ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment March 19, 2015

Print Friendly, PDF & Email

பிர்அவ்ன் இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தைகளை வெட்ட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு முன் பிறந்தவர்கள் ஹாரூன் நபி அவர்கள். இவர்களின் தாய் பெயர் யூகானிதா. தந்தை இம்ரான் ஆகும்.

இவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட உயரமாகவும், மென்மையாகவும், வெண்மையாகவும் இருந்தார்கள். ஹாரூன் என்ற ஹீப்ரு சொல்லின் பொருள் சிவப்பும் வெண்மையும் என்பதாகும்.

இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி ஃபிர்அவ்னிடம் சென்று அவனுக்குச் சன்மார்க்கத்தைப் போதிக்குமாறு கூற, தமக்கு அப்பணியில் உறுதுணையாக தம் தமையனார் ஹாரூனை ஏற்படுத்துமாறு வேண்டினார்கள்.

وَأَخِي هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُصَدِّقُنِي  ۖ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ

இன்னும்: ‘என் சகோதரர் ஹாரூன் – அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்’ (என்றுங் கூறினார்).  – அல்-குர்ஆன் 28:34

எனவே அல்லாஹ் இவர்களை நபியாகவும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அமைச்சராகவும் ஆக்கினான். அதனால் இவ்விருவர்களைப் பற்றியும் அல்லாஹ் தன் அருள்மறையில் ‘அவ்விருவரும் நம்முடைய விசுவாசியான நல்லடியார்களில் உள்ளவர்’ என்று கூறுகின்றான்.

தங்களது நாட்டை விட்டு சென்று பல்லாண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இவர்கள்தான் அடையாளம் கண்டு கொண்டார்கள். அடுத்த நாள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இவர்கள் ஃபிர்அவ்னின் அரசவைக்கு சென்று அவனுக்கு நேர்வழியையும்> இறைவனின் மாண்பையும் விளக்கினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிரச்சாரத்திலும் அதற்காக அவர்கள் போராடிய போராட்டங்களிலும் இவர்கள் அவர்களது வலக்கரம் போன்று விளங்கினார்கள்.

இரண்டாவது முறையாக மூஸா நபி அவர்கள் தூர்ஸினாய் மலைக்குச் சென்றபோது இவர்களையே அவர்கள் தங்கள் பிரதிநிதியாக நியமித்துச் சென்றார்கள். அப்போதுதான் ஸாமிரி பொன்னால் காளை மாட்டைச் செய்து அதனைக் கடவுளாக வணங்குமாறு பனீ இஸ்ராயீல்களை வழி கெடுத்தான். இவர்கள் எவ்வளவோ தடுத்தும் அந்த மக்கள் ஸாமிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டார்கள்.

அதனை இறைவன் மூலம் உணர்ந்து அடங்காச் சினத்துடன் திரும்பிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,

وَلَمَّا رَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِن بَعْدِي  ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ  ۖ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ ۚ قَالَ ابْنَ أُمَّ إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلَا تُشْمِتْ بِيَ الْأَعْدَاءَ وَلَا تَجْعَلْنِي مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

 (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) ‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?’ என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) ‘என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) ‘பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்’ இன்னும் என்னை அநியாயக்காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்’ என்று கூறினார். – அல்-குர்ஆன் 7:150

قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي  ۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي

 (இதற்கு ஹாரூன்:) ‘என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; ‘பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!’ என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்’ என்று கூறினார். – – அல்-குர்ஆன் 20:94

இறை ஆணைப்படி தௌராத் வேதத்தை வைப்பதற்கு ஓர் ஆலயத்தை நிர்மாணித்து அதன் நிர்வாகியாய் இவர்களை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நியமித்தார்கள்.

பனீ இஸ்ரவேலர்கள் தீஹ் என்னும் வனாந்திரத்தில் இருக்கும்போது இவர்கள் காலமானார்கள் என்றும், இவர்களின் அடக்கிவிடம் ஸினாய் பாலைவனத்திலுள்ள ஸவீக் மலை மீது உள்ளது என்றும், ஹுர் மலைமீது உள்ளது என்றும், உஹத் மலை மீது உள்ளது என்றும் பலவிதமாய் கூறப்படுகிறது.

Add Comment

Your email address will not be published.