இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு

இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

“அபுல் ஹுஸைன்” என்ற குன்யத் பெயரால் அழைக்கப்பட்ட இமாம் முஸ்லிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அரபியரின் புகழ்பெற்ற ரபீஆ வம்சவழியிலிருந்து பிரிந்த குஷைர் குலத்தைச் சார்ந்தவர்களாவார். பாரசீகத்தின் (ஈரான்) நைஷாப்பூரில் ஹிஜ்ரீ 202(அ)206ஆம் ஆண்டில், இஸ்லாமியப் பேணுதலுடைய ஹஜ்ஜாஜ் அல்-குஷைரீ என்பவருக்கு மகனாகப் பிறந்தார்கள்.

மார்க்கக் கல்வி பயில்வதற்காக அரபகம், எகிப்து, சிரியா, இராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்கள். இமாம் இஸ்ஹாக் பின் ராஹவைஹ், இமாம் அஹ்மது பின் ஹன்பல், இமாம் உபைதுல்லாஹ் அல் கவாரீரீ, இமாம் குதைபா பின் ஸயீத், இமாம் அப்துல்லாஹ் பின் மஸ்லமா, இமாம் ஹர்மலா பின் யஹ்யா ஆகியோர் இமாம் முஸ்லிம் அவர்களின் ஆசிரியர்களாவர்.

இவர்கள் தவிர்த்து, முஹம்மது பின் யஹ்யா அத்துஹ்லீ என்பவரது மார்க்க அறிவும் தொடக்கக் காலத்தில் இமாம் முஸ்லிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பெரிதாகக் கவர்ந்திருந்தது. ஆனால், ஒரு காலகட்டத்தில் “குர் ஆன் படைக்கப்பட்டது” என்ற துஹ்லீயின் தடுமாற்றக் கருத்துக்கு எதிராக இமாம் புகாரீ (ரழியல்லாஹு அன்ஹு) நின்றபோது இமாம் முஸ்லிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் துஹ்லீயின் கருத்தை மறுதலித்து, தமது ஆசிரியரான இமாம் புகாரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது கருத்தையே ஆதரித்தார்கள். இமாம் புகாரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது இறப்பு வரைக்கும் அவர்களின் சிறப்பு மாணவராகத் திகழ்ந்தார்கள்.

இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்பக் கல்வியில் தேர்ச்சியடைந்த பின் தனது 16வது வயதில் ஹதீதைப் படிக்க தொடங்கினார்கள். சுய முயற்சியால் இத்துறையில் உச்சிக்குச் சென்றார்கள். குறுகிய காலத்தில் நைஸாப்பூரில் குறிப்பிடத்தக்க முஹத்திதுகளில் ஒருவராக விளங்கினார்கள்.

இமாம் முஸ்லிம் சிவப்புக் கலந்த வெண்மையான நிறமுடையவர்கள். உயர்ந்த கட்டுடல் கொண்ட அழகிய தோற்றமுடையவர்களாக விளங்கினார்கள். எப்பொழுதும் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். ஹதீதுக் கலையை கற்பிப்பதின் மூலம் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தாமல் புடவை வியாபாரத்தின் மூலமே வாழ்க்கைச் செலவை அமைத்துக் கொண்டார்கள்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீபு பாகம் – 10, பக்கம் – 271

இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எவரைப் பற்றியும் புறம் பேசியது கிடையாது. யாரையும் அடித்ததில்லை. எவரையும் ஏசியதில்லை. இது இவர்களின் வாழ்வி்ன் விந்தையான விடயம் என்று ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி ரழியல்லாஹு அன்ஹு தங்களது புஸ்தானுல் முஹத்திதீன் என்ற நூலில் வரைந்துள்ளார்கள்.

ஹதீதைப் படிப்பதற்காக இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு நைஸாபூரிலுள்ள முஹத்திதீன்களிடம் கல்வி கற்றபின் ஹிஜாஸ், ஷாம், ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் ஆனார்கள்.

இமாம் முஸ்லிம் அவர்களிடமிருந்து கணக்கற்றோர் ஹதீதைப் படித்துள்ளனர். இவர்களிடமிருந்து ஹதீதை அறிவித்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது மிகவும் சிரமமாகும். ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிலரின் பெயர்களை தஹ்தீ புத்தஹ்தீபு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஹதீதுக் கலையில் அபார ஆற்றல் காணப்பட்டது. ஹதீதில் சஹீஹ், ளயீபை குத்தாய்வதில் மகத்தான அறிவைப் பெற்றிருந்தார்கள்.

ஆதாரம் : புஸ்தானுல் முஹத்திதீன் பக்கம் – 280

இமாம் முஸ்லிம் வாழ்நாளின் பெரும்பகுதி ஹதீஸைத் தேடி நாடுகள் நகரங்ளுக்கு பயணம் மேற்கொள்வதிலேயே கழிந்துள்ளது. இதற்கிடையில் கற்றல், கற்பித்தலிலும் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளதோடு பின்வரும் நூற்களையும் எழுதியுள்ளார்கள்.

1. அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் 2. அல்முஸ்னதுல் கபிர் 3. கிதாபுல் அஸ்மாவில்குனா 4. கிதாபுல் ஜாமிஉ அலல்பாப் 5. கிதாபுல் இலல் 6. கிதாபுல் வஹ்தான் 7. கிதாபுல் அப்றாத் 8. கிதாபுல் ஸுவாலாத் அஹ்மத் இப்னு ஹன்பல் 9. கிதாபுல் ஹதீஸ் அம்றுப்னு ஷுஐப் 10. கிதாபுல் இன்திபாஹ் பாரிபுஸ்ஸியாஃ 11. கிதாபுல் மஷாயிக் மாலிக் 12. கிதாபுல் மஷாயிக் தௌரி 13. கிதாபுல் மஷாயிக் ஸுஃபா 14. கிதாபு மன்லைஸ லஹு இல்லா றஹீன் பாஹித் 15. கிதாபுல் மஹ்முரீன் 16. கிதாபுல் அல்லாதுஸ் ஸஹாபா 17. கிதாபுல் அல்ஹாமூல் முஹத்திதீன் 18. கிதாபுல் தபகாத் 19. கிதாபுல் அப்றாதுஷ்ஷாமீன் 20. முஸ்னத் இமாம் மாலிக் 21. முஸ்னதுஸ்ஸஹாபா

ஆதாரம் : தத்கிறதுல் ஹுப்பாழ் பாகம் – 02, பக்கம் – 590

இமாம் முஸ்லிம் அவர்கள் முஸ்னது ஸஹாபாவை மிகவும் விரிவாக எழுதத் துணிந்தார்கள். அவற்றைப் பூரணப்படுத்த முன் வபாத்தாகி விட்டார்கள். அவர்கள் ஆரம்பித்தது போன்று முடித்திருந்தால் பாரிய பணி ஒன்று நிகழ்ந்திருக்கும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகி்ன்றார்கள்.

இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு யின் மரணம் தொடர்பாக கூறப்படும் கதை விசித்திரமானதாகும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.

ஒரு தினம் ஹதீஸ் மஜ்லிஸில் ஒருவர் ஒரு ஹதீதைப் பற்றிப் கேட்க அதற்கு அவர்களால் பதில் கூற முடியாது போய்விட்டது. இல்லம் வந்து தனது நூற்களுள் அந்த ஹதீதைத் தேடினார்கள். பக்கத்தில் ஒரு கூடையில் பேரீத்தம் பழத்தையும் வைத்துக் கொண்டு பேரீத்தம் பழத்தை சுவைத்துக் கொண்டே தேடுதலில் கவனம் செலுத்தினார்கள்.

ஹதீதின் தேடுதலில் மூழ்கியிருந்தே இமாமவர்கள் பேரீத்தம் பழத்தை அளவுக்கு மிஞ்சி புசித்து விட்டார்கள். ஹதீஸ் கிடைக்கும்போது கூடை காலியாகி விட்டது. இதுவே அவர்களின் மௌத்திற்கு காரணமாகியது. ஹிஜ்ரி 261 ரஜப் பிறை 24இல் ஞாயிறு அன்று வபாத்தானார்கள். நைஷாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இமாம்கள் இபுனு அபீஹாத்தம் அர்ராஸீ, மூஸா பின் ஹாரூன், அஹ்மது பின் ஸலமா, திர்மிதீ, இபுனு குஸைமா, அபூ அவானா, ஹாபிள் தஹபீ ஆகிய ஹதீஸ் கலை மேதைகள் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் மாணவர்களாவர்.

Add Comment

Your email address will not be published.