை ஓதியபின், ''லகத்ஜாஅக்கும் ரஸூலுன் மின் அன்ஃபுஸிக்கும் அஜீஜுன் அலைஹி மா அனித்தும் ஹரீசுன் அலைக்கும் பில் முஃமினீன ரவூபுன் ரஹீம். ஃப இன்த வல்லவ் குல் ஹஸ்பியல்லாஹு லாஇலாஹ இல்லாஹுவ அலைஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம' என்ற திருவசனங்களை ஓதிவருவதனாலாகும் என்று அருள்மொழி பகர்ந்தனர்.

ஒருநாள் அவர்கள் பள்ளியில் அமர்ந்து அல்லாஹ், அல்லாஹ் என்று இறைவனை தியானித்துக் கொண்டிருக்கும்போது அண்மையிலிருந்த இளவல் ஒருவர் அவர்களை நோக்p, 'லா இலாஹ இல்லல்லாஹு என்று சொல்லுங்கள் என்று கூறியபோது, 'நான் அவனுக்குப் பதிலாக வேறொருவனைத் தேடமாட்டேன்' என்றார்கள். அதுகேட்டு வியப்புற்ற இளவல் இன்னும் கூறுங்கள் என்று கூறியபோது, 'லாஇலாஹ' என்று கூறும்போதே என் மூச்சு வெளியேறி நான் இறந்துவிடின் நான் இறைவனை மறந்த நிலையில் காஃபிராகி இறப்பெய்த நேரிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவ்விதம் கூறாது இவ்விதம் கூறிக் கொண்டுள்ளேன்' என்று மறுமொழி பகர்ந்தார்கள்.

      ஆன்மீகப் பாதையில் தங்கள் வழிகாட்டி யார்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர்கள் 'நாய்' என்றனர். அவர் திடுக்குற்று மீண்டும் கேட்டார். அவர்கள் மீண்டும் அதே பதிலைக் கூறி, நான் ஒருநாள் குளக்கரை ஓரமாக சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாய் தாகத்துடன் ஆங்கு நின்று கொண்டிருந்தது. அது நீர் அருந்த தண்ணீர் அருகே தன் வாயைக் கொண்டு சென்றதும், தண்ணீருக்குள் ஒரு நாய் நிற்பதைக் கண்டு அது தன் பிரதிபலிப்பு என்பதை அறியாது திடுக்குற்று தன் வாயை எடுத்துக் கொண்டது. இவ்வாறு அது தண்ணீர் அருகே வாயைக் கொண்டு செல்வதும் தண்ணீர் அருந்தாது வாயை எடுத்துக் கொள்வதுமாக சிறிது நேரம் நிகழ்ந்தது.

   அதற்கோ தாகவிடாய் தாங்க இயலவில்லை. எனவே என்ன ஆனாலும் ஆகட்டும் என்று துணிச்சலை வழவழைத்துக் கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தது. அடுத்தகணம் தண்ணீருக்குள் இருந் மற்றொரு நாய் மாயமாய் மறைந்துவிட்டது. தண்ணீருக்கும் தனக்கும் குறக்கே நின்றது தானே என்பதையும். அது இப்போது மறைந்து விட்டது என்பதையும் நாய் உணர்ந்தது. இதிலிருந்து நான் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டென். எனக்கும் இறைவனுக்கும் இடையே குறுக்கீடாக உள்ளது நானே என்பதை உணர்ந்தேன். அந்த 'நான்' என்பதை அழித்துவிடின் இறைவனை எய்தப் பெறலாம் என்ற உண்மையும் எனக்கு வெளிச்சமாகியது . எனவே அந்த நாய்தான் எனக்கு ஆசான் என்று கூறியதில் என்ன தவறு? என்று கேட்டார்கள்.

   மகான் ஷிப்லி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எண்பத்தி ஏழு ஆண்டு காலம் இவ்வுலகில் வாழ்ந்து ஹிஜ்ரி 334, துல்ஹஜ் பிறை 27 வெள்ளிக்கிழமை அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அன்னாரின் பொன்னுடல் பக்தாதில் அமாஃமுல் அஃலம் அபூ ஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.