ஜகாத் கொடுக்க நியதி உள்ளவர்கள் வேறொரு நபர் ஜகாத் தந்தால் வாங்கலாமா? ஜகாத் பணமாகவோ துணிகளாகவோ கொடுக்கலாமா?

ஜகாத் கொடுக்க நியதி உள்ளவர்கள் வேறொரு நபர் ஜகாத் தந்தால் வாங்கலாமா? ஜகாத் பணமாகவோ துணிகளாகவோ கொடுக்கலாமா?

By Sufi Manzil 0 Comment August 14, 2011

Print Friendly, PDF & Email

smk.abdul majeed, s.majeed33@gmail.com

Sat, Aug 13, 2011 at 12:37 PM

கேள்வி:

அஸ்ஸலாமு அலைக்கும்

 ஜகாத் கொடுக்க நியதி உள்ளவர்கள் வேறொரு நபர் ஜகாத் தந்தால் வாங்கலாமா? நாம் ஜகாத் பணமாகவோ துணிகளாகவோ கொடுக்கலாமா?

பதில்:

தங்களுடைய கேள்வி நுணுக்கமான, விளக்கமான நல்ல கேள்வி.

ஜகாத் என்பது பக்கீர்களுக்கும், மிஸ்கீன்களுக்கும், ஜகாத் வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கி இருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களுக்கும், வழிபோக்கர்களுக்கும் உரித்தான அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்த கடமையாகும். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். -அல்குர்ஆன் 9:60

செல்வந்தர் யார்?

ஜகாத் கொடுக்கும் விசயத்தில் செல்வந்தர் என்று மார்க்க அறிஞர்களால் கணிக்கப்பெறுபவர்:

‘தன் ஆயுள் காலத்திற்குப் போதுமான பொருள் உடையவர் அல்லது அன்றாடம் தேவையான போதிய வருவாய் ஈட்டித் தரும் தொழில் உடையவர் செல்வந்தர்’ என்று பெயர் பெறுகிறார்.

ஒருவருக்கு விசாலமான வீடு, பணியாளர்கள், உயர்தர ஆடைகள், தேவையான நூல்கள் அல்லது பெண்களுக்கு  தேவையான ஆபரணங்கள் ஆகியன இருப்பதோடு அவரது அன்றாடச் செலவிற்குச் சிரமமப்பட்டால் அவரும் பக்கீர் அல்லது மிஸ்கீன் என்று பெயர் பெற்று ஜகாத் பெறத் தகுதியுடையவராகிறார். இதுபோன்றே ஒருவர் வணிகத்தில் அல்லது விவசாயத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு ஜகாத் கொடுக்கும் அளவிற்கு அவரது வருவாய் இருப்பினும் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும், அன்றாடச் செலவிற்குப் போதுமான வருவாய் இல்லாவிடில் அவரும் ஜகாத் பெறத் தகுதியுடையவராகிறார். ஆகவே இந்த அடிப்படையில் ஆயிரம் பொற்காசு கொண்டு வணிகம் புரியும் வணிகர் ஜகாத் பெறுவதற்குத் தகுதியுள்ளவராகவும், கோடாரியும், கயிறுமே உடைமையாயுள்ள போதிய வருவாய் உள்ள விறகு வெட்டி ஜகாத் பெறத் தகுதியற்றவராகவும் ஆகிவிடுகிறார்கள் என இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பள்ளிவாசல் மற்றும் கல்விக்கூடங்கள் கட்டுதல் போன்ற பொதுச் சேவைக்காகவும், ஏழைகள் திருமணம் நடத்தி வைத்தல், இருவருக்கிடையில் சமாதானம் செய்தல் போன்ற சமூக சேவைக்காகவும், கைதிகளை விடுவித்தல், கடன் பெற்றவருக்காக ஜாமீன் ஏற்றல் போன்ற நற்சேவைக்காகவும் கடன்பட்டவர்கள் அவர்கள் செல்வந்தர்களாக இருப்பினும் இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த ஜகாத் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் செல்வந்தர் தனது செல்வத்திலிருந்தே இவ்வாறு செய்திருப்பின் ஜகாத் பெறுவது கூடாது.

ஜகாத் வழங்குகிற ஊரைக் கடந்து செல்லும் பயணிகள் அல்லது அந்த ஊரிலிருந்து பயணம் புறப்பட விரும்பும் பயணிகள் ஆகிய வழிப்போக்கர்கள் பயணத்திற்குரிய பணம் இல்லாதிருத்தல், பாவத்திற்கான பயணமாக இல்லாதிருத்தல் ஆகிய இரு நிபந்தனைகளுடன் இருப்பின் அவர் செல்வந்தராக இருப்பினும் ஜகாத் பெறத் தகுதியுடையவராகிறார்.

வியாபாரப் பொருட்களின் ஜகாத்தினை பணமாகவும், தங்கம் வெள்ளி, விவசாயப் பொருட்கள், கால்நடைகள் ஆகியவற்றில் அந்தந்த பொருட்களாகவும் மட்டுமே ஜகாத் வழங்க வேண்டும். இதற்கு மாற்றமாக வழங்கினால் ஜகாத் நிறைவேறாது. இது ஷாபிஈ மத்ஹபிற்குரிய சட்டமாகும். மற்ற மத்ஹபுகளின் இமாம்களிடையே இவ்விசயத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அவர்களின் சொற்களை தழுவியும் ஜகாத்தினை செலுத்துவதில் தவறில்லை.