கண் திருஷ்டிக்குரிய பரிகாரம்

கண் திருஷ்டிக்குரிய பரிகாரம்

By Sufi Manzil 0 Comment February 7, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி: கண்திருஷ்டிக்குரிய பரிகாரம் என்ன?

பதில்: சில நேரங்களில் கண் திருஷ்டியின் மூலமாக கூட சில மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம். அதை முறியடிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு முறைகளை சொல்லித் தந்திருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், 'கண் திருஷ்டிக்கு ஓதிப் பார்க்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

நூல்: புகாரி, முஸ்லிம்.
 
அல்லாஹ்வின் தூதர் நோய்வாய்பட்டால் 'அல்முஅவ்விதாத்' (பாதுகாப்பு கோரும் கடைசி மூன்று )அத்தியாயங்களை ஓதி, தம்மீது ஊதிக் கொள்வார்கள். அவர்கள் (மறைவிற்கு முன்) நோய்க் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்கள் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள்ள சுபிட்சத்தை(பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்; என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5016.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் 'குல்ஹுவல்லாஹு அஹத்', குல் அவூது ரப்பில் பலக்', குல்அவூது ரப்பின்னாஸ்' ஆகிய அத்தியாயங்களை (112, 113, 114) ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்றவரையில் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்றுமுறை செய்வார்கள்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: புகாரி 5017.

இந்த இரண்டு அத்தியாயங்கள் (113, 114) இறங்கும்வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின் மற்றும் மனிதர்களின் கண் திருஷ்டியை விட்டும் நீங்க (வேறு பல பிரார்த்தனைகளை ஓதிப்) பாதுகாப்பை தேடினார்கள். இவ்விரண்டு அத்தியாயங்கள் இறங்கியதும் அவ்விரண்டையும் விட்டு விட்டு விட்டார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு
நூல்: திர்மிதி 2059 இப்னு மாஜா.

கண்ணேறுவின் பாதிப்பிலிருந்து விடுபட ஓதிப் பார்த்துக் கொள்ளும் படி எனக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: புகாரி 5738, முஸ்லிம் 2195.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ் சிவப்பான படர் தாமரை காணப்பட்டது. அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவளுக்கு ஓதிப் பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண் திருஷ்டி பட்டுள்ளது என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: புகாரி 5739, முஸ்லிம் 2197.

கண் திருஷ்டிக்காகவும், விஷக் கடிக்காகவும், சிரங்கிற்காகவும் ஓதிப்பார்க்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: முஸ்லிம் 2196, அபூதாவூத் 3889, திர்மிதி 2067.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஜஃபரின் குழந்தைகளுக்கு கண்ணேறு ஏற்படுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டார்கள். அதற்கு ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம்! விதியை வென்று விடக் கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்று விடும். (எனவே மந்தரிக்கலாம்) என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: உபைத் பின் ரிஃபாஈ அஸ்ஸுரகீ ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா, ஸஹீஹ் அல் ஜாமீ 5662.

மேற்காணும் ஹதீது ஆதாரங்கள் உங்களுக்கு ஓதிப் பார்க்கவும், கண்ணேறுக்கு ஓதிப்பார்க்கவும் ஆதாரங்களாக தரப்பட்டுள்ளன.