அபூலுபாபா ரலியல்லாஹு அன்ஹு

அபூலுபாபா ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 20, 2014

Print Friendly, PDF & Email

வரலாற்றுச் சிறப்புமிக்க அகபா உடன்படிக்கையின்போது நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முக்கியமானவர்களுள் ஒருவர் அபூலுபாபா பின் அப்துல் முன்திர், ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் முந்திரின் மகன்களான ரிஃபாஆ, முபஷ்ஷிர், புஷைர் ஆகியோருள் புஷைர்தாம் பேறுபெயரால் பிரபலமான அபூலுபாபா என்பது இமாம் இப்னு இஸ்ஹாக் மற்றும் அபுல் கல்பீ ஆகியோரின் வரலாற்றுக் குறிப்பு.

இஸ்லாத்தை ஏற்ற தருணத்திலிருந்து அதில் சிறந்து விளங்கி, நபியவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிப் போனார் அபூலுபாபா. மதீனாவில் இருந்த தோழர்களுக்கு அவர்களது வாழ்க்கையின் ஆதாரத்திற்கு  விவசாயம், தொழில் என்று பலதரப்பட்ட அலுவல்கள். அபூலுபாபாவுக்கு வியாபாரம். அதில் அவர் தம் குடும்பத்தை பராமரித்து வந்தார்.

மதீனாவில் ஒன்றான பனூ குறைளா கோத்திரத்தினர் குடியிருப்பின் அருகேதான் அபூலுபாபாவின் வீடு. அவர்களுக்கு மத்தியில்தான் இவரது தொழில் கேந்திரம் அமைந்திருந்தது. பனூ குரைளா யூதர்களுடன் அவருக்கு நல்ல நேசம், சகவாசம். அது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டுத் தொடர்ந்து கொண்டு இருந்தது.

பத்ருப் போருக்கு முஸ்லிம்கள் கிளம்பிச் சென்றபோது  அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை நபியவர்கள் அளித்தார்கள். அபூலுபாபா அப்பொழுது பத்ருப் படையில் இடம் பெற்றிருந்தார். பின்னர் நபியவர்கள், அபூலுபாபாவை அழைத்து அவரிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

உரிய காரணங்களுடனோ, இதர பணிகளினாலோ பத்ருப் போரில் நேரடியாகக் களத்தில் பங்கு பெறாமல் பிற அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்ட தோழர்களும் பத்ருத் தோழர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தத் தோழர்களை அப்படித்தான் நடத்தியிருக்கிறார்கள்.

பத்ரு வெற்றிக்குப் பின்னர் போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் போர் வீரர்களுக்கு எப்படிப் பகிர்ந்து அளிக்கப்பட்டதோ அதே விகிதாசாரத்தில் அபூலுபாபாவுக்கும் அளிக்கப்பட்டது.
யூதர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அவர்கள் மீறினர்.

ஒருநாள் நண்பகல் நேரம். வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களிடம் வந்து இறைச் செய்தி ஒன்றைச் சொன்னார். “முஹம்மது! அல்லாஹ் உம்மைக் குரைளாவை நோக்கி அணிவகுத்துச் செல்லக் கட்டளையிட்டுள்ளான். நான் மற்ற மலக்குகளுடன் அவர்களின் இதயத்தை உலுக்க இப்பொழுது அங்குச் செல்கிறேன்.”

உடனே நபியவர்களின் உத்தரவின்படி மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்யப்பட்டது. அன்று காலைதான், (அகழிப் போர்)பெரியதொரு படையெடுப்பை முடித்துக்கொண்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு, தம் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள் முஸ்லிம்கள். அறிவிப்பை அறிந்த நொடியிலேயே கடகடவென்று ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கிளம்பியது முஸ்லிம்களின் படை.

யூதர்களின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த முற்றுகையை வெகு இலேசாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இருந்தனர்  யூதர்கள்.

ஆனால் அவர்களுக்கு இதிலிருந்து மீள வழி தெரியவில்லை. அந்த இக்கட்டான தருணத்தில்தான் அவர்களது நினைவிற்கு வந்தார் ஒருவர். அபூலுபாபா.

எனவே, அவரை வரவழைத்துப் பேசினால் தங்களுக்கு நல்ல உபாயம் சொல்வார்; நபியவர்களிடம் இணக்கம் ஏற்படுத்தித்தர ஏதாவது ஒரு வாய்ப்பு இருந்தால் வழிவகை சொல்வார் என்று அவர்களுக்குத் தோன்றியது.

“அபூலுபாபாவிடம் கலந்துரையாட வேண்டும், தயவுசெய்து அவரை எங்களிடம் வரச்சொல்லுங்கள்” என்று கோரிக்கை வந்தது.

அதைக்கேட்டு, “நபியவர்கள் சொன்னால் ஒழிய அவர்களிடமெல்லாம் நான் போக முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் அபூலுபாபா. அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.
அபூலுபாபா அவர்களிடம் பேசினார்கள். இறுதியில் அவர்கள் சொன்னார்கள்:

“ஆம்! நிபந்தனையின்றி நீங்கள் சரணடைவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை” என்று பதில் அளித்தார் அபூலுபாபா. பிறகு தம் கழுத்தை வெட்டுவதுபோல் கையால் சாடை செய்தார். அதாவது சரணடைந்ததும் அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனை பற்றியக் குறிப்பு.

நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட அந்தச் செய்கையின் தீவிரத்தை அடுத்த கணமே உணர்ந்துவிட்டார் அபூலுபாபா. ‘இது ராசத்துரோகம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இழைத்த நம்பிக்கைத் துரோகம்!’ என்று வெலவெலத்துப் போயின அவரது கைகளும் கால்களும். வெட்கமும் குற்ற உணர்ச்சியும் அவரைப் பிடுங்கித் தின்றன. பனூ குரைளா மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கிளம்பியவர், களத்திற்குத் திரும்பவில்லை; நபியவர்களைச் சந்திக்கவில்லை. வேகவேகமாய் மதீனாவின் பள்ளிவாசலுக்கு விரைந்தார். அங்குள்ள ஒரு கம்பத்தில் தம்மைத் தாமே கட்டிப்போட்டுக் கொண்டார்; சத்தியம் செய்துவிட்டார்.

“நான் செய்த காரியத்திற்கு அல்லாஹ் என்னை மன்னிக்கும்வரை நான் என்னை இந்தத் தண்டனையிலிருந்து விடுவித்துக்கொள்ள மாட்டேன். பனூ குரைளா விஷயத்தில் இனி நான் தரகு வேலையில் ஈடுபடவே மாட்டேன். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் துரோகம் இழைத்த பனூ குரைளாவின் குடியிருப்புப் பகுதிக்கு நான் இனி செல்லவே மாட்டேன்.”

நீண்ட நேரமாகியும் சென்றவர் வரவில்லையே என்பதை உணர்ந்தார்கள் நபியவர்கள். ஆச்சரியத்துடன் தம் தோழர்களிடம், “இன்னுமா அபூலுபாபா அவர்களுடன் ஆலோசனையை முடிக்கவில்லை?” விஷயம் அறியவந்திருந்தவர்கள், நபியவர்களிடம் நடந்ததை விவரித்தார்கள்

“அவர் என்னிடம் நேரடியாக வந்திருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்கு இறைஞ்சியிருப்பேனே. இப்பொழுது இதை அவரே தமக்கு இழைத்துக் கொண்டதால் அல்லாஹ் மன்னிக்கும்வரை என்னால் அவரை விடுவிக்க இயலாது” என்று தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள் நபியவர்கள்.

கம்பத்தில் தம்மைக் கட்டிக்கொண்ட அபூலுபாபா உண்பதையும் பருகுவதையும்கூட நிறுத்திக் கொண்டார். ஒவ்வொரு தொழுகை நேரத்தின்போதும் அவரின் மனைவி வந்து அவரது கட்டுகளை அவிழ்த்துவிடுவார். அவ்வேளையில் தம் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டபின் உளுச் செய்துகொண்டு மக்களுடன் இணைந்து தொழுகையை நிறைவேற்றுவார் அபூலுபாபா. தொழுகை முடிந்ததும் மீண்டும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு வந்துவிடுவார் அவர் மனைவி. இவ்விதமாகவே ஆறு இரவுகள் கழிந்தன. அதன் பிறகுதான் அதிகாலை நேரம் இறை வசனம் வந்து இறங்கியது.

“வேறு சிலர், தங்கள் நல்ல செயல்களைத் தீய செயல்களோடு (அறியாமல்) கலந்துவிட்டனர். அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடலாம். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பவன்; கருணையாளன்”

என்ற அந்த இறை வாசகம் சூரத்துத் தவ்பாவின் 102ஆவது வசனமாக இடம்பெற்றுவிட்டது.

அந்த வசனம் அருளப்பெற்றதும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அதைக் கண்ட அன்னை உம்மு ஸலமா ஆச்சரியத்துடன் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க, நபியவர்கள், “அபூலுபாபாவுக்கு மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது.”….

”ஓ அபூலுபாபா. நற்செய்தி கேளுங்கள். அல்லாஹ் உம்முடைய பாவத்தை மன்னித்து விட்டான்” என்று உரத்து அறிவித்தார்கள் அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா.

“நபியவர்கள் வந்து என்னை விடுவிக்கும்வரை என் கைகள் கட்டப்பட்டே இருக்கட்டும்.”

பின்னர் தொழுகைக்குப் பள்ளிவாசல் வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் கைகளால் கட்டை அவிழ்க்க, விடுதலையானார் அபூலுபாபா.

சொர்க்கத்து பூங்காவின் ஒரு துண்டு என்று வர்ணிக்கப்பட்ட இடத்தில் இப்பொழுதும் ஒரு தூண் இருக்கிறது. அதன்மீது, இது அபூலுபாபாவின் தூண்’ என்றும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மக்கா வெற்றியின்போது தம் குலத்தின் சார்பாய் கொடியேந்திச் சென்றார் அபூலுபாபா. பின்னர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் மறைவிற்குப் பிறகு இவ்வுலக வாழ்வை நீத்தார் அவர்.

Add Comment

Your email address will not be published.